“மல நல்லாருக்கியா மல” – இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடக் காத்திருக்கும் ஆசிய அணிகள்
சேவியர் ராஜதுரை
“மல நல்லாருக்கியா மல” என ஒரு அகன்றசிரிப்போடு ஒட்டுமொத்த ஆசிய அணிகளும் இந்தியாவின் இன்றைய வெற்றியை எதிர் நோக்கியுள்ளன.
நம்பர் 4 யார் என்பது இந்தியாவின் பேட்டிங் ஆர்டரில் எப்படி கேள்விக்குறியாக உள்ளதோ அதே போல அரையிறுதிக்கு செல்லப் போகும் அந்த நம்பர் 4 யார் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இங்கிலாந்து இன்றைய போட்டியில் வென்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஆனால், இந்தியா வென்றால் தான் மற்ற ஆசிய அணிகளான இலங்கை (ஏறத்தாழ வெளியேறி விட்டது), வங்காளதேசம், பாகிஸ்தானிற்கு சிம்னி விளக்கு அளவாவது அரையிறுதிக்கு வாய்ப்பிருக்கும்.இந்தியா நாங்கள் அரையிறுதிக்கு வருவதை விரும்பாது என பாகிஸ்தான் வேறு கதறிக் கொண்டுள்ளது. எனவே ஒரு ஆக்சன் படம் போல விறுவிறுப்புக்கும், ஒட்டுமொத்த ஆசியாவுமே இந்தியாவிற்கு சப்போர்ட் செய்வதால் சென்டிமென்டிற்கும் இன்றைய போட்டியில் துளியளவும் பஞ்சமிருக்காது.
இந்தியா இங்கிலாந்து இரு அணிகளுமே சமபலத்துடனே உள்ளன. இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவும் இங்கிலாந்தும் ஏழு முறை மோதியுள்ளன. இதில் மூன்று போட்டிகளில் இந்தியாவும், மூன்று போட்டிகளில் இங்கிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவானது.1992க்குப் பிறகு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி இந்தியாவை வென்றதில்லை.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி மட்டுமே இதுவரை ஒரு போட்டியில் கூட லாஸ் ஆகாமல் மாஸாக இருக்கிறது. ஆஸ்திரலியாவுடன் இங்கிலாந்து தோற்றதால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வந்த இந்திய அணி இன்று இங்கிலாந்தை வீழ்த்தி டபுள்மாஸாக முதலிடத்தில் இருக்கலாம்.
இந்திய அணியின் பலமே பவுலிங்தான். மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் நாம் வென்றதற்கு மிகமுக்கிய காரணமே நம்முடைய பவுலிங்யூனிட் தான். உலகின் நம்பர் ஒன் பவுலர் பும்ரா அசத்திக் கொண்டிருக்கிறார். தேவையான நேரங்களில் விக்கெட்டை எடுத்து ரன்களையும் வழங்காமல் எதிரணியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயத்தினால் இரண்டு போட்டிகளில் விளையாடிய முகமது ஷமியும் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கிறார். புவனேஷ்வர்குமாருக்கு குணமாகி விட்ட நிலையில் தன்னை எடுப்பதற்கான எல்லா நியாயங்களையும் செய்து வைத்திருக்கிறார் ஷமி. சுழலில் சஹாலும் குல்தீப்பும் தங்கள் பங்கை சிறப்பாக செய்கின்றனர். பாண்டியாவும் ரன் வழங்கினாலும் விக்கெட் கைப்பற்றி விடுகிறார். இதுவரை இ்ல்லாத அளவில் இந்திய அணியின் பவுலிங்யூனிட் வலுவாக உள்ளது.
பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோகித்,ராகுல்,கோஹ்லி தான் தூணாக நின்று காத்து வருகின்றனர். இந்திய அணி மீண்டும் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ராகுல் நம்பர் 4ல் செட்டாகியிருந்த நேரத்தில் தவானிற்கு அடிபட்டதால் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குிறார். எனவே மீண்டும் அந்த இடம் யாருக்கு என சிக்கலாக உள்ளது. விஜய் சங்கர் பேட்டிங்கில் சொதப்பினாலும் கோஹ்லி நேற்று அளித்த பேட்டியில் “விஜய் சங்கர் பெரிய இன்னிங்க்ஸ் ஆடுவார்” என நம்பிக்கையுள்ளதாக கூறியுள்ளார். எனவே.விஜய் சங்கர் இன்றைய போட்டியிலும் இருப்பது உறுதி. ஜாதவ் ,தோனி கடைசி நேரங்களில் ரன்கள் சேர்த்தாலும் மிடில் ஓவர்களில் பொறுமைாக ஆடி ரன்ரேட்டை குறைத்து விடுகின்றனர். ஜாதவிற்கு பதில் ஜடேஜாவை இறக்கலாம். தவானும் காயத்தில் உள்ளதால் இந்திய அணியில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லை. பொதுவாக ரைட் லெப்ட் காம்பினேசன் நன்றாகயிருக்கும்.அது எந்தவிதமான பந்துவீச்சையும் சமாளிக்க எளிதாகயிருக்கும். பண்ட்டை ஆப்கானிஸ்தான் போட்டியில் கூட இறக்காத போது இந்த போட்டியில் இறங்குவது சந்தேகமே. இந்திய அணி இந்த மிடில் ஆர்டர் குறையையும் சரி செய்து விட்டால் உலகக்கோப்பை வெல்வது உறுதி. அதற்கான தகுதி திறமை மிகுந்த அணி தான் ♥
இ்ங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேசன்ராய் காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பது மிகப் பெரிய பலம். நாளைய போட்டியில் களமிறங்கி விடுவார். 10 ஓவர்கள் நின்றாலே ரன்ரேட்டை ராக்கெட் வேகத்திற்கு ஏற்றிவிடக்கூடிய வீரர். இவர் திரும்பி வந்தது மகிழ்ச்சியளித்தாலும் அந்த அணியின் மிக முக்கியமான பவுலர் ஆர்ச்சர் காயம் காரணமாக இன்று விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் ஆடினால் இந்தியாவிற்கும் ஆடாவிட்டால் இங்கிலந்திற்கும் நெருக்கடி இருக்கும். பேர்ஸ்டோவ், ரூட், மார்கன், ஸ்டோக்ஸ், பட்லர் என பேட்டிங் வலுவாக இருந்தாலும் ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தால் அணி சீட்டுக்கட்டில் கட்டி வைத்த வீடு போல மளமளவென சரிந்துவிடுகிறது. ரூட், பட்லா், ஸ்டோக்ஸ் மட்டுமே எல்லா ஆடுகளங்களிலும் சிறப்பாக ஆடுகின்றனர். வோக்ஸ் ஆல்ரவுண்டராக சிறப்பாக தன் பணியை செய்கிறார். ரஷித் மற்றும் ப்ளங்கட் போன்றோரும் சிறப்பாக செயல்படும் போது இங்கிலாந்து அணி தன்னுடைய அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ளலாம்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் அது பேட்டிங்கையே நம்பி உள்ளது. அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேசன்ராய் மற்றும் பேர்ஸ்டோவ் துவக்க ஜோடிகள் அதிரடியான ஜோடிகள். இவர்களுடைய ஜோடி 5.79 ரன்ரேட்டில் ரன்களை சேர்க்கும்.
இந்திய அணியோ பந்துவீச்சில் வலுவான அணி. மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறது. இந்த உலகக்கோப்பையில் முதல் பவர்ப்ளேயில் 48 ரன்களே அதிகபட்சமாக கொடுத்துள்ளது. பேட்டிங் vs பவுலிங்காக இன்றைய போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தால் சின்ராசை கையிலே பிடிக்க முடியாது. இங்கிலாந்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடுவார்கள் இந்திய அணியினர்.
தொடர்ந்து பத்து போட்டிகளாக ஆசியாவிற்கு வெளியே வென்று கொண்டிருக்கும் இந்திய அணி, ஆசிய அணியின் கனவுகளை நிறைவேற்றுமா ? ஒரு முறை கூட கோப்பை வாங்காத இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளுமா என்பதை பார்க்கலாம்.
இந்தப் போட்டியின் முக்கிய அம்சம் இந்தியா ப்ளு ஜெர்சியில் விளையாடவில்லை. இங்கிலாந்து மற்றும் இந்திய அணியின் டீசர்ட் ஒரே நிறமாக இருப்பதால் இந்திய அணி இன்ற ஆரஞ்ச் நிற டீசர்ட்டுடன் விளையாடவிருக்கிறது. விளையாடும் இரண்டு அணிகளின் உடைகள் ஒரே நிறமாக இருக்கும் பொழுது ஐசிசி ஒரு அணியின் நிறத்தை அந்த போட்டிக்கு மாற்றும். ஜூலை 5ம் தேதி பாகிஸ்தானோடு பங்களாதேஷ் மோதும் போட்டியில பங்களாதேஷ் சிவப்பு நிற உடையணிந்து விளையாடவிருக்கிறது. இது சாதாரணமானது தான்.
ஆனால், இந்திய அணி ஆரஞ்சு நிறத்தில் ஆடுவதற்கு பின்னால் மத்திய அரசின் காவி அரசியல் ஒளிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நெட்டிசன்களால் கடுமையாக இந்த உடை விவகாரம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த உடை கேவலமாக இருக்கிறது என்பது போல உடையை கேலி செய்து விமர்சனங்களும் பார்க்க முடிகிறது.
இது பற்றி இந்தியக் கேப்டன் கோஹ்லி
“இந்த உடை எங்களுக்குப் பிடித்திருக்கிறது. இந்த உடைக்கு பத்துக்கு எட்டு மதிப்பெண் தருவேன். இந்தப்
போட்டி மட்டும் தான் இந்த நிற உடையில் ஆடப் போகிறோம்.
இந்த உடையிலேயே எப்பொழுதும் விளையாடப் போவதில்லை.
நீலம்தான் எப்பொழுதும் நம்முடைய நிறம்”. என்று கூறியுள்ளார்.
ஆம், நீலம் தான் எப்பொழுதும் நமது நிறம்.