
“இடிமுழக்கங்களுக்கு இடையே ஒரு மலர் விழும் ஓசை யாருக்குக் கேட்கிறதோ அவன் தான் கவிஞன்” என்னும் அழகிய வரிகளுக்கு சொந்தக்காரரான கவிஞர் பழநிபாரதி எனக்கு அறிமுகமானது ” காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்…” என்ற வரிகளின் வழியாகத்தான்.இந்த வரிகளின் பாடலாசிரியரைத் தேடிய பின், அவரது பாடல்களைத் தேடத் தொடங்கினேன். பாடல்களை பாடல்வரிகளுக்காக மட்டுமே நேசித்த பொற்காலம் அது.
எங்கள் ஊர்த் திருவிழாக்களில் இன்றைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிற ‘கோகுலம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ படப் பாடல்களும் அவருடையதுதான். ‘உள்ளத்தை அள்ளித் தா’ சுந்தர் சி க்கு மட்டுமல்ல கவிஞருக்கும் முக்கியமான படம். அப்படத்தின் பாடல்களுக்கு எங்கள் உள்ளத்தையே அள்ளித் தந்தோம். “ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே…”, பாடலைப் பாடியிராத அந்நாளைய காதலர்களே இல்லை எனலாம். அப்பாடலின் அழகே மிக எளிய அதே நேரத்தில் முற்றிலும் புதுமையான வரிகள்தான்.முதல் முறை கேட்ட போது இருந்த அதே மலர்வை அந்தப் பாடல் இன்னும் சுமந்திருக்கக் காரணம் அந்த அழகிய வரிகள்தான்.
பழநிபாரதியின் பாடல்களில் பெண்கள் தங்களது நெஞ்சுக்குள் கோடி ஆசையிருந்தும் அதில் பாதி மட்டுமே சொல்லி ரசிக்க வைத்தாலும்… சிற்சில பாடல்களில் கொஞ்சம் தங்கள் எல்லைகளைத் தாங்களே விலக்கி அழகுற வெளிப்படுத்தியிருப்பார்கள். அவற்றுள் சில…
“ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கும் நேரத்தில் மூச்சுக்கு திண்டாடினேன்
வேகின்ற வேகத்தில் தீப்பற்றிக்கொள்கின்ற விண்மீனை போல் ஆகினேன்…”
“நீ தீண்டும் போதினில் மோகன ராட்டினம் ஆடவா…”
மேலும் , “அன்புள்ள மன்னவனே… ஆசைக் காதலனே…” பாடல் முழுவதுமே ஒரு பெண்ணின் தவிப்பு, கெஞ்சல், ஆவல், காதலனை அடையும் வேகமென மிக எளிய வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரலில் சிற்பியின் இசையில் கேட்டவுடனே ஒரு பயணத்தை துவக்கும் எண்ணத்தைத் தருமொரு பாடல். இன்றைய டிக்டாக்கில் கன்னாபின்னாவென்று கலக்கிக் கொண்டிருக்கிற, “சேலையிலே வீடு கட்டவா..” பாடலை ஒவ்வொருமுறை கேட்கும் போதும் சொந்த ஊரையும் பழைய நாட்களையும் மீட்டுத் தருகிறது.
“முன் பனியா முதல் மழையா…” பாடலுக்கும் “இளங்காத்து வீசுதே…” விற்கும் உலகத்தில் உள்ள அத்தனை உயரிய விருதுகளை அளித்தாலும் தகும்.
பாடலுக்கான சூழல், இயக்குநர்களின் தேர்வு, மெட்டுக்குள் பொருந்தும் வார்த்தை, பாடுபவரின் உச்சரிப்பு எனப் பல கத்தரிகளால் வெட்டுப்பட்டு வந்தாலும் போன்சாய் மரமாய் இன்றி வசந்தத்தில் மலர்ச் சொறியும், நிழல் தரும், கனி தரும் தருக்களாய் பாடல்கள் இயற்றியதோடதல்லாமல் சிறந்த கவிதைத் தொகுப்புகளையும் தந்துள்ளார் பழநிபாரதி.
குறிப்பாக ‘வனரஞ்சனி’ க்குப் பிறகான அவரது கவிதைகளின் வார்த்தைப் பிரயோகமும் சொற்சிக்கனமும் குறிப்பிடத்தக்கது. எளிமை என்பது அத்தனை எளிதானதல்ல, முதல் வாசிப்பிலேயே புரிவதால் எந்தக் கவிதையும் சுவை குறைந்து போவதுமல்ல. பழநிபாரதி கவிதைகளின் பலமே இந்த எளிமை தான்.
காதல் கவிதைகள் மட்டுமின்றி, சமூகத்தின் மீதான கோபமும், ஆதங்கமும் கொண்ட கவிதைகளைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்து வருகிறார்.
“இந்தச் சுடர்
காற்றில்
இவ்வளவு அலைக்கழியுமென்றால் இருளிலேயே இருந்திருப்பேன்.”
என்றும் இளமை ததும்பும் கவித்துவம் அவரது இனிய பாடல்கள் மற்றும் கவிதைகள் போலவே இனி வரும் நாட்களும் வளமோடு இருக்க இந்த தாலாட்டு நாளில் அவரை வாழ்த்துகிறோம்.