விலை
நாங்கள் முதன்முதலில் குடிபோனது நாடார் காம்ப்பவுண்டு. வரிசையாக, புத்தம்புதிய, ஒன்றோடொன்று ஒட்டிய, ஆறு சிறு வீடுகள். எங்களுடையது ஆறாவது. நாடார் பெரும் பணக்காரர்.
என்னோட வசதிக்கு சும்மாவே குடியமத்தலாம் சார். ஒங்குளுக்குப் பொறுப்பு வரணும்ன்றதுக்காகத்தான் வாடகெ…
என்று சொல்லி, அட்வான்ஸ் வாங்கினார். ஒப்புக்கு வாடகை என்றால் சல்லிசாகத்தானே இருக்கவேண்டும்! இல்லை. என் சம்பளம் அறுநூறு ரூபாய். பத்மினிக்கு நானூறு. வீட்டுவாடகை, முன்னூற்றைம்பது. என்ன, வசீகரமான தோட்டத்தின் மத்தியில் குடியிருக்கிற உணர்வு தட்டும். தார்ச்சாலையிலிருந்து சுமார் கால் கிலோமீட்டர் உள்ளே வரும் வண்டிப்பாதை, நாடாரின் பங்களாவில் முடியும். அதன் கழுத்தருகே கிளைபிரியும் இன்னொரு பாதை, ஏகப்பட்ட பழமரங்கள், பூச்செடிகளைத் தாண்டி வரிசைவீட்டு வாசலுக்கு வரும். ‘இந்த ரம்மியமான சூழலுக்கு, ஐந்நூறுகூடக் கொடுக்கலாம்’ என்று பேசிக்கொள்வோம். புதுமணத் தம்பதி; நாள்முழுக்க நந்தவனத்தில் இருப்பது கசக்கவா செய்யும்?!
இன்னொரு மகிழ்ச்சியும் இருந்தது. பிற குடித்தனக்காரர்களும் புதிதாய் மணமானவர்கள். ஒரே நேரத்தில் ஐந்து கர்ப்பிணிகள் நடமாடிய வளாகம். ஒருவருக்கொருவர் வைத்தியமும் பக்குவமும் அறிகுறிகளும் பரிவர்த்தனை செய்துகொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன், வீடு போதாது என்று வேறு இடம் மாறிப்போனார்கள்.
அது இல்லண்ணே, நாங்க இருக்கம்ல்ல; எங்க திஸ்டி பட்ரும்ன்றதுதான் நெசக் காரணம்.
என்று கண்ணீர் மல்க ஒருமுறை சொன்னாள் காந்தி.
விடுபட்ட தம்பதி அவர்கள். நாங்கள் காலிசெய்து வரும்வரையும், வந்த பிறகு சில ஆண்டுகளுக்கும் அதே வளாகத்தில்தான் வசித்தார்கள். எங்கள் வலதுபக்க வீட்டில்.
காந்திமதியின் கணவர் அரசினர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானி. மகளைப் பார்க்க வந்த தாயார், பத்மினியோடு சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன வாக்கியம் முப்பதைந்து ஆண்டுகள் கடந்தும் மறக்கவில்லை;:
காக்யாத செடிக்கும் பூக்காத மரத்துக்கும் பண்டுவம் பாக்குதாரு எம் மருமயென். தனக்கு ஒரு வளி பாக்க மாட்டங்காரே.
ஆவுடையப்பனைப் போன்ற மிருதுவான மனிதரைப் பார்க்கவே முடியாது. பத்மினியை மாதாந்தரப் பரிசோதனைக்கு அழைத்துச்செல்ல, தன்னுடைய ஸ்கூட்டரை இரவல் தருவார். ‘பெட்ரோல் நான் போட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்வதற்குக்கூட இடைவெளி தரமாட்டார். புன்னகையோடு மறுப்பார். தான் சமைத்துப் பழகும் பலவற்றை அவர்களுக்கும் கொடுத்து சோதிப்பாள் பத்மினி.
ஒருநாள் நள்ளிரவு. காந்தி வீரென்று அலறும் சப்தம். பாய்ந்தோடினேன். அசைந்தசைந்து தானும் உடன்வந்தாள் நிறைகர்ப்பிணி. அழிக்கதவைத் திறந்துவிட்டு, வீட்டுக்குள் திரும்பினாள் காந்தி.
ஆவுடையப்பன் மல்லாந்து கிடந்தார். வாயோரம் கடுமையாக நுரை தள்ளியிருந்தது. நீள இரும்பு இடுக்கியை வலதுகையில் இறுக்கிப் பிடித்திருந்தார். நெற்றியில் அவசரமாக அப்பிய திருநீறு. வியர்த்துக் கொட்டிய வெற்றுடம்பு. வேஷ்டி கலைந்திருந்தது. உடம்பில் நடுக்கம் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை. இடுக்கியில்லாத இடதுகை, நான் பார்க்கும்போதே ஒருதடவை பலமாக வெட்டியது.
கிட்டத்தட்ட அரைமணிநேரம் கழித்து சமனமானார். இறைஞ்சும் குரலில் சொன்னாள் காந்தி:
எங்க சொந்தக்காரவுக யாருட்டெயும் வாய்விட்றாதிங்கண்ணே…
சரவணன் பிறந்த நாலைந்து மாதத்தில் நாங்களும் வீடு மாறினோம். அப்புறம் ஊரே மாறினோம். சென்னையின் அழுத்தம், சொந்தக்காரர்களில் அநேகரையே மறக்கடித்துவிட்டது; அக்கம்பக்கத்தவரை எப்படி…
அதனால்தான், பழனி ரயில் நிலையத்தில் ‘அண்ணே’ என்ற விளி கேட்டபோது திகைத்துப்போனேன். மகள்வயிற்றுப் பேரனின் முதல்மொட்டைக்காக எல்லாரும் திரண்டு வந்திருந்தோம். மூன்றாவது பேரக்குழந்தை. சம்பந்தியம்மாளின் தொணதொணப்பு தாளாமல் விலகி, நடைமேடையில் உலாத்தியபோது அந்தக் குரல் கேட்டது.
காந்திமதியேதான். வட்ட முகத்தின் வசீகரம், குரலின் வாஞ்சை, உள்ளொடுங்கிய அரிசிப்பற்கள் மினுங்கும் புன்னகை, பேரிளம்பெண்ணின் காதுகளில் ஆடிய ஜிமிக்கி, நரைத்தாலும் நெளிநெளியாய்ப் படிந்த கேசம், நெற்றி நிரம்பிய திருநீறு… உடனடியாக அடையாளம் தெரிந்துவிட்டது. எந்த அம்சத்தை வைத்து நான் என்று கண்டுபிடித்தாள்!…
ஆச்சரியம் அடங்காமலே நெருங்கினேன். வயது தந்த சலுகையோ என்னவோ, கைகளை ஆதுரமாய்ப் பிடித்துக்கொண்டாள். எதிர்த்திசை ரயிலுக்காகக் காத்திருக்கிறாள். சிமெண்டு பெஞ்ச்சில், பக்கத்தில் அமரச் சொல்லித் தட்டினாள். கடைசியாய் விட்ட இடத்திலிருந்து பேசுகிறவள் மாதிரி படபடக்க ஆரம்பித்தாள்…
அடுத்த சில வருடங்களில், ஆவுடையப்பனுக்கு வியாதி முற்றிவிட்டதாம். ஒவ்வொரு வைத்தியமுறைக்கு மாறும்போதும், தீவிரம் அதிகரித்திருக்கிறது. தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் ஒரு கோவில் பாக்கியில்லை. இதற்கிடையே, உறவுக்காரர் அத்தனைபேருக்கும் தெரிந்துவிட்டது. பிறகென்ன, ஜோசியர்களும், ஆரூடக்காரர்களும், குறிசொல்பவர்களும் உள்ளே நுழைந்தார்கள். செய்வினை எடுப்பது, பரிகார பூசைகள் செய்வது, விரதங்கள் என்று வருடங்கள் ஓடியிருக்கின்றன. ஆலம்பால் திரித்த சடைகளில் பேன் எடுத்து இணுக்கிக்கொண்டே பரிகாரம் சொன்னாள் ஒரு சாமியார். ‘பழனிமலையின் ஒவ்வொரு படியிலும் நெய்தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து, பூசித்தபடி மலையேற வேண்டும்’…
இடுப்பொடிஞ்சு போச்சுண்ணே. அடிவாரத்துலெ கிளம்பின ஆளுக இல்லே, உச்சிக்கிப் போய்ச் சேந்தவுக. இந்த செம்மத்துக்குண்டான உச்சபச்ச வேதனெ ஒடம்புலெயும் மனசுலையும் ரெம்பீருச்சு. ‘ஏட்டி காந்தீ, உசுரு போயிறக் கூடாதுன்னுதானே இம்புட்டுச் சங்கட்டம். இப்பிடிச் செத்துச்செத்துப் பெளைக்கிறத்துக்கு ஒரேடியாப் போய்ச் சேந்துறலாம்ல்லா. சாமியெப் பாத்துப்புட்டு இந்தாக்குலெ குதிச்சிரலாம்ன்னு பாக்கேன். நீயும் வாரியா?’ ங்காக. எனக்கு கெதக்குன்னிருச்சு…
புன்னகை மாறாமலே இந்த வசனத்தைச் சொல்வதற்கு காந்திமதியால் மட்டும்தான் முடியும்… கணவரோடு சேர்ந்து தானும் குமுறியிருக்கிறாள். போகர் சந்நிதிக்கு எதிரே, படியில் அட்டணக்கால் போட்டு அமர்ந்திருந்த பெரியவர் கையாட்டி அழைத்திருக்கிறார். காவி, தாடி மீசை, தலைநிரம்பி அலையாய் வழியும் தூய வெண்சிகை…
‘இவரை மட்டும் விட்டுவைப்பானேன்’ என்று அருகில் போனார்கள். இருவரும் பிறந்த வேளை, காந்திமதி ருதுவான முகூர்த்தம், மணமான நாள், வசிக்கும் ஊர், பரிகாரம் செய்த தலங்கள்… மலையுச்சியை அடைந்ததும் நடந்த உரையாடல்வரை ஒன்றுவிடாமல் அவரே ஒப்பித்திருக்கிறார்.
எல்லாம் சரியாயிருமப்பா.
என்றாராம். எத்தனைபேர் அப்படி உத்தரவாதம் அளித்திருந்தார்கள்! இவரை மட்டும் எதற்காக நம்புவது? ஆனால், யாருமே சொல்லாத ஒன்றை அவர் சொன்னாராம்:
அடுத்த பெறவி வேணாம்ன்னுதானெப்பா எங்களெமாதிரி ஆளுக தலையால
தண்ணி குடிக்கிறம். ஒங் கூட்டாளிகளுக்கு இன்னம்புட்டுக் குடுப்பினெ. பெறவி என்னாடா பெறவி. ஒன் வம்முசத்தையே முடிச்சு வச்சிர்றேன், போதுமா’ண்றான் கோமணத்தாண்டி… வருத்தப்பட வேண்டிய விசயமா அது! நீ வேறெ, காலங்காலமா ஒரு பெரீய்ய பிசகு செஞ்சுக்கிட்டே இருந்திருக்குறே…
பக்கத்தில் வைத்திருந்த கட்டைப்பைக்குள்ளிருந்து தண்ணீர்சீசாவை எடுத்து ஓரிரு மிடறு விழுங்கினாள் காந்தி. ‘ஒங்குளுக்குண்ணே?’ என்று நீட்டினாள். எனக்குமே தேவைப்பட்டது.
…மனுசங்க மாதிரித்தான். மாடுகன்னுகளுக்கும் செடிகொடிகளுக்கும் வம்முசம் தளைக்கிறதும் முடியுறதும்ன்னு இருக்கப்பா. வலுவந்தமா அதுகளெ செனைப்படுத்தி, பேறுகாலம் பாத்துருக்கையே. எந்த உசுருண்டாலும் சகலத்துக்கும் அவன் ஒருத்தன்தானெப்பா பொறுப்பு. ஒலகத்தெயே சொளட்டிவுடுறவன் என்னா வேலையத்தவனா? இல்லே, அவென் வேலைய நாம்ப பாக்கலாமா?…
தலைகுனிந்து நின்றிருக்கிறார்கள்.
…உத்தரவு இருக்கு. நிமுசமாச் சரிபண்ணீருவேன். ஆனாக்கே, அதுக்குப் பெறகுட்டு என் வார்த்தையெத் தட்டப்பிடாது; அது என்னோடெ வார்த்தெ இல்லேண்டு புரிஞ்சிக்கிறணும்…
அவர் கேட்ட விலை மிகமிகப் பெரியது. ஆவுடையப்பன் உத்தியோகத்தையும் குடும்பத்தையும் துறந்து, தீட்சை வாங்கிக்கொள்ள வேண்டும். முதலில் அதிர்ந்து, தயங்கி, பிறகு சம்மதித்திருக்கிறார்கள். பெரியவர் காலத்துக்கப்புறம் ஆசிரமப் பொறுப்பு ஆவுடையப்பன்வசம் வந்தது…
ஆறு மாசத்துக்கொரு தபா, விளுந்துகும்புட வாறவுகளோடெ நானும் வந்துட்டுப் போவண்ணே. நல்லாருக்காரு, கல்லுகணக்கா ஆயிட்டாரு. எனக்கு சந்தோசந்தேன். ஆனாலும், ஒரு தாவந்தம்ண்ணே…
ஏறிட்டுப் பார்த்தாள். நீர் பளபளத்த விழிகளை எதிர்கொள்ளும் திராணியின்றி, தலைகுனிந்தேன்.
…எல்லாஞ் சரிதாம், ஆனா, நான் என்னா பாவம் பண்ணுனன். எனக்கேன் இந்தக் கதி?
பழைய புன்னகை அவள் முகத்தில் மலர்ந்தது. காணச் சகிக்கவில்லை எனக்கு. நல்லவேளை, நான் போகவேண்டிய ரயில் உரத்துப் பிளிறுவது கேட்டது…
****
நடைப் பயணம்
பழைய குப்பையைச் சேர்ப்பதிலும் கிளறுவதிலும் அலாதிப் பிரியம் எனக்கு. வீடுகொள்ளாத அளவு காகிதங்கள் சேர்ப்பேன். சொந்த வீடு. அதனால் தாக்குப் பிடித்தது. பழைய புத்தகங்களும் காகித நறுக்குகளும் மண்டிய சுவரலமாரிகளைப் பார்க்கும்போதெல்லாம், பிரத்தியேகமான வரலாற்றுக் கருவூலமொன்று என்னிடம் இருப்பதாகப் பெருமிதம் பொங்கும். உடனே, ‘வரலாறு என்பதே மகத்தான குப்பைக்கிடங்குதான்’ என்று எங்கோ படித்ததும் நினைவுவந்து எரிச்சலூட்டும்! ஆனாலும், சேர்த்துவைக்கும் ஆர்வம் குறைவதேயில்லை. குழந்தைகள் பெரியவர்களாகி, பள்ளிக்கூடக் குப்பைகளுக்கு இடமொதுக்கியும்கூட, என் சரக்குகள் குறையவில்லை.
தாள முடியாத அளவு சேர்ந்தபிறகு, ஒரு வாரமோ ஒரு மாதமோ பொறுமையாய் உட்கார்ந்து, ஒவ்வொரு நூலாக, ஒவ்வொரு தாளாகப் பரிசீலிப்பேன். இங்கொன்று அங்கொன்றாக, புதுவிதமான வாசிப்புமுறை! வேண்டாதவற்றைக் கழிப்பேன். மிஞ்சிப்போனால், பத்து சதவீதம் வெளியேறும். அடுத்த ஆறுமாதங்கள் பொறுத்துக்கொள்ளும் வீடு. வீடு என்றால், அதில் வசிக்கும் மனிதர்களும்தான்!
நேற்று ஆரம்பித்தேன். நறுக்குளைப் பொறுத்தமட்டில், ஒரு விசித்திரக் குழப்பம் உண்டு. சிலவற்றை எதற்காகச் சேகரித்தேன் என்றே நினைவிருக்காது. அதிலும், தினத்தாள் என்றால், முன்புறம் உள்ள செய்திக்காகவா, பின்புறம் உள்ள தகவலுக்காகவா, வசீகரமான விளம்பரத்துக்காகவா என்றுகூடக் குழம்புவேன். சில சமயம், இரண்டுபுறமுமே கொஞ்சமும் பிரயோசனப்படாத சங்கதிகள் இருக்கிறமாதிரித் தோன்றும். ‘அது சரி, இன்றைக்குத்தானே இப்படி. சேகரித்த நாளில் அதற்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்திருக்கலாம்’ என்ற சமாதானமும்தான்!
அப்படித்தான், மே பதினாறு 2020 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நறுக்கு தட்டுப்பட்டது. நீண்ட நறுக்கு. ஒரு பக்கம், நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியாகவிருக்கும் இரண்டு திரைப்படங்கள் பற்றி விரிவான செய்தி. மறுபக்கம், திருச்சியில் தச்சராகப் பணிபுரிந்த பீஹாரி ஒருவரின் பேட்டி. ஆந்திரத்தின் ஏதோவொரு சிறுநகருக்கு வெளியே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய திறந்த வெளியில் உட்கார்ந்திருந்தார். ஏற்கனவே இருள் மண்டிய புகைப்படத்தில், அவரது முகத்தையும் உடனிருந்த நாலைந்து முகங்களையும் கறுப்புப் பூசி மறைத்திருந்தது.
எதற்காகக் கத்தரித்து வைத்தேன் என்று ஞாபகமில்லை. இந்தப் பேட்டிக் கட்டுரைக்காகக்கூட இருக்கலாம்…
சுதந்திரம் கிடைத்தவுடனே தலைக்கு இவ்வளவு நிலம் என்று பிரித்துக் கொடுத்திருந்தால், பிரச்சினையே இருந்திருக்காது அல்லவா. அரசியல்வாதிகளும், அக்கிரமக்காரர்களும் நிலத்தைக் குவித்திருக்க மாட்டார்கள். சாமானிய ஜனங்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து வேலைதேடிப் போகவேண்டி வந்திருக்காது…
என்கிறார் அனில்குமார்.
…அவரவர் குடும்பத்துக்கான சாப்பாட்டை விளைவிப்பது மட்டுமே அவரவர்
கவலையாய் இருந்திருக்கும்!…
என்று தமது விநோதமான தர்க்கத்தை விளக்குகிறார்.
… ஆனால், தரிசு நிலங்கள் கிடைத்தவன் கதி என்ன?…
என்று மேற்கொண்டு தாமே வினவி, மசாலாப்பாக்குக் கறை படிந்த பற்கள் தெரியச் சிரிக்கிறார்.
…எங்கள் பிராந்தியமேகூட அப்படிப்பட்டதுதான். புழுதி பறக்கும் ஊர். கல் விளையும் பூமி என்று சொல்வாள் அம்மா. தலையிலும் இடுப்பிலும் மண்குடங்களில் நீர்சுமந்து நெடுந்தூரம் நடந்துவந்த அலுப்பும் வியர்வையும் பொங்க, கால்நீட்டி அமர்ந்திருப்பாள். அங்கங்கே பிடித்துவிட்டுக் கொள்வாள். அந்த பிம்பம் உதிக்கும்போதெல்லாம் மனம் எவ்வளவு கனக்கும் என்கிறீர்கள். இன்னும் கொஞ்சநாளில் வரப்போகிறேன் என்று அலைபேசியில் சொன்னேன். அம்மாவின் குரலில்தான் எத்தனை உற்சாகம்! குழந்தைகளையும் கூட்டிவருகிறாயா என்று திரும்பத்திரும்பக் கேட்டாள், பாவம்…
எங்கோ தொலைவில், சோகையான சாலைவிளக்குகளின் முன்திரை மறைப்புக்கப்பால் பரிவற்றுப் பரந்திருந்த இருளை வெறித்தார். ஆனால், திரும்பப் பேசத் தொடங்கியபோது, குரலில் புது உற்சாகம் அரும்பியிருந்தது:
…இருக்கட்டுமே, பசுமையும் வளப்பமும் நிரம்பிய எந்த ஊரைவிடவும், எங்கள் ஊர் அற்புதமானது என்பேன். அங்கேதானே அம்மா இருக்கிறாள்? என் தம்பிதங்கைகள் இருக்கிறார்கள்? அவர்களுடன்தானே பிறந்து வளர்ந்தேன்? எல்லாருக்குமாகச் சம்பாதிக்கத்தானே இத்தனை தொலைவு பிரிந்துவந்து துன்பப்படுகிறேன்? சப்னாவின் குடும்பம் வசிப்பதும் பக்கத்துக் கிராமத்தில்தான். கிருமியை சாக்குச் சொல்லி, நாட்டையே இழுத்து மூடிவிட்டார்களே; சாவு வந்தால் வரட்டும், உற்றவர்களுக்கு மத்தியில் சாகிற சந்தோஷமாவது மிஞ்சட்டும் என்றுதான் கிளம்பிவிட்டோம்…
திருச்சியில் குடியமர்ந்த அறுபது பிஹாரிக் குடும்பங்கள் ஒன்றாய்க் கிளம்பி பக்ஸாரின் சுற்றுவட்டாரத்திலுள்ள பூர்விக கிராமங்கள் நோக்கிப் போகிறார்கள். ஆமாம், நடந்தேதான். கடும் கோடையில், இரண்டாயிரத்திச் சொச்சம் கிலோ மீட்டர்கள்! அவர்களுக்குத் தலைவர்போல இருந்த அனில்குமார், அருகிலிருந்த மகளின் தலையை அவ்வப்போது வருடியபடியே பேசினார். சாலைவிளக்கொளியில், நடைமேடையில் படுத்துறங்கிய, கிட்டத்தட்ட சவங்கள்போலவே அசைவற்றுக் கிடந்த, சுமார் இருநூறுபேர். முறைவைத்துக் காவல் இருக்கும் நாலைந்து வாலிபர்கள். அவர்களுமே கிறங்கித்தான் தெரிந்தார்கள்.
பொருட்கள் களவுபோவது இருக்கட்டும். இளம்பெண்கள் கொஞ்சம்பேர் இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாத்து ஊர்கொண்டுபோய்ச் சேர்ப்பது அல்லவா பெரும் கஷ்டம்? ஆனால், நாற்பத்தைந்து நாட்களுக்கு முன்னால் புறப்பட்ட குழு, பாட்னா சென்று சேர்ந்தேவிட்டது. எங்களுக்கு, அதைவிடப் பத்துப்பதினைந்து நாள் அதிகம் எடுக்கலாம் – குழுவில் முதியவர்கள், பெண்கள் குழந்தைகள் நிறைய…
சுமார் முப்பது வயது நிரம்பிய அந்த இளைஞரின் முகத்தில் தெரியும் பொறுப்புணர்வையும் தீரத்தையும் பார்க்கப்பார்க்க வியப்பு பொங்குகிறது.
நேரம் பன்னிரண்டை நெருங்கிவிட்டது. தம்முடைய காவல்முறை இப்போது என்று சொல்லி எழுந்துபோகிறார் அனில்குமார். இரண்டு மணி நேரத்துக்கொருமுறை ஆள் மாற வேண்டுமாம். அப்போதுதானே எல்லாருக்கும் ஓய்வு கிடைக்கும். அனில் அமர்ந்திருந்த இடத்தில் வந்து அமரும் முதியவர்,
கிருமித் தொற்றிலிருந்து ஜனங்களைக் காப்பது முக்கியம்தான். அவரவர் இடத்துக்கு அவரவர் சென்று சேர ஒரு ஏற்பாடு செய்துவிட்டு, பிறகல்லவா நாட்டை அடைத்துப்போட்டிருக்க வேண்டும்?
என்கிறார், சுஷீல்குமார். அனில்குமாரின் சொந்தச் சித்தப்பா.
…இந்தச் சிறுவனுக்கு இருக்கிற பொறுப்புணர்ச்சிகூட, நாட்டை ஆளும் பெரியவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே…
என்று அங்கலாய்க்கிறார்.
லாரியில் ஏற்றிச் சென்று சேர்க்கிறேன் என்கிறார்கள். தலைக்கு ஒன்றரை லட்சம்வரை கேட்கிறார்கள். அவ்வளவு காசிருந்தால், எதற்காக மாநிலம்விட்டு மாநிலம் வந்து பஞ்சம் பிழைக்கிறோம்?…
என்றபடி, இரண்டு காலிலும் குதிரைச்சதையை அழுத்திக்கொள்கிறார்.
…உடல்வலுவுக்குப் பேர்போன கிராமம் எங்களுடையது. தொலைவுக்கு அஞ்சமாட்டோம். அதிலும் எங்கள் வம்சம் எப்பேர்ப்பட்டது தெரியுமா? நீண்டதூர நடைகளுக்குப் பேர்பெற்றதாக்கும்!
என்று தொடங்கி அவர் அடுக்கிய வரலாற்றை, தனி நாவலாகத்தான் எழுத வேண்டும். செய்தித்தாளின் ஒரு நாள் பதிப்பு போதாது…
…இதை நான் சொல்லும்போதெல்லாம் அனில் சிரிப்பான். நீங்களாவது சிரிக்காமல் கேளுங்கள்….
எங்கள் தாத்தா, தண்டி யாத்திரையில் பங்கெடுத்தவர். இருநூற்றைம்பது மைல் நடை. அவருடைய கடைசித் தம்பி, நவகாளியில் மகாத்மாவின் பின்னோடு ஓடியவர். நூற்றிச்சொச்சம் மைல். அதையெல்லாம் மணிக்கணக்காக விவரிப்பார் எங்கள் அப்பா. அவரேகூட, எங்கள் சாஸ்திரிஜீ பிரதான்மந்திரி ஆனபோது, ஊர்க்காரர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, தில்லிக்கு நடைப்பயணமாகப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார். என் பெரிய அண்ணன், அதுதான், இந்தப் பயல் அனிலுடைய தகப்பன், அவரும் நடைவீரர்தான். லஞ்சத்துக்கும் முறைகெட்ட நிர்வாகத்துக்கும் எதிராக லோக்நாயக் நடக்கக் கிளம்பியபோது, பின்னோடே சென்றான். ‘83ல் சந்திரசேகர்ஜீ பாரத் யாத்ரா சென்றாரே, அப்போது, இருபத்துமூன்று வயது எனக்கு. கிட்டத்தட்ட இருநூறு மைல் கூடவே போனேன். என் கடைசித் தம்பி, அத்வானிஜீயின் ரதயாத்திரையில் அயோத்திக்குப் போனான். எங்கள் குடும்பத்தில் ஒருத்தன் அழிவுவேலைக்குப் போன முதல்தடவை., வம்ச சரித்திரத்துக்கே பொறுக்கவில்லை போல. திரும்பிவந்தவன், உள்ளூர் கோஷ்டித் தகராறில் குத்துப்பட்டுச் செத்தான்…
பெருமூச்சு விட்டார். மௌனமானார். தமக்குள் உறைந்திருக்கும் வரலாற்றின் பக்கங்களைத் தீவிரமாகப் புரட்டத் தொடங்கிவிட்டார் என்று தோன்றியது, இந்தச் செய்தியாளருக்கு… கிழவர் மீண்டும் பேசினார்:
…என்ன, அவர்களெல்லாம் பொதுக்காரியத்துக்காக ஊரைவிட்டு நடந்தார்கள். நாங்களானால், உயிர் பிழைத்திருப்பதற்காக சொந்த ஊரைப் பார்த்து நடக்கிறோம். அத்தனை புண்ணியமும் பாரதமாதாவுக்குத்தான்…
கசப்புடன் சிரித்தார். பிறகு எதுவும் பேசவில்லை.
****
அரச இலை
எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு மாதர் சங்கம் உண்டு. பத்மினி சாதாரண உறுப்பினர்தான் என்றாலும், முக்கியமான முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பாள். அதீத ஒப்பனையும் நளின அசைவுகளும் பொருந்தாக் கூச்சமும் கொண்ட பேரிளம்பெண்களும், உடையிலும் பாவனையிலும் தாராளமும் சரளமும் கொண்ட இளம்பெண்களும். எங்கள் வசிப்பிடத்துக்கு வந்து செல்வார்கள் – தனித்தனியாகவும், குழுக்குழுவாகவும். பெரும்பாலும், ரகசியக்குரலில் விவாதிப்பார்கள்; நான் இருக்கிறேன் என்பதாலோ என்னவோ. ‘ஒரு ஆண் இருப்பதுதான் பெண்ணுலகை எவ்வளவு தீவிரமாகப் பாதிக்கிறது‘ என்று தத்துவார்த்தமாக யோசித்தபடி என் வேலையைத் தொடர்வேன்…
சங்கத்தவர் ஏழுபேர் வடஇந்திய யாத்திரை போனார்கள் – அறுபதைக் கடந்த பின்னும், நாற்பதைந்தைவிட்டு நகர மறுக்கும் ரீத்து கவுர் தலைமையில். ஆண்களின் இடையீடு இல்லாமல் பத்துநாள் விச்ராந்தியாய் இருப்பதற்கான பயணம் என்று அவரவர் வீடுகளில் சொன்னார்களாம் – என்னிடமும் பத்மினி சொன்னாள்.
ஊர் திரும்பியவள், நினைத்து நினைத்துக் கதை சொன்னாள். ‘நீங்க போயிருக்க வேண்டிய ட்ரிப்புப்பா‘ என்று சொல்லியே ஒவ்வொரு முறையும் ஆரம்பிப்பாள். நான் சொல்கிற அதே தொனியில் சொல்வாள்! அல்லது, எனக்கு அப்படித் தோன்றும்!! ஒரு தடவை,
அரச இலைன்னதும் ஒங்குளுக்கு என்ன ஞாபகம் வரது?
என்று ஆரம்பித்துவிட்டு,, காஃபியை ஒரு மிடறு விழுங்கினாள். வடஇந்தியா என்பதால், உடனடியாய் புத்தர் நினைவு வந்தார். போதிமரத்தின் பொதுப் பெயர்தானே அரச மரம். ஆங்கிலத்தில் peepul tree; அத்தி மரமும் அதே குடும்பம்தான்; பால் கசியும் மரம்; பிராணவாயுவை அதிகமாக வெளியிடும் என்றெல்லாம் நினைவில் ஊறியது. எவ்வளவு துழாவியும் வேறெதுவும் தட்டுப்படவில்லை. நான் என்ன தாவரவியலாளனா, இல்லை, யதார்த்தவாத எழுத்தாளனா… குறும்பாகச் சொன்னேன்:
கரட்டுப்பட்டியிலே பொண்கொழந்தைகளுக்கு அருணாக்கயித்திலே ஒண்ணு மாட்டிவிடுவா. அதுக்கும் அரசிலைன்னுதான் பேர்!
பத்மினியின் புருவம், ஆச்சரியத்தால் உயர்ந்து, அங்கேயே நிலைத்து நின்றது.
உஜ்ஜயினியிலிருந்து குவாலியருக்கு பகல்நேரப் பயணம். அக்டோபர் மாதத்தின் இதமான சூழ்நிலை. விடிகாலையில் கிளம்பியதன் அசதி எல்லாருக்கும். அவரவர் உடம்பையே பெரும் சுமையாய் உணர ஆரம்பித்த நேரத்தில், காரை நிறுத்தச் சொல்லி உரத்துக் கூவினாராம் ரீத்து அம்மாள். அவர் சுட்டிய திக்கில், நெடுஞ்சாலையோரம் நின்ற அம்புக்குறி வடிவப் பலகை, அரசிலைக் கோவில் – ஆறு கி மீ என்று காட்டியது – ஹிந்தியில்தான்.
இளைப்பாற ஒரு வாய்ப்பு என்று வண்டியைத் திருப்பச் சொன்னார்கள்.
ஏதோ பௌத்தக் கோவிலாக இருக்கும் என்று நினைத்துப் போனவர்களுக்கு, பேரதிர்ச்சி. மத அடையாளமே இல்லாத கோயிலாம் அது. முகப்புச் சுவரில், பல கோணங்களில் ஓவியமாகவும் சுதைப்புடைப்பாகவும் வடிக்கப்பட்ட அரச இலைகள் மட்டுமே. முதல்பார்வைக்கு கோயில் என்றே தோன்றவில்லையாம்.
குருவாயூர்க் கோவில்லெ பால் மணம் நிரம்பியிருக்கும் இல்லியா!
தலையாட்டினேன். ஆரம்பநாளில் நானே ஏதோவொரு கதையில் அப்படி எழுதியிருக்கிறேன்…
இந்தக் கோவிலோடெ விசேஷம், உள்ளே முழுக்கத் தாய்ப்பால் மணம் இருக்குப்பா!!
பத்மினியின் உடம்பு லேசாக நடுங்கியதா, எனக்குத்தான் அப்படித் தோன்றியதா என்று நிதானிக்க முடியவில்லை. ஆனால், அவள் சொன்ன கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு உடம்பு நடுங்கியது…
கோவிலின் பூசாரிக் கிழவர் சொன்ன கதை. ரீத்து கவுர் மொழிபெயர்த்துச் சொன்னது. கிழவருக்கு அவருடைய தகப்பனார் சொன்னது. ஆக, நீங்கள் ஐந்தாவது அடுக்கு!
…கங்கனா பிள்ளை பெறும்வரை எல்லாம் சுமுகமாகவே இருந்தது. குலத்தொழிலான கருமான் வேலை பார்த்த கணவன். கரணைகரணையான தசைகளும் மயிரடர்ந்த மார்பும் என கண்ணுக்கு நிறைந்த சாந்த சொரூபன். நாளுக்கொரு விரதம், வேளைக்கொரு பூஜை என்று மனம் நிறைந்த பக்தி. அடுத்தவேளைச் சாப்பாடு பற்றி யோசிக்க வேண்டியிராத, செழிப்புள்ள குடும்பம். அனுசரணையான மாமியார் வீடு. மணமான ஆறே மாதத்தில், ‘கங்கனாவைப் போலக் கொடுத்துவைத்த பெண்ணை பாரதம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது‘ என்று ஊருக்குள் பேச்சு நிலவியது.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு தில்லியில் நடந்த முடிசூட்டு வைபவத்தின் பிரம்மாண்டத்தைப் பேசித் தீர்த்த மறுவாரம், ஊர் எல்லையில் இருந்த குன்று பற்றி எல்லாரும் பேச ஆரம்பித்தார்கள். குன்றின் உச்சியில், முழுக்கச் சிதிலமடைந்த கல்மண்டபம் ஒன்று இருந்தது. தாய்க்குடும்பத்துடன் கோபித்துக்கொண்டு வெளியேறிய குவாலியர் ராஜவம்சக் குமரி, கிழவியாகி மரிக்கும்வரை வாழ்ந்த கட்டடம்.
ஆடு மேய்க்கப்போன பெண்ணொருத்தி முகம் முழுக்க வெட்கத்துடன் வந்து தகவல் சொன்னாள். கல்மண்டபத்தில் சாமியார் ஒருவர் அமர்ந்திருக்கிறாராம். பார்க்கப்போன கூட்டத்தோடு கங்கனாவும் போனாள். போயிருக்க வேண்டாம். திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே இறங்கிவந்தவளிடம், எந்நேரமும் மலர்ந்திருக்கும் புன்சிரிப்பு காணாமல் போயிருந்தது.
மறுநாளிலிருந்து தினசரிப் பூஜைகள் அனைத்தும் நின்றன. ஆச்சரியப்பட்ட மாமியாரிடம்,
கடவுள் கண்ணுக்கு நேரே வந்து உட்கார்ந்திருக்கிறார். தரிசனம் செய்தால் போதாதா அத்தை?
என்று பதிலளித்தாளாம்.
விதவிதமாகச் சமைத்து எடுத்துக்கொண்டு நாள்தவறாமல் குன்றேறத் தொடங்கினாள். தினசரி போகிறாளே, என்னதான் செய்கிறாள் என்று உளவறியப் பின்தொடர்ந்தவர்கள் திகைத்துப்போனார்கள். மூடிய பாத்திரங்களை, கண்மூடி அமர்ந்திருக்கும் திகம்பரர்முன் படைத்துவிட்டு, எதிரில் தானும் கண்மூடி உட்கார்ந்திருப்பாளாம். சாயங்காலம்தான் திரும்புவாள்.
எல்லாமே மாறிப்போனது. யாரிடமும் நின்று பேசுவதில்லை. ஒருவேளை மட்டும் சாப்பாடு. அதுவும், குன்றின் உச்சியில் படைத்தபிறகு. பிற வேளைகளில், எங்கோ வெறித்த பார்வை. இத்தனைக்கும் நடுவேதான், கருத்தரிக்கவும் செய்தாள். விஷயங்களின் தீவிரம் அதிகரித்துவிட்டது. கர்ப்பிணிப்பெண் மலையேறலாமா என்று விசாரித்தவர்களிடம்,
சாஸ்திரமென்ன சாஸ்திரம். உடம்பால் மெனக்கெடுவது சுகப்பிரசவத்துக்கு வழிவைக்கும் இல்லையா!
என்று மழுப்பிச் சிரிப்பாள் மாமியார்.
ஆனால், புருஷனிடம் சிரிப்பு இல்லாமல் போனது. குழந்தை பிறந்த மறுநாளே மனைவி மறுபடியும் குன்றேறக் கிளம்பியபோது ஆத்திரம் வெடித்தது. தடுத்தான். மீறி நகர்ந்தவளை, கூந்தலைப் பிடித்து இழுத்தான். பதிலேதும் சொல்லாமல், போவதிலேயே முனைப்பாய் இருந்தாள். கரையேறிப் பாய்கிற நதிக்கு மதகு ஒரு பொருட்டா.
அடித்தான். தாறுமாறாக அடித்தான். தெருவில் வைத்து அடித்தான். ஊரே வேடிக்கை பார்க்க அடித்தான். தடுக்க வந்தவர்களைப் பொருட்படுத்தாமல் அடித்தான். கை சோர அடித்தான். அடிகள் தீர்ந்தபின், எதுவுமே நடக்காத மாதிரிக் கிளம்பியவள்மீது, கனத்த வாசகம் ஒன்றை வீசினான். கையாலாகாமல் வேடிக்கை பார்த்த ஊர் திகைத்தது. அவசரவேலை இருக்கிற மாதிரி, கலைய முற்பட்டது.
கங்கனா அவனை வெறித்தாள். சுற்றிலும் நின்ற ஊமைஜனங்களை வெறித்தாள். தலைகுனிந்து நின்ற மாமனார், மாமியாரை வெறித்தாள். வீட்டுக்குள் வீறி அழும் சிசுவின் குரல் கேட்டது. வேகமாக உள்ளே திரும்பினாள்.
கலையத் தொடங்கிய கூட்டம் மீண்டும் கூடியது. புருஷன்காரனை ஏசவும், புத்திசொல்லவும் தலைப்பட்டது. சிறிய ஊர்தானே. கிட்டத்தட்ட அத்தனைபேருமே, ஏதோவொரு வகையில் உறவுக்காரர்கள்…
கொஞ்சநேரம் போனது. கதவு திறந்தது. மொத்தக்கூட்டமும் மூர்ச்சைநிலைக்குப் போனது. ஆண்கள் தலைகுனிந்தனர். மாமியார் தடாலென்று வீழ்ந்தாள். பெண்கள் குலவையிட்டனர். உடம்பு உதற நின்றிருந்த கணவனை, நிதானமாக நெருங்கினாள் கங்கனா. குழந்தை குடித்ததுபோக மிச்சமிருந்த பால் வயிற்றில் சொட்டி வழிய, உரத்த குரலில் கூவினாள்:
ஒருத்தருக்குக் காட்டினேன் என்றுதானே அபாண்டமாய்ச் சொன்னாய்? இதோ, ஊருக்கே, உலகுக்கே, காட்டுகிறேன். இனி ஒட்டுத்துணி அணியமாட்டேன்…
அப்புறம், ஆயுள்முழுக்க அப்படியேதான் இருந்திருக்கிறாள்…
பேரக் கிழவரும், கதைகேட்டவர்களும் ஒரேமாதிரிப் பெருமூச்சு விட்டோம்.
என்றாள் பத்மினி.
சொல்ல விட்டுப்போய் விட்டது – கோவிலுக்குள், பரம்பரைப் பூசாரி தவிர, ஆண்களுக்கு அனுமதி கிடையாதாம்; பிள்ளைவரம் வேண்டியும், புருஷனுடனான பிணக்குத் தீரப் பிரார்த்தித்தும் வரும் பக்தைகள் மட்டுமே வரலாம். மூல விக்கிரகமே, வெண்பளிங்கினாலான ஆளுயர அரசிலைதானாம்…
*******