அரபிக் கடலின் காந்தக் கரங்கள்
1985 மிகவும் சாதுவான ஆண்டாக இருந்தது. ஜார்ஜ் ஆர்வெல் ‘1984’ என்றுதான் நாவல் எழுதினார். 1984இல்தான் இந்திரா காந்தி சுடப்பட்டார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். போபால் நகரத்தின் காற்றில் கார்பைட் ஆலை நஞ்சை உமிழ்ந்ததும் 1984இல்தான். நம்மால் ஒருபோதும் உய்துணரமுடியாத ஒரு வினாடியின் நூறில் ஒரு பங்கு (1/100) வித்தியாசத்தில் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்தார் பி.டி.உஷா. தூர தேசத்தில் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாகச் செத்துப் பிழைத்தார். ராஜீவ் காந்தி ஆப்-கி-பார் என்றெல்லாம் கோஷம் போடாமல் சார்-செள(400) இடங்களைத் தாண்டினார். பல பெரிய சம்பவங்கள் 1984இலேயே நடந்துவிட்டதால் 1985 பரபரப்பில்லாமல் இருந்தது. ஆனால் எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையில் எளிய சம்பவங்கள் நடக்கத்தானே செய்யும்? எனக்கும் நடந்தது.
1985 ஏப்ரல் 15ஆம் நாள் அதிகாலை நான் எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அது மதுரையிலிருந்து வந்த திருவள்ளுவர் பேருந்து. அன்றைய தினமே ஒரு புதிய வேலையில் சேர்ந்தேன். மதுரையில் அரசுத் துறை. கொச்சியில் தனியார் நிறுவனம். அது தாராளமயத்திற்கு முந்தைய காலம். தரவுகள் இருமைகளாக (binary) மாறி, அவை தொழிலாகவும் நுட்பமாகவும் வேலையாகவும் வாய்ப்பாகவும் மாற இன்னும் சில ஆண்டுகளாகும். ஆகவே அந்நாளில் இந்நாளைவிட அரசு வேலைகள் பெறுமதியானவை. அரசு வேலை பாதுகாப்பானது, ஓய்வூதியம் உண்டு. மேலதிகமாக நான் பார்த்து வந்த அரசு வேலையின் மீது எனக்கு மதிப்பும் இருந்தது. என்றாலும் நான் தனியார் துறைக்கு மாறினேன். அதற்குச் சில காரணங்கள் இருந்தன.
அஞ்சலக ஆவணங்களில் எர்ணாகுளமும் கொச்சியும் ஒரே நகரம்தான். எர்ணாகுளத்தை உள்ளடக்கிய மாநகராட்சிக்குக் கொச்சி என்றுதான் பெயர். ஆனால் எர்ணாகுளமும் கொச்சியும் இரட்டை நகரங்கள். இடையே அரபிக் கடல். இணைப்பது வெந்துருத்திப் பாலம். பிரிட்டிஷார் கட்டியது. கொச்சியில் கடலோர மண் பலவீனமானது. ஆழத்தில் அடித்தளம் அமைக்க வேண்டும். அது சிரமமானது. அப்போது இந்தியாவில் உருக்காலைகள் இல்லை. இரும்பு கப்பலேறி வரவேண்டும். எல்லாத் தடைகளையும் தாண்டி கட்டப்பட்ட ஒரு பொறியியல் அற்புதம் இந்தப் பாலம். 2011இல் சற்றுத் தள்ளி புதிய பாலம் கட்டிவிட்டார்கள். வெந்துருத்திப் பாலம் இப்போதும் அதே இடத்தில் இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளையும் சிற்றுந்துகளையும் அனுமதிக்கலாமா என்று வெகு நாட்களாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அனுமதித்தால், இந்தப் பாலத்திலிருந்து வெலிங்டன் தீவில் அமைந்திருக்கும் இந்தியக் கடற்படைத் தாவளத்தைப் (Naval Base) பார்க்கலாம். அதில் எடுப்பாக நிமிர்ந்து நிற்கும் ஒரு ஏழு மாடிக் கட்டிடம் தெரியும். அதைச் சுற்றி ஆறு கட்டிடங்கள், வெவ்வேறு உயரங்களில். எல்லாக் கட்டிடங்களையும் பாலத்திலிருந்து பார்க்க முடியாது. எல்லாம் சேர்ந்துதான் 288 படுக்கைகளைக் கொண்ட சஞ்சீவினி மருத்துவமனை வளாகம் (இப்போது 333 படுக்கைகள்). அப்போது ராணுவத்தில் மட்டும்தான் கப்பல்களுக்கும் கட்டிடங்களுக்கும் இந்து மதத் தொன்மங்களிலிருந்து பெயர் வைத்தார்கள்.
இந்த மருத்துவமனைக் கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற பல பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டன. வெற்றி பெற்றது ஓர் உள்ளூர் நிறுவனம், ஒப்பீட்டளவில் சிறியது. அதன் உரிமையாளர் எம்.பி.குரியன். 1985ஆம் ஆண்டின் துவக்கத்தில் என்னை அவர் நேர்கண்டார். நேர்காணலின் முடிவில் சஞ்சீவினி வளாகத்தைக் கட்டி எழுப்புகிற பணியின் தலைமைப் பொறியாளராக அவரது நிறுவனத்தில் என்னை நியமித்துக்கொள்ள முன்வந்தார். அப்போது நான் பச்சை மண். பொறுப்பு பெரிது. சவாலானது. பொறியியல் ரீதியாக நிறையக் கற்றுக்கொள்ளும் சாத்தியங்கள் அந்த வாய்ப்பில் சூல் கொண்டிருந்தது.
ஆகவே நான் அந்த வேலையில் சேர்ந்தேன். அதற்கு இன்னொரு காரணம் எம்.பி.குரியன். 1985 ஜனவரியில் கொச்சி நகரின் மகாராஜா கல்லூரி ஸ்டேடியத்தில் நேரு கோப்பைக்கான பன்னாட்டு கால் பந்தாட்டப் போட்டி நடந்தது. அப்போது நகரில் எம்.பி.குரியனின் பெயர் பரவலாக அடிபட்டது. இரண்டு காரணங்கள். அந்த ஸ்டேடியம் புதிது. அதைக் கட்டிய ஒப்பந்ததாரர் அவர். அது தரமான கட்டுமானமாக இருந்தது. இரண்டு, கால் பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள கேரள இளைஞர்கள் பலர் கொச்சியில் வந்து தங்கி அந்தப் போட்டிகளைப் பார்த்தனர். அதில் எம்.பி.குரியன் முன்கை எடுத்துச் செயல்பட்டார். ஏனெனில், அவர் விளையாட்டு ஆர்வலருங்கூட. பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் புரவலராக இருந்தார். கேரளக் கூடைப்பந்துக் கழகத் தலைவராக இருந்தார் (1985-93). கேரள ஒய்.எம்.சி.ஏ-வின் முகங்களில் ஒன்றாக அறியப்பட்டவர். அதன் தேசியத் துணைத் தலைவராக இருந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலை பயின்றவர். அவர் கட்டுநர் (builder) என்றே தன்னை அழைத்துக்கொண்டார். ஒப்பந்ததாரர் (contractor) எனும் சொல்தான் அலுவல் ரீதியனது, புழக்கத்திலும் இருந்தது. ஆனால் அந்தச் சொல்லின் மீது படிந்திருக்கும் கறையின் காரணமாக அதைத் தவிர்த்தார். தொழிலில் பல தீர்க்கமான கொள்கைகளைக் கடைப்பிடித்தவர். எப்போதும் வேட்டிதான் கட்டுவார். அதில் அவருக்குப் பெருமிதம் இருந்தது.
இராமயணத்தில் வரும் சஞ்சீவினி ஒரு மாமருந்து, அது இலக்குவனை உயிர்ப்பித்தது. கொச்சியில் உருவாகவிருந்த சஞ்சீவினி, ஒரு நவீனக் கட்டுமானம். இது எனது பொறியியல் அறிவை வளர்த்தது. கூடவே கேரள மண்ணும் மக்களும் புகட்டிய கல்வியும் கிடைத்தது. அந்தக் கல்வியும் முதல் நாளே தொடங்கிவிட்டது.
பணித்தலம் இருந்தது கடற்படைத் தாவளத்தில். அது பாதுகாக்கப்பட்ட பகுதி. உள்நுழைய அனுமதி அட்டை வேண்டும். அதில் படமும் வேண்டும். பாதுகாப்பு அதிகாரி எனக்குத் தற்காலிக அனுமதிச் சீட்டை வழங்கினார். ஒரு வாரத்துக்குள் முறையான அனுமதி அட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். என்னிடத்தில் படம் இல்லை. நான் தங்கியிருந்த விடுதிக்கு எதிரில் கடைகள் இருந்தன. மாடியில் ஓர் ஒளிப்பட ஸ்டுடியோ இருந்தது. அது காலையில் கண்ணில்பட்டிருந்தது. மாலையில் அங்கு போனேன். அந்தோ, கடை அடைக்கப்பட்டிருந்தது. கடை மூடப்படும் நேரம் ஐந்தரை என்றது அறிவிப்புப் பலகை. அடுத்த நாள் விதிக்கப்பட்ட நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே கடையை அடைந்தேன். ஆனால் அன்றும் படம் எடுக்க முடியவில்லை. ஏன்?
அந்நாளில் படம் எடுப்பதில் சில கட்டங்கள் இருந்தன. முதலில் கதாபாத்திரம் தலைசீவி பவுடர் போட்டுத் தயாராக வேண்டும். பிறகு ஒளிப்பதிவாளரின் பணி தொடங்கும். கதாபாத்திரம் தலையை மேலாகவும் கீழாகவும் இடமாகவும் வலமாகவும் நடுவாகவும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் காமிராவை நோக்கிப் பார்க்க வேண்டும். இதற்கு ஒளிப்பதிவாளர் படாதபாடு பட வேண்டும். சக்தி வாய்ந்த விளக்குகள் சில நொடிகள் மட்டும் எரியும். அப்போது இமைக்காமலும் நீர் சொரியாமலும் கண்களைத் திறந்து வைத்துக்கொள்ளும் பயிற்சியும் அவசியம். படம் எடுத்த பிறகு கார்பன் வைத்து எழுதிய ரொக்கச் சீட்டு வழங்கப்படும். மூன்றாம் நாளில் அதைக்கொண்டு போனால்தான் படம் கிடைக்கும். படத்தில் இருக்கும் முகத்திற்கும் சீட்டை கொண்டு போகும் முகத்திற்கும் வேறுபாடு இருக்கும். கம்பெனி பொறுப்பல்ல.
அந்தக் கடையின் உரிமையாளர், ஒளிப்பதிவாளர், உதவியாளர் எல்லாம் ஒருவரே. அவர் சொன்னார். எனது வீடு அருகாமையில் உள்ள செராய் எனும் தீவில் இருக்கிறது. அதற்கு மேனாகா ஜெட்டியிலிருந்து படகில் போக வேண்டும். அடுத்த படகு, ஆறு மணிக்கு. மேற்கூறிய சடங்குகளை நிறைவேற்றி, உங்களைப் படமெடுத்துவிட்டுப் போனால் அந்தப் படகு போய்விடும். அடுத்த படகு வரும் வரை காத்திருக்க வேண்டும். இருட்டிவிடும். விளக்கு வைத்ததும் பிள்ளைகள் கொஞ்ச நேரம் படிப்பார்கள். கூட இருக்க வேண்டும். அது முக்கியம் (உமது திருமுகத்தை படம் எடுப்பதை விட). ஆகவே இன்று படம் எடுப்பதிற்கில்லை, நாளை நேரத்தோடு வாரும் என்று சொல்லிவிட்டார்.
என்னால் நம்ப முடியவில்லை. அதுவரை வாடிக்கையாளர்களை எப்படியாவது பிடித்து நிறுத்தும் வணிகர்களைத்தான் பார்த்திருக்கிறேன். தனக்கென்று தனிப்பட்ட நேரம் இருக்கிறது. அது தன் வேலையை விட முக்கியம் என்று சொன்ன ஒருவரை அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தேன்.
சமீபத்தில் ஒரு பெரிய மனிதர் இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைத்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று பேசியிருந்தார். அதாவது வாரத்தில் ஆறு நாட்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். பொதுவாக ஒருவர் ஏழு மணி நேரமேனும் உறங்க வேண்டும். மேலும், காலைக் கடன்களை கழிக்காமல் தீராது. உண்ணவும் உடுக்கவும், பணியிடத்திற்குப் போகவும் வரவும், இவை எல்லாவற்றுக்குமாக மூன்று மணி நேரமாவது தேவைப்படும். எஞ்சுவது இரண்டு மணி நேரம். இந்திய இளைஞர்கள் இந்த இரண்டு மணி நேரத்தைத் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தாருக்காகவும் தாராளமாகச் செலவிட்டுக்கொள்ளலாம் என்று இன்னொரு பெரிய மனிதர் பேசினால் நாம் வியப்படைய வேண்டியதில்லை. இந்தத் தொழிலதிபர்களுக்குப் பணியாளர்களின் நலன் ஒரு பொருட்டன்று.
கடந்து சில ஆண்டுகளாக மனநல மருத்துவர்கள் வேலை நேரத்தை நீட்டித்தால், அது உங்கள் உடல் நலத்தையும் மன நலத்தையும் அரித்துவிடும் என்று சொல்லி வருகிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படியான உரையாடல்கள் நிகழவில்லை. ஆனால் எர்ணாகுளம் சித்தூர் சாலையில் ஓர் ஒளிப்படக் கலைஞர் இதை அவரது வார்த்தைகளில் சொன்னார். அது அவரது குரல் மட்டுமன்று. அது மலையாளிகளின் குரல்.
தொழிலாளர் நலன் என்பது கேரளத்தின் குருதியில் கலந்தது. ஆதலால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிகளும் வலுவான தொழிற் சங்கங்களைக் கட்டியிருந்தன. நான் பணியாற்றிய வெலிங்டன் தீவுப் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யூ-வும் காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி-யும் வலுவாக இருந்தன. அவற்றின் வலு 60%-40% என்பதாக இருந்தது. அதாவது, ஒவ்வொரு கட்டுமானப் பணித்தலத்திலும் இருக்கிற தொழிலாளர்களில் 60% சி.ஐ.டி.யூ உறுப்பினர்களாவும், 40% ஐ.என்.டி.யூ.சி உறுப்பினர்களாவும் இருந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை தொழிலாளர்கள், எத்தனை மாதங்களுக்குத் தேவைப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே சங்கங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். சங்கங்கள் மூலமாகவே தொழிலாளர்கள் வருவதும் போவதும் நடக்கும்.
கட்டுமானத் தொழிலாளர்கள் முறைசாரத் தொழிலாளர்கள்தாம். ஆனால் அவர்கள் நலனைச் சங்கங்கள் பாதுகாத்தன. ஒவ்வொரு ஆண்டும் திறன் குறைந்த, திறன் கூடிய கட்டுமானத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும். பெரும்பாலன தொழிலாளர் பெறும் ஊதியம் இதைவிட அதிகமாகத்தான் இருக்கும். வாரத்தில் ஆறு நாட்கள் பணியாற்றியவர்களுக்கு சனிக்கிழமை வாரச் சம்பளத்துடன் அரை நாள் ஊதியம் கூடுதலாகக் கிடைக்கும். இது ஞாயிறு ஊதியம் எனப்பட்டது. பின்னாளில் ஐந்து நாட்கள் பணியாற்றியவர்களுக்கும் ஞாயிறு ஊதியம் கிடைத்தது, இது அரை நாள் ஊதியத்தைவிடச் சற்றுக் குறைவானது. ஓணம், விஷு, கிறிஸ்துமஸ், ஈஸ்டர், மே தினம், சுதந்திர தினம் ஆகியவை ஊதியத்தோடு கூடிய விடுமுறை நாட்கள். ஒரு தொழிலாளியின் தேவை நிறைவுற்று அவர் விலக்கிவிடப்படும்போதோ அல்லது அவர் தானகவே விலகிக்கொள்ளும்போதோ ஈட்டுத் தொகை வழங்கப்படும். இது அவர் பணியாற்றிய 20 நாட்களுக்கு ஒரு நாள் ஊதியம் எனும் வீதத்தில் கணக்கிடப்படும். மதிய உணவுக்கு ஒரு மணி நேரமும், தேனீருக்கு இரண்டு முறை 15 நிமிடங்களும் விடப்படும் இடைவேளைகள் கரிசனமாகப் பின்பற்றப்படும். போலவே வேலை நேரமும். நான் பார்த்த மற்ற பல மாநிலத் தொழிலாளரை ஒப்பிடுகையில் அவர்களது செயல் திறன் சிறப்பானது.
அந்நாளில் திறன் குறைந்த பணிக்கு, குறிப்பாக மண் வெட்டும் பணிக்கு தமிழர்கள் வந்தார்கள். அதிகமும் கம்பம், தேனி, உசிலம்பட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அப்போது கொச்சியில் அவர்களுக்குக் கிடைத்த ஊதியத்தைத் தமிழகத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. திறன் கூடிய பணிகளை மலையாளிகளே வைத்துக்கொண்டார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. திறன் குறைந்த பணிகளுக்குத் தமிழர்கள் வருவதில்லை. திறன்கூடிய பணிகளிலும் மலையாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இந்தக் காலியிடங்களை வட இந்தியத் தொழிலாளர்கள் நிரப்புகிறார்கள். அவர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதைச் சங்கங்கள் உறுதி செய்கின்றன. கொரோனா காலத்தில் அவர்களை விருந்தினர் என்றழைத்தார் முதலமைச்சர்.
சஞ்சீவினியில் தொடங்கிய எனது கொச்சித் ‘தாமசம்’ அடுத்த சில ஆண்டுகளுக்குத் நீடித்தது. அந்நாளில் என்னைப் பார்க்க வரும் நண்பர்களை அரபிக் கடலின் ஊடாக ஒரு படகுப் பயணத்திற்கு அழைத்துச் செல்வேன். கொச்சிதான் ஐரோப்பியர்கள் இந்தியாவில் முதலில் கால் பதித்த இடம். இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டறிந்த வாஸ் கோட காமா அடக்கம் செய்யப்பட்ட புனித பிரான்சிஸ் தேவாலயம் (கி.பி.1503) கொச்சியில்தான் இருக்கிறது. படகுப் பயணத்தில் அங்கே அழைத்துச் செல்வார்கள். இன்னும் மட்டாஞ்சேரியில் உள்ள போர்த்துக்கீசியர் அரண்மனைக்கும் (கி.பி.1545) யூதர்களின் தேவாலயத்திற்கும் (கி.பி.1568) அழைத்துச் செல்வார்கள். சீன வலை என்கிற முக்கோண வடிவிலான மீன்பிடி வலைகளைக் கடலுக்குள் கட்டியிருப்பதைப் பார்க்கலாம். போல்காட்டி மாளிகை ஒரு சின்னத் தீவில் அமைந்திருக்கும் பெரிய அரண்மனை. ஒரு கட்டத்தில் நானே ஒரு வழிகாட்டிக்கு இணையாக இந்த இடங்களை விளக்க ஆரம்பித்தேன். அந்தப் பயணத்தில் கடற்படைத் தாவளமும் தெரியும். வழிகாட்டிகள் அதைச் சுட்டிக் காட்டுவதோடு நின்று விடுவார்கள். நான் அழைத்துச் செல்பவர்களுக்குச் சஞ்சீவினி மருத்துவமனை வளாகத்தை நோக்கிக் கை காட்ட மறப்பதில்லை. அந்தப் பணி முடிந்ததும் கடற்படைத் தாவளத்திலேயே கப்பல் சீரமைப்புத் துறையைக் கட்டுகிற பணியும் அலுவலர் குடியிருப்புகளைக் கட்டுகிற பணியும் அடுத்தடுத்து வந்தன. படகில் போகிற போது இந்தக் கட்டுமானங்கள் தெரியாவிட்டாலும் ‘அதோ, அங்கேதான் இருக்கிறது’ என்று நண்பர்களுக்குச் சொல்லி வைப்பேன்.
எனது கொச்சிப் பயணத்திற்கும் ஒரு முடிவு வந்தது. 1994இல் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஒரு விதியைப் போல அந்த ஆண்டை விட அதற்கு முந்தைய ஆண்டான 1993 பரபரப்பாக இருந்தது. ‘1993’ என்று யாரும் நாவல் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அந்த ஆண்டுதான் மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. மாதேஸ்வரம் காடுகளில் வீரப்பனின் ஆட்சி நடந்தது. நரசிம்ம ராவின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொணர்ந்தன. அது தோல்வியுற்றது. ஆனால் சில உறுப்பினர்களுக்கு அவர் கையூட்டு வழங்கினார் எனும் வழக்கு பல ஆண்டுகள் நீடித்தது. மன்மோகன் சிங்கின் நிதிநிலை அறிக்கை தூரதர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பானது. 1993இல்தான் இந்தியாவில் முதல் முறையாக சன் தொலைக்காட்சியின் சேவை தொடங்கியது.
அடுத்த ஆண்டான 1994இல் சுஷ்மிதா சென்னும் ஐஸ்வர்யா ராயும் முறையே பிரபஞ்ச அழகியாகவும் உலக அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றபடி அந்த ஆண்டு சாதுவாக இருந்தது. அந்த ஆண்டின் மே மாத இறுதியில் நான் கொச்சியிலிருந்து புறப்பட்டேன். ஒன்பதாண்டுகளுக்கு முன்பு நான் எர்ணாகுளம் வந்ததற்கும் இப்போது விடை பெறுவதற்கும் இடையில் ஆறு வித்தியாசங்கள் இருந்தன. வந்தது மதுரையிலிருந்து. புறப்பட்டது சென்னைக்கு. வந்தபோது கொச்சியில் இரண்டாண்டுகள் வரை வேலை பார்க்கலாம் என்ற கருத்தில்தான் வந்தேன். கொச்சி பிடித்து வைத்துக்கொண்டது. சென்னையில் புதிய வேலையில் நீண்ட காலம் இருப்போம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அடுத்த ஆண்டே (1995) ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தேன். கொச்சிக்கு வந்தபோது தனியனாக இருந்தேன். இப்போது மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர். வந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து தனியாகத்தான் வழி விசாரித்து விடுதியை அடைந்தேன். இப்போது எர்ணாகுளம் சந்திப்பில் வழியனுப்ப உடன் பணியாற்றியோரும் நண்பர்களும் வந்திருந்தனர். எம்.பி.குரியன் வந்திருந்தார். சில அரசு அலுவலரும் தொழிற்சங்கப் பொறுப்பாளர்களும் இருந்தனர். மனைவியின் நண்பர்களும் வந்திருந்தனர். எல்லோரிடமும் சிரித்துப் பேசி விடை பெற்றேன். மனதில் எந்தப் பிரிவேக்கமும் இல்லை. அந்த நகரை விட்டுப் பிரிய முடியும் என்றெனக்குத் தோன்றாததே காரணம். அது அப்படியே ஆனது. கடந்த 30 ஆண்டுகளில் அரபிக் கடற்கரை என்னைப் பல முறை இழுத்திருக்கிறது. சில தொடர்புகள் ஆழமானவை.
அனுபவம் தொடரும்…