இணைய இதழ் 103கட்டுரைகள்

பஷீரின், ‘காதல் கடிதம்’ – செ.மு.நஸீமா பர்வீன்

கட்டுரை | வாசகசாலை

வாசிப்பு உண்டாக்கிய பரவசத்தை எழுதிக் கடந்துவிடுதல்

வரலாற்றின் முதுகில் வலுக்கட்டாயமாக ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுக்கும் இலக்கியவாதிகளிடையே வரலாற்றைத் தன் தோளில் சுமக்கும் காலத்தால் அழியாத படைப்பாளுமைகளில் பஷீர் ஒரு கால வரலாறு. காலம் அவர் எழுத்தைக் கடந்து செல்ல முடியாமையின் அடையாளமாக அவ்வெழுத்துத் தடாகத்தில் தமக்கான எழுத்தை மொண்டு பஷீரின் சாயலிலோ, பஷீரின் தொடர்ச்சியாகவோ எழுந்து வரும் புதிய எழுத்தாளர்களைக் காலந்தோறும் காண முடிகிறது. 

ஒத்தக்கண்ணன் பாக்கர், பொன் குருசு தோமா, ஆனவாரி ராமன் நாயர், எட்டுக்காலி மம்மூஞ்ஞு, பாத்துமாவின் ஆடு, குஞ்ஞு பாத்திமாவின் உப்பப்பாவுடைய கொம்பானை என அவருக்கு எதிர்ப்பட்டவர்களும் எதிர்ப்பட்டவைகளும் நித்தியஜீவியாயினர். பஷீருக்குத்தான் எத்துணை அவதாரங்கள். ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்து கொஞ்சம் பெரிய ஒண்ணாகும் என்ற பதிலால் ‘பெரிய ஒண்ணு’ ஆனார். கெடந்து மோளாமலே கெடந்து மோளியாகி யானையின் கால்களினூடாகக் கடந்தார். மதில்களுக்கப்பாலிருந்த பெண் வாசனை நுகரும் உலகப் புகழ் பெற்ற மூக்கனுமானார். அன்பு மிக்க சுஹராவும் வெகுளிப்பெண் குஞ்ஞு பாத்திமாவும், வாசனையால் அறியப்படும் நாராயணியும் நம் நினைவுத் தடத்தில் நீங்காது நீந்திக்கொண்டிருக்கிறார்கள்.

பூக்களைப் பூமியின் புன்னகையாக, தண்ணீரைப் பூமியின் ரத்தமாக, பூமியை எல்லா உயிர்களுக்கும் பாத்தியப்பட்டதாக அணுகிய பஷீர் தொடர்ந்து எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இலக்கிய வெளியில் நிறைந்திருக்கின்றார். பஷீரைக் குறித்தோ அவர்தம் படைப்புகள் குறித்தோ ஏதும் எழுதினால் கூறியது கூறலாகிவிடுமோ என்றெண்ணுகிற அளவிற்கு தொடர்ச்சியாக எழுதப்படுபவராக இருக்கிறார். அவர் படைப்புகள் குறித்து எழுதுவது இத்திரி கூடுதலாகுமோ என்றெண்ணிக் கட்டப்பட்டிருந்த கைகளை அவரின் முதல் நாவலான ‘காதல் கடிதம்’ தளர்த்திவிட்டது. வாசிப்பு உண்டாக்கிய பரவசத்தை எழுதியேனும் கடந்துவிடுதல் என்ற நிலைப்பாட்டில் இந்த வாசிப்பனுபவப் பகிர்வு அமைகிறது.

பஷீரின் காதல் கடிதம் அவர் படைப்புகளிலேயே ஆகப் பிடித்தமான ஒரு நூலாகப் பதிந்துவிட்டது. இதற்கு முன்பு படித்த அவரது பல படைப்புகளும் இதே எண்ணத்தை வாசிப்பின் இறுதியில் ஏற்படுத்தியிருக்கின்றன என்றபோதிலும் இந்தப் பிரதி உண்டாக்குகிற மன அதிர்வும் வாசிப்பினிமையும் தற்சூழலில் மதுர மனோகரமாக இருக்கிறது. 

கடினத்தின் எல்லையாக தனி ‘டுக்குடு டுக்குடு’வாக இருக்கிற கல்மனசுக்காரி சாராம்மா. அவளுக்கு மதுரசுந்தரமான காதல் ஜோலியைக் கைவசம் வைத்திருப்பவன் ப்ளடி ஃபூல்ஸானபோதும் கல்மனதுக்காரனல்லாத கேசவன் நாயர். 

காதல் ஜோலிக்குச் சம்மதம் தெரிவிக்காமல் நாயகி இழுத்தடிப்பது தாளாமல் தன் தற்கொலை முடிவை நாயகன் அறிவிக்கையில் ‘அந்த மங்கல நிகழ்ச்சி என்னைக்கு’ என்று கேட்டு, தற்கொலை வழிக்கான யோசனைகளைச் சொல்லும் குறும்பத்தியை யார்தான் காதலிக்காமல் இருக்க முடியும்?. 

சாராம்மா தன் ஊதியத்தையும் குலுக்கலில் விழுந்த பணத்தையும் கேசவன் நாயரிடம் கொடுத்ததை வாசிக்கிறபோது கொஞ்சம் நெருடியது. இதை பஷீரிடம் சொன்னால், கேசவன் நாயர் சீதன ஏற்பாட்டை நேசிப்பதாகத்தானே எழுதியிருக்கிறேன் என்று சொல்லக்கூடும். இந்தக் கிழவனை நோக்கி விமர்சனச் சிலம்பைச் சுழற்ற முடிவதில்லை. பெண் சார்ந்து அம்புகளே எய்தினாலும் நம்மை வந்தடையும்போது அவற்றை மலர்க்கணைகளாக மாற்றிவிடும் மந்திரம் தெரிந்த வித்தைக்காரர் பஷீர்.

கொஞ்சம் அறிவார்ந்த மிடுக்குள்ளவனாக நாயகனையும் அறிவுக்கும் மடமைக்கும் இடையிலானவளாக நாயகியையும் எழுதுகிற வழமையான பஷீரின் பாணியில் இந்தக் கதையிலும் பெண்களின் தலைக்குள்ளேயிருப்பது மூளையில்லை வெறும் நிலாவெளிச்சம் என்று சீண்டுகிறார். 

‘பெண்களுக்குக் கல்வி தவிர்க்கக் கூடாத ஒன்று’, ‘மண்டூஸுகளாக வாழ வேண்டியவர்களா பெண்கள்’ என்று கேட்ட பஷீர்தானே பூவன்பழம் சிறுகதையில் கணவனைத் தன் விருப்பிற்குச் செதுக்க நினைத்த பி.ஏ பட்டதாரி ஜமீலாவைக் கம்பால் அடித்தால் திருத்தலாம் என்று பாடம் புகட்டியவர் எனத் தோன்றுவதுண்டு. ஆனால், “பூவன் பழம் என்ற இந்தக் கதையை நான் சுய விருப்பத்துடன் எழுதவில்லை. அப்துல் காதர் சாகிபின் உபத்திரவம் தாங்க முடியாமல்தான் எழுதுகிறேன்” என்று முன்ஜாமின் எடுத்துவிடுகிறார். “பெண்கள் பெருமையடித்துக் கொள்வதில் மிகத் திறமையானவர்கள் அல்லவா? அவர்கள் தட்டும் தாளத்திற்கேற்ப ஆடும் வெறும் பொம்மைகள்தானே ஆண்கள்?” என்று ஐசுக்குட்டியைக் கிண்டல் செய்தவரும்தான் பஷீர். ஆனால், பெண் குறித்த அபரிமிதமான பொய்யான கற்பிதங்களைப் புதுத்துணியைக் கிழிப்பதுபோல ‘பர்ர்ர்’ரென்று கிழித்தவரும் அவர்தானே. தேவதையை மனுஷியாக்கியவர். காதலை உடைத்து எல்லா உயிரினங்களின்மீதும் அன்பை விதைத்தவர். அன்பை வீரமென்று புகட்டியவர். எனவே, பெண் குறித்த பஷீரின் கேலிகளை முழுமையும் ஆதிக்க மனநிலையாக பாவிக்க முடிவதில்லை. முறைப்பெண்களைச் சீண்டும் மாமன்மார்களின் குறும்புத்தனம்போல அந்தக் கேலியில் ஒருவகை நேசத்தையே உணரமுடிகிறது. அவர் செல்லமாகச் சீண்டுவது போலே நாமும் செல்லமாகக் கோபித்துக் கொள்ள வேண்டியதுதான்.

புத்தி பெருத்து, புத்தி பெருத்து தலையே மகா மகா பாலைவனமான பஷீரின் ‘எடியே’வான ஃபாபி பஷீர் (மனைவி) “பெண்ணின் மணம் டாட்டாவுக்கு விருப்பமானதாக இருந்தது. பெண்கள் எல்லோரையும் டாட்டா அந்த அளவு நேசித்தார். டாட்டா பெண்களிடம்தான் மிகுந்த நன்மையைக் கண்டார்” என்கிறார். அதனால்தான் பஷீரின் பிரபஞ்சம் முழுவதும் வாசனையிலும் அழகிலும் மூழ்கியிருக்கிறது போலும்.

காதல் நிரம்பிவழியும் தன் இதயம் என்ற பெரிய செண்ட்டுக் குப்பியின் மூடியைத் திறந்து அழகு மணமுள்ள ரகசியத்தை அந்தத் தங்கக்குடத்தின் முன்னே கேசவன் நாயர் வைக்கையில் அதை மிகச் சாதாரணமாகக் கடந்துபோகையில் சாராம்மா பொய்மறுப்பின் சுகந்தமாகிறாள்.

அறைச்சாவியை சாராம்மாவின் கையில் கொடுக்கையில் கேசவன் நாயர் உள்ளுக்குள் சொல்லிக் கொள்ளும் ‘இதோ பெண்ணே என் இதயத்தின் அழகான திறவுகோல்’ என்ற வாக்கியம் வசீகரமாக இருக்கிறது. கேசவன் நாயர் சாராம்மாவின் முன் மனம்திறந்தாலும் வாய் திறந்தாலும் கடிதம் திறந்தாலும் காதலும் கவிதையுமே கமழ்கிறது. காதலர்களே காதல் கடிதமாக மாறுவதும் எதிர்காலத் திட்டமிடலில் அவர்களது தங்கக்குட்டன் எந்த அடையாளப்பூச்சுமற்ற ஆகாச மிட்டாயாக மலர்வதும் எத்துணை மகத்தான சிந்தனைகள். 

‘வாழ்க்கை, இளமைச் சூட்டுடனும் இதயம், காதலின் அழகு மணத்துடனும் இருக்கும் இந்தக் கிடைத்தற்கரிய காலகட்டத்தை என் அன்புத் தோழியே எப்படிச் செலவிடுகிறாய்?’ என்று தொடங்கும் கேசவ நாயரின் காதல் கடிதம் மிகச் சுருக்கமும் எளிமையுமான கவிதை. அந்தக் கவிதையில் தொடங்கி, பிரதி முழுக்கக் கவிதையாகவே எண்ணச் செய்கிறது. வாசிக்கும்முன் இருந்ததைப் போல ‘காதல் கடிதம்’ என்ற இந்த நூல் நெடுங்கதையா குறுநாவலா கடித இலக்கியமா என்ற குழப்பம் வாசிப்பின் இறுதியில் கரைந்து விடுகிறது. காதலாகவும் கவிதையாகவும் மட்டுமே அப்பிரதி மீதான அபிப்பிராயம் நிறைந்து விடுகிறது. கேசவ நாயரின் காதல் அழகானது. அவரின் காதலை அழகாக்கும் சாராம்மாவின் இருத்தல்தான் பிரதியைப் பேரழகாக்குகிறது. 

திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் கைதியாக அடைபட்டிருந்த நாட்களில் சக கைதிகளுக்கு வாசித்துக் காண்பிப்பதற்காக, பஷீர் எழுதிய வேடிக்கைக் கதை என்பதை முன்னுரை வழியாக அறிய முடிகிறது. வேடிக்கைக்குள்ளிருந்து வெளிப்படும் மதுர சுந்தர நறுமணமான காதல் மணக்கிற கதை ‘காதல் கடிதம்’. வேடிக்கையான நாயகன் கேசவன் நாயர். வேடிக்கையான நாயகி சாராம்மா. வேடிக்கையான ஆளுமை பஷீர். ஆம் ‘வேடிக்கை வாழ்க்கையின் நறுமணமாகிறதே’. 

சுகுமாரனின் மொழியாக்கத்தில் பஷீரை வாசிக்கிறபோது பஷீரின் ஆன்மா சுகுமாரனிடம்தான் இருக்கிறது என்று தோன்றுவதுண்டு. ‘காதல் கடிதம்’ மொழிபெயர்ப்பும் அந்த எண்ணத்திற்கு உண்மையாகவே இருக்கிறது. கேசவன் நாயரின் காதல் ஏக்கத்தைப் புலப்படுத்தும் அட்டைப் படத்திலிருப்பவரின் முகபாவம்தான் எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது!

புனைவு கட்டவிழ்க்கும் மனத்திரையின் காட்சியோட்டத்திற்கு எந்த இடறலுமில்லாத கோட்டோவியங்கள் பிரதியோடு இழைந்துவிட்ட மற்றுமோர் இனிமையாகின்றன. நிலவுவெளியில் நீந்துவதுபோல, காடுவெளியில் கரைவதுபோல, காதல் வெளியில் மிதப்பது போலே ஒரு பரவசமும் இனிமையுமான வாசிப்பனுபவம் வேண்டுமெனில் இந்தப் பிரதி நல்லதொரு தெரிவு. 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button