இணைய இதழ் 98சிறுகதைகள்

பிரார்த்தனைகள் தோற்பதில்லை – இத்ரீஸ் யாக்கூப்

“ஏம் மதனி..! மவங்கராய்ங்கிட்ட சொல்லி இந்த செவத்த இடிச்சிவிட்டு ஆலப்புலா கல்ல வச்சாவது கட்ட சொல்லலாம்மில.. பாரு ஐப்பசிக்கும் அதுக்கும் எப்படா சரியுவோம்னுல செவரெல்லாம் ஊறிக்கிட்டு நிக்கிது!”

எங்கேயோ செல்ல எத்தனித்துக் கொண்டிருந்த பெரியம்மாவை மறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

மூன்று நான்கடி அகலச் சுவர்களோடு கட்டப்பட்ட எங்களின் அந்த பூர்வீக வீடு இன்னும் திடகாத்திரமாக எங்க அப்பாரைப் போலவே எல்லோருக்கும் சவால் விட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதைப்போல தன்னிடம் யாரும் அப்படி சவால் விடுவதெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்காது. அதனால் அவருக்குப் பிரித்துக் கொடுத்த பகுதியை எப்போதோ இடித்துவிட்டு, சிமிண்ட்டில் எல்லாவற்றையும் கட்டிவிட்டார்.

“எங்க உங்க அண்ண மகைங்களும் அவர மாரியேதான் இன்னும் பொறுப்பில்லாம சுத்திக்கிட்டு திரியிறாய்ங்க..! ஓம் மவனாச்சும் வெளிநாடு சம்பாத்தியத்துல இருக்குறவன். நீ நெனச்சாலாவது நெனச்சதப் பண்ணலாம்..”

“மதனி ஒனக்கே தெரியும்! இது என்னோட சம்பாத்தியத்துல கட்டுனதாக்கும்! கண்ட கண்ட கழுத கொடுத்துதான் நான் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கேனு நெனச்சியாக்கும்!” குரலில் அவருக்கே உரிய சீற்றம். அப்பாவிற்கு இது போன்ற சந்தர்ப்பங்கள் அமைந்துவிட்டால் போதும் எப்ப எப்ப எனக் காத்திருக்கும் அவரது நாக்கிற்கு என்னைச் சாடுவது அல்வா சாப்பிடுகிற மாதிரி.

“எல்லாம் தெரியும் செல்வராசு, நீயும் மவன் மருமககிட்ட நல்லா நடந்துக்கணும்ல! இன்னும் மல்லுவேட்டியோடதான் சுத்திக்கிட்டுத் திரியுற!” அப்படி பெரியம்மா சொல்லவும், அப்பாவுக்கு வெட்டிவிட்ட பாத்தியை போல் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“இந்தா..! ஓஞ் செவரு சரிஞ்சி உலுந்துருமேன்னு நல்ல எண்ணத்துல சொன்னா எனக்கே புத்தி சொல்றியா? அண்ணங்காரன் போனதும் ஒன்னெல்லாம் ஒட்டு ஒறவுல இருந்து ஒதுக்கி வச்சிருக்கணும்! எங்களோட பூர்வீக வீடாச்சேன்னு ஒரு அக்கறையில சொன்னேம் பாரு, என் புத்தியை செருப்பால அடிக்கணும்!”

பெரியம்மாவிற்கு இவருடைய சிடுசிடு சுபாவமும் சுடுதண்ணீர் முசுடும் தெரிந்ததே என்றாலும், பக்கத்து கொல்லையிருந்து வேலிக்கு அருகே நின்றவனாய் எதார்த்தமாக காதாத்திக் கொண்டிருந்த என்னால் அதற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை. பெரியம்மாவிடமிருந்தும் பதில் பேச்சு ஏதும் வராமலிருக்க, என்னாச்சோ வென்று படலைத் திறந்துக் கொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருந்த வாட்டை பக்கம் போனேன்.

என்னை கண்டதும் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தியா என்பது போல் ஒரு கோபப்பார்வையை வீசியபடி, நான் எதுவும் கேட்டுவிடுவேனோ என்ற வேகத்தில், தனது புல்லட்டை ‘உர் உர்’ என்று அழுத்தத் தொடங்கினார். முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பெரியம்மாவும் உள்ளே சென்றுவிட்டாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளாகவே வந்து ஒண்ணுக்கும் வாய் பேசாத என்னுடைய அப்பாவி அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லி தன் அமைதிக்கு கொஞ்ச நேரம் புலம்பக் கூடும்.

என்னுடைய அப்பாரு பெரியம்மா வீடு என்று என்றில்லை, யாரிடமும் தனது முரட்டுத்தனத்தை மருந்துக்கும் விட்டுக்கொடுக்காதவர். ஏன் பெற்ற தாயிடம் கூட இரக்கம் காட்டாத ஒரு பாவி; கொடுங்கோலன். தனியாக வந்துவிட்ட பிறகு, மகன் என்ற முறையில் ஒரு நாளும் அவளை வைத்து சோறு போட்டதில்லை, திருநாள் தீபாவளிக்கென்று ஒரு புதுத்துணி எடுத்துக் கொடுத்ததில்லை.

அப்பத்தா ரொம்ப காலம் எங்க சின்ன ஸ்கூல் பக்கம்தான் முட்டாய் கடை போட்டு வயித்த கழுவிக்கிட்டு இருந்திச்சி. அவளுடைய ஒடிசலான உருவத்திற்கும், வளைந்த வாட்டத்திற்கும் தொலைவிலிருந்துப் பார்க்க கூதலுக்கு யாரும் வெயிலில் உட்கார்ந்திருப்பது போல இருக்கும்.

அஞ்சாவது வரை அந்த ஸ்கூல்லதான் படிச்சேன். தினமும் எனக்கு ஒன்றிரெண்டு தேன் மிட்டாய், உடைந்த முறுக்கு, பொரி உருண்டை என ஏதாவது இருப்பதிலிருந்து தந்துவிடுவாள். எவ்வளவு பலகீனமாக காட்சியளித்தாலும் என்னைக் கண்டுவிட்டால் போதும், நத்தை போல அதுவரை சுருண்டு கிடந்தவள், வெட்டுக்கிளியை போல டக்கென எழுந்து உட்கார்ந்து விடுவாள்.. என்னைக் கண்டால் அவ்வளவு சந்தோசம்!

ஒரு நாள் தேன் மிட்டாய் பாக்கெட்டிலிருந்து வழக்கமாகத் தருவதை போல இரண்டை எடுத்து நீட்டிக்கொண்டிருக்க, அப்பா அங்கே வந்து விட்டார்!

“எம் புள்ளைக்கு ரெண்டு மட்டுந்தான் நீட்டுவியோ?” என்று அந்த பாக்கெட்டை பிடுங்குவது போல் வேகமாய் இழுக்க, எல்லாம் மண்ணில் சிதறிவிட்டது!

“ஏண்டா அநியாயம் பண்றா..!” என்று பலகீனமான குரலில் உட்கார்ந்திருந்தவள் கையை ஓங்குவது போல எழ முயல, அதை அவரால் பொறுக்க முடியவில்லை. வேகத்தில் அவள் விரித்திருந்த தின்பண்டங்களை எட்டி என்னைப் பெத்தவன் உதைத்தான்.. விரித்த சாக்கு மேல் வைத்திருந்த அப்பளப்பொறி பாக்கெட்டும் மண்ணுக்கு இரையானது.

எனக்கு பாவமாக இருந்தாலும் இண்டெர்வெல் நேரம் முடிந்துவிட்டதால், என்ன செய்வதென அறியாதவனாய் வகுப்பறைக்கு ஓடிவிட்டேன். சாப்பாட்டு பெல்லு அடித்தவுடன் வந்து பார்த்தபோது, அப்பத்தா கடை இல்லை. எனக்கு முன் வந்த பசங்க சிலர் மட்டும் அங்கே மண்ணையும் எறும்பையும் ஊதி ஊதி இறைந்து கிடைத்தவற்றை தின்றுக்கொண்டிருந்தனர்.

அதற்கப்புறம் அப்பத்தா ரொம்ப நாள் கடையே போடவில்லை. எனக்கும் தீனி ஜாமான் கிடைக்கவில்லை. இடையில் செல்வி அக்கா மட்டும் வந்து அங்கே அவித்த மரவள்ளி கிழங்கு விற்றுக்கொண்டிருந்தாள். காரூவா கொடுத்தா ஒரு துண்டு கிடைக்கும். அப்படியொரு நாள் அவித்த கிழங்கை வாங்கி, தோலை பட்டை போல உரித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எங்கிருந்தோ அப்பத்தா ஒரு கூடையுடன் தள்ளாடி வந்துக்கொண்டிருந்தாள்.

இலுப்பை மரத்தடியில் நான் உட்கார்ந்திருந்ததை அங்கிருந்து எப்படிதான் கவனித்தாளோ எனத் தெரியவில்லை. அவள் வந்துக்கொண்டிருந்ததை கண்டவுடன் எனக்கும் சந்தோசம் தொற்றிக்கொண்டது. கையில் கிழங்கு இருந்தாலும் வாநீயை வடித்துக்கொண்டு, தீனி ஏதும் வைத்திருக்கிறாளா என்று கூடையைப் பார்த்தேன். இரண்டு மூன்று பசலைக்கீரைக் கட்டுகள் தென்பட்டன. கீரை விற்க போயிருப்பாள் போலும். கிழங்கிலிருந்து சரிசமமாக பிட்டு அவளிடம் நீட்ட, ‘ஐயா.. என் ஈரக்குல.. என்ன பெத்த ராசா..!’ என்று அந்த கையைப்பற்றி நெகிழ்ந்து நெகிழ்ந்து முத்தமிட்டாள். அவள் முகம் என் கழுத்தோரங்களில் உரசி எண்ணெய் வாசம் அடித்தது.

“நீ தின்னு ராசா..” என்று என் கைகளை மடக்கி எனக்கே ஊட்டிவிட்டு அழகு பார்த்தாள். அவளது அணைப்பில், ஆராதிப்பில் என் அம்மாவைப் போலவே இன்னொரு தேவதையின் ஸ்பரிசத்தை அவள் பெற்றெடுத்தப் பிள்ளையை போல உணர்ந்தேன். மகிழ்ச்சியில் சுடர்விட்டிருந்த அவளது மலர்ச்சியான முகம் விடியலின் கதிர்கள் பரவும் எங்கள் ஊர் வயல்காட்டைப் போல் பொன்னொளி வீசியது.

கண் கலங்கி, மூக்கை சிந்திக்கொண்டவள் தனது நைந்த முந்தானையை எடுத்து அழுத்தித் துடைத்துக்கொண்டாள். பூக்கற்கள் பதிக்கப்பட்டிருந்த அவள் மூக்குத்தி, பழைய தேர்ச்சக்கரம்போல இரு புறங்களிலும் சாய்க்கப்பட்டிருந்தது. அவள் தேவதைதான், வயது போயிருந்தாலும் அருள் பாலிப்பதில் அங்கையற்கண்ணி மீனாட்சிதான்.

“ஆத்தாவ தேடுனியா ராசா..?” தேடலும் ஏக்கமுமாய் வாஞ்சை தாளாது பார்த்தவளுக்கு எனது கவலை தோய்ந்த மௌனம் ஆம் என்று சொல்லியிருக்க வேண்டும். ‘என் ராசா! என் ராசா..!’ என்று பாசமொழுக மறுபடியும் மறுபடியும் கன்னங்கள் நெற்றி என்று மாறி மாறி முத்தங்கள் பதித்தாள். முகமே ஈரமானது போல உணர்ந்தேன். முடியை அள்ளி முடிவது போல கைகளை பின்னால் வாரிக்கொண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டாள். என் அப்பாவை நினைத்திருப்பாள் போலும். கூழூத்தாத அம்மன் அப்படிதான் இருக்குமோ?

அப்பா, அப்பத்தாவை எங்க கூட வச்சிக்க விரும்பவில்லை. தனியொருத்தியாக அவள் மட்டும் எங்க காட்டு பக்கம் இருக்கும் ஒரு சின்னக் குடிசையில்தான் தங்கியிருந்தாள். மனசு கேட்காமல் அவ்வப்போது அம்மா அவளை பார்த்து வரத் தேடிச் செல்வாள். சங்கதி எங்க அப்பாருக்கு தெரிந்துவிட்டால் போதும் அன்றைக்கு திட்டோ, அடியோ அம்மாவிற்காகக் காத்திருக்கும். அப்பாரு தனது மனநிலைக்கு ஏற்ப அதற்குரிய சன்மானங்களை சொல்லிச் சொல்லி அதில் மட்டும் வள்ளலாய் வழங்குவார். என்றாலும் அதற்காக பயந்துக் கியந்துச் செல்லாமலெல்லாம் இருக்க மாட்டாள்; என்ன இருந்தாலும் அவளுக்கு தகப்பனோடுப் பிறந்த அத்தையாயிற்றே! அம்மாவோடு நடந்து செல்லும் ஆசையிலோ அப்பத்தா மீதான பிரியத்திலோ அவளோடு துணைக்கு அவ்வப்போது நானும் சென்றுச் வருவேன்.

“இந்த குடும்பத்துல பெறக்குறவய்ங்களே இப்படித்தானே..! ஒன்னோட மாமனார் பண்ணுன கூத்து எல்லாத்தையும்.. அந்தாளு கண்ணு மூடுற வரைக்கும் நீயும் பாத்துக்கிட்டுதானே இருந்தே தொண்டியம்மா..! பெத்த அப்பன் ஆத்தாளுக்கு எவன்தான் சோறு போட்டான்? எந்த அப்ப(ன்) மகைங்க ஒத்துமையா இருந்தாய்ங்க? பெரியவங் குடும்பத்தையும் பாரு என்ன சந்தியில நிக்கிதுன்னு!” இயலாமையில் கை சேதப்பட்டவளாய் அப்பத்தா தனது கணவனையும் மகன்களையும் நினைச்சி வருந்தி, விரக்தியில் வெறுத்துப் பேசினாலும், எந்தவொரு முகபாவனையும் காட்டாமல் பச்சப்பிள்ளை போலதான் என் அம்மா எல்லா புலம்பல்களையும் கேட்டுக் கொண்டிருப்பாள்.

“தொண்டியம்மா, நீ வேற ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு பெத்து வச்சிருக்க, ஏ நெலம ஒனக்கும் வந்திற கூடாதுடி! புள்ளய மொரடனா வளர வுட்றாத! ரெண்டு புள்ளைய பெத்தும் ஒரு நாதியும் இல்லாம இங்கின கெடக்கிறது மாரி ஒன்னோட பொழப்பும் ஆயிற வேணா! இப்பதான் பள்ளிக்கொடம் எல்லாம் வேற வந்திருச்சே.. மத்தவங்கள போல மனுச மக்களா வர நல்லபடியா படிக்க வச்சிரு!” அவள் சொன்னது அம்மாவுக்கு ஏறிச்சோ இல்லையோ அந்த எட்டு வயதிலும் என் மனதில் ஆழமாய் பதிந்து போனது.

அதேபோன்று அப்பாருடைய குணாதிசயங்களும் என்னுடைய எண்ண ஓட்டங்களும் மாறுபட்டு நிற்கவே, எங்களுக்குள் இடைவெளியும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டும் போனது.

பார்த்தவர்கள், பழகியவர்களெல்லாம் அப்பனைப் போல் மகன் சண்டியன் எல்லாம் இல்லை என என் முன்னாலும் பின்னாலும் பேசுவதைக் கேட்க, கேட்க, அது என்னை முற்றிலும் அவரிடமிருந்து அந்நியப்படுத்த தொடங்கியது.

படிக்கும் காலங்களில் எனக்கு தேவையான பொருட்களை பார்த்துப் பார்த்து அவர் வாங்கித் தந்தாலும், அவைகள் உவப்பானதாகத் தோன்றினாலும் அந்த ஒட்டுதல் மட்டும் ஏற்படவேயில்லை. இன்னொரு புறம் அப்பத்தாவை வீட்டிற்கு கொண்டுவர நினைத்த எனது முயற்சிகள் வெறும் ஏக்கம் அளவிலேயே முடிந்து போனது. அவளும் கூட கடைசி வரை தனது உழைப்பிலேயே உண்டு, வாழ்ந்து ஒரு நாள் இந்த உலகை விட்டுப் பிரிந்தும் போனாள்.

அம்மாவும் சும்மா வீட்டிலிருப்பவள் இல்லை. களையெடுக்க, அறுப்பறுக்க காடு கழனிக்கு நாள் விடாமல் செல்வாள். அதுவும் மழை பெய்தாலும், கண்மாய் நிறைந்தாலும்தான். ஆனாலும் எந்த நிலையிலும் அப்பா கையில் காசு பணம் என்று எப்போதும் ஏதாவது புழங்கிக் கொண்டுதான் இருக்கும். எப்படியோ அப்பாரின் அதட்டல்களையும் உருட்டலையும் அடிகளையும் அம்மாவைப் போல் நானும் சகித்துக் கொண்டு, எப்போதாவது பெய்யும் கோடை மழை அவருடைய பாசத்தைக் கண்டு திகைத்துக் கொண்டு ப்ளஸ் டூ வரை படித்து முடித்தேன்.

என்னோடு கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப் படிச்ச எங்க ஊரு குமரேசன் திருச்சி காலேஜில பிஎஸ்சி ஐ.டி.ல சேர்ந்துவிட்டான். தனியார் கல்லூரி என்பதால் அவனுடைய அப்பாவை போல் அவ்வளவு காசு செலவழிச்சு படிக்க வைக்க என்னோட அப்பாரும் நினைத்திருந்தால் முடிந்திருக்கும்தான். ஆனால் செய்யவில்லை. அப்போது எங்கூர்ல பெட்டிக் கடை வச்சிருந்த மைதீன் மாமா கூட அவருடைய பையனை அதிராம்பட்டினம் வரை அனுப்பி படிக்க வச்சார். எதைச் சொன்னாலும் தன்னால் என்ன செய்ய செய்ய இயலுமென அம்மா எப்போதும் போல பதில் பேசாமல் தன்னுலகிலேயே மூழ்கியிருந்தாள்.

காசு பணம் சேர்த்து வைக்கலையே தவிர நிலம் புலமெல்லாம் இருக்கவே செய்தது. பெற்ற ஒற்றை மகனுக்காக அதில் ஒன்றையாவது விற்று படிக்க வைத்திருக்கலாம். ரமேசு கூட கவர்ன்மென்ட் காலேஜ்ல பிஎஸ்சி பிசிக்ஸ் சேர்ந்திருந்தான். எதுவா இருந்தாலும் மேல படிக்க வைக்க முடியாது என்று அப்பா திட்டவட்டமாக சொல்லிவிட்டதால், எங்க அத்தைப் பையனோட சேர்ந்து நானும் திருப்பூருக்குச் சென்றுவிட்டேன். பனியன் கம்பெனில வேலை.

என் செலவு போக மாதம் எப்படியாவது ஐயாயிரம் வரை அனுப்பிவிடுவேன். ஏனென்றால் அங்கு கிளம்பிச் செல்லும்போதே அம்மாவிடம் கண்டிசனா சொல்லிவிட்டுத்தான் வந்தேன், ‘இனி நீ வேலைக்கே போக கூடாது!’ என.

“தங்க ராசா..!” என்று குரல் தழுதழுக்க கட்டிக்கொண்டு உச்சியை முகர்ந்தபடி அழத் தொடங்கிவிட்டாள். என்ன அப்பாவின் அடிகளை பங்கு போடத்தான் அதற்கு பிறகு அங்கே ஆளில்லாமல் போனது!

நான் அனுப்பிய பணத்தில் நூறு ரூபாய் கூட அம்மா கைக்கு சென்றடையவில்லை என்பதை இரண்டு மாதங்கள் கழித்தே அறிந்து கொண்டேன். எப்போதுமே எனக்கும் அப்பாருக்கும் நெருக்கம் இருந்ததில்லை என்றாலும், இது போன்ற நிகழ்வுகளால் அந்த இடைவெளி மட்டும் வருடம்தோறும் மைல் கணக்கில் கூடிக்கொண்டேச் சென்றது.

சரியாக இருபத்து மூன்று வயதில் திருமணம் செய்து வைத்தார்கள். எல்லா கல்யாணங்களில் போல கொடுக்கல் வாங்கல் சலசலப்புகள் இருந்தாலும் நன்றாகவே நடந்து முடிந்தது. மனைவி படித்தவள் கூடவே தாலுக்கா ஆஃபிசில் மக்கள் தொடர்பு வேலை. அதனால் விடுமுறை தினங்களை விடுத்து, எல்லா நாளும் சுற்று வட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டியதிருக்கும். எப்போதும் ஐந்தாறு மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடுவாள் என்றாலும் சில தினங்களில் தாமதமாகவும் வருவாள். இதெல்லாம் எனக்கும் ஆரம்ப நாட்களில் பிடிக்கவில்லைதான். ஆனால், போகப் போக அனுசரித்துச் செல்ல பழகிக்கொண்டேன்.

ஆனால் அதை அப்பாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதார்த்தங்களை ஏற்றுக்கொண்டும் விட்டுக்கொடுத்தும் வாழப் பழகியிருந்தால்தானே ஆச்சர்யம். அவளும் தனது சம்பளம் முழுவதையும் பிறந்த வீட்டிற்கே அனுப்பிக்கொண்டிருந்தது அவரை மேலும் உக்கிரமாக்கத் தொடங்கியது. வீண் பிரச்சினைகள் ஏதும் வளர வேண்டாம் என்று அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள், பிரதி உபகாரம் செய்யும் மகளாய் சம்பாதித்துக் கொடுக்கிறாள் என்று ஒரு புரிதலோடு நான் அவற்றை கடந்து செல்ல முயன்றாலும் அவர் விட்டதில்லை.

நேரிடையாகவும் முதுகிற்கு பின்னாலும் என்னை ‘பொட்டப் பய’ என்று கடுகடுக்கத் தொடங்கினார். எனக்கும் கூட அவள் மீது வருத்தங்கள் எழ ஆரம்பித்தது. ஒரு பிரியத்திற்காகவாது தனது சம்பளத்திலிருந்து ஒரு ரூபாயைக் கூட என் அப்பா அம்மாவுக்கு அவள் செலவழித்துப் பார்த்ததில்லை. அதை அவளிடம் சுட்டிக்காட்டிக் கேட்கவும் கவுரவ குறைச்சலாக இருந்தது. அதனால் அப்பாவின் கோபத்தை சம்பாதித்தாலும் அவளைக் கேள்விகள் கேட்க முயற்சிக்கவில்லை. அது அவளுக்கும் ஒரு வகையில் வசதியாகப் போய்விட்டது.

மகன் பிறந்த பின்னர் சில மாதங்களில் நானும் வெளிநாடு வந்துவிட்டேன். அப்பாவுக்கும் மனைவிக்கும் சண்டைகளும் தேவையில்லாத கூச்சல்களும் வாக்குவாதங்களும் வளர்ந்தன. எவ்வளவு முயற்சித்தும் எதையும் சமன் செய்யவோ, சரிசெய்யவோ என் இயல்பிற்கு முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது தனிக்குடித்தனத்தில் முடிந்தது. மாமனார்- மருமகள் இருவரும் ஜென்ம பகையாளிகளாக மாறிப்போனார்கள்.

ஆனால், எல்லாவற்றையும் இணைக்கும் பாலமாக மகன் வளர்ந்து வந்தான். பாட்டனின் மூளையோடும் தாய்க்காரியின் நுண்ணறிவோடும் மகிழ்ச்சி கொள்ள வைத்தாலும், என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் என்னைப் போல் என்னுடைய அம்மாவிடம் ஒட்டுதலாக இருக்கிறானா என்பதுதான். என்னை போலத்தான் இருக்கிறான்; ஆனால், அதாவது தன்னுடைய அம்மாவிடம் மட்டும் கூடுதல் பிணைப்போடு. பரவாயில்லை தாயை கவனிக்காத குடும்பம் என்ற சொல் என்னிலிருந்து மாறி வருவதைக் கண்டு ஆறுதலடைந்தவனாய் மனதைத் தேற்றிக் கொண்டேன்.

மனைவியிடம் நான் ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பும்போதும் என்னுடைய அம்மாவிற்கு ஆயிரமோ ஐநூறோ கைச்செலவிற்குக் கொடுக்கச் சொல்வேன். சரி என்பாள். ஆனால், கொடுத்திருக்க மாட்டாள். வீண் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டி பல சமயங்களில், விதியை நொந்தபடி, மேல் எதுவும் பேசாமல் நானும் மௌனமாக இருந்துவிடுவேன். ஆனாலும் சில சமயம் என்னோட அம்மா அப்பத்தாவிடம் காட்டிய அக்கறைகள் என் கண்முன் விரிந்து நெஞ்சுக்குள் எரிமலைகளை வெடிக்க வைக்கும்.

தன்னுடைய தாய், தந்தை, தம்பி, தம்பி குடும்பம் என்று பணத்தை இரைத்துத் தாங்கிப் பிடிப்பவள் ஏன் என் தரப்பை மட்டும் ஒதுக்குகிறாள்? அவள் தன்னுடைய காசிலிருந்து எதுவும் செய்ய வேண்டாம், நான் அனுப்பும் பணத்தில் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்ய என்னதான் அவளைத் தடுக்கிறது என எப்பவாது நான் பொங்கி எழ நேர்ந்தால், என் அப்பா செய்த ஒவ்வொன்றையும் குற்றப்பத்திரிக்கை போல வாசிப்பாள். லாவகமாக என் அம்மா பற்றிய பேச்சைத் தவிர்த்து விடுவாள்.

இது நாளுக்கு நாள் எனது மன உளைச்சலைக் கூட்டிக் கொண்டே சென்றது. மனைவி, மகனை தினமும் இணைய உதவியில் பார்த்துவிடுகிறேன், பேசி விடுகிறேன். ஆனால், அம்மாவின் குரல் கேட்பதுதான் அரிதாகிக் கொண்டே சென்றது. நாளுக்கு நாள் அந்த பாரத்தை சுமந்துத் திரிவதை கடினமாக உணர்ந்தேன். மகனின் பள்ளி விடுமுறையை கணக்கில் கொண்டு விடுமுறையில் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்தேன்.

முதலில் அம்மாவைப் பார்க்க அப்பா உள்ளே என்னை அனுமதிக்கவில்லை. அவரின் வழமையான ஏச்சு பேச்சுகள் மட்டுமே வாசலில் வரவேற்கும் மாலைகளாக ஒலித்துக் கொண்டிருந்தன. அவர்களும் வீட்டுப் பக்கம் வரவில்லை. ஆனால், அப்பா, அம்மாவிடம் முன்பு போல் அவ்வளவு கடினம் காட்டுவது போல் தெரியவில்லை. இப்போதெல்லாம் அவர்தான் தனக்கு இயலாத சமயங்களில் வீட்டு வேலைகள் செய்து வருவதாகவும், சில நேரங்களில் சமைத்தும் கூட தருவதாகவும் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் முகம் பூரிக்கச் சொன்னாள். மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

அதே சமயம் மருந்துக்கும் கூட என் மனைவியைப் பற்றி குறையேதும் சொல்லாமலிருந்தது எனக்கு குற்றவுணர்வை அதிகரிக்கச் செய்தது. இந்த மகராசி குணத்திற்காகவாது அவள் இறங்கி வந்து பேசலாம் இல்லையா, என் பெற்றோர் இடத்தில் நல்ல மருமகளாக அண்டலாம் இல்லையா, செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம் இல்லையா, காட்ட வேண்டிய அக்கறைகளைக் காட்டலாம் இல்லையா என்று என மனம் செருமிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அப்பா-பெரியம்மா சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என காதாத்த ஆரம்பித்தேன்.

அப்பாவைப் பற்றி நினைக்க ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கியது. வயதோ, கண்ட-கேட்ட கதைகளின் விளைவோ அல்லது அப்பத்தா விட்டுச் சென்ற பிரார்த்தனைகளோ இந்த முறை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாறியிருந்தது போல் உணர ஆரம்பித்திருந்தேன். அது அப்பாரு மீது புது பாசத்தை உருவாக்கியது. அம்மாவையும் அப்பாவையும் எங்கள் வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்ள ஆசைப்பட்டேன். திரும்பவும் கீரியும் பாம்பும் போல மனைவியும் அப்பாவும் சண்டைப்போட்டுக் கொள்ளும் அபாயங்கள் இருந்தாலும், கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என நம்பினேன். அருகில் மகனும் இருக்கவே, மெதுவாக மனைவியிடம் பேச்சுக் கொடுத்தேன்..

வேலைக்காக செல்லும் நேரங்களில் தன்னுடைய கற்பை விமர்சித்து, ஊர் முழுக்க கட்டுக்கதைகளை பரப்பிய உன்னுடைய தகப்பனை என்றைக்குமே நான் மன்னிக்கவும் மாட்டேன் ஏற்கவும் மாட்டேன் என பத்ரகாளியாக என் மீது பாயத் தொடங்கினாள். அவர் இப்போது மாறிவிட்டார், கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும், இதில் என்னுடைய அம்மா செய்த தவறு என்ன இருக்கிறது? ஏன் அவளை இப்படி எல்லோரும் சேர்ந்து தண்டிக்கிறீர்கள் என்று தன்னிலை மறந்து, வெகுண்டெழுந்தேன். பிடரிக்குச் சூடு ஏறியது. தன்னுடைய பெற்றோர்கள், தம்பி, தம்பி குடும்பத்திற்கே தனது சம்பளம் எல்லாவற்றையும் கொட்டிக் கொடுக்கும் அவளுடைய சுயநலப்போக்கை எல்லாம் ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி எட்டு வீட்டிற்கு கேட்கும் அளவிற்கு கத்தத் தொடங்கினேன்.

பதிலுக்கு பதில் அவளும் சளைக்காது குரலை உயர்த்திக் கொண்டே செல்ல, கோபம் தலைக்கேறி அவளை பளாரென அறைந்துவிட்டேன். அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

அப்போதுதான் எதிர்பாராமல் ஒன்று நடந்தது..

“நீ வேணா..! ஊருக்கு போ!” என்று நின்று கொண்டிருந்த என் கால்களை என்னுடைய ஆறு வயது மகன் தன் பலத்திற்குத் தள்ள ஆரம்பித்தான். இதைக் கண்ட மனைவி வாயடைத்துப் போனாள். நானும்! கூடவே சிரிப்பும் வந்துவிட்டது!

அவனை வாரி சுருட்டி ஏந்தியபடி முத்தமிட்டேன்.

“உன் அம்மா செய்றது மட்டும் சரியா?” என்றேன்

“உன் அம்மாவுக்கு வேணும்னா நீ செய், அதை ஏன் என்னோட அம்மாக்கிட்ட செய்ய சொல்ற?” அவன் சொன்னதைக் கேட்டு சற்றே திகைத்து, இப்படியெல்லாம் பேச இவனுக்கு யார் கற்றுக் கொடுத்தது என ஒரு கணம் தோன்றினாலும், “நான் இங்கேயா இருக்கேன் ராஜா? நான் இல்லாத நேரத்துல அப்பத்தாவையும் தாத்தாவையும் நீங்கதானே பாத்துக்கணும்?” என்றேன் பிள்ளை கொடுத்த மகிழ்ச்சி மாறாமல்.

“சரி பாத்துக்குறோம், அம்மாவ அடிக்கிற வேலை மட்டும் வச்சிக்காத!” இன்னும் முழுமையாக மழலை மாறாத வார்த்தைகளில் அவன் கையை நீட்டி அதட்டியபோது எங்கப்பன் உடல்மொழியில் என்னைதான் அங்கே கண்டேன். ‘தங்கமே..!’ என்று அவனை வாரியள்ளி இறுக்கமாகக் கட்டித் தூக்கிச் சுற்றிச் சிரித்தேன்.

மனைவி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

idris.ghani@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button