கதைக்களம்சிறுகதைகள்

பொன்னாத்தா இனி பேசமாட்டா…- ஸரோஜாசகாதேவன்

கதைக்களம் | வாசகசாலை

சேலத்தை நோக்கி ஜோலார்பேட்டை ரயில் ஓடிக்கொண்டிருந்தது. வண்டிக்குள் கூட்டம் மிதமாகவே இருந்தது.

வயது எழுபதுக்கு மேலானுலும் உழைத்து உரமேறிய உடல்வாகு, ரவிக்கை போடாது தான் உடுத்தியிருந்த வெள்ளைப் புடவையால் தன் உடலை மூடி மறைத்திருந்த லாவகம், கணீரென்ற குரலில் கறாராகப் பேசும் மிடுக்கு, இத்யாதி-இத்யாதியுடன் ஒருநபர் உட்காரும் இருக்கையில் அமர்ந்திருந்த பொன்னாத்தா பாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தாள்.

கொய்யாப்பழம் விற்பவனை அழைத்தவள், ஒரு ரூபா பெறாத பழத்தை, மூனு பத்து ரூபா சொன்னா எப்படி? மூனு அஞ்சு ரூபாய்க்கு தர்றியா?” – என்றாள்

வெள்ளரிப் பிஞ்சு விற்பவனிடம் ,”இரண்டு ரூபாயே அதிகம். இதுக்குப் போயி அஞ்சு ரூபா சொல்றியே… ”  – இப்படி ஒவ்வொரு பொருளா விலை பேசி வாங்காது தட்டிக்கழித்துக் கொண்டே வந்தாள்.

இளநீர்காரனை அழைத்தவள்,  “எங்க தோட்டத்துல மூனு ரூபாய்க்கு வாங்கிட்டுப் போற இளநிய ஒரேயடியா பத்தும் பதினைஞ்சும் சொல்றியே… இது உனக்கே அடுக்குமா? ஏதோ அஞ்சு ஆறு ரூவான்னா வாங்கி ஒருவாய் தண்ணி குடிக்கலாம்…”  அங்கலாய்த்தாள்.

” கெழவி.. மூனு ரூபாய்க்கு பிளாஸ்டிக் கவர்ல தண்ணி வரும், வாங்கி குடி.”  என்று கோபமாகச் சீறியவனை முறைத்தாள்.

“சொன்ன வெல குடுத்து வாங்கிக்கிறவுங்க இருக்கிறதாலதான் உங்கள கேப்பாரில்லாம….” முனுமுனுத்துக்கொண்டே தண்ணீர் பாட்டிலைத் திறந்து மடக்மடக்கென அரை பாட்டில் தண்ணீரையும் குடித்து முடித்தாள்.

ஏதோ ரயில்ல கெடக்கிறத வாங்கி சாப்பிடாம கிழவிக்கு சவடாலப் பாரு! ஆனாலும் இத்தனை கஞ்சத்தனம் ஆகாது.. மற்ற பிரயாணிகள் பாட்டியின் காதுக்குள் விழாமல் குசுகுசுத்துக் கொண்டார்கள்.

அடுத்தவரிசை இருக்கையில் உட்கார்ந்திருந்தவர்களிடம் புத்தகங்களை நீட்டிக் கொண்டிருந்த சிறுவனைத் தன்னருகில் அழைத்தாள்.

“ஏண்டாப்பா, பொஸ்தகம் ஒண்ணு என்னா வெல?”  பாட்டியின் தோரணையைக் கண்டு சற்றே அஞ்சியவனாய் மௌனமாக நின்றான்.

பாவம், பையன் மாட்டிக்கிட்டான். இவன் மேலே என்ன அஸ்திரம் பாயுமோ..? அனைவரும் ஆவலோடு இவர்களையே கவனித்தார்கள்.

ஏதாவது அஞ்சு பொஸ்தகத்த குடுன்னு தன் சுருக்குப் பையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.

“என்னடா முழிக்கறே, நீதான் அஞ்சு பொஸ்தகம் வித்தாக்கூட அதுல கெடைக்கிற பத்து ரூபாய் எங்கம்மாகிட்டே குடுத்துட்டு நாளைக்கு இருக்கற பரீட்சைக்கு படிக்க உட்கார்ந்திடுவேன்னு அந்த ஆளுகிட்ட சொல்லிட்டிருந்தத நானும் கேட்டேன். படிக்கிற காலத்துல நிம்மதியா போய் படிய்யா..” ஆதரவாகப் பேசிய பாட்டி நீட்டிய ஐம்பது ரூபாய் நோட்டைப் பார்த்தவன் திகைத்து நின்றான். சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டவன், ” பாட்டி… என்ன புத்தகம் வேணும்? 

“நானா படிக்கப் போறேன்? ஏதோ ஒன்னாட்டம் படிக்கற பசங்களுக்கு ஒதவறாப்புல குடு.. வீட்டண்ட இருக்கிற பசங்ககிட்ட ஆளுக்கொன்னா குடுத்திடறேன். ஒனக்கும் படிக்க நேரம் கெடைக்குமில்ல..!

இயல்பாகக் கூறிக்கொண்டே சுருக்குப் பையில் பாக்கோடு சேர்த்து இடித்து வைத்திருந்த வெற்றிலைத் தூளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

ஊர் சேரும்வரை இனி பொன்னாத்தாபாட்டி வாயே திறக்க மாட்டாள்.

*

’மங்கை- அக்டோபர் 2007’ இல் பிரசுரமானது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button