சூரியன் உச்சியில் வலம் வரும் வேளை. நரி ஒன்று பக்கத்துக் காட்டிற்கு நண்பனைக் காண நடந்து சென்று கொண்டிருந்தது. வெயில் தந்த சூட்டில் வெகுநேரம் நடந்த காரணத்தால் நரிக்கு தாகம் நாவை வரட்டியது. நடை தளர்ந்து கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. வழியில் ஏதேனும் நீர் நிலை தென்படுகிறதா என்று தேடிக் கொண்டே மெதுவாக அடிமேல் அடிவைத்து நடந்து சென்றது. பார்வைக்கெட்டிய தொலைவில் சின்ன ஓடையொன்று தெரிய, நரி மகிழ்ச்சியில் துள்ளி ஓடி ஓடையை அடைந்தது. அங்கு சென்ற பிறகே தெரிந்தது, அந்த ஓடையின் அக்கரையில், சிங்கம் நின்று மிகவும் பொறுமையாக நீர் அருந்திக் கொண்டிருப்பது.
சிங்கம் ஒரு வாய் நீர் அருந்தும். பின்னர் பிடரியை சிலிர்த்துக்கொள்ளும். மீண்டும் நீர் அருந்தும். மறுபடியும் பிடரியைச் சிலிர்த்துக்கொள்ளும். அப்படிச் சிலிர்த்துக் கொள்ளும் போது, பிடரி மயிரில் ஒட்டியிருக்கும் நீர்த்துளிகள் அகன்று பூமியில் சிதறிவிடும். சிங்கம் சிலிர்த்துக்கொண்டு கம்பீரமாக நிற்பதைக் காண்பதற்கு நரிக்கு அச்சமாக இருந்தது. இருந்தாலும் நரியின் நா வறட்சி நீரை வேண்டிய காரணத்தால் சற்றே எட்டி நின்று சத்தமில்லாமல் ஓடையில் வாய் வைத்து நீரை அருந்தி தனது தாகத்தைத் தனித்துக்கொண்டது. தாகம் தணிந்ததும் நரிக்குக் கண்கள் பிரகாசமானது பார்வை தெளிவானது. இப்போதுதான் அந்தக் காட்சியைக் கண்டது நரி. அக்கரையில் நிற்கும் சிங்கத்தின் உருவம் அப்படியே ஓடை நீரில் பிம்பமாகத் தெரிந்தது. உடனே நரி அதுபோலத் தன்னுடைய உருவம் பூமியில் தெரிகிறதா என்று கீழே பார்வையைச் செலுத்தியது. ஆனால் அதன் பிம்பம் தெரியவில்லை. சிங்கத்திற்கு பயந்த நரி ஓடைக்கு அருகில் வராமல் சற்று தள்ளி நின்று தலையை மட்டும் எட்டி நீர் அருந்திய காரணத்தால் நரி கீழே பார்க்கும்போது மண் தரையில் கறுப்பாகத் தன்னுடைய நிழலே தெரிந்தது. நரி வருத்தம் கொண்டது. மேலும் சிங்கத்தின் பிம்பம் தெரிவதற்குக் காரணம் நீர் நிலை என்பதும், மண்தரை அல்ல என்ற யோசனையும் நரிக்கு இல்லை. மொத்தத்தில் நரி, இந்த பூமி தன்னுடைய உருவத்தைக் கறுப்பாகக் காட்டுகின்றது, சிங்கத்திற்கு அழகாகக் காட்டுகின்றது என்ற முடிவுக்கு வந்தது. சிங்கத்திடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்டறியும் ஆவல் நரிக்கு எழுந்தது. இருந்தாலும் சிங்கத்திடம் பேச நரிக்கு பயம்.
பயந்து நிற்கும் நரியிடம் சிங்கமே உரையாடலைத் தொடங்கியது, “என்ன நரியாரே ஏன் அஞ்சுகிறீர்?” என்றது. “அப்படியில்லை சிங்க ராஜா, இதோ பாருங்கள் நான் சாதாரணமாகத்தான் இருக்கிறேன்”, என்று தனது பயத்தை மறைத்து இயல்பாகப் பேச முயற்சி செய்தது. இருந்தாலும் குரலில் எழுந்த நடுக்கம் அதன் அச்சத்தைக் காட்டிக்கொடுத்தது. “இல்லை இல்லை உமது பயம் எமக்கு நன்றாகவே புரிகிறது”, என்றது சிங்கம். சரி இதுதான் சமயம் தனது சந்தேகத்தைக் கேட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தது நரி. “சிங்க ராஜா, உங்க உருவத்தை மட்டும் எப்படி பூமி தெளிவாகக் காட்டுகின்றது? இங்கே பாருங்கள் எனது உருவத்தை இந்த பூமி கறுப்பாகக் காட்டுகிறது”, என்று தன் நிழலைக் காட்டியது. “என் உருவமும் தெளிவாகத் தெரியவேண்டும் ராஜா. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?”, என்று அப்பாவியாக வினவியது.
சிங்கம் மௌனமாக நரி சொல்வதை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் தனக்குள், ‘அருமை … அருமை … சிக்கிவிட்டான் சின்னப் பயல். நாம் ஒரு விளையாட்டு விளையாட இது நல்ல சந்தர்ப்பம்’, என்று எண்ணியது.
“சிங்க ராஜா ஏன் மௌனமாக இருக்கிறீர். நான் சிறுவன்தானே? மனமிறங்கி எனக்கு அந்த ரகசியத்தை சொல்லவீர்களா?”, என்று கெஞ்சியது நரி.
“ம் … ம் … அதெல்லாம் பெரிய ரகசியம் எப்படி அவ்வளவு சாதாரணமாக உமக்குச் சொல்வது?”, என்று விளையாட்டைத் தொடங்கியது சிங்கம். “அந்த ரகசியத்தை நீங்கள் எனக்கு சொல்லுங்கள் பதிலுக்கு நான் உங்களுக்கு என்னால் இயன்றதைச் செய்கிறேன்”, என்று ஆவலில் முன்னதாகவே ஒப்பந்தம் போட்டது நரி. சிங்கத்திற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பிடித்துப்போனது. “சரி நாளை காலையில் சூரியன் எழும் வேளை என் குகைக்கு வாரும்?”
“சரி ராஜா வந்துவிடுகிறேன்?”
“ம் … ம் … அவசரப் படாதீர். வரும்போது என்னுடைய நாளைய தேவைக்கான உணவாக ஏதேனும் மிருகத்தை வேட்டையாடிக் கொண்டு வாரும்?”
சிறிது யோசித்தது நரி. “என்ன யோசனை?” என்று கனத்த குரலில் கர்ஜித்தது சிங்கம்.
“இல்லை ராஜா அதிகாலையில் எப்படி … எங்கே போய் வேட்டையாடுவது என்று யோசித்தேன்”, என்றது.
“சரி விடும், உமக்கு உம் உருவத்தைக் காணும் ரகசியம் வேண்டாம் என்றால் விட்டு விடும்”, என்று கூறிவிட்டு தன் பாதையில் சிங்கம் நடந்தது.
அப்படி விட்டுவிட மனமில்லாத நரி ஒரே தாவலில் ஓடையைத் தாண்டி சிங்கம் சென்றுகொண்டிருந்த பாதையில் சிங்கத்தின் பின்னால் சென்று, “சரி ராஜா நான் செய்கிறேன்”, என்றது.
“ம் … நீர் புத்திசாலி … ரகசியம் அறிந்துகொள்ளும் ஆவல் உம்மிடம் இருக்கிறது. நாளை சிந்திப்போம், மறக்காமல் என்னுடைய உணவைக் கொண்டு வாரும். மேலும் ஒரு செய்தி என்னவென்றால், நீர் வேட்டையாடும் உணவை நீர் புசிக்கக் கூடாது. நான் உண்டு களித்த பிறகு இருக்கும் மீத உணவைத்தான் நீர் உண்ணவேண்டும்”, என்று கூறிய சிங்கம் தன் குகையை நோக்கி நடந்தது.
நரியும் வேகமாக நடந்து தன் நண்பனின் இருப்பிடம் சென்று அன்றைய பகற்பொழுதைக் கழித்துவிட்டு மாலையே தன் இருப்பிடத்திற்குத் திரும்பியது. நண்பன் அன்றிரவு தன்னுடன் தங்கிவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தினான் ஆனால் நரி, நண்பனின் சொல்லை ஏற்க மறுத்து நண்பனுடன் தங்கவில்லை. நரியின் சிந்தனை முழுவதும் காலையில் சிங்கராஜாவிற்கு உணவு எடுத்துச்சென்று ரகசியத்தை அறிந்துகொள்வதிலேயே இருந்தது. ரகசியம் அறியும் செய்தியை நண்பனிடமிருந்தும் மறைத்தது நரி, காரணம் அந்த ரகசியம் தனக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கவேண்டும் என்ற சுயநலம்.
அதிகாலை கண்விழித்து எழுந்த நரி சிங்கத்திற்கு உணவு தேடப் புறப்பட்டது. வழியில் தென்பட்ட மரப் பொந்துகளிலும் புதர்களிலும் தேடிக்கொண்டே சென்ற நரிக்கு காட்டு முயல் ஒன்று அகப்பட்டது. நரியின் மனமும் முயல்போல மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. காரணம் சிங்கத்திற்கான உணவு கிடைத்துவிட்டது, தனக்கு ரகசியம் தெரிந்துவிடப் போகிறது என்பதே. சிங்கத்தின் குகைக்குச் சென்ற நரி மிகவும் உற்சாகத்துடன் குரலெழுப்பியது. “ராஜா இதோ உங்களுக்கான உணவைக் கொண்டுவந்துள்ளேன்”.
நரியின் குரலைக் கேட்டு சிங்கம் பொறுமையாக உறக்கம் கலைந்து எழுந்து வெளியில் வந்தது. தலையைப் படபடவென இடம் வலமாக ஆட்டியது, கால்களை நீட்டி, உடலை உயர்த்தி சோம்பல் முறித்தது, பிடரியைச் சிலிர்த்துக்கொண்டது. உற்சாகம் கண்டது.
“வாரும் நரியாரே … சொன்னதுபோலச் செய்துவிட்டீர் … ம் … மகிழ்ச்சி”, என்று கூறிவிட்டு உணவைப் புசிக்கத் தொடங்கியது சிங்கம். நரி ஆவலுடன் காத்திருந்தது. சிங்கம் உணவருந்தி முடித்ததும் தனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லப்போகிறது தானும் தன்னுடைய உருவத்தை பூமியில் பார்க்கப்போகின்றோம் என்று மகிழ்ந்தது. இருந்தாலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் மெளனமாக நின்றது.
உணவை முடித்த சிங்கத்திற்கு பேராசை தலை தூக்கியது. காட்டிற்குள் சென்று உணவு தேடி அலையாமல் தான் இருந்த இடம் தேடி உணவு வருவது சுகமாக இருப்பதாக உணர்ந்தது. இந்த சுகத்தை இன்றோடு முடித்துக்கொள்ள மனமில்லை.
சிங்கம் உணவருந்தி முடித்துவிட்டது இனி தனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லிவிடும் என்று நரி பொறுமையாக இருந்தது ஆனால் சிங்கம் இன்னும் திட்டம் போடுவதிலேயே மௌனமாக இருந்தது. பொறுமையிழந்த நரி, “சிங்க ராஜா சீக்கிரம் அந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டால் நானும் புறப்பட்டு விடுவேன் மேலும் எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது”, என்றது.
“நரியாரே நான் உமக்கு ரகசியத்தைச் சொல்வதாகச் சொன்னேன் ஆனால் இன்றே சொல்வதாகச் சொல்லவில்லையே? நன்றாக யோசித்துப் பாரும்”, என்றது சிங்கம். திடுக்கிட்டது நரி. நேற்றைய உரையாடலை சிந்தித்துப்பார்த்தது நரி. சிங்கம் சொன்னது சரிதான். சொல்கிறேன் என்று சொன்னது ஆனால் இன்று சொல்வதாகச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்டது. “அப்படியானால் எப்போது சொல்வீர்கள் ராஜா?” என்று கேள்வி தொடுத்தது நரி.
“இன்றுபோல் தினமும் எனக்கு நீர் உணவெடுத்து வாரும். ஒருநாள் வரும், அந்தநாள் வரும்போது உமக்கு கண்டிப்பாகச் சொல்வேன். இப்போது போய் வாரும்”, என்று கூறிவிட்டு நரியின் பதிலுக்கு நிற்காமல் சிங்கம் குகைக்குள் சென்றுவிட்டது.
ஏமாற்றத்துடன் பின்வாங்கியது நரி. ஆசை சுமந்து வந்த நரிக்கு இந்த ஏமாற்றத்தை ஏற்க முடியவில்லை. இருந்தாலும் சிங்கத்தை எதிர்க்கும் துணிச்சல் நரியிடம் இல்லாத காரணத்தால் மௌனமாகத் திரும்பிவிட்டது. என்றாவது ஒரு நாள் சிங்கம் தனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லும் என்று பொறுமை காத்தது நரி. தினமும் காலையில் அலைந்து திரிந்து உணவைத் தேடுவதும் சிங்கத்தின் குகைக்குச் சென்று உணவைக்கொடுப்பதும் வாடிக்கையானது. சிங்கமும் எவ்வித உடலுழைப்பும் இல்லாமல் தான் இருக்குமிடத்திற்கு வரும் உணவை உண்டு சுகமாக நாள்களை நகர்த்தியது. இப்படியே ஆறு நாள்கள் கடந்தது.
ஏழாவது நாள் விடியலில் உணவு தேடி அலைந்த நரிக்கு உணவு அகப்படவில்லை. அங்கும் இங்கும் எங்கும் அலைந்தது ஆனால் பயன் இல்லை. சூரியன் உச்சியை எட்டும் நேரம் வந்துவிட்டது. ஒரு புறம் உணவு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இன்னொரு புறம் உணவு வராததால் சிங்கம் எவ்வளவு கோபத்தில் இருக்கிறதோ என்ற பயம். வருத்தமும் பயமும் சேர்ந்து வாட்ட, மிகவும் சோர்ந்துபோனது நரி. ஒரு அடர்ந்த புதரின் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்தக் காட்சி கண்ணில் பட்டது. குதூகலமானது நரி. கருவில் குட்டியைச் சுமந்துகொண்டு ஒரு அழகான மான் நடக்க முடியாமல் தள்ளாடி நடந்துசென்றுகொண்டிருந்தது. நரிக்கு மகிழ்ச்சி. ஒரு வழியாக உணவு கிடைத்துவிட்டது. ஆனால் மற்ற சிறு மிருகங்களை வாயில் கவ்விச் சென்றது போல மானைக் கொண்டுசெல்ல இயலாது என்பதை உணர்ந்த நரி மானின் அருகில் சென்று, “மானாரே கோபித்துக்கொள்ளாமல் என்னுடன் வாரும்?” என்றது.
“எங்கே? எதற்கு?”, என்றது மான்.
“நான் காரணத்தைச் சொன்னால் என்னுடன் வரமாட்டீர். எனவே சொல்லமாட்டேன். ஆனால் நீர் என்னுடன் வரத்தான் வேண்டும். நாம் சிங்க ராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்லவேண்டும்.”
மானுக்கு சந்தேகம் எழுந்தது. காரணம் தெரியாமல் சிங்கத்தின் இருப்பிடத்திற்குச் செல்வதில் உடன்படாத மான், “நரியாரே நீர் காரணத்தைச் சொல்லாமல் நான் வரமாட்டேன்” என்றது தீர்க்கமாக.
“அடடா … சரி … நான் சொல்கிறேன் … ஆனால் நீர் வரச் சம்மதிக்க வேண்டும். காரணம் தெரிந்த பிறகு வரமேட்டேன் என்று சொன்னால் நான் உம்மை விடமாட்டேன்”, என்று மிரட்டியது நரி.
மானுக்கு அச்சம் எழுந்தது. இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சலும் இருந்தது. “சரி”, என்று நரிக்கு சம்மதம் சொன்னது.
நரி காரணத்தைச் சொல்லத் தொடங்கியது. “சிங்க ராஜா எனக்கு ஒரு ரகசியத்தை சொல்வதாக ஒப்பந்தமிட்டிருக்கிறார். ஆனால் அந்த ரகசியத்தை எப்போது சொல்வார் என்பது தெரியாது. அது வரை நான் தினமும் காலையில் சிங்க ராஜாவிற்கு உணவு எடுத்துக்கொண்டு அவருடைய இருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும். இதுதான் எங்களின் ஒப்பந்தம்.”
“சரி, உங்கள் ஒப்பந்தம் உங்களோடு, நான் அங்கே வந்து என்ன செய்ய வேண்டும்?”, என்று கேட்டது மான்.
“இன்னுமா புரியவில்லை … நீர்தான் இன்று சிங்க ராஜாவிற்கு உணவாக வேண்டும்”, என்று கூறி மெல்லச் சிரித்தது நரி.
திடுக்கிட்டது மான். “என்ன … நான் உணவாக வேண்டுமா? அதெல்லாம் முடியாது. நான் வரமாட்டேன்”, என்று மறுத்தது மான்.
“காரணம் தெரிந்ததும் மறுக்கமாட்டேன் என்று சொன்னீரே. மறந்துவிட்டீரா?”
“ஆனால் இது உயிர் போகும் செயல். வயிற்றில் குட்டியைச் சுமந்து கொண்டிருக்கும் என்னைப் பார்க்கப் பாவமாக இல்லையா உமக்கு?”
“ஆனால் எனக்கு அந்த ரகசியம் அவசியம்? சிங்க ராஜாவிற்கு மட்டும் தான் அது தெரியும்.”
“அந்த ரகசியத்தால் என்ன பயன்?”, என்று கேட்டது மான்.
பயனை மானுக்குத் தெரிவிக்கக்கூடாது என்று சுயநலமாகச் சிந்தித்த நரி, “இல்லை, இல்லை … அதைச் சொல்ல மாட்டேன்”, என்றது.
“அப்படியானால் நானும் வரமாட்டேன்”, என்று பிடிவாதமாக நின்றது மான்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. சிங்கம் பசியோடு இருக்கும், இன்னும் உணவு கொண்டு செல்லவில்லையென்றால் கோபப்பட்டு தன்னை எது வேண்டுமானாலும் செய்துவிடும் என்று அவசரத்தை உணர்ந்தது நரி. வேறு வழி தெரியாமல் மானுக்கு அதன் பயனைச் சொல்ல முன்வந்தது.
“அதாவது … சிங்க ராஜாவிற்கு அவருடைய உருவத்தை இந்த பூமி அப்படியே உள்ளது உள்ளபடி காட்டுகின்றது. ஆனால் எனக்கோ இங்கே பார் கறுப்பாகக் காட்டுகின்றது”, என்று மண்ணில் விழும் தன் நிழலைச் சுட்டிக் காட்டியது. மேலும் தொடர்ந்து, “பூமியில் தன் உருவதைக் காணும் ரகசியம் சிங்கராஜாவிற்கு மட்டுந்தான் தெரியும். அந்த ரகசியத்தை அவரிடமிருந்து தெரிந்துகொள்ளப் பிரதிபலனாக தினமும் உணவு கொண்டு செல்கிறேன்.”
நரி சொன்ன செய்திதனைக் கேட்டுச் சிரித்தது மான். “நரியாரே நீர் அறியாமையில் இருக்கிறீர். உம்மை சிங்க ராஜா நன்றாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்”, என்றது.
மான் தன்னை ஏமாற்ற நினைக்கிறது என்று எண்ணிய நரி, “இல்லை இல்லை நீர் தான் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்.”
“சரி நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியாக பதில் கூறுவீரா?” என்று கேட்டது மான்.
“என்ன?”, என்றது நரி.
“சிங்க ராஜாவின் உருவம் இந்த பூமியில் தெரிவதை நீர் கண்டீரா?”
“ஆம். என் இரு கண்களால் கண்டேன்.”
“எங்கே? எப்போது கண்டீர்?”
“அன்றொரு நாள் ஓடையில் நீர் அருந்தும் வேளை, அவர் எதிரில் அக்கரையில் நின்றார் நான் இக்கரையில் நின்று கவனித்தேன்?”
“அப்போது உமது உருவதைக் காண முயன்றீரா?”
“ஆம் முயன்றேன். ஆனால் இதோ இப்போது தெரிவது போல கறுப்பாகத்தான் தெரிந்தது.”
மானுக்கு இப்போது உண்மை ஓரளவு விளங்கியது. தனது கேள்வியைத் தொடர்ந்தது, “அன்று உமது கால்களை ஓடை நீரில் நனைத்தீரா?”
“இல்லை … இல்லவே இல்லை.”
“ஏன் நனைக்கவில்லை?”
“நா வரட்டியது. நீர் அருந்தச் சென்ற நான் அங்கே சிங்க ராஜாவை எதிர்பார்க்கவில்லை. திடீரென்று அவரைக் கண்டதும் எனக்கு அச்சம் மேலோங்கியது. எனவே எட்டி நின்று நீர் அருந்தினேன். கால்களை நினைக்கவில்லை.”
நடந்ததை முழுவதுமாகப் புரிந்துகொண்டது மான். தான் நரியிடமிருந்து தப்பிப்பது எளிது என்ற எண்ணியது. அதற்கு முன் நரியை அதன் வழியிலேயே சென்று புரியவைக்க முடிவு செய்தது, “நரியாரே நாம் ஒரு முடிவுக்கு வருவோம். உமக்குத் தேவை பூமியில் உமது உருவதைக் காணும் ரகசியம். அதை சிங்க ராஜா சொன்னால் என்ன? நான் சொன்னால் என்ன? எனக்கும் அந்த ரகசியம் தெரியும். அதைச் சொன்னால் என்னை விட்டுவிடுவீரா?”
யோசித்தது நரி. மான் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் கேட்டது, “இதில் ஏதும் தந்திரம் இல்லையே?”
“கிடையவே கிடையாது. என்னை நம்பலாம். உமது உருவத்தை நீர் இன்றே கண்ணாரக் காண்பீர். இது உறுதி”, என்று உறுதியளித்தது மான்.
“சரி, எங்கே சொல் அந்த ரகசியத்தை”, என்று தனது வலது காதை மானின் வாயருகே கொண்டுவந்து நீட்டியது நரி.
“நரியாரே இந்த ரகசியத்தை அறிய காதுகள் தேவையில்லை கண்கள்தான் வேண்டும்”, என்றது மான்.
“என்ன குழப்புகிறீர்”, என்றது நரி.
“குழப்பவில்லை. வாரும் … அருகில் உள்ள நீர் நிலைக்குச் செல்வோம்”, என்று நரியை அழைத்துக் கொண்டு சிறிது தொலைவில் இருந்த குளத்திற்குச் சென்றது மான்.
குளத்தருகே வந்து நின்று குனிந்து நீர் அருந்தியது மான். தனக்குப் பின்னால் நின்ற நரியை அழைத்தது, “நரியாரே, இங்கே வாரும் உமது கால்கள் நனையும்படி நின்று குளத்தைப் பாரும்”, என்று சொன்னது. மானின் சொல்லை பின்பற்றியது நரி. குளத்து நீரில் தன் கால்கள் நனையும்படி நின்றது. குனிந்து தண்ணீரைக் கண்டது, தண்ணீரில் தன் உருவத்தைக் கண்டது. நரியால் நம்ப முடியவில்லை. ஆனந்தம் அடைந்தது. “மானாரே உமக்கு நன்றி”, என்று சொன்னது.
“இப்போது தண்ணீரை விட்டு மண் தரைக்கு வாரும்”, என்று அழைத்து மான். நரியும் மானின் சொல்லைப் பின்பற்றியது.
“குனிந்து தரையைப் பாரும்”, என்றது மான். இப்போது நரிக்குத் தன் உருவம் தெரியவில்லை மாறாகத் தன் நிழல் தெரிந்தது. நரிக்குப் புரிந்துவிட்டது. மீண்டும் குளத்து நீருக்கு ஓடிச்சென்று தன் உருவத்தை கண்டது. இப்படியே இரண்டு முறை தண்ணீருக்கும் மண் தரைக்குமாக ஓடிச்சென்று தன் உருவத்தையும் நிழலையும் மாறி மாறிக் கண்டு மகிழ்ந்தது.
நரியின் இந்த விளையாட்டைக் கண்டுகொண்டிருந்த மான் கேட்டது, “நரியாரே, உண்மை புரிந்ததா? நீரில் உருவம் தெரியும், மண்ணில் நிழல் தெரியும். இது சிங்க ராஜாவிற்கும் தெரியும். ஆனால் உம்மை ஏமாற்றி உம்மிடம் தினமும் உணவைக் கொண்டு வரச் சொல்லி ஏவல் செய்திருக்கிறார்”, என்றது. சிங்கத்தின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டது நரி.
“நரியாரே, ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளும். நம்மைச்சுற்றி இருப்பவற்றை நடப்பவற்றை ஒவ்வொரு கணமும் உன்னிப்பாகக் கவனித்து செயல்பட்டால் சிறப்பு. இனி நான் என் வழியே செல்லலாமா?”, என்றது மான்.
“மிகவும் மகிழ்ச்சி மானாரே, உமக்குத் தொல்லை கொடுத்ததை எண்ணி வருந்துகின்றேன். என்னை மன்னித்துவிடும்”, என்று தன் தவறுதனை உணர்ந்து மானிடம் மன்னிப்புக் கோரியது நரி.
“மகிழ்ச்சி. மீண்டும் சிந்திப்போம். இப்போது விடை பெறுகிறேன்”, என்று கூறி மான் புறப்பட்டது.
“ஒரு நிமிடம் மானாரே.”
“என்ன?”
“சிங்க ராஜாவின் சூழ்ச்சியிலிருந்து என்னைக் காப்பாற்றிய உமக்கு நான் பிரதிபலனாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன்?”, என்று சொன்னது நரி.
“இதுதான் உம்மிடமுள்ள இன்னொரு குறைபாடு?”, என்றது மான்.
“குறைபாடா?”, வினவியது நரி.
“சிங்க ராஜாவிடம் நீர் சிக்கிக்கொண்டதற்குக் காரணம் என்ன? உமக்கு ரகசியம் தெரிய வேண்டும் என்ற ஆவலில் நீராக முந்திக்கொண்டு ஒப்பந்தம் போட்டதே முக்கிய காரணம். முன் அறிமுகம் இல்லாத யாரிடமும் எடுத்த எடுப்பிலேயே ஒப்பந்தம் என்று நீராக மூக்கை நுழைக்காதீர். அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதுபோல இப்போது எனக்கு பிரதிபலனாக ஏதாவது செய்கிறேன் என்று நீராகவே முன் வருகிறீர். வேண்டாம். நான் பிரதிபலன் எதிர்பார்த்தது இதைச் செய்யவில்லை”, என்று கூறிவிட்டு மான் மெல்ல நடைபோட்டுச் சென்றுகொண்டிருந்தது.
தன் அறிவுக் கண்ணைத் திறந்துவிட்ட மானுக்கு மீண்டும் நன்றிசொல்லிவிட்டு நரி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தது.
– மீ.மணிகண்டன்