நான் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது இருட்டத் தொடங்கியிருந்தது. சுராஜுக்கு போன் அடித்தேன். வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான். சுராஜ் என் முகநூல் நண்பன். அவனுடனான பழக்கத்தினால் மீண்டும் பதினெட்டு வருடங்கள் கழித்து ஆத்தூர் மண்ணில் கால் வைப்பதை நினைத்தால் புல்லரிப்பாக இருந்தது. இரயில்வேயில் பணியாற்றிய எங்கள் தந்தைக்கு மாறுதல் கிடைத்து இங்கே வந்து வாழ்ந்த ஏழு வருடங்களும் இந்நகரை எங்களுக்கு மறக்க முடியாத ஊராக்கியிருந்தது.
பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த மணிக்கூண்டைக் காணோம். இப்போதங்கு பெரிய காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்கள். நானும் அக்காவும் டியூஷன் முடிந்து வந்து ரசமலாய் வாங்கி அருந்தும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இப்போது அதிநவீனமாகி இரண்டு கடைகளாக விரிந்திருந்தது. அதைத் தாண்டி என்னெஸ் தியேட்டர் செல்லும் சந்துக்கு மேற்கில் தான் தென்றல் கேசட் கடை இருந்தது. தானாக கால்கள் அக்கடையை பார்க்கும் ஆவலில் நடக்கத் தொடங்க கட்டுப்படுத்த முடியாமல் மனதைப் பின்தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தேன்.
பெயர்ப்பலகையில் தென்றல் என்பதை இளம்பச்சை நிறத்தில் பெரிதாக எழுதி, அதன் மூலையில் தேனிசை என்பதை உற்றுப்பார்த்தால் மட்டுமே புலனாகும் அளவுக்கு புள்ளி எழுத்தில் பாலு அண்ணன் எழுதியிருப்பார். தானொரு தேவா வெறியனாக இருந்தாலும் மற்ற இசையமைப்பாளர்களின் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.
எந்நேரமும் சலோமியாவும் விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடியுமான தேவாவின் அனைத்து கானா பாடல்களையும் ஆத்தூர் பேருந்து நிலையமே அதிர்ந்து கலங்குமாறு ஒலிபரப்புவதே கேசட் விற்பதன் ஊடாக பாலு அண்ணாவின் முழுநேரப் பொழுதுபோக்கு. அது மட்டுமின்றி எந்த ஒரு விஷயமாகவோ பொருளாகவோ இருந்தாலும் அதனை இரண்டாக ஏற்பாடு செய்து வைத்திருக்கும் விநோதனாகவும் பாலு அண்ணா எனக்கு அறிமுகமாகி இருந்தார். இரண்டு சைக்கிள், இரண்டு டேப் ரெக்கார்டர், இரண்டு செட் செருப்பு என முன்ஜாக்கிரதையின் காரணமாக இரண்டிரண்டாக வைத்துக் கொள்வதால் அந்த ஏரியாவாசிகள் அவரை “டபுள்ஸ்” பாலு என அழைத்தார்கள். பள்ளியில் நண்பர்களிடையே இதுபற்றிப் பேசும்போது ‘டேய், அது ஒரு நோயாம்டா.. எதாவது தொலைஞ்சிப் போய்டும்னு பயத்துல இன்னொண்ணு வச்சிருக்கிறது. என்னவோ இங்கிலீஷ்ல அந்த நோய் பேரு சைன்ஸ் வாத்தியார் சொன்னாரு. இந்த மாதிரி ஆளுங்க வீட்ட பூட்டும்போது ரெண்டு பூட்டு போடுவாங்களாம்’ என ஆர்ட்ஸ் குரூப் படிக்கும் கிச்சா சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.
ஆனால், இந்த சர்ச்சைகளை மறந்து வேறுவிதமாக பாலு அண்ணாவை பசங்கள் கிசுகிசுக்கத் தொடங்கியது சரஸ்வதி அக்கா எங்கள் பள்ளியில் சேர்ந்த பிறகுதான்.
ஹாரன் அடித்தவாறு யாரோ கூப்பிட நினைவிலிருந்து மீண்டு பின்னால் திரும்பிப் பார்த்தேன். சுராஜ் அதற்குள் வந்து விட்டிருந்தான்.
“நான் உங்கள பழக்கடைக்கிட்ட தேடிக்கிட்டு இருக்கேன். நீங்க இங்க வந்துட்டீங்க” என்றபோது தான் இவ்வளவு தூரம் நடந்திருக்கிறேன் என்பதே புரிந்தது. இடதுபக்கம் திரும்பிப் பார்த்தேன். கேசட் கடை இருந்த இடத்தில் இப்போது ஒரு நடுத்தரமான செல் ஷோரூம் முளைத்திருந்தது.
பைக்கில் செல்லும்போது விசாரித்தவரையில் சுராஜுக்கு பாலுவைப் பற்றி எதுவும் தெரியவில்லை. டபுள்ஸ் பாலு என விளக்கியபோதும் அவனைப் போலவே அவன் குடும்பத்தினரும் அவரை அறிந்திருக்கவில்லை.
பள்ளியில் சேர்ந்த நாளிலிருந்தே அக்காவின் தோழி ஆகிவிட்டதால் நானும் சரஸ் அக்கா என்றே அவளை அழைக்கத் தொடங்கினேன். மதியம் சாப்பிட்டு முடித்த அடுத்த வகுப்பிலேயே கணிதம் நடத்தினால் எப்படியிருக்கும்? வகுப்பில் அனைவரும் தூக்கக் கலக்கத்துடனும் வெளிறிய முகத்தோடும் அமர்ந்திருக்கும் போது எங்கள் செங்காட்டு ஏரிக்கரையில் விளைந்திருக்கும் ஆவாரங்கொல்லையைப் போன்ற மலர்ந்த முகத்தோடு தான் சரஸக்கா எந்நேரமும் இருப்பாளென அக்கா அடிக்கடி சொல்வாள். பாலு அண்ணனுக்கு எப்படி ‘ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ’’ பிடித்துப் போனதோ அதே போல் சரஸுவுக்கும் ‘தென்னமர தோப்புக்குள்ளே குயிலே’ பிடித்துப் போய் இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததில் எங்களுக்கு வியப்பேதுமில்லை.
எங்கள் ஊர் பள்ளியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளியிருந்ததால் வீட்டுக்கு போய்விட்டு மீண்டும் ஆத்தூர் டியூஷன் வருவது சாத்தியமில்லை. ஆனால், சரஸக்கா குடும்பத்தினர் நகருக்குள்ளேயே குடியிருந்ததால் வீட்டுக்கு ஓடி முகங்கழுவி பாவாடை சட்டையில் வந்துவிடுவாள். அவள் வரும் வரைக்கும் நானும் அக்காவும் கேசட் கடையின் முன்பு நின்று ஏதேனுமொரு பாடலைக் கேட்டுக் கொண்டிருப்போம்.
அக்காவுக்கு இளையராஜா பிடிக்கும். சரஸக்கா காதில் கிசுகிசுப்பாள். அவள் கடை முகப்பில் நின்றபடி உதடுகள் பிரியாமல் ஏதோ சொல்ல உடனே ஆடியோ ‘ஒரு கடிதம் எழுதினேனிலிருந்து’ ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றலாக’ மாறிவிடும்.இவர்களது மையலால் எங்களுக்குக் கிடைத்த ஆகப்பெரும் நன்மையென்பது எங்கள் தந்தையார் புதிதாக வாங்கி வந்த பிபிஎல் டேப் ரெக்கார்டருக்கான பாடல் கேசட்டுகள் இலவசமாகக் கிடைத்தது தான்.
கிச்சா அடிக்கடி சொல்வான்.. ‘டேய் கம்பெனி கேசட்லாம் வாங்கக் கூடாதுடா. ரெண்டு பக்கமும் ஒரே பாட்டப் போட்டு ஏமாத்திடுறானுங்க. பாலு அண்ணன்கிட்ட என்ன பாட்டு வேணும்னு முன்னாடியே எழுதிக் குடுத்துட்டா போதும். அவரு அத அப்படியே முன்னாடி பத்து பின்னாடி பத்துனு பதிவு பண்ணி குடுத்துடுவாரு’
‘டீ சரசு, எங்கம்மாவுக்கு சிவாஜி பாட்டுதான் புடிக்கும். இதுல இருக்குறதெல்லாம் கொஞ்சம் போட்டுத்தரச் சொல்லுடி’ என அக்கா லிஸ்ட்டை நீட்டுவாள். அதை வாங்கிச் செல்லும் வளையல் கரம் கடைக்குள் சென்றதும் கொஞ்ச நேரம் கலகலக்கும். நானும் அக்காவும் இன்னபிற சிறுவர்களும் கள்ளமாய் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்வோம். வெளியே வரும்போது சரஸக்கா வெட்கச்சிரிப்போடு வருவாள். ‘நாளைக்கு தராராம்டி’
கடைக்குள் போக நாளைக்கும் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சி அவளுக்கு. சரஸ்வதி வீட்டில் டேப் ரெக்கார்டர் அப்போது வாங்கியிருக்கவில்லை. விடுமுறை தினங்களில் பேருந்தேறி எங்கள் வீட்டுக்கு வந்து பாட்டு கேட்டுவிட்டுப் போவாள்.
புதுப்புது படங்களின் பாடல்களாக வாங்கி வந்து கேட்கும்போது ‘ஓசில எவன்டா கேசட் தர்றான்? என்ன கதை வுடுறீங்களா அக்காவும் தம்பியும்?’ என அப்பா திட்டும் போதெல்லாம் அது சரஸ்வதியிடம் இரவல் வாங்கியதென மழுப்ப அவள் உடனிருந்தது உதவியது. அதன்பிறகு சரஸ்வதிக்கென புதிய வாக்மேன் ஒன்றை சேலத்திலிருந்து பிரத்தியேகமாக வரவழைத்து அன்பளித்தார் பாலு அண்ணா. டேப் ரெக்கார்டரே புழக்கத்திலில்லாத அவர்களது வீட்டில் வாக்மேனில் பாட்டு கேட்பது குறித்த அடிப்படை புரிதலற்ற நிலை அவர்களது காதல் வளர மேன்மேலும் உதவியது. சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடத்தில் நண்பர்களிடமும் உள்ளூர் கவிஞர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி இரவல் வாங்கிய காதல் மொழிகளை தன் குரலில் ரெக்கார்டு செய்து அனுப்பி சரஸக்காவை மையலில் திளைக்க வைத்திருந்தார் பாலு அண்ணா.
மொட்டை மாடியில் பள்ளி இருந்த திசையில் நின்று கடந்தகாலம் நோக்கிச் சென்றிருந்தவனை நல்லெண்ணெயில் இறைச்சி வறுக்கும் மணம் மீண்டும் மொட்டை மாடிக்கே கொண்டு வந்து விட்டது. இரவு உணவுக்குப் பிறகு சுராஜ் வசிக்கும் ஏரியாவை சுற்றிப் பார்க்க கிளம்பியிருந்தோம். கோயில் வீதியைத் தாண்டும்போது சீரியல் பல்புகளின் தோரணங்கள் திருவிழா குதூகலத்தை மனதுக்குள் ஊற்றெடுக்கச் செய்தன. வண்டியில் காந்தி சிலையைக் கடக்கும் போது ‘கம்மிங் டூ ஆத்தூர்’ என டைப் செய்து கூடவே நாங்கள் படித்த பள்ளியையும் போட்டோ எடுத்து அக்காவுக்கு அனுப்பினேன்.
உடனே போன் செய்துவிட்டாள்.
“டேய், ஆத்தூர் போயிருக்கியா? சரஸ்வதிய பத்தி ஏதாவது விவரம் கிடைக்குதான்னு பாருடா ப்ளீஸ்” என அவள் புலம்பத் தொடங்க, “வை வை கண்டிப்பா விசாரிக்கிறேன்” என போனை அணைத்து விட்டு கிச்சாவின் விலாசம் பற்றிய குறிப்புகளை சுராஜிடம் ஒப்புவித்தேன். நான் அங்கு தங்கியிருந்த இரண்டு நாட்களும் பழைய ஞாபகங்களைத் தேடிக் கொண்டிருக்கும் தவிப்பைப் பார்த்து திருவிழா பரபரப்புக்கு இடையிலும் எங்கெங்கோ கேட்டுத் தேடிப்பிடித்து கிச்சாவின் அலைபேசி எண்ணை வாங்கி வந்திருந்தான். மிகுந்த ஆவலோடும் தயக்கத்தோடும் அவனை அழைத்தபோது அவனும் அதே நிலையில் அணுகி கொஞ்ச நேரத்திலெல்லாம் பழைய கிச்சாவாக கலகலக்கத் தொடங்கிவிட்டான். வழமையான விசாரிப்புகளுக்குப் பிறகு நான் அந்த இடத்திற்கு வந்தேன்.
“டேய், பாலு அண்ணா எப்படியிருக்கார்?”
எதிர்முனையில் கனத்த மௌனம் பரவியது போலிருந்தது. சட்டென “நல்லா இருக்கார்டா. அந்த கேசட் கடை இருந்த இடத்துல இப்போ ஒரு செல் ஷோரூம் வச்சிருக்கார். நல்லா ரன் ஆகுது. இப்ப பண்டிகைனால லீவ் விட்டுருக்கார்”
“நான் அவர பாக்கணுமேடா. அவர் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறியா?” மறுபடியும் அதே கனத்த மௌனம்.
“அதுக்கென்ன போகலாமே.. நான் லொகேஷன் ஷேர் பண்றேன். நீ நேரா வந்துடு. நானும் அங்க வந்துடுறேன்” என்று போனை வைத்தவன் உடனே லொகேஷனை அனுப்பியிருந்தான். கூடவே பாலு அண்ணாவின் தொடர்பு எண்ணையும்.
அந்த எண்ணைப் பார்த்ததும் எனக்குள் மேலிட்ட குற்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. பாலு அண்ணா என்பது பாலு அண்ணா மட்டுமல்ல; கூடவே சரஸக்காவும் சேர்ந்து தான் இத்தனை ஆண்டுகளாகவும் நினைவுக்கு வருகிறார்கள்.
எல்லா அமரக் காதலும் ஒரு கட்டத்தில் முடிவை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவதைப் போல அவர்களுக்கும் வெகு சீக்கிரமாகவே அது நேர்ந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. சரஸக்கா கேசட் கடையையே சுற்றி வருவதை யாரோ மோப்பம் பிடித்து விட, அவளது அப்பா காலையில் பள்ளி வாசலில் வந்து விட்டுப்போக ஆரம்பித்தார். மாலையிலும் அதேபோல நின்று அழைத்துச் செல்ல பாலு அண்ணாவுக்கு சந்திக்க முடியாத நெருக்கடி உண்டானது. யாரோ ஒருவன் சரஸ்வதியின் முறைமாமன் என்ற பெயரில் வந்து கேசட் கடையை உடைத்து நொறுக்கிவிடப் போவதாக மிரட்டி விட்டுப் போனதில் அவர் ரொம்பவும் நொந்துப்போய் ‘கவலப்படாதே சகோதரா.. எங்கம்மா கருமாரி காத்து நிப்பா..’ பாடலை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிட்டு கதறிக் கொண்டிருந்தார்.
வகுப்பில் இறுதித்தேர்வு முடிந்ததுமே வேறு ஊருக்கு குடும்பத்தோடு இடம்பெயர்வதாக வீட்டில் பேச்சு அடிபடுவதாக சரஸ்வதி கண்ணீர் மல்க அக்காவிடம் சொல்லி வருந்தியிருக்கிறாள். பெஞ்சில் ஹார்டின் விட்டு ‘பாலு சரஸ்’ என எழுதி அதன்மீது தலைவைத்து படுத்துறங்கியதை அக்கா பள்ளிவிட்டு வரும்போது சொன்னது பரிதாபமாக இருந்தது. நாங்கள் தூதுவர்களாக இருப்பது தெரிந்து வீடு வரையிலும் வந்து யாரோ எச்சரித்துவிட்டுப் போனதில் மாலை டியூஷனும் கட்டானது.
இறுதித்தேர்வுக்கு முந்தைய நாள் ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் டெம்போவுக்கும் சொல்லிவிட்டார்களெனவும் சரஸக்கா சொல்லி அழுது விடைபெற்ற அந்த மாலையில் நானும் அக்காவும் பேருந்திலேறிய பிறகு பாலு அண்ணன் எங்கிருந்தோ எங்களை நோக்கி ஓடிவருவதை சன்னல் வழியாகப் பார்த்தோம். அருகில் வந்தவர் கையிலிருந்த கேசட்டை எடுத்து அவசரமாக நீட்டினார்.
“என் வாழ்க்கையே இதுலதான் இருக்கு. எப்படியாவது சரஸுகிட்ட சேத்துடுங்க” என்றவரின் கண்கள் கலங்கியிருந்தன.
பேருந்தில் எங்கள் ஊர்க்காரர்கள் நிறைய இருந்ததால் அதற்குமேல் அவரால் பேச முடியாமல் போனது. அன்று தான் பாலு அண்ணாவை கடைசியாக நாங்கள் பார்த்தது.
சரஸக்கா சம்பந்தமாக வீடு வரை புகார் வந்ததிலிருந்து அடிக்கடி எங்கள் தந்தை இருவரது புத்தகப்பையையும் ஏதேனும் கடிதங்கள் இருக்கிறதா என சோதனை செய்து கொண்டிருந்ததால் வீட்டிற்குப் போனதும் முதல் வேளையாக அந்த கேசட்டை பயன்படுத்தாத பழைய துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்தோம். மறுநாள் காலை பள்ளி செல்லும் இறுதிக் கணத்தில் எடுத்துக் கொள்வதாக ஏற்பாடு. ஆனால், விடிந்ததும் தேர்வுக்காக அப்பா துரிதப்படுத்தியதில் கேசட்டை மறந்துவிட்டு பேருந்தில் ஏறியிருந்தோம். நாங்களிருவரும் வாழ்நாள் முழுதும் அடிக்கடி எண்ணி வருந்தும் அந்தத் தவறு அப்படித்தான் நிகழ்ந்து விட்டிருந்தது.
பாலு அண்ணன் கேசட் தந்ததையும் அதை மறந்துவிட்டிருந்ததையும் எப்படி சரஸக்காவிடம் சொல்வதெனத் தெரியாமல் நாங்கள் அந்த நாள் முழுக்க விழித்துக் கொண்டிருந்தோம். பிரியா விடையோடு சரஸக்கா எங்களை கட்டியணைத்து விடைபெற்றுப் போனாள்.
மாலை பேருந்தில் ஊருக்குத் திரும்பும்போது இன்னுமொரு வாய்ப்பு இருப்பது பற்றி நாங்கள் யோசித்தோம். எப்படியாவது இரவல் சைக்கிள் வாங்கி அந்தக் கேசட்டை ஊருக்குக் கிளம்புவதற்குள் சரஸக்காவிடம் ஒப்படைத்து விடுவதெனப் பேசிக் கொண்டோம். வீட்டுக்கு வந்ததும் ஓடிப்போய் பழைய துணிகளை அகற்றிப் பார்த்தோம். அங்கு கேசட் இல்லை.
“அம்மா, இங்க ஒரு கேசட் இருந்ததே அது எங்க?” என அக்கா கேட்டாள்.
“அதுவா? மூணாவது தெரு லட்சுமியம்மா இருக்காங்கல்ல.. அவங்க மக்காச்சோள காட்டுல குருவிங்க தொல்ல தாங்கலயாம். கேசட் நாடாவ கட்டி பறக்கவிட்டா வர்றதில்லையாம். ஏதாச்சும் இருக்கானு கேட்டாங்க.. சரி..பழையதுங்ககிட்ட கெடந்துச்சுனு நான்தான் எடுத்துக் குடுத்தேன். ஏன்டி அது பாடுற கேசட்டா?”
“ஆமாம். டி.ராஜேந்தர் கேசட்..”
அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நாங்கள் லட்சுமியக்கா காட்டுக்கு ஓடிப்பார்த்தோம். அவள் சோளக்காட்டைச் சுற்றி குச்சிகளை நட்டு அவற்றின் உச்சியில் பளபளக்கும் கேசட் நாடாக்களை பிய்த்துக் கட்டி பறக்கவிட்டிருந்தாள். பாலு அண்ணாவின் காதல் காற்றின் திசையில் ஆயுளுக்குமான தனது சோக கீதத்தை இசைத்துக் கொண்டிருப்பதாக எங்களுக்குத் தோன்ற தாளமுடியாத சோகத்தோடு வீடு திரும்பினோம்.
அதன்பிறகு சரஸக்கா எந்த ஊருக்குச் சென்றாள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. மனமுடைந்து சுற்றிக் கொண்டிருந்த பாலு அண்ணன் கேசட் கடையை மூடிவிட்டு எங்கோ வடநாட்டுக்கு லாரியில் கிளம்பிப் போனதாகப் பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு எங்கள் தந்தைக்கு மீண்டும் மாறுதல் கிடைத்து நாங்கள் திருச்சிக்கு குடிபெயர்ந்துவிட்டோம்.
பாலு அண்ணனுக்கு முதலில் என் குரல் பிடிபடவில்லை. அக்கா குறித்த விவரங்களைச் சொன்னதில் அடையாளம் கண்டு பேசத் தொடங்கியவர் நேராக நானிருந்த இடத்துக்கே வந்துவிட்டார். மீளாத குற்ற உணர்ச்சியோடு அணுகியவனைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்டார்.
“டேய் எப்படியிருக்க? சின்ன பையன்ல பாத்தது.” என வளர்ந்துவிட்டதை வியப்போடு உற்று நோக்கியவர் இப்போது நடுத்தர வயதை நெருங்கியிருந்தார். தொப்பை போட்டு முன்வழுக்கையேறி பழைய பாலு அண்ணன் குறித்த பிம்பங்களை அசைத்து விட்டிருந்தவர் இப்பொழுதே வீட்டுக்கு வரச் சொல்லி வற்புறுத்தி அழைத்தார்.
நான் கிச்சாவுக்கு போன் செய்து நேராக அவரது வீட்டுக்கு வரச்சொல்லி விட்டு பைக்கில் பின்னால் ஏறி உட்கார்ந்தேன்.
நாகரிகம் கருதி அவரது பழைய காலம் குறித்து நான் எதையும் கிளறவில்லை. அவரே சொல்வாரென்ற அமைதி எனக்குள் தோன்றியிருந்தது. அவர் வீட்டை நாங்கள் சென்றடைந்தபோது கிச்சா வீட்டுக்குள்ளிருந்து வெளியே அவசரமாக வந்துகொண்டிருந்தான். முகம் வெளிறிப்போயிருந்தவனின் இடது நெற்றியில் ஒரு மலைநெல்லியளவு புடைத்திருந்தது கண்டு நாங்கள் அதிர்ந்தோம். நீண்ட காலத்துக்குப் பிறகு பார்க்கின்ற மகிழ்வை விட அவன் முகத்தோற்றம் குறித்த பதட்டம் எனக்குள் மேலோங்கியது.
“டேய் என்னடா இவ்வளவு பெரிய காயம்?” என வினவிய பாலு அண்ணனை அவன் முறைத்தது போலிருந்தது. என்னைப் பார்த்து, “நீ கோயிலுக்கு வா பேசிக்கலாம்” எனக் கூறிவிட்டு காயத்தை மறைத்தபடி அவசரமாக வண்டியை நோக்கி ஓடினான்.
எதுவும் புரியாமலிருந்த என்னை கைப்பிடித்து உள்ளே கூட்டிப் போனார். இருக்கையில் அமரவைத்து, “என்ன சாப்பிடுற? டீயா காப்பியா?” என்றவரின் கேள்விக்கு மையமாய் தலையாட்டி வைத்தேன்.
“சரஸு.. சரஸ்வதி..” என உள்நோக்கி அவர் அழைத்ததில் ஒருகணம் துணுக்குற்றேன். பழைய காதலை மறக்கமுடியாமல் மகளுக்கு வைத்த பெயராக இருக்குமென நினைத்தவாறு மேல் சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களை உற்றுநோக்கியவன் ஆச்சரியத்தில் திகைத்துவிட்டேன். சரஸ்வதி அக்காவும் பாலு அண்ணாவும் மாலை மாற்றி மணக்கோலத்தில் இருந்த புகைப்படம் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்தது.
“அண்ணே எப்டிண்ணே..?” ஆச்சரியம் குறையாத குரலில் கேட்டேன்.
“அதெல்லாம் அன்னிக்கே உன்கிட்ட குடுத்த கேசட் மாதிரி எதுக்கும் இருக்கட்டும்னு கிச்சாகிட்டயும் ஒரு கேசட் குடுத்து விட்டேன்டா.. கரெக்டா நான் சொன்ன தேதியில சென்னிமலைக்கு வந்துட்டா. கல்யாணம் முடிச்சு ஆறு மாசம் திருப்பூர்ல இருந்தோம். அப்புறம் அவங்களே கூப்ட்டு சேத்துக்கிட்டாங்க. உங்கள எல்லாம் கான்டாக்ட் பண்ண முயற்சி பண்ணோம்..முடியல” என்றவரின் குரலில் பெருமிதம் மிளிர்ந்தது.
மாறாத பிரமிப்போடு நான் அமர்ந்திருக்க “இரு நான் போய் அவளக் கூட்டிட்டு வர்றேன். உன்னப் பாத்தா ரொம்ப சந்தோசப் படுவா” என்றபடி உள்ளே சென்றார். சமையலறையில் சரஸக்காவின் பேச்சுக்குரல் கேட்டது. ஆனால், அது தடித்து நிறைய மாறிவிட்டிருந்தது. அவள் எது குறித்தோ திட்டிக் கொண்டிருக்கிறாள் என்பது கொஞ்ச நேரத்திலேயே எனக்குப் புரிந்தது. தொடர்ந்து பாத்திரங்களை உருட்டும் சத்தம். அதைத் தொடர்ந்து பாலு அண்ணாவின் “ஆ” என்ற அலறல். நான் சடாரென்று எழுந்துவிட்டேன்.
இப்போது சரஸக்காவின் குரல் தெளிவாகக் கேட்டது.
“அப்பவே எல்லாரும் டபுள்ஸ் பாலுன்னு சொன்னப்பவே நான் யோசிச்சு இருக்கணும். இந்த வயசுலயும் நான் இருக்கும்போதே இன்னொருத்தி கேட்குறாளா உனக்கு? இவன நம்பி வந்ததுக்கு என் புத்திய.. எல்லாம் அந்த கிச்சா பயலால வந்தது.. கடவுளே.. “ தொடர்ந்து வசைச்சொல் கேட்க நான் மெல்ல வாசலை நோக்கி நகர்ந்தேன்.
பாலு அண்ணா பின்னாலிருந்து அழைத்தபடி வந்தார். அவரது இடதுகை முன்னந்தலையை இறுகப் பொத்தியிருந்தது. கிச்சாவின் நெற்றி வீங்கிய காரணம் இப்போது புரிந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தவரை நோக்கி பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டேன். அவசரமாக வெளியேறி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
முக்கிலிருந்த கோயில் ஒலிப்பெருக்கியில் ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா..’ பாடலை தேவா பாடிக் கொண்டிருந்தார்.
********
Super story