இணைய இதழ் 106சிறுகதைகள்

இறவாத ஒன்று- நாராவேரா

சிறுகதை | வாசகசாலை

கோவா விமான நிலையம். சென்னையைத் தவிர இன்னொரு விமான நிலையத்தில் ஒருவருக்காக காத்திருப்பது முதல் முறை என்பது தவிர இதுவரை அறியாத உணர்வுகளுடன். கொஞ்சம் பரவசம், கொஞ்சம் அச்சம், நிறைய நெருடல் என்ற கலவை.     

உள்ளே அந்த வளைவில் திரும்பி வருபவள் அவள்தான்.  வழக்கம் போல மேற்கத்திய பாணி அலுவல் உடையில் வெளிர் நீல வண்ணத்தில். எனக்கு ஜிவ்வென்றது.  வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெட்டியை உருட்டிக்கொண்டு இன்னொரு தோள்பை ஊஞ்சலாட இவ்வளவு ஒய்யார நடையுடைய அழகியா எனக்காக இத்தனை கடக்க நேர்ந்தது… அவள் என்னை பார்க்காதது போல நடந்து வந்தாள் . அருகில் வந்தவுடன் பார்த்து புன்னகைத்து எப்படி இருக்கிறாய் என்றாள் . “நான் நன்றாக இருக்கிறேன். நீ இன்னும் மெலிந்து விட்டாயோ?” என்றேன். சில வினாடிகள் மௌன நடைக்கு பிறகு சொன்னாள் “இடையில் மிக மோசமாய் இருந்தேன். பார்த்தால் அடையாளம் தெரிந்திருக்காது.  சில மாதங்கள் ஆனது இப்படி மீண்டும் உருவுக்கு வர”. எனக்குப் புரிந்தது. இவ்வளவு சீக்கிரம் விஷயத்தை பற்றி பேச்சு வந்துவிட்டது.  என்னால் மேலும் பேச முடியவில்லை.  

 ——————————-

மிதாலி.  அவளுடன் முதல் சந்திப்பு நடந்து ஒன்றரை வருடம்.  டில்லி குருகிராம் தலைமை அலுவலகத்தில்.  அது வரும் நிதி ஆண்டுக்கான நிதிநிலை மற்றும் வியாபார திட்டம் சமர்ப்பிக்கும், விவாதம் மற்றும் ஒப்புதல் பெறுதல் என்னும் ஆண்டாண்டு நிறுவன சடங்குக்கு போயிருந்த போது நிகழ்ந்தது.  என்னுடைய திட்டவரைவு என் மேலதிகாரியை பயமுறுத்தி இருந்தது. என்னைய்யா பட்ஜெட் இது என்றார். எல்லாரும் தேங்கு நிலை மற்றும் தேய்வு நிலை காரணம் காட்டி விற்பனை குறையும் என்று வாதிடுகிற சமயம் நீ விற்பனை ஏற்றத்துக்கு பட்ஜெட் போட்டிருக்கிறாய். எப்படி அந்த SKU-1730 பொருளை அதிகம் விற்க திட்டம் போட்டிருக்கிறாய்? இது தோல்வி என்று கருதி நிறுத்திவிடும் எண்ணம் இருப்பது உனக்கு தெரியாதா? உனக்கு என்ன கிறுக்கு பிடித்திருக்கிறதா என்றார்.  நான் தீர்மானமாக சொன்னேன். நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.  சந்தை தேய்மானம் நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள ஒரு பெரும் வாய்ப்பு இருக்கிறது. அணுக்க விலையுள்ள SKU 1730 பொருளை மார்க்கெட்டில் உரிய இடத்தில் நிறுத்தினால் என்றேன். “நீ வேறு செலவினங்களை ஏற்றி இருக்கிறாய்? தெற்கு பிராந்தியம் சென்னை இப்படி எல்லாம் முன்பு அதிர்ச்சி தருவதில்லையே” என்று சற்று கவலையுடனும் சற்று கோபத்துடனும் கேட்டார் என்னுடைய மேலதிகாரி. வேறு சமயத்தில் கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இருப்பார். கூடவே அவருடைய மேலதிகாரி, எங்கள் தலைமையாளர் இருந்ததால் அவர் கொஞ்சம் நிதானிக்க வேண்டிய கட்டாயம்.  

“சந்தைப்படுத்தலில் சற்று கூடுதல் செலவினங்கள். இப்போதைய விநியோக முறையை மாற்றி நேர்வழி சந்தைப்படுத்தலில் விற்பனை உயர்த்த வேண்டும் அதற்கு என் குழுவையும் சற்று மாற்றியமைக்க வேண்டும்.” என்றேன்.  “சரி உன் முழு திட்டத்தையும் பார்ப்போம்” என்னுடைய முழு திட்டத்தையும் பார்த்தார்கள்.  பின் என் மேலதிகாரியும் தலைமையாளரும் பேசிக்கொன்டு சுருக்கமாக சரி என்றார். இதில், உனக்கு ஆட்களை மாற்றும் வேலை பிரதானம் அல்லவா? எச் ஆர் இப்போதே முடுக்கினால் தான் ஆயிற்று. தொலை பேசியில் அழைத்தார்.  ஐந்து நிமிடத்தில் அவள் வந்தாள் . என் மேலதிகாரி சொன்னார் “இவர் மிதாலி சக்சேனா.மனித வளத்துறை”

“தெரியும். பேசியிருக்கிறேன். சந்தித்ததில்லை.” என்றேன். 

உன்னுடைய குழு மாற்றத்துக்கு மிதாலி தான் உன் கூட்டாளி என்று சொல்லிவிட்டு, சரி நாங்கள் அடுத்த பிராந்திய கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றார். நானும் அவளும் வெளியில் வந்தோம். “இப்போதே இதை பற்றி பேசலாமா , உங்களுக்கு நேரம் இருக்கிறதா” என்று அவளிடம் கேட்டேன்.  “இருக்கிறது. என் அலுவலகத்துக்கு போகலாம்” என்று என்னை அவள் அறைக்கு அழைத்து சென்றாள்.

வெகு வேகமாக மனிதவளத்துறையில் வளர்ந்து வருபவள். காபி தானே என்று சொல்லி, தானே பக்கத்தில் இருந்த இயந்திரத்தில் இருந்து காபி கொண்டு வந்தாள். நானும் உன் கல்லூரிதான் என்றாள். ஐ.ஐ.எம் -பி.    நான் ஒரு ஆச்சரியத்தை பார்வையில் உதித்து விட்டு பவர்பாயிண்ட் திறந்து நேராக குழுசீரமைப்பு தலைப்புக்கு சென்றேன்.  “இல்லை, உன் முழு திட்டத்தையும் நான் பார்க்கவேண்டும்” என்றாள் . “உன்னுடைய ஒரே ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டுமென்றாலும், நான் முழுக்கதையையும் கேட்டால்தான் அது சரிவரும் என்று நினைப்பவள்” அவள் சொல்லில் உறுதி இருந்தது  

இவ்வளவு தீர்மானமாக இருக்கும் பெண்களை கண்டால் அச்சமும் இச்சையும் சேர்ந்து வருகிறது.  

எங்கள் உரையாடலின் இறுதியில் சொன்னேன் “நீங்கள் விற்பனை பிரிவில் இருக்க வேண்டியவர்கள். “

அவள் சொன்னாள் “உங்கள் சந்தைப்படுத்தல் துறையில் மட்டும்தான் உறுதியும் தன்னம்பிக்கையும் செயலாக்க விழைதலும் அதிகம் என்ற எண்ணமா? இந்த அபிப்பிராயம் இந்த நிறுவனத்தின் தலை சிறந்த விற்பனை அதிகாரி என்று அறியப்படுபவருக்கு கூட என்பது விந்தை”.

“தலை சிறந்த அதிகாரி, தெளிவான அறிவுடையவராக இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்வது” என்று சிரித்த என்னை நிதானமாக பார்த்து சொன்னாள் “அது அல்ல. இந்த துறையில் சிறந்தவர்கள் அனைவரும் உள்ளுக்குள் பாதுகாப்பு உணர்வில் பங்கம் உள்ளவர்கள்” என்றுசொல்லி லேசாக கண்ணடித்தாள். “அப்போது எனக்கு உங்களின் பச்சாதாபமும் ஆலோசனையும் தேவைப்படுகிறது என்றுசொல்லுங்கள்” என்றேன். நகைத்தபடியே “உங்களுக்கு கவுன்சிலிங் அப்பாயிண்ட்மெண்ட் வேண்டுமென்றால் நாளை காலை 11 மணிக்கு. இப்போது எனக்கு வேறு வேலை” என்றாள்.  “சரி, அப்படியே நாளைக்கு லஞ்ச் கூட” என்றேன்.  அதற்கடுத்து திட்டத்தை நிறைவேற்ற பல முறை சந்திக்க வேண்டியிருந்தது. தேநீரின் மற்றும் மதிய உணவூடே மற்றவைகளும் பேசினோம். உனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது அல்லவா என்றாள். மனித வளத்துறை என்பதால் நம்முடைய தனிப்பட்ட விஷயங்கள் எல்லாமும் அவளிடம் இருக்கும் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் சற்று ஏமாற்றமாக இருந்தது. நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்க தோன்றியது. ஆனால் இங்கிதமில்லா கேள்வி. அதுவும் கார்பொரேட் நிறுவன மேல்தட்டில். அவளே பின்னொரு நாள் சொன்னாள் ; ஏன் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும்? இந்த பாவனா அகர்வால் எவ்வளவு திறமையானவள்? அவள் இப்போது தன்னை மட்டுப்படுத்தி கொண்டதாகவே நினைக்கிறேன் .. அவளின் துடிப்பும் துள்ளலும் அவளிருக்கும் இடமே களை கட்டும் முன்பு எல்லாம்.  இப்போது ஏதோ இழந்த மாதிரி தோன்றவில்லை? இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு திருமணம் செய்யாததால் என்ன கிடைக்காமல் போகப்போகிறது என்றாள். உறைக்கும் கேள்வி.     

என் திட்டம் வெற்றி பெற உறுதுணையாய் இருந்தாள். அதற்கு தலையாய தேவை சரியான ஆட்கள். சிலரை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் பலர் புதியதாக தேவைப்பட்டார்கள். மிதாலி தான் மற்ற பிராந்தியங்களில் இருந்து அதன் மேலாளர்கள் வெளியேற்ற உள்ள சிலரை நான் சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைத்தாள். வெளியேற்றப்பட உள்ள நிர்வாகிகளாயிற்றே என்று நான் அவர்களின் தகுதி குறித்து ஐயமுற்றபோது புரிந்துகொண்டு “நான் சொல்பவர்கள் திறமையானவர்கள், என்னை பொறுத்த வரை அவர்களிடம் குறை இல்லை, அவர்களின் உயரதிகாரிகளின் இயலாமை மற்றும் பின்தங்கிய போக்காக என் இருக்கக்கூடாது?  மற்றும் உன் திட்டத்திற்கும், உன் மனப்பாங்கிற்கும், அணுகுமுறைக்கும் நன்கு பொருந்துவார்கள்” என்று தீர்மானமாக சொன்னாள்.

————–

எட்டு ஒன்பது மாதங்களில் விற்பனை உச்சத்தை எட்டியது. மந்த சூழ்நிலையில் நிறுவனத்தின் மற்ற பிரிவுகள் தடுமாறியபோது நான் வெற்றி நடை போட்டது பெரிய விஷயமாகி விட்டது. எனக்கு பதவி உயர்வுடன் தேசிய அளவில் புதிய துறை ஒதுக்கப்பட்டது. ஒரு பிரத்யேக வெற்றி விழா நட்சத்திர விடுதியில் குருகிராமில்.  அந்த தினம் விதி வசம் இருந்தது என்று அந்த புளகாங்கிதத்தில் நான் உணர வாய்ப்பில்லை .  நிறுவன தலைவர் என்னை பாராட்டி பேசினார்.

என்னை பேச அழைத்தபோது நான் சுருக்கமாக நன்றிகள் மட்டும் சொன்னேன். என் மேல் நம்பிக்கை வைத்து திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மேலாண்மைக்கு, என்னுடன் உழைத்த குழுவுக்கு மற்றும் ப்ரத்யேகமாய் மிதாலிக்கு. அவள் புன்னகைத்தாள். நிகழ்ச்சி முடிந்ததும் நான் சொன்ன நன்றி பத்தாது . இன்னும் நிறைய சொல்ல வேண்டும் என்றேன். பெரிய கதையாக இருக்குமோ என்று நகைத்தாள்.  நின்று தான் சொல்லபோகிறாயா, எனக்கு கால் வலிக்கும் என்றாள். ப்ளூ பார் லாஞ்ச் என்று கேட்டேன். நடக்கும்போது உன்னை இப்போதுதான் முதல் முதலாக புடவையில் பார்க்கிறேன்.. மேற்கத்திய உடை இவ்வளவு நாளாக உன் அழகை எவ்வளவு மட்டுப்படுத்தி இருக்கிறது. மீண்டும் அந்த சிரிப்பு.   ஒரு ஓரத்தில் அமர்ந்த பின் நான் குறிப்பிட்ட விஸ்கி சொன்னேன்.  அவள் பேரை குறிப்பிட்டு ஒரு சிகப்பு வைன் சொன்னாள். நன்றியுரை தொடங்கலாம் என்றாள் நகைத்து. “நீ மற்ற வேலைகளை ஒதுக்கி எனக்காக எவ்வளவு நேரம் செலவழித்தாய், அதை விட முக்கியம் உன் மதியூகம். மலைப்பாக இருந்தது பெண்ணே” என்றேன். “அச்சமாக இல்லையா?” என்றாள் .  “இப்பவும்” என்றேன். “ஏன் என் வெற்றிக்காக இத்தனை முயற்சி?” “உன்னுடைய தைரியம், அந்த வேட்கை தான்” என்றாள். “உன் உறுதி, இலக்கில் முழு கவனம், மற்றும் நீ உண்மையானவன், அதில் ஈர்க்கப்பட்டேன்.” அப்புறம் இன்னொன்று” என்றாள் . “இதனூடே ஒரு வல்நெரபிலிட்டி இருக்கிறது உன்னிடம்.  ஒரு பாதுகாப்பற்ற தன்மை. அதனாலும் பெண்கள் ஈர்க்கப்படுவர்” என்றாள் .  நான் வினாவுடன் நோக்கினேன் .

“நான் இளங்கலை உளவியல் முதல் மாணவி தெரியுமோ ?” இன்னொரு பானத்துக்கு சொன்னாள் இருவருக்கும்.  

நான் சொன்னேன். “என் அண்ணன் எப்படி என் வாழ்வில் என்னுடைய தோழனாக பாதுகாவலனாக, ஆசானாக ஒரு தந்தையாகவே இருந்தான் என்று சொன்னேன். என்னை விட பத்து வயது மூத்தவன். நான் ஆறாவது படித்துக்கொண்டு இருந்தபோது தான் அது நிகழ்ந்தது. சாலை விபத்தில் பெற்றோர் இருவரும் மரணம். அண்ணன் கல்லூரி முடித்து அமெரிக்கா செல்ல ஆயத்தமாக இருந்த தருணம். எல்லாம் துறந்து மென்பொருள் வேலையில் சேர்ந்தான். என்னை அப்படியே அரவணைத்துக் கொண்டான். என்னை சிறந்த கல்வி படிக்க செய்தான்.  பணியில் சேர்ந்து கொஞ்சம் கால் ஊன்றியதும் சொந்தத்திலேயே ஒரு பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தான்.” “உன் மனைவி அமேசானில் வேலை செய்கிறாள் இல்லையா”என்றாள் .  “ஆமாம்… தகவல் பாதுகாப்பு துறையில் கொஞ்சம் மேதாவி. ஆனால் மற்றபடி எதில் எல்லாம் சிறந்தவள் என்று கண்டுபிடிக்க இருவரும் ஒன்றாக உட்கார்ந்தால் மட்டுமே இயலும். அது எப்போது என்று தெரியவில்லை. ஆனால் என் தேவைகளை,பணியை புரிந்து கொண்டவள். பொறுமையானவள். அதிகம் எதிர்பார்க்காதவள். இரண்டு தம்பிகளுடன் பிறந்தவள்… அதனால் தான் கவனிப்பும், தன்மையாகவும் இருக்கிறாள் என்று நினைப்பேன்”    ” உன்அண்ணன் திருமணம்?” என்று கேட்டாள். “அவன் செய்யவே இல்லை… ஏன் உனக்கு முன்னால் எனக்கு திருமணம் செய்கிறாய் என்று கூட எனக்கு கேட்க தெரியவில்லை… அவன் செய்தது சொல்வது போதித்தது எல்லாம் என்னுடைய இயல்பாகவே ஆகி இருந்தது.  அவனை எதுவும் கேட்க தேவையில்லாமல் என்னை வழி நடத்தினான். என் பெண் குழந்தைக்கு என்அம்மா பெயர் வைத்து எப்படி சீராட்டினான் “

மிதாலி முகத்தில் பெரிய புதிர்க்குறி .  இப்போதுஅண்ணன் எங்கு என்பது போல.  அவன் இறந்து விட்டான்.    நான் அவன் உடல்நிலை குறித்து முழுதும் தெரிந்து கொள்வதற்கு முன்பே அனைத்தும் நிகழ்ந்து விட்டது.  அவன் தினமும் குடிப்பான் என்று தெரியும்… எவ்வளவு அது பாதித்திருக்கிறது என்று நாங்கள் யாவரும் அறியவில்லை.  மிக வேகமாக நிகழ்ந்து விட்டது.  மிதாலி என் கைகளை பற்றினாள் . எதுவும் சொல்லவில்லை.  அவனுக்கு வாழ்வை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்கிற அவா இல்லை. அவன் வாழவே இல்லை. அவன் இறந்த பிறகு இன்னொரு மாடியில் இருந்த அவனுடைய அபார்ட்மெண்டை புரட்டி தேடி பார்த்தபோது தான் தெரிந்தது. நிறைய எழுதி வைத்திருந்தான். அம்மாவை எவ்வளவு இழந்திருக்கிறான் என்று.  என் குழந்தையை பற்றி அவ்வளவு எழுதி இருந்தான். குட்டி அம்மா குட்டி அம்மா என்று. முக்கியமாக… அவனுக்கு கல்லூரியில் ஒரு தீவிர காதல். அந்த பெண்ணும் இவனும் ஒன்றாய் தான் அமெரிக்கா போக திட்டம் வைத்து இருந்திருக்கிறார்கள். அங்கும் ஒரே கல்லூரி.  இந்த கொடூர நிகழ்வால் என்னை விட்டு அவனால் போக முடியாதபோது காதலி மட்டும் போய் இருக்கிறாள்.  இவன் அவளுக்காக காத்திருந்திருக்கிறான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இருந்து விலகி இருக்கிறாள் என்று அந்த குறிப்புகளில் இருந்து தெரிந்தது. அவள் வரவே இல்லை.  அங்கேயே திருமணமும் செய்துகொண்டு இருக்கிறாள்.  இவன் உடைந்து விட்டு இருக்கிறான்.  மிதாலி, எனக்கெல்லாம் எவ்வளவோ ஆதரவு சொல்லி என்னை முழுமையாக வளர்த்தவனுக்கு எதையும் சொல்லவோ, வேறு வழியில் பயணிக்க உந்துதல் தரவோ யாருமே இல்லை என்பது என்ன கொடுமை.  என்னை சிறுவனாகவே பாவித்து எனக்கு எந்த பாரமும் ஏற்ற வேண்டாம் என்று அப்படியே போய்விட்டான்.  கொஞ்சம் மௌனத்திற்கு பிறகு சொன்னேன். அவன் போகவில்லை .  முக்கியமாக என்னுடைய ஒவ்வொரு கனவிலும் அவன்இருப்பான். எப்போதும் இருப்பது போலவே . அது எந்த கனவாய் இருப்பினும். இப்போதும். நான் விமானத்திற்கு தாமதமாகி அதற்காக ஓடும் கனவு, என் மனைவி குழந்தை திடீரென்று கடற்கரையில் காணாமல் போகும்போது, கார் திடீரென்று பிரேக் பிடிக்காமல் ஓடும் போது பக்கத்து இருக்கையில் என்று எல்லா இடத்தில் எல்லா கனவிலும் இருப்பான்.   

 இப்போது அந்த பாரில் எங்கள் இரண்டு பேரை தவிர யாருமில்லை. ஊழியர்கள் நாங்கள் போவதற்காகவே காத்து இருப்பது போல இருந்தது. கிளம்பினோம். “மிதாலி, நீ எப்படி வீட்டுக்கு செல்வாய்… ” குடித்து விட்டு எப்படி வண்டி ஓட்டுவாள் என்பதினால் என்னுடைய கேள்வி.  “நான் உன்னுடைய அறைக்கு வருகிறேன். உன்னை தனியாக விட மனமில்லை” என்றாள். இவ்வளவு நேரமும் என் கையை பிடித்துகொண்டே தான் இருந்திருக்கிறாள்

என்னுடைய அறை அந்த நட்சத்திர விடுதியின் பதினைந்தாம் மாடியில். பிரத்யேக அறையாக ஒதுக்கி இருந்தார்கள்.  வெற்றியாளர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகள்.  மின்தூக்கி கதவு திறந்து நாங்கள் வெளிப்பட்டதும் சில விளக்குகள் தானாய் மெதுவாய் தூண்டின மாதிரி ஒளி வீசின . அறைக்குள் நுழைந்து நான் விஸ்தாரமாய் இருந்த முழு கண்ணாடி ஜன்னல் அருகே இருந்த பெரிய மெத்தை இருக்கையில் பொத்தென்று அமர்ந்தேன் .  அவள் அதே இருக்கையில் பக்கவாட்டில் கை வைத்துக்கொள்ளும் இடத்தில் அமர்ந்தும் ஒருவாறாக நின்றும். நான் அண்ணாந்து அவள் முகத்தை நோக்கினேன். என் கேசத்தை கோதினாள்.  மிக அருகாமையில் வந்துவிட்ட அவள் மடியில் என் முகத்தை புதைத்தேன்.    இரவு முழுவதும் கட்டிலில் பிணைந்து இருந்தோம். நான் அனுபவித்த அந்த வேட்கை, அந்த வேகம் அதுவரை ஒரு பெண்ணிடம் கட்டிலில்அறியாதது.   காலையில் நான் விழித்தபோது தயாராக இருந்தாள் . அவள் முகத்தில் ஏதோ ஒரு முழுமை இருந்தது. அது எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை உண்டாக்கியது.  நான் மணி பார்த்தேன்.  நான் விமான நிலையம் செல்ல இப்போதே கிளம்ப வேண்டும். “உன்னை நான் விமான நிலையத்தில் விடுகிறேன்” என்றாள்.  அவளுடைய காரை செலுத்தும்போது கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை.  பல நிமிடங்கள் கடந்த பின் சொன்னாள் “நான் பத்து நாட்களில் வேறு பொறுப்பு ஏற்றுக்கொள்ளப் போகிறேன்”  நான் அவளை வியந்து பார்த்து “அப்படியா, பதவி உயர்வும் தானே?” “ஆமாம். மத்திய கிழக்கு பிராந்திய மனித வள தலைமை பொறுப்பு, துபாய்க்கு அடுத்த வாரம் பயணம்” நான் ஏறக்குறைய துள்ளிக்குதித்து கேட்டேன். “என்ன இது திடீரென்று”  “திடீர் என்று சொல்ல முடியாது, பரிசீலனையில் இருந்தது. பல மூத்தவர்கள் வரிசையில் இருந்தார்கள் இந்த முக்கிய பொறுப்புக்கு. நான் தேர்ந்தெடுக்கப்படுவேனா என்று ஐயம் இருந்தது. இப்போது முடிவாகி விட்டது.  இன்னும் இரண்டு நாளில் அறிவிப்பு வரும்.” என்னுடைய அமைதி என் சோகத்தை அறிவித்திருக்க வேண்டும். “நான் உனக்கு தேவையில்லை. உன் வணிகம் தன் பாதையை தெளிவாக வகுத்துக் கொண்டு விட்டது” என்றாள்      

“அது இல்லை” என்றேன். என் கையை மெலிதாக அழுத்தி சொன்னாள் “நான் நிறுவனத்தை ஒன்றும் விட்டுப் போகவில்லையே. நாம் தொடர்பில் இருப்போம் என்று நம்புகிறேன்” என்றாள் .  

அவள் இரண்டு வாரங்களில் துபாய் சென்று விட்டாள் .   

நான் மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.  அப்புறம் ஒரு சிறிய விடுமுறை எடுத்து மனைவி மகளுடன் குடகு சென்றேன்.  வெகு காலம் கழித்து ஐந்து நாட்கள் முழுதும் ஒன்றாக இருந்தது மகிழ்ச்சி ஆக இருந்தது.  நன்றாக சாப்பிட்டு தூங்கினேன். கொஞ்ச நாட்களாக கனவுகள் வராதது போல இருந்தது.  ஒருநாள் காலை வாட்ஸாப் திறந்தால் மிதாலியிடம் இருந்து செய்தி. “பேசவேண்டும் . தனிமையில் இருக்கும்போது கூப்பிடு”.  செய்தி வந்த நேரத்தை பார்த்தால் அது அவளுக்கு நள்ளிரவை தாண்டிய சமயம்.  உடனே கூப்பிட்டேன் .  அவள் பதிலிறுக்கவில்லை . ஐந்து நிமிடம் கழித்து கூப்பிட்டாள் . எங்கே இருக்கிறாய் என்றாள் . “சொல். தனியாய் தான் இருக்கிறேன்” வீணா அந்த ரிசார்ட்டில் இருந்த ஜிம் போயிருந்தாள். “நான் பதிமூன்று வாரம்.” என்றாள்

அவள் சொன்னது எனக்கு உறைக்க சற்று தாமதமானது.  தூக்கிவாரிப் போட்டது . என்ன கேட்கவென்று தெரியவில்லை. அவளே சொன்னாள் . “நான்கைந்து வாரங்களாக நான் வீட்டில் கிட் வைத்து சோதனை செய்தபின், கருவை கலைப்பது பற்றி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எந்த மருத்துவமனையையும் அண்ட முடியாது. அரபு தேசத்தில் கரு கலைக்க அனுமதியில்லை. அதுவும் மணமாகாத பெண் கருத்தரித்தல் தண்டனைக்குரிய குற்றம்” 

“நீ என் இந்தியா உடனே வரக்கூடாது” என்று சொல்ல எத்தனித்தவனை நிறுத்தி சொன்னாள் “அதில்தான் பிரச்னை. என்னுடைய பாஸ்போர்ட் இவ்வூரின் விசா மற்றும் பணி அனுமதி உத்தரவு சீட்டு நிமித்தம் குடியேற்ற அலுவலகத்தின் வசம் உள்ளது. ஏதோ ஒரு நடைமுறை சிக்கலில் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று நாளை என்று சொல்லி நான்கு வாரங்கள்.”     

நான் “மிதாலி நான் என்ன செய்யட்டும் . நான் உடனே கிளம்பி வரட்டுமா?” என்றேன் பதட்டத்துடன். அவள் இடை மறித்து “அவசியமில்லை . இன்னும் சில நாட்கள்தான் பார்ப்பேன்.  அதற்கு மேல் தாமதமானால், நான் தனிப்பட்ட அவசர நிலை அறிவித்து பாஸ்போர்ட் பெற்றுவிட முடியும். இந்தியா வர… என்ன ஒன்று, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள். கொஞ்சம் கேள்விகளும் எழும்”.

நான் மீண்டும் “மிதாலி, இதைக் கேள். நான் கிளம்பி வருகிறேன். ”  “இது என் பிரச்னை. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லி வைத்துவிட்டாள்.

அவளை தொடர்பு கொள்ள மீண்டும் முயற்சித்தேன். குறுஞ்செய்திகளுக்கும் பதிலில்லை. நரகம் என்றால் என்ன என்று உணர்ந்தேன். அவளுக்குள் இருக்கும் அது இன்னும் இருக்கிறதா? அவளால் வரவே முடியாமல் போனால்?  அது நிலையாக தங்கி விடுமா? அப்போது என் பொறுப்பு என்ன? எண்ணெய் கொப்பரையில் போட்டு வாட்டுவது என்று சிறு வயதில் படித்ததற்கு அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது.  நிலை கொள்ளாத நாட்கள். என் அண்ணன் எங்கே இருக்கிறான்.  என்னை இந்த சமயம் எங்கிருந்தும் பார்ப்பதாக தெரியவில்லையே.  

ஒருநாள் அவளுடைய இந்திய எண்ணிலிருந்து அழைப்பு.  “பரேலிக்கு வந்து விட்டாயா” என்று அவசரமாக கேட்டேன். “இல்லை டில்லி.  உனக்கு தெரியுமில்லையா. அம்மா மருத்துவர். பரேலியில் எல்லாருக்கும் அம்மாவை தெரியும்.  என் பள்ளித்தோழி மருத்துவர்.  டில்லியில் அவள் எல்லாம் பார்த்துக் கொள்ளப் போகிறாள். இப்போது உன்னை கூப்பிட்டது நான் இதை செய்யுமுன் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.  நீயும் இதில் சம்பந்தப்பட்டவன் என்பதால்.” 

 அவள் சொல்லி முடித்தவுடன் எனக்கு ஆயாசமாக இருந்தது. அத்தனை சக்தியும் வெளியேறியது போல. “மிதாலி” என்று மட்டும் சொன்னேன்.  நான் சொன்னதில் இருந்த பலவீனம் அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.  “கவலைப்படாதே. அப்புறம் பேசலாம்” என்று வைத்து விட்டாள். அப்புறம் அவள் பேசவில்லை. நான் கூப்பிட்ட போதும் எடுக்கவில்லை. செய்தி மட்டும் அனுப்பினாள் “எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது”. கொஞ்ச நாள் கழித்து அலுவல் ஓரளவு சீர்பட்ட பின், ஒரு பொதுவான ஜூம் கூட்டத்தில் அவளும் இருந்தாள் . எப்போதும் போன்று அதில் பேச்சும் பாவனையும் இருந்தன .  அதற்கப்புறம் இதே போல சில மெய்நிகர் கூட்டங்கள்.  தனிப்பட்ட முறையில் பேச அவளுக்கு விருப்பமில்லை போல தோன்றியது.  அந்த நரகம் அகன்ற மாதிரியம் இருந்தது வேறு எதிலோ சுழல்வது போலவும் இருந்தது. அந்த பழைய சுழல்.  என் அண்ணன் வந்துவிட்டானா? .    

————————- 

இன்று. கோவாவில்.  விமான நிலையத்தில் இருந்து அகன்று காரில் சென்று அமர்ந்தோம்.  மனிதவள துறையின் பிரத்யேக கூட்டம்.  இந்த கூட்டத்திற்கு நான் அவசியமில்லை.  “நேராக கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்ல வேண்டும். உன்னை முதல் ஒரு மணிநேர சிறப்பு பேச்சுக்காக சக்ஸஸ் ஸ்டோரி பொருட்டு அழைத்திருக்கிறேன் அல்லவா?” என்றாள் .  அப்படியென்றால் மற்றபடி அந்த கூட்டத்துக்கு நீ வேண்டாம் என்று பொருள்.  நான் தலை அசைத்தேன். “நாம் மாலை சந்திக்கலாம் இல்லையா?” என்றேன். “அதற்குத்தானே வந்தேன். உன்னையும் இங்கே வரச்சொன்னேன். நிறைய சொல்லவேண்டும். ஆனால் நீ இரவே திரும்புகிறாய் சென்னைக்கு இல்லையா?” என்றாள் . “எனக்கு நடுநிசியில் திரும்பிச்செல்லும் விமானம். நான் வேண்டுமானால் என் பயணத்தை நீட்டிக்கொள்கிறேன். நாளை செல்கிறேன்’ என்றேன் “தேவை இருக்காது.  நானும் காலையிலேயே திரும்பி செல்கிறேன்” என்று சொன்னாள். 

ஆனால் என்னவெல்லாம் சொல்லப்போகிறாள் என்று மாலை வரை அவ்வப்போது எண்ணம் வந்து கொண்டே இருந்தது.  எவ்வளவு பெரிய நிகழ்வு நடந்து இருக்கிறது. அது நெஞ்சில் வடுவா அல்லது ஒரு விதையா என்று தெரியவில்லை. ஒரு பெண்ணுக்கு அந்த உடல் ரீதியான வடு எந்த அளவுக்கு மேலும் மனோ விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்? இதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க போகிறாள்? நான் என்ன செய்யமுடியும், இது எப்படி என்னை புரட்டி போடும் என்றெல்லாம் யோசித்தேன்? அழுத்தம் ஒரு பக்கம் என்றாலும், அதையும் மீறி ஒரு குறுகுறு ஆவலே மேலிட்டது.  மாலை காத்திருந்தேன் அவளிடம் இருந்து செய்தியை எதிர்பார்த்து.

அவள் ஆறரை மணிவாக்கில் செல்பேசியில் கூப்பிட்டு கூட்டம் இப்போதுதான் தாமதமாக முடிந்ததாகவும்,அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வருவதாகவும் சொன்னாள். கடற்கரை ஒட்டிய உணவகத்தில் அமர்ந்திருந்தேன்.  தூரத்தில் தெரிந்த அலைகளையும் சூரியன் மறையும் தொடுவானத்தையும் வெறித்துக்கொண்டு..  அவள் வருகிறாள். தளர்வான முழங்காலை சற்றே நீட்டிய முக்கால் சட்டை, மற்றும் பூப்போட்ட மேற்சட்டை அணிந்து எதிரே அமர்ந்தாள்.  எப்படி இருக்கிறாய் மிதாலி என்றேன். “முதலில் என்ன பானம் வேண்டும் உனக்கு?”  

“அன்றைக்கு நாம்அருந்திய அதே சொல்லட்டுமா” என்றாள் . சரி என்றேன். மீண்டும் குறுகுறு.  

 “நீ எவ்வளவு அவஸ்தைகளை சந்திக்க நேரிட்டது என்னால்… எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை மிதாலி … ஆனால் அன்று உன்னிடம் அனைத்தையும் கொட்டிவிட்டேன். உடலிலும் மனத்திலும் தேங்கி வருத்திய எல்லாவற்றையும் நீ உள்வாங்கி என்னை சரி செய்தது போல நான் இப்போது உணர்கிறேன்.  ஆனால் நீயோ நினைக்க முடியாத பாரத்தை சுமந்தாய்?” என்றேன்.   

“சொல்கிறேன். முதலில் நீ எப்படி இருக்கிறாய், சொல். என்னுடைய கவலை எல்லாம் நிறுவனத்தின் முதல் தளபதியின் பராக்கிரமத்திற்கு எந்த ஒரு பங்கமும் ஏற்பட்டிருக்கக் கூடாதே என்பது” என்று புன்னகைத்து நோக்கினாள் . 

“நான் நன்றாக இருக்கிறேன். இக்கணம்.  ஆனால் இடைப்பட்ட காலம்.  அது நரகம்.  ஆனால் நீ எதிர்கொண்டதை நோக்கும்போது என்னுடைய பிரச்னை ஒன்றுமே இல்லை.  நீ சொல் மிதாலி”

கடற்கரையில் நடக்கலாம் வா என்றாள்.  இருட்டில் மணலில் நடந்தோம். அவள் செருப்பை துறந்து நடந்தாள் .  நான் அவள் கையை பற்றினேன்.  அவள் அதை விடுத்து என் இடது தோளில் அவள் வலது கையை வைத்து சற்றே தாங்கலாய் நடந்தாள். அலையாடும் கரைக்கு வந்ததும் சற்றே ஈரமான சரிவில் உட்கார்ந்தாள்.  எவ்வளவு நேரம் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தோம் என்று தெரியவில்லை.  “நான் இப்போது சரியாக தூங்குவதில்லை விக்ரம்” . அந்த நிலவில்லா மங்கலில், அவள் முகத்தை உற்று நோக்கினேன்.  சிலகணங்களுக்கு அலையை நோக்கியவள் சொன்னாள் . “துர்சொப்பனங்கள் துர்சொப்பனங்கள்” என்று தனக்கு தானே கூறியவள் போல சொல்லி என்னை மீண்டும் நோக்கினாள் . 

 “ஒரு குழந்தை எப்போதும் என் முன்னே வந்து நிற்பது போல. அதை கலைத்த பிறகு .  அந்த மருந்துகள் சாப்பிட்டு நான் அனுபவித்த இரண்டு வார கொடூர உடல்வலியும் , அந்த பலவீனத்திலும் இருந்து சற்றே மீண்டதிலிருந்து மெதுவாக இந்த கனவுகள் ஆக்கிரமிக்க தொடங்கின. அந்த குழந்தை சில சமயம் சிறிய பையன் போன்றும் உன் மாதிரியும் இருக்கிறான்.”

அண்ணன்!!

“ஒவ்வொரு இரவும் இந்த சித்திரவதை விக்ரம்.” ஒரு இடைவெளிக்கு பின் சொன்னாள் “அவை கனவு இல்லையா என்று கூட நினைக்கிறேன் . விளக்கை அணைத்து, களைப்பில் இமைகள் கனத்து ஆனால் கலக்கத்தில் உறங்கவும் இயலாத அந்த மருங்கிய கணத்தில், கட்டிலின் விளிம்பில் அவன் இருக்கிறான் . மெதுவாக அவன் என்னை நோக்கி வருவது போல உணர்வில் நான் பதறி எப்போது விளக்கை போட்டேன் என்று எனக்கே தெரியாத நிலையில் தான் அது இல்லை.”  என்று அவள் சொல்லிக்கொண்டே சென்ற போது நான் நடுங்கினேன். அப்படியே அவளை அணைத்துக்கொண்டேன் .  ஒன்றும் பேசாமல் சும்மா இருந்தாள் .

எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. ஏதோ என்னை மெதுவாக இறுக்குவதுபோல இருந்தது. திடீரென்று அவள் சிலிர்த்தாள் நான் கண் திறந்தேன். “நீர்ப்பரப்பில் மேலே அதை நீ பார்த்தாயா?” என்றாள்.”ஆனால் இப்போது மறைந்து விட்டது.”

நான் இனம் புரியாத உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருந்தேன். “நான் அறைக்கு போகிறேன். உனக்கும் விமான நிலையம் செல்ல வேண்டிய நேரம்”என்றாள்.  

“மிதாலி, எனக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை . உன்னை விட்டு போகமாட்டேன்” என்றேன். விடுதியின் நடு முற்றத்தில் இருந்தோம் இப்போது. 

அந்த வெளிச்சத்தில் தீர்மானமாக சொன்னாள், “நீ இப்போது போ. முக்கியமாக இன்னொன்று சொல்லவேண்டும்.  நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். ஒரு வாரத்திற்கு முன்பே. இதை எல்லாருக்கும் அறிவிக்காமல் இருக்க நானே தலைவரை கேட்டுக்கொண்டேன். இன்று கூட்டத்தில் மனிதவள குழுவுக்கு நானே இதை அறிவித்தாகி விட்டது. எனக்கு நீண்ட நாட்களாக ஒடுக்கப்பட்ட சமுதாயம் சார்ந்த குழந்தை மற்றும் பெண் கல்வி முன்னேற்றம் சார்ந்த பணிபற்றிய அவா உண்டு.  இப்போது ஒரு பெரிய என்.ஜி.ஓ வில் ஆப்பிரிக்காவில் இயக்குனராக செல்ல வாய்ப்பு கிட்டி இருக்கிறது.  இன்னும் ஒரே மாதம்.” என்றாள்.

“இல்லை மிதாலி . உன்னை பற்றிய நினைவில் நான் நொறுங்கி போவேன்”

“கவலை படாதே. இந்த இரவு உன்னை பார்த்தவுடன்எல்லாவற்றையும் இறக்கி வைத்த உணர்வு எனக்கு இருக்கிறது. துவங்கியதை சரியாக முடித்து வைப்பது தான் நியாயம்” என்றாள்.        

“போ” அவள் திரும்பி மின் தூக்கியை நோக்கி நடந்தாள்.            

விமானம் கிளம்பும்போது நடுநிசி.  வீட்டுக்கு வந்து படுக்கையில் மனைவியின் அருகே வீழ்ந்தேன். அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மனம் சதிராட்டம் ஆடிக்கொண்டிருந்தது . எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. மெதுவாக மெதுவாக ஏதோ ஒன்று என்னை சூழ்வது போல உணர்ந்தேன். இருளில் கட்டிலின் விளிம்பில் அவன்!! என்னால் அசைய முடியவில்லை. மூச்சு விடுவது சிரமமாய் இருந்தது. கண நேர பெரும் போராட்டத்தின் முடிவில் பதறி உதறி எழுந்தேன்.  நீரை சரித்து விழுங்கி வரவேற்பறை சென்று விளக்கை போட்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தேன். மணி நான்கு. காலை எழுந்தவுடன் வீணாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும். அலமாரி சென்று பார்வையில் பட்ட புத்தகங்களை வெறித்து நோக்கி அப்புறம் கலீல் ஜிப்ரானை கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தேன். 

சனிக்கிழமை ஏழு மணி காலை.  வீணா எதிரில். “என்ன சோபாவிவ் தூங்கிவிட்டாய்? உடை கூட மாற்றவில்லை?” என்றாள்.

 நான் மெதுவாக எழுந்து சரிந்தே அமர்ந்தேன் . “காபி கொண்டுவருகிறேன் இரு” காபி கொடுத்து என் பக்கத்தில் அமர்ந்தவளிடம் “உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும்” என்றேன்.

“நானும் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என்றாள்.  “சரி முதலில் நீ சொல்” என்றேன்.  நான் சொல்லப்போகும் அந்த பெரிய உண்மைக்கு பிறகு அவள் வேறு எதையும் கூறுவாளோ இல்லையோ…. ” அதிகாலையில் எனக்கு ஒரு கனவு” என்று துவங்கினாள் வீணா. எனக்கு இப்படி தெளிவாக கனவு வருவது அபூர்வம். ஒரு குழந்தை பையன் என்னை வந்து அம்மா என்னை எடுத்துக்கொள் என்கிறான்” என்றாள் மனைவி .

கண சிலிர்ப்பில் எனது உடல் வெகுவாக நடுங்கியது.

“விக்ரம், வாத்சல்யாவுக்கு இப்போது ஏழு வயதாகிறது. நான் என்னுடைய முந்தைய முடிவை மாற்றிக்கொள்ள முடிவு செய்து விட்டேன். நாம் இன்னொன்றுக்கு போவோம்” 

வீணாவின் பார்வை புதிதாக இருந்தது.  “இப்போது நீ சொல். நீ என்ன சொல்ல வந்தாய்?” என்றாள் .

நான் சுதாரித்து சொன்னேன் “ஏறக்குறைய இதேதான். நான் கேட்க இருந்தேன். நீயே சொல்லிவிட்டாய் . நான் சில நாள் விடுமுறை சொல்லிவிடுகிறேன். உனக்கு அமேசானில் கொடுப்பார்களா? கொடைக்கானல் போகலாமா” என்றேன். சரி என்று கண் சிமிட்டினாள்.

“பெயர் கூட முடிவு செய்துவிட்டேன்” என்றாள் . “விஷ்ணு. உன் அண்ணன் பெயர்!!”

-venkat.rnk@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. நாராவேரா ஒரு அருமையான சிறுகதையை எழுதி இருக்கிறார். ஈர்க்கும் நடையும், நல்ல கதையோட்டமும், முடிவில் திருப்பமும் அமைந்த லட்சணமான சிறுகதை. பெண்களின் இயல்புகளை நுட்பமாக அவதானித்து எழுதி இருக்கிறார். மித்தாலி விமான நிலையத்தில் பார்க்காதது போல நடந்து வருவது, நாயகனின் பாதுகாப்பற்ற தன்மையைப் பற்றி சொல்லுவது என்று பல இடங்களில் இயல்பாக வெளிப்படுகிறது.
    கதை மாந்தரின் குணங்களும் ஓரிரண்டு வரிகளில் பளிச்சிடுகின்றன. மித்தாலி ” உன்னுடைய ஒரே ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டுமென்றாலும், நான் முழுக்கதையையும் கேட்டால்தான் அது சரிவரும் என்று நினைப்பவள்” என்று சொல்லும்போது அவளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
    கதையின் மையச் சரடை பலவிதமான பொருள்கொள்ள இடம் அளிக்கும் கதை இது. ஒற்றைப் படையாக இல்லாமல் அப்படி அமைவதும் நவீனக் கதைகளின் சிறப்பு !
    வாழ்த்துகள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button