தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் – இரா.சேவியர் ராஜதுரை
சிறுகதை | வாசகசாலை
இளவரசி, நான் சொல்வேன்ல ஒரு பையன், கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்பார்ட்மெண்ட்காரன் என்னையப் பாத்துட்டே இருப்பான்னு…ஒருவழியா இன்னைக்கு வந்து…
என்ன? லவ் பண்றேன்னு சொல்லிட்டானா?
ச்சீ, நானும் அப்படிதாம் புள்ள நினைச்சேன். ஆனா அவன் உன்னியப் பாத்தா எங்கக்கா மாதிரியிருக்கு. உன்னைய அக்கானு கூப்புட்டுக்கவானு கேட்டான்.
என்ன சொல்ற? அவன் உன்னைய சைட் அடிப்பான்னு சொன்ன?
அவன் என்னியவே பாத்துட்டு இருக்கவும் அப்படி சொல்லிட்டேன் புள்ள. ஆனா அவன் அப்படி இல்ல. நீ நம்பமாட்ட அவங்கக்கா போட்டோ காமிச்சான். கிட்டத்தட்ட அவங்கக்கா என்னிய மாறியேதான் இருந்தாங்க. வாட்ஸப்புல போட்டோ அனுப்பறேன் பாரு.
ம்ம்… ஒரு நிமிஷம்… ஆமால ஒரே மாதிரிதான் இருக்கிங்க!.
அதையேதான் நானும் சொன்னேன். அவங்க அக்கா ஃபாரின்ல இருக்காங்களாம். அதான் அவனுக்கு என்னைப் பாக்கறப்ப அவனுக்கு அக்கா நியாபகமாவே இருந்துருக்கு. அக்கானு கூப்புடுக்கவானு கேக்கும்போதே ஒரு மாதிரி இருந்துச்சு இளவரசி! தாரளமா கூப்புட்டுக்கனு சொன்னேன்.
ம்ம்…
தம்பினு கூப்புடுங்க னு சொன்னான். சரி தம்பி னு கூப்புட்டேன். எனக்கு வேற தம்பி இல்லியா. அதான் எமோசனாயிட்டேன்.
பார்ரா புது தம்பியா?
ஆமாடி.
ம்ம் என்ஜாய் பண்ணு…
அப்பறம்…
—-
——
ம்ம்… சரிடி நாளைக்குப் பேசறேன்.. அய்யா வந்துட்டாங்க பாய்.
***********************************************************************************************************************************************
என்ன மேடம் இன்னிக்கு வெள்ளனே கால் பண்ணிட்டிங்க. புது தம்பி என்னா சொல்றான்..
அவன் தம்பியே இல்லடி! எனக்கு அண்ணன். அவன் என்னையவிட ஒரு வயசு பெரியவன்.
இன்னிக்கு ப்ரேக்ல கேன்டின்ல டீ வாங்க வரிசையில நின்னப்ப பாத்தேன். ஹாய் அக்கா னு வந்தான். நீங்க வெய்ட் பண்ணுங்க க்கா நான் வாங்கித் தரேன் னு என்னய வரிசையில நிக்கவே வுடல. அவனா வாங்கிட்டு வந்து கொடுத்தான். பாலு அதான் புறத்தாக்குடிகாரனு சொல்லியிருக்கேன் ல தம்பியோட ஐடி டேக் கலர் பாத்துட்டு எந்த இயர் னு கேட்டான். செகண்ட் இயர் னு சொன்னான். செம ஷாக். அப்டினா நீ எனக்கு தம்பியில்ல அண்ணனு சொன்னேன். இல்ல நான் உங்களுக்கு தம்பி தான். தம்பினே கூப்டுங்க னு சொன்னான். எனக்கு ஒரு மாதிரியிருந்துச்சு. இந்தாங்கக்கா னு கொடுத்தான். தாங்க்ஸ்ங்க னு சொன்னேன். பாத்திங்களாக்கா.. என்னைய தம்பினே கூப்புடுங்கக்கா அதான் எனக்கு புடிச்சிருக்கு ப்ளீஸ்க்கா னு சொன்னான்.
அக்கானு கூப்டுக்கறேனு அண்ணன் சொல்றானா !
ஆமா. எனக்கும் அவன ரொம்ப பிடிச்சுருச்சு. எனக்கு அவன்கூட தனியா பேசணும்போல இருந்துச்சு. மத்த பசங்களோட ப்ரேக்ல இருந்தனால பேச முடியலனு காலேஜ் முடிஞ்சதும் பாக்கலாமானு சொன்னேன். ஹாஸ்டல் மெஸ்ல சாப்பாடு தீந்துரும்னு யோசிச்சான். அப்பறம் நான் ஃப்ரண்ட எடுத்து வைக்க சொல்றேன் நம்ம காலேஜ் முடியவுட்டி பாக்கலாம் னு சொல்லிட்டு போய்ட்டான். 1.40 க்கு காலேஜ் முடிஞ்சு வந்தான். கொஞ்ச நேரம் தான் பேசுனோம். நானும் வழக்கமா வர 2 மணி பஸ்ஸையே பிடிக்க வந்தேன். பஸ் ஏத்தி விட கூட வந்தான். அவன் அக்கா பத்தி கேட்டேன். அவங்க அக்காக்கு பிடிச்சது, பிடிக்காதது எல்லாம் சொன்னான். விஜய் னா பிடிக்குமாம். மியூசிக்ல ரகுமானாம். காமெடில வடிவேலுவாம். நிறைய சொன்னான். அக்காகிட்ட உன்னைய மாதிரியே ஒருத்தங்க இருக்காங்கனு சொன்னியா? நான் அவங்ககிட்ட பேசவா னு கேட்டேன். ஒரு மாதிரி சோகமாயிட்டான். ஏன் என்னாச்சுனு கேட்டேன். அவங்கக்கா வீட்ட விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணி செட்டிலாயிடுச்சாம். கல்யாணத்தப்ப போலிஸ் ஸ்டேசன்ல பாத்ததாம். அதுக்கப்பறம் அக்கா பேசறதில்லனு சொன்னான். ரொம்ப எமோசனாயிட்டான். அதான் நானும் எதுவும் பேசல. ரெண்டு பேரும் அமைதியாவே வந்தோம். காலேஜ் முன்னாடி சத்திரம் பஸ் ஸ்டாண்ட்க்குள்ள போற பஸ்னால கொஞ்சம் ட்ராஃபிக்கா இருக்கும். க்ராஸ் பண்ண ஓடுறப்ப அந்தப் பக்கத்துலருந்து டூவிலர் வேகமா வந்துச்சு. பயத்துல கண்ண மூடி அங்கயே நின்னுட்டேன். வேகமா கையை இழுத்து காப்பாத்துனான். டூவிலர்காரன் நிக்காம போய்ட்டான். இங்க பாத்து க்ராஸ் பண்ணுங்கனு சொன்னதுமில்லாம அவனே கையை பிடிச்சு கூட்டிட்டு போய் பஸ் உள்ள வர்ரப்ப ஏறி இடமும் போட்டுத்தந்தான் . டெய்லியும் அவனே வந்து க்ராஸ் பண்ணிவிட்டு இடமும் போட்டுத் தரேன்னு சொன்னான். உனக்கு சாப்பாடுக்கு னு கேட்டேன். பசங்கட்ட சொல்லிட்டா எடுத்து வச்சிருவாங்கக்கா ஒன்னும் பிரச்சனையில்ல. டெய்லியும் வரேனு சொன்னான். எனக்கும் அவன்கூட அப்படி தனியா ஸ்பென்ட் பண்ண பிடிச்சிருந்தது. சரி னு சொன்னேன்.
பார்ரா….
அவனுக்கும் அப்படி தோணுறனாலதான இளவரசி டெய்லியும் வரேன்றான்.
ஆமா..
ம்ம். ஹாஸ்டல் சாப்பாடு நல்லாருக்காதுனு ஹாஸ்டல் பசங்க சொல்லி கேட்ருக்கேன். நாளைக்கு நானே அவனுக்கு மதிய சாப்பாட சமைச்சு கொண்டு போலாம்னு இருக்கேன். மட்டன் பிரியாணியா செஞ்சி கொண்டு போ போறேன்.. என் தம்பிக்காக..
ஓஹோ.. சூப்பர். சாப்புட்டுட்டு ஹாஸ்டல் சாப்பாடே பரவால்லனு நினைக்காம பாத்துக்க..
ஹேய் ரொம்ப ஓட்டாத.. என் கைப்பக்குவம் உனக்கு தெரியாது.
கை பக்குவமா பஞ்சு மாறியிருக்கும்.
ச்சீ…
“———————————“
அம்மா இருக்காங்க அப்பறம் சொல்றேன். பாய் டி…
***********************************************************************************************************************************************
என்ன மேடம்.. உங்க கைப்பக்குவம் எப்படி இருந்துச்சாம். ஹாஸ்டல் சாப்பாடே பரவால்லனு சொன்னானா!
ம்ம்..உம் மூஞ்சி.. செம டேஸ்ட்டா இருக்குனு சொன்னான்.
அது உன் மனசு கஷ்டப்படக்கூடாதுனு சொல்லிருப்பான்.. உண்மைய சொன்னா ஃபீல் பண்ணுவேன்னு.
அவன் என்னைய ஃபீல் பண்ண வச்சுட்டான்டி..
என்ன சொல்ற!
ஆமா. ப்ரேக் அப்பயே அவன்கிட்ட சாப்பாடுக்கு ஃப்ரண்ட்கிட்ட சொல்ல வேணாம், உனக்கு நானே வாங்கிட்டு வந்துருக்கேன்னு சொன்னேன். சரினுட்டு போய்ட்டான். அவன்கிட்ட நானே அவனுக்காக செஞ்சதுனு சொல்லி அவன் ஆசையா சாப்டறத பாக்கணும்னுறதுக்காக எப்படா மதியமாகும்னு வெய்ட் பண்ணேன்…. காலேஜ் முடிஞ்சதும் நானே இன்னிக்கு அவன் என்னோட டிப்பார்ட்மென்ட் வர்ரதுக்கு முன்னாடி அவன் டிபார்ட்மென்ட் போய்ட்டேன். ரெண்டு பேரும் அவங்க டிப்பார்ட்மென்ட் பக்கத்துலருந்த ஸ்டோன் பென்ஞ்ச்ல உக்காந்தோம். டிபன் கொடுத்து நானே உனக்காக ஸ்பெசலா சமைச்சது சாப்புட்டுட்டு சொல்லுனு கொடுத்ததும் அழுதுட்டான். சுத்தி இருந்த எல்லாம் எங்களையே பாக்கவும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. தம்பி அழாத ஒரு மாதிரி பாக்கறாங்கனு சொன்னேன். எதுவும் பேசல அழுகைய துடைச்சுட்டு திறந்து சாப்புட ஆரம்பிச்சான். எப்படியிருக்குனு எதாவது சொல்லுவானானு ஆசையா அவனையே பாத்துட்டுருந்தேன். ஆனா அவன் எதுவுமே சொல்லல. இடையில இடையில கண்ணீர துடைச்சுட்டுருந்தான். சாப்பிட்டுட்டு கைகழுவுற வரை எதுவும் பேசல. நானும் அவனா சொல்லட்டும்னு வெய்ட் பண்ணேன். அவன் வாயே தொறக்கல. நேத்து மாதிரி சத்திரம் பஸ்ஸ்டான்ட் வந்து சீட் புடுச்சு உக்கார வச்சுட்டு பக்கத்துல எதுவும் பேசாம உக்காந்துருந்தான். என்ன தம்பி சாப்பாட பத்தி ஒண்ணும் சொல்லல. சாப்பாடு நல்லால்லயா னு கேட்டேன். அக்கா உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லாம மறைச்சுட்டேன். அது சொன்னா சிம்பதி கிரியேட் பண்ணி பேசற மாதிரியிருக்கும் உங்களையும் கஷ்டப்படுத்தும்னு தான் நான் அத சொல்லாம இருந்தேன் னு சொன்னான் என்ன தம்பி னு கேட்டேன்.
திரும்ப அழுக ஆரம்பிச்சான். தம்பி எல்லாம் பாக்கறாங்கனு சொன்னேன். என் கையைப் பிடிச்சிட்டு அக்கா னு சொல்லி முகத்துல வச்சுட்டு அழுதான். சுத்தி எல்லாரும் பாக்கவும் கீழ இறங்கிட்டோம். அவன் அக்கா அக்கா னு சொல்லிட்டிருந்தான்.
தனியா போலாம்னு நடந்தே இப்ராஹிம் பார்க் வர போய்ட்டோம். அவன் எதுவும் பேசல. கையைப் பிடிச்சிட்டே வந்தான். நானும் நடுரோட்ல ஆரம்பிச்சுட வேண்டாம்னு அமைதியாவே போனேன். பார்க்ல தனியா போய் உக்காந்தப்ப திரும்ப கேட்டேன். என்னாச்சு என்ன மறைச்சுட்டனு? எங்கக்கா செத்துட்டாங்கக்கா னு சொன்னான்.
செத்துட்டாங்களா!
ஆமா இளவரசி.. அவங்கக்கா ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுக்கப்பறம் இவங்க வீட்டுக்கு வந்துருக்கு. இவங்க வீட்டு சைட்ல ரிசப்சன் திரும்ப வச்சாங்களாம். அதுக்கப்பறம் ஊருக்கு போறப்ப ஆக்ஸிடன்ட்ல இவங்கக்கா மட்டும் இறந்துட்டாங்களாம். அவங்க செத்தே ரெண்டு வருசம் இருக்குமாம். இவன் என்னயப் பாத்ததும் செத்துப்போன அக்கா கல்யாணம் பண்ணதுக்கப்பறம் இவங்கூட பேசாம சந்தோசமாயிருக்க மாதிரி இருக்குனு நினைச்சுகிட்டு தான் தூரத்துலருந்து என்னையப் பாத்தே சிரிச்சிட்டு இருந்துருக்கான். ஒருநாள் பேச வந்தான்ல அன்னைக்கு அவங்கக்கா பிறந்தநாளாம். அதுனால பேசணும்னு ஆசையாயிருக்குனு பேச வந்துருக்கான். அவங்கக்கா செத்தத சொன்னா கஷ்டப்படுவேனோனு நினைச்சு எங்கிட்ட சொல்லாம இருந்துருக்கான். எங்கிட்ட பேசும்போது அவங்கக்காகிட்ட பேசுற மாதிரி நினைச்சுக்குறானு சொன்னேன்ல. இல்ல இளா.. அவன் என்னையவே அவங்கக்காவா நினைச்சிருக்கான். நான் அழவே கூடாது னு நினைப்பானாம். அவனை என் தம்பியா முழுசா ஏத்துக்குட்டேன். அவன் தலை முடியைக் கோதிவிட்டேன். சுத்திபாத்தவங்கலாம் எங்கள லவ்வர்னு நினைச்சிருப்பாங்க. நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். அவன மனசார என் தம்பியா ஏத்துகிட்டேன். எங்க வீட்லயும் அய்யா அம்மா அப்பாயி எல்லார்கிட்டயும் அவனைப் பத்தி சொன்னேன். அவங்கக்கா போட்டோவையும் காமிச்சேன். இன்னைக்கு எங்க வீட்டுல அவனைப் பத்திதான் பேச்சு.
ம்ம்… சரி சரி.. புது தம்பிய பத்தி என்ன சொல்றாங்க.
வீட்டுக்கு ஒருநாளு கூட்டியார சொல்றாங்க.. அவனோட நான் போட்டோ எடுக்கல. அவன் போட்டோவ காட்ட சொன்னாங்க. என்கிட்ட போட்டோ இல்லியா. அதான் நாளைக்கு அவன போட்டோ எடுத்து வீட்ல காட்டணும்…
சரி இங்க எனக்கு வேலையிருக்கு. நான் நாளைக்கு பேசறேன்.
சரி ஓகே ஓகே. பாய் இளவரசி.
***********************************************************************************************************************************************
அம்மா… இது என் ஸ்கூல் ஃப்ரண்ட் இளவரசிம்மா. டெய்லிக்கும் பேசுவேன்ல. சென்னையில படிக்குறாப்புலனு சொல்லியிருக்கேன்ல.. அவம்மா. நம்ம தம்பியில்ல. அம்மா வந்து தம்பிதான் பேசறானா! கொடு நானும் பேசறேன்னு வந்துட்டாங்க! இது தம்பியில்ல நீயி னு சொல்லிட்டிருந்தேன்.
ஓஹோ! அம்புட்டு க்ளோஸாயாச்சா!
ஆமா இளவரசி. நாளைக்கு தம்பி வீட்டுக்கு வரான். அய்யாதான் வர சொன்னாரு. சரி நீ சொல்லு நேத்து ஏதோ வேலை இருக்குனுட்டு சீக்கிரம் வச்சுட்ட. அதை முடிச்சியா!
அதெல்லாம் சின்ன வேலைதான். ப்ராஜக்ட் ஒர்க் அத நைட்டே முடிச்சிட்டேன். நீ இத சொல்லு. அப்பா வர சொன்னாருன்ற என்ன நடந்துச்சு!
இன்னைக்கு நிறைய நடந்துருச்சு. நேத்து இப்ராஹிம் பார்க்ல நானும் அவனும் இருந்தத பாத்துட்டு சரவணா -நான் சொல்லிருக்கேன்ல என் க்ளாஸ் பையன். ப்ரோபோஸ் பண்ணான் நான் கூட வேணானு சொன்னேனு-
ம்ம் நியாபகமிருக்கு.
ம்ம். நான் வேற டிப்பார்ட்மென்ட் பையன் கூட பார்க்ல தப்பா இருந்தேனு க்ளாஸ்ல சொல்லிருக்கான். இல்ல அவன் என் தம்பினு சொன்னேன். அவன் நம்ம சீனியர் அவன் உனக்கு தம்பியானு சொல்லி சிரிச்சான்.
அவன் யாரா இருந்தா அவனுக்கென்ன.. அது ‘நம்ம’ பிரச்சனை. அதுல எதுக்கு அவன் தலையிடறான்.
ம்ம் அதேதான் நானும் கேட்டேன். ரொம்ப பண்ணான் இளா. ப்ரேக்ல வெளிய போகாம க்ளாஸ்லே மூட்அவுட்டாகி உக்காந்துருந்தேன். என் ஃப்ரண்ட்ஸ் இத தம்பிகிட்ட சொல்ல அவன் நேரா போய் சரவணாவ அடிச்சுட்டான்.
ஐய்யய்யோ! அப்பறம்,
பெரிய சண்டையாகி டிபார்ட்மென்ட்ல அய்யாவ வர சொல்லிடாங்க. அய்யாவும் வந்தாங்க. சரவணா எங்கய்யாகிட்ட, நேத்து ஒரு பையனோட என்னைய பாத்தேனு சொன்னதுக்கு எம் புள்ளைய பத்தி எனக்குத் தெரியும். அந்த பையனையும் எனக்கு தெரியும்- அவனும் எம் புள்ள மாதிரி னு சொல்லி அவனை நல்லா திட்டிவிட்டாரு. அப்பறம் அய்யா, நான், தம்பி – மூனு பேரும் வெளிய போய் சாப்புட்டோம். ரெண்டு பேரும் நல்லா பேசுனாங்க. அப்பானு தான் அவனும் கூப்புட்டான். நாளைக்கு வீட்டுக்கு சாப்புட வா னு சொன்னாரு. சரிங்கப்பா வரேன் னு சொன்னான். நாளைக்கு அவனுக்காக ஸ்பெசலா கோழி, ஆடுனு எடுக்கப்போறோம். நாளைக்கு வீட்டுக்கு வந்ததும் எங்க மீன்குளம், கிணறு , தோப்பு எல்லாம் காட்டணும்.
சூப்பர் புள்ள. நாளைக்கு அப்ப உன்னைய கையிலே பிடிக்க முடியாதுல..எனக்குலாம் போன் பண்ணுவியா..
கலாய்க்காத. .உன்கிட்ட பேசாம எப்பிடி இருப்பேன்.. வைக்கிறேன்.
***********************************************************************************************************************************************
இளா! உன்னைய மாதிரியே தான் இப்ப எனக்கு அவனும். என் உலகத்துக்குள்ள வந்துட்டான்.
நீ அவன்கிட்ட ரொம்ப சீக்கிரம் அட்டாச் ஆயிட்ட. இதுக்கு முன்னாடி இவ்வளவு சீக்கிரம் யாருகிட்டயும் அட்டாச்சாகி பாத்ததேயில்ல. யாரையும் அவ்வளவு சீக்கிரம் நீ கிட்டத்துல சேக்கமாட்ட..
நானும் அததான் யோசிச்சுட்டு இருந்தேன். உன்கிட்ட க்ளோசாகவே எவ்வளவு நாளாச்சு! ஆனா இவன்…
ஒருவேள போன ஜென்மத்துலயும் நீங்க அக்கா தம்பியா இருந்திங்களோ என்னவோ! படத்துல சொல்லுற மாதிரி நம்மள மாறியே ஏழுபேர் இருப்பாங்களோ என்னவோ! அப்படியிருந்தாலும் உங்கள மாதிரி க்ளோஸ் ஆவாங்களானு தெரியல!
ஆமால்ல இளவரசி. இன்னைக்கு அவன் கூட எங்க வீட்ல சாப்புடுறப்ப கூடப்பொறந்த தம்பி மாதிரியே ஃபீல் வந்துருச்சு. அம்மா அய்யாவையும் அம்மா அப்பானே கூப்புடுறான். மீன்குளம், கேணிலாம் காமிச்சேன். என் வாழ்க்கைக்குள்ள முழுசா வந்துட்டான். அவனுக்கு என்னையப் பத்தி, என் ப்ரண்ட்ஸ் பத்தி, குடும்பம் பத்தி எல்லாம் தெரியும். ஒன்னே ஒன்னைத் தவர. உன்னிய தவிர. டெய்லியும் நான் உன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணுவன். நீயும் டெய்லியும் அங்க நடக்கறத ஷேர் பண்ணுவன்ற வர அவனுக்கு தெரியும். ஆனா நீ இளவரசி இல்ல இளவரசன்னு மட்டும் தெரியாது. அதையும் நாளைக்கு சொல்லிடலாம்னு இருக்கேன்.
என்ன தைரியமா வெளிய சொல்ற! வீட்ல யாருமில்லையா.
ஆமா பக்கத்து வீட்ல ஒரு பாட்டிக்கு உடம்பு சரியில்ல இப்ப தான் பாக்க போயிருக்காங்க. யாருமில்ல.
அதான. நீதான் பயங்கரமானளாச்சே!
அப்படியா !
பின்ன! உங்க வீட்டுல இருக்கவங்களுக்கு சீரியல்ல லவ் பண்ணாலே பிடிக்காது. அவங்கள பக்கத்துல வச்சுகிட்டே டெய்லியும் என்கிட்ட பேசிட்டிருக்கல்ல. சரி ஒரு வேளை , உங்கப்பாக்கு நீ பேசுறது இளவரசிகிட்ட இல்ல. ஏன் அப்படி ஒருத்தியே க்ளாஸ்ல நம்ம கூட படிச்சப்ப இல்லனு தெரிஞ்சா என்னடி ஆகும்!
ம்ம்..போனை உடைச்சி போட்டுட்டு நீ படிச்சது போதும்னு வீட்டுலே உக்கார வச்சு வேற எவனுக்காது கல்யாணம் பண்ணிடுவாங்க.
சரி உடைக்குறதுக்குள்ள ஒரு உம்மா குடுத்துரு!
முடியாது.
ஏய் எப்பவாதுதான் இப்படி சான்ஸ் கிடைக்கும். நான் என்ன நேர்லயா கேட்டேன். போன்லதான கேட்டேன்.
அடேயப்பா! நேர்ல கேட்டுட்டுதான் பண்ணுறியாக்கும்!
என்ன பண்ணாங்க உன்னய!
போன தடவ என்னிய பாக்க திருச்சி வந்தப்ப சும்மா படம் பாக்க போலாம்னு ரம்பா ஊர்வசி க்கு கூட்டிட்டு போய்…
படம் பாத்தோம்ல.
நம்ம படமா பாத்தோம்! அந்த படத்து பாட்ட டீவியில பாத்தாலே உன் நியாபகந்தான்டா வருது..
வருதுல. அப்ப ஒன்னு கொடு.
ஆமா இளவரசி. சரி நாளைக்கு போன் பண்றேன்.
வீட்டுல வந்துட்டாங்களா.. முத்தம் போச்சா.. சரி பாய்..
உம்மா.. சும்மா சொன்னேன் இளவரசா! இப்பதான் வராங்க பாய்…
***********************************************************************************************************************************************
ஹலோ.. தெளிவா கேக்கல. ரொம்ப இரைச்சலா இருக்கு!
பக்கத்து வீட்டு பாட்டி செத்துட்டாங்கடா! மைக்செட் போட்ருக்காங்க.
வீட்டுல யாருமில்லயா!
ஆமா! அம்மா அங்க போயிருச்சு. அய்யா வல்லம் போனாரு இன்னும் வரல.
ஏய் நேத்து குடுத்த முத்தம் இப்ப வரை இருக்கு..
டேய் நானே செம காண்டுல இருக்கேன். பேசாட்டுக்கு இரு!
அதெல்லாம் முத்தம் கொடுத்தா சரியாப் போயிடும்.
டேய் விளையாடாத. எப்ப வருவாங்க னு தெரியாது. அதுக்குள்ள சொல்ல வந்தத சொல்லிடறேன்.
சரி சொல்லு. தம்பிகிட்ட சொல்றேனு போன. நீ டென்சனாயிருக்கத வச்சு பாத்தா…அவன் எதாவது சொன்னானா!
ஆமாடா! செமயா வைஞ்சு விட்டேன் அவன. உன்னைய பத்தி ஆசையா சொல்றேன். மொத எடுத்த உடனே என்ன ஆளுக னு கேட்டான். அப்பயே சுர்ருனு ஏறிருச்சு. யாராயிருந்தா என்னடா னு கேட்டேன். இன்னைக்குதான் மொத வாடா னு கூப்பிட்டேன்.
ம்ம்..
இல்லக்கா. நம்ம ஆளுகனா வீட்டுல எதுவும் பிரச்சனை ஆகாதுல அதான் சொன்னேன் னு சமாளிச்சான்.
நம்ம ஆளுகனு சொன்னானா? அப்ப அவனும் உங்க சாதி தானா! சொல்லவேயில்ல.
ஆமாடா. இல்லனா எங்கய்யா அப்பிடியே பழகுவாராக்கும்.
அதான!. ஆனா இத என்கிட்ட நீ சொல்லவேயில்ல பாரு!
இப்ப இதான் ரொம்ப முக்கியமாக்கும். சொல்றதக் கேளு. அவன் அப்பிடி சொன்னதும் நான் சொன்னேன், இல்ல தம்பி அவன் இந்த ஆளுக னு. உடனே அவன் வந்து அக்கா, உங்களுக்கு ஒரு தம்பியா சொல்றேன். இது வேணாம் க்கா. நம்ம குடும்பத்துக்கு செட்டாகுது னு சொன்னான். கிறுக்கு புடிச்சதாட்டம் ஆயிருச்சு. அதுமில்லாம பீரியட்ஸ் வேற. புடிச்சு கத்திவுட்டேன். என்ன நம்ம குடும்பத்துக்கு ஆகாது. அது எங்க குடும்ப பிரச்சனை. நாங்க பாத்துக்குறோம் னுட்டேன்.
லூசு. இப்பிடியா பேசுவா! பாவம்புள்ள அவன்.
என்னடா நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ற.
சப்போர்ட் இல்ல லூசு. அவன் அக்காவும் இப்படி ஓடிப்போய் வீட்டுல பிரச்சனையாகி பேசலனு சொன்னில. இப்போ உயிரோடவுமில்ல. அப்படி உனக்கு ஆயிடக்கூடாது நீ உன் குடும்பத்தோட சந்தோசமாயிருக்கணும்னு நினைச்சு சொல்லிருப்பான். சின்ன பையன் தான!
டேய் நம்மளவிட ஒரு வயசு மூத்தவன் அவன்.
சரி.. அவன் உன்னையும் அவங்கக்காவா பாக்குறான். நீயும் அவன் அக்கா மாதிரியே வேற இருக்க! அக்கா மாதிரியே பண்ணுற! உனக்கும் அவங்கக்கா மாதிரி ஆயிடுமோனு பயத்துல சொல்லிருக்கலாம்ல.
நான் ஒன்னும் அவன் அக்கா கிடையாது! அவன் சொல்றான்றதுக்காக அவன் சொன்ன மாதிரி உங்கிட்ட பேசாம இருந்தா உனக்கு ஓகேவா!
நான் அப்படி சொல்லல புள்ள..
பின்ன நீதான சப்போர்ட் பண்ற!
சப்போர்ட் பண்ணல லூசு. அவனை நல்லாத் திட்டு பிரச்சனையில்ல. அதுக்குனு உடனே இது என் குடும்பம் னு பிரிச்சு பேசாதனு சொன்னேன். சரி, அதுக்கப்பறம் அவன் என்ன சொன்னான்.
அவன் எதுவுமே பேசல. என்னைய பஸ் ஏத்திவிட வந்தான். நீ வராத நானா போய்க்கிறேன்னேன். பரவால்லக்கா! நான் வரேன் னு க்ராஸ் பண்ணி கூட்டிட்டு போய் பஸ்ல இடம்பிடிச்சு குடுத்தான். ஸாரிக்கா. ஹர்ட் பண்ணனும் சொல்லல. வீட்ல எல்லாம் நல்லாருக்கணும் னு தான் சொன்னேன் னு சொன்னான். நான் எதுவும் பேசல. முகத்தை திருப்பிகிட்டேன்.
சில சமயம் லூசு மாதிரி தான் நடந்துக்குற!
தப்பு பண்ணிட்டேனாடா! ச்சே! நான் ஒரு லூசுடா. நீ சொல்றப்பதான் எவ்வளவு ஹர்ட் பண்ணிருக்கேனு தெரியுது. அவனை அப்படி சொல்லிருக்ககூடாதோ!
ஆமா!
டேய் நீ சொன்னப்பறம் ரொம்ப சோகமா இருக்குடா. அவன்கிட்ட ஸாரி கேக்கணும்.
அதை செய். அதேமாறி லவ் பண்ணக்கூடாதுனு சொன்னான்னாக்க பதமா பேசு.
ம்ம். எனக்கு காதல் கண்ண மறைக்குதோ!
ஆமா ஆமா மறைச்சு தான் வைச்சிருக்கு! காட்ட மாட்டுது.
டேய்!… அய்யா வர சத்தம் கேக்குது. நாளைக்கு பேசறேன் இளவரசி.
***********************************************************************************************************************************************
இளவரசி எனக்கு பயமாயிருக்கு. அவன் வாத்தியார்கிட்ட சொல்லிடுவேனு மிரட்டுறான்.
என்ன உளறுர. வாத்தியார்ட்டயா! உன் தம்பிட்ட சாரி கேக்கணும்னு சொன்னியே என்ன சொன்னான்!
அதான் இளவரசி! அத சொன்னதுக்கு ஒருநாள் டைம் கொடுத்து அதுக்குள்ள அவன் சொன்ன ஹோம்வொர்க்க முடிக்காட்டி ப்ரொபசர்ட்ட இல்லாட்ட டைரக்டா ஃபாதர்கிட்டே கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்றான். எனக்கு என்ன பண்றது னு தெரியல. அவன்கிட்ட மாட்டிகிட்டேனோனு தோணுது. பயமாயிருக்கு.
***********************************************************************************************************************************************
இளா,
ஏன் ஏன் அழுகுற! என்னாச்சு! இது என்ன புதுநம்பர். ஏன் நேத்து கால் பண்ணல.
அவன் எங்க அய்யாட்ட நம்மளப் பத்தி சொல்லிட்டான் இளா. அய்யா செம அடி அடிச்சு ஃபோன புடுங்கி அடுப்புல போட்டுட்டாரு. உன்னையப் பத்தி கேட்டாரு. நான் சொல்லல. உன்னையும் உன் குடும்பத்தையும் விசாரிச்சுட்டுருக்காரு. எனக்கு பயமாயிருக்கு இளா!
பயப்படாத. அதலாம் ஒன்னும் பண்ணமுடியாது. அழுகைய நிறுத்து மொத. என்னாச்சுனு தெளிவா சொல்லு.
நேத்து உங்கிட்ட பேசிட்டு இருக்கும்போதே என் நம்பருக்கு கால் பண்ணிட்டே இருந்தான். நீ வச்சதும் பேசுனேன். நான் சொல்றது உனக்கு கஷ்டமாதான் இருக்கும் அக்கா. ஆனா அத நீ பண்ணனும். அப்பா அம்மா மேல சத்தியம் பண்ணு அவங்கூட பேசமாட்டேன் னு கேட்டான். முடியாது முடிஞ்சத பாத்துக்கடா னு சொன்னேன். உடனே அய்யாவுக்கு போன் பண்ணி நம்மளப் பத்தி சொல்லிட்டான். அய்யாவும் அம்மாவும் என்னைய அடிச்சு, போனை உடைச்சு அடுப்புல போட்டுட்டு என்னைய ரூம்ல பூட்டி வச்சுட்டாங்க. அடுத்த செமஸ்டருக்குள்ளே கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. காலேஜே போக வேணாம் னுட்டாங்க. நான் போவேன்னு சொன்னேன். அப்பறம் அவன்கிட்ட நான் என்னைய காலேஜ் அனுப்பலாமானு ஐடியா கேட்டு அவன் நான் பாத்துக்குறேனு சொல்லவும் நேரா காலேஜூக்கே கொண்டு போய் அப்பா விட்டாரு.
இன்ட்ரவல்ல வந்தவன் என்னைய வாட்ச் பண்ண வந்தேன்றான் இளா. எங்கப்பா அவனை பாத்துகிட்டேயிருக்க சொன்னாராம். நரகத்துல இருக்க மாறியிருந்துச்சு இளா. எங்க போனாலும் பின்னாடி வந்தான். காலேஜ் முடிஞ்சதுக்கப்பறமும் அப்படிதான் வந்தான். ‘உனக்கு என்னடா பாவம் பண்ணேன். உன்னை என் சொந்த தம்பியா தானடா நினைச்சேன். ஏன்டா இப்படி பண்ணுன! என் வாழ்க்கையே போச்சுடா. எங்கப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்றாருடா! சந்தோசமா னு சட்டையை பிடிச்சு கதறி அழுதேன்.
அவன் மசியவேயில்ல இளா. தம்பியா இருக்கதுனாலதான் இப்படி செஞ்சேன்க்கான்றான். உனக்கென்ன படிக்கணும் அவ்ளோதான! அப்பாகிட்ட நான் பேசறேன். நான் சொன்னா கேப்பாரு. நீ காலேஜ் படிச்சு முடிக்கற வரை. கல்யாணம் பத்தி பேசமாட்டாங்க. அதுக்கு மேல பிஜி படிக்கறதுனாலும் படி. ஒரு பிரச்சனையுமில்ல. அப்பாவ நான் சமாளிச்சுக்குறேன். ஆனா ஒரு சத்தியம் பண்ணிக்கொடு. உங்கப்பா அம்மா மேல. அவன் கூட இனி பேசமாட்டேன் பழகமாட்டேனு. அவன் கூட பழகுறத மட்டும் விட்டுடு னு சொன்னான்.
நீ யார்ரா கம்மனாட்டி அத சொல்றதுக்கு. ச்சீ உன்னைய என் தம்பினு சொன்னதுக்கே கேவலப்படறேன்டா. கூடப் பிறக்காத என்னையவே இப்படி டார்ச்சர் பண்றிங்களே உங்கக்காவ என்ன பண்ணிருப்பிங்க. நீங்களே கொன்றுப்பிங்கனு நினைக்கிறேன்டா. கொலைகார நாய்ங்களா! னு அழுதேன். அந்த மாறி நீயும் ஆயிடக்கூடாதுனு தான்க்கா சொல்றேன். யோசிச்சு பாரு! உங்கப்பா அந்த சாதிக்காரனோட வாழவிடுவாரா. எனக்கு தெரியும் சத்தியமா விடமாட்டாரு. எங்கக்காக்கு நடந்தது உனக்கு நடக்க வேணாம்ங்கா. உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்கா. நீ என் உசுரு மாறி. நீ நல்லாருக்கணும்ங்கா. நல்லாருப்ப. அந்த பையன் வேணாம் அக்கா னு சொன்னதும் அவனைப் பாக்கவே அருவருப்பா இருந்துச்சு. எதுவும் பேசாம பஸ் ஏற கௌம்புனப்ப என் பின்னாடியே வந்தான். கைய பிடிச்சு க்ராஸ் பண்ணான். கையை உதறுனேன். கெட்டியா பிடிச்சுகிட்டான். உனக்கு சரியா க்ராஸ் பண்ண தெரியாது. வா னு தரதர னு இழுத்துட்டு போய் சீட்டு போட்டு உட்கார சொன்னான். உட்காரமாட்டேன் னு சொன்னேன். மிரட்டி உட்கார சொன்னான். உன் மூஞ்சிய பாக்கவே பிடிக்கல. தயவுசெஞ்சு போடா. பாத்தாலே அருவருப்பா இருக்கு! னு சொன்னேன். எனக்கு தெரியும் இப்ப நான் செஞ்சது செய்றதுக்குலாம் என் மேல உனக்கு கொலை பண்ணலாம் போல கோவம் இருக்கும் னு! நீ சொன்ன மாதிரியே நான் போயிடறேன். உன்கூட பேசல. உன்னைய ஃபாலோ பண்ணல. உன் பக்கம் திரும்பி கூட பாக்கல. சும்மா சொல்லலக்கா. நம்ம குலசாமி மேல சத்தியமா சொல்றேன். நான் போயிடறேன். ஆனா அதுக்கு நீ நான் சொல்ற ஒன்னே ஒன்ன மட்டும் செய். அந்த பையன விட்டுரு. அவன் உனக்கு வேணாம்க்கா. உங்கப்பா அம்மா பாக்குறவன கல்யாணம் பண்ணி அவங்களோட சந்தோசமா இரு. அது போதும் எனக்கு. என் அக்காவால தான் அப்படியிருக்க முடியல. நீயாவது இருக்கா னு கண் கலங்குனான். அதப் பாத்ததும் எனக்கு கைகால் நடுங்க ஆரம்பிச்சிருச்சு! அவன் ரொம்ப ரொம்ப மோசமானவன் இளா. அவனை என் லைஃப்குள்ள அலோ பண்ணிருக்கக்கூடாது. நீ அவன தப்பா நினைச்சிருவியோ னு உன்கிட்ட அவன் சொன்ன நிறைய விஷயத்த மறைச்சிருக்கேன்.. நான் தான் அவனை தப்பா கணக்கு போட்டுட்டேன். என்கிட்ட முதல் நாள் வந்து உங்களைப் பாக்க எங்கக்கா மாதிரியே இருக்கிங்கன் னு சொன்னான்னு சொன்னேன்ல அன்னைக்கே நீங்களும் நானும் ஒரே ஆளுக தான் னு சொன்னான். எப்படி கண்டுபிடிச்சா னு தெரியல. அதே மாதிரி உன்னைய பத்தி சொன்னப்போ உன் சாதிய கேட்டான்.
உன் சாதியை சொன்னதுமே அவங்களாம் இ்ப்படிதான்க்கா, காசுக்காக சும்மா நடிப்பாங்கக்கா. நாடகக்காதல் குரூப் னு சொன்னான்.
அதை சொல்லவும் தான் அவனைத் திட்டுனேன். அடுத்த நாள் அவன்கிட்ட ‘இளவரசன் அப்படியில்ல தம்பி! சென்னையில நல்ல காலேஜ்ல படிக்கிறான். அவனுக்கு சொத்தும் எங்க அளவுக்கு இருக்கு. அதுவுமில்லாம அவன்கூட என்னையவிட அழகான பொண்ணுங்களாம் படிக்குது. அவன் லவ் பண்றான்னா அது உண்மையான லவ்னு சொல்றேன். அவன் ஒத்துக்கவேமாட்றான். அவனுக்கு பிரச்சனை நீயில்ல இளா. உன் சாதிதான். அவன் அக்காவ இவங்கதான் கொன்றுக்காங்கனு நினைக்கிறேன். அவன் பேசுனத வச்சு பாத்தா அப்படிதான் தெரியுது. நானே இவன என் வாழ்க்கைக்குள்ள வரவிட்டு மண்ணள்ளி போட்டுகிட்டேன். இப்ப என்னடா பண்றது!
அழாத! அவன்கிட்ட அவன் சொன்ன மாதிரி சத்தியம் பண்ணி கொடுத்துடு. கொஞ்ச நாள் உங்கப்பாக்கு, உங்கம்மாக்கு, அவனுக்கு நம்பிக்கை வரமாதிரி இரு. நம்ம பேசிக்க வேணாம். நான் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு உங்க காலேஜ்ல வந்து பாக்கறேன். நம்ம படிப்பு முடியற வர அப்படியே இரு. அப்பறம் பாத்துக்கலாம் . என்ன!
சரி இளா! நீ சொல்ற மாதிரியே செய்றேன். இந்த நம்பருக்கு கால் பண்ணிறாத. இது பக்கத்து வீட்டு புள்ளை போன். அவங்க பாட்டி கருமாதிக்கு வந்தப்ப கேட்டு வாங்கி பண்ணேன். அவளுக்கு இது எதுவும் தெரியாது.
சரி நான் பண்ணல. நீயும் அவங்களுக்கு உன் மேல நம்பிக்க வர்றவர எனக்கு மெசேஜ் கால் எதுவும் பண்ணாத! நான் வர்ரப்ப பாத்துக்கலாம்.
ம்ம். ஆனா அவன பாத்தாலே எனக்கு எரிச்சலாகுது. காலையில டெய்லியும் அப்பா காலேஜ்ல விட்டுட்டு போவாராம். இவன் டெய்லியும் காவலுக்கு வந்து பஸ் ஏத்திவுடுவானாம். என் சுதந்தரமே போச்சு. என்னையவே இப்படி பண்றானே இவனுங்க என்னைய மாதிரியிருந்த அந்த பொண்ண என்ன டார்ச்சர் பண்ணிருப்பாங்க! அவன எதாவது பண்ணனும் இளா.
உண்மைய சொல்லணும்னா அவனை எதுவுமே பண்ண முடியாது. இப்ப இருக்க நிலைமையில அவனால மட்டுந்தான் உனக்கு கல்யாணம் ஆகாம படிக்கவைக்க முடியும். அவன்கிட்ட அவன் சொன்னமாதிரி சத்தியம் பண்ணி கொடு. கல்யாணம்லாம் வேணாம். படிக்கணும் னு அப்பாகிட்ட பேசு. நான் ஒழுங்கா இருக்கேன். ஃபோன் வேணாம். என்கூடவே இருனு சொல்லு. அவனுக்கு நம்பிக்கை வரமாதிரி ஒரு மாசம் நடந்துக்க. அவன் சொன்னா உங்கப்பா கேப்பாருனு தோணுது. அவன் சொன்னமாதிரி நடக்குறதத் தவிர இப்போதைக்கு வேற வழியில்ல. தைரியமா இரு. பாத்துக்கலாம். என்ன ! .லவ் யூ.
ம்ம்… நீ சொன்ன மாதிரி நடந்துக்கறேன். ஆனா அவன் பண்ண வேலைக்கு அவனை எதாவது பண்ணனும்னு தோணுது.
***********************************************************************************************************************************************
ஹலோ அண்ணா! நேத்து இந்த நம்பர்ல தான் என் ஃப்ரண்ட் உங்ககிட்ட பேசுனா!
ம்ம் ஆமாமா.. சொல்லு.
அவ இப்ப எப்படினா இருக்கா! எப்ப வருவா ண்ணா!
எனக்கு தெரியலயே மா. ஏன்மா! என்னாச்சுமா!
உங்களுக்கும் தெரியலயா அண்ணா! காலேஜ் முடிஞ்சு பஸ் ஏற க்ராஸ் பண்றப்ப ஆக்ஸிடன்ட் ஆயிருச்சாம்.
அய்யய்யோ என்னம்மா சொல்ற! இப்போ எப்படி இருக்கா!
எனக்கும் சரியா தெரியல அண்ணா. ஹாஸ்பெட்டலருந்து இவதான் அழுதுட்டே போன் பண்ணி சொல்லிருக்கா. அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் சாவியை எங்க வீட்ல கொடுத்துட்டு அழுதுட்டே போனாங்க. இன்னும் வீட்டுக்கு வரல. என்னா தகவல் னும் தெரியல. அவகிட்டயும் போன் இல்ல. அவங்க அப்பாவுக்கு போன் போக மாட்டேங்குது. இப்போதான் நேத்து நைட் காலேஜ்ல ஒருத்தவங்ககிட்ட பேசுனனும்னு வாங்குனது நியாபகம் வந்துச்சு. அதான் உங்களுக்கு தெரியுமா கேட்டு பாக்கலாம்னு போன் பண்ணேன்.
இல்லம்மா! நான் இன்னைக்கு காலேஜ் போகல அதான் தெரியல. அவளுக்கு எதுவும் ஆகலயே!
அண்ணா பதட்டப்படாதிங்க. அவளுக்கு சின்ன காயம்தானாம். அவ கூட க்ராஸ் பண்ண வந்த பையன்தான் இறந்துட்டானாம்.
ஐய்யய்யோ..
‘அந்த பையன் போன வாரம் கூட வீட்டுக்கு வந்துருந்தான். என்கிட்ட கூட நல்லா பேசுனான், மனசே கேக்கமாட்டுதுனா. சரிங்கன்னா நான் வச்சறேன்.
சரிம்மா..
********