இணைய இதழ்இணைய இதழ் 69தொடர்கள்

அகமும் புறமும்; 18 – கமலதேவி 

தொடர் | வாசகசாலை

ஒரு பழைய நீர்த்தேக்கம்

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்னைத்,
தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே,
கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்,
பொலங்கலம் சுமந்த பூண்தாங்க இளமுலை,
‘வருக மாள,என் உயிர்!’ எனப் பெரிது உவந்து,
கொண்டனள் நின்றோட் கண்டு,நிலைச் செல்லேன்,
‘மாசுஇல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?’ என யின்தற்
கரைய,வந்த விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து,நிலம்கிளையா
நாணி நின்றோள் நிலை கண்டு,யானும்
பேணினென் அல்லெனோ_ மகிழ்ந! _ வானத்து
அணங்குஅருங் கடவுள் அன்னோள்,நின்
மகன்தாய் ஆதல் புரைவது_ ஆங்கு எனவே!

அகநானூறு:16
பாடியவர்: சாகலாசனார்
திணை : மருதம்
துறை :  தலைவனுக்கு தலைவி கூறியது.

அகத்துறை முழுவதுமே  உன்னதமான காதல் வரிகள், தருணங்கள் நிறைந்துள்ளன. இத்தனை உன்னதமா? என்ற தராசின் இந்தப் பக்கம் தலைவனின் பரத்தமை புன்னகையுடன் அமர்ந்திருக்கிறது.

தலைவியின் குழந்தைப்பேறு காலத்திலும் தலைவன்  பரத்தையர் இல்லம் செல்கிறான். தாசி முறை ஒழிக்கப்படும் வரையில் ஏதோ ஒரு பெயரில் பெண்ணை  களியாட்டதிற்கு உரியவளாக சமூகம் பிரித்து வைத்திருக்கிறது. பொது விலைமகள் என்று ஒரு பிரிவு [சங்க இலக்கியம் சேரிப்பரத்தை என்று சொல்கிறது], காதல் பரத்தை என்று ஒரு பிரிவு உள்ளது. பரத்தையின் மகள் பரத்தை. பரத்தைக்கு தந்தை இல்லை.

சென்ற நூற்றாண்டில் தாசி ஒழிப்பு முறை வந்த பிறகுதான் இந்தப் பிரிவு நம் சமூகத்திலிருந்து மறைந்துள்ளது. கோவில் சார்ந்த கலைகளை வளர்ப்பதற்காக கோவில் சேவை செய்யும் பெண்களை  நாடு பிடிக்க வந்தவர்கள் விலைமகள்களாக மாற்றிவிட்டார்கள் என்று நாம்  சொல்லலாம்

ஆனால் நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பரத்தை ஒழுக்கம் இருந்ததை சங்கப் பாடல்கள் எடுத்து வைக்கின்றன. பெண்களைத் தங்களின் தேவைகளுக்காகப்  பிரித்து  வைத்திருப்பது குற்றம் என்ற பிரக்ஞையே சமூகத்திற்கு சென்ற நூற்றாண்டில்தான் வந்திருக்கிறது. நண்பர்களேசட்டங்கள் இயற்றி சில குற்றங்களைத்  தடுத்து வைத்திருக்கலாம். ஆனால் பெண்ணைப் பற்றிய ஆணின் மனநிலையில் மாற்றங்கள் நிகழ வேண்டியுள்ளது

ஆணின் பேச்சில், சிரிப்பில், பார்வையில், பழக்கவழக்கங்களில்  வெளிப்படும் ரசனை தகுதியாக  கருதப்படுகிறது. அதுவே பெண்ணின் பேச்சில், சிரிப்பில், பார்வையில், பழக்கவழக்கங்களில்  வெளிப்படும் ரசனையில் எங்கிருந்து பரத்தமை வந்து குடியேறுகிறது? இதில் வேடிக்கை என்னவென்றால் இருபாலினத்தவருக்குமே பொதுவெளியில் கலகலப்பான பெண்கள்  மீதான பார்வை இப்படித்தான் இருக்கிறது.

கூட்டுச் சமூகத்தின் நனவிலியில் இன்னும் அந்தப் பரத்தமை இயல்பு மாறவில்லை. ஈராயிரம் ஆண்டு மனோபாவம் நூறாண்டிற்குள் மாறுவது சிரமம்தான் இல்லையா? ரசனை ஒரு போதும் பிழையானதில்லை. உடைமையாக்கலும்,துன்புறுதலுமே பிழை ஆகிறது.

உலகில் அனைத்து சமூகங்களுக்குள்ளும்  இதுமாதிரியான, ‘கல்ட்மனநிலை உண்டு. சமூகமாக உருவாகி படிப்படியாக ஒவ்வாதவைகளை விலக்கி வந்ததாலேயே இன்றைய நிலையில் இருக்கிறோம். பேச்சில், சொல்லில் அல்ல. அகத்தின் ஆழத்தில் மாற்றம் நிகழ வேண்டியுள்ளது.

தலைவன் பரத்தையுடனான அகவாழ்வில் ஈடுபட்டிருப்பதைத் தெரிந்துகொண்ட தலைவி அதை தலைவனிடம் சொல்லுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

வானினும் உயர்ந்த,கடலினும் ஆழம் மிக்க, நிலத்தினும் பெரியதான அன்பு கொண்டவள் தலைவி. அந்த அன்பின் பொருட்டு தலைவனை சகித்துக்  கொண்டாளோ என்னவோ? இது சரியா தவறா என்பதைத் தாண்டி தலைமுறை தலைமுறையாக இது நடக்கிறது.

தன் காதல் தலைவனுடைய சாயலில் தெருவில் விளையாடும் மைந்தனைக்  கண்டதும் பரத்தையின் மனம் மலர்ந்து விடுகிறது. தனியாக இருக்கும் மைந்தனை, ‘என் உயிரே வாஎன்று கைநீட்டி அழைக்கிறாள். தன் உள்ளத்தை மறைக்க இயலாதவள் அவள். அருகில் வரும் மைந்தனை அள்ளி எடுத்து மார்புடன் அணைத்துக் கொள்கிறாள்.

இந்த வரியை வாசித்ததும் வாழையின் குருத்துஇலை என் மனதில் வந்தது. இளம் பச்சை  நிறத்தில் அடிபாகத்தில் சுருண்டும், மேல் பகுதி மெல்ல விரிந்து கொண்டிருக்கும் புதிய இலை. பரத்தையின் மனம் குருத்து இலை விரிவதைப் போல மலர்கிறது. இளம் மைந்தனும் ஒருவகையில் வாழை குருத்து போன்றவன் தானே.

வீட்டிலிருந்து மகனைத் தேடி வரும் தலைவி, மகனையும் அவளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள்  தலைவியைக் கண்டதும் பதற்றம்  கொள்கிறாள். அவளிடம் தலைவி, முதல் வார்த்தையாக, ‘மாசு இல்லாத குறுமகளே, ஏன் பதறுகிறாய் இவன் உனக்கும் மகன்தான்’  என்று சொல்கிறாள்.

பாடலின் முடிவில் தலைவனிடம், ‘அணக்கு போன்ற தெய்வத்தன்மை கொண்ட அவள், உன் மகனுக்கு தாயாவதற்கு பொருத்தமானவளேஎன்கிறாள்

இது போன்ற கணவனின் நடத்தையால் மனம் தடுமாறிப் போன பழனியம்மாள் என்ற பாட்டி எங்கள் தெருவில் உண்டு. நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது சேலையை முட்டி வரை ஏற்றிக் கட்டியிருப்பார்.

சீலய எறக்கிக்கட்டு பழனிஎன்று யாராவது சொன்னால், “அசிங்கம்..ஒட்டிக்கும்என்று சிரிப்பார். இப்போது சில ஆண்டுகளாக மகன்கள் கணுக்கால் வரை மொத்தமான பாவாடைகளும், மெல்லிய சேலைகளும்  வாங்கித் தருகிறார்கள். இப்போது சேலையை இடுப்பு வரை சுருட்டிக்கொள்கிறார்

கணவருடன் முறையற்ற உறவில் இருந்த பாட்டியின்  மகன்களைப் பார்ப்பதற்காக தினமும் எங்கள் வீடிற்கு பின்புறம் உள்ள அவர்களின் வீட்டிற்கு வருவார். காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள்ளாக வந்து விடுவார்

அந்த மாமாக்கள் இருவரும்  ஐம்பது வயதை நெருங்குபவர்கள். தினமும் வாசலில் நின்று அவர்களின் மனைவிகளை அழைப்பார். “செல்வம் பொண்டாட்டி இருக்கியாஇங்க வா. பய எங்க? வயல்லருந்து மாடுகட்டிட்டு வந்துட்டானா..” என்று கேட்டுவிட்டு பதிலிற்கு காத்திராமல் அடுத்த மருமகளிடம் பேசத் தொடங்கிவிடுவார். மகன்கள் இருவரும் வீட்டிலிருந்து வாசலுக்கு வந்து, ‘என்னம்மா   காப்பி குடிக்கிறாயா?’ என்று கேட்டு இரண்டு வார்த்தை பேசினால் தான் திரும்பி வீட்டிற்கு செல்வார்

பேச்சுவாக்கில் யாராவது, “உனக்கு எத்தனப்பிள்ளைங்க?” என்று கேட்டால், “நாலு பயக,”என்று சிரிப்பார். அவருக்கு பிள்ளைகளில் வேறுபாடு இல்லை. இரண்டு தாத்தாக்களும் இன்று இல்லை. இரண்டு பாட்டிகளும் இருக்கிறார்கள். இருவருக்குமே பிள்ளைகள் மீது மாறுபாடு இல்லை.

 அகமும் புறமும் என்ற இந்தக்கட்டுரைத் தொடரை நான் மிகவும் எச்சரிக்கையுடன் புனைவிற்குள் செல்லாமல்  எழுதுகிறேன். உண்மை மனிதர்கள் நிறம் கொள்ளும் இந்தக் கட்டுரைகளில் வரும் மனித சுபாவங்களைக் கண்டு எனக்குமே வியப்பாக இருக்கிறது.

நாயுடை முதுநீர்க் கலித்த  தாமரைஎன்ற முதல் வரியில் தலைவி தன்னுடைய மன உணர்வை முழுவதுமாகச் சொல்லிவிடுகிறாள். அடுத்து வரும் வரிகள் அனைத்தும் உரையாடல் மட்டுமே. பழைய நீர்த்தேக்கம் என்று தன்னை கூறி அதில் மலர்ந்த தாமரையாக மகனை சொல்கிறாள். வலியும் எள்ளலும் மிக்க வரி.

நீர்நாய் விளையாடும்
பழைய நீர்த்தேக்கத்தில்
மலர்ந்துள்ள தாமரையின் 
உள்இதழ் போன்ற
உள்ளங்கைகளையும்,
மழலை பிதற்றும் வாயும்,
காண்பவர் விரும்பும்
தன்மையுடையவன்
நம் மைந்தன்.

அவன் தேர் ஓடும் வீதியில்
தனியே நிற்பதைக் கண்டு
இளையவள் ஒருத்தி பதறி
‘என் உயிரே வா’ என்றழைத்து
அணிகலன்கள் நிறைந்த
தன் மார்பில் அவனை
தழுவிக்கொண்டாள்.

மைந்தனை தேடிச் சென்ற
என்னைக் கண்டதும்
பதறினாள்.
மாசற்ற சிறு பெண்ணே 
எதற்கு பதறுகிறாய்?
நீயும் இவனுக்கு அன்னையே
என்றேன்.
மனதை மறைக்கத் தெரியாத
அவள் தலைகவிழ்ந்தாள்.
அந்த நிலையில் 
மைந்தனுடன் நின்றவளை
நான்
அணைத்துக் கொண்டேன்.
அருளும் அணங்கு தெய்வம்
 போன்ற அவள்…
உன் மைந்தனுக்கு, 
அன்னையாகும் தகுதி உடையவள்.

(தொடரும்…)

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button