இணைய இதழ் 121சிறுகதைகள்

புரியுது மேடம் – மனுஷி

மதிய உணவு சமைப்பதற்காகக் கண்கள் கசிய வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தேன். எனது பூனைக்குட்டிகள் இருவரும் கண்கள் பனிக்க நான் வெட்டிக் கொண்டிருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது…’ பாடல் ஒலித்தது.

பூனைக்குட்டிகள் மொபைல் ஸ்க்ரீனை ஒரு சேர எட்டிப் பார்த்தார்கள். ‘எடுத்துப் பேசுறியா…’ என்று கேட்டபடி யார் அழைப்பது என்று பார்த்தேன். செல்திரையில் பதிவு செய்யப்பட்ட பெயர் இல்லை. எண் மட்டும் இருந்தது. நம்பரைப் பார்க்கும்போதே புரிந்தது கம்பெனி கால்தான்.

           பிடித்தவர்களிடமிருந்து அழைப்பு வருவதைவிட, லோன் வாங்கிக் கொள்ளச் சொல்லி வரும் அழைப்புகள் அதிகம். நம்முடைய பொருளாதார முன்னேற்றத்தில் இவர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை என்று மனம் சலித்துக் கொண்டாலும், அந்த அழைப்பை நிராக்கரிக்க மாட்டேன். நமக்காக மெனக்கெட்டு போன் செய்யும்போது அவர்களை மதித்துப் பேசுவதுதானே முறை..

           அழைப்பை எடுத்து ‘ஹலோ’ சொன்னதும் சொல்லி வைத்தது போல் ‘வணக்கம் சார், …….. ஃபினான்ஸில் இருந்து பேசுறோம். லோன் டீடெயில் பற்றிக் கொஞ்சம் பேசலாமா?’ என்று அந்தக் குரல் பேசும். எதிர்முனையில் ஆண் குரல் இப்படிச் சொன்னால் ‘சொல்லுங்க மேடம்’ என்பேன். ‘பெண் குரல் கேட்டால் ‘சொல்லுங்க சார்’ என்பேன். சட்டென்று பதறியபடி ‘சாரி மேடம் லோன் டீடெயில் பற்றிச் சொல்லலாமா? என்பார்கள்.          

லோன் வேண்டாம் என்றாலும் காதில் வாங்காதவர்கள் போல, என் பெயரைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டபின், ‘உங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பர்சனல் லோன் அலாட் ஆகி இருக்கு மேடம்.. டாகுமெண்ட்ஸ் எதுவுமே கொடுக்க வேண்டாம். உங்களுக்கு ஓக்கேன்னா ப்ராசஸ் பண்ணிடலாம் மேடம். ஓக்கே என்றால் சொல்லுங்க டீடெயில் செக் செய்துட்டு அப்ரூவ் பண்ணிடலாம். 48 ஹவர்ஸ்ல உங்களுக்கு அமவுண்ட் கிரெடிட் ஆகிடும்’ – என்று ஒப்பித்துவிடுவார்கள். எவ்வளவு தொகை கிரெடிட் ஆகும், டாகுமெண்ட் சார்ஜ் எவ்வளவு, மாதம் எவ்வளவு ஈஎம்ஐ கட்ட வேண்டும் என்ற எல்லா தகவல்களைச் சொல்லி முடிக்கும் வரை காத்திருப்பேன். பிறகு, ‘இவ்ளோ காசை வச்சிட்டு நான் என்ன பண்றது தெரியல மேடம். இப்போ தேவைப்படல. தேவைப்படும்போது நிச்சயமாக நான் சொல்றேன்’ என்று சொன்னதும், ‘சரிங்க மேடம்.. தேவைப்பட்டால் நிச்சயமாகக் கூப்பிடுங்க’ என்றபடி அழைப்பு துண்டிக்கப்படும்.

           அப்படியொரு அழைப்பாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த அழைப்பை எடுத்து ‘ஹலோ’ சொன்னேன். எதிர்முனையில் ஆண் குர தான். ‘ஹலோ சார்’ என்று சொல்லவில்லை. அது ஒரு சின்ன ஆறுதல்.

           அவர் பணிசெய்யும் ஆன்லைன் வெப்சைட்டின் பெயரைக் குறிப்பிட்டு அவர் பெயரையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போதுதான் ஞாபகம் வந்தது. ஐந்து நாட்களுக்கு முன்பு தோழி ஒருவர் எனக்காக ஆன்லைனில் எனக்கொரு பிறந்தநாள் பரிசை ஆர்டர் செய்திருந்தார். சர்ப்ரைஸாக என்னை வந்து சேர வேண்டும் என்று நினைத்த தோழிக்குச் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டது அந்த ஆர்டர்.

           டெலிவரி தேதி தாண்டியும் பொருள் வந்து சேரவில்லை. பொருள் மிஸ்ஸிங் என அந்த வெப்சைட்டில் புகார் அளித்திருக்கிறார். அதற்கான அழைப்புதான் இது.

           ஏற்கனவே இப்படியொரு அழைப்பு வருமென தோழி சொல்லி இருந்தது நினைவுக்கு வரவே.. ‘சொல்லுங்க சார்…’ என்று சொன்னேன்.

           ‘மேடம்… நீங்க ஜூன் 15-ஆம் தேதி எங்க வெப்சைட்டில் கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கிங்க..’

           ‘ஆமா’

           ‘என்ன கம்ப்ளைண்ட் மேடம்?’

           ‘பார்சல் இன்னும் வரல சார். மிஸ்ஸிங் கம்ப்ளைண்ட் கொடுத்திருத்திருந்தோம்’

           ‘புரியுது மேடம். நான் செக் பண்ணி பார்க்கறேன்’

           எதிர் முனையில் சில நிமிட மௌனம். பிறகு..

           ‘ஹலோ மேடம்… நீங்க ஜூன் 5-ஆம் தேதி ஒரு ஹெட்போன் ஆர்டர் போட்டிருக்கிங்க. ஜூன் 10-ஆம் தேதி உங்களுக்கு டெலிவரி ஆகி இருக்கு மேடம்’

           ‘இல்ல சார். பார்சல் நான் வாங்கல. அதுக்காகத்தான் கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கேன்’

           ‘புரியுது மேடம். ஆனால் ஜூன் 10-ஆம் தேதி டெலிவரி ஆகி இருக்குனு அப்டேட் ஆகி இருக்கு மேடம்’

           ‘வரல சார். சரி பரவால்ல. டெலிவரி யார் கிட்ட கொடுத்தாங்க? அந்த டீடெயில் தர முடியுமா…?’

           ‘அது தெரியல மேடம். ஆனால், ஜூன் 10-ஆம் தேதி டெலிவரி ஆகி இருக்கு மேடம். சிஸ்டம்ல அப்டேட் ஆகி இருக்கு’

           ‘சார், டெலிவரி பர்சன் நம்பர் கொடுங்க. யார்கிட்ட கொடுத்தாங்க அப்படீனு கேட்டுக்கறேன்’

           ‘சாரி மேடம். அந்த டீடெயில் எங்க சிஸ்டம்ல இல்ல மேடம். ஆனால் ஜூன் 10 -ம் தேதி டெலிவரி ஆகி இருக்கு மேடம்’

           ‘உங்களுக்குப் புரியுதா இல்லையா சார்..? டெலிவரி ஆகல அப்படினுதான் என் கம்ப்ளைண்ட். நான் வாங்கல. ஒருவேளை டெலிவரி பண்ண வந்திருந்தால் என் நம்பருக்குக் கால் பண்ணி இருப்பாங்க. எனக்கு அப்படி எந்த காலும் வரல’

           ‘புரியுது மேடம். ஜூன் 15-ஆம் தேதி நீங்க கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கிங்க. ஜூன் 5-ஆம் தேதி நீங்கள் ஆர்டர் போட்ருக்கிங்க. ஜூன் 10- ஆம் தேதி டெலிவரி ஆகி இருக்கு. சிஸ்டம்ல அப்டேட் ஆகி இருக்கு மேடம்’

           அதுவரையிலும் என்னிடம் இருந்த பொறுமை என்னை விட்டுத் தள்ளிச் சென்றது.

           ‘சார்… ஆன்லைன் பேமெண்ட் பண்ணதால இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்லாதிங்க. டெலிவரி அப்டேட் பண்ணனும்னு யார்கிட்டயாவது கொடுத்துடுவிங்களா? கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன்ல ஆர்டர் போட்டிருந்தால் இப்படிப் பேசுவிங்களா?’

           ‘புரியுது மேடம்.. நீங்க ஜூன் 15-ஆம் தேதி கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கிங்க. ஜூன் 5 ஆம் தேதி…….’

           ‘சார், அதெல்லாம் தெரியுது. பார்சல் எனக்குக் கிடைக்கல. 1500 ரூபாய். ஆன்லைன் பேமெண்ட் பண்ணி இருக்கு. சும்மா இல்ல. பார்சல் யார்கிட்ட கொடுத்தாங்க. இல்ல டெலிவரி பண்ணது யாரு? இந்த டீடெயில் மட்டும் சொல்லுங்க. ப்ளீஸ்’

           ‘புரியுது மேடம். ஜூன் 10-ஆம் தேதி டெலிவரி ஆகி இருக்கு மேடம். சிஸ்டம்ல அப்டேட் ஆகி இருக்கு. அதைத்தான் சொல்ல முடியும்’

           ‘சார், உங்க சிஸ்டம்ல என்ன அப்டேட் பண்ணிருக்காங்கன்ற தகவலை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது? நான் ஆர்டர் பண்ண பொருளை யார்கிட்ட கொடுத்தாங்க அல்லது டெலிவரி பண்ண நபரோட போன் நம்பர் அவ்ளோதான் நான் கேக்கிறேன். உங்களுக்கு நான் பேசுற தமிழ் புரியுதா?’

           ‘புரியுது மேடம்.. டென்ஷன் ஆகாதிங்க. ஜூன் 10-ஆம் தேதி டெலிவரி ஆகி…..’

           ‘சார்… தயவு செய்து இதை நிறுத்துங்க. உங்களுக்கு நான் பேசுற தமிழ் புரியலையா..? உங்களுக்கு எந்த மொழியில் சொன்னால் புரியும்? சொல்லுங்க. இங்கிலீஷ்ல கேட்டால் புரியுமா…?’

           ‘அப்படியில்லை மேடம்… தமிழ் நல்லா தெரியும்..’

           ‘சார்.. நான் நிதானமா கேக்கறேன். இப்போ என் இடத்தில் நீங்க இருக்கிங்க. ஆன்லைன் வெப்சைட்டில் நீங்க ஒரு பொருள் வாங்கறிங்க. ஆன்லைன் பேமெண்ட்டும் பண்றிங்க.. ஆனால், டெலிவரி டேட் தாண்டியும் பொருள் வந்து சேரல.. அப்போ நீங்க இப்படித்தான் பேசுவிங்களா…?’

           நான் கோபமாகக் கத்துவதைப் பார்த்த என் பூனைக்குட்டிகள் மிரண்டு போய் என்னைப் பார்த்தர்கள். எனக்கே கொஞ்சம் விநோதமாய் இருந்தது. ‘இப்படிப் பேசுகிற ஆள் நீ இல்லையே?’ என்று உள்மனசு மெல்ல என் தோளைத் தட்டிச் சமாதானம் சொன்னது. எதிர்முனையில் மீண்டும், ‘புரியுது மேடம்… நீங்க ஜூன் 5-ஆம் தேதி ஆர்டர் பண்ணி இருக்கிங்க… ஜூன் 10-ஆம் தேதி ஆர்டர் டெலிவரி ஆனதா சிஸ்டம்ல அப்டேட் பண்ணி இருக்கு மேடம்…’

           எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். கோபம், எரிச்சல் தலைக்கு ஏறியிருந்தது. கண்களை மூடிக் கொண்டு நிதானமாக மூச்சை இழுத்து விட்டேன். உடலிலிருந்து கோபத்தின் ஸ்வாலை வெளியேறிச் செல்வதை உணர்ந்தேன்…

           ‘மேடம்,, வேற ஏதாவது டீடெயில் தேவையா?’

           மென்மையான குரலில் எதிர்முனையில் கேட்ட அந்தக் குரலைக் கேட்டதும் ஆழமாக மூச்சை இழுத்துவிட்ட பிறகு, ‘சார்.. நீங்க என்ன ட்ரை பண்றிங்க.. உங்க கம்பெனிக்கு விசுவாசமா இருக்கலாம். ஆனால், நான் கேட்கறது உங்களுக்குப் புரியலையா… இல்ல புரியாத மாதிரி நடிக்கிறிங்களா?’

           ‘புரியுது மேடம்.. ‘

           ‘தயவு செய்து இந்தப் புரியுது மேடம் மட்டும் சொல்லாதிங்க. எரிச்சலா இருக்கு…’

           எனது எரிச்சலான வார்த்தைகள் அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பதை அவரது அடுத்த ‘புரியுது மேடம்’ என்ற தன்மையான பதில் உணர்த்தியது.

           ‘சார்… தயவு செய்து இந்த வார்த்தையைச் சொல்லாதிங்க. உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரியல. அது எனக்குத் தெரிஞ்சுடுச்சி. ஆனா, கடைசியா கேக்கறேன். எனக்கு அமவுண்ட் பிரச்சினை இல்லை. ஆர்டர் பண்ண பொருள் வந்து சேரல என்பதும் பிரச்சினை இல்லை. ஆனால், ஒரேயொரு பதில் மட்டும் சொல்லுங்க… நீங்க இப்படியொரு சூழலில் என்னைப் போல கஸ்டமரா இருந்தால் என்ன செய்விங்க…? நீங்க ஆர்டர் பண்ண பொருள் வரல.. காசும் கட்டிட்டிங்க.. உங்களுக்குக் கோபம் வராதா.. இப்படித்தான் புரியுது மேடம்னு இருப்பிங்களா..? கூலாக இருப்பிங்களா..? இதுக்கு மட்டும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பதில் சொல்லுங்க.. வேற எதுவும் நான் கேட்கல’

           ‘புரியுது மேடம்… நீங்க ஜூன் 5 ஆம் தேதி….’

           ‘சார். நீங்க மனுஷனா ரெக்கார்டட் வாய்ஸா… எனக்குப் புரியல. 40 நிமிஷமா எப்படி உங்களால் ஒரே வார்த்தையைக் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிட்டே இருக்க முடியுது? உங்களுக்கு ட்ரெயினிங்ல இப்படித்தான் இருக்கச் சொல்லி பயிற்சி கொடுத்தாங்களா? கம்பெனிக்கு இவ்ளோ விசுவாசமா இருக்கிங்க. மனசாட்சிக்கு உண்மையா இருந்து வேலை பார்க்க மாட்டிங்களா?’

           என் வாழ்க்கையில் இவ்வளவு கோபமாக, உச்சஸ்தாயியில் இப்படி யாரிடமாவது பேசியிருப்பேனா என்று தெரியவில்லை. அப்படிக் கத்தியபடிக் கையில் இருந்த வெங்காயத்தைச் சுவற்றில் வீசி எறிந்தேன்.

           அருகில் இருந்த பூனைக்குட்டிகள் பயந்து வெளியில் ஓடி விட்டார்கள்.

           தொண்டை கம்மியது. கண்களில் நீர் பெருகியது. அது கோபம்தான். நான் பேசுற தமிழ், தமிழ் தெரிந்த ஒரு நபருக்குப் புரியவில்லையே என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடு அது. முகம் தெரியாத நபரிடம் இப்படிக் கோபப்படுவது குறித்த குற்றவுணர்வும் கூட உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது.

           எதிர்முனையில் மீண்டும்.. ‘புரியுது மேடம், நீங்க ஜூன் 5 ஆம் தேதி ஆர்டர்….’ என்று ஆரம்பித்ததும், ‘சார், தப்பா எடுத்துக்காதிங்க. இவ்ளோ நேரம் நான் மனுசன்கிட்ட பேசுறேன்னு நினைச்சு கோவப்பட்டுட்டேன்.. நீங்க நல்லா ட்ரெயின் செய்யப்பட்ட மெஷின்னு இப்போ புரியுது… 40 நிமிஷம் பேசுனது வேஸ்ட். நீங்க எனக்கு எந்த டீடெயிலும் தர வேண்டாம். போதும்….’

           சொல்லிக் கொண்டிருக்கும்போதே… ‘புரியுது மேடம்…’

           ஜென் மனநிலையில் அழைப்பைத் துண்டித்தேன்.

-anangumakal@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button