
மின்னலொன்று உன் முகத்தை
வரைந்து செல்கிறது
இன்னும் வேகமாய்த் துடிக்கிறது இதயம்
அடுத்த மின்னலுக்கு
உன்னிடம் வந்து சேர்ந்திட…
இந்த மழை
உன் நினைவுகளைப் பொழியத் தொடங்குகிறது
உன் நினைவுகள் விழ விழ
இன்னும் வெகு நேரம் பிடிக்கிறது
இந்தப் பயணம்.
***
ஒவ்வொரு முறையும் வந்து செல்லும்
காட்டாற்று வெள்ளத்தைப் பற்றி
எண்ணற்ற
அபாயக் கதைகளைச்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்
இறுதிவரை
தன் மெளனத்தை
இறுகப் பிடித்திருக்கிறது
எல்லாம் தெரிந்த ஒரு பாறை.
***
குளத்தின் மேலெழுந்த சலனம் போல்
ஆழ்ந்த மெளனத்தின்
கரையை முட்டித் ததும்புகிறது
எங்கிருந்தோ ஒரு பறவை எழுப்பிய ஒலி.