
உன்னதப் பெருவெள்ளம்
என்னைத் துண்டு துண்டாய் வெட்டி
திசைக்கு ஒன்றாய்
நீ வீசியிருந்தால் கூட
எல்லையைக் காக்கும்
காவல் தெய்வம் போல
எல்லாத் திசையிலும்
உன்னையே காத்து நின்றிருப்பேன்.
யாரோ ஒருவரை ஏவி
நம் அந்தரங்க நிமிடங்களால்
என் உணர்வை லேசாகக் கீறினாய் அல்லவா?
அப்போது முடிவு செய்தேன்
உயிரே பிரியும் இடரில் நீயிருந்தாலும்
பாழடைந்த கோவிலின்
சாதாரண கற்சிலையாய்
நின்றிருந்தாலே போதுமென!
***
முறிந்து விழவிருக்கும் கிளைகளிலேயே
கூடு கட்டும் பறவை நான்
இழப்பிற்கும் விபத்திற்கும்
வித்தியாசம் தெரியாது
யாரோ பிடித்து
றெக்கையைக் கத்தரித்து
கூண்டிலடைப்பதை விட
சந்ததிகளற்று இருப்பதே உத்தமம்.
***
எஞ்சியிருக்கும் நாட்களில்
மிஞ்சியிருக்க ஒன்று வேண்டுமெனில்
ஆர்ப்பரிக்கும் உனதிரு கண்களை
அடக்கியாளும் என் முத்தங்களுக்கு
ஆட்சேபனை ஏதுமின்றி
அடிபணிந்தே நின்றால் போதும்
என் ஆருயிரே!
***
கரை தொடும் அலைகளுக்குத்
தெரியவா போகிறது
கரையின் கலக்கம்?
இருந்தும் இடைவிடாது ஆற்றித் தேற்றுகின்றன
அனாதையாய் அலையும்
ஆர்ப்பரிக்கும் அலைகள்.