இணைய இதழ் 106சிறுகதைகள்

ஆசையே (துன்பத்திற்கு) தின்பதற்குக் காரணம் – உஷாதீபன்

சிறுகதை | வாசகசாலை

ப்ளு பாக்கெட் ஒண்ணையும், கிரீன் பாக்கெட் ஒண்ணையும் தனித் தனியாக் காய்ச்சியிருக்கேன்…. – படுக்கையை விட்டு எழுந்த மல்லிகாவிடம் முதல் செய்தியாக எச்சரிக்கையாய் இதைக் கூறினேன்.

          எதுக்கு ரெண்டு பாத்திரம்? ஒண்ணாவே காய்ச்சலாமே? அந்தம்மா பாத்திரம் கூடித்துன்னா அலுத்துக்கும்… என்றாள் சடைத்துக் கொண்டு.

          ஒண்ணு முந்தா நாள் வாங்கினது. இன்னொண்ணு நேத்திக்கு வாங்கினது. ரெண்டையும் கலந்து காய்ச்சினா திரிஞ்சி போயிடுமே…! நேத்துத்தான் ஒரு நஷ்டத்துலர்ந்து மீண்டிருக்கேன்…திரும்பவுமா?-என் எச்சரிக்கை அவளுக்கு மேலும் அலுப்பு மூட்டியதோ என்னவோ?

          ஆம்மா…பெரிய நஷ்டம்தான்….கவனக் குறைவாக் காரியம் பார்த்தா அப்டித்தான் ஆகும்…! – மறை பொருளாய்த் திட்டுகிறாளோ? சுருக்கென்றது எனக்கு.

          அது கவனக் குறைவில்லே…பிசகு…விரல் பிசகிடுத்து…அது இன்னைக்கும் திரும்பிடக் கூடாதேன்னுதான் இப்படிச் செஞ்சேன்…தனித் தனியாக் காய்ச்சக் கண்டுதான் திரியாமப் பொங்கினது…நிம்மதியாப் போச்சு…சேர்த்துக் காய்ச்சி, ஒண்ணுக்கொண்ணு சேராம, ஒத்துப் போகாம, திரிஞ்சா ரெண்டு பாக்கெட் வீணாகியிருக்குமே? அதக் காப்பாத்தியிருக்கேனே…அம்பது ரூபாய்ங்கிறது சாதாரணமாப் போச்சா என்ன? – பால் பாக்கெட்டை ரூபாயில் கணக்கிட்டுச் சொன்னான் அர்ஜூனன்.

          பெரிய தொகைல கோட்டை விட்டாச்சு…இந்தப் பிச்சக் காசுலதான் வந்ததாக்கும்?

          இந்த பாரு….கோட்டை விட்டது அது இதுன்னு அநாவசியமாச் சொல்லாதே…எல்லாம் சரியாயிடும்…கொஞ்சம் டைம் எடுக்குது…அவ்வளவுதான்….

          நீங்கதான் சொல்லிக்கணும்…நம்மள மாதிரியே எதிராளியும் நல்லவங்களா இருப்பாங்கன்னு நினைச்சா…நினைச்சிட்டே இருக்க வேண்டிதான்…இப்போ அவன் அந்தப் பணமே எனக்குக் கிரடிட் ஆகலைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்களாம்?

          மெல்ல மெல்ல விஷயத்திற்கு வருகிறாள் என்று தெரிந்தது. நானே ராத்தூக்கம் இல்லாமல் அல்லாடி, புரண்டு புரண்டு பொழுது விடிந்து போக மொபெலை எடுத்து விடாமல் இணுக்கிக் கொண்டிருக்கிறேன். இதில் இவள் வேறு வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறாள்! சொன்னது போல் பணம் அவனுக்குக் கிரடிட் ஆனதற்கு ஒரு தகவல் தரலாமே…வரலையே?

          பாழாய்ப் போன இந்த ஃபோனில் என்னென்னவோ மெஸேஜ் வருகிறது. நான் எதிர்பார்க்கும் அதைக் காணவில்லை. ராத்திரி பதினோரு மணிக்கு மேல் நெட் பாங்கிங்கைத் திறந்து அதிலும் பார்த்து விட்டேன். தொகை டெபிட் ஆனதோடு நிற்கிறது. திரும்பவும் கிரடிட் ஆகவில்லை. அட கண்றாவியே…எப்பத்தான் ஆகும்? இப்படியா ஒருத்தன் கோட்டை விடுவான்? நிமிஷமா அமௌன்ட் இறங்கிப் போச்சே…! என்னையே நான் நொந்து கொண்டேன்.

          அவருக்கு, அந்த எதிராளிக்கு அனுப்பிய வாட்சப் மெஸேஜைப் பார்த்தேன். நான் அனுப்பியது அப்படியே இருந்தது. தகவல் வந்ததற்கு ஆறுதலாய் ஒரு மனுஷன் பதில் தர மாட்டானா? என்னவென்று நினைப்பது? அனுப்பியவனை தாமரை இலைத் தண்ணியாய் இப்படித் தவிக்க விடுவதில் ஒரு திருப்தியா? மனிதர்கள் சராசரியாகவே குரூரமானவர்களா? அல்லது சமயா சமயங்களில் அது அடி ஆழத்திலிருந்து வெளிப்படுகிறதா? அழவிட்டுப் பார்ப்பதில் ஒரு திருப்தியோ?

          நோ..பிராப்ளம் சார்….வந்ததும் நான் ரீ கிரடிட் பண்ணிடுறேன்… – இவ்வளவுதானே…இதைச் சொல்ல வலிக்கிறதா? அல்லது யோசிக்கிறானா?

          ன் புத்திய செருப்பால அடிக்கணும்….ஆச…ஆச…நாக்க அடக்க முடியாத ஆசை…யார் உன்ன அங்க போய் நிக்கச் சொன்னது? வண்டியை எடுத்தமா, ஸ்டாப்புல போய் நின்னமா, ஸ்கூல் பஸ் வருதா, பேரனக் கூட்டிட்டு வீடு வந்தமான்னு இருக்க வேண்டிதானே…! இடைல அங்கென்ன ஒரு ஷன்டிங்? திங்கணும்…எதையாச்சும் வாங்கித் திங்கணும்…அதுலயும் குறிப்பா இந்நேரம் அவன் போளி போட்டிட்டிருப்பான்…அத வாங்கிச் சாப்டாகணும்…அந்த ருசிய நாக்குல ஏத்தியாகணும்…அதானே…? சரி …ஏத்து…எப்டியோ தொலை…உடம்பக் கெடுத்துக்கோ…இன்னும் கொஞ்சம் ஷூகர ஏத்திக்கோ…யார் வேண்டாம்னது…அப்புறம் அதுக்கும் மாத்திரை சாப்பிடு…இந்தக் கைல ஸ்வீட்…இந்தக் கைல மாத்திரை….நல்லா விளங்கும்…ஒரு நாளைக்கு கிட்னி ஃபெயிலியர்னு வரப்போகுது…இன்சுலின் போட்டாகணும்னு ஆகப் போகுது…அப்பயாச்சும் புத்தி வருமா? அதுவரைக்கும் நீ நிறுத்த மாட்டே…இல்லே? அப்டியென்ன தீனிப் ப்ரீதி? தின்னதுதான் தின்னே…காசை உருவி விட்டெறிய வேண்டிதானே? எதுக்குக் கார்டு போட்டே? காசைக் கொடுத்திருந்தா இப்போ இந்த வம்பு உண்டா? கணக்குத் தீர்ந்திருக்குமே…இப்போ படுற மன உளைச்சலும் இல்லாமப் போயிருக்குமே?

          தனக்குத்தானே எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டார் அர்ஜூனன். அந்தளவுக்கு அவர் இனிப்பில் விருப்பம் உள்ளவர் இல்லையாயினும், மோகம் கொண்டவர் அல்ல என்றாலும், அப்பப்போ அது துளிர் விடுதே…! அதைக் கட்டுப்படுத்த முடியலையே…? என்னிக்கோ ஒரு நாளைக்கு சாப்பிடுறோம்…என்ன வந்திறப் போகுது?.. மனசு அலட்சியப்படுத்துதே? அப்டீத் தொட்டுத் தொட்டுத்தான் எல்லாமே எகிறும்…விரலைப் பிடிச்சுக் கூட்டிண்டு போயி சாவு நுனில நிறுத்திடும்…! சுதாரிக்க வேண்டாமா? வயசாகி என்ன பண்ண? கூர் கெட்டுப் போயாச்சு…அதானே?

          போன வாரம் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தமே…அங்க கவனிச்சியோ…?

          என்ன? …நான் எதையும் சரியாக் கவனிக்கலே…ஏன்னா அன்னிக்கு எனக்கு ஒரே தலைவலி…. …நெருங்கின உறவாச்சே…போகாம இருக்கக் கூடாதேன்னுதான் வந்தேன்…எப்படா முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து படுக்கைல விழப்போறம்னு ஆயிடுத்து எனக்கு….என்ன சொல்லுங்கோ… – மல்லிகா அக்கறையோடுதான் கேட்டாள் அன்று.

          சின்னச் சித்தப்பா பையன் ரகுவரன் இருக்கானே…அவன் என்னமா ஸ்வீட் சாப்பிடுறான் பார்த்தியோ…? அநியாயத்துக்கு?

          அவன் சாப்பிடுறதை நீங்க கவனிச்சிட்டே இருந்தீங்களாக்கும்? பாவம் கண்ணு பட்டுருக்கப் போறது…நன்னாச் சாப்பிடட்டுமே…அவங்க வயித்துக்கு அவங்க சாப்பிடுறாங்க…நமக்கென்ன வந்தது? ஒருத்தர் சாப்பிடுறதையோ, தூங்குறதையோ கூர்ந்து பார்க்கிறது தப்பாக்கும்….!

          அதுக்கில்லடி…அந்த பூசணிக்கா அல்வாவை..அதுதானே…இல்ல பன் அல்வாவா…? எத்தன தரம்தான் வாங்கிப்பான்…? முதல்வாட்டி இலைல போட்டுட்டுப் போறாங்கல்ல..அதுவே அளவாத்தான் இருக்கு…ஷூகர் உள்ளவங்க அதைக் கூடத் தொடக் கூடாதுதான்…இப்போ எப்படி நீ வள்ளிசா ஒதுக்கிடுறே…? உன் திடம் யாருக்கும் வராது. அத விடு…போனாப் போகட்டும்னு நான் அன்னிக்கு சாப்பிட்டு வச்சேன்னு வச்சிக்கோ…ஆனா பாரு…ரகுவரன்…அவன் தம்பி ரெண்டு பேரும்னு மூணுவாட்டி கூப்பிட்டு கூப்பிட்டு வாங்கி வளைச்சு வளைச்சு அடிக்கிறாங்கடி…! ரெண்டு ரெண்டு கரண்டி… சாதம் சாப்பிடுற மாதிரியா ஸ்வீட்டைச் சாப்பிடுறது? அப்புறம் எப்படி ரகுவரனுக்கு ஷூகர் குறையும்? அந்தப் பசங்களுக்கும் என்ன நிலமையோ? கால் வீங்கிக் கிடக்கு…வேட்டியைத் தூக்கிக் காட்டறான். மூஞ்சியும் கன்னமும் கழுத்தும் அன்ஷேப்டா இருக்குங்கிற பிரமையே அவனுக்கு இருக்கிற மாதிரித் தெரிலயே…? ஒரு மனுஷனுக்கு தன்னைப் பத்தின, தன் உடம்பைப்பத்தின பிரக்ஞை வேண்டாமா? இருந்தா இருக்கு, போனாப் போறதுங்கிற மாதிரி தின்னு தீர்த்தா? அவஸ்தை யார் படுறது? அவந்தானே பட்டாகணும்….? யாராச்சும் சொல்ல மாட்டாங்களா அவனுக்கு?

          ஏன் நீங்கதான் சொல்றது…உங்க தம்பிதானே? கேட்டுக்க மாட்டாரா? – விடாமல் பிடித்தாள் மல்லிகா.

          ஒருத்தர் விரும்பிச் சாப்பிடுற போது எப்டிறி சொல்றது? அவன் வயசுக்கும், உடம்புக்கும் அவனுக்கே தெரிய வேண்டாமா? அவுக்கு அவுக்குன்னு அப்டியா ஸ்வீட்டை கவளம் கவளமா உள்ளே தள்ளுவாங்க….? அவன் திங்கிறதைப் பார்த்தா…நாளைக்கு இருக்கமோ இல்லையோ…கிடைக்குமோ கிடைக்காதோ….இன்னைக்கே எல்லாத்தையும் வேணுங்கிற அளவு தின்னு முடிச்சிடுவோம்ங்கிற மாதிரி இருக்கு….! ஒரு பொது எடத்துல பக்கிப்பய மாதிரியா நடந்துக்கிறது? எத்தனை பேர் கவனிச்சிட்டிருந்தாங்களோ…? அநாகரீகம் பிடிச்சவனுங்க…

          நீங்க ஒருத்தர் போறாதா? இதுக்கு மேலே யார் சொல்லணும்…நினைக்கணும்? ஐயோ பாவம்…! அவருக்கு என்ன பசியோ….?

          இதென்னடி நீ சொல்றது பெரிய கூத்தா இருக்கு? பசிக்கு சோறுதான் சாப்பிடுவாங்க வயிறு முட்ட…ஸ்வீட்டை அள்ளிக் கட்டினா?

          அட ராமச்சந்திரா…போதுமே உங்க வியாக்கியானம்? நீங்க ஒருத்தரே போறாதா அவருக்குக் கண்பட? பாவம் நன்னாயிருக்கட்டும்…அவர் பொண்டாட்டி காயத்ரீ இருக்காளே…தங்கமானவ….அவ குணம் யாருக்கும் வராது….அவளப் பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க…அத்தனை முகராசி…அந்தக் கொடுப்பினை இருக்கே அவருக்கு…அதுவே அவரைக் காப்பாத்தும்….விடுங்கோ இந்தப் பேச்சை….!!

          சுயப் பிரக்ஞைக்கு வந்தான் அர்ஜூனன். அநிச்சையாக மொபைலை நோண்டியது விரல். அட கண்றாவியே…ஒண்ணையும் காணமே….? இவனுக்கு எப்பக் கிரடிட் ஆகி அவன் எப்ப நமக்கு டிரான்ஸ்பர் பண்றது? அமௌன்ட்டே வரல்லியேன்னு சொல்லிட்டான்னா? பயம் வந்தது மனதில்..

          அதெப்படிச் சொல்வான்? அவன் கடை மிஷின்தானே? அவன் கணக்குக்குத்தானே வச்சிருக்கான். இங்க டெபிட் ஆச்சின்னா அவன் கணக்குக்குத்தானே டைரக்டாப் போய்ச் சேரும்….எனக்கு மெஸேஜ் வந்திடுச்சே…அப்போ அவனுக்கும் போய்ச் சேர்ந்துதானே இருக்கணும்?

          சார்…நெட் பாங்கிங்னா அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள போயிடும். இந்த மாதிரி டெபிட் கார்டு மெஷின்ல போட்டது உடனே போகாது. இன்னைக்கு ராத்திரி ஆகும். நாளைக்குக் காலைலதான் உங்களுக்கு தொகை திரும்ப வந்து சேரும்….

          கடைக்காரர் சொன்னது இவரை உலுக்கியது. அப்போ இன்னிக்கு ராத்திரித் தூக்கம் போச்சா? சாதாரணமாவே புரண்டுட்டே இருக்கிற ஆளு நான்…இப்போ இதுவேறே சேர்ந்திடுச்சா? சொல்லவே வேண்டாம்….

          ஒரு தூக்க மாத்திரை வேணும்னா போட்டுக்கிறீங்களா? டாக்டர் எனக்கு எழுதிக் கொடுத்தது இருக்கு…மைல்டு டோசேஜ்தான். …

          ஏண்டீ…நீ வியாதிக்காரியா இருக்கிறது பத்தாம என்னை வேறே அப்படி ஆக்கப் பார்க்கிறியா? ஆசையாயிருக்காக்கும் நானும் ஸ்லீப்பிங் டோசேஜ் போடணும்னு?

          யப்ப்ப்ப்பா….உங்ககிட்டே வாயைக் கொடுக்கவே கூடாது. எப்டியோ போங்க…எனக்கென்ன வந்தது? அந்தக் காசு வந்தா என்ன வராட்டா என்ன? உங்க பென்ஷன்…உங்க பணம்….யாரு கேட்க முடியும்?

          மூஞ்சியையும் உடம்பையுமே சடாரென்று திருப்பிக் கொண்டு படுத்து உறங்கி விட்டாள். கொடுத்து வச்சவ…என்னமாத் தூங்குறா சட்னு?

          அவளைப் பார்த்துக் கொண்டே படுத்துப் புரண்டு கொண்டிருந்த எனக்கு பொழுது விடிந்தே போனதுதான் மிச்சம்.

          ரபரப்போடு எழுந்தவுடன் கை மொபைலை நோக்கிப் போனது. அந்த நெனப்புலதான் தூங்கவேயில்லையே? எப்போதுமே ராத்திரியில் அதை ஆஃப் பண்ணி வைத்து விடுவது என் பழக்கம். பக்கவாட்டுப் பின்னை அழுத்தி அதைக் கண் திறக்கச் செய்ய வேண்டும். அந்தப் பின்னோ தேய்ந்து போயிருந்தது.

          அதை மாற்றணும்னா எப்டியும் ரெண்டாயிரம் கேட்பான்பா…அசல் கிடைக்காது. ட்யூப்ளிகேட்தான் போடுவான். அதுக்கே அந்தக் காசு ஆகும். கொடுத்துட்டுப் போங்கம்ப்பான். அதனால எல்லாத்தையும் முதல்ல பேக் அப் எடுக்கணும். எடுத்து சிஸ்டத்துல வச்சிட்டு எம்டியாக் கொண்டுதான் பின் போடக் கொடுக்கணும். மொபைல்ல எந்த டீடெய்ல்சும் இருக்கக் கூடாது. புதுசா வாங்குற போது எப்டியிருக்குமோ அப்படித்தான் கொண்டு கொடுக்கணும். இல்லன்னா என்னமாச்சும் நடந்து போக வாய்ப்பிருக்கு. ஏன்னா மொபைல் பாங்கிங்லாம் நீ அதுல வச்சிருக்கே…ஜி.பே. வச்சிருக்க…நோட்சுல பலதும் குறிச்சி வச்சிருக்க…அத்தனையும் பார்த்தானுங்கன்னா…எவனாச்சும் திருட நினைச்சான்னா மொத்தமும் காலி….அப்புறம் லபோ திபோன்னு கத்திப் பிரயோஜனம் இல்ல….சைபர் கிரைம்லாம் போனாலும் போனது கிடைக்கும்ங்கிறது நிச்சயமில்ல…புரியுதா?

          பையன் சொன்னதில் அரண்டு போய் வேண்டவே வேண்டாம். பின்னும் மாத்த வேண்டாம். ஒண்ணும் மாத்த வேண்டாம்…என்று சொல்லி நகத்தால் அழுத்துவதை ஒரு தலைவாரும் சீப்பு நுனியால் அழுத்தி அழுத்தி…கிர்ர்ர்….என்று உணர்ந்தவுடன் கொஞ்சம் கழித்து ஃபோன் திறக்க…என்னவோ வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் நான்.

எதெதற்குத்தான் பயப்படுவது இந்தக் காலத்தில்? அன்றாட வாழ்க்கையே பயமாகி விட்டது இப்போது. பஸ்ஸில் போனால் ஃபோனைப் பத்திரப்படுத்துவதே பெரும்பாடாய்ப் போகிறது. ஓசி பஸ், அதாவது மூன்று மாத சீனியர் சிட்டிசன் பாஸில் ஏறி உட்கார்ந்தால் அங்கே இல்லாத வில்லங்கம் அத்தனையும் உள்ளது. பர்சைப் பத்திரப்படுத்துவதா அல்லது ஃபோனைப் பார்ப்பதா? அட…இந்த ஃபோன் எதற்கு ஒரு சுமையாய் என்று வீட்டிலாவது வைத்து விட்டுப் போக முடிகிறதா? எங்காவது தலை கிறுக்கிக் கீழே விழுந்தால்…சொல்லவாவது உதவுமே (எவனாவது அப்போது அதைத் திருடாமல் இருந்தால்..!) நம்மை மறந்து உறங்கி அல்லது கவனப் பிசகாய் பர்சைப் பறிகொடுத்தால் இதில் ஃபோன் பண்ணித் தகவல் சொல்லலாமே?

உலகம் எந்தன் கைகளிலே…உருளும் பணமும் பைகளிலே…யோசிச்சுப் பார்த்தா நானே ராஜா…கிழட்டுப் பருவம் கிடைப்பது லேசா…? தள்ளாட்டம், திண்டாட்டம் எல்லாமும் இங்கேடா….குண்டூஊஊஊ…..! ஆண்டவன் படைச்சான்…எங்கிட்டக் கொடுத்தான்…அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்…-என் வயதுக்கேற்ற பாடலாய் இப்படித்தானே நான் பாடியாக முடியும்? கொஞ்சமாவது நகைச்சுவை உணர்வு வேணுமே வாழ்க்கையில்.

மொபைலைத் திறந்தேன். அட…ஒரு புது மெஸேஜ். Rs. 48015 Credited to your S.B. A/C………CLR.Balance is Rs……….

ஆஹா…அற்புதம்…ரூ.48500 க்கு 485 கழித்தது போக மீதி….அப்படியே என் கணக்கில் மறுபடி சேர்ந்திருந்தது.

வெளியே நோக்கினேன். கதிரவன் கண கணவென்று தன் கதிர்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தான். உலகம் விழித்துக் கொண்டிருந்தது.

ரூ.485 ஆ? அவ்வளவா ஆயிடுச்சி?…அப்டி என்னென்ன வாங்கினோம்?

நூறு கிராம் அதிரசம், நூறு கிராம் முனவரம், நூறு கிராம் மிக்சர், நூறு கிராம் ஓமப்பொடி, நூறு கிராம் காரச்சேவு, நூறு கிராம் ரிப்பன் பக்கடா…ரெண்டு தேங்காய் போளி, ரெண்டு பருப்பு போளி….? -விட்டு விளாசு…மகனே! வீட்டுல எல்லாரும் சந்தோஷமாச் சாப்பிடட்டுமே…! எனக்கு மட்டுமா இது? அப்டியா வாய்ல ஜொல்லு வழிய நிக்கிறேன்?

ஆயிருக்கும்…ஆயிருக்கும்…இத்தனை ஐட்டம் வாங்கியிருக்கமே…பின்ன ஆகாதா? – என்னை நானே மனக்கணக்குப் போட்டு சமாதானம் செய்து கொண்டு மல்லிகாவிடம் சென்று மொபைல் செய்தியை நீட்டினேன்.

பார்த்தியா…என்னவோ நாமம்தான்னு சொன்னியே…? இப்ப என்ன சொல்றே? – வீராவேசமாய்க் கேட்டேன்.

அதெல்லாம் ஏமாத்த மாட்டாங்கடி…அந்தக் கடை ஆளுதானே அமௌன்ட்டை ப் போட்டான். 485 ன்னு போட்டு ஒரு புள்ளி வைக்காமே ரெண்டு சைபரைப் போட்டுட்டான். அது சட்டுன்னு 48500 ஐ இறக்கிடுத்து…

வந்திரும் சார்…ஒண்ணும் பிரச்னையில்லன்னு பத்துத் தரம் சொல்லிட்டான். எனக்குத்தான் சமாதானம் ஆகலை. நீ வேறே பயமுறுத்தி விட்டுட்டே…! எனக்குக் கிரடிட் ஆகலைன்னு அவன் சொன்னா என்ன பண்ணுவீங்கன்னு…? இன்னும் உலகம் அவ்வளவு மோசமாகலைடீ….நீ ஒரேயடியா அவநம்பிக்கைப் படுறே…மனுஷங்கள்ல இன்னும் பல நல்லவங்க இருக்கத்தான் செய்றாங்க…அதனாலதான் இந்த அளவுக்காவது மழை பெய்யுது இன்னும்…அதை நினை…!!

கை தவறுதலா நடந்தது இது. அதுவும் அவன் கடை ஆளு போட்டது. நாமளா போட்டோம். நான் பின் நம்பரத்தான் போட்டேன். தொகை போட்டது அவன். தரலன்னா விட்ருவனா…? கடையை அடிச்சி நொறுக்கிட மாட்டேன்….?

ஆமா…கிழிச்சீங்க..!!- என்றாள் மல்லிகா. அது தொகை மீள வந்ததில் ஏற்பட்ட மனதுக்குள்ளான மகிழ்ச்சியில் எழுந்த அர்ச்சனை.

இப்போது எனக்கும் அது குளிர்ச்சியாகத்தான் இருந்தது.

ushaadeepan@gmail.com  

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button