
வருணதேவன்
வாய்திறந்து கொட்டுகிறானே
வழியெங்கும் வெள்ளமாய்.
வாடும் பயிருக்குத்
தனைவிட்டால் யாருமில்லை
என்றெண்ணி அவ்வப்போது
மறக்காமல் பெய்கிறது
இந்த மாமழை.
இதுபோன்று பெய்தால்
இனியதுதான்.
விரைவில் நின்றுவிடும்.
தூளியை ஆட்ட ஆட்டத்
தூங்காமல் சிணுங்கும்
சிறு குழந்தையாய்
வரும் தூறல்கள்தாம்
எப்போதும் தொல்லை
ஒதுங்கவும் இடமின்றி
ஓடவும் இயலாமல்
ஒண்டிக்கொண்டு
அல்லல்படும்
நொண்டி ஆட்டுக்குட்டிதான்
கண்முன் நிற்கிறது.
***
சிரிப்பு
என் அம்மா அதிகமாகச்
சிரிக்கமாட்டாள்
அவர் சிரித்து
நான் பார்த்தது இல்லை
தொலைக்காட்சி நகைச்சுவைகள்
அவருக்குத் துளி கூடச்
சிரிப்பை வரவழைக்காது
என் அப்பா மிகவும்
சத்தம் போட்டுச் சிரிப்பார்
என் அண்ணனோ
எப்பொழுதும் புன்சிரிப்புதான்
அக்காவோ
ஆடிக்கொண்டே சிரிப்பாள்.
தாங்க இயலாமல்
ஒருமுறை கேட்டதற்கு
அம்மா சொன்னார்
“நான்தான் சிரிப்பா
சிரிக்கறேனே போதாதா?”
***
சிட்டுக்குருவி
உன்னுடைய உடைகள்
கொடியில் தொங்கி
என்னைக்
கோபப்படுத்துகின்றன
ஆறு மாதங்களுக்கு முன்
அலங்கரிக்க வாங்கி வந்த
அந்தப் பூ ஜாடி
மலரின்றி வாடி
அனாதையாக அழுகிறது
பேருந்தின்
சன்னல் கம்பியில்
என் கை மேல் உன்
விரல்களை அழுத்தமகாப்
பதிந்து ஆறுதல் சொன்னாயே
அது எவ்வளவு நாள்தான்
தாங்கும்?
நீ அறிவாயா?
சிட்டுக்குருவி போல்
விரைவாய்ப் பறந்து வா!