
தினம் உண்கிறோம். ஆனாலும், பசிப்பது நிற்கவில்லை. பசி என்பது நம் செயலை, நம் ஊக்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதன் அபத்தம் நமக்கு உரைப்பதே இல்லை. எத்தனை தின்றாலும் அடுத்த வேளை பசிக்கிறது. பசித்த நொடி நாம் அதைப் பற்றியே யோசிக்கின்றோம். அதை அடக்க வழிகளை எண்ணி எண்ணி மாய்கின்றோம். இந்த பசி மட்டும் குறைந்தால் போதும்; இனி வேறு எதுவும் தேவையில்லை என்றே நினைக்கின்றோம். உணவு கிடைத்து பசி அடங்குகிறது. ஆனால், மீண்டும் பசிக்கின்றது. இந்த சுழல் மனிதன் தளர்ந்து படுக்கையில் அடங்கும் வரை நிற்பதேயில்லை.
பசித்த மானிடத்திலும் இது போன்ற பசியைத்தான் நாம் காண்கின்றோம். அது பேசுவது இரண்டு பசிகளைப் பற்றியது. ஒன்று காமம், மற்றொன்று அதிகாரம். இது இரண்டும் காடியஸ் கொம்பின் பாம்புகளை போல் மேல் கீழாக பிணைந்து இரு மனிதர்களிடம் வெளிப்படுவதே பசித்த மானிடம்.
காமத்தின் குறியீடாக வெளிப்படுவது கணேசனின் வாழ்க்கை. கணேசன் காமத்தை தேடி அலையவில்லை. ஆனால், காமமே அவன் வாழ்க்கையை நடத்துகிறது. ஆண்கள், பெண்கள் என்று பால் பேதமின்றி அனைவரும் அவன் மேல் காமம் கொள்கின்றனர். கணேசனும் காமம் அற்றவன் அல்ல. பெரு வியாதி வந்து உடல் தேய்ந்த போதும் அவனுக்கு ஆஸ்பத்திரியின் சேவை செய்யும் சகோதரிகளின் உடலே கிளர்ச்சி தருகிறது. இதை இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால், அவனின் வாழ்க்கையில் அவன் கண்ட பாசம், வாத்தியார் தந்ததை தவிர்த்து, அனைத்தும் அவனுக்கு காமத்தின் வழியாகவே கிடைக்கின்றது. சங்கரியின் மடத்தில் இருந்து அவனை வாத்தியாரிடம் சேர்க்கும் ராயர், ரௌத், அதன் பின் செட்டியார், சுந்தரி, டாக்டர் என்று அனைவரும் அவனிடம் காட்டும் அன்பு காமத்தின் காரணமாகவே வெளிப்படுகின்றது.
அதே போல அதிகாரத்தின் குறியீடாக வெளிப்படுவது கிட்டாவின் வாழ்க்கை. கிட்டா அதிகாரத்தை தேடி அலைகிறான். அவன் வாழ்வின் ஆரம்பத்தில் சந்திக்கும் அவமானங்கள் அவனுக்கு அதிகாரத்தை விட மேலான ஒன்று இல்லை என்பதையே போதிக்கின்றது. பணம், காமம், உறவுகள் அனைத்தும் அவனுக்கு அதிகாரத்துக்கான ஒரு கருவியாகவே பயன்படுகின்றன. அவன் வாழ்க்கையில் காமம் அதிகாரத்துக்கு சவால் விடவோ, அல்லது அதிகாரத்தை காட்டவோ பயன்படும் ஒரு வழி. பூசாரி வீட்டுப் பெண்ணின் மீது கொள்ளும் காமம், அவனை அவமதித்தவர்களுக்கு அவன் பாணியில் அவன் சொல்லும் பதில். பூமாவிடமிருந்து கிடைப்பதை அவன் விரும்பினாலும், அவளின் நகைகளை எடுத்துக்கொண்டு அவளுக்கு பங்கு கொடுப்பதன் மூலம் அவன் தன் அதிகாரத்தை இழப்பதாகவே கருதுகிறான். அவன் அதிகாரப் பசியின் உச்சமாக இருப்பது அவன் தனது மன்னியிடம் நிகழ்த்தும் பாலியல் வன்முறை.
இதற்கு நேர்மாறாக கணேசனுக்கு அமையும் அனைத்து உறவுகளும் காமத்தை அவன் மேல் அதிகாரம் செலுத்தும் கருவியாகவே பயன்படுத்துகின்றன. ரௌத், டாக்டர் போல அதை வெளிப்படையாகவோ பத்மா, சுந்தரி போல மறைமுகமாகவோ அவனை காமத்தைக் கொண்டே அவர்களுடன் இணைத்துக் கொள்கின்றனர். குருட்டுப் பிச்சைக்காரி கோதை காட்டும் பாசம் மட்டுமே அவனுக்கு அவன் உடலால் கிடைக்காத முதல் உறவு. ஆகவேதான் அவளுடைய இறப்புக்குப் பின் அவனின் உடலை மறந்து ஞானத்தை அடையத் தொடங்குகிறான்.
பசித்த மானிடம் உணர்வுகளைப் பற்றி மட்டும் இல்லை; அவற்றின் வீழ்ச்சியைப் பற்றியும் பேசுகிறது இந்த நூலைப் பற்றிய சில விமர்சனங்களில் காமத்தின் மூலமாக பெருவியாதி பரவும் என்ற தவறான நம்பிக்கையை இந்த நூலும் தருவதாக குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், இங்கே பெரு வியாதி என்பது காமத்தின் மூலதனமான உடல் அழிவதையே குறிப்பதாகத் தோன்றுகிறது கணேசனின் சிறுவயதில் இருந்தே எல்லோரும் அவனின் அழகினாலேயே ஈர்க்கப்பட்டனர். பெரு வியாதி என்பது அதை அழிக்கின்றது. காமத்தின் வீழ்ச்சி அது!
கிட்டாவின் அதிகாரப் பசியின் வீழ்ச்சியோ ஆடி அமாவாசை அன்று அவனின் மனைவியும் மாச்சியும் ஒருமையில் அழைப்பதில் துவங்குகிறது அவனின் சொந்த மகனே அவனை ஒரு அறையில் அடைத்து வைக்கும் அளவிற்கு அவனின் அதிகாரம் ஆட்டம் காணும் போதுதான் கிட்டா அதை உணர்கிறான். ஆனால், கணேசனுக்கு வாய்த்த பசுபதி போன்ற வழிகாட்டி அவனுக்கு வாய்க்காததால் அவனால் கணேசனின் தெளிவைப் பெற முடியவில்லை.
பசித்த மானிடம் பல்வேறு அடுக்குகளில் மனித மனதின் ஆழங்களை ஆராய்கிறது. இந்த நூலின் குறை என்பது அதன் பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டு இருக்கும் விதமே. பல பெண் கதாபாத்திரங்கள் ஆணின் காமத்திற்கு ஒத்துப் போகின்றனர். அனைத்து ஒழுக்க விதிமுறைகளையும் மீறுகின்றனர். ஆனால், அவற்றைப் பற்றிய குற்ற உணர்ச்சி எங்கேயும் பிரதிபலிக்கவில்லை. பூமாவுக்கோ மாச்சிக்கோ அவர்களின் கணவர்களை அருகில் வைத்துக் கொண்டே ஒரு பொருளியல் லாபத்திற்காக காமத்தில் ஈடுபடுவது உறுத்துவதாக எங்கேயும் காட்டப்படவில்லை. இது ஒரு வேளை அன்று நிலவிய இலக்கிய சூழ்நிலையின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால், மற்ற வகையில் காலத்தைக் கடக்கும் இந்த நாவல் இங்கே தேங்கி விடுகிறது.
இறுதியாக பசியின் அர்த்தமின்மையைச் சுட்டிக்காட்டும் இடமே இந்தப் படைப்பை சிறந்ததாக நிறுவுகிறது. நமக்குள் இருக்கும் கணேசனுக்கும் கிட்டாவுக்கும் கேள்விகளை எழுப்புவதன் மூலம் இந்த நூல் தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக மாறுகிறது.