
”உனக்குள் நிகழும் மோதலை
உன்வசப்படுத்திவிடு
நீ நெருப்பில் வீசப்படவில்லை,
நெருப்பே நீதான்.”
– மமா இண்டிகோ
பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் இன்னின்னவற்றைச் சாதித்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த வாழ்க்கையில் அர்த்தமேயில்லை என்பது போன்ற விதிகளைச் சமூகம் நிறுவி வைத்திருக்கிறது. அவற்றை அடியொற்றி நடந்தால் கேடுபாடில்லாமல் கரைசேர்ந்துவிடலாம் என்கிற நம்பிக்கையும் அதனோடு இழையோடுகிறது. அவ்வாறு புவிப்பரப்பின் காலவெளியைப் பங்கிட்டு வாழ்ந்து மறைந்துபோகிற கோடான கோடி மனிதர்களுக்கிடையில் சிலர் வித்தியாசமாய் வெளிப்படவும் செய்கிறார்கள். புதிய தடங்களில் பயணித்த அந்த மனிதர்களை வரலாறு நினைவில் வைத்திருக்கிறது.
ஒரு சிசு புவியில் பிறந்துவிட்டது என்றால், குறிப்பிட்ட காலத்துக்குள் 36 மைல்கற்களைக் கடக்க வேண்டும் என்கிறது மருத்துவ அறிவியல். மல்லாக்காய்க் கிடத்திய சிசு கவிழ்ந்து புரள்வது அதில் ஒன்று. சமூகம் மற்றொரு பட்டியல் வைத்திருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் பள்ளி, கல்லூரிக்குச் சென்று, பட்டம் வாங்கி, வேலைக்குப் போய், திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்று, பிறகு அவர்களை வளர்த்து ஆளாக்கி, பெயரன் பெயர்த்தி பார்த்து… ஓர் ஆணின் வாழ்க்கை இப்படித்தான் முழுமைபெற வேண்டும் என்பது மட்டுமல்ல, ஒவ்வொன்றும் காலாகாலத்தில் நடந்துவிட வேண்டும் என்பதும் சமூகத்தின் சட்டகம்.
32 வயதில் ஓர் ஆண்மகன் என்னென்ன சாதித்திருக்க வேண்டும்? குறைந்தபட்சமாக, ஒரு நிரந்தரமான, பெறுமதியான வேலை கைவசமாகியிருக்க வேண்டும்; கையில் ஒரு குழந்தையோடு, குடும்பமாக, சொந்த வீடுடன் – இ.எம்.ஐ. கடனோடு என்றாலும் – பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும். இதில் எதுவுமே வசப்படாத ஒருவன் முகம் நிறையப் புன்முறுவலோடு இந்தியா முழுக்க ஒரு, ’பேக் பேகோடு’ சுற்றிக் கொண்டிருக்கிறான். இயற்கையைத் தேடி, மானுடப் பரப்பைத் தேடிச் செல்கிற இடைநில்லாப் பயணமாய்த் தொடர்கிறது அந்த இளைஞனின் வாழ்க்கை. ஒரு இலக்கியப் பத்திரிகை தொடங்கி இணைய வழியில் தொடர்கிறான். சுதந்திர ஊடகனாக அலைந்து திரிகிற வாழ்க்கை அவனுக்குப் போதுமாக இருக்கிறது.
அத்தோடு முடியவில்லை, இந்தக் கதையில் முக்கியமான ட்விஸ்ட் வேறொன்று உண்டு.
கி.ச.திலீபன் என்கிற இளம் ஊடகனை முதன்முதலாக 2016 ஆகஸ்ட்டில் டாப் ஸ்லிப்பில் சந்தித்தேன். முதல் பார்வையில், வாசிப்பிலும் இயற்கைக் கரிசனங்களிலும் ஆர்வம் காட்டுகிற, உற்சாகம் ததும்பும் இளைஞன். சமூக ஊடகங்களில அவரது தொலைதூரப் பயணப் பதிவுகளை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ‘ஆரோக்கியமான உடற்கட்டும் சாகசப் பயணியின் ஆர்வமும் அமைந்துவிட்டால், பிறகு வேறென்ன வேண்டும்!’ என்று எண்ணினேன். தோற்றம் எவ்வளவு பிழையானது என்பது பேக் பேக்-ஐ வாசித்தபோது புரிந்தது.
16 வயதில் தனக்கு Epilepsy என்கிற நரம்பு மண்டலக் கோளாறு (வலிப்பு நோய்) இருப்பதாக நரம்பியல் மருத்துவர் சொல்கிறார். ‘தனியாக எங்கும் போகக் கூடாது’ என்பதில் தொடங்கி அவனைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெற்றோருக்கு ஒரு நீண்ட பட்டியலே கொடுக்கிறார். எங்காவது தனியாகப் போவதென்றால், அவன் கழுத்தில் ‘நான் ஒரு வலிப்பு நோயாளி’ என்று அறிவிக்கிற ஓர் அட்டையத் தொங்கவிட வேண்டும்.
40 வருடங்களுக்கு முன்னால் என் தூரத்து உறவுப் பையன் ஒருவன் இரயுமன்துறை ஆற்றில் குளிக்கையில் வலிப்பு நோயினால் இறந்துபோன கதை நினைவுக்கு வருகிறது. வலிப்பினால் (epileptic seizure) துடிப்பவன் கையில் சாவிக்கொத்தைக் கொடுத்துவிட்டால் கொஞ்ச நேரத்தில் வலிப்பு நின்றுவிடும் என்பதுதான் இன்றைக்கும் நம்முடைய புரிதலாய் இருக்கிறது. அப்படிக் கையில் கொடுக்கிற கருவியே நோயரின் உயிரைப் பறித்துவிட்ட கதைகளும் உண்டு. 5300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டைக் அறிந்திருந்தார்கள் என்று தொல்லியல் ஆய்வுகள் அண்மையில் நிறுவியுள்ளன. வலிப்பு நோய்க்கு இரும்பைப் பயன்படுத்தலாம் என்று யார் கண்டுபிடித்தார்கள் என்றுதான் தெரியவில்லை.
ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் என்பதை வாழ்க்கைக் கனவாய் வைத்திருந்த திலீபன் – அதுதான் அவன் பெயர்- பயத்தில் உறைந்து முடங்கிப் போகிறான். வலிப்பு நோயைவிட அந்த, ‘அறிவிப்பு அட்டை’ பற்றிய நினைப்பே அவனுக்குப் பெரும் வாதையாக இருக்கிறது. சூழ்ந்திருப்பவர்களின் பதற்றம் அவனை மேலும் அச்சுறுத்துகிறது. பெங்களூரு நிம்ஹன்ஸில் பரிந்துரைத்த ஒரேயொரு மாத்திரை அவனுக்கு நம்பிக்கை தருகிறது.
“…வலிப்பு (நோய்) குறித்து பல மருத்துவக் கட்டுரைகள் படித்தேன். முன்பு பயந்து நடுங்கிய வலிப்பை தள்ளி நின்று ஆய்வுக்கு உட்படுத்தத் தொடங்கினேன்… மனதளவில் உறுதியோடு Epilepsyயை எதிர்கொள்ள ஆரம்பித்தேன்… தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்ட நான், தனியனாக இந்தியாவைச் சுற்றி வருகிறேன்.”
‘குளிர்பானம் கூட அருந்தக் கூடாது’ என்பது திலீபனுக்கான மற்றோர் அறிவுறுத்தல். இமயமலையின் உயரமான விளிம்புகளில் ஒன்றான சீலா பாஸ் (கணவாய்) கடல் மட்டத்திலிருந்து 4170 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. அதன் பனிப்பொழிவில் நடந்து செல்கிற திலீபன், அந்த குளிர்பான எச்சரிக்கையினால் மனத்தில் சூழ்ந்திருந்த இருளை ‘சீலா பாஸின் பனிப்பொழிவின் வெண்மையினால் ஒளியூட்டினேன்’ என்கிற வரி எனக்கு சிலிர்ப்பைத் தந்தது.
பயணங்கள் எப்போதும் இருவழிகளில் நிகழ்பவை – புறவெளியின் ஊடாகவும், அகவெளியின் ஊடாகவும். நிலவெளிப் பயணங்களின் ஊடாக திலீபன் ஓர் அகவெளிப் பயணத்தைச் சாத்தியப்படுத்துகிறார். தன்னைத் துரத்திக்கொண்டிருந்த கொடுங்கனவை மேற்கொள்ளும் அந்த அகவெளிப் பயணத்தில் வெற்றியடைகிறார்.
”நான் ஒரு வலிப்பு நோயாளி’ என்கிற அட்டையை அணிந்துகொள்ளாமலே இனிமேல் என்னால் எங்கேயும் பயணிக்க முடியும்!” என்று சீலா பாஸின் பனிப்பொழிவில் நடந்தவாறு ஆனந்தக் கண்ணீர் வழிய கத்துகிறார். இந்தப் புள்ளியில் பேக் பேக் வெறும் பயணநூல் என்பதைத் தாண்டி, ஒரு செயல்முறை உளவியல் வாசிப்பாகிவிடுகிறது. ‘எப்படித் தனியாகப் பயணம் செய்ய முடிகிறது என்று (வியந்து) கேட்டவர்களிடம் தனிமை மீதான பேரச்சத்தைக் கண்டேன்’ எனக் குறிப்பிடுகிற அவரது அவதானிப்பு, அதன் அடையாளம்.
‘திட்டமிடத் தவறுகிறீர்கள் என்றால், தவறிவிடத் திட்டமிடுகிறீர்கள்’. யாரோ ஓர் அறிஞனை மேற்கோளிட்டு, உயர்கல்வி வழிகாட்டல் அரங்குகளில் இப்படி பேசியிருக்கிறேன். ‘எதையும் திட்டமிடாமல் வாழ்க்கையை அனுபவிப்பதே என் திட்டம்’ என்று திலீபன் சொல்லும்போது, ‘அட, ஆமால்ல!’ என்று மனதில் குயில் கூவுகிறது. அது ஒரு தலைகீழ் பார்வை – பாரடிம் ஷிஃப்ட். ஆற்றொழுக்கில் செல்லும் சிறு படகு போல, மிகக் குறைந்த அளவு பணத்தோடு, மிக்குறைவான கட்டணம் கேட்கும் விடுதிகள், ஊர்திகள், பாதைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்வது, பசி போக்க மட்டுமே கையில் அகப்படுவதைக் கொண்டு வயிற்றை நிரப்புவது. இதற்கெல்லாம் அபாரமான மனவுறுதி வேண்டும். பல நேரங்களில் கடும் பசியோடு உணவகம் தேடி குளிரில் தெருத்தெருவாய் அலைந்த அனுபவங்களும் அப்படியே. “சலித்துப்போகும் அளவுக்குப் பயணம் செய்ய வேண்டும். நம்மை ஆட்கொண்டிருக்கும் ஈடுபாட்டினால், தன்னம்பிக்கையினால் பயணம் அவ்வளவு எளிதாகச் சலித்துப் போகாது.’ என்கிறார் திலீபன். சாதாரணமான ஆசைகளைச் சுமக்கிற சராசரி மனிதனாக வாழ்ந்து கடப்பதன் சுகம் இருக்கிறதே- அடடா! அதை திலீபனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
“2016இல் பிரியாணி சாப்பிடும் நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு ஹைதராபாத்துக்குச் சென்றிருக்கிறேன். ‘பாரடைஸ்’ தொடங்கி, ஹைதராபாத்தின் பல புகழ்பெற்ற கடைகளில் விதவிதமான பிரியாணிகளைச் சாப்பிட்டு வந்தேன். அந்நினைவுகள் அப்போது எழவே, பெரும் ஏக்கத்தோடு தால் ஊற்றிச் சோறு தின்றேன்.”
பேராசிரியராய்ப் பணிபுரிந்த காலத்தில் பதவியை முன்னிட்டு சொகுசான பயணங்கள் வாய்த்திருக்கின்றன. இருவழிக்கும் முதல் வகுப்பு இரயில் கட்டணத்தின் ஒன்றேகால் பங்கு பயணப்படி கொடுப்பார்கள். உரையரங்குகளுக்கு அழைக்கும்போது, நட்சத்திர விடுதி தங்கல், உரையாற்றுவதற்குப் பணப்படி தருவார்கள். நகரில் இறங்குகிற கணம் முதல் விடையளிக்கும் நேரம் வரை மகிழுந்து, பணிவிடை எல்லாம் வழங்குவர். சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் எத்தனை முறை போயிருக்கிறேன் என்றாலும் இடங்களை அடையாளம் காணும் தேவை எழுந்ததில்லை. இது ஒருபுறம் இருக்க, கல்விப்புலம் சாராத கள ஆய்வுப் பயணங்களில்கூட, தெளிவாகத் திட்டமிட்டு, சரியான வழிகாட்டுதல் அல்லது வழித்துணையோடுதான் பயணித்திருக்கிறேன். திரும்பிப் பார்க்கையில் தோன்றுகிறது – பெரிதாய்த் திட்டமிட்டு நிகழ்த்திய சந்திப்புகளை விட, எதிர்பாராமல் சந்திக்கிற மனிதர்கள்தான் பெரும் திறப்புகளை ஏற்படுத்திக் கடந்து போகின்றனர்.
திலீபனின் பயணங்கள் அடிப்படையில் அப்படிப்பட்டவை. ஒரு சிறு அளவிலான திட்டமிடல் இருந்தாலும் கூட, பயணத்தின் போக்கில் சூழலின் தற்காலத் தன்மைக்கேற்ப அதை எதிர்கொள்கிற, எந்த வகையான எதிர்பாரா நிகழ்வுக்கும் தன்னைத் தகவமைத்துக்கொள்கிற நெகிழ்தன்மையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இயற்கைச் சூழலும், சந்திக்க நேர்கிற மனிதர்களும் தருகிற அனுபவங்களை அவதானிக்கிற தியான மனநிலை இங்கு முக்கியமாய்ப் படுகிறது. அதனால், ‘தனியாகப் பயணம் செய்ய வேண்டும், அப்போதுதான் லகான் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்’ என்கிற இப்பயணியின் பார்வையைப் புரிந்துகொள்ள முடிகிறது. போலவே, ‘பசுமை மட்டுமல்ல, வறட்சியும் இயற்கைதான்’ என்கிற அவரது அடிப்படைப் புரிதலும்.
10 பாகை குளிரில், ஆர்.ஏ.சி. இருக்கையில் தனது கம்பளியின் சரிபாதியைத் திலீபனுடன் பகிர்ந்துகொண்ட வட இந்திய இளைஞன், கென்னி, அபினவ், சோனம் போல, பயண வழிநெடுக, நிபந்தனையின்றி, எதிர்பார்ப்பின்றி அன்பைப் பொழிகிற மனிதர்களைச் சிலாகிக்கும் திலீபன், தன் பயணத்தின் வழியே ‘நம் அகங்காரத்தை நசுக்கும் இயற்கையின் பேராற்றலையும், உன்னதமான மிக்க சில மானுடத் தருணங்களையும்’ கண்டடைந்ததாய்ச் சொல்கிறார். பயணத்தைப் போலொரு மானுடக் கொண்டாட்டம் வேறு ஏதேனும் உண்டா?
***
வலிப்பு நோய் இயல்பு வாழ்க்கையை முடக்கிவிடும் பெருநோய் என்கிற தட்டையான பார்வை பொதுவெளியில் நிலவுகிறது. சமய கற்பிதங்கள் போலவே, வலிப்புநோய் குறித்து ஏராளமான கற்பிதங்கள் உள்ளன. நவீன மருத்துவ அறிவியல் சொல்லுகிற வழிமுறைகளைப் பின்பற்றி நோய்மையைக் குறைக்கவும், முழுமையான வாழ்க்கையை வாழவும் அவர்களால் முடியும் என்பதை, அப்படிச் சாதித்த மனிதர்கள்தான் உலகுக்குச் சொல்ல முடியும். திலீபனிடமிருந்து அப்படிப்பட்ட ஒரு நூலைத் தமிழுலகம் எதிர்பார்க்கிறது. ஆட்டிசம் போல, பிறவி நோயியங்கள் போல, வலிப்பு நோயை வெற்றிகரமாய் எதிர்கொண்ட மனிதர்களும் பொதுவெளியை நோக்கிப் பேசுவதுதான் இந்நோயைச் சூழ்ந்திருக்கும் புதிர்களை உடைக்கச் சிறந்த வழி. அதனை திலீபன் நிகழ்த்துவார் என்கிற எதிர்பார்ப்போடு, அவருக்கு என் அன்பும் வாழ்த்தும்.
நூல்; BACK பேக்
வகைமை; பயண அனுபவங்கள்
ஆசிரியர்; கி.ச.திலீபன்
வெளியீடு; நடுகல்
விலை; ரூ.150