இணைய இதழ் 110கட்டுரைகள்

இயலாமையின் நிழல் – கிருஷ்ணமூர்த்தி

கட்டுரை | வாசகசாலை

அனைத்து கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. நவீன கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளின் புதிய வடிவமாகவே தகவமைத்துக் கொள்கின்றன. ஈடு செய்ய இயலாத தனித்த அனுபவ வெளிப்பாடுகள் நிறைந்த கதைகளும், சொல்முறைகளில் புதுமையைக் கைக்கொள்ளும் கதைகளே புதிய போக்கை அவதானிக்கின்றன. பண்பாட்டின் பின்புலம் கதைகளுக்கு நவீன உருவை வழங்குகின்றது. ஒரே சம்பவம் நாஞ்சில் நிலத்திலும் கொங்கு நிலத்திலும் நிகழும்போது புனைவாக அவை தனித்த அடையாளங்களை சுமக்கத் துவங்குகின்றன. புதிய அலையான சிறுகதைகள் என்று அடையாளமிட இவை போன்ற காரணிகளே சமகாலத்தில் அலகுகளாகின்றன. வாழ்வின் நாடகீயமான தருணங்கள் அதன் அனுபவச் செறிவோடும் மொழிக் கூர்மையுடனும் ப்ரிம்யா கிராஸ்வினின் சிறுகதைத் தொகுப்பான “கெத்சமனி”-இல் புனைவுகளாக்கபட்டிருக்கின்றன. பன்னிரெண்டு சிறுகதைகள் நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

வாழ்வின் கீழ்மை நிரம்பிய தருணங்கள் எளிதில் காவியத்தன்மை அடைந்து விடுகின்றன. புனைவுகளுக்கு அவையே தீனியாகின்றன. புனைவு அவற்றை சொல்வதோடல்லாமல் அதன் வேரை அடையாளம் காண முற்படுகிறது. மனிதன் இத்தனை கீழ்மையாக நடந்து கொள்வதற்கு அல்லது ஆட்படுவதற்கு எந்தெந்த அம்சங்கள் காரணங்களாகின்றன எனும் ஆய்வைப் புனைவுகள் செய்யத் தவறியதே இல்லை. வேறு சொற்களில் சொல்வதானால் காலம் கடந்து நிற்கும் கதைகள் அனைத்தும் இதை செய்தவண்ணமிருக்கின்றன. எழுத்தாளர்களின் குரல்கள் புனைவின் இடையூறாக அமையாமல், கதையை நிகழ்த்துவதன் வழியே இவ்வம்சங்கள் வாசகனுக்கு புலனாகின்றன. ப்ரிம்யா கிராஸ்வினின் கதைகளில் மையப்புள்ளியாக அமைவது இயலாமையாக உணார்கிறேன். இயலாமையை தன்னகத்தே கொண்டிருப்பதும், இயலாமை நோக்கி சுற்றத்தாலும் மதிப்பீடுகளாலும் தள்ளப்படுவதும் இவருடைய கதாபாத்திரங்களின் வார்ப்புகளில் தெள்ளத் தெளிவாகின்றன. இரண்டு சிறுகதைகளைக் கொண்டு இதை சற்று விரிவாக அணுகலாம்.

தொகுப்பின் முதல் கதை ஊழி. கால்களற்று வீல்சேரில் இருக்கும் நாயகி. அவளுக்கு துணையாய் அன்று காலையில் இறந்த பாட்டியின் சடலம். வீட்டைச் சுற்றிலும் பெருமழையின் வெள்ளம் மேலேறத் தொடங்குகிறது. உதவிக்கு ஆள் கூப்பிட இயலாத அத்தனைக் காரணிகளும் சொல்லப்படுகின்றன. இறக்கப் போகும் தருணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் நாயகி சடலமாக மீட்கப்படும்போது சற்று மாண்போடு தெரிய வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள். இடையே தன் வாழ்க்கையை அசை போடுகையில் பிறர் துணையின்றி வாழ இயலாத தன் வாழ்க்கையின் மீதான சலிப்பை வெளிப்படுத்துகிறாள். இக்கதையில் கூறிய இத்தனை அம்சங்களிலும் அடிநாதமாக அமைவது நாயகியின் உடல் குறைபாடு. இந்தக் குறைபாடு பல்வேறு அடிப்படையான விஷயங்களுக்கும் பிறரை சார்ந்திருக்கும் நிலைக்கு நாயகியைத் தள்ளுகிறது. அந்த சார்பை தவறாக எடுத்துக் கொண்டு அத்துமீறும் மனிதர்களை அவள் நினைவு கூர்கிறாள். மரணத்தை வரவேற்கும் தொனியை கதை முழுக்க உணர முடிகிறது. வாழ்க்கை முழுக்க இயலாமையை நினைத்து மருகிய நாயகிக்கு மரணத்தின் மீது விசாரணை இல்லை. அது சார்பற்று நிகழும் தன்மையால் தன் இயலாமையை விஞ்சும் இடமாக அதை அவதானிக்கிறாள்.

இதற்கு மற்றொரு பரிணாமமாக “பிடாரி” சிறுகதையைக் குறிப்பிடலாம். வாணி ஜெயராமின் குரலை ரசிக்கும் நாயகியை அறிமுகம் செய்கிறார். இசை மீதான பித்தை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளும் நாயகிக்கு பின்கதை இருக்கிறது. சிறு வயதில் கோயிலில் பாடிக்கொண்டிருக்கும் நாயகியின் மீது மையலுற்று பெண் கேட்டு திருமணம் செய்துகொள்கிறார் நாயகன். திருமணத்திற்குபின் பின் நாயகி பாடுவதேயில்லை. இதற்கு இணைகோடாக அந்த ஊரில் நிகழும் பிடாரியம்மன் திருவிழாவிற்கான பின்கதை சொல்லப்படுகிறது. மக்களின் தெய்வமாக இருக்கும் பிடாரியை மக்கள் அணுக்கமாக வணங்குகிறார்கள். பெரு தெய்வ வழிபாட்டின் நோக்கில் அது சாளுவ மன்னனுக்கு பிடிப்பதில்லை. தனியே கோயில்கட்டி அம்மனை நிறுவ முயல்கிறான். ஆனால், தெய்வாம்ச சூழ்நிலைகள் அம்மனை மக்களின் பக்கமே இட்டுச் செல்கிறது. (தஞ்சை பெரிய கோயிலுக்கும் இதே போன்றதொரு கதை இருக்கிறது. ஆனால் அதில் மன்னனின் கனவு மெய்ப்பட எளியோரின் கனவு மன்னன் பக்கம் சாய்வதாக சொல்லப்படும். இங்கு சிறுதெய்வம் வெற்றி கொள்கிறது.) மன்னன் அடிபணிகிறான். மக்களோடு மக்களாக வழிபடத் தொடங்குகிறான்.

பிடாரி சிறுகதையில் இயலாமை தோற்றுவிக்கப்படுகிறது. அதன் உட்பிரிவான கதையில் அவை மிகத் தெளிவாகவும் மையக்கதையில் பூடகமாகவும் கையாளப்படுவது இக்கதையின் சிறப்பான அம்சங்களுள் ஒன்று. மன்னன் மக்களைப் புரிந்துகொள்ளாமல் பெரு தெய்வ வழிபாடுகளுடன் மக்களை அவதானிக்கிறான். இது முறையல்ல என்று தன் அதிகாரத்தால் மக்கள் தவறிழைத்தாக சொல்கிறான். அவர்களை தெய்வத்துடன் அணுக்கமாக உணர இயலாத தன்மைக்கு தள்ளுகிறான். ஆனால், தெய்வம் மன்னனின் இயலாமையை மீமாய அம்சங்களுடன் உணர வைக்கிறது. மன்னனும் உணரவே தன் அகங்காரத்தை கைவிட்டு அடிபணிகிறான். கிளைக்கதையின் ஒவ்வொரு அம்சமும் மையக்கதையின் அம்சங்களுடன் பொருந்திப்போகிறது. ஆனால், கிளைக்கதை மட்டுமே இறுதியை எட்டுகிறது. வாழ்வின் சிடுக்குகள் எளிமையில் இறுதி முடிவை எட்டிவிடுவதில்லை. அவை ரணங்களாக தேக்கங்கொள்கின்றன என்பதற்கு இந்த கதை மற்றொரு சான்றாக அமைகிறது.

மேற்கூறிய இரண்டு கதைகளின் அம்சங்களை மீதக் கதைகளிலும் காண முடிகிறது. கற்பனையில் உயர்ந்த நிலையாக கருதும் அம்சங்கள் யதார்த்தத்தில் அத்துணை சிறந்ததாக அமைவதில்லை. அதனை உணரும் போது இயற்கையாக இயலாமை சூழ்ந்துவிடுகின்றது. ஏதோ ஒரு புள்ளியில், எளிய காரணங்களுக்காக முளைவிடும் இந்த மனநிலை வாழ்வின் அத்தனை அம்சங்களின் மீதும் கவிழத் தொட்ங்குகிறது. “பீடப்பூக்கள்” சிறுகதையில் கடவுள் நம்பிக்கை குறித்த சிறுவனின் எதிர்பார்ப்பிற்கும் யதார்த்ததிற்கும் இடையில் இருக்கும் தூரம் அளவிடமுடியாததாய் அமைகிறது. ஆசைகள் அர்த்தமற்றுப் போவதை சிறுவனான நாயகன் உணர்கிறான். “மூட்டம்” சிறுகதையில் கல்வி மறுக்கப்படும் சிறுவனின் சூழ்நிலை பழிவாங்கும் எண்ணத்திற்கு விதைபோடுகிறது.”கறி” சிறுகதையில் கல்வியால் உயர்ந்தபோதும் சாதிய அடையாளங்களால் துரத்தப்படும் நாயகியின் சாகசமாக யாரோ ஒருவரின் மீது சிந்தும் கறிக்குழம்பின் துளிகள் எஞ்சுகிறது.

இந்த அம்சங்களை ஒவ்வொரு சிறுகதையிலும் சுட்டிக்காட்ட இயலும். மேற்பரப்பில் ஒற்றைப்புள்ளியுடன் ஒப்புமை கொண்டாலும் அக்கதைகளின் பண்பாட்டுப் பின்புலங்களும், மொழி நுட்பமும் தனித்த அனுபவமளிக்கும் சிறுகதைகளாக மிளிர வைக்கின்றன. மேலும் ஒவ்வொரு கதைகளிலும் தென்படும் வேறு வேறு படிமங்கள் பெரியதொரு நிலப்பரப்பிற்குள் சென்று திரும்பும் அனுபவத்தை அளிக்கின்றன. மையக்கதையின் போக்கை சிதைக்காமல் சிறு சிறு அம்சங்களுக்கும் பின்கதைகளை கட்டியெழுப்பும் நுட்பமே கதைகளுக்கிடையிலான வேறுபாடுகளுக்கு கைக்கொடுக்கிறது. ஒப்புமைகளுக்காக சொல்லப்படும் கிளைக்கதைகள் மையக்கதையை உணர்வதற்கு தேவையான பலத்தை அளிக்கின்றன. அவை சற்று சறுக்கியிருந்தாலும் மையக்கதையின் இடர்களை, வாழ்வனுபவங்களை நாம் எளிதில் கடந்து சென்றிருப்போம். விவரணைகளிலும், உவமைகளிலும் கவித்துவத்தையும் மொழியை வீணடிக்காத தன்மையையும் உணரமுடிகிறது. வரலாறும் பண்பாடும் தேவைக்கதிகமாக இடம்பெறாமல் இருப்பதும் இத்தொகுப்பின் பலம்.

சில சிறுகதைகள் இவர் எழுதியிருக்க வேண்டாம் எனும் எண்ணம் தோன்றுவது மட்டுமே இத்தொகுப்பின் குறையாகிறது. நிறைவளிக்கும் கதைகள் அதிகமாக இருப்பதால் குறைகள் நம் நினைவிலிருந்து மங்கிவிடுகின்றன. முதல் தொகுப்பிற்கான சாயல்களற்று சவாலான கதைகளைக் கொண்டிருக்கிறது “கெத்சமனி”.

கெத்சமனி | ப்ரிம்யா கிராஸ்வின் | சிறுகதைகள் | எழுத்து பிரசுரம்

krishik10@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button