இணைய இதழ் 110சிறுகதைகள்

அம்புப் படுக்கை – மதுசூதன்

சிறுகதை | வாசகசாலை

“ரங்கா எப்படி இருக்க? மிக மென்மையான குரலில் முகமலர்ச்சியுடன் கேட்ட கஜபதிக்கு இன்று அறுபத்தைந்தாவது பிறந்தநாள் என்பது ரங்காச்சாரிக்கும் தெரியும் என்பதால் தன் ஆத்ம நண்பனை இறுகத் தழுவிக் கொண்டே,”மெனி மோர் ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே டா” என்றார்.


          “ரொம்ப நன்றிடா” என்ற கஜபதி குரலில் சுரத்தில்லாமல் இருந்ததை ரங்காச்சாரி கவனிக்கத் தவறவில்லை

          “சரி, இங்கேயே கொஞ்சம் உக்காருவோம்” என்று அந்தப் பார்க்கின் சிமென்ட் இருக்கையின் வலப்பக்கமாக தன் கைத்தடியை சாய்த்து வைத்துவிட்டு மெல்ல அமர்ந்தார் ரங்காச்சாரி. தன் கையிலிருந்த மஞ்சள் பையை தனது இடதுபக்கம் பத்திரப்படுத்திக் கொண்டு ரங்காச்சாரி அமர்வதற்கு வாகாக இடம் உண்டாக்கித் தந்தார் கஜபதி.

          “என்னடா கஜா, ரொம்ப டயர்டா இருக்க மாதிரி தெரியுது.”

          “ஆமாம். நாலு நாளா படுத்துட்டேன் காய்ச்சல். நேத்துதான் கம்பளீட் ரீகவரி. ஆனாலும் களைப்பு இருக்கு. உடம்பு சுகவீனமானா தாங்கிக்கிலாம். இந்த மனசு…” அதற்கு மேல் தொடரமுடியாமல் குரல் தழுதழுத்தது கஜபதிக்கு.

          ரங்காச்சாரி தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியவாறே பேசினார்”கஜபதி, எமோஷனாகமப் பேசு. வயசான பலருக்கு பல பிரச்சனைகள். நீ பத்து நாளா ஃபோன் கூட செய்யாதப்பவே நினைச்சேன். ஏதோ ஏடாகூடமா நடக்குதுன்னு”

          “போதும்டா ரங்கா. எல்லாம் போதும்.’ குலுங்கி அழத் தொடங்கினார் கஜபதி உடனே,


          “டேய், இது ப்பளிக் ப்ளேஸ். கொஞ்சம் கன்ட்ரோலா இரு”

          சற்று நேரத்தில் நார்மல் நிலைக்கு வந்தார் கஜபதி. எதிர்ப்புறமிருந்த வாதாம் மரத்திலிருந்து சருகிலை ஒன்று ரங்காச்சாரிக்கு நேர் எதிரே விழுந்தது. அவசர அவசரமாக வாதாம் மரத்திலிருந்து கீழ்ப்புறம் இறங்கிய அணில் ஒன்று தன் முடிவை மாற்றிக் கொண்டு மறுபடியும் அதே மரத்தின் மேல் பகுதிக்கு ஓடியது. தன் பேரக்குழந்தையோடு நடைப்பயிற்சி வந்த மூதாட்டி இவர்களைக் கடந்ததும் தும்மினாள். மூதாட்டியோடு வந்த குழந்தை குனிந்து எதையோ பொறுக்கியது. அது அந்த மூதாட்டிக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. கடுகடுத்த முகத்தோடு அந்தக் குழந்தையை திட்டினாள். அது தன் பாட்டியின் வார்த்தைகளைப் பொருட்படுத்தவே இல்லை. கஜபதி அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

                    “இவனைப் பார்க்கும்போது மனோ ஞாபகம் வருது ரங்கா. ஞாபகம் இருக்கா? குழந்தையா இருக்கும் போது ராத்திரி முழுக்க அழுவான். எதுக்குன்னே தெரியாது. ஆனா, அழுவான்”

          “ஆமாம். நல்லா ஞாபகம் இருக்கு. அவன் ஒரு வயசு வர்ற வரைக்கும் உங்களை ரொம்பப் படுத்திட்டான்.”

          “சுமதி போனதுக்குப்பறம் எல்லாமே தலைகீழாப் போச்சு ரங்கா. அவ போனதுக்கு அப்புறம் எனக்கு வாழ்க்கையே நரகம். சீக்கிரமா நானும் போகனும். கடவுள் கருணை காட்டினா தேவலாம்.”

          “கன்ட்ரோல் யுவர் செல்ஃப். ஜனனமும் மரணமும் தவிர்க்க முடியாது. எனக்குப் புரியுது உன்னோட கஷ்டம். இன்னிக்கு உனக்கு. நாளைக்கு எனக்கு”

          யாரோ ஒரு இளைஞன் ஓட்டிச் சென்ற பைக்கின் ஒலிப்பான் அலறல் அவர்கள் இருவரின் உரையாடல்களை தற்காலிமாகத் தடை செய்தது. அவர்களிடையே ஒரு கனத்த மௌனம் நிலவியது. தூரத்தில் எங்கேயோ காகம் ஒன்று கரைந்து கொண்டே இருந்தது. எதிரே இருந்த சிமென்ட் இருக்கையில் ஒரு குடிகாரன் தள்ளாடியபடியே வந்து அமர்ந்தான். அவனுடைய சட்டைப் பொத்தான்கள் சீராக இடப்படாமல் இருந்ததால் நெஞ்சுப் பகுதி தெரிந்தது. சட்டைப் பாக்கெட் ஒரு பக்கமாக கிழிந்து தொங்கியது. கையில் வைத்திருந்த பொட்டலத்தில் இருந்த பொரியை கொஞ்சம் எடுத்து வாயில் இட்டுக் கொண்டான். ரங்காச்சாரி கவனம் கஜபதி வைத்திருந்த மஞ்சள் பை பக்கம் திரும்பியது.

          “என்னடா வைச்சிருக்க பையில?” இந்தக் கேள்வி கஜபதியை சற்று திசை திருப்புவதற்காக ரங்காச்சாரி கேட்பது போலிருந்தது.

          “ஒன்னும் இல்லை. அவள் டெத் சர்டிபிகேட் சம்மந்தப்பட்டது, பேங்க் பாஸ் புக், என்னோடு வீட்டோட சொத்துப் பத்திரம்.”

          “ஒரிஜினலா?”

          “ஆமாம்”.

          “அதை ஏன் தூக்கிட்டு அலையற?”

          “நம்பிக்கை இல்லை. அவன் மேலயும் மருமகள் மேலயும் நம்பிக்கை இல்லை”

          “ஏன்டா உனக்கு புத்தி பேதலிச்சுடுச்சா? அவன் உன் பையன்டா”

          “அவனும் அவளும் இருக்கறது என் வீடு. ஆனா, என்னை எங்கே வைச்சிருக்கான் தெரியுமா? வீட்டுக்குப் பின்னால இருக்கற ஒரு ரூம்ல. அதையும் நான்தான் கட்டினேன். இங்க பாரு நீ என்னோட ஒரே ஃபிரண்டு. ஜோசப் இருந்தவரைக்கும் நீங்க இரண்டு பேரும்தான் க்ளோஸ் ஃபிரன்ட்ஸ். ஆனா, என்னோட கஷ்டங்களை நான் பகிரந்துக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை.”

          “ஏன்டா நம்ம பழக்கம் நேத்தைக்கு ஆரம்பிச்சதா? எத்தனை வருஷப் பழக்கம்டா? என்னோட மேரஜே உன்னாலதான்டா நடந்தது. இன்ஃபேக்டு காஞ்சனாவோட முதல் பிரசவ செலவுக்கு உன்கிட்டதானடா வந்து நின்னேன்.”

          எதிரே வந்து அமர்ந்திருந்த குடிகாரன் கான்கிரீட் இருக்கையில் சரிந்த வாக்கில் கிடந்தான். அவனைச்சுற்றி ஈக்கள் மொய்த்தவாறே இருந்தன. அவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து நசுங்கிய கோல்டு ஃபிளேக் சிகரெட் பாக்கெட் வெளியே தெரிந்தது. யாரோ ஒரு பாதசாரி ஒருவித அருவெறுப்புத் தெரிய அவனைக் கடந்து போனார். அந்தப் பாதசாரியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கஜபதி தன்னையுமறியாமல் சிரித்தவாறு ரங்காச்சாரி பக்கம் திரும்பினார்.

          “ரங்கா, இங்க பாரு. நமக்கு வயசாயிடுச்சு. உனக்குன்னு இருக்கற பிரச்சனைகளைத் தீர்க்கவே உனக்கு நேரம் போதாது.”

          “பரவாயில்லை ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கறதுலதானே சந்தோஷம். நீ சொல்லாட்டி பரவாயில்லை. ஆனா..”

          “இல்லையில்லை நான் சொல்றேன். என் மனப்பாரத்தைக் குறைச்ச மாதிரியாவது இருக்கும்.” நிமிர்ந்து அமரந்து தன் தோள் துண்டை சரிப்படுத்தியவாறே தொடர்ந்தார் கஜபதி. ”மரியாதை இல்லைடா ரங்கா. அவ போனதுக்கு அப்புறம் கொஞ்ச நஞ்ச மரியாதையும் இப்போ இல்லை. காலையில எழுந்ததும் ஒரு காஃபியில ஆரம்பிக்கும் அவமரியாதை. சமையல்கட்டுக்கு நேர் பின்புறம் நான் இருக்கற ரூம். சமையல்கட்டு ஜன்னல் பக்கம் நான் வந்து நிக்கனும். மருமகளுக்கா விருப்பம் இருந்தா காஃபி தருவா. இல்லைன்னா காஃபி போட டைம் இல்லை. டூட்டிக்கு கிளம்பணும். வெளீல சாப்பிட்டுக்கோங்கன்னு மூஞ்சில அடிக்கற மாதிரி சொல்றா. சரி தொலையுதுன்னு விட்ருவேன். அடுத்தது டிஃபன். நேரத்துக்கு கிடைக்காது. வேலைக்காரிகிட்ட என்ன தரணும் எத்தனை மணிக்குத் தரணும்னு சொல்லீட்டு போயிடுவா. வேலைக்காரி மனசு வைச்சா நேரத்துல கிடைக்கும்.”

          “ஏன்டா, நீயே கிச்சன்ல போயி எடுத்துக்கலாம்ல?”

          “இல்லை அது முடியாது. ஒரு தடவை கை தவறி ஊறுகாய் பாட்டிலை உடைச்சிட்டேன். அதுல இருந்து என்னை கிச்சன்ல அனுமதிக்க மாட்டாள்.”

          “உன் பையன் இதையெல்லாம் கேள்வி கேக்க மாட்டானா?”

          “ம் அவனா? சான்ஸே இல்லை.” மத்தியானம் அளவு சாப்பாடு மாதிரி. சில நேரத்துல என்னென்ன மீதமிருக்கோ அது கிடைக்கும். கெட்டுப் போனதெல்லாம்கூட கிடைக்கும். சாயந்தரம் காஃபி மட்டும் கரெக்டா கிடைக்குது. அது வேலைக்காரி லக்ஷ்மியோட கருணை. நைட்டு எனக்கு எட்டு மணிக்குள்ள சாப்பிட்டு ஆகணும். ஆனா, ஒன்பது ஒன்பதரை ஆயிடும். நானும் குறுக்க நெடுக்க நடந்து பார்ப்பேன். யாரு நம்மள மதிக்கறாங்க அங்கே? பேரப்புள்ளைங்க என்கிடட்ட செல்லமா பேச வரும். அதுகளையும் மிரட்டி வைச்சிருக்காங்க!” கஜபதியின் குரல் தழுதழுத்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள கொஞ்சம் அமைதியானார்.

          “ரிலாக்ஸ் கஜா. காலைல என்ன சாப்பிட்ட? ஹோட்டலுக்குப் போலாமா?”

          “வேண்டாம் ரங்கா. நேத்து நைட் வைச்ச உப்புமா கொடுத்தாங்க.
அவன் அம்மா இருந்தவரைக்கும் ஒரு பயம் இருந்தது. அவ என்னை எப்பவும் விட்டுத்தந்ததே இல்லை. இரண்டு பேரையும் அடக்கி வைச்சிருந்தா. அப்போ அவ காலம். இப்போ இவ காலம். மனோ பரிவாகூட பேசறது இல்லை. எப்பவும் சிடுசிடுன்னு விழறான். எப்போ இந்த வீட்டை மாத்தித் தருவ. நீ போறதுக்குள்ள செஞ்சிருவ இல்லைன்னு கேக்கறான். ஒரு நாள், இப்பவே பத்திரத்தை மாத்துன்னு கலாட்டா பண்ணினான். அன்னிக்கு ஆக்ரோஷமா என்னை அடிக்க கையை நீட்டினான். அன்னிக்கு வரைக்கும் அது மட்டும் நடக்காம இருந்தது. இப்போ அதுவும் நடந்திருச்சு. அவன் கையை நீட்டி அடிக்க வந்தது என்னால தாங்க முடியல. ஒரு கோபத்துல அவனைக் கெட்ட வார்த்தையில திட்டீட்டு வீட்டை விட்டு வெளியில கிளம்பீட்டேன். ஒரு குச்சியை எடுத்துட்டு என் பின்னாலயே வந்தான். கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ரோட்டுல நிக்க வைச்சு வீட்டுக்கு வரச்சொல்லி மிரட்டினான். இதையெல்லாம் பாத்துகிட்டு இருந்த
வெங்கட்ராவ் அவனுக்கு புத்தி சொல்ல வந்தாரு. உலகமே மதிக்கற அத்தனை பெரிய மனுஷன் அவரு. அவரை உங்க வேலையைப் பாத்துட்டு போங்க சார்னு அவமதிச்சுட்டான். அவர் முகமே சுருங்கிடுச்சு. போதும்டா ரங்கா. இந்த வாழ்க்கை போதும். பழசை எல்லாம் நினைச்சு பொருமி எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆனா…” எதையோ சொல்ல வாயெடுத்தவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்

          ரங்காச்சாரிக்கு தர்மசங்கடமாய்ப் போய்விட்டது. மாங்காய் கீற்றுகள் விற்கும் சிறுமி ஒருத்தி கஜபதி அழுவதைப் பார்த்து ஸ்தம்பித்துப் போய் நின்றாள். இத்தனை வயதான ஆண் அழுது அவள் பார்த்தில்லை. ஒரு சில விநாடிகள் அங்கே நின்றவள் சட்டெனக் கிளம்பிவிட்டாள். ஒரு பத்தடி தள்ளி எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் இவர்கள் இருவரையும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். கஜபதி இப்போது தன் இரண்டு கைகளால் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தார். 

          ஒவ்வொரு வீட்டையும் முதுமை ஒரு பிசாசைப் போலப் பிடித்து வைத்திருக்கிறது. வெகு சிலரே அந்தப் பிசாசின் தொல்லைகளில் இருந்து கொஞ்சம் தப்பிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் துணையை இழந்த பின் வெறுமையால் ஆக்ரமிக்கப்படுகிறார்கள். அவர்களின் பகல்கள் கடும் உஷ்ணம் நிறைந்தது. அவர்கள் இரவுகளில் வெற்று வானத்தின் கீழ் இருமையால் போர்த்தப்பட்டுப் படுத்துக் கிடக்கிறார்கள்.

          “டேய் கஜா. ஸ்டாப் இட். ப்ளீஸ் ஸ்டாப் இட். எழுந்திரு போதும். நாம கிளம்பலாம். ஆளுக்கொரு சாம்பார் வடையும் காஃபியும் சாப்பிடலாம். கமான்” ரங்காச்சாரியின் பேச்சு கஜபதிக்கு காதில் விழவே இல்லை. ஆனால், அவரின் அழுகை சற்று ஓய்ந்திருந்தது. சற்று நேரம் கழித்து இருவரும் எழுந்து நடக்கத் தொடங்கினார்கள். ரங்காச்சாரி ஆதரவாக கஜபதியின் தோளில் தனது இடது கையைப் போட்டவாறே வலது கையால் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு நடந்தார். கஜபதி தன் மஞ்சள் பையை தன் நெஞ்சுப் பகுதிக்கு மேல் வைத்து இறுகப் பற்றினார். அந்த இறுக்கம் அவருக்குத் தேவைப்பட்டது போலிருந்தது. அதைக் கவனித்த ரங்காச்சாரி எதையோ பேச வாயெடுத்தவர் எதுவும் பேசாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கெண்டார். அவர்கள் கடந்து போன மரங்கள் அனைத்தும் இறுக்கமாகவே இருந்தன இலைகளின் எந்த அசைவையும் காட்டாமல்.

         

          இப்படி தாங்கவொண்ணா வலியை சுமக்கும் கஜபதிகளும், இன்றைக்கு கஜபதிக்கு நேர்ந்தது நாளைக்கு தனக்கும் நேரலாம் என யோசிக்கும் ரங்காச்சாரிகளும் எல்லா பார்க்குகளிலும் அமர்ந்து கொண்டோ அல்லது மொட்டை மாடிகளில் உலாத்திக்கொண்டோ அல்லது தனி அறையில் உட்கார்ந்து கொண்டோ இருக்கலாம். முதுமை என்பது எல்லோருக்கும் நல்லபடியாக வாய்ப்பதில்லை. எந்தக் கவலையுமின்றி தன் அந்திமத்தைக் கழிப்பவர்களின் எண்ணிக்கையைக் காலம் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. முதுமையில் தனிமை எவ்வளவு கொடுமையோ அதே அளவு கொடுமையானது முதுமையில் புறக்கணிப்படுதல். அதனால் வரும் வலி சாதாரணமானது இல்லை. நெருங்கிய சொந்தங்களால் புறக்கணிப்படுதல் போல அவமானகரமான விஷயம் ஒன்றுமில்லை. அப்படிப் புறக்கணிக்கப்படுபவர்களின் படுக்கை அம்புப் படுக்கை போன்றது. மரணிக்கும் வரை உறக்கம் வராது. அந்த அம்புப்படுக்கையால் உண்டான ரணம் ஆறவே ஆறாது. 

          “எங்கே போயிட்டு வர்றீங்க?” மனோ வாசலிலேயே மடக்கிக் கேட்டான்.

          “சும்மா பார்க் வரைக்கும் ஒரு வாக்கிங் போயிட்டு வந்தேன்.”

          “ஏன் கால் வீடு தங்காதோ?” உள்ளேயிருந்து மருமகள் கேட்டாள்.


          “ஏம்ப்பா உங்ககிட்ட வீடு விஷயமா பேசினேனே? என்னாச்சு?”

          “இன்னும் முடிவு பண்ணல.”

          “சீக்கிரம் பண்ணுங்க. கிஃப்டு டீடா மாத்திக் கொடுத்தா செலவு குறைச்சல். அப்புறம் கோயமுத்தூர்ல ஓல்ட் ஏஜ் ஹோம் பாத்துருக்கேன். அங்கே போய் இருங்க.”

          “நான் ஏம்ப்பா அங்கே போய் இருக்கணும். இங்கே ஏன் வீடு இருக்கே. சாகற வரைக்கும் இங்கதார் இருப்பேன்.”

         

          “இங்கே இருந்து இன்னும் எத்தனை நாள் உயிரை வாங்கும்னு தெரியலை” உள்ளேயிருந்து குரல் கேட்டது. கஜபதி எந்த எதிர்வினையும் காட்டாமல் கொல்லைப்புறத்திலிருந்த தன் அறைக்குச் சென்றார். உள்ளே நுழைந்ததும் சீலிங் ஃபேனை ஓட விட்டார். தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது அவருக்கு. எவர்சில்வர் குடத்தில் இருந்த தண்ணீர் குறைந்த அளவே இருந்ததால் இருப்பதை குடித்து தாகத்தை தற்காலிகமாகத் தீர்த்துக் கொண்டார்.

சற்று நேரம் படுக்க வேண்டும் போலிருந்தது. படுக்கையில் சாய்ந்தார். நாளும் ஒவ்வொரு அவமானத்தோடும் அது தரும் துயரத்தோடும் எத்தனை நாள்கள் வாழ்வது என்று நினைத்தவாறே ‘சுமதி!’ என்று தன்னையறியாமல் உரக்கக் கூறியவாறே புரண்டு படுத்தார்.

-madhu_s2014@yahoo.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button