
அவளா!? அவள்தானா !!? அது அவள்தானா!!!? ஆமாம் அவள்தான்!. அவள் பெயரை ஞாபக அடுக்கிலிருந்து உடனடியாக மீட்டெடுத்தான். லெச்சு(இலட்சுமி). ஆமாம் லெச்சுதான்!.
அவனால் சில வினாடிகள் நம்ப முடியவில்லை. மெல்ல அவளுக்கான அடையாளங்கள் புலப்பட ஆரம்பித்தன. அவனின் மனைவி மென்மேலும் அவளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, இவன் அவளை அங்குலம் அங்குலமாக பார்வையால் அளக்க ஆரம்பித்தான். தலைமுடியை ஒழுங்காக வாராமல் கொண்டை போல் அள்ளி சொருகியிருந்தாள். கன்னத்திலும் முன் நெற்றியிலும் சில முடிகள் விழுந்து வியர்வையில் ஒட்டிக்கொண்டிருக்க, மேலும் சில முடிகள் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருப்பது மிக அழகாக இருந்தது அவளுக்கு. மாநிறத்தில் நல்ல கிராமத்துக் களையான முகம் அவளுக்கு. ஈரமான உதடுகள், பளபளப்பான கழுத்து, எடுப்பான முன்புறங்களும் பின்புறங்களும் மற்றும் அழகான இடுப்பு மடிப்புமாய் ஒரு கையில் குப்பைக் கூடையும், முழங்கால் தெரியும் அளவுக்கு அள்ளிச்செருகிய சேலையுமாய் அவள் இவனின் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாள். இவனின் கண்கள் அவளை மேய்வதை அவள் உணர்ந்து மெல்ல அவளின் முகம் பிரகாசமடைந்தது. மெல்ல அந்த முகத்தில் நாணம் படர, அனிச்சைச் செயலாக மாராப்பையும் இடுப்பு கொசுவத்தையும் தளர்த்தி உடலை மறைத்துக் கொள்ள, இவன் மெல்ல சுதாரித்துக் கொண்டான். திருமணமும் அதனைத் தொடர்ந்து வரும் சம்பிரதாயங்களும் ஓய்ந்தபின் முதன்முறையாக அவன் மனைவியுடன் அவளின் ஊருக்கு ஒரு சிறிய வேலைக்காக வந்திறங்கியிருக்கிறான். அதுவும் காலை ஏழுமணிப் பேருந்தில். அதிகாலையிலேயே அவனது ஊரிலிருந்து கிளம்பியதால் அவன் எதுவும் வாங்கிக்கொண்டு வந்திருக்கவில்லையாகையால், மனைவியை பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்புறம் காத்திருக்க சொல்லிவிட்டு, பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடைகளிலிருந்து கொஞ்சம்போல் தின்பண்டங்களும் உளுந்த வடைகளும் பொட்டலம் கட்டி வாங்கிவரும் இடைவெளியில்தான் அவன் மனைவியும் அவளும் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.
அவனுக்கு அவர்களுடன் கலந்து கொள்வதா வேண்டாமா? என்ற சிறிய குழப்பத்தில் சற்றுத் தள்ளியே நின்றுகொண்டான். அவர்களின் உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்க தன் மனைவி தன்னைக் கவனிக்கவில்லை என்று தெரிந்ததும் மீண்டும் மிக கவனமாக அவளின் முக அமைப்பை ஆராய்ந்தான். இந்த மேல் உதட்டு மச்சத்தையும் கரு விழிகளையும் மிக அருகில் பார்த்திருக்கிறான். அவளும் மிக நாசுக்காக இவனின் மனைவியிடம் பேசிக்கொண்டே இவனை கவனிப்பதையும், அவளின் இதழோரம் மெல்ல அரும்பும் நமுட்டுச் சிரிப்பையும் இவன் கவனிக்கத் தவறவில்லை. ஒருவழியாக இவனது மனைவிக்கும் அவளுக்குமான உரையாடல் முடிவுக்கு வந்தது. இவன் மனைவியுடன் திரும்பி நடக்கையிலும் அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். பத்தடி சென்றிருப்பான். ஏதோ மனதில் உறுத்த இவன் மட்டும் திரும்பிப் பார்த்தான். இப்போதும் அதே நமுட்டுச் சிரிப்போடு இவர்களையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் பார்ப்பதைப் பார்த்ததும் அவளின் சிரிப்பு பெரிதாகி இவனுக்கு சைகை காட்டினாள் மிக உரிமையோடு. அவள் காட்டிய சைகையின் பொருள்
‘ஜோடிப் பொருத்தம் சூப்பர்’
உடனேயே இவனுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு சிலிர்ப்பு ஓடியது. மெல்ல உடலில் ஒரு புது உற்சாகம் தொற்றிக்கொள்ள மனம் ஒரு இனங்கானாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. மீண்டுமொருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் மெல்லத் திரும்பி நடந்து போய்க் கொண்டிருந்தாள். ஒருவினாடி அவள் அசைந்து நடந்து போகும் அழகை இரசித்துப் பார்த்தவன் தனக்குத்தானே இவ்வாறு எண்ணிக்கொண்டான்
‘அப்பா! இந்த வயசிலும் எப்படி இருக்கா?!’
இவன் மனைவியிடம் ஒன்றுமே தெரியாததுபோல் கேட்டான்.
“யார் அது? ரொம்ப நேரம் கொஞ்சிக் குலவிக்கிட்டிருந்த?”
இவன் மனைவி இவனைவியப்புடன் பார்த்து பின்பு சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள்.
“ஒங்களுக்கு அவுங்கள தெரியும்ன்னுல்ல நெனச்சேன். எங்க சொந்தம்தான். பேரு லச்சுமி. நம்ம கல்யாணத்துக்கு அவங்களால வர முடியல. அதான் சாயந்திரம் வீட்டுக்கு வர்றன்னுருக்காங்க. வந்தா அறிமுகப்படுத்துறேன். உங்க ஊருல செல்வம்ன்னு ஒருத்தர் இருக்கார்ல அவங்களுக்கும் சொந்தக்காரங்கதான்.“ – என்று விட்டு கூடுதலாக இன்னொரு தகவலையும் சொன்னாள்
“நீங்க வந்து என்னப் பொண்ணுப் பாத்துட்டுப் போனதும் எங்கிட்ட வந்து பேசிக்கிட்டுருந்தாங்க. உஙகள நீங்க படிச்சிக்கிட்டு இருக்கும் போதே பார்த்திருக்காங்களாம். அப்பா அம்மா கூட உங்களப் பத்தி விசாரிச்சாங்க. இவங்களும் உங்களை பத்தி சொல்லிக்கிட்டிருந்தாங்க ”-
என்று நிறுத்தினாள். ஆர்வம் தாளாமல் இவன் மெதுவாகக் கேட்டான்
“என்ன சொன்னாங்க என்னப் பத்தி?”
அவள் சொன்னாள் கொஞ்சம்போல கேலித் தொனியில்
“நீங்க ரொம்ப நல்லவர்ன்னு. நம்பிப்பொண்ணு கொடுக்கலாம்னு ”.
இவனுக்கு ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போலிருந்தது. மென்மேலும் இவனது நினைவுகளை அது தூண்டிவிட்டது. இன்னமும் கூட இவன் தன்னைத்தானே நொந்து கொள்ளும் தருணம் அது. தான் எப்படி இவ்வளவு மட சாம்பிராணி ஆனோம் என்று இன்னமும் உள்ளுக்குள் மருகும் சம்பவம் இப்பொழுதும் அது. நன்றாக நினைவு இருக்கிறது. அப்பொழுது +2 படித்துக் கொண்டிருந்தான். பொங்கல் விடுமுறைக்காக ஒருவாரம் முன்பே ஊருக்கு வந்திருந்தான். மெல்ல மெல்ல இளமை பருவத்தின் உணர்ச்சிகள் தலை காட்டிய தருணம் அது. சிறுபிள்ளைகளுக்கான ஆசைகளும் கனவுகளும் மறைந்து இளமையின் திமிர்த்தனங்கள் பொங்கிப்பெருகிய காலம். அந்தக்காலத்தில் நேர விரயத்திற்கான முக்கிய மூன்று காரணங்கள் சினிமா, கிரிக்கெட் மற்றும் மிக முக்கியமாக பெண்கள். இவனும் விதிவிலக்கல்ல. பெண்களை முன்னே விட்டு பின்னால் பார்த்து மதிப்பெண் போடவும், எண்ணத்தில் அசை போடவும் தொடங்கியிருந்தான். திரைப்பட நடிகைகளை (அவர்கள் அம்மன் வேடமே இட்டிருந்தாலும்) இரசிக்கவும், கனவுகளிலும் கற்பனைகளிலும் அவர்களுடன் குடும்பம் நடத்தவும் ஆரம்பித்திருந்தான்.
அந்த சமயத்தில்தான் செல்வத்தின் திருமணம் வந்தது. செல்வம் இவனுக்கு மாமா முறை. எப்படி என்று தெரியாது. ஆனால், ஏதோவொரு தூரத்து வழியில் மாமா முறைதான். செல்வம் வீட்டிற்கு ஒரே பிள்ளை. இவனின் அண்ணனும் செல்வமும் இணைபிரியா நண்பர்கள். ஆகவே இவனும் கூட திருமண வேலைகள் சிலவற்றில் முடிந்த அளவு ஒத்தாசையாக இருக்க ஆரம்பித்தான்.
பொங்கல் முடிந்து ஒருவாரத்தில் திருமணம். ஆனால், அதிசயமாக மார்கழி கடைசியிலேயே கல்யாண பரபரப்புத் தொற்றிக் கொண்டது. திருமணத்திற்கு ஒருவாரமே இருந்த பொழுது ஒரு விறுவிறுப்பான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்தது. அது சுதந்திரக் கோப்பை என்று நினைவு. இவன் கிரிக்கெட் பைத்தியமும் பிடித்து அலைந்த சமயம் அது. எனவே எவ்வளவு பெரிய வேலையிருந்தாலும் ஆட்டம் உள்ள நாளில் விடுமுறைதான், வேலைகளுக்கு.
அப்பொழுது ஒருநாள் இவன் மதிய உணவிற்காக வருகையில் வீட்டில் அம்மாவுடன் இரண்டு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களுமே களையான முகத்துடனும், கிராமப் பெண்களுக்கே உரிய வனப்புடனும், வடிவத்துடனும் இருக்க இவனுக்கு மெலிதான கூச்சம் தோன்றியது. என்னதான் பெண்களின் பின்னால் வெறித்துப் பார்த்தாலும் இவன் பெண்களின் முகம் பார்த்து பேச அஞ்சும் கூச்ச சுபாவத்துடன்தான் இருந்திருக்கிறான். எனவே அவர்களிடம் பேச்சுக் கொடுக்காமல், “அம்மா, சோறு “என்றவாறே உள்ளே நுழைந்தான். அம்மா ஏதோ கை வேலையாக இருக்க, அம்மா அந்தப் பெண்களிடம் இவனுக்குப் பரிமாறச் சொன்னதும் இவனுக்கு ஏனோ உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. அவர்கள் இவனுக்குப் பரிமாறுகையில் உரையாடல் தொடங்கியது.
“ஒம்பேரு என்ன? ”
சொன்னான்
“எத்தினியாவது?”
“+2”
“பாத்தா அப்படித் தெரியல. ஏதோ பத்தாப்பு படிக்கிற மாறியில்ல இருக்க.எந்த க்ரூப்? ”
“நெசந்தான். வேணுமின்னா அம்மாட்ட கேளுங்க.மேத்ஸ் க்ரூப் ”
“வாங்க போங்க எல்லாம் வேணாம். நாங்களும் +1 தான். உன்னைவிட சின்னவங்கதான். இன்னும் ரெண்டு மாசத்துல பப்ளிக் எக்ஸாம் இருக்கே. பாஸ் பண்ணிடுவியா?”
இவனுக்கு கோபம் வந்தது. யாரைப் பார்த்து என்று எகிறப் போனான். அதற்குள்ளாக அம்மா குறுக்கிட்டு, “அதெல்லாம் பாஸ் பண்ணிடுவான். எப்பவும் பள்ளிக்கொடத்துல இவன்தான் முதல்மார்க் “என்றதும் அவர்கள் முகம் மெல்ல சுதாரித்துக்கொண்டது. அதன் பிறகு இவனுக்கு மரியாதை வார்த்தைகளில் கூடியது.
“இல்லத்த. சும்மாதான் கேட்டோம். ஏன் மாமாவ நாங்க கிண்டல் பண்ணக்கூடாதா? என்ன மாமா நீங்களே சொல்லுங்க நாங்க கிண்டல் பண்ணக் கூடாதா? “
இவனுக்கு சிரிப்பு வந்தது. மெல்லக் கூச்சம் மறைந்து அவர்களுடன் இயல்பாகப் பேச ஆரம்பித்தான். அவர்களிருவரும் செல்வத்திற்கு தங்கை முறை என்றும் செல்வத்தின் திருமணம் முடியும் வரை எங்கள் கிராமத்தில் இருக்கப் போவதும் பேச்சுவாக்கில் தெரியவந்தது. இவனுடைய +2 பாடப் புத்தகங்களைக் கேட்டு வாங்கினார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவனுடைய வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு உதவத் தொடங்கினார்கள். இவனுடைய வீட்டிலிருந்த அனைவருக்கும் அவர்களைப் பிடித்துவிட,வீ ட்டைக் கூட அவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு போக ஆரம்பித்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிராமத்திற்கே உரிய தொணியில் கேலியும் கிண்டலுமாய் சீண்ட ஆரம்பித்தார்கள். இவனுக்கும் அது பிடித்திருந்தது. இருப்பினும் தனியாக அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவர்களிருவரில் ஒருவள் கொடி போன்ற தேகத்துடன் குடும்பப் பாங்கான தோற்றத்துடன் இருப்பாள். அவள் பெயர் இலட்சுமி. மற்றொருவள் சற்றேப் பெருத்த தேகத்துடன் இளமையின் பூரிப்புகள் தளும்ப அதீதமான உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும், யாருடனும், எப்பொழுதும், எந்த ஒரு கூச்சமும் இன்றி பேசிக் கொண்டிருப்பாள். அவள் பெயர் செல்வி. பழக ஆரம்பித்த சில நாட்களில் இலட்சுமியின் பெயர் லெச்சு என்று சுருங்க ஏனோ செல்வியின் பெயரை மட்டும் அவனால் மேற்கொண்டு சுருக்க முடியவில்லை.
அன்றைக்கு இந்தியாவும் பாகிஸ்தானுக்குமான இரண்டாவது ஆட்டம் என்று நினைவு. முதலில் ஆடிய இந்திய அணியில் அனைவரும் சொதப்ப, அவனுக்கு பெருத்த ஏமாற்றம். இந்திய அணி சொற்ப ஓட்டங்களிலேயே (இருநூறுக்குக் குறைவென்று நினைவு) தனது ஆட்டத்தை முடித்தபொழுது மின்சாரம் நின்றுபோனது. மெல்லிய ஏமாற்றத்துடன் வயிற்று பசியைத் தீர்க்க வீடு வந்தான். மனம் முழுதும் ஆட்டத்தின் போக்கே நிறைந்திருக்க, எப்படா மின்சாரம் வரும் என்று பொருமியபடியே வீட்டிற்கு வந்தான். அப்பொழுது இவனது வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. இவனது நெருங்கிய உறவினரின் வீட்டில்தான் தொலைக்காட்சி இருந்தது. அங்கிருந்துதான் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வீடு திறந்திருந்தது. அம்மா உள்ளே இருப்பாள் என்றெண்ணி உள்ளே நுழைந்தவனுக்கு திடீர் ஆச்சர்யமாக அந்த இரு பெண்களும் ஏதோ இரகசியம் பேசிக்கொண்டிருந்தது போல் இருந்தது. மிக நெருக்கமாக அப்படி என்ன பேசுவார்களோ என்று எண்ணியவாறே இவன் செயற்கையான செருமலுடன் உள்ளே நுழைந்தான். திடுக்கிட்டு விலகியவர்கள் இவனைக் கண்டதும் நாணிக் கோணினார்கள். அப்பொழுது இருவரின் மேலாடையும் மெல்ல விலகியிருந்ததை இவனின் கண்கள் கவனித்தாலும் மனம் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை. மனம் முழுக்க கிரிக்கெட் நிறைந்திருக்கும்போது இதை எல்லாம் கவனத்தில் கொள்ளத் தோன்றவில்லை அவனுக்கு. செயற்கையான பாவனையுடன் செல்விதான் பேசினாள்
“மாமா, அத்தை வயக்காடு வரைக்கும் போய்ட்டு வரேன்னுட்டுப் போய்ருக்காங்க. நீங்க வந்தா சோறு போடச் சொன்னாங்க. சோறு போடட்டுமா ?” என்று கேட்டாள் .
சரியென்று தலையசைத்துவிட்டு கைகால் கழுவிவிட்டு வந்தமர, இலட்சுமிதான் பரிமாறினாள். செல்வி கொஞ்சம் தள்ளி இவனுக்கு முன்பாக அமர்ந்து கடித்துக்கொள்ள சின்ன வெங்காயம் உரித்துக் கொடுக்க ஆரம்பித்தாள். பரிமாறிவிட்டு மிக நெருக்கமாக இலட்சுமி அமர்ந்து கொண்டது இவனுக்கு என்னவோ செய்தது. மெல்ல வியர்க்க ஆரம்பித்தது. இவனுக்கு வியர்ப்பதைப் பார்த்து இலட்சுமி மெல்ல இன்னும் கொஞ்சம் நெருக்கமாக அமர்ந்து தனது தாவணியின் முந்தானையால் இலாவகமாக விசிறிவிட ஆரம்பித்தாள். செல்வி கொஞ்சம் குறுகுறுவென்று இலட்சுமியையும் இவனையும் பார்த்து மெலிதாக சிரித்த சிரிப்பு இவனுக்கு ஏதோவொன்றை சொல்வதைப் போல இருந்தது. இவனுக்கு அது மேலும் கூச்சத்தை அதிகமாக்க, வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தான். இடையில் அவர்களிருவரின் பார்வைகள் அடிக்கடி சந்தித்ததை ஏனோ இவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. செல்விதான் ஆரம்பித்தாள்
“ஏன் மாமா.. எங்கக்கிட்டே பேசுறதுக்கே இப்புடி கூசுறீங்களே. நாளக்கி காலேஜ் போய் அங்க இருக்கிறப் பொன்னுங்கக் கிட்ட எப்டிப் பேசுவீங்க?” என்றதும் இலட்சுமி மிக அழகான கேலியான சிரிப்பை உதிர்த்துவிட்டு
“செல்வி, அதெல்லாம் ஆளப் பாத்து சொல்ல முடியாது. ஊமக் கோட்டான் மாரி இருக்கிறவங்கள நம்பவே கூடாது. அவங்கதான் படிச்சிட்டு வரும்போதே ரெண்டு புள்ளகுட்டிங்களோட வருவாங்க.” என்றதும் ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் செல்வி களுக்கென்று சிரிக்க ஆரம்பித்தாள். இவனுக்கு என்னவோ போலிருந்தது. மெல்லத் தனது தோள்பட்டையால் இவனது தோள்பட்டையில் இடித்துவிட்டு இலட்சுமி கேட்டாள் கேலியும் குறும்பும் இழையோட
“என்ன மாமா பதிலையே காணோம்?”
அமைதியாக குடும்பப்பாங்கானத் தோற்றத்துடன் இருக்கும் இலட்சுமிதான் இப்படிப் பேசுகிறாள் என்பதை நம்ப முடியவில்லை இவனால். அவசரம் அவசரமாக சாப்பிட்டு முடித்தான். சாப்பிட்ட தட்டில் கையை கழுவி விட்டு எழுந்தான். கழுவியத் தட்டை எடுத்துக்கொண்டு செல்வி மாட்டுத் தொட்டியில் ஊற்றுவதற்காக தொழுவம் சென்றுவிட , இவன் கையைத் துடைப்பதற்கு துண்டைத் தேடிக் கொண்டிருந்தான். சட்டென்று இவனை நெருங்கி வந்த இலட்சுமி தனது இடது கையால் இவனது வலது கையைப் பிடித்து தனது தாவணியின் முந்தானையால் துடைத்தாள். இவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வியர்த்தான். மெல்ல அவளின் தாவணி இவனது கழுத்து மற்றும் நெற்றியை ஒற்றியது. கரு கருவென்றிருந்த அவளின் கரு விழிகளும் மேலுதட்டிலிருந்த ஒரு சிறிய கடுகளவு மச்சமும் அவனை என்னவோ செய்தன. அவள் இவனது நெற்றியைத் துடைக்கும்பொழுது அவளின் முன்புற வனப்புகளும் அவளின் பளீரிட்ட மடிப்பற்ற இடுப்பும் இவன் கண்ணுக்குத் தெரிய மேலும் வியர்த்தான் அவன். தொண்டை வறண்டு வார்த்தைகள் உலர்ந்து போயிருந்தன. மெல்ல எச்சில் கூட்டி விழுங்கினான். இன்னமும் அவள் இவனது கையை விடுவிக்கவில்லை அல்லது தான்தான் விடுவித்துக் கொள்ளவில்லையோ என்றும் எண்ணினான் அவன்.மெ ல்ல அவள் அவனை இன்னும் நெருக்கமாக நெருங்க, இவனுக்கு மெல்லப் படப்படப்பு அதிகமானது. ஏறத்தாழ இவனது கழுத்தில் அவளது மூச்சுக்காற்றுப் படுகையில், யாரோ வரும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விலகினான். மெலிதாக கால்களில் நடுக்கம் சேர்ந்து கொண்டது. வந்தது செல்விதான். நல்ல வேலையாக அம்மா இல்லை.அவன் பெருமூச்சுவிட்டான். திடீரென்று மின்சாரமும் வந்து விட, “லெச்சு(இலட்சுமி), தயவு செஞ்சு என்ன விட்டுரு. நான் மேச் பாக்கப்போறேன். அம்மா வந்தா சொல்லிடு” என்றவாறே அவளின் கையை உதறிவிட்டு அவன் ஓட ஆரம்பித்தான். அவர்களிருவரும், “மாமா நில்லு மாமா” என்றதைக் கண்டுகொள்ளவேயில்லை. கடைசியாக யாரோ ஒருத்தி வெறுப்போடு சொன்னது இவன் காதில் விழுந்தது
“எரும மாடு. நீயெல்லாம் உருப்படவே மாட்ட !”
அன்றைய ஆட்டம் சரியாக அமையவில்லை. குறைந்த இலக்கை மிக எளிதாக பாகிஸ்தான் அடைந்து வெற்றியடைந்துவிட்டது. பெருத்த ஏமாற்றம். அன்று வெற்றிக்கனி கிட்டாததால் இறுதிப் போட்டிதான் தொடரின் வெற்றியை முடிவு செய்ய இயலும். பெருத்த ஏமாற்றத்துடன் இவன் வீடு திரும்பலானான். திரும்புகையில் அவ்விரு பெண்களின் நினைவு வந்தது. மெல்ல அனைத்துக் காட்சிகளும் நினைவின் ஆழத்திலிருந்து மீண்டுவர இவனுக்கு என்னவோ போலிருந்தது. ஏதோ ஒரு நல்ல வாய்ப்பைத் தவற விட்ட ஏமாற்றம் தோன்ற ஆரம்பித்தது .அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்தான். வீடு பூட்டப்பட்டு, சாவி வழக்கமான இடத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.
இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிவாகை சூடியது. முந்நூறுக்கும் மேற்பட்ட இலக்கை சச்சினின் அதிரடியாலும், கங்குலி மற்றும் ராபின் சிங்கின் பொறுப்பான ஆட்டத்தாலும், கனிஷ்கரின் ஆட்டத்தின் கடைசி பந்திற்கு முதல் பந்தில் அட்டகாசமாக அடித்த நான்கு ரன்களாலும் இந்தியா தோல்வியிலிருந்து மீண்டது. ஆனால் அவன் மீளவில்லை. அதன் பிறகு அவர்களிருவரும் இவனது வீட்டிற்கு வரவேயில்லை. செல்வத்தின் வீட்டில் பார்க்கும் போதும் ஒருவித முகச்சுளிப்போடு விலகிப் போனார்கள் திருமணம் முடிந்து அவர்களின் ஊருக்குத் திரும்பிப் போகும்போதும் கூட சொல்லிக்கொள்ள வரவில்லை என்று அம்மா குறைப்பட்டுக் கொண்டாள். இந்தத் தோல்வியிலிருந்து மீள முடியாமல் அவன் கல்லூரிக் காலத்திலும் அதன் பின்னான பல்வேறு இடங்களிலான பணிக்காலத்திலும் தத்தளித்தான். தான் எப்படி வயதிற்கேயுரிய உணர்சிகள் இருந்தும் இந்த சம்பவத்தில் தடம் மாறாமல் போனோம் என்று பலநாள் பலவாறு யோசித்துக் ண்டிருந்தான் அவன். இனியொரு சந்தர்ப்பம் வாய்க்காதா என்று காத்திருந்தான் . ஆனால், அது போன்ற சம்பவங்களோ சந்தர்பங்களோ அவனுக்கு இன்று வரை வாய்க்கவேயில்லை. ஆனாலும் ஒரு வேளை அந்த சந்தர்ப்பத்தில் தான் தடம் மாறியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதில் உள்ள அந்த சுகமும் உணர்கையும் மட்டும் இன்னும் தீரவேயில்லை. இருப்பினும் இவனை இன்றளவும் ஒரே ஒரு கேள்விமட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது .அது
“எரும மாடு. நீயெல்லாம் உருப்படவே மாட்ட”
என்று சொன்னது யார்? இலட்சுமியா,செல்வியா? உருப்படவே மாட்டேன் என்றார்களே .அவர்கள் உருப்பட்டிருப்பார்களோ?. தடம் மாறி விழுவதுதான் உருப்படும் வழியா?
ஒருவேளை தனது மனைவி சொன்னது போல் இன்றிரவு வந்தால் அவளிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டான் அவன். ஆனால், எப்படிக் கேட்பது என்று எண்ணுகையில் அடி ஆழத்திலிருந்து ஏதேதோ எண்ணங்கள் தோன்ற மெல்ல மெல்ல மனம் புளகாங்கிதம் அடைந்தது. மீண்டுமொருமுறை தடம் மாறும் வாய்ப்புக் கிடைத்தால்?! மெல்ல உற்சாகம் அடைந்தவனாய் தனது மனைவியிடம் கேட்டான்
“ஆமா. அந்தப் பொம்பள உனக்கு என்னா மொற ?”
“யாரு?”
“அதான். காலயில உங்கூட பேசிக்கிட்டுருந்தாங்களே”
“அவுங்களா? அவுங்க எனக்கு அண்ணி மொற. ஏன்? எதுக்குக் கேக்கறிங்க?”
என்றவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல், சொல்லத் தோன்றாமல் எல்லாவற்றையும் புறந்தள்ளினான். மனதில் எங்கோ மூலையில் ஒரு ஏமாற்றம் மிகுந்துவிட, அன்றிரவு இலட்சுமி வந்த பொழுதும், அதன் பிறகும் அவளிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவனுக்கு.