
ஐந்து முறை தவறு செய்து விட்டேன். இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நான் இன்னும் பதினைந்து நிமிடம் காத்திருக்க வேண்டும். கிடைக்கும் இந்த பதினைந்து நிமிடத்தில் கால்வாசி நேரம் போதும் வேற்று கிரக வாசியான என்னை உங்களுக்கு அறிமுகம் செய்ய. எங்களுக்கும் உங்களைப் போன்றே தோற்றம் இருக்கும். பூமியில் உள்ள சகல ஜீவராசிகளும் எங்கள் கிரகத்திலும் இருக்கும்.
என் கிரகத்தின் பெயர் HD96061b. என் பெயர் ஏ1சி6.முகன். ஏ1 என் தலைமுறையின் அடையாளம். ஏ1சி6 எனக்கு தலைமை நிலையம் கொடுத்த எண். முகன் என்னைப் பெற்றவர் வைத்த பெயர். யாருக்கும் நான்கு எழுத்துக்களுக்கு மேல் பெயர் வைக்கக் கூடாது என்பது கட்டளை. அதனால் நீலன், தங்கம், கதிர், மேகன் போன்ற சின்னப் பெயர்கள்தான் எங்களுக்கு வைப்பார்கள். எங்கள் வட்டத்தில் என்னுடைய மூதாதையர் ஆதிக்குடி. நாங்கள் ஒன்பதாம் தலைமுறை. எங்கள் வட்டத்தில் ஏ சீரிஸ் ஒரு கெத்து (பீர்ப்…) திருத்தம் – பெருமை. இப்படி எங்கள் கிரகத்தில் இல்லாத வார்த்தைகளை நான் சொல்லும் போதெல்லாம் பீர்ப் ஒலிக்கும். அது எனக்கு மட்டுமே கேட்கும் அலைவரிசையில் இருக்கும்.
நாங்கள் வசிப்பது ஒரு தட்டு வடிவ நிலப்பகுதியில். மொத்த தட்டும் சேர்ந்தது வட்டம். ஒன்பது வட்டப் பகுதிகளாக பிரித்து, நடுவில் தலைமை நிலையம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்றுதான் அனைவரும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக்கொள்வது என்றால் அவர்கள் தருவதை பெற்றுக்கொள்வது, அதாவது வாங்கிக்கொள்வது என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் விண்ணப்பிப்பதைப் பொறுத்து மூன்று, அல்லது இரண்டு அல்லது ஒரு மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம். வேண்டும் என்றால் இரட்டை குழந்தைகூட பெற்றுக்கொள்ளலாம். என்னிடமும் என் மனைவியிடமும் இருந்து எடுத்த திரவியம், அதற்கு ஏற்றதாக இருந்தால், நாங்கள் இருவரும் ஆளுக்கொன்று மூன்று வருடம் பொறுப்பாக வளர்க்க ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதிகத் தொகை முன்கட்டணமாகக் கட்ட வேண்டும். மூன்று வருடம் கழிந்த பின்னர் எங்களின் நடவடிக்கை பரிசீலனை செய்யப்பட்டு தொகை மீண்டும் வரவில் வைக்கப்படும்.
மூன்று மாதம் காத்திருக்கப் பொறுமை இருந்தால் குழந்தை இலவசம். இரண்டு மாதத்திற்குச் செலவு அதிகம். ஒரு மாதத்திற்குச் செலவு மிக அதிகம். ஆனால், செலவைப்பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. எல்லோர் இருப்பிலும் அதிகத் தொகை உள்ளது. மூதாதையர்கள் செலவு செய்யாத தொகையை அடுத்த தலைமுறைக்கு வரவு வைத்துவிடும் தலைமை அலுவலகம். ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பொழுதே ஒரு தொகையை வரவில் வைத்துவிடுவார்கள். நாங்கள் செலவு செய்யச் செய்யத் தொகை குறையும். எங்கள் வம்சாவளியினர் படிப்பிற்குச் செலவு செய்வார்கள். பழைய பாடில் (பாட் என்பது எங்கள் வீடு) வசிப்பார்கள். மண் வள விவசாயம் செய்வார்கள். சில மைல்கள் செல்ல வாகனப் பயணம் தவிர்த்து நடந்து செல்வார்கள். வாகனத்தில் சென்றால் ஒவ்வொரு பயணத்திற்கும் சிறு தொகை எங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இப்படி சேமித்துக் கொழுத்ததில் ஏ1 வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பெருமை காட்டி திரிந்து கொண்டிருந்தார்கள். ஏ1 வம்சாவளி என்ற பெருமையைத் தவிர வேறு எந்த சலுகைகளும் எங்களுக்கு கிடையாது. சில முக்கியமான தலைமை நிலைய வேலைகளைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும். ஊதியம் அதிகம் கிடைக்கும். எங்களை ஆளத் தலைவர்கள் கிடையாது. தலைமை நிலையத்தில் யார் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்களுடன் பேச முடியாது. எங்கள் தேவைகளை எங்கள் பாட்களில் (பாட் என்பது எங்கள் வீடு) உள்ள தலைமைத் தொடர்பு கருவியில் பதிவிட்டால் அதற்கு ஒப்புதல் வரும் அல்லது பொருள் பாட் தேடி வரும்.
நாங்கள் எங்கள் வாரிசுகளிடம் அல்லது உறவினர் மூவரிடம் அனுமதி பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் எங்கள் வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளலாம். அதற்கும் தலைமை நிலையம் செல்ல வேண்டும். பெற்றுக்கொள்ளத் தலைமை நிலைய மேல்வாசல் செல்ல வேண்டும். முடித்துக்கொள்ளத் தலைமை நிலைய கீழ்வாசல் செல்ல வேண்டும்.
கால் மணிநேரத்தில் முதல் ஐந்து நிமிடம் முடிந்ததற்கு அறிகுறியாய், என் விரலில் மாட்டியிருந்த வட்டக் கருவியில் ஒரு பச்சைக் கல் ஒளிர்ந்தது. இன்னும் கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்லலாம். என் வேலையைப் பற்றிச் சொல்லலாம். எனக்கு தலைமை நிலைய வேலை. பிரஜைகள் பற்றிய தகவல்களை ஆராய்ந்து அறிக்கைத் தயாரிக்கும் வேலை. தகவல்கள் எதையும் நான் தரவிறக்கம் செய்ய அனுமதி இல்லை. என் நினைவில் வைத்து கொண்டாலும் அதையும் படிக்கும் தொழில்நுட்பம் தலைமை நிலையத்தில் இருக்கிறது என்று நம்பச் செய்திருந்தார்கள். நான் நம்பவில்லை.
நம்பாததிற்குக் காரணம் நான் சேகரித்து வைத்துள்ள தகவல்களும் அதை நான் ஆராய்ந்து தொகுத்து வைத்திருந்த படிவமும் முக்கியக் காரணம். என்னுடைய தரவின்படி வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளத் தலைமை நிலையம் செல்பவர்கள் அங்கு நீண்ட நாள் வாழ்கிறார்கள். சிலர் வேற்று கிரகங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
தலைமை நிலையம் நூறு அடுக்குகள் கொண்ட பெகா பாட். பெகா என்பது மெகா என்பதை விட செம்ம பெருசு – (பீர்ப்…. பீர்ப்…) திருத்தம் – மிகவும் பெரியது. இப்படி எங்கள் கிரகத்தில் இல்லாத வார்த்தைகளை நான் சொல்லும் போதெல்லாம் பீர்ப் ஒலிக்கும். அது எனக்கு மட்டுமே கேட்கும் அலைவரிசையில் இருக்கும். தலைமை நிலையம் எனக்குக் கொடுத்த வேலை எனக்குப் பிடித்திருந்ததால் அதிக நேரம் அதில் ஈடுபட்டேன். மூன்று நாட்கள் அப்படி வேலை செய்ததைக் கவனித்திருந்த தலைமை நிலையம் எனக்கு கூடுதல் ஊதியம் வேண்டுமா என்று கேட்டு தகவல் அனுப்பியது. நான் அந்த கூடுதல் ஊதியத்தை வேற்று கிரக ஆராய்ச்சி வளர்ச்சித் திட்டத்திற்கு உபயோகிக்க என் விருப்பத்தைச் சொன்னேன். கூடவே நூறு நாள் “கூடுதல் வேலைத்திட்டத்தில்” என்னைப் பதிவு செய்து கொள்ளுமாறு விண்ணப்பித்தேன். இரண்டு மணிநேரத்தில் சம்மதமும் கூடவே ரோடியம் பதக்கமும் அனுப்பினார்கள். இது எனக்குக் கிடைத்த முதல் பதக்கம்.
இரண்டாவது பதக்கம் கிடைத்த பின்னர் என் மகிழ்ச்சி இரட்டிப்பானது. அது எங்கள் கிரகத்தின் மின்சார சிக்கனத்திற்கு நான் கொடுத்த யோசனையால் கிடைத்தது. எங்கள் கிரகத்தில் இரண்டு சந்திரன். இருவருமே எங்கள் வட்டத்தில் வணங்கப்படும் கடவுள்கள். ஒருவரின் பெயர் நித்யன். மற்றொருவர் மஞ்சொளி. நித்யன் எப்பொழுதும் ஒளி தருவார். மஞ்சொளி மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டுமே பகலில் தெரிவார். இரவில் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்வார். சில நாட்கள் வெள்ளை நிறத்தில் ஒளிர்வார். அவர் வெள்ளை நிறத்தில் தோன்றக்கூடிய நாட்களை முன்கூட்டியே கணித்தும் வைத்திருந்தனர். மஞ்சள் நிறத்தில் ஒளிர்வதால் அவருக்கு அப்படிப் பெயர் என்று ஒரு சாராரும், மேகத்தில் ஒளிந்து இருப்பவர் என்பதால் அவருக்கு அப்படிப் பெயர் என்று ஒரு சாராரும் சொல்லுவார்கள். அவர்கள் தரும் பிரகாசம் என்னைக் கவர்ந்தது. இருவர் ஒளிரும் அந்த நாட்களில் யாரும் மின் விளக்குகள் வீட்டிற்குள் போடாதவாறு, அந்த ஒளியை வீட்டிற்குள் கிடைக்கச் செய்யும் ஒரு கருவியை நான் வடிவமைத்து தலைமை நிலையத்திற்கு அனுப்பினேன். தலைமை நிலையம் சில நாட்களிலேயே அதைப் பரிசோதித்து, உற்பத்தியும் செய்து எல்லா பாட்களிலும் அதைப் பொருத்தியது. என் வரவில் அதிகத் தொகை செலுத்தியது. நான் அதை வேற்று கிரக ஆராய்ச்சி நிதிக்கு வழங்கினேன். ரோடியம் பதக்கத்தை மட்டும் பெற்றுக்கொண்டேன்.
பதக்கம் கிடைக்கும் பேராசையால் நான் எடுத்த மூன்றாவது முயற்சி என் வாழ்க்கையை மாற்றியது.
ஈக்கள் தொல்லை அதிகமாக இருந்தது. ஈக்கள் என்று சொல்வதை விட ஈக்கள் கூட்டம் என்று சொல்லாம். மண் வள விவசாயிகள், ஓர் பருவத்தில் பூக்களை சில வாரங்கள் கொய்யாமல் விட்டு விடுவார்கள். அந்த சமயங்களில் ஈக்கள் அதிகம் இருக்கும். அந்தப் பருவம் இல்லாத சமயத்தில் ஈக்கள் பறப்பதை நான் வித்தியாசமாக உணர்ந்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஈக்களை பிடித்து ஓர் ஓலைப்பெட்டியில் போட்டு, என் மேஜையிலிருந்த இழுப்பானில் பூட்டி வைத்தேன். இரண்டு வாரம் கழிந்த பின்னர் எறும்புகள் சுவடு என்னை அந்த ஓலைப் பெட்டியைத் திறந்து பார்க்க வைத்தது.
ஓலைப்பெட்டியில் ஒட்டிக் கொண்டிருந்த இனிப்பிற்காக வந்திருந்த எறும்புகள் அவை. இரண்டு ஈக்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை. கால் மணிநேரத்தில் இரண்டாம் ஐந்து நிமிடம் முடிந்ததற்கு அறிகுறியாய், என் விரலில் மாட்டியிருந்த வட்டக் கருவியில் மற்றொரு பச்சைக் கல் ஒளிர்ந்தது. நான் சொல்ல வந்ததை இன்னும் ஐந்து நிமிடத்தில் சொல்லி விடுகிறேன். ஏனென்றால் தொடர்பு கிடைத்தவுடன் நான் என் கிரகத்திற்குப் புறப்பட்டு விடுவேன். அந்த இரண்டு ஈக்களும் செயற்கை ஈக்கள். வேற்று கிரகத்திலிருந்து உளவாளிகளாக அனுப்பப் பட்டிருக்கலாம் என்று நான் அனுமானித்து அதை ஆராய்ச்சி செய்தேன். அவைகள் என்னைப் பற்றியும், அக்கம் பக்க பாட்களில் இருந்தவர்களைப் பற்றியும் சேகரித்து வைத்திருந்த தகவல்களை, அதிலிருந்து தரவிறக்கம் செய்தேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் என் பாட் பூட்டப்பட்டது. நான் வெளியே செல்ல அனுமதி இல்லாததை எனக்குத் தெரிவித்தார்கள். கூடவே நான் விண்ணப்பிக்காமலேயே என் வாழ்க்கையை நான் நிறுத்திக்கொள்ள விண்ணப்பித்தாக ஒரு தகவலும் கூடவே இரண்டு சம்மதங்களையும் அனுப்பி இருந்தனர். இன்னும் அரை மணி நேரத்தில் மற்றொரு சம்மதமும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் என்னைக் கிளம்ப ரெடியாக இருக்கும்படி உத்தரவு வந்தது (பீர்ப்… பீர்ப்… பீர்ப்…) திருத்தம் – தயாராக இருக்கும்படி உத்தரவு வந்தது. இப்படி எங்கள் கிரகத்தில் இல்லாத வார்த்தைகளை நான் சொல்லும் போதெல்லாம் பீர்ப் ஒலிக்கும். அது எனக்கு மட்டுமே கேட்கும் அலைவரிசையில் இருக்கும். நான் தலைமை நிலைய கீழ் வாசல் வழியே உள்ளே நுழைந்ததும் வியப்படைந்தேன். அத்தனை பெரிய பாட், அதுவும் நூறு அடுக்குகள், வெளியே இருந்தவரை தெரியக்கூட இல்லை. எப்படிச் செய்தார்கள் என்று பின்னர் கண்டுபிடித்தேன். எல்லாம் ஒரு வாயுவினால் மூடப்பட்டிருந்தது. அங்கு சென்ற பின்னர் நான் மூன்று வருடம் முன்னர் சம்மதம் கொடுத்த இரண்டு பேர் அங்கிருப்பதைக் கண்டுகொண்டேன். ஆனால், பேசவில்லை. அது எங்கள் கிரகத்தின் ஒழுக்கம். பொது வாகனங்களில் செல்லும் பொழுது கத்தி பேசமாட்டார்கள், அலைபேசியில் அனைவரும் கேட்கும்படி பாடல்களையோ, பேச்சுக்களையோ அலற விடமாட்டார்கள், மேடைகள் அமைத்து கூட்டம் கூட்டி கூச்சல் போட மாட்டார்கள், நல்ல நிசப்தம் இருக்கும். பறவைகளின் ஒலிகள் துல்லியமாகக் கேட்கும். என்னை இங்கே அனுப்பியது என் ஆதி குடியின் அடையாளம் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுகொண்டு வரத்தான். ஆனால், நான் இங்கே நடப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். இங்கு ஏதேதோ பேசுகிறார்கள், என் ஆதிக்குடியின் மொழியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். என் ஆதிக்குடியின் ஒழுக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதி குடியின் ஒழுக்கத்தை அழித்தவர்களை நுண்நஞ்சு செலுத்தி அழிக்கும் கோபம் கொண்டேன். இங்கேதான் எத்தனை விதமான அழுக்குகள். பெரும்பாலான இடங்கள் கலீஜாக … கலீஜ் … கலிஜ் … அடடே இதற்கு பீர்ப் ஒலிக்க வேண்டுமே? ஒலிக்கவில்லையே?
கண்டு பிடித்துவிட்டார்கள். நான் மூன்று மணிநேரமாக உபயோகித்து வந்த டெக்னிக்கை… இதற்கும் பீர்ப் ஒலிக்கவில்லை… கண்டுபிடித்து விட்டார்கள். ஐந்து முறை தவறு செய்து, தலைமை நிலையத்துடனான இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருந்தேன் என்பதைக் கண்டுபிடித்து விட்டார்கள். அதை செயலிழக்கச் செய்து விட்டார்கள். சரியாக ஒரு நிமிடத்தில் என்னை இங்கிருந்து தூக்கி விடுவார்கள். விர்ர்ர் என்று எனக்கு மட்டுமே கேட்கும் அலைவரிசையில் இருக்கும் சத்தத்துடன் ஒரு வண்டி வந்துவிடும். நூறு மைல் நெருக்கத்தில் வந்ததும் என்னை மியூட் செய்துவிடுவார்கள். என்னை என் கிரகத்திற்கு கூட்டிச் சென்றுவிடுவார்கள்.
அதற்குள் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வந்த வேலை முடியவில்லை. நான் இங்கு சுத்தம் செய்ய நிறைய இருக்கிறது என்று நம்பினேன். அதற்காக நான் இன்னும் சில காலங்கள் இங்கு இருக்க ஆசைப்பட்டேன். பர்மிஷன் கேட்டேன். ஏ1 வம்சாவளியினர் அகலக்கோடு 10, நிலநிரைக்கோடு 79 என்ற விலாசத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். நிறையக் கெட்டுப் போயிருக்கிறது, திருத்த அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். அது என் வேலை இல்லை என்று சொன்னார்கள். மேலும், எனக்கு வயதாகிவிட்டது என்று சொன்னார்கள். எப்படி என்று கேட்டேன். வயதானதிற்கான அடையாளம் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்கிறாய். அது போதும் என்றார்கள். அந்த வாக்கியங்கள் அவர்கள் என்னுள் செலுத்தியது என்று வாதாடித் தோற்றேன். கிளம்பச் சொன்னார்கள். மூன்று மணிநேரம் டபாய்த்துவிட்டேன். இனி முடியாது.
சரி, எச்சரிக்கை. சாலைகளில் எச்சில் துப்புபவர்கள், அவசரத்திற்குச் சாலையோரம் ஒதுங்குபவர்கள், நீர்நிலைகளில் குப்பையைப் போடுபவர்கள் எல்லோரையும் துரத்தி வதைக்கும் நுண்நஞ்சு சிலவற்றை நான் இங்கே விதைத்துவிட்டேன். அவை பரவும். அப்படிச் செய்பவர்களைத் தேடித் தேடி ……
விர்ர்ர்ர்….