இணைய இதழ் 110சிறுகதைகள்

மன்னிச்சூ… – அருண் பிரசாத்

சிறுகதை | வாசகசாலை

முந்தைய நாள் இரவு போதையில் நடந்த அச்சம்பவம் ஞாபகம் வந்ததும் அதிகாலை திடுக்கென்று எழுந்து அமர்ந்தான் அம்பாதாஸ்.

“அய்ய்யய்ய்ய்ய்ய்யோ” என அவன் அலறத் தொடங்கினான். அந்த அலறல்  சப்தத்தைக் கேட்டு கொல்லையில் குளித்துக் கொண்டிருந்த அவனது மனைவி  ஷ்யாமலை அரைகுறையுடன் வீட்டிற்குள் ஓடி வந்து ,“ஏய் அம்பா, என்ன ஆச்சு, என்ன ஆச்சு?” என அவனைப் போட்டு உலுக்கினாள்.

தனது அலறலை நிறுத்திய அம்பாதாஸ், ஷ்யாமலையின் முகத்தை ஒரு கணம் பார்த்தான். தான் நேற்று இரவு செய்த காரியத்தால் ஷ்யாமலைக்கு நாளை நேரப்போகும் பரிதாப நிலை குறித்து கற்பனை செய்து பார்த்த அம்பாதாஸ்  மீண்டும் அலறத் தொடங்கினான். அம்பாதஸின் வாயிலேயே ஓங்கி ஒரு மிதி மிதித்தாள் ஷ்யாமலை. அலறல் நின்றுப்போகவும் அவன் கீழே விழவும் சரியாக இருந்தது. இப்போது மீண்டும் அலறத் தொடங்கினான், அவள் மிதித்த மிதியால்.

“ச்சீ, நிறுத்து. எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க? ராத்திரி பூரா குடிச்சிட்டு வர்றது,  காலையில பூமியே பிளக்கப்போற மாதிரி அலறுறது” என அவனைக் கடிந்துகொள்ள, அலறல் சப்தத்தை நிறுத்திக்கொண்ட அம்பாதாஸ், வாயை மூடிக்கொண்டு கொல்லைக்குப் போய்விட்டு குளிக்கச் சென்றான். நேற்று இரவு நடந்த அந்த சம்பவத்தை நினைத்து நினைத்து அவன் மனம் பயத்தால் நடுங்கிக்கொண்டே இருந்தது. தனது மனைவியுடன் அந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டால் சுல்தான் தனக்கு மரண தண்டனையைக் கொடுப்பதற்கு முன்பே ஷ்யாமலையின் கையால் சாக வேண்டியது வரும்.

“வேண்டாம், சுல்தானாவது ஒரே மூச்சில் கொன்றுவிடுவார், இவள் நம் மீது தேக்கி வைத்திருக்கும் கோபத்தை எல்லாம் திரட்டி வைத்துக்கொண்டு கொடூரமாகத் துன்புறுத்திக் கொல்வாள்” என அஞ்சி காலை சாப்பாட்டைக் கூட சாப்பிடாமல் வெளியே கிளம்பினான். சுல்தானின் காவலாளிகள் நம்மை வந்து கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன்பு நாமே அரண்மனைக்குச் சென்று நேரடியாக சுல்தானிடமே சரணடைந்துவிடுவோம் என்று முடிவெடுத்த அம்பாதாஸ் தனது கால்களால் வீதியில் பரபரத்தான். ஆறடி தூரம் வரைக்குமே அவனுக்கு பார்வை தெரியும் என்பதை அந்த சம்பவத்தினால் ஏற்பட்ட அச்சத்தில் அவன் மறந்தேபோனான்!

***

மத்திய இந்தியாவை ஆண்டு வரும் சுல்தானின் பிரத்யேக காலணி வடிவமைப்பாளனாகத் திகழ்பவன் அம்பாதாஸ். மோச்சி ஜாதியைச் சேர்ந்த அம்பாதாஸின் முன்னோர்கள் காலம் காலமாக இத்தொழிலை செய்து வருகின்றனர். சுல்தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ராஜபுத்திரர்கள் அப்பிரதேசத்தை ஆண்டு கொண்டிருந்தபோதும் அம்பாதாஸின் முன்னோர்கள் அரசரின் பிரத்யேக காலணி வடிவமைப்பாளராக இருந்தனர்.

சுல்தான் அப்பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு ஆட்சி செய்து கொண்டிருந்த கடைசி ராஜபுத்திர மன்னனின் பிரத்யேக காலணி வடிவமைப்பாளனாக ஆனான் அம்பாதாஸ். அவனது திறமையான வடிவமைப்பைப் பார்த்து அரசன் சன்மானங்களை அள்ளி வீசினான்.

ஒரு நாள் வழக்கம்போல இரவு குடித்துவிட்டு வந்து படுத்த அம்பாதாஸ், காலையில் எழுந்து பார்த்ததும் ஆறடி தூரத்திற்கு அப்பால் அலையலையாகத் தெரிந்தது. கண்களை பலமுறை சிமிட்டி சிமிட்டிப் பார்த்தான். தேய்த்து தேய்த்து மறுபடியும் பார்த்தான். ஆனாலும் அப்படித்தான் தெரிந்தது. ஆறடிக்குள் இருக்கும் அனைத்தும் வழக்கம்போல நன்றாகத் தெரிந்தன. அதற்கு மேல் எல்லாம் நெளிந்தன.

ஷ்யாமலை, “சந்தைக்கு போனும் எழுந்து வா” என்றாள். அவனும் எழுந்து சென்று முகம் கழுவிவிட்டு அவளுடன் சந்தைக்குச் சென்றான். அங்கே சந்தைக்கு நடந்து செல்லும் வழியில் தூரத்தில் ஒரு இடத்தைக் கூர்ந்து பார்த்தான். “ஷ்யாமலை, அங்க கொடுமையை பாரேன். ரெண்டு சின்னப் பசங்க அவங்களோட முதுகுல மூட்டையத் தூக்கிட்டு நடக்க முடியாம நடந்து வராங்க, பாவம்” என்றான்.

அம்பாதாஸ் சொன்னவுடன் அவள் அவன் சொன்ன இடத்தைப் பார்த்தாள். அவளுக்கு திடுக்கென்று ஆனது. அம்பாதாஸை பயத்துடன் பார்த்துவிட்டு, பாதி வழியிலேயே வீட்டிற்கு அழைத்து வந்தாள். “காலையிலேயே குடிச்சிருக்கியா? சாராயப் புட்டியை வீட்டுல எங்கயாவது ஒளிச்சி வச்சிருக்கியா?” என ஓங்கி ஒரு அறை வைத்தாள். “ஏய் ஷ்யாமா, அப்படி எல்லாம் பண்ணலடி. அம்பாதேவி மேல சத்தியமா?” என்று கெஞ்சல் தொனியில் பதில் கூறினான்.

“அப்ரம் என்னய்யா, ரெண்டு எருமை மாடுங்க நடந்து வர்றதப் பார்த்து சின்னப் பசங்க மூட்டையத் தூக்கிட்டு நடந்து வராங்கனு சொல்ற?”

ஷ்யாமலை இப்படிக் கேட்டதும் அவனுக்கு திடுக்கென்று ஆகிவிட்டது. “ஓ அப்படியா, இப்பதானே தூங்கி எந்திரிச்சேன். அதான் தூக்க கலக்கத்துல அப்படி தெரிஞ்சது” என சொல்லி ஒரு வழியாக அன்று சமாளித்தான்.

அன்றைய நாள் தனது நண்பன் ராம்லாலைச் சந்தித்து தன்னுடைய கண் பிரச்சனை குறித்து அழுதுகொண்டே கூறினான். “ராமா, இந்தக் கண்ண வச்சிட்டு எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரிலடா. இதுக்கு எதாவது வைத்தியம் இருக்கானு வைத்தியர்கிட்ட கேட்கனும்” என்று அம்பாதாஸ் புலம்ப, அதற்கு ராம்லால், “டேய் அம்பா, இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா ராஜபுத்ர மகாராஜா காதுக்கு எப்படியாவது போய் சேர்ந்துடும். அதுக்கப்புறம் உன் இடத்துல வேற ஒருத்தன் ராஜாவோட பிரத்யேக காலணி வடிவமைப்பாளனா இருப்பான். உன் பார்வைக்கு பக்கத்துல இருக்குற ஆளுங்க, பொருள் எல்லாம் நல்லா தெரியுதுல்ல. பேசாம இத வச்சே சமாளி. உன் பட்டறை வேலை எல்லாம் இதனால பாதிக்கப்படாது. விஷயத்தை அப்படியே அமுக்கிடு” என்று ஒரு, ’பலே’ யோசனையை ராம்லால் கூற, அம்பாதாஸ் முதலில் தயங்கினான்.

“ஆனா இந்தப் பிரச்சனை  எதுனால வந்ததுனு கூட தெரிலயே எனக்கு” என்று அம்பாதாஸ் கூற அதற்கு ராம்லால், “நீ குடிக்கிற குடிக்கு முழு பார்வையும் அவிஞ்சி போயிருக்கனும். ஏதோ அந்த அம்பாதேவி கருணை காட்டிருக்கா. மூடிட்டுப் போய் வேலையப் பாரு” என்று அவனுக்கு யோசனை கூறி அனுப்பியிருந்தான்.

இந்த சம்பவம் நடந்தபோது அம்பாதாஸுக்கு 24 வயது. இந்த சம்பவத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளில் துருக்கியில் இருந்து படையெடுத்து வந்த சுல்தான் மத்திய இந்தியாவைக் கைப்பற்றிவிட்டான். சுல்தான் ஆட்சிக்கு வந்து இப்போது 30 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அம்பாதாஸுக்கு வயது 54. அம்பாதாஸுக்கு குழந்தைகள் கிடையாது. ஆதலால் எந்தப் பெரிய பொறுப்பும் இல்லை.

————————————————————————————————————————-

இத்தனை ஆண்டுகள் சுலபமாகத் தன்னுடைய கண் பிரச்சனையை தனது மனைவிக்கு கூட தெரியாமல் சமாளித்து வந்தான். ஆனால் நேற்று இரவு நடந்த அந்த சம்பவம் அந்த சமாளிப்புக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துவிடுமோ என்று அவனுக்குள் பயத்தை கிளப்பிவிட்டது.

அப்படி என்னதான் நடந்தது?

அம்பாதாஸுக்கு இருக்கும் கண் பிரச்சனை அவனுக்கு ஒரு சோகம் என்றால் அதனால் அவனுக்கு ஏற்பட்ட இன்னொரு சோகம் ஆவல். அதாவது கடந்த 30 வருடங்களாக ஆண்டுகொண்டிருக்கும் சுல்தானின் முகத்தை அவன் இதுவரை பார்த்ததே இல்லை. ஆம்!

சுல்தான் ஆட்சிக்கு வந்தபோது அதற்கு முன்பு ஆண்ட ராஜபுத்திர மன்னர்கள் என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடித்தார்களோ அந்த சட்டங்கள் அப்படியே இருந்தன. ஜிசியா வரி செலுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை.

அம்பாதாஸ் சுல்தானின் பிரத்யேக காலணி வடிவமைப்பாளனாக இருந்தாலும் அவனுக்கும் இந்த விதி பொருந்தும். அவன் பிறந்த வர்ணம் அப்படி. ஆனாலும் அந்த வர்ண அடுக்கிற்குள் அவன் மகிழ்ச்சியாகவே இருந்தான். மற்ற மோச்சி ஜாதிக்காரர்களை விட இவனுக்கு கொஞ்சம் கூடுதல் மரியாதை இருந்தது. சுல்தானின் பிரத்யேக் காலணி வடிவமைப்பாளன் என்ற ஒரே காரணத்தால்தான் அந்த மரியாதை.

ஆனால் பிராமணச் சேரிக்குள் மோச்சி ஜாதி ஆட்களும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட பிற ஜாதிக்காரர்களும் போக அனுமதி கிடையாது. பிற மேல்ஜாதிக்காரர்களின் சேரிக்கும் இதே விதிதான். இந்த சமூக விதி அம்பாதாஸுக்குமே பொருந்தும். 

அம்பாதாஸ் தான் வடிவமைத்த காலணிகளை சுல்தானிடம் அளிக்க ஒவ்வொரு முறை அரண்மனைக்குச் செல்லும்போதும் எட்டடி தூரத்திலேயே அவன் நிறுத்தப்படுவான். அரண்மனையின் தலைமை சேவகன் முன்னே வந்து அம்பாதாஸிடம் இருந்து காலணி ஜோடியை வாங்கி சுல்தானிடம் காட்டுவான். சுல்தான் பாராட்டுவது மட்டுமே அவனது காதுகளுக்குள் விழும். ஆனால் சுல்தானின் முகமும் அவர் இருக்கும் இடமும் அலையலையாக நெளியும். அதன் பின் சுல்தான் அம்பாதாஸுக்கான வெகுமதியை தனது சேவகன் மூலம் அனுப்புவார். அதன் பின் அம்பாதாஸ் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட வேண்டும்.

இத்தனை வருடங்களாக நடப்பது இதுதான். ஆதலால் தனது உயிர் போவதற்குள் சுல்தானின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று அம்பாதாஸுக்கு ஒரு தீரா ஆசை இருந்தது. அந்தத் தீரா ஆசைதான் அந்த சம்பவத்திற்கே முழு காரணம்.

தர்பாரில் சுல்தான் நீதி பரிபாலணை செய்யும்போது பிரஜைகள் மன்னர் அமர்ந்திருக்கும் அரியாசணத்திற்கு நான்கு அடி தூரத்தில்தான் நிறுத்தி வைக்கப்படுவார்கள். இதில் அம்பாதாஸுக்கான இடம் இன்னும் தூரம்.

முதல் வரிசையில் அமைச்சர்களும் இரண்டாம் வரிசையில் உயர்குடிகளுமே நிறைந்திருப்பார்கள். அங்கேயும் அவனது வர்ணம் அவனைப் பின்னால் தள்ளி நிப்பாட்டியது. அவ்வளவு தூரத்தில் நின்றுகொண்டு நல்ல கண் பார்வை உடையவருக்கு கூட மன்னர் தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை. இப்படி இருக்கையில் அம்பாதாஸுக்கு சுத்தமாக வாய்ப்பில்லை.

எனினும் தர்பாருக்குச் செல்வதை அவன் தவிர்க்கவில்லை. எப்போதெல்லாம் தர்பாரில் சுல்தான் குற்றங்களுக்கான தீர்ப்பையும் அல்லது சட்ட சிக்கலுக்கான தீர்வையும் வழங்குகிறாரோ அந்த நாட்களில் அம்பாதாஸ் தவறாமல் இடம்பெற்றுவிடுவான். அப்படி ஒருநாள் அவன் தர்பாருக்குச் சென்றபோது ஒரு குற்றவாளியின் கைகளில் கயிறு கட்டப்பட்டு சுல்தானின் முன் இழுத்து வந்து நிறுத்தப்பட்டிருந்தான். அலையலையாகத் தெரிந்த காட்சிகளுக்கான விளக்கத்தை அருகில் நின்ற ஒரு இளைஞனின் விவரிப்பில் புரிந்துகொண்டான் அம்பாதாஸ்.

நீதி பரிபாலணை தொடங்கியது…

“செய்த குற்றம் என்ன?” என கர்ஜித்தார் சுல்தான்.

அங்குள்ள நூல் அணிந்த சட்ட வல்லுநர்கள், “சதுர்வேதிகள் வசித்து வரும் சேரிக்குள் புகுந்து அவர்களின் கிணற்றில் தண்ணீர் குடித்தான். இவன் ஒரு இடையன். இவனது குலத்தையும் மீறியது அல்லாமல் சதுர்வேதியின் ஆச்சாரங்களையும் தொந்தரவு செய்துள்ளான்”

“இதற்கு உங்கள் சமூக சட்டத்தில் என்ன தண்டனை?”

“ஆச்சாரத்தை தொந்தரவு செய்த குற்றத்திற்காக இவன் இடையன் குலத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். இவனும் இவனது குடும்பமும் இந்நகரை விட்டு நீங்கி தண்டகாரண்யத்திற்குள் சென்று பிழைத்துக்கொள்ள வேண்டும். இவனும் இவனது குடும்பமும் இனி ஒருபோதும் இந்தப் பிரதேசத்திற்குள் குலத் தொழிலில் ஈடுபடலாகாது என சமூக சட்டம் வேண்டுகிறது சுல்தானே”

“அதுபடியே நடக்கட்டும்” என்று தீர்ப்பு வழங்கினார் சுல்தான்.

சுல்தானைப் பார்த்து கலங்கிய கண்களுடன் “என்னை மன்னித்து விடுங்கள் சுல்தான். என் குலத்தொழிலைத் தவிர வேறு ஏதும் தெரியாது சுல்தானே. காட்டிற்குள் புலிகளுடன் என் குடும்பம் உயிருடன் வாழ இயலாது சுல்தானே. கருணை காட்டவும்” எனக் கெஞ்சினான்.

அவனை காவலாளிகள் இழுத்துச் செல்ல அவன் கெஞ்சிக்கொண்டே இருந்தான். “இன்று பரிபாலணை நிறைவடைந்தது” என்ற குரல் ஒலிக்க “சுல்தான் வாழ்க, ஜகாம்பனா வாழ்க” என்ற கோஷங்கள் எழுந்தன. பின் சபை கலைந்தது. இந்தப் பரிபாலணையைக் கேட்டுக்கொண்டிருந்த அம்பாதாஸின் இதயம் சற்று சீண்டப்பட்டது.

நேராக சாராயக் கடையை நோக்கி அவனது கால்கள் சென்றன. செல்லும் வழியில் அவனுக்கு தர்பாரில் நடந்த பரிபாலணைகள் மனதுக்குள் நிழலாடிக்கொண்டே இருந்தன. சாராயக் கடைக்குச் சென்று ஒரு பாதி புட்டியை உள்ளே இறக்கியபோது, ஒரு விபரீத யோசனை அவனது மூளையின் கதவை தட்டியது.

“எதாவது குற்றத்தில் ஈடுபட்டால் நிச்சயம் நாம் சுல்தானின் முகத்தை அருகில் பார்க்கலாம் அல்லவா?”

இந்த யோசனை அவனது மூளை மட்டுமல்லாது உடல் முழுவதும் பரவியது. “கொலை, கொள்ளை எல்லாம் பாவம். அந்த இடையனைப் போல சதுர்வேதியினரின் ஆச்சாரத்தை நாமளும் சீண்டினால்?…”

குடியும் இந்த யோசனையும் அவனது இரத்தத்தில் கலந்து ஷ்யாமலையின் முகம் அவன் முன்னால் திரையில் வந்தது. ஆச்சாரத்தை சீண்டிய பிறகு குல நீக்கம் அடைந்து காட்டுக்குள் ஷ்யாமலை என்ன பாடு படுவாளோ? அவளை ஏன் இதில் இழுத்துவிட வேண்டும்” என்ற பச்சாதாபம் ஒரு பக்கம் உதித்தாலும் மறுபக்கம் “இவள் எப்போது என்னை மதித்திருக்கிறாள்? மிதித்திருக்கிறாள் அவ்வளவுதான். சுல்தானின் பிரத்யேக காலணி வடிவமைப்பாளனான எனக்கு நமது மோச்சி ஜாதியில் ஓரளவு மரியாதை உண்டு. ஆனால் இத்தனை ஆண்டுகளில் வீட்டில் கொஞ்சமாவது மரியாதை உண்டா?” இவ்வாறு பல யோசனைகளில் முழு சாராய புட்டியும் காலியாக, கடைக்கு வெளியே போதையில் சுருண்டு விழுந்தான்.

இருட்டியிருந்தது. போதை முழுவதுமாக தெளியாமல் அரை போதையில் தெளிவில்லாமல் எழுந்தான் அம்பாதாஸ். வழக்கம்போல் ஆறடிக்கு அப்பால் அலையலையாகத் தெரிய பார்வைக்கு தெரிந்த தூரமும் போதையில் மங்களாக விரிய சதுர்வேதிச் சேரியை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சதுர்வேதிச் சேரியை அடைந்தபோது வீதியில் ஒருவரும் இல்லை. அந்தி சாய்ந்து வெகு நேரம் ஆனதால் வீட்டிற்குள் அடைந்தனர். ஆங்காங்கே தீப்பந்தங்கள் மட்டும் வீடுகளுக்கு வெளியே எரிந்துகொண்டிருந்தன. அவனது பார்வைக்கு அலையலையாய் தெரிந்த தூரத்தில் இருந்து ஒரு வயதானவர் அவனது தெளிவான பார்வையின் எல்லைக்குள் நடந்து வந்தார். குறுக்கே பூணூல் அணிந்திருந்து பட்டை இட்டிருந்த அவர் அம்பாதாஸ் வீதியில் தனியே நிற்பதைப் பார்த்து அருகே வந்தார்.

“நீ மோச்சிதானே. சதுர்வேதி சேரியில் உனக்கென்ன வேலை?” என்று விசாரிக்கத் தொடங்கினார். அவரையே ஒரு கணம் பார்த்துக் கொண்டிருந்தான் அம்பாதாஸ். அவர் பார்ப்பதற்கு நன்றாக செழிப்பாக இருந்தார். மேற்சட்டை அணியாததால் அவரது பால் வண்ண மேனியும் கொழு கொழு உடலும் அம்பாதாஸை ஏதோ செய்தது. உடனே அந்த முதியவரின் வாயை பிடித்து அழுத்தி முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். குடி வேகத்தில் உதட்டை ஓங்கி கடித்துவிட அவனை தனது பலம் கொண்டு தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் புடனியில் மண் தெறிக்க ஓடினார் முதியவர்.

***

“போதைல ஒரு ஆம்பளைக்கு முத்தமா கொடுக்குறது? இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா என்னைய நபும்சகன்னு முத்திரை குத்திடுவானுங்களே. சுல்தான் என்னைய நபும்சகன்னு நினைச்சி என்னைய அந்தப்புரத்துல போட்டு அடிமையாக்கிட்டா என்ன பண்றது? வேண்டாம், எனக்கு மரண தண்டனை கொடுத்துடுங்க சுல்தானே. இந்த இழிவான பெயரோட நான் வாழ விரும்பல சுல்தானே” என மனதுக்குள்ளே பொறுமிக்கொண்டு அரண்மனையை நோக்கி விறுவிறுவென நடந்தான்.

அரண்மனைக்குள் இன்றைய தர்பார் தொடங்கியிருந்தது. அம்பாதாஸின் நண்பன் ராம்லாலும் அங்கே கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டிருந்தான். எப்படியும் நம்மை காவலர்கள் கைது செய்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடனே சென்றான். அவன் அந்தக் கூட்டத்தை நெருங்கவும் சுல்தான் அவைக்குள் வரவும் சரியாக இருந்தது. கூட்டத்தில் நிறுகொண்டிருந்த ராம்லால் அம்பாதாஸ் பதட்டத்துடன் வருவதைப் பார்த்து, “அம்பா, அம்பா” என்று கத்தியும் அம்பாதாஸின் காதில் விழவில்லை.

தான் முத்தம் கொடுத்த முதிய சதுர்வேதி நிச்சயம் சுல்தானிடம் பிராது கொடுத்திருப்பார். அவரும் தர்பாருக்குள் நிச்சயம் இருப்பார். சுல்தான் காலில் விழுந்துவிட்டு அவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு மரண தண்டனையை வாங்கிக்கொள்ள வேண்டும் என மனதுக்குள்ளேயே கற்பனை செய்து புலம்பிக்கொண்டிருந்தான்.

சுல்தானின் உருவம் அலையலையாகத் தெரிந்தது. வருவது சுல்தான்தான் என்பதை ஓரளவு அவனால் கணிக்க முடிந்தது. கூட்டத்தைப் பிளந்துகொண்டு உள்ளே புகுந்து சென்றான். உயர்குடிகள், “மோச்சி மவனே, முன் வரிசையில் உனக்கென்ன வேலை?” என அவனைத் திட்டினார்கள். அதை எல்லாம் அவன் காதில் வாங்காமல் சுல்தானின் காலில் விழுந்து விஷயத்தைச் சொல்லி மன்றாட வேண்டும், மரண தண்டனை கொடுங்கள் சுல்தானே என்று கதற வேண்டும் என மனதிற்குள் தயார்படுத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தான்.

அவன் முன்னேற முன்னேற சுல்தானின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைந்துகொண்டே வந்தது. சுல்தானின் முகத்தை இதுவரை பார்த்திராத அம்பாதாஸுக்கு இப்போது சுல்தானின் கால்களின் மீதே பார்வை இருந்தது. முதல் வரிசையைப் பிளந்துகொண்டு சுல்தானின் காலில் விழுந்தான். “சுல்தானே, எனக்கு மரண தண்டனை கொடுத்துவிடுங்கள்” என காலைப் பிடித்தவாறு கதறினான்.

சுல்தான் ஒரு நிமிடம் நின்றார். எப்படியும் நமக்கு எதாவது கடுமையான தண்டனை கொடுக்கப் போகிறார்கள், இப்போதாவது சுல்தானின் முகத்தை பார்த்துவிடலாம் என்று இரண்டு கைகளையும் கும்பிட்டவாறே “சுல்தானே” என்று தலை நிமிர்ந்தான். சுல்தானின் முகத்தை பார்த்தவுடன் அப்படியே ஸ்தம்பித்து போனான் அம்பாதாஸ். சுல்தான் அவன் முகத்தைப் பார்க்காமல்  நேராகப் பார்த்துகொண்டிருந்தார்.

காவலாளிகளில் ஒருவன் அம்பாதாஸை உதைத்தான். மறுமுறை உதைக்கப்போன காவலாளியைத் தடுத்த சுல்தான், “அவனை விட்டுவிடுங்கள்” என்பது போல் சைகை காட்டிவிட்டு அரியணையை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆனால் அம்பாதாஸ் ஸ்தம்பித்தபடியே இருந்தான். காவலாளிகளில் ஒருவன் அம்பாதாஸை அலேக்காகத் தூக்கி கூட்டத்தின் நடுவில் எறிந்தான்.

கூட்டத்தினர் அவனை அந்தரத்தில் தாங்கியபடியே கூட்டத்திற்கு வெளியே எறிந்தனர். அந்தரத்தில் பறந்துபோன அவன் ராம்லாலின் மீது விழுந்தான். கீழே விழுந்த ராம்லால் இடுப்பை பிடித்தவாறு எழுந்தான். “டேய் அம்பா, எதுக்குடா இப்படி பண்ண?” என்று அம்பாலாலைப் பிடித்து உலுக்கினான். ஆனாலும் அம்பாதாஸ் ஸ்தம்பித்தபடியே இருந்தான்.

ராம்லால் அம்பாதாஸை ஒரு அறை அறைந்தான். அம்பாதாஸ் நினைவிற்குள் திரும்பினான். “குடிச்சிருக்கியாடா அம்பா?” என மறுபடியும் அறைந்தான். “வா, வீட்டுக்கு கிளம்பலாம்” என அம்பாதாஸை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.

“நீ சுல்தானோட முகத்தை இப்போ பாத்தியா?” என அம்பாதாஸ் கேட்க,

“நீ பண்ண களேபரத்துல சுல்தான் முகத்தை சரியாவே பாக்கல” என்றான் ராம்லால். இருவரும் நடந்து வீட்டிற்குச் செல்லும் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

கோட்டை வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த வாயிற்காவலன், இன்னொரு வாயிற்காவலனின் காதில் ரகசியமாக இப்படிக் கேட்டான்.

“சுல்தானோட முகத்தைப் பார்த்தியா? அவர் உதட்டுல ஏதோ காயம் இருக்குற மாதிரி இருக்குல்ல?”

அதற்கு அந்த இன்னொரு வாயிற்காவலன் “ஆமா, நேத்து ராத்திரி சுல்தான் மாறுவேஷத்துல நகர்வலம் போனப்போ ஏதோ பூச்சி கடிச்சி வச்சிட்டதா அரண்மனையில ஒரு ரகசிய சேதி உலா வருது. ஆனா பூச்சி கடிச்சி வச்ச மாதிரி தெரியல” என்றான்.

கடித்தது பூச்சி அல்ல மோச்சி என்பதற்கு முந்தைய இரவு மட்டுமே சாட்சி.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button