சிறார் இலக்கியம்

பச்சை வனத்தில் சிவப்பு ஆப்பிள் – மீ.மணிகண்டன்

சிறார் கதை | வாசகசாலை

பச்சை வனத்தில் பலவிதமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. விலங்குகள் யாவும் வியக்கும் வண்ணம் அந்த வனத்தில் ஒரேயொரு ஆப்பிள் மரம் இருந்தது. ஆப்பிள் மரம் இருந்த இடம் மந்து குரங்கிற்குச் சொந்தமான சிறிய தோட்டம். எனவே அந்த மரத்திற்கு மந்துவே உரிமையாளனாக இருந்தது. ஒரேயொரு மரம் என்பதால் விலங்குகளின் மத்தியில் அது அதிசய மரமாகவே காணப்பட்டது. மந்துவிற்குச் சொந்தமான தோட்டத்திலிருந்தாலும் அந்த மரத்தில் காய்க்கும் ஆப்பிள்கள் பச்சை வனத்தில் வசிக்கும் அனைத்து விலங்குகளுக்கும் சமமாகப் பங்களிக்கப்பட்டு வந்தன. காரணம் அந்த வனத்திற்கு அது ஒரேயொரு மரம் என்பதால். தினமும் பிற விலங்குகள் மந்துவிடமிருந்து ஆளுக்கு ஒரு ஆப்பிள் பெற்றுச் செல்லும்.

அன்றைய தினம் சோனு முயலுக்கும் மோனு முயலுக்கும் பலமான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. காரணம் ஆப்பிள். “நான் குளித்துவிட்டு வருவதற்குள் உன் பங்குப் பழத்தை உண்டது மட்டுமல்லாமல் என் பழத்தில் ஒரு பகுதியையும் நீ ஏன் உண்டாய்?” என்று கோபமாகக் கேட்டது சோனு. “எனக்கு மிகவும் பசியாக இருந்தது” என்று மெதுவாக பதில் சொன்னது மோனு.

“அடடா, இதேபோல் நான் செய்தால் நீ சும்மா விடுவாயா?” என்று கத்தியது ஏமாற்றமடைந்த சோனு.

“வேண்டுமானால் நாளை நான் மந்துவிடமிருந்து வாங்கி வரும் பழத்தில் ஒரு பகுதியை உனக்குத் தருகிறேன்” என்று சமாதானம் சொன்னது மோனு.

எனினும் சோனுவால் அன்றைய ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் மோனுவுடன் சண்டையிட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

பிறகொரு நாள் ரூபி என்ற ஆடு தான் வசிக்கும் மேற்குமலைப் பகுதியிலிருந்து கிழக்குமலைப் பகுதிக்கு பயணம் சென்று கொண்டிருந்தது. வழியில் பச்சை வனத்தைக் கடக்கும் வேளை மாலைப்பொழுதாகிவிட்டது. சிறிது நேரத்தில் சூரியன் மறைந்து இருட்டியும்விட்டது. இனி இந்த இருட்டில் தொடர்ந்து பயணிக்க வசதிப்படாது என்று எண்ணிய ரூபி ஒரு மரத்தடியில் தங்கிவிட்டு மறுநாள் சூரியன் புறப்படும் வேளை தானும் புறப்பட்டுப் பயணத்தைக் தொடரலாம் என்று எண்ணியது. அப்படியே ஒரு மரத்தின் அடியில் தனது கால்களை மடக்கிப் படுத்துறங்கத் தொடங்கியது. பகல் முழுவதும் நடந்து வந்த காரணத்தால் மிகவும் களைப்பாக இருந்த ரூபி படுத்தவுடன் உறங்கியும்விட்டது.

விடிந்ததும் ரூபிக்கு பெரிய அதிசயம் காத்திருந்தது. ரூபி இரவு தங்கியிருந்த மரம் மந்துவின் ஆப்பிள் மரம். காலை நேரப் பொன்னிற வெயிலில் ஆப்பிள் மரம் செழிப்பாக மின்னிக் காட்சியளித்தது. மரம் நிறையக் கிளைகள், கிளைகள் நிறைய பச்சை இலைகள். இலைகளோடு கிளைகளில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் பழங்கள் தொங்கின, இடையிடையே கனியாத ஆப்பிள்கள் இளம்பச்சையாகவும் இருந்தன. அதிகாலைச் சூரியவொளியில் இந்தக் காட்சி மரத்தின் அழகைக் கூட்டியது. இதுவரை கண்டிராத இந்த அழகிய காட்சி ரூபியின் மனதில் ஆசையைத் தூண்டியது. மேலும் ரூபிக்கு அதிகமான பசி வயிற்றைக் கிள்ளியது. மரத்திலிருந்த சிவப்பு ஆப்பிள்கள் ரூபியை வசியப்படுத்தவே, பழத்தை ருசித்துப்பார்க்க எண்ணியது ரூபி. எட்டி முன்னிரண்டு கால்களை மரத்தில் ஊன்றி தலை எட்டும்வரை எட்டி ஒரு ஆப்பிளைப் பற்களால் கடித்து இழுத்தது. பாதிப்பழம் ரூபியின் வாயோடு வந்தது. நாவில் பழச்சாறு பட்டு இனிப்புச் சுவையை உணர்த்தியது ஆப்பிள். சுவையில் மகிழ்ந்த ரூபி மீதமுள்ள பாதிப்பழத்தையும் கடித்து இழுக்க முயற்சித்துக்கொண்டிருந்த வேளை மந்து அங்கே வந்து நின்றது. ரூபியின் செயலைக் கண்டு மந்து கோபம் கொண்டது.  “ஏய் யார் நீ? உன்னை இந்த வனத்தில் நான் பார்த்ததே இல்லை” என்று தனது குரலை உயர்திக் கேட்டது. மந்துவை அங்கே எதிர்பார்க்காத ரூபி நிலை தடுமாறி மரத்தில் ஊன்றியிருந்த கால்களைத் தரையில் ஊன்றியது. அச்சம் கொண்டது. “நானொரு பயணி. கிழக்குமலைப் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நேற்று இரவு இந்த இடத்திற்கு வந்தேன். இருட்டில் தொடர்ந்து பயணிக்க இயலாததால் இங்கேயே தூங்கிவிட்டேன்” என்று நடுக்கத்துடன் கூறியது ரூபி.

ரூபியின் அச்சத்தைக் கண்ட மந்து மனமிறங்கி மெல்லிய குரலில், “அது சரி. ஆனால் இது என்னுடைய மரம். இந்தப் பழங்கள் வேண்டுமென்றால் நீ என்னிடம் அனுமதி பெற வேண்டும்” என்று கூறிக்கொண்டே மரத்தின் முன்வந்து நின்றது.

“ஓ… அது எனக்குத் தெரியாது”

“சரி.. உனக்கு விவரம் தெரியாது என்பதால் விட்டுவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே ரூபி கடித்த பாதி ஆப்பிளை மரத்தில் நோக்கியது மந்து. “உனக்கு எட்டவில்லையா? சரி நான் மரத்தில் ஏறி நீ கடித்த பழத்தை பறித்துத் தருகிறேன் அத்துடன் நீ இன்று எங்கள் விருந்தாளி ஆதலால் மேலும் ஒரு பழம் தருகிறேன். அதற்கு மேல் தர முடியாது ஏனென்றால் இந்த வனத்தில்  மற்ற விலங்குகளுக்கும் நான் கொடுக்க வேண்டும்”

ரூபி தான் கடித்த பழத்தோடு மேலும் ஒரு பழம் கிடைக்கப்போவதை எண்ணி எம்பிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

பழங்களை உண்டு பசியாறிய ரூபி தன் பயணத்தைத் தொடர எண்ணியது. அதற்கு முன் இந்த அதிசயமரத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் மந்துவிடம் மேலும் பேசத் தொடங்கியது.

“உன் பெயர் என்ன? உன்னை எப்படி நான் அழைப்பது?”

“என் பெயர் மந்து. நீ அப்படியே அழைக்கலாம்?”

“ஓ… மந்து… நல்ல பெயர். என் பெயர் ரூபி. நான் மேற்குமலையில் வசிக்கின்றேன். என் உறவினரைச் சந்திப்பதற்காக நான் கிழக்குமலைக்கு பயணித்துக் கொண்டிருக்கின்றேன். சரி, இந்த மரம் எப்படி இங்கே வளர்ந்தது? எனக்கு சொல்வாயா? இதுபோன்ற மரத்தையும் பழத்தையும் நான் இதற்கு முன் கண்டதில்லை. நானும் மேற்குமலைப் பகுதியில் இதேபோல் ஒரு மரம் வளர்க்க ஆசைப்படுகின்றேன்”

“நல்ல கேள்வி ரூபி. இந்த மரத்தை நாங்கள் கொண்டுவந்து வளர்க்கவில்லை. இதைப் பற்றி என் பாட்டி  எங்களுக்குச் சொன்னதை உனக்குச் சொல்கிறேன். இந்தத் தோட்டத்தை என் பாட்டி பராமரித்து வந்தார்கள். எந்த இடத்தில என்ன செடி இருக்கிறது என்று அவர்களுக்கு மிகவும் அத்துப்படி, மனப்பாடமாக வைத்திருப்பார்கள். சின்னப் புல்லிலிருந்து பெரிய பெரிய மரங்கள் வரை எல்லாச் செடிகொடிகளையும்  கவனமாகப் பார்த்து வளர்த்து வந்தார்கள். ஆண்டுதோறும் சில பறவைகள் காலமாற்றத்தின் காரணமாகத் தங்கள் இருப்பிடம் விட்டு வேறு இடம் சென்று தங்குவதற்காகப் பயணிப்பார்கள். அப்படி அவர்கள் பயணிக்கும்போது எங்கள் தோட்டத்தினைக் கடந்து பறந்து செல்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன் இந்த வழியே பயணித்த பறவைக்கூட்டம் ஒரு நாள் இரவு எங்களின் இந்தத் தோட்டத்தில் தங்கிச்செல்ல என் பாட்டியிடம் அனுமதி கேட்டார்கள். என் பாட்டியும் அனுமதித்தார். பறவைகள் பயணத்தின்போது உண்பதற்காக விதைகள் கொண்டுவந்திருந்தனர். அடுத்தநாள் அவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர் ஆனால் அவர்கள் கொண்டுவந்த விதைகளில் ஒன்று அவர்கள் இரவில் உணவருந்தும் வேளை இந்த மண்ணில் விழுந்துவிட்டது. மறுநாள் அந்தப் பறவைகள் சென்றுவிட்டனர். என் பாட்டி தோட்டத்துச் செடிகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தபோது அந்த விதையைக் கண்டார்கள். அதை மண்ணில் பத்திரப்படுத்தி நீரூற்றி வளர்த்து வந்தார்கள். பின்னர் அது செடியாகி மரமானது. சில ஆண்டுகளுப்பின் அதில் பழங்கள் வரத்தொடங்கியது. ஆனால் இதை உண்ணலாம் என்பது அப்போது தெரியாது. சில ஆண்டுகளுக்குப் பின் பறந்துசென்ற வேறு சில பறவைகள் என் பாட்டியிடம் இந்தப்பழத்தின் மகத்துவம் பற்றிச் சொன்னார்கள். அதன் பிறகு நாங்கள் இதை உண்ணத் தொடங்கினோம்” என்று ஆப்பிள் மரம் அங்கே வளர்ந்த கதையை ஒரே மூச்சில் சொல்லி முடித்தது மந்து. சொல்லியதோடு நிற்கவில்லை தொடர்ந்து ரூபியிடம் ஒரு கேள்வி கேட்டது. “ஏய்… ரூபி நீதான் இந்த மரத்தை இதற்குமுன் கண்டதில்லை என்று சொல்கிறாய். பின் எப்படி இந்தப் பழம் உண்ணத்தகுந்தது என்று முடிவு செய்து மரத்தில் எட்டி பழத்தைக் கடித்தாய்?”

“ஹி… ஹீ…” என்று அசடு வழிந்த ரூபி மெல்லச் சொன்னது, “இல்லை. எனக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு நம்பிக்கையில் கடித்துவிட்டேன்” என்றது.

“சரிதான். தெரியாத பழங்களில் வாய் வைக்காதே. ஒருவேளை அது நஞ்சுச் செடியாகவோ மரமாகவோ  இருந்தால் என்ன செய்திருப்பாய்?”

“அப்பப்பா…” என்று தன் அறியாமையை எண்ணி அதிர்ந்தது ரூபி. “உண்மைதான்… புரிந்துகொண்டேன்… இனிமேல் கவனமாக இருப்பேன்” என்று சொல்லிய ரூபி அதன் பிறகு மந்துவிடம் விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய கிழக்குமலைப் பயணத்தைத் தொடர்ந்தது.

“நீ உன் உறவுகளை கிழக்குமலையில் சந்தித்துவிட்டுத் திரும்புகையில் இங்கே மீண்டும் வா. ஆப்பிள் உண்ணலாம்” என்று கரிசனமாகச் சொன்னது மந்து. மந்துவின் அன்பில் மனம் நெகிழ்ந்தது ரூபி. ‘நன்றி’ கூறி விடைபெற்றது.

ரூபியை வழியனுப்பிவிட்டு தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியைத் தொடங்கியது மந்து. குளக்கரை நோக்கிய தனது நடைப்பயிற்சியில் வழியில் சோனு முயலைக் கண்டது. “என்ன சோனு நலமாக இருக்கின்றாயா? எங்கே உன்னுடன் மோனுவைக் காணவில்லை?”

“மோனு என் பங்குப் பழத்தில் பாதியை உண்ட காரணத்தால் நான் சண்டையிட்டுவிட்டேன். அன்று முதல்  அவனும் என் மீது கோபமாக இருக்கிறான். அது போகட்டும், நான் நலமாக இருக்கிறேன். நீ நலமா?”

“ம்… ம்… நன்றாக இருக்கின்றேன்”

“இன்று ஆப்பிள் வாங்க எப்பொழுது வரலாம்?” என்று ஆவலை அடக்க முடியாமல் கேட்டது சோனு.

நான் இப்பொழுதுதான் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கின்றேன். திரும்பிச் சென்றதும் நீ வா உன் பங்கைத் தருகின்றேன்.”

“நீ குளக்கரை நோக்கிச் செல்லும்போதே தெரிகின்றது, நீ நடைப்பயிற்சி செல்கிறாய் என்பது. சரி, இன்று ஏன் இவ்வளவு தாமதமாகச் செல்கின்றாய்?” என்று மந்துவின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் துள்ளிக் குதித்துத் தாவிக் கொண்டே கேட்டது சோனு.

“அட, அதை ஏன் கேட்கிறாய்? இன்று ரூபி என்று ஒரு புதியவளைச் சந்தித்தேன். அவள் கிழக்குமலைக்கு பயணம் சென்றுகொண்டிருக்கின்றாளாம், நேற்று என் தோட்டத்தில் இளைப்பாறியிருக்கின்றாள். இது எனக்குத் தெரியாது காலையில் தோட்டத்திற்குச் சென்றபோது அவளைக் கண்டு யார் நீ என்று கேட்டேன் …” என்று கூறிய மந்து தொடர்ந்து தனக்கும் ரூபிக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை சோனுவிடம் ஒன்று விடாமல் பகிர்ந்துகொண்டது.

ஆச்சரியமடைந்த சோனு, “நமக்கு கிடைத்த ஆப்பிள் மரம் உண்மையில் ஒரு வரம். பாரேன்… ஆப்பிள் மரத்தைக் காணாமல் கூடச் சிலர் இருக்கின்றனர்.”

“ஆம் சோனு, இந்த உலகத்தில் எல்லாமும் எல்லா இடங்களிலும் இருந்துவிடுவதில்லை. ஒரு இடத்தில இருப்பது வேறொரு இடத்தில் இருக்காது, வேறெங்கோ இருப்பது நம்மிடத்தில் இருக்காது. இதுதான் இயற்கையின் விதி. அறிந்தவர்கள் அறிந்தவற்றை அறியாதவர்களிடம் பகிர்ந்துகொள்வதில் வாழ்கின்றது சமத்துவம். அதை விட்டுவிட்டு என்னிடமிருப்பது எனக்கு மட்டுந்தான் உன்னிடமிருப்பது உனக்கு மட்டுந்தான் என்ற கருத்தைக் கொண்டு செயல்பட்டால் அது பகையை வளர்க்கும், எதிர்காலச் சந்ததிக்கு மகிழ்ச்சியைத் தராது. இன்று நாம் ஒவ்வொருவரும் நமக்காக மட்டும் வாழவில்லை, நமக்குப் பின் வரும் நம் சந்ததிக்காகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். உதாரணத்திற்கு என் பாட்டி வளர்த்த ஆப்பிள் மரம். அவர்கள் வளர்த்தார்கள் ஆனால் நாம் இன்று பயனடைகின்றோம்.”

“பலே பலே, உன்னிடம் கற்றுக்கொள்ள நிறையப் பாடங்கள் இருக்கின்றன. இதோ குளக்கரையும் வந்துவிட்டது. உன் நடைப்பயிற்சியை முடித்து நீராடிவிட்டுத் தோட்டத்திற்குத் திரும்பு, அங்கே இந்நேரம் ஆப்பிள் வாங்க நிறையப்பேர் வந்திருப்பார்கள். நானும் சற்றுநேரம் கழித்து உன் தோட்டத்திற்கு வருகிறேன்” என்ற சோனு தன் வழியை நோக்கித் துள்ளிக் குதித்தது.

“ஆமாம்… அதுவும் சரிதான் சீக்கிரம் நான் திரும்ப வேண்டும், நீ போய் வா” என்று கூறிக்கொண்டே சோனுவிடம் விடைபெற்று குளத்து நீருக்குள் பாய்ந்தது மந்து.

கிழக்கு மலையில் தன் உறவுகளைச் சந்தித்து மகிழ்ந்த ரூபி ஏழு நாட்களுக்குப் பின் மீண்டும் பச்சை வனத்தில் மந்துவை வந்து சந்தித்தது.

“அடடே… ரூபியா… வா வா…” என்று வரவேற்றது மந்து.

“ஆமாம் மந்து, பரவாயில்லையே … என்னை நீ ஞாபகம் வைத்திருக்கிறாயே?” என்று மந்துவிடம் ஆச்சரியமாகக் கேட்டது ரூபி.

“நீ என்னை நினைவில் வைத்திருக்கும்போது நான் மட்டும் உன்னை மறந்துவிடுவேனா என்ன?” என்று மந்துவும் விட்டுக்கொடுக்காமல் கூறியது.

“உனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறேன் பார்?” என்று தான் கழுத்தில் மாலையாகச் சுமந்து வந்திருந்த இரண்டு கொடிகளைக் காட்டியது ரூபி.

“அடடே இது என்ன?” என்று ஆச்சரியமாக வினவியது மந்து. மேலும் அந்தக் கொடிகளில் இலைகளின் நடுவே வெள்ளையாக சின்னச்சின்னதாக இருப்பது என்ன என்றும் கேட்டது. “இது மல்லிகை மலர்கள் பூக்கும் கொடி. வெள்ளையாக இருப்பதெல்லாம் மல்லிகை மலர்கள்” என்று பதிலளித்தது ரூபி. “இந்த மலர்கள் இதழ் விரித்து மலரும்போது நல்ல மணம் பரப்பும். உன் தோட்டம் முழுவதும் நறுமணம் கமழும். இது கிழக்குமலையில் மட்டும்தான் இருக்கின்றது. நான் மேற்குமலையில் பதியமிட்டு வளர்க்க எண்ணி கிழக்குமலையில் என் உறவினர்களிடம் கேட்டேன். அவர்களும் ஒரு கொடியில் ஒரு பகுதியைக் கொடுத்து இதனைப் பதியமிட்டு வளர்க்கும் முறையை எனக்குச் சொன்னார்கள். அப்போது உன் ஞாபகம் வந்தது உனக்கும் ஒரு கொடியைக் கொடுக்கலாம் என்றெண்ணி அவர்களிடம் மேலும் ஒன்று கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள்” என்று தான் இரண்டு கொடிகளைச் சுமந்து வந்த காரணத்தைக் கூறியது ரூபி.

ரூபியின் அன்பில் மனம் மகிழ்ந்த மந்து, “உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?” என்று கேட்டுக்கொண்டே ஆப்பிள் மரத்தில் தாவி ஏறி ரூபிக்காக பழத்தைத் தேடிப் பறித்துக்கொண்டு இறங்கியது.

பழத்தை நன்றியுடன் பெற்றுக்கொண்ட ரூபி. “நான் புதியவள் என்றாலும் என்னை நண்பனாக ஏற்று உங்கள் தோட்டத்துப் பழங்களை எனக்குக் கொடுத்தாய். உங்களிடம் இல்லாத ஒன்றை உங்களுக்காக நான் வாங்கிவந்தேன்” என்று சாதாரணமாகச் சொன்னது ரூபி.

ரூபியிடம் பழத்தைக் கொடுத்தது மந்து. மந்துவிடம் மல்லிகைக் கொடியைக் கொடுத்தது ரூபி. அன்றைய பங்கு ஆப்பிள் வாங்க வந்த சோனு, மோனு இருவரும், ரூபி மற்றும் மந்துவின் உரையாடல்களைக் கேட்டு வியந்து நின்றனர்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button