
மூன்று நாட்கள் அங்கு
நான்கு நாட்கள் இங்கு
நன்றாகத்தான் இருக்கிறது இந்த
நாடோடிப் பிழைப்பு
வராத தூக்கம் இரவெல்லாம்
பக்கத்தில் அமர்ந்து விடியல் வரை வெறிக்கிறது
இடதுகாலில் புடைக்கும் நரம்பை
வலதுகாலால் அழுத்தி
வலியுடன் கத்தியவனின் குரல்
கிரிக்கெட் வர்ணனையுடன் கரைந்து போகிறது
புகைவண்டி நிலையத்தில்
வழியனுப்பி வைத்துவிட்டு
“அடுத்த வாரம் மீண்டும் பார்ப்போம்”
எனத் தன்மொழியில் குனுகும்
புறா மட்டுமே ஆறுதல்
இந்த வாரக்கணக்கில்.
*
நான்கு வாரங்களுக்கு வருபவன்
எப்போதும் ஒரு பட்டியல் வைத்திருக்கிறான்
அண்ணன் வீடு தம்பி வீடு
அயல்நாட்டு சாக்லேட்
ஒரு குறியிடுகிறான்
ஒரு மணி நேரத்திற்கு மேல் அவன் எங்கும் இருப்பதில்லை
அவனுக்குப் பட்டியல் முக்கியம்
குலதெய்வத்திற்குக் குடும்பத்துடன்
அரைமணி நேரம் கும்பிடு போடுகிறான்
ஒரு குறியிடுகிறான்
அப்பா அம்மாவிற்கு வருடாந்திரம்
ஒரு குறியிடுகிறான்
வாடகைக்கு விட்ட வீடுகளின் பராமரிப்பு
ஒரு குறியிடுகிறான்
வீட்டுக்கு வெளியே காலடி வைத்தவுடன்
உங்களை மறந்து விடுகிறான்
ஏனெனில் பட்டியலில் அவனின்
பள்ளித் தோழர்கள் சற்றே மேலிருக்கிறார்கள்
தோழர்களுடன் சில மணி நேரம்
ஒரு குறியிடுகிறான்
கழிப்பறை வசதி சரியில்லை என்று சொல்லி
வீட்டுக்கு வராத உன் பிள்ளைகளுக்காக
வரும் முன்பு ஒரு நாள் அனுமதியளித்தால்
எனது கைகளால் சுத்தம் செய்து வைக்கிறேன்
அதற்கும் நீ ஒரு குறியிடலாம்.
*
தலைமூட்டையைச் சுமந்து நடக்கும் பெரியவராக வாழ்க்கை
வலது கையில்
கால்கள் கட்டப்பட்டு
கத்தவும் திராணியின்றித்
தலைகீழாய்த் தொங்கும்
அந்தச் சேவலாய் நான்.