
நிணம்
பாலைவன மணலில்
பாதங்கள் புதைய நடக்கிறது
அந்த யானை
வயிறு குலுங்க
நாக்கு இழுக்க
நீருக்குத் தவிப்பாய்
உயிரின் இறுதித் துடிப்பாய்…
கலகலவென சிரித்தாள்
அருகில் ஒருத்தி
கையில் நெகிழிப் புட்டியில் நீர்
“வேணுமா?” என்றாள் இளக்காரமாய்
“புட்டி திறந்து ஊற்றேன்” கெஞ்சியது யானை
“இல்லை. விழுங்கு அப்படியே” என்றாள்.
வலப்புறம் பிணமெரியும்
மசானம் பார்த்தது யானை
இடப்புறம் புட்டியோடு அவள்.
வேதனையாய் வாங்கி விழுங்கியது
சில நாழிகையில்
மசான பூமியெங்கும்
ஒழுகி வழிந்தது
யானையின் நிணத்துடன்
நெகிழிப் புட்டியும்.
எக்காளமாய் நிலமதிர
ஆடிச் சிரித்தபடி அவள்
“யட்சி, யட்சியென்று
உறக்கத்தில் பிதற்றினாயே”
என்று நான் விழிக்கையில்
அம்மா கேட்டாள்.
நம்பிக்கை
செத்த குட்டியை
மடிகட்டித் திரிகிற மந்தி போல
விட்டுப் போன உறவை
இறக்காமல் சுமந்தலைகிற மனம்
மழை நின்றும்
தாழம் முள் முனையில்
சொட்டாமல் தேங்கி நிற்கும்
இறுதிச் சொட்டு நீர்த்துளி
அதே பாதை அதே படிகள்
பாட்டன் பூட்டன் கால் தடங்கள்
அவஸ்தைகளும் ஆசைகளும்
புரிவதற்குள் முடியப் போகும்
அதே அசட்டுப் பயணம்.
*
செடி
பல ரகசியங்களைத் தனக்குள்
மறைத்து வைத்தபடி
ஓங்கி வளர்ந்து நிற்கிறது
ஆசைகளின் ஆரண்யம்
அன்பிலார் கனவுகளை
முதுகில் சுமந்து
மூச்சுத் திணறத் திணற
நடக்கிறோம் வட்டவெளிக்குள்
வானத்தைக் கிழித்துக் கொண்டு
தரையில் இறங்கியும்
பொல்லாத கருங்குடையை
மீற முடியாமல்
தள்ளியேதான் விழுகிறது மாமழை.
காதலின் வெட்கமும்
பிரிவின் அழுகையும்
மாறி மாறி விழுங்கி
முடித்துவிட்டன வார்த்தைகளை
எஞ்சி நிற்கும் தனிமை செடிக்கு
நம்பிக்கை வார்த்து
வளர்க்கலாம்.
பார்ப்போம்
இனியாவது வளருமா
ஒளிபூக்கும் செடி?