
ஞாபக முடிச்சுகளாய் நான் சுமந்து கொண்டிருப்பது
என் பொழுதுகளைக் களவாடிய
உன் ஆகர்ஷணப் பார்வைகளை
சாம்பல் பூத்த தீக்கட்டியாய்
என் இமைப்பீலிகளில் அதன் ஊழிக்கூத்துகள்
உன் மீதான காதல் பொருட்டே
தீக்கொண்டு எரியும்
என் எல்லா பழைய நாள்களின் நொடிகளில்
பூவொன்றின் மெல் அசைதலென உன் சிருங்கார ரூபம்
என் சகல ப்ரியங்களையும்
தாரை வார்த்துத் தந்த அந்தப் பருவம்
ஒரு பிரபஞ்சத்தைப் போல
விரிவடைந்து முன்னே நிற்கிறது
இன்னும் எத்தனை முறைதான்
பேசிப் பார்ப்பது சொல்லித் தீராத வேதனைகளையும்
எழுதித் தீராத கதைகளையும்.
நானாக அமைத்துக் கொண்டேன் என் பூகோளத்தை.
அது பறவைகளின் கீச்சொலிகளால் நிறைந்திருந்தது
நானாகப் படைத்துக் கொண்டேன் எனக்கான கடவுளை
எனக்குள்ளாகவே நடத்திக்கொண்டேன் பூரண சடங்கை
எனக்குள் சுழித்தோடியது பேராறு
சிறுகச் சிறுக சேமித்துக்கொண்டேன் காலக் கிளிஞ்சல்களை
என் எல்லைச் சாமியிடமிருந்து தொடங்கும் நிலப்பரப்பில்
நான் விதைப்பது இருக்கட்டும்
நானாய் வகுத்த எல்லையில் அசப்பில் என்னைப்போலவே
தனக்குள் பேசுமொரு பெருங்கடல்.
என் எல்லாப் புத்தகங்களும்
மக்கி மரமாகித் தழைத்தால்கூட போதும்
என் கடிகாரப் பறவை கூடு கட்டும்
மரயானை கிளை முறிக்கும்
ப்ளாஸ்டிக் மொக்குகள் பூக்கும்
வனதேவதை வந்து போவாள்
அவ்வப்போது மழை பெய்யும்
இலேசாக பாசி வாசம் வரும்
ஊற்றுப் பெருகி ஆறோடும்
நீர்ச்சுனை விளிம்பில் நிற்கும்
கடமான்களிரண்டு.
உச்சிப்பாறை நின்று கானக வாசனை முகர்ந்து
நானும் ஊளையிட்டு மிருகமாவேன்.
ஒரு நாள் வயதாகும் பயம் தொற்றிக்கொள்கிறது
ஒரு நாள் வயதானதே தெரியாமலிருக்கிறது.
ஒரு நாள் செத்துவிடமாட்டோமா
எனத் தோன்றுகிறது
ஒரு நாள் ஆயுள் கூடட்டும்
என வேண்டிக் கொள்கிறேன்
ஒரு நாள் இப்பிறவி இனிதெனப்படுகிறது
ஒரு நாள் எல்லாம் போதுமென்றாகிவிடுகிறது
ஒரு நாள் தாயெனத் தெரிகிறாள் மகள்
ஒரு நாள் தந்தையென வாழ்தல்
சுமையெனத் தெரிகிறது
எல்லா நாளும் ஒன்று போலில்லை
ஒன்றே எல்லா நாளிலும் இல்லை
குறுகத் தரித்ததொரு வாழ்வு.
1976ல் நாங்களும் யானையும்…
சோறுண்ணா குழந்தைக்கு யானை கரும்பூதம்
யாரோ கவிஞனுக்கு அது பெருங்கவிதை
வரையத் தெரிந்தவனுக்கு மனதுக்குள் கிளை முறியும்
மத்தக சிறுமேட்டை
மானசீகமாய் செதுக்குவான் கல்தச்சன்
பயல்களுக்கு யானை பேச்சு அரை நாளுக்கு
எல்லாம் அலுத்துப் போனவனுக்கு
கக்கத்தில் சுருட்டிய நாளிதழும்
மூக்கில் வரும் பனாமா சிகரெட் புகையும்.