
ப்ரம்மம்
இன்னொரு முறையும் அந்தப்
பாடலைக் கேட்கிறேன்
அதன் இசைக்காக அல்ல
அதன் வரிகளுக்காக அல்ல
அந்தக் குரலுக்காக அல்ல
எனக்குள் அன்பினை
பூக்கச் செய்யும்
ஏதோவொன்று அந்தப்
பாடலில் ஒளிந்திருக்கிறது
வாழ்வு என்பது
தேடலின் நீண்ட தொடர்ச்சி
என எனக்கு அந்தப்பாடல்
புரிய வைத்தது
பிளவுண்ட சர்ப்பத்தின்
நாக்குகள் போல்
என்னுள்ளிருந்து புத்தனை
எட்டிப் பார்க்க வைத்தது
சபிக்கப்பட்ட இரவுகளின்
கொடுங்கனவுகளிலிருந்து
என்னை சுவர்க்கத்துக்கு
அழைத்துச் சென்றது
என்னை எரித்துக் கொண்டிருக்கும்
சூரியனை நோக்கிப்
பறக்க வைத்தது
பல பிறவிகளாய் தீராத
தாகத்துடன் திரிந்த
எனது ஆன்மாவைப்
பரவசப்படுத்தியது
பிசாசுகளின் குரலையே
கேட்டுப் பழக்கப்பட்ட எனக்கு
முதன்முறையாக கடவுளின்
குரலை கேட்கச் செய்தது
விதியின் கொடுங்கரங்களிலிருந்து
என்னைத் தப்பிக்க வைத்தது
உயிர்த்தேடலின் ஆரம்பத்தையும்
முடிவையும் ஒருசேர
அனுபவிக்க முடிந்தது
பிரபஞ்சத்தின் வாழும்
அனைத்து உயிர்களும்
நானே என்றுணர வைத்தது!
*
நான் இந்த நூற்றாண்டைச்
சேர்ந்தவனல்ல
இங்கு எவரும்
எங்கே நிம்மதி எனக்
கேட்டுக் கொண்டிருக்கவில்லை
பூமி பழையது
மனிதன் பழையவன்
ஆனால் வாழ்வு புதியது
நட்சத்திரங்களை
நட்சத்திரங்களாக பார்த்தபோது
வாழ்வென்பது வரமாக இருந்தது
இந்த ஆப்பிள் கூட
ஆதாம் சுவைத்ததின் மிச்சம்தான்
அதன் பிறகுதான்
பிரார்த்தனை என்ற ஒன்றே
கண்டுபிடிக்கப்பட்டது
பனித்துளி புதியது
அதில் பிரதிபலிக்கும்
பிரபஞ்சம் பழையது
பழைய உடலில்
புதுப்புது எண்ணங்கள்
மெய்ஞ்ஞானம் பழையது
எதற்கும் நிரூபணம் கேட்கும்
அறிவியல் புதியது
உண்மை மிகப் பழையது
பொய்கள் தான் புதியது
அசைபோடுவதற்குக் கூட
புதுப்புது கனவுகள்
தேவைப்படுகிறது
இருள் பழையது
ஒளி புதியது
பழைய கடவுளிடமிருந்துதான்
புதிய படைப்புகள் எழுகின்றன
ஆகாசமே விரிகிறது
பிறகு ஒடுங்குகிறது
நதிவெள்ளத்தில் அடித்துச்
சென்றுகொண்டிருக்கும் போது
ஆறுதல் கூற முடியுமா?
வாழ்வென்பது பார்வையாளர்களற்ற
ஒரு நாடகம் தான்
மண் பழையது
விதை புதியது!
*
தவறவிட்டது வாய்ப்புகளை
மட்டுமல்ல
இப்போது எண்ணிக் கொள்கிறேன்
பயணங்களைத் தவறவிட்ட
தருணங்களை
உண்மை அழகு தோற்றத்தில்
இல்லையென்று இப்போது
உணருகிறேன்
எனது இச்சைகளை ஒவ்வொன்றாக
வான்நோக்கி வீசிச் செல்கிறேன்
அவை எப்படியும் திரும்ப
என்னை வந்து
சேர்ந்து விடுகின்றன
ஆகாசத்தின் நீலம்தான்
கடலிலும்
காதலோடு வீதியைத்
தாண்டும் எனது கால்கள்
தயங்கித் தயங்கி
வாசலுடன் நின்றுவிடுகிறது
நட்சத்திரங்கள் இல்லாத
இரவு வானத்தில்
மின்மினியே அழகு
யாராலும் விடை
சொல்ல முடியாத
கேள்விக்கு பிசாசுதான்
பதிலளித்தது
பரிசுப் பொருட்களை
தூக்கி எறியுங்கள்
காதலைப் புனிதப்படுத்த
ஒருதுளி கண்ணீர் போதும்
என்னை எப்போது
நனைக்க வேண்டுமென்று
அந்த மழைக்குத் தெரியும்
பறத்தல் சுதந்திரமென்றால்
பறவைகள் தான்
கடவுளாக இருக்க வேண்டும்
வண்ணத்துப்பூச்சிகளைப்
பின்தொடருங்கள் அது நம்மை
ஆதிகாலத்திற்கு இட்டுச் செல்லும்
ஏதாவதொரு பரதேவதை
நான் தவறவிட்டதையெல்லாம்
பத்திரப்படுத்தி வைத்திருக்குமா?
அவ்வாறெனில் சொல்லுங்கள்
இந்த உலகத்தையே
அதற்கு ஈடாக நான்
எழுதித் தருகிறேன் என்று…