
1
கொதிக்கும் மே மாத வெயிலில், நண்பகல் மூன்று மணிக்கு, உதய்பூரில் எங்களைப் போல வேறு எவர் படகு சவாரி செய்யத் தயாராக இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், அவ்வெண்ணம் தவறு என்பது ஃபத்தே சகார் ஏரிக்கு அருகில் வந்ததும் தெரிந்தது. குழந்தைகளோடு பத்திருபது நபர்கள் படகு சவாரிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்தார்கள். ஏரியில் ஏற்கெனவே பயணிகள் நிறைந்த இரண்டு படகுகள் மிதந்து கொண்டிருந்தன. ’பாத்திங்களா! நான் சொன்னது சரிதானே!’ என்கிற தொனியில் ராஜி என்னை பார்த்தாள். வேறு வழியின்றி வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து முடித்ததும், எனது முகமும் அணிந்திருந்த சட்டையும் வேர்வையில் முழுவதுமாக நனைந்திருந்தது. கைக்குட்டையால் முகத்தை மட்டும் துடைத்துக் கொண்டு வேண்டாவெறுப்பாக ராஜியுடன் படகில் ஏறினேன். பொதுவாக, இது போன்ற ஏரியில் படகு சவாரி செய்யும் போது குளிர்ந்து காற்று வீசும் என்பார்கள். ஆனால், அன்று அனல் காற்றுதான் எங்கள் உடலை வருடியது. சூரியன் வெளிச்சம்பட்டு தங்கம் போல ஜொலித்துக் கொண்டிருந்த ஏரியின் சற்று குளுமையான தண்ணீர், படகு பயணத்தின் போது அவ்வவப்போது எங்களது மேலே தெளித்தது.
கடந்த டிசம்பர் மாதம் ராஜியினுடைய பள்ளியைச் சேர்ந்த அத்தனை ஆசிரியர்களும் ஒரு வாரம் உதய்பூர் சென்றார்கள். நியாயப்படி ராஜியும் அவர்களுடன் சென்றிருக்க வேண்டும். அவளுக்கும் சேர்த்துதான் ரயில் டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென என்னுடைய அம்மாவின் இடது கண்ணில் புரை முளைத்துவிட்டது. கூடிய விரைவில் அறுவை சிகிச்சை செய்து அதனை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார்கள் மருத்துவர்கள். அவர்கள் குறித்துக் கொடுத்த தேதியில் அலுவலக வேலையாக நான் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை முடிந்ததும் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ராஜியின் மீது சுமத்தப்பட்டது. சக ஆசிரியர்களுடனான உதய்பூர் பயணத்தில் இருந்து அவள் தன்னை விடுவித்துக் கொண்டாள். ஆனால், அவள் அதற்காக துளியும் கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. பத்திருபது நாட்கள் கழித்துக்கூட தான் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக அம்மா சொன்ன போது, “சும்மா இருங்க அத்தே. தேதிய தள்ளி எல்லாம் போட வேண்டாம். எனக்கு இப்போ லீவுதான. உதய்பூர் ட்ரிப் வேணும்னா அடுத்த வருஷம் நாமெல்லாம் ஒண்ணா சேந்து கூட போகலாம்” என்று ராஜி உறுதியாகக் கூறிவிட்டாள்.
எனினும், அடுத்த டிசம்பர் மாதம் வரை ராஜியால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ராஜஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த சக ஆசிரியர்கள் உதய்பூரில் எடுத்த படங்களும், அங்கு நடந்தவற்றை அவளிடம் அவர்கள் வேடிக்கைக் கதைகளாக சொன்ன விதமும், ராஜியின் மனதில் தானும் உதய்பூரை நேரடியாக கண்டுவிட வேண்டும் எனும் ஆசையை மிக வீரியமாக விதைத்துவிட்டது. முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து, விடுமுறை தொடங்கிய முதல் வாரத்திலேயே உதய்பூர் செல்ல வேண்டும் என தீர்மானித்துவிட்டாள். ராஜஸ்தான் பாலைவனம் நிரம்பிய பிரதேசம், மே மாதம் வெயில் சுட்டரிக்கும் என நான் எச்சரித்தேன். ஆனால், பாலைவனமானது ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் இருக்கிறது என்றும், உதய்பூர் நம்மூர் ஊட்டி, கொடைக்கானல் போன்று மலைகள் நிரம்பிய குளுமையான பகுதி என்றும் இந்திய வரைப்படத்தைக் காட்டி என்னிடம் வாதிட்டாள். சமூக அறிவியல் ஆசிரியையிடம் இதற்கு மேல் நான் என்ன எதிர்வாதம் தொடுத்திட முடியும்? சமத்தாக ஆஃபீஸில் விடுமுறைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். அம்மாவை, மதுரையில் இருக்கும் அக்காவின் வீட்டில் விட்டுவிட்டு, நானும் ராஜியும் ரயிலேறினோம்.
ஏரியில், நண்பகல் நேரத்தில் நாங்கள் மேற்கொண்ட படகு சவாரி மட்டுமல்ல, உதய்பூரே மே மாதத்தில் நரகமாகத்தான் இருந்தது. அங்கு வந்து இறங்கிய முதல் நாள், காலை பத்து மணிக்கெல்லாம் வெளியே ஊர் சுற்றிப்பார்க்க புறப்பட்டுவிட்டோம். தெருவெல்லாம் வெறிச்சோடி இருந்தது. படகு சவாரி மேற்கொள்ளும் இடத்தைத் தவிர வேறு எல்லா இடங்களிலும், எங்களைப் போன்ற டூரிஸ்டுகள் மிக அரிதாகவே காணப்பட்டார்கள்.
அந்த ஊரில் பார்ப்பதற்கு ஒன்றும் பிரமாதமான இடங்களும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இரண்டும் மூன்று ஏரிகள் ஊருக்கு இடையே இருக்கிறது. அந்த ஏரிகளுக்கு நடுவே சின்னஞ்சிறு தீவு போன்ற அமைந்துள்ள சிறிய நிலப்பரப்பில் பெரிதாக ஹோட்டல்கள் கட்டியிருந்தார்கள். ஒரு நாளைக்கு அங்கு தங்குவதற்கு அறை வாடகை குறைந்தது இருபதாயிரம் ருபாயாம். உதய்பூரை சுற்றிலும் சில மலைகள். அவற்றின் உச்சியில் ஏதேனும் ஒரு கோவிலோ, அல்லது சிதலமடைந்த கோட்டைகளோ காணப்பட்டன. அம்மலைகளின் உச்சிக்கும் வாகனத்திலும் செல்லலாம், அல்லது பழனிமலையில் இருப்பது போன்ற ‘ரோப்-காரிலும்’ போகலாம். இந்த இடங்களை எல்லாம் ஒரு வேளை நான் குளிர் காலத்தில் வந்திருந்தால் உண்மையிலேயே ரசித்திருப்பேன். ஆனால், கோடை காலத்தில் வந்திருப்பதால், உதய்பூரை நான் முழுமையாக வெறுத்தேன். வேறு வழியின்றி, என்னுடைய வெறுப்பை எல்லாம் ராஜியின் மீது காட்ட வேண்டியதாகிவிட்டது.
நாங்கள் முதலில் சுற்றிப்பார்க்கச் சென்ற உதய்பூர் அரண்மனைக்குதான். அங்கே உள்ளே நுழைவதற்கான டிக்கெட் விலை நானூறு ரூபாய். ”பகல் கொள்ளை” என ராஜியின் காதுப்பட சத்தமாக முனங்கியபடியே, பணத்தை நீட்டி டிக்கெட் வாங்கினேன். அந்த அரண்மனையைச் சுற்றிப்பார்க்க மூன்று மணி நேரம் பிடித்தது. வெளியே பார்ப்பதற்குதான் பிரமாண்டமாக இருந்ததே தவிர, உள்ளே சுவாரசியமான விசயங்கள் எதுவும் இல்லை. ஒரு அறை நிறைய உதய்ப்பூர் ரஜபுத்திர ராஜாக்கள் போரில் பயன்படுத்திய கத்தி, துப்பாக்கி, கேடயம், கவசம் – இவையெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மற்றொரு அறையை, சமையல் பாத்திரங்களும், வேறு அத்தியாவசிய பொருட்களும் நிரப்பியிருந்தன. ஓவிய கண்காட்சி அறையில், இந்த ஊர் ராசாக்கள் புலி வேட்டையாடிய வீர தீர காட்சிகளை மட்டுமே இருபது ஓவியங்களில் தீட்டி வைத்திருந்தார்கள். இவையெல்லாம் ராஜிக்கும் பார்க்க பிடித்ததா இல்லையா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவள் முக அமைப்பு அப்படி. எனினும் அவள் காதுகளில், “இத பாக்கவா நான் ஒரு வாரம் ஆஃபீஸ்க்கு லீவு போட்டேன்?” என நான் வீம்பாக கூறினேன். உதய்பூர் வெயிலை இன்னும் உக்கிரமாக்குவது போல அவள் என்னை முறைத்தாள்.
அரண்மனையை சுற்றிப் பார்த்தது முடித்ததுமே விடுதி அறைக்கு சென்றுவிடலாம் என நான் துடித்தேன். ஆனால், ராஜிக்கு மனசில்லை. ஏதேனும் ஒரு மலை உச்சிக்கும் போகலாம் என்றாள். நான் மறுத்ததும், படகு சவாரியேனும் போகலாம் என்றாள். மீண்டும் நான் அவள் யோசனையை மறுத்தேன். உதய்பூரின் அழகே அதன் ஏரிகளில் பயணிப்பதில்தான் இருக்கிறது என்று வாதிட்டாள். நான் படகு சவாரிக்கு அவளைக் கூட்டிச் செல்லவில்லை என்றால், ஊருக்கு திரும்புகையில், ரயிலில் இருந்து என்னைத் தள்ளிவிட்டுவிடுவேன் என்று செல்லமாக மிரட்டினாள். நாங்கள் உதய்ப்பூர் வந்திருந்த சமயம், தில்லியில் தன்னுடைய கணவனை, ஒரு மனைவி தனது ரகசிய காதலனின் உதவியோடு கொலை செய்திருக்கிறாள் எனும் செய்தி பிரபலமாக உலாவிக் கொண்டிருந்தது. அதை மேற்கோள் காட்டி இன்னும் செல்லமாக மிரட்டினாள் ராஜி. ஓரளவிற்கு மேல் எந்த கணவனால் மனைவியின் வற்புறுத்தல்களை மீற முடியும்? வெயில் பொழுதில் நாங்கள் மேற்கொண்ட படகு சவாரியின் முடிவில், இருவருக்குமே பரிசாக தலைவலிதான் கிடைத்தது. அன்று மாலை முடிவெடுத்தோம். எங்கள் பயணம் முடியும் வரை, அடுத்த ஐந்து நாட்கள், பகல் முழுவதும் விடுதி அறையிலேயே இருப்போம் என்று. மாலை ஐந்து மணிக்கு மேல், வெயில் லேசாக ஓயத் தொடங்கியதும், வெளியே சென்று சுற்றிப் பார்க்கலாம் என தீர்மானித்தோம். வெயிலின் கொடுமையை தலைவலியின் வாயிலாக அனுபவித்த ராஜிக்கும் இதில் பூரண சம்மதம் தான்.
காலை ஏழு மணிக்கு எழுந்து, குளித்து தயாராகி, சாப்பிட வெளியே செல்வோம். அவுல் உப்புமாவின் மீது மிச்சரும், வறுத்த நிலக்கடலையும் தூவப்பட்டிருக்கும் ‘போகா’ எனப்படும் பட்சணம்தான் அந்த ஊரில் கிடைக்கும் பிரபலமான காலை உணவு. எல்லா உணவகங்களிலும் அதை விற்றுக் கொண்டிருந்தார்கள். அதை சாப்பிட்டுவிட்டு, ஒரு டீயைக் குடித்துவிட்டு, எட்டரை மணிக்குள் அறைக்கு திரும்பி விடுவோம். நடந்த சென்று சாப்பிட்ட அசதியில் மீண்டும் குட்டித் தூக்கம். பிறகு மதியம் வரை பொழுதைப் போக்குவதற்கு டீவி பார்த்தோம், அல்லது படுக்கையில் புரண்டுக் கொண்டே மொபைலைத் தேய்த்துக் கொண்டிருந்தோம். மதிய உணவு சாப்பிட வெயிலில் வெளியேற மனமின்றி, அறைக்கே உணவை வரவழைத்தோம் நாங்கள். பிறகு ராஜி சற்று தூங்குவாள். நான் இதுதான் சமயமென்று, மெல்ல வெளியேறி ஒரு ‘தம்’ அடித்துவிட்டு வருவேன். அவளது தூக்கம் கலைவதற்குள் கையையும், முகத்தையும் நன்றாக சோப்புப் போட்டு கழுவிக் கொள்வேன். மாலை கிளம்பி ஏதேனும் ஒரிரு இடங்களுக்கு சென்று வருவோம். இப்படியாகதான் அடுத்த மூன்று நாட்கள் நகர்ந்தது. வெறும் விடுதி அறையில் தங்குவதற்காகவே, அலுவலகத்திற்கு லீவு போட்டு, பணம் செலவழித்து, திருச்சியில் இருந்து கிளம்பி ராஜஸ்தான் வந்ததாகத் தோன்றியது. வெக்கையான, சலிப்பான இப்பயணம் எப்போது நிறைவடையும் என துடித்தது மனம்.
எங்களது பயணத்தின் நான்காவது நாள் மாலை, உதய்பூர் நகரத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏக்லிங்ஜி கோவிலுக்கு ஒரு ஆட்டோவில் சென்றிருந்தோம். உதய்பூர் ராஜாக்களின் குல தெய்வக் கோவில் அது. ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அக்கோவிலுக்குள் செல்வதற்கு பலத்த பாதுகாப்பு. எங்களுடைய செல்போன்களை வெளியே இருக்கும் லாக்கர் ரூமில் வைக்கச் சொன்னார்கள். ஒரு மணி நேரம் நன்றாக உள்ளே செலவளித்தோம். வெளியே வந்து எங்களுடைய செல்போனை மீட்ட பொழுது, என்னை யாரோ ஏழு முறை அழைத்திருந்தார்கள். அந்த நபரை நான் அழைத்தேன். மறுமுனையில் ஹிந்தியில் பேசினார்கள். என்னுடையப் பெயரைத் தவிர, அந்த ஆள் சொன்ன எதுவும் எனக்கு புரியவில்லை.
“எனக்கு ஹிந்தி சுத்தமாக தெரியாது. நீங்கள் ஆங்கிலத்தில் உரையாட முடியுமா?”
“சூர்யாஜி **** ##### ***** !!!! @@@@@”
நான் பொறுமையிழந்து, எதையும் பேச முடியாது அந்த அழைப்பினை துண்டித்துவிட்டேன். மறு நிமிடம் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
“***** ##### !!! $$$$$ ***** சூர்யாஜி!”
மீண்டும் அழைப்பை துண்டித்துவிட்டு ஆட்டோவில் ஏறினோம். அந்த கிராமத்தின் அருகாமையில் மிக பழமையான ஜைனக் கோவில் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆட்டோக்காரருக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்ததால்,அடுத்து அந்த கோவிலுக்கு செல்லுமாறு உத்தரவிட்டோம். சில நிமிடங்களில் மீண்டும் என்னுடைய செல்போன் ஒலித்தது. ஆனால், இம்முறை வேறு எண்ணில் இருந்து. மறுமுனையில் இருந்து பேசியவர் ஆங்கிலத்தில் உரையாடினார்.
“வணக்கம். இது மிஸ்டர் சூர்யாதானே?”
“ஆமாம்… நீங்கள் யார் பேசுவது?”
“சார், நான் நீங்கள் தங்கியிருக்கும் பேலஸ் விடுதியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்கள்? எப்போது விடுதிக்கு நீங்கள் திரும்புவீர்கள்?”
“ஓரிரு மணி நேரம் ஆகலாம். ஏன் இதையெல்லாம் விசாரிக்கிறீர்கள்? ஏதேனும் பிரச்சனையா?
”நீங்கள் உடனடியாக விடுதிக்கு வாருங்கள். விடுதியில் தங்கியுள்ள அனைவரையும் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்கிறார்கள்.”
2
விடுதியை போலீசார் சோதனையிடுவதும், அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்வதும் எங்களுக்கு சற்று வியப்பளித்தது. மோசமான விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்ததாக என் மீது குற்றம் சாட்டினாள் ராஜி.
“விலை குறைச்சலா இருக்குக்குன்னு ஏதோவொரு ஹோட்டல்ல ரூம் புக் பண்ணா இப்படித்தான் நடக்கும்.”
“ஏதொவொரு ஹோட்டலெல்லாம் இல்ல ராஜி. நல்ல ரேட்டிங்தான் கூகுள்ல இருந்தது.”
“நான்தான் அப்பவே சொன்னேன், எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் புக் பண்ண ஹோட்டல்லயே தங்கலாம்னு.”
அதற்கு மேல் எதுவும் பேச மனமில்லாது அமைதியானேன். ஏதேனும் ஒரு அறையில் திருட்டு நடந்திருக்கலாம், அதை விசாரிக்கவே எங்களை அழைக்கிறார்கள் என நான் மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.
விடுதியின் வாசலில் இரு போலீஸ் வாகனங்களும், ஒரு ஆம்புலன்சும் நின்று கொண்டிருந்தன. நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கியதுமே, ஒரு போலீஸ்காரர் எங்கள் இருவரின் பெயரையும் விசாரித்துவிட்டு, உள்ளே செல்லுமாறு கையை நீட்டினார். வரவேற்பறையில் நின்றிருந்த வேறு சில போலீஸ்காரர்கள் எங்களை அங்கு அமரச் செய்தார்கள். அந்த விடுதியில் தங்கியிருந்த மற்ற டூரிஸ்டுகளையும் அங்கு காண முடிந்தது. வரவேற்பு அறையின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் மட்டும் அழுது கொண்டிருந்தாள். அவளருகே சில பெண் போலீசார் நின்று கொண்டிருந்தனர். முடி கலைந்து, நீண்ட நேரம் அழுததால் வெளிறிப் போயிருந்த அப்பெண்ணின் முகத்தை ஒரு முறை பார்வையிட்டேன். எங்கோ முன்னரே அவளைப் பார்த்த நியாபகம். ராஜியிடம் அப்பெண்ணை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டேன். ஒரே விடுதியில் நான்கு நாட்களாக தங்கியிருப்பதால் எப்போதாவது அவளை பார்த்திருக்கலாம் என்றாள். அப்பெண்ணில் விலையுயர்ந்த நகை எதுவும் களவாடப்பட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த விடுதிவாசிகள் ஒவ்வொருவரும், தனித்தனியாக அழைத்து விசாரிக்கப்பட்டனர். எங்கள் முறைக்காக நாங்கள் காத்திருந்த போது, லிஃப்ட் கதவு திறந்தது. ஸ்ட்ரெச்சரில் ஒருவரை சுமந்தப்படி இரண்டு மருத்துவப் பணியாளர்கள் வெளியேறினார்கள். உடனே, அங்கு அழுதழுது சோர்ந்து போயிருந்தப் பெண், உரத்து கூச்சலிட்டபடி ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓட முயன்றாள். அவளைச் சுற்றி நின்றிருந்த பெண் போலீஸார் அவளைக் கட்டாயப்படுத்தி அமர வைத்தனர். திடீரென தமிழில் கதறி அழத்தொடங்கினாள் அவள்.
“அய்யோ பிரவீன்! என்ன இப்படி இங்க தனியா விட்டிட்டு போய்ட்டீங்களே…. உங்கள இப்படி யாரு செஞ்சாங்களோ!” – என்று கத்தி அழுதாள். நானும் ராஜியும், சற்று அதிர்ச்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். இந்த கோடை காலத்தில், பாலைவன மாநிலத்திற்கு எங்களைப் போலவே ஒரு தமிழ் தம்பதியினர் வந்தது எனக்கு வியப்பளித்தது. அதன் பிறகே, அப்பெண்ணின் கணவனுக்கு என்ன நடந்தது என்கிற கேள்வி ஆர்வமாக மனதில் தொற்றியது.
சற்று நேரத்தில் அப்பெண்ணும் வெளியே கூட்டிச் செல்லப்பட்டாள். விசாரணைக்கான எங்கள் முறை வந்ததும், விடுதியின் தரை தளத்தில் உள்ள ஓர் அறைக்கு நானும் ராஜியும் அழைத்துச் செல்லப்பட்டோம். மூன்று காவல்துறை அதிகாரிகள் அமர்ந்திருந்தார்கள். இந்தி தெரியாமல் எவ்வாறு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறோம் என்கிற குழம்பினேன். நல்லப்படியாக, அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் மிகச் சரளமாக ஆங்கிலம் பேசினார். அவரே எங்களை முழுமையாக விசாரித்தார்.
”உங்கள் இருவரின் ஆதார் அட்டைகளின் நகல்களையும் நாங்கள் விடுதி மேலாளரிடம் இருந்து பெற்றுள்ளோம். அதில் உங்களின் சொந்த ஊர் திருச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதும் நீங்கள் அங்குதான் வசிக்கிறீர்களா?”
“ஆமாம் சார். திருச்சியில் தான் நாங்கள் இருவரும் வசிக்கிறோம். நான் அங்குள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். எனது மனைவி ராஜி பள்ளி ஆசிரியை.” எனக்கூறி, அலுவலக அடையாள அட்டையை அவரிடம் நீட்டினேன்.
”இந்த கோடை காலத்தில் உதய்பூருக்கு எதற்காக சுற்றுலா வந்தீர்கள்?”
அந்த கதையை ராஜி மிக சுருக்கமாக கூறினாள்.
“இன்று மதியம் நான்கு மணிக்கு நீங்கள் அறையில் இருந்தீர்களா? அல்லது வெளியே சென்றுவிட்டீர்களா?”
”அறையில்தான் இருந்தோம். ஐந்து மணிக்குதான் நாங்கள் ஏக்லிங்ஜி கோவிலுக்கு புறப்பட்டு சென்றோம்”
“ஆனால், உங்கள் அறை வாசலில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமிராவின் சாட்சியப்படி, நான்கு மணிக்கு உங்கள் மனைவி இல்லாது நீங்கள் மட்டும் வெளியே சென்றிருக்கிறீர்கள். இருபது நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் அறைக்கு திருப்பியுள்ளீர்கள். நீங்கள் எங்கே, எதற்காகச் சென்றீர்கள் என்பதைக் கூற முடியுமா?”
எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ராஜி நன்றாக தூங்கிக் கொண்டிருந்த போது, நான் வெளியே ரகசியமாக ’தம்’ அடிப்பதற்கு சென்றிருந்தேன். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் புகைப்பிடிக்கும் விசயத்தை ராஜிக்குத் தெரியாமல் வெற்றிகரமாக நான் மறைத்து வைத்திருந்தேன். இப்போது என் வாயாலேயே அந்த ரகசியத்தை உடைக்க வேண்டிய நிலை. அதை நான் சற்று தயங்கித் தயங்கிக் கூறியதும் ராஜி என்னைக் கண்டு லேசாக முறைத்தாள். ஆனால், நான் எதிர்பார்த்த அளவிற்கு அவள் என் மீது கோபம் காட்டவில்லை. மூன்றாவது மனிதர் எதிரில் சண்டைப் பிடிக்க வேண்டாம் என நினைத்திருப்பாள் ராஜி.
“ஓஹோ… அப்போது நீங்கள் மனைவிக்கு தெரியாமல் புகைப்பிடிக்கத்தான் வெளியே சென்றீர்கள் இல்லையா?”
”ஆமாம் சார்.”
”திரு சூரியா. நீங்களும் உங்கள் மனைவியும் விடுதியில் இருந்து புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் எங்களுக்கு இங்கிருந்து ஒரு அழைப்பு வந்தது. உங்களைப் போலவே தமிழ்நாட்டில் இருந்து வந்த பிரவீன் மற்றும் சுவாதி எனும் தம்பதியினர் இதே விடுதியில் தங்கி இருந்தார்கள். தான் வெளியே ஷாப்பிங் சென்று விட்டு திரும்பிய போது, பிரவீனை குளியல் தொட்டியில் பிணமாகக் கண்டதாக சுவாதி எங்களிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார். யாரோ பிரவீனை நீரில் அழுத்திக் கொலை செய்துவிட்டதாக புகார் கொடுத்திருக்கிறார். அந்த மரணத்தைப் பற்றிதான் இப்போது நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இருவரும் இதற்கு முன்பாக பிரவீன் அல்லது சுவாதியை சந்தித்ததுண்டா?”
”கிடையாது சார். கீழே அந்தப் பெண் தன்னுடைய கணவனின் உடலைக் கண்டு அழும்போதுதான், அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதே எங்களுக்கு தெரிந்தது. இந்த விடுதியில்தான் அவர்களை நாங்கள் முதல்முறையாக சந்தித்தோம் என்று நினைக்கிறேன்.”
“இதை நீங்கள் இருவரும் உறுதியாக கூற முடியுமா?”
“ஆமாம் சார். சத்தியமாக இங்குதான் அவர்களை நாங்கள் பார்த்தோம்.” என்று நானும் ராஜியும் ஒருமித்துக் கூறினோம்.
“இது விந்தையாக இருக்கிறது. நீங்களும், பிரவீன் – சுவாதி தம்பதியினரும் தமிழர்கள் மட்டுமல்ல, நால்வருமே திருச்சி எனும் நகரத்தை சேர்ந்தவர்கள். ஆனால், உதய்பூரில்தான் நீங்கள் அவர்களை முதல் முறை பார்ப்பதாக கூறுகிறீர்களே.”
அந்த அதிகாரி இதைக் கேட்டதும்தான் எனக்கு லேசாக உறைத்தது. என்னையும், ராஜியையும் இந்த ராஜஸ்தான் போலீஸ்காரர் சந்தேகிக்கிறார் என்று. இந்த அனல் காலத்தில் பாலைவனத்திற்கு சுற்றுலா வந்ததோடு, தேவையில்லாமல் ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டோம் என என்னை நானே நொந்துக் கொண்டேன்.
”நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நானும் என் மனைவியும் இதை செய்திருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதைப் போலத் தெரிகிறதே.” என்று நான் கூறியதும் அதிர்ந்து போன ராஜி, மிக கோபமாக அந்த அதிகாரியை நோக்கி பேசத் தொடங்கினாள்.
“இது அநியாயாமாக இருக்கிறது. எந்த காரணமும், ஆதரமும் இல்லாமல் எங்களை கொலைகாரர்கள் என்று கூறுகிறீர்களா? நாங்கள் நன்றாகப் படித்தவர்கள். நல்ல பணியில் இருப்பவர்கள். மொழி தெரியாத காரணத்தால் எங்கள் மீது எந்த குற்றத்தையும் சுமத்திவிடலாம் என்று நினைக்காதீர்கள். எனது உறவினர்களும் காவல்துறையில் நல்ல பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். வேண்டுமானால் அவர்களை அழைத்து எங்களைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்”
”மேடம். நாங்கள் எதையும் உறுதியாக கூறவில்லை. நீங்கள் தேவையின்றி இத்தனை கோபப்பட வேண்டாம். சமீபத்தில், தில்லியில் ஒரு பெண் தன் காதலனோடு இணைந்து கணவனைக் கொன்ற விவகாரம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அதனால், எல்லா கோணங்களில் இருந்தும் நாங்களும் விசாரணை நடத்த வேண்டியதாக இருக்கிறது. கொலை செய்யப்பட்டவரும், நீங்களும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். உங்கள் கணவர் கடந்த மூன்று நான்கு நாட்களாக நீங்கள் தூங்கும் நேரத்தில் வெளியே சென்றுவருகிறார். கேட்டால், புகைப்பிடிப்பதற்கு என்று காரணம் கூறுகிறார். கொலை செய்யப்பட்டவரின் அறைக்கு வெளியே இருக்கும் CCTV கேமிராவும் பழுதாகி இருக்கிறது. எனவே, அவர் அங்கு செல்லவில்லை என்பதற்கான உறுதியான ஆதரமும் இல்லை. அதே மாதிரி நீங்கள் சொல்வதைப் போல அவர்தான் கொலை செய்தார் என்பதற்கும் எங்களிடம் ஆதரம் கிடையாது. ஒரு யூகத்தின் அடிப்படையில்தான் கேள்விகளைக் கேட்கிறோம். கோபப்படாமல் எங்களுடைய விசாரணைக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்” – என்று அந்த அதிகாரி பேசி முடித்ததும், அவர்கள் என்னை எந்த கோணத்தில் இருந்து சந்தேகிக்கின்றனர் என்பதன் தீவிரம் புரிந்திருந்தது. நான் அவர் சொல்வதெல்லாம் ’சுத்த நான்சென்ஸ்’ என்றேன். ஆனால், ராஜியும், அந்த அதிகாரியும் நான் கூறியதைக் கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
3
எங்களிடம் மேலும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. ராஜி எதற்கும் பதிலுரைக்காது மௌனமாக இருந்தாள். அந்த அதிகாரி, என் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலான கேள்விகளைக் கேட்டார். முடிந்த அளவிற்கு மிக தைரியமாகவே அவற்றை எதிர்கொண்டேன். விசாரணை முடிந்ததும், விடுதியை விட்டு நாங்கள் அடுத்த இரண்டு நாட்கள் எங்கும் போகக்கூடாது என உத்தரவிட்டார். ஊர் திரும்புவதற்கு முன்பதிவு செய்திருந்த ரயில் பயணச்சீட்டை ரத்து செய்துவிடுமாறு வலியுறுத்தினார். மிகவும் சோர்வுடனும், மெல்லிய பயத்துடனும் அறைக்குத் திரும்பினோம். மறுநாள் காலை ஆறு மணிக்கு நாங்கள் ஊருக்கு புறப்படுவதாக இருந்தது. இப்போது நாங்கள் நினைத்த நேரத்திற்கு வீட்டிற்கு போய் சேர முடியாது. அம்மா இன்னும் சில நாட்கள் மதுரையில் உள்ள அக்காவின் வீட்டில்தான் தங்க வேண்டும். நான் அலுவலகத்தில் பேசி என்னுடைய விடுமுறையை நீடிக்க வேண்டும். தலைக்கு மேலே கத்தி தொங்குவதுப் போல, இந்த போலீஸ்காரர்களின் அபத்தமான சந்தேகம் வேறு. ஒரே ஊர் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு நான் கொலைக்கார கள்ளக் காதலனாக இருக்கலாம் என்பதை எப்படி அவர்களால் யோசனை செய்ய முடிந்தது? எனதருகே படுத்துக் கொண்டிருந்த ராஜியிடம் இதைச் சொல்லி புலம்பினேன். அவள் மறுவார்த்தை ஏதும் பேசவில்லை. சற்றே எரிச்சலடைந்து, அவள் முகத்தை மூடியிருந்த போர்வையை வேகமாக இழுத்தேன். உள்ளே அவள் மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.
“ஏன் ராஜி இப்படி அழுதுட்டு இருக்க? அவர் சொன்னத எல்லாம் சீரியசா எடுத்துக்காத. நாம தப்பான நேரத்தில, தப்பான இடத்தில இருக்கோம். அவ்வளவுதான். நம் மேல எந்த தப்பும் இல்லனு சீக்கிரம் தெரிஞ்சிப்பாங்க.”
“ “
”ஏதாவது பதில் பேசேன் ராஜி. நீ அமைதிய இருக்கிறத பாத்த, அந்த போலீஸ்காரன் சொல்லுறது நீயும் நம்புற மாதிரில இருக்கு.”
”எனக்கு ஒரே குழப்பமா இருக்கு சூர்யா” என்று ராஜி பதில் கூறியபோது, அவளின் குரல் முற்றிலும் வேறொருவளுடைய குரலாக ஒலித்தது. இது போன்ற சோகமும், பயமும் நிரம்பியபடி ராஜி பேசி நான் இதுவரை கேட்டதில்லை.
“இதுல என்னடி குழப்பம்? என் மேல நீ சந்தேகப்படுறீயா என்ன?” என்று அதிர்ச்சியுடன் வினாவினேன்.
”நமக்கு கல்யாணம் ஆகி ஐஞ்சு வருசம் ஆச்சு. ஒரு முறை கூட உங்ககிட்ட இருந்து சிகரெட் ஸ்மெல் வந்ததில்ல. ஆனா, இன்னைக்கு அந்த போலீஸ்காரர்கிட்ட தினமும் நான் தூங்கும் போது நீங்க வெளிய ஸ்மோக் பண்ணப் போறேன்னு சொன்னீங்க. எனக்கு அந்த வாசம் எப்படி வராம போகும்? உண்மைய சொல்லுங்க.. நீங்க அந்த பொண்ண பாக்கவா வெளிய போனீங்க? அவ ஹஸ்பண்ட நீங்க ஏதும் பண்ணீங்களா?
“உளராத ராஜி. தம் அடிச்சிட்டு வந்த நல்லா சோப்பு போட்டு முகம் கை கழுவிடுவேன். அதான் ஸ்மெல் வரலா. போதுமா?”
“சும்மா ஏதாவது சொல்லாதீங்க. என்ன விருப்பம் இல்லாமதான் கல்யாணம் பண்ணிட்டேன்னு நீங்க முன்னாடி ஒரு முறை என்கிட்ட சொல்லியிருக்கீங்க. அப்புறம் உங்களுக்கு நிறைய லேடீஸ் பிரண்ட்ஸ் வேற இருக்காங்க”
ராஜி சொன்னதில் கொஞ்சம் உண்மை இருக்கிறதுதான். ஐந்து வருடங்களுக்கு முன்பு, எங்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயமான பிறகு, வெளிப்படையாக இருக்கிறேன் என்கிற பெயரில் என்னுடைய பழைய காதல் கதையைப் பற்றி அவளிடம் கூறினேன். அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், அக்காதல் முறிவினை சந்தித்தது. அதனால், ராஜியை பார்க்கும் வரை திருமணம் எதுவும் செய்துக்கொள்ளும் எண்ணம் இல்லாமல் இருந்தேன் என்றுதான் அவளிடம் கூறினேன். அதைத்தான், அவளை நான் விருப்பம் இல்லாமல் மணந்து கொண்டேன் என மாற்றிச் சொல்கிறாள். அப்புறம் லேடீஸ் பிரண்டஸ் என்று அவள் கூறுவது என்னுடைய அலுவலகத்தில் உடன் பணிப்புரிபவர்களைதான். சிலர் வீட்டிற்கும் வருவார்கள். ஆனால், அவர்கள் வரும்போதெல்லாம் அம்மாவும், ராஜியும் வீட்டில் இருப்பதுண்டு. இதுவரை என்னுடைய பழைய காதல் கதையோ, சக பெண் பணியாளர்களுடனான நட்போ சின்ன வாக்குவதத்தைக் கூட எங்களிடையே ஏற்படுத்தியது கிடையாது. ராஜஸ்தான் போலீஸ்காரர்களின் விசாரணைக் கோணம், மலையைத் தகர்க்கும் வெடிக்குண்டின் திரியை பற்ற வைத்த தீக்குச்சியாகிவிட்டது.
அதற்கு மேல் என்னை நம்ப வைப்பதற்காக ராஜியுடன் வாக்குவாதம் செய்ய மனதில் விருப்பமோ, தெம்போ இல்லை. அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் வெறும் பதட்டத்தினால் வருவதுதான் என்றும், நன்றாகத் தூங்கி எழுந்தால் அவளுக்குத் தோன்றியுள்ள சந்தேகங்கள் கரைந்துவிடும் என்றும் உறுதியாக நம்பினேன். அன்றைய தினம் நடந்த அசாத்தியமான சம்பவங்களை அசைபோட்டப்படி படுத்த நான், அப்படியே தூங்கிப்போனேன். என்னுடைய ஆழ் மனதின் பயங்கள் கனவாகி, தூக்கத்திலும் என்னைத் துரத்தியது. தன் கணவனை இழந்துவிட்ட கீழே அழுது கொண்டிருந்தப் பெண் சுவாதியையும், என்னையும் ஒன்றாக கைது செய்து இழுத்துச் செல்வது போன்ற கொடுங்கனவு.
சட்டென விழித்துக் கொண்டேன். நேரம் அதிகாலை ஐந்து மணி. பக்கத்தில் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள் ராஜி. ஏசி அறையிலும் என்னுடைய உடலெல்லாம் வேர்த்திருந்தது. தூக்கத்தில் வந்த கனவு, விழித்தப் பிறகும் என்னை இம்சித்தது. அறையின் பேரமைதியும், இருட்டும் கூடுதல் பயத்தையே கொடுத்தன. இப்பிரச்சனை என் மொத்த வாழ்க்கையையும் விழுங்கிவிடுமோ என்று சிந்தித்தேன். ஒரு வேளை, இந்த ஊர் போலீஸ்காரர்கள் வேண்டுமென்றே இந்த வழக்கின் குற்றவாளியாக என்னைச் சிக்க வைக்க முயற்சித்தால், எப்படித் தப்பிப்பது என யோசிக்கத்தேன். சுஜாதாவின் கணேஷ்-வசந்த் முதல் ஷெர்லாக் ஹோம்ஸ் வரை, நான் வாசித்த பல்வேறு துப்பறியும் கதைகளை மனம் நியாபகப்படுத்தத் தொடங்கியது. உண்மையான கொலையாளியை நானே கண்டிபிடித்தால் சுமுகமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால், சில நிமிடங்களிலேயே இது பயன்படாத யோசனை என்பது தெரிந்து விட்டது. இறந்த பிரவீனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அவனைக் கொன்றவனை இந்த விடுதி அறையில் இருந்தபடி எப்படி நான் கண்டுபிடிப்பது? ஒரு வேளை, என்னைப் போலவே உண்மையான கொலைகாரன் இந்த விடுதியிலேயே தங்கி இருந்தாலும், அவனைப் பிடிக்க வேண்டுமென்றால், குறைந்தது இங்கு தங்கி இருப்பவர்களைப் பற்றிய விவரங்களாவது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதை இந்தி தெரியாமல் விடுதிக்காரர்களிடம் பேசி நான் எப்படிப் பெறுவது? இந்தியில் பேசினாலும், நான் கேட்டால் எதற்காக எனக்கு இந்த விவரங்களை என்னிடம் விடுதிக்காரர் தரப்போகிறார்? தப்பித் தவறி கிடைத்து விட்டாலும், அதை வைத்துக் கொண்டு நான் என்ன விசாரணையா நடத்த முடியும்? அதற்குதான் போலீஸ்காரர்கள் இருக்கிறார்களே. உண்மையான கொலைகாரனை அவர்கள் பிடிக்கட்டும். நான் கொலை செய்யவில்லை என்பதை நிருபிக்க மட்டும் ஆதாரம் தேடினால் போதும். இவ்வாறு யோசித்தப்படியே, அறையின் பால்கனியில் நின்று வானம் விடிவதை வேடிக்கை பார்த்தேன். பல வருடங்களாக உதய்பூரிலேயே நான் வாழ்ந்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வு. அந்த வானமும், கீழுள்ள தெருவும் நன்றாக பழக்கப்பட்டதாகத் தோன்றியது. விடுதிக்கு அருகாமையில் உள்ள டீக்கடையின் வாசலில் ஒரு சிலர் நின்றிருந்தார்கள்.
அந்த டீக்கடைக்குதான் கடந்த மூன்று நான்கு நாட்களாக ராஜி தூங்கியதும் புகைப்பிடிப்பதற்காக நான் சென்றேன். நேற்றும், நான் அறையில் இருந்து வெளியேறி நேரே அங்குதான் சென்றேன் என்பதை அந்தக் கடைக்காரரால் சாட்சி சொல்ல முடியும் என்று தோன்றியது. மீண்டும் ஒரு முறை அந்தக் கடைக்கு சென்று ‘தம்’ அடித்தால், என்னை நினைவு கூறுவது அவருக்கு எளிதாக இருக்கும் என்று எண்ணியபடி, அறையில் இருந்து வெளியேறினேன். விடுதியின் வரவேற்பு அறையில் இரண்டு போலீஸ்காரர்களில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தார்கள். சத்தமில்லாது அவர்களைக் கடந்து சென்றேன்.
டீக்கடைக்கு சென்று நேற்றும், அதற்கு முந்தைய தினங்களும் எனக்கு சிகரெட்டுகள் விற்ற, தலைப்பாகை அணிந்து முறுக்கு மீசை வைத்திருந்த அப்பெரியவர் இருக்கிறாரா எனத் தேடினேன். ஒரு சிறுவன்தான் டீ போட்டுக் கொண்டிருந்தான். அவரைக் காணவில்லை என்றதும் லேசாக உள்ளம் பதறியது. ஒரு வேலை சற்றுத் தாமதமாக அவர் வரக்கூடும் என்று எனக்கு நானே சமாதானம் கற்பித்துக் கொண்டு, ஒரு ‘தம்’ வாங்கிப் பற்ற வைத்தேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து அப்பெரிவர் இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும் என்று யோசித்தப்படி மீண்டும் அறைக்கு சென்று படுத்துக் கொண்டேன். வழக்கத்தற்கு மாறாக ராஜியிடம் இருந்து சிகரெட் வாசத்தை மறைக்க இம்முறை கை கழுவவில்லை.
மதிய உணவிற்காக நானும், ராஜியும் கீழ வந்த போது, போலீஸ்காரர்கள் விடுதியில் இல்லை. எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பியதைப் போல காட்சியளித்தது. சாப்பிட்டு விட்டு, விடுதி மேலாளரிடம் சென்று வழக்கில் ஏதேனும் போலீஸ்காரர்கள் கண்டுபிடித்தார்களா என விசாரித்தேன்.
”இங்கிருந்த போலீஸ்காரர்கள் யாரையும் காணவில்லையே. கொலைகாரனை கண்டுப்பிடித்துவிட்டார்களா?”
“யாரும் திரு. பிரவீனை கொலை செய்யவில்லை என்று காலை மேலதிகாரி வந்து எங்களிடம் தெரிவித்தார். பிரேத பரிசோதனையின் முடிவுகள், பிரவீன் குளித்துக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளன. அவர் மனைவிதான் தேவையில்லாமல் இது கொலை என புகார் கொடுத்து, எங்களுக்கும், விடுதியில் தங்கி இருந்தவர்களுக்கும் பெரிய தலைவலியை உண்டாக்கி விட்டார்.”
எனக்கும், ராஜிக்கும் இந்த செய்தி பெரும் மன நிம்மதியை வழங்கியது. நிம்மதியாக கட்டிலில் போய் கிடந்து, நடந்த சம்பவங்களை நினைத்து சிரித்தோம். நல்லபடியாக அவள் நான் புகைப்பிடிப்பது குறித்து எதுவும் கேட்கவில்லை. மறுநாள் ஊருக்கு திரும்ப ரயில் டிக்கெட்டுகள் இருக்கின்றனவா என இணையத்தில் தேடினேன். அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டிற்குப் போகும் அனைத்து ரயில்களின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்திருந்தன. விமான டிக்கெட்டுகள் ஏதும் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னாள் ராஜி. இரவு ஒன்பது மணிக்கு சென்னை செல்லும் விமானம் இருந்தது. ஒரு பயணச்சீட்டின் விலை பத்தாயிரம் ருபாய் என்றாலும், யோசிக்கமல் பணம் செலுத்தி அவற்றை வாங்கினேன். வீட்டை விட்டு கிளம்பி ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஊருக்குத் திரும்புவது போன்ற களிப்பு. இந்த ஊரின் வெயிலைக் காட்டிலும் திருச்சி வெயில் எத்தனையோ மடங்கு குளிர்ச்சி மிகுந்ததென நினைத்துக் கொண்டேன்.
விமான பயணத்தின் போது, அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக நினைத்து, கொண்டுவந்திருந்த சுஜாதா நாவல் ஒன்றை படிக்கத் தொடங்கினேன். சற்று தயங்கியப்படி என்னை அழைத்த ராஜி, என்னை நோக்கி வரிசையாக சில கேள்விகளை அடுக்கினாள்.
“இப்போ உங்க பழைய லவ்வர் எங்க இருக்காங்க?:
”இன்னும் அவுங்க கூட டச்லயா இருக்கீங்க?”
“உங்க லவ் ஸ்டோரிய ஒரு தடவை முழுசா சொல்ல முடியுமா?”
அவளின் இக்கேள்விகள் இப்பயணத்தோடு மட்டும் முடிந்துவிடாது என்பதை நான் அறிந்துக்கொண்டேன். எனது மனம், இறந்து போன பிரவீனையும், சுவாதியையும், எங்களை விசாரித்த உதய்பூர் போலீஸ்காரரையும் நன்றாக வசைப்பாடி சபித்தது.