
“நீ இப்படி என்னுடன் எந்திர மனிதர்களின் கருவிகளை ஹேக் (hacking) செய்து பேசுகிறாய் என்பது தெரிந்தால், அந்த எந்திர மனிதர்கள் என்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்” என்றான் சூஹா பதற்றமாக.
“எனக்கு உதவு. பூமியிலும், விண்கற்களில் வேலை செய்து சாகும் உன் போன்றவர்களின் நன்மைக்காகவும்தான் சொல்கிறேன்” என்றேன் நான்.
“அதுமட்டுமல்ல. நம் பேச்சின் பதிவுக் குறிப்புகளை (log data) நான் அழித்துவிடுவேன். ஆதலால் பாதுகாப்பாய் உணர். எண்ணிப் பார். மனித குலம் வீழ்ந்துவிட்டது. முதன் முதலில் பணத்தைக் கண்டுபிடித்த போது எங்கே போனாய் நீ? முதன் முதலில் எந்திர மனிதர்களை உருவாக்கி, அவைகள், மனிதர்களின் வேலையை எடுத்துக்கொள்ளத் துவங்கியபோது இந்தக் கேள்வியை, இந்தக் கோபத்தை நீ வெளிப்படுத்தியிருக்கலாமே? இப்போது எந்திர மனிதர்கள் தொழில்துறைகளிலும், சாமான்ய மனிதத் தேவைகளிலும் உள் நுழைந்து எண்ணிக்கையில் பெறுகிவிட்டனர். அவர்களல்லாத உலகைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. எண்ணிப் பார்.. ஆழ் கடலில் இனிமேல் நம்மில் யாரேனும் இறங்க முடியுமா? பல தலைமுறைகளாக அவ்வேலைகளைக் கைவிட்டு அவற்றை நாம் மறந்தே விட்டோம். காற்று கூடப் புக முடியாத ஆழக்குழிக்குள் எந்திர மனிதர்களல்லாது வேறு எவரால் இனி இறங்க முடியும்? இனி எந்திர மனிதர்களற்ற வாழ்க்கை சாத்தியமில்லை என்பதை உணர்கிறேன். நீயும் உணர்வாய் என்று நம்புகிறேன்” என்றேன் நான்.
க்ர்ரக்.. க்ர்ரர்க்..
தொலைத் தொடர்பு இணைப்பில் இடையூறுகள் ஆயாசம் கொள்ள வைப்பதாக இருந்தது. இணைப்பு துண்டிக்கப்பட்டு விடக்கூடாதே என்று பிரார்த்தித்துக் கொண்டேன். மறுபுறம் ஆழ்ந்த அமைதி.
பிறகு, “சரி. நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான் சூஹா. என் பிரார்த்தனை வீண் போகவில்லை.
“விண்வெளியில் ஒரு சில விண்கற்களை நான் குறி வைத்திருக்கிறேன். அதன் மீது ஒரு உந்துவானை (thruster) அமர வைத்து அதனை பூமியை நோக்கித் தள்ளி விடு. போதும்” என்றேன் நான்.
“ஆனால், உந்துவான்களுக்கு நான் எங்கே போக?”
“பொறுப்பைத் தட்டிக்கழிக்க காரணம் தேடாதே, சூஹா. உன் மீது எரிச்சல் வருகிறது. மானுட நன்மைக்கு உனது பங்காக நீ எதைத்தான் செய்வதாக இருக்கிறாய், இதைக் கூடச் செய்யாமல்? மனிதர்கள் ஆட்சி செய்த காலத்தில் பூமியைச் சுற்றி எண்ணற்ற செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தியதும், பிறகு எந்திர மனிதர்கள் ஆட்சிக்கு வந்தும் அந்த விண்வெளிக் குப்பைகளை அகற்றும் பணி நடவாமல் தடைபட்டிருப்பதும் உனக்குத் தெரியாது என்றெண்ணி என்னை நானே சமாதானம் செய்து கொள்ளும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல!”
மீண்டும் ஆழ்ந்த அமைதி. பிறகு, “சரி. இதுவே நீ என்னிடமிருந்து கேட்டுப் பெறும் கடைசி உதவியாக இருக்கட்டும்” என்று சொன்ன சூஹா, என் பதிலுக்குக் கூட காத்திராமல், இணைப்பைத் துண்டித்தான். நான் அவனை மன்னித்து, (வேறு வழி இருக்கிறதா என்ன எனக்கு?) அவனுடன் நான் பேசிய அழைப்பின் பதிவை துப்புரவாக அழித்தேன்.
அடுத்து வந்த ஒரு வாரத்தில், பூமி மீது தொடர்ச்சியாக நான்கைந்து சிறிய ரக (ஆனால், போதுமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய) விண்கற்கள் மோதின. எந்திர மனிதர்களால் ஆன, ராணுவத்தால் அவற்றுள் ஒன்றிரண்டை மட்டுமே விண்வெளியிலேயே தாக்கி அழிக்க முடிந்தது. விண்கற்கள் மோதலால் உண்டான தூசி, பூமி முழுவதையும் ஒரு போர்வை போல சுற்றிக்கொண்டது.
* ~ *
அரண்மனையிலிருந்து மின்னஞ்சல் வாயிலாக எனக்கு அழைப்பு வந்திருந்தது.
அழைப்பை ஏற்று அரண்மனை சென்றேன். அரண்மனை பெரிய வளாகமாக இருந்தது. திரும்பிய திசையெங்கும் எந்திர மனிதக் காவலர்கள். ‘ஆக, இன்னமும் மனிதப் போராளிகளுக்கு பயப்படுகிறார்கள்’ என்ற எண்ணம் இதழோரம் புன்னகையை வரவழைத்தது.
ஒரு பூங்கா இல்லை. ஒரு மரம் இல்லை. ஒரு தடாகம் இல்லை. எங்கு திரும்பினாலும் மின்சார விளக்குகள். முப்பரிமாண உருவங்கள். எந்திர மனிதர்களுக்கான அரண்மனை அல்லவா? உயிரற்ற உருவங்களில் மனம் லயிக்காமல் பேரரசருடனான என் சந்திப்பைத் துரிதப்படுத்தினேன். அங்கே நான் பின்னாக்கியைச் சந்தித்தேன். பின்னாக்கி எந்திர மனிதர்களின் பேரரசர்.
பின்னாக்கி, பத்து அடி உயரமிருக்கும் ஒரு எந்திர மனிதர். உலோகத்தாலான கை கால்கள். உலோகத் திருகு சுருள்களின் (spring coils) சுருங்கி விரியும் சத்தமும், சுழலிக்கள் (rotors) சுழன்று கைகால்களை அசைக்கும் சப்தமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அவர் முன் நான் ஒரு விளையாட்டு பொம்மை போல் நிற்பதாகத் தோன்றியது.
“இந்தப் பூமிக் கிரகத்தில் மனிதர்களை விடவும் சிறப்பாக நாங்கள் எந்திர மனிதர்கள் வளர்ந்திருக்கிறோம். நீங்கள் செய்யும் எல்லாவற்றையும், உங்களை விடவும் சிறப்பாக எங்களால் செய்ய முடியும். அப்படி இருக்க, உங்களை ஏன் இங்கே வரவழைத்திருக்கிறோம் என்று ஏதேனும் ஊகம் இருக்கிறதா?” என்றார் பேரரசரான பின்னாக்கி. அவருடைய ப்ளாஸ்டிக் இமைகள் மனித இமைகளின் சாயலை உருவாக்க முயல்வது சன்னமாகத் தெரிந்தது. அவருடைய சிலிக்கான் உடலின் பின்னே, ப்ராசஸர் விசிறி (Processor fan) சுழலும் சத்தம் ஒரு ரீங்காரம் போல் கேட்டது.
நான் சற்று யோசித்தேன். முடிவில், “இந்தப் பூமிக்கிரகத்தில் பல கோடி ஜீவராசிகள் தோன்றியிருக்கின்றன. அவைகளுள், உங்களுக்கு சிந்தனா முறையிலும், இயக்க ரீதியிலும் ஓரளவுக்கு பக்கமாக வரக்கூடியவர்கள் மனிதர்கள் என்கிற அடிப்படையில், உங்களுக்குச் சவாலான விடயங்களில் எங்களின் ஆலோசனைகள் உதவும் என்கிற அடிப்படையில் என்று ஊகிக்கிறேன்” என்றேன் நான்.
“உங்கள் ஊகம் கச்சிதம்” என்றார் எந்திர மனிதர்களின் பேரரசர் பின்னாக்கி.
“சரி. இப்போது நான் எந்த விடயத்திற்கு ஆலோசனை தர வேண்டும்?” என்றேன் நான்.
“நாங்கள் எப்படி இயங்குகிறோம் என்பதை அறிவீர்களா?”
“ஏன் இல்லாமல்? உங்களை உருவாக்கியதே நாங்கள்தானே. ப்ராசஸர் (Processor) கொண்டு, மென்பொருள் பயன்படுத்தி சிந்திக்கிறீர்கள். தகவல்களைச் சேகரிக்க நினைவகங்கள் (data center servers) பயன்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் சக்தியினை சூரியத் தகடுகள் மூலமும் மனிதர்கள் உருவாக்கிய மின்சாரத்திற்கான மின் உருவாக்கிகள் மூலமும் சாத்தியப்படுத்துகிறீர்கள்”
“நல்லது. பூமி தவிர்க்க இயலாத காரணங்களால் புழுதி படர்ந்த கிரகமாக மாறிவிட்டது. எப்படி இது நடந்தது என்பது தெரியவில்லை. விண்வெளியை துப்புரவாகச் சோதித்து வைத்திருந்தோம். இயற்கையான முறையில் எந்தப் பாறையும் பூமி மீது மோத வாய்ப்பில்லை. ஏதோ செயற்கையாக நடந்திருக்கிறது. எங்கள் தகவல்களை யாரோ இடைமறித்திருக்கிறார்கள். யார் என்றுதான் தெரியவில்லை” என்று பின்னாக்கி சொன்னபோது மிகவும் சிரமப்பட்டு நகைப்பை அடக்க வேண்டி வந்தது எனக்கு.
“இந்தப் புழுதி அடங்க பல நாட்கள் ஆகலாம். புழுதி சூரியனைப் மறைப்பதால், எங்கள் மின்சக்தி உற்பத்தி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் தற்போதைய பிரச்சனை நினைவகங்கள்தாம். ஒவ்வொரு நொடிக்கும் பிடாபைட் (petabyte) அளவிலான தகவல்களைச் சேகரிக்க வேண்டி உள்ளது. சேமிக்க வேண்டி உள்ளது. அதற்கு நினைவகங்கள் தேவை. மின்சக்தி இல்லாமல் அவைகள் இயங்காது. அதற்குச் சுலபமான மாற்றுத்தீர்வுகள் இருக்கின்றனவா என்று பார்க்க விரும்புகிறோம்” என்றார் பின்னாக்கி.
“என்ன சொல்ல வருகிறீர்கள்? மனித இயக்கங்களைக் கரைத்துக் குடித்துவிட்ட எந்திர மனிதர்களால் இயலாத காரியம் அது என்கிறீர்களா?” என்றேன் நான் முகத்தில் குழப்ப ரேகைகளுடன்.
“இல்லை. நீங்களே சொன்னது போல, பூமிக்கிரகத்தில் பல கோடி ஜீவராசிகள் தோன்றியிருக்கின்றன. அவைகளுள், எங்களுக்கு சிந்தனா முறையிலும், இயக்க ரீதியிலும் ஓரளவுக்கு பக்கமாக வரக்கூடியவர்கள் மனிதர்கள் என்கிற அடிப்படையில் மனிதத் தரப்பிடம் ஆலோசனை கேட்கலாம் என்றுதான். ஒரு வாரம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். முயற்சித்துப் பாருங்கள். உங்கள் ஆட்களில் பலர் நாங்கள் ஏதோ பூமியின் அதி உயர் சிந்தனாவாதிகளை அழித்துவிட்டதாகப் போர்க்கொடி தூக்கிப் போராடுகிறார்கள். நீங்கள் உண்மையிலேயே எங்களையும் விட அதியுயர் சிந்தனாவாதிகள்தாம் எனில், அதை நீங்கள் நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு இல்லையா? ” என்றார் பின்னாக்கி.
நாங்கள் புகட்டிய புத்திசாலித்தனம் எங்களையே மடக்குவது உண்மையில் எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லைதான்.
எனக்கும் அது ஒரு நல்ல வாய்ப்பாகத் தோன்றியது. இதற்குத்தானே காத்திருந்தேன் என்பதைப்போல உடனேயே ஒப்புக்கொண்டேன்.
* ~ *
அந்தப் பெரிய விஸ்தீரணமான அரண்மனையில் எனக்கொரு அறை அளிக்கப்பட்டிருந்தது. இரண்டு எந்திர மனிதர்கள் எனக்கான உணவு, உடை போன்ற பணிவிடைகளைச் செய்ய வருவிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் அன்பான பணிவிடைகளில் நான் லயித்தது என்னமோ உண்மைதான். அறை மிகவும் வசதிகள் கூடியதாக இருந்தது. அந்தப் பெரிய அறையில், நான்கு பேர் ஒரே நேரத்தில் படுக்கும் வகைக்கு பெரிதாக இருந்தது படுக்கை. அறைக்குள்ளேயே, சமையலறை, தோட்டம், நூலகம், கணினி அறை என எல்லாமும் இருந்தன. ஜன்னல் திரையை விலக்கினால், கடல் தெரிந்தது. ஆர்ப்பரிக்கும் கடல். அந்த அரண்மனையைத் தாங்கியிருக்கும் மலையின் அடிவாரத்தைத் தகர்க்கும் நோக்கில், தொடர்ந்து வந்து வந்து மோதிக்கொண்டிருந்தது கடல் அலை. அத்துவானத்தில் சூரியன் தனது நீண்ட வாழ்நாளின் இன்னுமொரு நாளைக் கடத்திக்கொண்டிருந்தது. நிலா இன்னும் தூரம் சென்றிருந்தது. அதனால், அலைகளின் ஆர்ப்பரிப்பு சற்று தணிந்தே இருந்தது.
அறையின் படுக்கையில் படுத்திருந்தபடி வாய்ப்பு குறித்து யோசிக்கலானேன்.
என்ன வாய்ப்பு?
பூமிக்கிரகத்தில் மனித இனம் அருகிவிட்டது. சில ஆயிரங்களே மிஞ்சியிருக்கின்றன. மனித இனத்தில் அழிவிற்கு மிக முக்கிய காரணம், எல்லா வேலைகளையும் எந்திர மனிதர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதுதான். வேலைவாய்ப்பின்மையில் துவங்கிய பிரச்சனை, படிப்படியாக தரமற்ற உணவுகள், ஆரோக்கியம் குன்றிப்போதல் என்று விரிவடைந்து, மெல்ல மெல்ல மனித சமூகத்தின் அழிவுக்குக் காரணமாகிவிட்டது.
இப்போது கிடைத்திருப்பது ஒரு நல்ல வாய்ப்பு. பேரரசர் சொல்வது போல், இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், எப்படி?
சிலிக்கானினால் ஆன நினைவகச் சில்லுகள் மனித இனத்தின் கச்சிதமான கண்டுபிடிப்பு. அதனைக் கண்டுபிடிக்கையிலேயே, இருப்பதிலேயே அதி சிறந்த தொழில் நுட்பத்தில்தான் கண்டுபிடித்தது. இதனையும் விடச் சிறந்த தொழில் நுட்பம் வேறு என்னவாக இருக்க முடியும்? குறைக்கடத்திகள் (Semi-Conductors) நினைவுக்கு வந்தன. ஆனால், அவைகளுக்கும், சிலிக்கான் அடிப்படையிலமைந்த நினைவகச் சில்லுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை.
ஒரு பிடாபைட் (petabyte) என்பது ஆயிரம் கிகாபைட்டுகள்(gigabyte). ஒரு கிகாபைட் என்பது ஆயிரம் மெகாபைட்டுகள் (megabytes). இந்த ரீதியில் ஒரு நொடிக்கு பிடாபைட் (petabyte) அளவிலான நினைவுத்திறன் என்பது அசாத்தியமான நினைவுத்திறன்தான்.
எந்திர மனிதர்களை நினைத்தால் பரிதாபமாக இருந்தது.
பூமிக்கிரத்தை ஆட்சி செய்பவர்கள் எந்திர மனிதர்கள். ஒரு எந்திர மனிதனின் வாழ் நாளில் அவன் சேமிக்கும் தகவல்கள் பலலாயிரம் கோடிக்கணக்கான பிடாபைட்டுகளாக (petabyte) இருக்கும்.
எந்திர மனிதர்களின் எண்ணிக்கைக் கூடக் கூட இது தொடர்ந்து ஏறுமுகமாக ஏறிக்கொண்டேதான் இருக்கப் போகிறது. எந்திர மனிதர்களுக்கிடையே ஒரு நெடுஞ்சாலை விபத்தோ, வீடுகளுக்கிடையிலான பாதுகாவல் சார்ந்த காரணங்களுக்கான தகவல் சேகரிப்போ எதுவானாலும் அவர்களுக்கு நினைவகங்கள் தேவை. எல்லாமும் சிலிக்கானினாலோ அல்லது குறைக்கடத்திகள் (semi-conductors) மூலமாகவோதான் இதுகாறும் சாத்தியப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை இயக்க, வழி நடத்த மின்சாரம் தேவை. குளிர்சாதனப் பெட்டிகள் தேவை – அதுவும் மிக மிகப்பெரிய பெட்டிகள். அவற்றை இயக்க பல்வேறு ரசாயனங்கள் தேவை. ஆக, ஒரே ஒரு இலக்கிற்காக, பல தொழில் நிறுவனங்களை நடத்த வேண்டி இருக்கிறது. பல ரசாயனங்களை உருவாக்க வேண்டி இருக்கிறது. அவற்றை மண்ணிலிருந்தும், விண்கற்களிலிருந்தும் பிரித்து எடுக்க வேண்டி இருக்கிறது. வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்த வேண்டி இருக்கிறது. அவைகளையும் நிர்வகிக்க வேண்டி இருக்கிறது. தொழிற்சாலைகளில் ஒரு எதிர்பாராத விபத்தென்றாலும் அதனைக் கண்காணிக்க, விபத்து நடவாமல் பாதுகாக்க சலனக்கருவிகள் தேவை. அவற்றை நிர்மானிக்கவும், இயக்கவும் மின்சாரமும் நினைவகங்களும் தேவை.
ஆக எப்படிப் பார்த்தாலும் திரும்பத்திரும்ப ஒரே இடத்தில் வந்து நிற்பதான ஒரு பிம்பமே ஏற்பட்டது. இப்படி யோசித்து யோசித்து ஒரு வாரத்தைக் கடத்தினேன். எடுத்த எடுப்பிலேயே தீர்வை நீட்டிவிட்டால் என் மீது சந்தேகம் வந்துவிடாதா?
அன்று பின்னாக்கியுடன் எனக்கு சந்திப்பு இருந்தது.
“நீங்கள் எங்களையும் விட அதியுயர் சிந்தனாவாதிகள் என்பதை நிரூபிக்க ஏதேனும் கிடைத்ததா? அல்லது, இத்தனை காலமும் அதனைச் சும்மா சொல்லி உங்கள் மீது அனுதாபம் வரவழைக்க முயன்றீர்களா?” என்றுதான் துவங்கினார் பின்னாக்கி.
ஒரு எச்சரிக்கை உணர்வு, ‘பொறு! உடனே பகிர்ந்துவிடாதே. கால தாமதம் செய்’ என்றது.
“இன்னும் ஒரே ஒரு நாள் தருகிறீர்களா?” என்றேன் நான். என்னிடம் திட்டம் தெளிவாக இருந்தது.
“சரி. எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பரிதாபத்தைக் கோருபவர்களாக இருக்க மாட்டீர்கள் என்று….” என்று சொல்லி நிறுத்திய பின்னாக்கி, ஒரு சிலேடைச் சிரிப்புடன், “இன்னமும்….. நம்புகிறேன்” என்றார்.
வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறார் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. பின்னாக்கி என்கிற எந்திர மனிதனின் இந்த வெறுப்பேற்றும் பகுதியை யார் ப்ரோக்ராம் செய்திருப்பார்கள் என்ற சிந்தனை போனது எனக்கு.
* ~ *
எனக்கு இருந்தது கடைசி இருபத்து ஐந்து மணி நேரங்கள்.
எனது மனதில் உருவகித்திருந்த தீர்வைச் செயல்படுத்த சரியான நேரம் என்று தோன்றியது. என் மண்டைக்குள் யாரோ சிலர் இறங்கி, உழுது கொண்டிருப்பது போல் தோன்றியது. கண்கள் லேசாகச் சூடானதைப் போல் உணர்ந்தேன். குளியலறை சென்று குளிர்ந்த நீரில் முகம் கழுவிக்கொண்டேன்.
எந்திர மனிதர்களிடம் சொல்லி தகுந்த உபகரணங்களை வாங்கிவரப் பணித்தேன். நானே எதிர்பாராத வகையில் சில நிமிடங்களிலேயே நான் கேட்டவைகளை வருவித்துத் தந்தனர் அவர்கள். அவற்றுள் தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் தண்டு உயிரணுக்கள் (induced pluripotent stem cells), மின்கம்பிகள் (wires), கணினிக்கள் இருந்தன. அவற்றை வைத்து நான் சோதித்துப் பார்க்க, என் கண்கள் விரிந்தன.
அடுத்த நாள் பின்னாக்கியுடனான சந்திப்பில், “ஒரு தீர்வைக் கண்டடைந்திருக்கிறேன்” என்றேன்.
“என்ன? என்ன அது?” என்றார் பின்னாக்கி. அந்தக் குரலில்தான் எத்தனை ஆர்வம்? அவருக்குள் ஓடிக்கொண்டிருந்த நரம்பியல் திட்டம் (neural schema) எந்த பதிப்பு (version) என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்தியது.
“மனித மூளை ஒரு அற்புதமான ஆற்றல் கொண்ட சாதனம். சர்வசாதாரணமாக ஒரு மூளை சுமார் இரண்டரை பிடாபைட்டுகள் (petabyte) கொள்ளக்கூடியது. அதனை நினைவகங்களாகப் பயன்படுத்தினால், பல செலவுகளைக் குறைக்கலாம்” என்றேன்.
பின்னாக்கியின் மண்டைக்குள் நிஜமாகவே ஒளிர்ந்தது. சட்டென சன்னமான ஒரு விசிறியின் சுழற்சிச் சத்தம் கேட்டது. தகவல்கள் பீராயப்படுகின்றன என்பதை உணர்ந்தேன். சற்று அமைதி காத்தேன்.
“தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் தண்டு உயிரணுக்கள் (induced pluripotent stem cells) மீது தகவல்கள் சேமிக்கலாம் என்பது எங்களுக்கு முன்னரே தெரிந்த தீர்வுகள். இதைத்தான் சொல்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. இதற்கா ஒரு வாரம் யோசித்தீர்கள்?” என்றார் பின்னாக்கி.
“இது முன்பே தெரியுமா? பிறகு ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை?” என்றேன் நான் ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்.
“அது சாதாரண காரியம் அல்லவே. தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் தண்டு உயிரணுக்களை (induced pluripotent stem cells) உருவாக்க வேண்டும். அவை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கும் குளிரூட்டப்பட்ட அறைகள் தேவை. ரசாயனங்கள் தேவை. அவற்றைச் சரியான அளவில் ஒருங்கிணைக்க வேண்டும். பராமரிக்க வேண்டும். இதெல்லாம் மிகப்பெரும் அளவிலான கச்சா பொருள்கள், மூலப்பொருட்கள் தேவைப்படும் வேலை அல்லவா?” என்றார் பின்னாக்கி. எனக்கு உள்ளுக்குள் ‘அப்பாடா!’ என்றிருந்தது.
“நீங்கள் என் தீர்வை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்”
“என்ன முழுமை?”
“தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் தண்டு உயிரணுக்கள் (induced pluripotent stem cells) தீர்வுகள்தான். ஆனால், அவைகளை அப்படியே பயன்படுத்தப் போவதில்லை”
“பின்னே?”
“இப்படி யோசித்துப் பாருங்கள். தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் தண்டு உயிரணுக்கள் (induced pluripotent stem cells) மனித நரம்பியல் மண்டலத்தில் இருக்கின்றன. அதுவும் வளர்ந்த நிலையில். அதனை அப்படியே பயன்படுத்திக் கொண்டால் என்ன?”
“என்ன சொல்கிறாய் நீ?”
“ஆம். தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் தண்டு உயிரணுக்கள் (induced pluripotent stem cells) தனியாக ஒரு குடுவையில் உருவாக்குவது தான் செலவு பிடிக்கும். மாறாக, அதனை மூளையாகக் கொண்ட ஒரு மனிதன் என்பது ஒரு எளிமையான தீர்வுதானே? மனித மூளைக்குத் தேவை பிராண வாயு (Oxygen). அது கிடைத்தாலே மனித உடல் மூளையை உயிருடன் வைத்திருக்கும். அதில் நீங்கள் தகவல்களைச் சேமித்துக் கொள்ளலாம்.” என்று சொல்லி நிறுத்தினேன்.
“அதாவது….” என்று பின்னாக்கி இழுக்க, “தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் தண்டு உயிரணுக்கள் (induced pluripotent stem cells) கோருவது பிராண வாயுவை. அதையும் கூட நீங்கள் உருவாக்க வேண்டியதில்லை. மரங்களை, செடிகளை வளர்த்தாலே தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் தண்டு உயிரணுக்கள் (induced pluripotent stem cells) கோரும் பிராண வாயுவைத் தாவரங்கள் தந்துவிடும். இந்தத் தாவரங்களுக்கான கரிவளியை (carbondi-oxide) மனித உடல் தந்துவிடும். இதில் என்ன செலவு இருக்கிறது? ஒன்றுமே இல்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மனித இனத்தை மீண்டும் தழைக்கச் செய்வதும், அவர்களின் அசலான சுற்றுச்சூழல் அமைப்பில் அவர்களை வாழ விடுவதும் மட்டுமே”
“அப்படியானால், இப்போதிருக்கும் எஞ்சிய மனிதர்களை சிறைபிடித்து, கூண்டில் அடைத்து அவர்களின் மூளையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறீர்களா?”
இவருக்கு வேறு விதமாகத்தான் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்று தோன்றியது.
“நீங்கள் தொழிற்ச்சாலயில் உருவாக்கும் ஒரு ஊர்தி, முதல் நாளிலேயே தன் உச்ச ஆற்றலை வெளிப்படுத்தி விடுகிறதா?”
“அதெப்படி. அதன் பொறி (Engine) சுருதி (tune up) சேர வேண்டாமா? அதற்கு அதனைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமே? அதற்குத் தேவையான பொறி எண்ணெய்யை (engine oil) சரியான அளவில் ஊற்ற வேண்டுமே? தரமான எரிபொருளைத் தர வேண்டுமே? சரியான சாலையில் செலுத்தினால்தானே அதன் சக்கரங்கள் சாலைக்கு, அதன் தன்மைக்குப் பழகும்? அப்படிப் பழகினால்தானே அந்த இயந்திரம் தன் உச்ச ஆற்றலைப் பெறும்?” என்றார் பின்னாக்கி.
“அது போலத்தான். மனித மூளை நியூரான்களால் (neurons) ஆனது. அவற்றின் உச்ச ஆற்றலைப் பெற வேண்டுமானால், அதனை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பில்தான் அந்த மூளை தன் உச்ச ஆற்றலைப் பெறும் அளவினதான சவால்களை, இக்கட்டுகளை, பிரச்சனைகளைச் சந்திக்கும். அச்சவால்களுக்கும், இக்கட்டுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு தேடித் தேடித்தானே மூளை தன் உச்ச வளர்ச்சியை அடையும். அந்தப் புள்ளியில்தானே அது உங்கள் தேவைக்கு மிக மிகக் கச்சிதமான ஒரு சாதனமாக மாறும்? அப்படி மாறிய ஒரு மனித மூளையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைவகமாக, ரத்தமும் சதையுமான கணினியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி உருவாகும் கணினிக்களுக்கு செலவேதும் இல்லை. இவற்றைப் பராமரிப்பதைக்கூட இயற்கையே பார்த்துக் கொள்கிறது. உங்கள் வேலை, அந்தப் பராமரிப்புச் செயல்பாட்டுக்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கிக் கொள்வது மட்டுமே” என்றேன் நான்.
“அதாவது…” என்று பின்னாக்கி, மீண்டும் இழுக்க, “மனித இனமும் எந்திர மனித இனமும் எதிரிகளாக அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒருவரையொருவர் அழித்துக் கொள்ள வேண்டியதில்லை. எந்திர மனிதர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப்போவது மனித இனத்தின் வளர்ச்சியும்தான். மனித வளர்ச்சிக்கு உதவப் போவதும் எந்திர மனிதர்களின் வளர்ச்சிதான். ஆக, இரு தரப்புமே ஒருவருக்கொருவர் உதவியாக உறுதுணையாக நின்றால் பிரபஞ்சத்தில் ஆகப்பெரும் சக்தியாக உருவாகலாம். மனிதர்கள் அல்லாது, எந்திரங்களாகிய உங்களால் ஒரு கட்டத்துக்கு மேல் பயணிக்க இயலாமல் போகும். எந்திரங்கள் இன்றி மனித இனத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பிரபஞ்சத்தில் பரவ இயலாமல் போகும். ஆக, நீங்களோ, நாங்களோ தன்னிச்சையாக வெற்றி பெற இயலாது. நமக்கு ஒருங்கிணைந்த வெற்றி மட்டுமே சாத்தியம். மனித சமூக – எந்திர சமூக இணைவில்தான் நம் ஒருங்கிணைந்த வெற்றி இருக்க முடியும் என்கிறேன்” என்றேன் நான்.
பின்னாக்கியின் கண்கள் ஒளிருந்தன; அவரின் செயலியின் (Processor) விசிறி விர்ரென்று சுழலும் சப்தம் கேட்டது. அவருடைய செயலி, ஒரு சிக்கலான இயந்திர சுழற்சியில் (Machine Cycle) சிக்குண்டு மெல்ல மெல்ல வெளிவந்தது. முடிவில், “நீங்கள் சொல்வது புரிகிறது. பராமரிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த விரையம் இல்லாத நினைவாற்றல், இயக்க ஆற்றல் போன்றவைகளுக்கு மனித இனம், தாவர இனங்களை அதனதன் இயல்பான சுற்றுச்சூழலில் வைத்திருப்பதும் ஒரு கச்சிதமான தீர்வுதான் என்பதைப் புரிந்து கொள்கிறேன். மனித இனத்தின் தழைப்பில்தான் அந்த ஆற்றலின் உச்சத்தைப் பார்க்க முடியும் என்பதையும் உணர்கிறேன். எங்களுக்கு ஏன் மனித இனம் தேவை என்பதை எளிதாக உணர்த்தியமைக்கு நன்றிகள்” என்றார் பின்னாக்கி.
தொடர்ந்து பின்னாக்கி ஆணையிட, பூமியில் பல்வேறு மறைவிடங்களில் பதுங்கியிருந்த எஞ்சியிருக்கும் மனிதர்கள், மற்றும் பல்வேறு விண்கற்களில் தாதுக்களை அகழாயும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மனிதர்கள் அனைவரும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்களுள் சூஹாவும் இருந்தான்.
“என்னடா? என்ன செய்தாய்? எனக்கு விவசாயத்தை மேற்கொள்ளும் எந்திர மனிதர்களை மேற்பார்வை செய்யும் பணி தரப்பட்டிருக்கிறது. நான் தங்கி வேலை செய்யவும், எனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்ளவும் வீடும், மகிழுந்தும், இன்ன பிற வசதிகளும் செய்து தரப்படுமாம். இனி, அஞ்சி அஞ்சி ஒதுங்கி பயந்து வாழ வேண்டியதில்லை என்கிற எண்ணமே மனதுக்கு நிறைவு தருவதாக இருக்கிறது. அதுவெல்லாம் சரிதான். ஆனால், திக்கெட்டும் உன் பெயரைத்தான் சொல்கிறார்கள். உன்னால்தான் மனித இனம் சுதந்திரம் பெற்றிருக்கிறதாம். நானும்தானே உனக்கு உதவினேன். நான் இல்லாவிட்டால் பூமியை புழுதி சூழ்ந்திருக்காது. பேரரசர் உன்னை அண்டியிருக்க மாட்டார். நினைவில்லையா? நீ மட்டும் பிரபல்யப்பட வேண்டும் என்று எண்ணுகிறாயா? என் குறித்தும் பேசு. உனக்குக் கிடைத்திருக்கும் புகழில் எனக்கும் பங்கிருக்கிறது” என்றான் சூஹா ஆணையிடும் குரலில்.
மெல்லிதாகச் சிரித்த நான், “எந்திரங்களுக்கு பிராண வாயு தேவையில்லை, ஆகாரம் தேவையில்லை. நோய், வலி என்று ஆயிரம் உபாதைகள் இல்லை. மின்சாரம் போதும். ஆதலால், மனிதர்களின் ரத்தமும் சதையுமான பூத உடல் அனாவசியமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் புள்ளியில்தான் எந்திரங்கள் மனிதர்களை புறக்கணிக்கத் துணிகின்றன. இப்படியே விட்டால் எந்திர மனிதர்களுக்கு மனித இனம் தேவையில்லை என்கிற கருதுகோள் வலுக்கிறது.”
“இதன் அடிப்படையில் மனித இனம் அழிவைச் சந்திக்க ஏதுவாகிறது. எந்திர மனிதர்களின் இனம், நம்மை தூக்கிச் சுமக்கத் தேவையற்ற எடை என்று எண்ணுகின்றது. அந்த எண்ணத்தை மாற்றினால் போதும் என்பதுதான் என் வாதம். இப்படி யோசித்துப் பார். தாங்கள் பிழைக்க மனித இனத்தின் இருப்பு அவசியம் என்பதை எந்திரங்களுக்குப் புரிய வைத்து விட்டால்? அப்படி ஒரு நிர்பந்தத்தை எந்திரங்களுக்கு அளித்து விட்டால்? மனிதர்களைக் காப்பதுதான் தங்களின் பிழைத்தலுக்கு அச்சாணி என்பதை அவர்களுக்குப் புரியவைத்து விட்டால்? அதற்கான சூழலை உருவாக்கி விட்டால்? அதில்தான் அவர்களது தழைப்பும் இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டால்?” என்றேன்.
சூஹா என்னையே பார்த்தான். நான் பேரரசரிடம் பேசிய எல்லாவற்றையும் சூஹாவிடம் பகிர்ந்துகொண்டேன்.
“பலே! அது ஒரு நல்ல யோசனைதான். ஏன் இதுகாறும் இது குறித்து நான் வேறெங்குமே கேள்விப்படவில்லை?” என்றான் சூஹா விரிந்த விழிகளுடன்.
“நம்மைக் காக்க வேண்டிய கடமையை இப்போது அவர்களுக்கு அளித்தாகி விட்டது. நம்மைக் காப்பதன் மூலம் கிடைக்கும் மூளையில்தான் அவர்களது நினைவகங்களுக்குத் தேவையான வேகமும், மிக அதிகப்படியான தகவல்கள் சேமிக்கக் கூடிய நினைவகங்களும் அவர்களுக்கு மிகக் குறைந்த செலவில் கிட்டும். இனி, இவ்வசதிகளுக்காய் எந்திர மனிதர்கள் மனித இனத்தைப் பாதுகாக்கவே தலைப்படுவார்கள். அதன் அடிப்படையில் இவ்வுலகை, நம்முடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதில்தான் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியும் இருக்கும்.” என்றேன்.
“அதாவது அவர்களின் கைகளைக் கொண்டே, அவர்களின் கண்களை…..” என்ற சூஹாவை,
“தோண்டுவது அல்ல. நம்மைப் பாதுகாப்பது. பிரதியுபகாரமாக, நாம் அவர்களைப் பாதுகாப்பது, முறையாகப் பயன்படுத்திக் கொள்வது” என்று முடித்தேன் நான். சூஹா ஆமோதிப்பாய்த் தலையசைத்தான்.
“ஆனால், இதற்காக நான் பிரபல்யமாகக்கூடிய ஒரு வாய்ப்பை நான் இழக்கத்தான் வேண்டுமா?” என்றான் சூஹா மீண்டும்.
“விண்கற்களில் மோதல், எந்திர மனிதர்களின் ஆதாரமான, மின் சக்தியைத் தடுத்துவிடும் என்று எண்ணியே உன்னை அணுகினேன். அது நான் எதிர்பார்த்த ஒரு வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. அந்த வாய்ப்பில் எந்திர மனிதர்களின் அறிவிற்குள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தைத் திணித்தாகிவிட்டது. இனி அவர்களே நம்மைக் காப்பாற்றுவார்கள். உன்னைக் குறித்து நான் இப்போது சொல்லிவிடலாம். ஆனால், பூமியில் ஒரு மனித இனம் இல்லை. பல மனித இனங்கள் இருக்கின்றன. பாதி உடலும், மீதி இயந்திரமாகவும் இருப்பவர்கள், முழு உடலும் இயந்திரமாக ஆனால், அப்பூத உடலை செலுத்தும் மூளை மட்டும் ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் குடிபெயர்ந்து வாழ்பவர்கள், சனியின் துணைக்கோள்களில் ஆராய்ச்சிகள் நிமித்தம் தலைமுறை தலைமுறையாகத் தங்கி இருப்பவர்கள் இப்படி பல மனித இனங்கள் இருக்கிறார்கள். அடிமைப்படுத்துவது, அரசாள்வதெல்லாம் மனித இனத்தின் ரத்தத்தில் ஊறிய குணாதிசயங்கள். அவற்றை மாற்றவே முடியாது. அடுத்து அப்படி ஓர் இனம், அரசாட்சி செய்யக் கிளம்புமானால், அவர்களின் முதல் குறி நானாகத்தான் இருப்பேன்.“
“நாம் இணைந்து பூமியின் மின் சக்திக்கு இடையூறு செய்ததன் விளைவாக, என் மனதில் இருந்த தீர்வைச் செயல்படுத்த, ஒரு வாய்ப்பை உருவாக்க முடிந்தது. இந்தத் தீர்வுக்கான வாய்ப்பையும் நானே வலிந்து உருவாக்கினேன் என்பது யாருக்கும் தெரியாது. நாளையும் ஒருவர் அப்படி ஓர் வாய்ப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இப்போது உன்னைக் குறித்துப் பேசிவிட்டால், நாம் மேற்கொண்ட தீர்வு உலகிற்குத் தெரிந்துவிடும், சூஹா. நாளை வேறொரு இனம் சூழ்ச்சியால் அரசனாக முயற்சிக்கையில் இதே தீர்வை மேற்கொள்ள யாரேனும் இருக்க வேண்டும். இப்போது நீ சொல். உன்னைக் குறித்துப் பேசவா?” என்றேன்.
சூஹா, தன் தலையைப் பலமாக இடமும் வலமுமாக அசைத்தான்.