காலநிலை மாற்றத்தின் தருணத்தில் சூழல் நீதியே சமூக நீதி – பிரேம் முருகன்
கட்டுரை | வாசகசாலை

இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட அதிகமாக இயற்கை மாற்றங்களுக்கும், சீர்கேடுகளுக்கும் உள்ளாகியுள்ளது. வெப்பமயமாதல், கடுமையான வெள்ளங்கள், வறட்சி, கடல் மட்ட உயர்வு போன்ற மாற்றங்கள் மனித சமூகத்தின் அடித்தளத்தை அதிரச் செய்கின்றன. இது வெறும் சுற்றுச்சூழல் பிணைப்புகளுக்குள் மட்டுப்படாமல், மனித வாழ்வின் அடிப்படை உரிமைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. காலநிலை மாற்றமானது இந்த பூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவது இயல்பான ஒன்றாக கருதும் நிலையில், மனிதர்கள் பிற உயிரினங்களைத் தாண்டிலும் பாதிக்கப்படுவார்கள். இந்த பாதிப்படைதலில் ‘வர்க்க வேற்றுமை’ நிகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த சூழலியல் மாற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படுவது சமூகத்தில் உள்ள குறைந்த வளங்களுடனும் குறைந்த சக்தியுடனும் வாழும் விளிம்பு நிலை மக்களே ஆவர். இது காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய வகை வன்முறைகளுக்கும் காரணமாகிறது. காலநிலைக்கும் வர்க்க வேற்றுமைக்கும் ஒப்பீடு செய்வது என்பது முன்னந்தலைக்கும் முழங்காலுக்கும் முடித்துவிடும் கதை என சிலர் கதறினாலும் கொழுத்தும் வெயிலை அனுசரிக்க பயன்படுத்தும் ‘ஏசி’ தான் வர்க்கத் தடையின் ஆகச் சிறந்த உதாரணம். இந்த தடையும் தாக்கமும் விளிம்புநிலையில் இருக்கக்கூடிய ஏழைகள், பழங்குடிகள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களாக கருதப்படுகின்ற சமூகங்கள் என பல தரப்பட்டவர்கள் பட்டியலிடப் படுகின்றனர்.
சமூக நீதி என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அடிப்படை உரிமைகள் — உணவு, நீர், மருத்துவம், பாதுகாப்பு — வழங்கப்பட வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டது. ஆனால், சூழல் சீரழிவுகள் இந்த உரிமைகளை எளிதில் இழக்கச் செய்கின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மக்களுக்கிடையே இருக்கும் வாய்ப்புச் சீர்மையின்மை சமூக நீதிக்கே ஒரு பெரிய சவாலாக உள்ளது.
இது இன ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவதைத் தாண்டி, தொழில் ரீதியான தாக்கத்தை விளிம்புநிலை மக்களுக்கு பெருமளவில் தருகிறது. உதாரணமாக, வறட்சியால் ஒரு பெரிய விவசாய நிறுவனம் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் ஒரு சிறு விவசாயக் குடும்பத்திற்கான பாதிப்பு என்பது அதிகம். அந்த விவசாய குடும்பத்தின் வாழ்வாதாரம் முழுவதையும் இழக்கக்கூடும் என்றால் மிகையல்ல. மேலும், இப்போது தவறிப் பெய்யும் பருவ மழையால் வெள்ளாமை பொய்க்க வேண்டும் இல்லையென்றால் வெள்ளத்தால் பாதிப்படைய நேரிடும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமளவுக்கு சிக்கல்கள் எழும் சூழலில், மரபணு மாற்றப்பட்ட விதைகள் இந்தச் சந்தையை எட்டுவதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இந்த விதிகளும் வெள்ளாமையும் யாரை எவ்வளவு தொகையில் எட்டும் என்பதில்தான் மொத்த விவாதமும் துவங்கக்கூடும்.
விவசாயிகளை ஒருபுறம் பேசும் போது, மண்பாண்டத் தொழிலாளர்கள் அவர்கள் தொழிலுக்கு மூலதனமான களிமண் கிடைப்பதே பெரும் தட்டுப்பாடாக இருக்கின்றது. அதுபோல, மீனவர் சமூகங்கள் கடல் மட்டம் உயர்வு காரணமாக இடம்பெயர்ந்து செல்கின்றனர். மேலும், கடல்மட்டம் உள்ளே செல்வதால் மீன்பிடிப்பதிலும் பெரும் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
காலநிலை மாற்றம்: வன்முறையின் புதிய உருவம்
வறட்சி, வெள்ளங்கள், கடல் மட்ட உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறும் நிலை உருவாகிறது. இவர்கள் “காலநிலை அகதிகள்” என்ற பெயரில் புறக்கணிக்கப்படும் நிலை அதிகமாக அவதானிக்கப்படுகின்றது. புதிய இடங்களில் அவர்கள் சமூக இடைவெளிக்குள்ளாகி, அடிப்படை வசதிகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக எழும் என பல ஆண்டுகளாக பேசிக்கொண்டிருக்கும் சூழலில்; நீர், நிலம் போன்ற வளங்கள் குறைவடையும்போது, பல சமூகங்கள் அதற்காக போட்டியிடத் தொடங்குகின்றன. இது இடைநடுவிலான அமைதியின்மையை உருவாக்கி, இனவாதம், பிராந்திய விரோதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்றால் மிகையாகாது.
அதிக வெப்பம், கடுமையான பனி, எதிர்பாராத மழை என அவதானிக்க முடியாத காலநிலையால் நோய்த்தொற்று என்பது எளிதில் நடக்கும் வல்லமை எளிதில் உண்டு. அதே சமயம், நோய் பரவல், தூய்மையற்ற நீர் போன்ற சிக்கல்கள் குறைந்த வசதியுள்ள மக்களையே அதிகமாக பாதிக்கின்றன. இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும் ஒரு அமைதியான வன்முறையாகும்.
உடல் எடையைக் குறைக்க நடக்கும் நவீன உலகில் நீருக்காக நடை பயணம் மேற்கொள்ளும் செய்திகளை எட்டி விடும் ஆண்டில்தான் பயணிக்கிறோம். இந்தப் பயணம், நீருக்காக என்பதுடன் மட்டும் நில்லாமல், எரிபொருள் தேவைக்காக அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்தச் சூழலில் பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர் பிரச்சனை போன்றவை அதிகரிக்கக்கூடும்.
சில அரசு மற்றும் தனியார் திட்டங்கள் சூழலியல் மேம்பாட்டுத் திட்டங்களாக இருந்தாலும், அவை பழங்குடி மக்களின் உரிமைகளை கேள்விக்குறியாக்கும் சூழலில் இருப்பதால், இது குறித்த புரிதல்கள் பழங்குடியின மக்களுக்கு ஏற்றவாறு கிடைப்பதல்லை. ஒரு விசயம் தெளிவுற ஒரு ஜனநாயக நாட்டில் கிடைக்கவில்லை என்பதே மிகப்பெரும் வன்முறை ஆகும்.
தீர்வு நோக்கி
சூழலியல் மாற்றங்களை சமுதாயநிலைகளில் ஒப்பீடு செய்யும் போது, அதன் தீர்வும் அதேபோன்று சமத்துவம் மற்றும் மனித உரிமை நோக்கத்துடன் அமைய வேண்டும். எந்தவொரு காலநிலை கொள்கையும் அதன் சமூக தாக்கங்களை மதித்து செயல்பட வேண்டும்.
- நிலைத்த வளர்ச்சி கொள்கைகள்
- அனைவரையும் உள்ளடக்கும் அரசியல் முன்னெடுப்பு
- வளங்களின் சமச்சீர் பகிர்வு
- மக்கள் பங்கேற்பு வழிமுறைகள்
இவை அனைத்தும் சூழல் நீதியை சமூக நீதியாக மாற்றும் பாலமாக அமையும்.
சூழல் நீதியும் சமூக நீதியும் இணைந்த போது
“நீதி என்பது அனைவருக்கும் சமமாக அமையும் போது மட்டுமே அது உண்மையான நீதியாகும்.”
அதேபோல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதில் அனைவருக்கும் சமமான பங்கு, பாதுகாப்பு மற்றும் பயன்பெறும் போதுதான் அதனை முழுமையான சமூக நீதி என்றும் கூறலாம்.
உதாரணமாக:
- காடுகளின் வளங்களை பாதுகாக்கும் திட்டங்களில் அதன் மூலம் பயனடையும் பழங்குடியினர்களின் கருத்துக்களைக் கேட்பதுடன், அதில் பங்காற்றச் செய்ய வேண்டும்
- நீர் மேலாண்மை குறித்த முன்னெடுப்புகளும் திட்டங்களும் வகுக்கும் போது, அதிகாரிகள், அறிஞர்களுடன் மீனவர்கள், விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் முதலிய உள்ளூர் மக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
- வெப்பமயமாதலுக்கு எதிரான திட்டங்களில் ஏழைகளுக்கான பாதுகாப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும்.
- புதிதாக உருவாகும் பசுமை தொழில்களில் விளிம்பு நிலை சமூகங்களுக்கு முதன்மை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இறுதியாக, காலநிலை மாற்றம் என்பது வெறும் சூழலியல் பிரச்சனை அல்ல, அது மனித உரிமைகளையும், சமூக ஒழுங்கையும் நேரடியாகத் தாக்குகின்றது. எனவே, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை சமத்துவமாக எதிர்கொள்வதற்கு, சூழல் நீதியை சமூக நீதியுடன் இணைத்துச் செயல்படவேண்டும். “சூழல் நீதியே சமூக நீதி” என்பது வெறும் வாசகமாக இல்லாமல், நவீன சமூக அரசியலின் அடிப்படை கோட்பாடாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உருவாகும் மனித வன்முறைகள் அதன் தீவிரத்தையும், அவசியத்தையும் எடுத்துரைக்கின்றன. இந்நிலையில், சீரான சமூகநிலையை நிலைநாட்ட சூழலியல் சமத்துவம் என்பது இன்றியமையாத கருவியாக உள்ளது.