
நிலாப்பூ மலரும் காலம்
முல்லைநிலக் குமரனும்
மருதநிலக் குமரியும்
நீலக் குளத்தில்
நிலாப்பூ மலரும் காலத்தில்
ஓடைக்கரை
உடை மரத்தடியில்
ஒன்று சேர்ந்தார்கள்
ரத்தம் மட்டுமே பார்த்துப் பழகிய
முட்டைக் கண் அய்யனார்
முத்தம் பார்த்து
அதிர்ந்து போனார்
முதல் முறையாக.
*
மொகஞ்சதாரோ
சிறுகிராமங்கள் மீதேறி பெருநகரங்களுக்கேகும்
ரயில் தண்டவாளம்
கருவேலங்காட்டினூடே
வனச்சர்ப்பமென நெளியும் வண்டிப்பாதை
உடைந்த மண்குடங்கள் – காலி
மதுப்புட்டிகள் – கரித்துண்டுகள் – சாம்பல்மேடு – வைக்கோல்பிரி – எருவாட்டிக்குவியல் – கருகிய மாலைகள் – காயாத பாடை – வாய்க்கரிசி நாணயங்கள் –
புதைமேட்டில் கட்சிக்கொடிகள்
யாவற்றோடும்
அந்திவரும் சவம் புதைக்க
ஆழக்குழி தோண்டி
ஆயாசம் தீர
கஞ்சா வழித்து
குத்த வைத்திருக்கிறான்
சந்திரமதி மணாளனின் சாயல் கொண்டவன்
தொல்குடிகளின் மண்டையோடுகளின் மீது அசுரவேகத்தில்
எழுந்து கொண்டிருக்கும் அயலானின் அடுக்ககம் வெறித்து.
*
இடைவேளையில் ஒளிர்பவன்
விளக்கெண்ணெய் தேய்த்து வகிடின்றி வழிக்கப்பட்டது
அவனது சிகையலங்காரம்
அரக்குச் சட்டையும் அழுக்கேறிய வேட்டியுமே
அவனது தனித்துவமான உடுப்பு
கூரை வேய்ந்த வீடுகளின் குறுகிய வாசல்களின் வழியே
தொலைக்காட்சிப் பெட்டிகள் நுழையாத
கேவாகலர் காலத்தில்
கீற்றுக்கொட்டகையின் திரைச்சீலை முன்
கண்டதுண்டு அவனை
கட்டைத்திரி வெளிச்சத்தில், “கடல… முறுக்கு…. தேங்காபர்பி…” என அவன்
திரும்பத் திரும்ப உச்சரிக்கும் வாக்கியத்தை
பகடி செய்ததுண்டு பலர்
திரைக்கு வந்து சில நாட்களே ஆன
திரைப்படத்தை மடிகணினிகளிலும்
விலையுயர்ந்த அலைபேசிகளிலும் பள்ளிப்பிள்ளைகள்
பார்த்து ரசிக்கும்
இந்த நவீன யுகத்தில் கிராமங்களும்
கீற்றுக் கொட்டகைகளும்
புதையுண்டுவிட்டப் பெருநகரத்தில் என்னவானானோ அவன்?
*