
உன்மத்தம்
நீ எவற்றை அடையவெல்லாம்
பைத்தியமாய் அலைவாயென
நான் நன்கறிவேன்
என் திறமையின் எல்லை
அதோடு முடிவதில்லை
உன் அத்தனை பைத்திய நிலையையும்
கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடித்து
என்னில் மூழ்கச் செய்வது வரை
அது நீளும்.
பைத்தியமே, இன்னும் கொஞ்ச தூரம்தான்
எட்டி நடை வை
நீ வருவதற்குள் மாறிவிடுவேன்
ஓர் ஆழ்கிணராய்!
*
என்னுடைய எல்லா இணைப்புகளிலிருந்தும்
மிக மிகச் சாதுர்யமாய் வெட்டி விடுகிறான்
என் இனிய காதலன்
அவனது அத்தியாவசியம்
எப்போதும் நான் அவனோடிருக்க வேண்டும்
இப்போது அவன் குறி வைத்திருப்பது
உன் தலைதான்
ரத்தவெறி கொண்டவனுக்கு
உன்னுடைய ரத்தம்
என்ன கசக்கவா போகிறது?
காதலனைக் கடிந்துகொள்ள முடியவில்லை
அவன் அப்படித்தான்
அவனொரு பைத்தியம்.
*
யார் யாரோ குத்திக் கீறிய ரணமொன்றில்
ஓயாது மொய்க்கின்றன ஈக்கள்
உளரவிடாமல் இருக்க
தீவிரமாக சுற்றியே திரிகின்றன
யாரையுமே பக்கத்தில் சேர்க்காத பைத்தியமென
நன்கு அறிந்திருந்தும்
தீண்டினால் கத்துவேனெனத் தெரிந்திருந்தும்
ஓயாது நீயும்
ஒரு மருத்துப்புட்டியோடு வந்து நிற்கிறாய்
பைத்தியம் லேசாகத் தெளியும்போது
உன்னை அருகில் அனுமதிப்பேன்
நிலை முற்றும்போது
உன்னை அடித்து விரட்டுவேன்
என்றபோதிலும்
என்னைப் பரிபூரணமாக்கவே பிறப்பெடுத்த
என் பிணிதீர் வித்தகனே
மீண்டும் மீண்டும்
மருத்துபுட்டியோடு வந்து நிற்கிறாய்.
*
பைத்தியங்கள் தானாக உருவாவதில்லை
பைத்தியக்காரத்தனங்கள் அத்தனையையும் கொண்டாடும்
உன் போன்ற ஒருவனால்தான்
என் போன்ற பைத்தியங்கள் உருவாகின்றன.
கொஞ்சித் தீர்க்கும்
கொண்டாடித் தீர்க்கும்
என் பித்து நீயெனில்
பித்துப் பிடித்து அலைவது
அவ்வளவு ஒன்றும் கொடுமையில்லை
என் மகாப்பித்தே!
*