
மலையாள மூலம் : ஆஷ் அஷிதா
தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி
‘இவளெ வெச்சு சமாளிக்க முடியல என்னாலே. நாசமாப் போனவ. அவ அம்மா சொன்னது போல குட்டிப் பிசாசு.’
‘இன்னைகும் அவ வருவா.’
நான் கதவைத் திறந்த உடனே “லோலோ லோலோ” ன்னு ஏதோ ஒரு தமிழ்ப் பாட்டோட டியூனை சத்தம்போட்டு பாடிகிட்டு உள்ளே வரும்போதே பக்கத்து வீட்டுக்காரங்களுக்கெல்லாம் அவ வந்தது தெரியும். உடனே, கழுத்துச் சங்கிலி அவிழப்போகும் சந்தோஷத்தில் லோலோ குரைக்கத் தொடங்கும். நாய்க்குட்டிக்கு பின்னாலேயே அவளும் ஒவ்வொரு ரூமுக்கும் ஒடுவா. மேஜை மேலேயும் ஷோ கேசிலும் இருக்கும் அதையும் இதையும் தொடுவா. நோட்டம் விடுவா. விளையாட்டுச் சாமான்களில் மயங்கும் சிறுபிள்ளை அவள் எனும் எண்ணம்தான் அப்பொழுது தோன்றும். தரையில் மல்லாக்கப் படுத்து லோலோவுடன் கிச்சுக் கிச்சு மூட்டி விளையாடும் அவளைப் பார்க்க பயம் எனக்கு.
அழுக்கு படிந்த பழைய உடுப்பின் இடைவெளிகளின் ஊடே தெரியும் தேனின் சாயம் பூசியது போன்ற இளம் சருமத்தின் மினுமினுப்பு. நெஞ்சில் சிறு எலுமிசசைகளின் திமிர். கவிழ்ந்து படுக்கையில் காறை எலும்புகளுக்கு மத்தியில் தெரியும் குழிவு. முயல் காதுகளின் துடிதுடிப்பு. திடமான முடிப்பின்னலின் பாம்பசைவுகள். லோலோ நக்கிச் சுவைக்கும் மேடு பள்ளங்கள்.
அளவெடுக்காமலும் அழகுபடுத்தாமலும் தைக்கப்பட்டது அவளது மேற்சட்டை. பாவாடையின் மடிப்புகள் அவளின் அனாவசிய உயரத்திற்கு பொருந்தாமல் சுருங்கி சிறுத்துப் போயிருந்தன. பெரும் விஷமக்காரனான என் லோலோ ஒரு முறை அதன் நுனியினை பற்களுக்கு நடுவே பற்றி வலுவாக இழுத்து எடுத்தான். அவளது குட்டி உள்ளாடையும் வாழைத்தண்டு கால்களும் வெளித் தெரிந்ததும் அவள் ஆரவாரச் சிரிப்புடன் நடனமாடினாள். வயதுக்கு சவால் விடுத்து மலர்ந்த அவளது கால்கள்.. ஹா!
அந்த மின்னல் கணத்திற்கு மீண்டும் மீண்டும் என் உடல் பாவம் செய்வதால்தான் நான் அவளை வேலையை விட்டு நிறுத்த தீர்மானித்திருந்தேன்.
அவளின் அம்மா குழலி சொன்னது போல பெண்ணிற்கு ஆட்டம் கொஞ்சம் கூடத்தான். அதனால் வெளியே இருக்கும் கடைகளில் வேலைக்கு விட அவருக்கு பயம். அவர் பல வருடங்களாக கூட்டித்துடைக்கும் சில அடுக்ககங்களுக்கு மட்டும்தான் மல்லிகாவையும் அழைத்துச் செல்வார்.
பெண்களின் வேலைக்கு பதப்படுத்த குழலி முதன்முறையாக மகளை உடன் அழைத்து வந்திருந்தபோது என் வீடு இப்படித் தனித்து இருக்கவில்லை. மீனாக்ஷி பாக்ச்சிக்கும் எனக்கும் இணைந்த வாழ்வு போதும் போதும் என்றாகியிருந்த நேரம் அது. மீனாக்ஷி கோவாவிற்கு திரும்பிச் செல்வதெனவும் நான் பெங்களூருவிலேயே கரை ஒதுங்குவதெனவும் தீர்மானித்திருந்தோம். இரட்டையர்களை எப்படிப் பங்குபோட்டுக் கொள்வது என்பதுதான் விவாதம்.
குழலி வேலை முடிந்து செல்லும்போது மீனாக்ஷி சாமர்த்தியமாக மல்லிகாவை நிறுத்தி வைத்துக் கொள்வாள். ஒரே நேரம் அழுகின்ற, ஒரே நேரம் பசிக்கின்ற, ஒரே நேரம் வெளிக்கு இருக்கின்ற தொல்லைக்காரிகளை பார்த்துக் கொள்ள உதவிக்கு வேறு யாரும் இல்லை. மல்லிகா இடுப்பின் பொந்திற்குள் இரண்டையும் எடுத்து வைப்பாள். சீசா போன்று இடப்பக்கமும் வலப்பக்கமும் மிகையாக சாய்ந்து நடந்துதான் அவள் ஆயா வேலையை உறுதிப்படுத்திக் கொண்டாள்.
முறைசாரா பணி நியமனம் என்பதால் அவளுக்கு சாப்பிடவும் விளையாடவும் ஏதாவது கொடுத்தால் போதும். குழந்தைகள் வீசியெறிந்த விளையாட்டுச் சாமான்களை அவள் பாவடையில் முடிந்து வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். மல்லிகாதான் குழந்தைகளுக்கு பிடித்தமான பொம்மை.
மீனாக்ஷி வீட்டில் இல்லாத நேரங்களில் அலெக்ஸாவை பாட்டுகள் பாடச் சொல்லி அவள் சோஃபாவின் மேல் ஏறிநின்று நடனம் புரிவாள். உடலை வானவில்லாக வளைக்கவும் சூழற்றியெடுக்கவும் அவளுக்கு அசாதாரணத் திறமை இருக்கிறதென நான் கண்டுபிடித்தேன்.
என்னைக் கண்ட அவள் நாணினாள்.
நான் அவளுக்கு டிவி ரிமோட்டினைப் பரிசளித்தேன்.
மறுநாள் அவள் நடிகை தமன்னாவின் உடல் அசைவுகளை பிரதியெடுத்து ‘அச்சச்சோ’ நடனமாடினாள். அந்நேரம் என்னையே வியக்கச் செய்யும்படி என் இதயம் துள்ளிக்குதித்தது. நான் அவளைப் பாராட்டவில்லை. பதிலாக அவளது நடுங்கும் கரங்களைப் பற்றி பறக்க முனைவது போல வளைத்து நிறுத்தினேன். பிறகு ஒரே மூச்சில் உயரமாக தூக்கினேன். அப்பொழுது அந்தச் சிறுக்கியின் மயிரிழைகள் என் முகத்தின் மீது ஊர்ந்து சிலர்க்கச் செய்தன.
ஒருநாள், உலகத்தின் முன்னால் நிகழ்த்தப் போகும் தன்னுடைய பெருநடனத்திற்கான பயிற்சி என்பதுபோல இருந்தது அவளது நினைப்பு. அவளது களிச்சிரிப்பு குழந்தைகளையும் தொற்றியது.
என் இதயம் மட்டும் நொறுங்குவதைப் போன்று வலித்தது. அவளுடைய வியர்வை என் கையில் பசைபோல ஒட்டியிருந்தது. எல்லைமீறின மனதை சபித்துக்கொண்டு வெகுநேரம் சோப்பு போட்டு கை கழுவிக்கொண்டேன்.
அன்று இரவு, பெட்டிக்கோட் என(நினைக்கிறேன்)ச் சொல்லப்படும் இரண்டு நாடாக்களில் தொங்கும் கையற்ற குட்டி உடுப்பணிந்து அவள் கனவில் வந்தாள். விழித்தெழுந்த பின்னரும் அதன் குற்ற உணர்வு என் மனதில் கறை போலப் படிந்திருந்தது.
வயது முதிர்ச்சியற்ற குழந்தையை ஆயாவாக வைத்துக்கொள்வது சரியல்ல எனச் சொல்லி, நான் மீனாக்ஷியிடம் சண்டையிட்டேன். நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரையில் மட்டும்தானே என்ற எண்ணம் அவளுக்கு.
பிரிந்து செல்கையில் அவள் இரட்டையர்களை தனதாக்கிக் கொண்டாள். பதிலாக அவளது நாயை எனக்கு பரிசளித்தாள்.
நான் செல்லமாக வளர்த்துக் கொண்டிருந்த விசித்திர உருவம் கொண்ட ஆர்க்கிடுகள் (நாங்கள் ஒன்றாகத்தான் அவற்றைத் தேடி ஷிமோகாவின் காட்டுக்குப் போயிருந்தோம் ); பல வயதுகளில் என் தனிமைகளை அடையாளப்படுத்தியிருந்த புத்தகங்கள் (கேத வீட்டிற்குச் செல்லும்போதும் கைப்பையில் புத்தகம் வைத்துக்கொள்ளும் அவளுடைய தகப்பனாரின் வங்காளப் புத்தியை அவளும் காட்டுவது வழக்கம்); சிவாஜிநகரின் கடைத்தெருவிலிருந்து கண்டடைந்த பழமையான கிராமஃபோன்கள் (பேரம் பேசுவதில் வங்காள ரத்தம் கொண்ட கோவாக்காரர்களை வெல்ல யாருமில்லையென அவள் கர்வம் கொண்டிருந்தாள் ); பிரிந்துசென்ற காதலி ஒவ்வொரு சந்திப்பின்போதும் பரிசளித்திருந்த இங்க் பேனாக்கள் (அதன் நீல இரத்தத்தால்கூட மீனாக்ஷி என்னுடன் போர் புரிந்திருக்கிறாள்); குழந்தைகள் முதல்முறையாக சிரித்ததையும் நடந்ததையும் எல்லாம் நினைவுபடுத்தும் ஆல்பங்கள்.. அனைத்தையும் அவள் எடுத்துச் சென்றாள்.
தனியனாக தூக்கம் விழித்தெழுந்த ஒரு காலையில்தான் அம்மா இறக்கும் வரைக்கும் பயன்படுத்திய பழைய தேநீர் கோப்பையும்கூட அவளுடன் போய்விட்டது தெரிந்தது.
மனிதர்களை நொறுக்க சுலபமான வழி அவர்களின் நினைவுகளை கொள்ளை கொள்வதாகும்.
வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் காலிசெய்து போன பின்னும் மல்லிகா வந்தாள். அவள் லோலோவிற்கு விளையாட்டுக் காட்டவும் வீட்டை கூட்டித்துடைத்து உற்சாகப்படுத்தவும் செய்தாள். ஆட்கள் குறைந்துபோனதால் வேலை குறைவு எனவும் அதற்கு மகள் மட்டுமே வந்தால் போதுமானது எனவும் குழலி தீர்மானித்திருந்தார். அப்படிக் கிடைத்த நேர இடைவெளியில் அவள் இன்னொரு வீட்டில் சமையல் வேலைக்குப் போனார்.
இன்றைக்கு மல்லிகா வந்ததும் சொல்லியே ஆகவேண்டும். இன்றோடு முடியட்டும் அவளின் விளையாட்டுகள். அவளுடைய அம்மாவின் வேலையின் பாதி சுத்தமும் நேர்த்தியும்கூட அவளுக்கு இல்லை.
குழலியைப் பார்த்தால் யாருக்குத்தான் பாவமாக இருக்காது. கடவுள் அலட்சியமாக வரைந்த வெறும் ஒரு கோடு போன்றது அவரது உடல். ஐந்து அடியைத் தாண்டி அவர் வளரவேயில்லை. ஒரு கால் வேறு கொஞ்சம் குட்டை போலத் தெரிகிறது. அவருக்கு ஒரு இலையை திருப்பிப் போடும் தெம்பு கூட இருக்குமெனத் தோன்றாது. ஆனால் அவரது ஒன்றிரண்டு மணிநேர வேலைக்குப் பிறகு தரையிலும் சோஃபாவிலும் ஒரு தூசைக்கூட கண்டுபிடிக்க முடியாது.
காய்ந்த சுள்ளி உடம்புக்கு ஏற்றார்போல கிரீச்சென்ற குரல் அவருக்கு. பிறந்த ஊரின் தமிழ்ப் பேச்சு அவருக்கு அவ்வளவு சரியாக வரவில்லை. பல வருடங்கள் இந்த நகரத்தில் வாழ்ந்திருந்தபோதும் அவரது கன்னடப் பேச்சு குறையற்றதாகவுமில்லை. இரண்டு மொழிகளுக்கும் நடுவாக அவரது வருத்தங்களின் விவரணைகள் குழம்பிக் கிடந்தன.
அடுக்ககங்களில் குடியிருப்போரின் உடைகளை இஸ்திரி போடும் ஒருவன்தான் அவரது முதல் கணவன். கட்டிக்கிட்டதன் வீரியம் குறையும் முன்னரே குடித்துச் செத்தான். அந்த ஆளின் பிண ஊர்வலத்தினை பிரமாதப்படுத்த வந்த பேன்ட் வாத்திய கோஷ்டியில்தான் ‘பச்சன் ஸாப்’பை குழலி முதன் முதலாகக் கண்டார். அமிதா பச்சனைப் போன்று நெடிதுயர்ந்தவன்.
பெளகாவியின் மராத்தி பேசும் எல்லையோரக் கிராமத்திலிருந்து வேலைதேடி பங்களூருவை அடைந்திருந்தான். அந்த ஆள்தான் மல்லிகாவை அவருக்கு பரிசளித்தான்.
குழலியைப் போலவே மேலும் சில பெண்கள் கோதுமை நிறத்தவனின் காதலுக்கு அடிமையாகியிருந்தனர்.
மாங்கொட்டை மூஞ்சிக் குழலிக்கு கடவுள் மனமுவந்து அளித்த செர்ரிப் பழங்கள் அவரது கண்கள். வரைந்து வைத்தவை போன்ற அழகான ஒளிரும் விண்மீன்கள். அதைமட்டும் வைத்துக் கொண்டே குறைந்தது ஐந்து ஆண்களையாவது அவரால் மயக்க முடியும்.
அதே மந்திரக் கண்கள் மல்லிகாவிற்கும் உள்ளன. அம்மாவிடமிருந்துதான் பெண்குழந்தைகளுக்கு காதலின் ரகசிய விதைகள் முதலில் கிடைக்கின்றன. ஒரே ஒரு பார்வையினைக் கொண்டு ஆண்களின் இதயத்தை துளைத்துச் செல்லுமளவு ஒளிர்கின்ற அவளது லேசர் கண்கள் குறித்து நினைக்கவும் கூடாது என நான் தீர்மானித்திருந்தேன்.
அந்தக் கண்கள் என்ன இருந்தாலும் ஒரு பன்னிரண்டு வயதுப் பெண்ணிற்கு ஆபத்தானவை. கண்கள் மட்டுமா? மீனின் உதடுகளால் அவள் தூண்டில் போடுவதைப் போலத் தோன்றும். பற்கள் தெரியாத அந்தச் சிரிப்பு. உண்மையில் அதுவே ஒரு திருட்டுத்தனம்தான். ரகசியங்களை மறைத்து வைக்கத் திராணியற்றவர்கள்தான் எல்லாப் பற்களையும் வெளிக்காட்டி சிரிப்பவர்கள்.
ஒரு நாள் நான் அண்ணாந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது அவள் என் தொண்டையின் ஆப்பிள் புடைப்பை எட்டித் தொட்டாள். “ஐ! இங்கே ஒரு பந்து..”
நான் சட்டென பின்பக்கம் நகர்ந்ததும் அவள் நிலைதடுமாறி என் மீது விழத் தொடங்கினாள்.
தண்ணீர் என் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
இதயம் வெறிகொண்டு வேண்டுவதும் ஆனால் உடலுக்கு தகுதியற்றதுமான ஒரு பெண்ணை எதிர்கொள்வதுதான் ஒரு ஆண்மகனின் ஆகப் பெரிய போராட்டம்.
எப்படியும் இந்த வீணாய்ப் போனவளின் விஷயத்தில் இன்று ஒரு முடிவிற்கு வந்து விடவேண்டுமென நான் உறுதிகொண்டேன்.
வாயில்மணி ஒலித்ததும் நான் திடுக்கிட்டேன். அவசரம் முற்றிய முகத்தோடு குழலி வாசலில் நின்றிருந்தார். நான் அவருக்குப் பின்னால் எட்டிப் பார்ப்பதைக் கண்ட அவர் சொன்னார்: “சார், மல்லிகாவால வர முடியாது.”
அவர் நிறைய அழுதிருப்பார் போலிருந்தது.
“அது பரவாயில்லை, இன்றைக்கு நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.”
“இன்றைக்கு நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டேனே சார், நாளைக்கு எப்படியோ, அது கடவுளுக்குத்தான் தெரியும்.” அவர் உள்ளே வரும்போது முந்தானையில் மூக்கு சிந்தினார்.
“மல்லிகாவுக்கு உடம்பு சரியில்லையா? எங்காவது போயிருக்காளா?”
அவளைப்பற்றி எதுவும் விசாரிக்க வேண்டியதில்லை எனத்தான் நான் அந்த நொடி வரைக்கும் நினைத்திருந்தேன்.
“என்னத்தைன்னு சொல்லுவேன் சார்?“, குழலி துடப்பத்தை தள்ளி வைத்து தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டாள்.
மல்லிகாவுக்கு ஏதோ ஆபத்து நேரந்திருக்க வேண்டும். அவளைச் சபித்ததை எண்ணி நான் கவலைப்பட்டேன்.
“சார்.., அந்தப் பிசாசு அவ மேல கண்ணு வெச்சிருக்கான். மகளைக் காண எனச் சொல்லி தினமும் வர்றான். இவ்வளவு நாள் அப்பனைக் காணாம வளர்ந்தவதானே. இப்ப, அவர் கொண்டு வரும் பிஸ்கட்டைத் தின்று வாலாட்டி நிக்கறா.”
“என்ன இருந்தாலும் அவளோட அப்பாதானே. அவர் உங்களைக் கண்டு கொள்வதில்லைன்னு தானே உங்க புகாரா இருந்தது?”
“பசுத்தோல் போர்த்தி வந்தாலும் புலி அதன் குணத்தை மறக்குமா சார்..? சொந்த மகள் எனும் நினைப்பு அந்த ஆளுக்கு அந்தக் காலத்திலேயே இல்லை. அவளைப் பெற்றுப்போட்ட அன்று ஒரு டைகர் பிஸ்கட் பாக்கெட்டை கட்டில் மேல வெச்சுட்டு கம்பி நீட்டினவர்தான். பிள்ளை இன்னொருத்தனது இல்லைன்னு நான் நிரூபிக்கணும்னு பிடிவாதம். அவளோட கோதுமை நிறமும் உயரத்தையும் பார்த்தா யாராவது சொல்வாங்களா நான் பெத்ததுன்னு!” இதைச் சொன்னபோது அவருக்கு லேசான சிரிப்பு வந்தது. “சார் பாத்திருப்பீங்கதானே அவளோட காலோட நீளம்?” இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்தகிருக்கவில்லை.
அதைக் கேட்காதது போன்று நான் லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“காலைக் குறுக்கி வைக்கச் சொன்னால் கேக்க மாட்டா சிறுக்கி. காலைக் குறுக்கி வைக்கத் தெரியாத பெண்கள் எல்லாமே படுகுழியிலே விழுந்ததுதான்.” அவர் புலம்பியபடியே வேலை செய்து கொண்டிருந்தார்.
பம்பாய்க்கு கூட்டிச் சென்று சினிமாவில் சேர்த்து விடுகிறேன் எனச் சொல்லித்தான் அந்த ஆள் அவளை மயக்கி வைத்துள்ளான்.
சரிதான். யார் அதைச் சொல்லியிருந்தாலும் அவள் அவர்கள் சொற்படி ஆடியிருப்பாள். மல்லிகாவை வெறுக்க இனியும் வேறு காரணங்கள் எதுவும் தேவை இல்லை என எனக்குத் தோன்றியது.
“அவர் ஒவ்வொரு வேசம் போட்டு அவளை ஆட வைப்பார். அதை ஃபோனில் வீடியோ பிடிப்பார். பாவி.”
நேற்றைய நடன நிகழ்ச்சியின்போது குழலி அந்த ஆளின் தலையில் மீன் அலசிய தண்ணீர் ஊற்றினார். விடிய விடிய சண்டையானதும் காலனிக்காரர்களுடன் கைகலப்பாகிவிட்டது.போலீஸ் வந்தபோது பச்சன் ஸாப் காணாமல் போயிருந்தார்.
இப்போதைக்கு மல்லிகாவை அவர் முன்னர் வேலை பார்த்திருந்த மலையாளத்துக்காரர்களின் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார் குழலி.
என் தலையின் மீது ஒரு வெடிகுண்டை வைத்து விட்டுத்தான் குழலி சென்றிருந்தார்.
மல்லிகாவை இருநூறு முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எஸ்டேட்டிற்கு கடத்திச் செல்லவேண்டும் என்பது அவரது கோரிக்கை. கேட்க சினிமாக் கதைபோல சுவாரசியம்தான்.
ஏற்காட்டிலிருக்கும் காபி எஸ்டேட்டில்தான் குழலியின் அண்ணனுக்கு வேலை. பலமுறை, மீனாக்ஷியுடன், அவர் ஏற்பாடு செய்து தந்த காட்டு பங்களாவில் விடுமுறை நாட்களை கழித்திருக்கிறேன்.
மாலையில் குழலி மீண்டும் வந்தார். “சார்.., பிள்ளைகள் போனபிறகு சாரின் வேதனை நான் கண்டதுதானே.. எனக்கும் அவளைப் பிரிய மனசில்லை. அப்பா மகளைக் காண வருவதுகெல்லாம் கேஸ் போட முடியாதுங்குது போலீஸ். அவளுக்கு ஏதாவது நடந்தபிறகு அவர்கள் கேஸ் போட்டு என்ன ஆகப்போகுது. சார்னா அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.. அங்கே கொண்டு விட்டுட்டீங்கன்னா அப்புறம் அண்ணன் பாத்துக்குவான்.”
விடிந்த உடன் பயணம் தொடங்குவேன் என அவர் என்னிடம் உறுதி பெற்றுக் கொண்டார். இப்படியானதொரு சாகசம் தேவையா எனும் ஐயம் எழும்போதெல்லாம் மல்லிகாவுடனான பயணம் எனும் சபலப்பறவை அடிவயிற்றில் இறக்கைகளை அசைத்தது. சில மயக்கங்கள் மனிதர்களை இட்டுச்செல்கின்ற சதுப்புகள் உண்டு.
மலிவான கம்பளி கொண்டு மல்லிகாவின் தலையையும் உடலையும் மூடிப் போர்த்தித்தான் குழலி கூட்டி வந்தார். அவள் எதையோ சொல்லத்தொடங்கும் முன் குழலி அவளை வண்டியினுள் திணித்து கதவைச் சாத்தினார். குழலி உடன் வரவில்லை என்பது அப்பொழுதுதான் எனக்கு நிச்சயமானது. நான் சொல்லாமலே அவர் லோலோவைத் தூக்கிக் கொண்டார்.
வண்டி கேட்டுக்கு பக்கத்தில் வந்தபோதுதான் லூக்கா கேட்டைத் தாண்டி வந்தான்.
“தோ, சாரோட அண்ணா!” குழலியின் வாய் வியப்பில் விரிந்தது. லோலோ அவரின் பிடியிலிருந்து நழுவி அவன் பக்கமாக ஓடியது.
ஏதேதோ காடுகளில் அலைந்து திரிந்து வந்திருக்கிறான்.
“நான் ஒரு இடம் வரைக்கும் போகிறேன். இங்கே தங்குகிறாய் எனில் குழலி அக்காவின் கையிலிருந்து சாவி வாங்கிக் கொள். ” நான் காரின் கண்ணாடியினை அவசியமான அளவு மட்டும் இறக்கி லூக்காவிடம் சொன்னேன்.
“லாங்க் ட்ரிப் என்றால் நானும் வருகிறேன்.”
வேண்டாமென நான் மறுப்பேன் என்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் காரின் கதவை இழுத்துத் திறந்து பேக் வைக்க பின்பக்கமாக திரும்பியபோதுதான் அவன் மல்லிகாவைக் கண்டான். “ஓ, இது நம்ம மைசூரு மல்லிகா தானே?”
காரில் ஏறி அமர்ந்ததுமே சீட்டில் படுத்து தூக்கத்தை தொடர்ந்திருந்தாள் அவள்.
“பொட்டலம் கட்டி நாடு கடத்தலா?” அவனுடைய கேள்வி காதில் விழாதது போல நான் காரைக் கிளப்பினேன்.
கேட் வரைக்கும் லோலோ பாய்ந்து வந்தான். குழலி கையெடுத்துக் கும்பிட்டு நிற்பது ஓரக்கண்ணாடியில் தெரிந்தது. காதலை விட பிரச்சினையானது அனுதாபம் என எனக்குத் தோன்றியது.
சேலத்தை எட்டும் வரையில் மல்லிகாவின் உறக்கம் கலையவில்லை என்பது மட்டும்தான் எனக்கு நிம்மதியளித்த ஒரே ஒரு விடயம்.
லூக்கா எனக்கு மூத்தவனாகப் பிறந்தானா இல்லை இளையவனாகவா என்பது ஒருபோதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அம்மாவின் உதிரப்போக்கு மரணத் தருணமாக மட்டும் அந்த நொடிகள் நினைக்கப்பட்டன.
லூக்கா கரு வெளியேறும் பாய்ச்சலில் உதைத்துத் தள்ளிய என்னை கொடியில் சிக்கி உயிரற்ற நிலையில் நான் பல முறை கனவில் கண்டுள்ளேன். ஆண்டுகள் பல கடந்தும் அவனின் அருகாமையில் அந்த ஞாபகத் துடிப்பினை உணர முடிந்துள்ளது.
லூக்காவின் பங்கு லூக்காவிற்கு. லூயியின் பங்கும் லூக்காவிற்கு. அதுதான் லூக்காவின் நடைமுறை. அவனைக் காணும்போதெல்லாம் நான் பிறிதொரு வாழ்க்கை வாழ்வதன் புதிர்த் தன்மையையும் ஒரே வாழ்வினை பகிர்ந்துகொள்வதன் அசௌகரியத்தினையும் ஒருசேர உணர்ந்தேன்.
“லூயீ, உன்னுடன் இருப்பது போலத்தான் இருந்தது எனக்கு அந்நேரம்..” வோட்காவும் போதை மருந்தும் கலந்து அவன் அவளுக்கு பரிசளித்த கலவி போதை குறித்து மீனாக்ஷி அப்படித்தான் சொன்னாள். மீனாக்ஷியுடன் காதல் புரிந்தது பற்றி லூக்கா விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. நாங்கள் பிரிந்தபோது, ‘மணமானவர்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடிய விடுதலை மணவிலக்கு’ என்ற ஒரு நகைச்சுவையான குறுஞ்செய்தி அனுப்பினான்.
லூக்காவை லூயி எனவும் லூயியை லூக்கா எனவும் உலகம் தவறாக எண்ணுவது முதல் முறையாக எல்லாம் இல்லை. லூக்கா கஞ்சா புகைத்ததற்கு அப்பா அடித்து நொறுக்கியது என்னைத்தான். லூக்கா ஒரு இளம்பெண்ணின் உடுப்பினுள் கை நுழைத்தமைக்கு பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவன் நான்தான்.
வேண்டிய மனிதர்களை தன்பக்கம் பிடித்து இழுக்கும் காந்தத்தை கடவுளிடமிருந்து லூக்கா கைக்கொண்டிருந்தான். வெகு சிலரின் அன்பிற்கான ஆசிகள் அளிக்கப்படவேண்டும் எனும் ஆசையினை தன்னல வேண்டுதல்களில் பலமுறை சேர்த்திருந்தேன். ஆனால், உண்டான பலன் என்ன..?
அவர்களுக்கெல்லாம் லூக்காவின் வட்டத்திற்குள் எட்ட உதவும் ஒரு ஏணி மட்டுமாக கடவுள் என்னை நட்டு வைத்தார்.
ஒருவர் மட்டும்தான் எங்களுக்கிடையேயான வித்தியாசத்தை கண்டுபிடித்தார்.
“சாரோட இரட்டையருக்கு இதில்லை.” என்னுடைய தொண்டையின் புடைப்பைத் தொட்டு மல்லிகா இப்படிச் சொன்னபோது எனக்கு அவளின்பால் மிகத்தீவிரமும் அரிதினும் அரிதானதுமான ஒரு அன்பு தோன்றுவதை உணர்ந்தேன்.
நான் நெடுஞ்சாலைக் கடையிலிருந்து செட் தோசையும் டீயும் கொண்டு சென்றபோது மல்லிகா கண் விழித்திருந்தாள்.
“மைசூரு மல்லிகா, உனக்கு என்னை ஞாபகமிருக்கா?” லூக்கா காருக்குள் தலையை விட்டான்.
நான் அவனை பின்பக்கமாக பிடித்திழுத்தேன். சின்னப் பெண். அவளுக்கு காயங்கள் ஏதுமின்றி எஸ்டேட்டில் சேர்த்த பிறகுதான் எனக்கு சரியாக மூச்சு விடமுடியும்.
மல்லிகா ஏதோ ஜோக் கேட்டது போல ரசித்துக் கொண்டிருக்கிறாள். காடு வரும் வரைக்கும் அவள் தூங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எனக்குத் தோன்றியது.
“சாரோட டூப் தானே?” காரிலிருந்து இறங்கிக் கொண்டே அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.
லூக்காவின் முகம் வாடியது. எனக்கு சிரிப்பு வந்தது.
சுற்றிலும் இருப்பவர்கள் குறித்த கவனம் ஏதுமின்றி அவள் உடலை வில்போல வளைத்து சோம்பல் முறித்தாள். சீக்கிரம் கையும் முகமும் அலம்பி தோசை தின்னுமாறு நான் அவளுக்கு அறிவுறுத்தினேன்.
சிகரெட் குடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென லூக்கா சொன்னான்: “நான் ஓட்டறேன்.”
“வேண்டாம் நீ ரெஸ்ட் எடு.” நான் சொன்னது காதில் விழுந்ததாக அவன் காட்டிக் கொள்ளவில்லை.
சாப்பிட்டு முடிந்ததும் மல்லிகா தடைபட்ட உறக்கத்திற்கு திரும்பிச் சென்றது எனக்கு ஆறுதலாக இருந்தது. நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் சிறு பாதைக்கு லூக்கா காரைத் திருப்பினான். சேலத்திலிருந்து புதிதாக நெடுஞ்சாலை போடும் முன், பல காடுகள் வழியாகச் செல்லும் இந்த ஒரு பாதை மட்டும்தான் இருந்தது ஏற்காட்டிற்கு.
“சுமார் ஒன்று ஒன்றரை மணிநேரம் மிச்சம் பிடிக்கலாம்.”
“அந்தக் காலத்தில வீரப்பனெல்லாம் நடமாடியிருந்த காடு இது.” லூக்கா சிகரெட் பாக்கெட்டை நீட்டி பற்றவைத்துத் தர சைகை செய்தான். “லடாக்கிலிருந்து வந்த சூப்பர் ஸ்டஃப். முதல் இழுப்பு லைட்டா இழுக்கணும்.”
நான் ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தினேன்.
காரணமற்ற ஒரு பதற்றம் என்னுள்ளே உருவாகிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு பேரழிவு நிகழப்போகிறது எனும் எண்ணம்தான் எப்பொழுதும் என் பயணங்களின் உல்லாசத்தைக் கொல்கிறது.
“லூயீ, உனக்கு அந்த மைசூரு மல்லிகே வீடியோக்கள் ஞாபகம் இருக்கா? நம் வறிய இளமையை காப்பாற்றின மல்லிப்பூ.” லூக்கா ரகசியம் பேச சத்தம் ஒடுக்கினான்.
அவன் இப்பொழுதும் மல்லிகாவில் சிக்கி நிற்பதாக நான் எண்ணிக்கொண்டேன்.
மங்களூரில் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு அழகிதான் வீடியோக்களில் இருந்தாள். அவளது கண்களின் காதல் அசைவுகள் புறாக்களை நினைவுபடுத்துபவை. அவளது காதலனுடனான பெருங்காதல் தருணங்கள் உலகத்தின் பார்வைக்கு எப்படி வெளியாயின என்பதையெல்லாம் அன்று நினைத்துப் பார்க்கவில்லை. அந்தப் பையன் அவன் பதிவுசெய்த வீடியோக்களை சிடி-க்கு மாற்ற நண்பனிடம் கொடுத்திருந்தான்.
கல்லூரி நாட்களில் அதன் பிரதிகளை லூக்கா ஹாஸ்டலில் ரகசிய விற்பனை செய்திருந்தான்.
“அதையெல்லாம் இப்பொழுது எதற்காக நினைவுபடுத்த வேண்டும்?”
மல்லிகாவை அந்தப் பெயரில் அழைக்கக் கூடாது எனச் சொல்ல நினைத்தேன்.
“மல்லிகா எனும் பெயரைக்கேட்டதுமே எனக்கு அதுதான் பளிச்சிட்டது. உண்மையைச் சொன்னால் அந்தப் பெண்ணின் ஒரு சாயல் இவளுக்கு இருக்குதானே? குறிப்பாக அந்தக் கண்கள்.. “
“வாயைக் கொஞ்சம் மூடு லூக்கா.. சரியான வயதில் ஒரு பெண்ணைக் கட்டியிருந்தால் இப்போது இந்தமாதிரி ஒரு மகள் இருந்திருப்பாள் உனக்கு..”
“ஓஹோ, நீ இவளை மகளைப்போலத்தான் பார்க்கிறாய் என்றால் நான் அதை அப்படியே தண்ணீர் சேர்க்காமல் விழுங்க வேண்டுமோ?“
என் தொண்டையில் புகை சிக்கிக்கொண்டது. நான் நிறுத்தாமல் இரும, லூக்கா வாய்விட்டுச் சிரித்தான். “மைசூரு மல்லிகாவிற்கு என்ன நடந்தது தெரியுமா? அவனுக்கும் அவளுக்கும் போலீசார் ஸ்டேஷனில் வைத்து கல்யாணம் பண்ணி வைத்தார்கள். ஆனால், அந்தப் பெண்ணின் அம்மாவும் அப்பாவும் தூக்குபோட்டு செத்துப் போனார்கள். கொஞ்சம் நாள் கழித்து அவன் அவளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்குப் போய்விட்டான்.”
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”
“நமக்கு வேண்டியதையெல்லாம் நாம் தேடிப்போவோம் அல்லவா..”
உலகின் முன் நிர்வாணமாக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு என்ன ஆகியிருக்கும் என அந்தக் காலத்தில் நானும் நினைத்ததுண்டு.
“கடைசியில் நான் அவளைக் கண்டுபிடித்தேன் என்றால் நீ நம்புவாயா?“
“எங்கே இருந்தாள்?”
“இங்கேதான். பெங்களூருவில்.”
“ஓ! அவளைக் காணத்தான் அடிக்கடி வருக்கிறாயா? அவள்தான் உன் காதலியா?”
“அவள் உன்னுடைய முன்னாள் காதலியும் தானே லூயி?“ அவன் என் தொடையில் அடித்து சிரித்தான்.
மல்லிகா கேட்டு விடுவாளோ என நான் பரபரத்தேன்.
அவள் எப்பொழுதோ உறக்கம் கலைந்திருந்தாள். அவள் முன்பக்கமாகச் சாய்ந்தாள். என் தொண்டை உலர்ந்து உடல் வியர்த்தது.
“இந்தக் காட்டில் மிருகங்களெல்லாம் இல்லையா?”
“மிருகங்கள் இல்லையெனில் பிறகு காடு என்ன காடு. பார்த்ததும் வண்டியை நிறுத்தி விடுகிறேன், மல்லிப்பூவே?” லூக்காவின் ஜோக் அவளைச் சிரிக்க வைத்தது.
பாதை அவ்வளவு திருத்தமாக இல்லை. பெரும் பள்ளங்களில் விழுந்து வண்டி குலுங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குன்றையும் ஏறியிறங்கித் தாண்டுகையில் ஒரே போன்ற சிறு கிராமங்கள் தெரிந்தன. பெரிய ஒரு அரசமரத்தைச் சுற்றிலும் சிறு வீடுகள். கயிரின்றித் திரியும் ஆடுமாடுகள். போர் புரியும் காக்காய்களும் கோழிகளும். சாலையோரம் சாவதற்காக வெயிலில் நட்டுவைக்கப்பட்ட கிழடுகள்.
உடைகளற்ற பொடிசுகள் ஈ மொய்ப்பதைப் போல காரை நோக்கி ஆரவாரத்துடன் வந்தனர். நான் டேஷ்போர்டில் சேர்த்து வைத்திருந்த காசுகளை லூக்கா அவர்களை நோக்கி வீசினான். கோபப்பட காரணம் தேடிக்கொண்டிருக்கும் ஆண்கள் தாடியை நீவிக்கொண்டு அதைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். பழைய சேலைகளை கட்டின பெண்கள் கருணை வற்றிய கண்களுடன் குழாய்க் கிணறுகளின் இருமபுக்கையுடன் குஸ்தி போட்டுக் கொண்டிருந்தனர்.
“இது எந்தக் காட்டின் ஊர்? அடித்துக் கொன்று தின்னப் போவதான தோற்றமல்லவா அனைவருக்கும். இங்கே எங்காவது வண்டி மாட்டிக்கொண்டால் முடிந்தது எல்லாம்.. “
லூக்கா யாரோ சொல்வதைக் கேட்டுதான் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தான் என எனக்குப் புரிந்தது. அவன் கவனமெல்லாம் பின்னாலேயே வந்துக் கொண்டிருந்த இரண்டு பைக்கு,களின் மேல் இருந்தது. இரண்டிலும் இரண்டிரண்டு பேர் , தாடி வைத்தவர்கள்.
“பயப்படமாட்டாய் எனில் ஒன்று சொல்கிறேன். இந்த ஏரியா அவ்வளவு சரியில்லை என்பது கேள்வி. ஆட்களைக் கொன்று புதைத்ததாக கேஸ்கள் உள்ளன. இவர்களின் மெயின் வேலையே, தெரியாமல் இந்தச் சாலையைப் பிடிப்பவர்களை கொள்ளையடிப்பதுதான்..”
“அப்புறம் எதுக்குடா மயிராண்டி இந்தப் பாதையில வண்டியை விட்டே?”
“நீ இப்பவும் ஒரு பயந்தாங்கொள்ளியா இருக்கியே லூயீ. இப்போ நல்லா வெளிச்சம் இருக்கற நேரம்தானே. அப்புறம், ஒரு பயணம்னா கொஞ்சம் அட்வென்ஜர் எல்லாம் வேண்டாமா..” அவன் சீட்டியடித்துக்கொண்டு ஊசி வளைவினூடே வண்டியை சுற்றிச் செலுத்தினான்.
“சார்.. மலைப்பாதையின் வளைவுகளில் இறந்தவர்கள் வந்து நிற்பார்கள் என மாமா சொல்லக் கேட்டிருக்கிறேன்.” மல்லிகா மிகுந்த முக்கியத்துவத்துடன்தான் இதைச் சொன்னாள்.
“எதற்கு, சுண்ணாம்பு கேட்கவா?” லூக்காவின் சிரிப்புக்கு ஏற்ப வண்டியும் குலுங்கியது.
“இல்லை, வண்டிகளை பள்ளத்தில் தள்ளி விடுவதுதான் அவர்களுக்கு பிடிக்கும்.”
மல்லிகா சொன்னதைக்கேட்டு எனக்குமே சிரிப்பு வந்தது.
பின்னால் வருபவர்கள் பெண்ணைப் பார்க்க வேண்டாமெனும் எண்ணத்தில் அவளை சீட்டில் படுக்கச் சொல்லி நான் அறிவுறுத்தினேன்.
“சார், எனக்கு ஒண்ணுக்குப் போகணும்” வண்டியின் லேசான குலுங்கலில் அவளின் ரகசிய உதடுகள் என் காதைத் தொட்டன.
டவுனில் வண்டி நின்றபோது இப்படியொரு விஷயத்தை அவளிடம் கேட்கத் தவறியமைக்கு என்னை நானே பழித்துக் கொண்டேன். “கொஞ்சம் நேரம் கழித்து நிறுத்தலாம். இங்கே எல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள்.”
அவள் சரியென தலை அசைத்தாலும் சீட்டில் படுத்துக் கொள்ளத் தயாராயில்லை.
திடீரென, லூக்கா வண்டியின் வேகத்தை மிகவும் குறைத்தான். பின்தொடர்ந்தவர்கள் குழப்பமடைந்தனர். அவன்களும் முயன்று சிறிது தூரம் வந்தனர். லூக்கா தலையை வெளியே நீட்டி “அண்ணா, வண்டிக்கு ஏதாவது பிரச்சினையா?” எனக் கேட்டான். அவர்கள் பதில் பேசாமல் திரும்பிச் சென்றனர். அப்பொழுதுதான் என் மூச்சு சீரானது.
தீ நிறப் பூக்கள் ஆர்பாட்டமாக மலர்ந்து நின்றிருந்த ஒரு பாதையை வந்தடைந்தோம். இருபுறமும் கதிர் பிடித்த நெல் வயல்கள் எனத்தான் முதலில் எண்ணினேன். வட்டத்தாளிச் செடியின் அரசாட்சி நடக்கிறது. அதனூடே நூறு ராஜரீக மயில்கள் வரிசை பிறழாது நடந்து வருகின்றன.
“நேர்வழிக்காரர்களுக்கு பூமியில் சொர்க்கம் கைவசமாகாது என முன்னரே உன்னிடம் சொல்லியிருக்கிறேன்தானே. கொஞ்சம் சுற்றுப்பாதையில் சென்றால்தான் இப்படியான அற்புதக் காட்சிகளைக் காண முடிகிறது.” இப்படிப்பட்ட தத்துவங்களைச் சொல்வதில் லூக்கா தேர்ந்தவன்.
மல்லிகா கிளர்ச்சியுற்று கத்தினாள். அவளுடைய கண்கள் லூக்காவின் மீதான ஆராதனையில் மின்னின.
லூக்கா கைபேசியில் மயில்களின் காட்சியைப் பதிவு செய்தான்.
“சார், என்னை ஒரு ஃபோட்டோ பிடிக்கறீங்களா?” மல்லிகா கதவைத் திறந்து வெளியே குதித்தாள்.
அப்பொழுதுதான் எனக்கு ஃபோன் பற்றிய நினைவு வந்தது. சிக்னலே இல்லாத ஒரு பகுதி அது. வழி தவறினால் கூகிள் மேப்பும் இல்லை.
மல்லிகாவிற்கு இறக்கைகள் முளைத்ததைப் போல இருந்தது அவளின் செய்கைகள். மயிலசைவுகளுடன் அவள் ஒவ்வொரு விரலாக விரித்தாள். கண்களில் காதல்ரசம் நிறைத்தாள். அவளின் அதிசாதாரண அசைவுகள்கூட நாட்டியமாகத் தெரிவது எனக்கு மட்டும்தானா என நான் வியந்தேன்.
பதிந்த படங்களை லூக்கா அவளுக்கு காண்பித்தான். அப்படி ஆண்களின் மூச்சுக்காற்று படும்படி நெருக்கமாக நிற்கக் கூடாதென அவளுக்குச் சொல்லித் தர யார்தான் உள்ளனர்?
நான் நிறுத்தாமல் ஹாரன் முழக்கினேன்.
“மல்லிகாவின் மயிலாட்டம் எனும் பெயரில் ரீல் போடலாம்.” காருக்குள் ஏறி அமரும்போது லூக்கா சொன்னான். “பார்க்க மட்டும்தான் நல்லா இருக்கும். அழிக்கும் குணம் கொண்டவை மயில்கள். இங்கே எந்த விவசாயமும் பண்ண விடாது.”
அப்பொழுது நான் மயில்களை வெறுத்தேன். இளம் புற்கள் பசேலென நின்ற ஓரிடத்தில் மான்கூட்டம் எங்களுக்காக காத்திருந்தது. மான்கள் இருக்கும் இடத்தில் இறங்கினால் புலியும் இருக்குமென நான் மல்லிகாவை மிரட்டினேன்.
மேலே போகப் போக மனிதர்களையே பார்க்க முடியவில்லை. எந்த நொடியும் தூக்கத்தினுள் வழுக்கி விழுந்துவிடுவேன் என நான் பயந்தேன். காட்டின் அடர்த்தியும் ஆகாயத்தின் கருமையும் கூடிக்கொண்டே வந்தது.
வண்டி மீண்டும் கணவாய் வளைவுகளை பற்றிக்கொண்டு ஏறத்தொடங்கியது. கண்கள் மூடியதும் என்னுள்ளே மல்லிகா தோகை விரித்தாள்.
அவளின் மிருதுவான கைகள் நீண்டு வந்தன. நான் ஒருபோதும் காதலுடன் அவைகளைத் தொட்டிருக்கவில்லை. அப்பொழுதுதான் கவனித்தேன் அவளின் கால்கள் பூமியில் பாவவில்லை. அவள் குன்றின் மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தாள்.
காற்றில் அலைபாயும் அவளின் கைகள்..
வண்டி ஒரு வளைவில் நிறுத்தப்பட்டிருந்தது. சிறு தூறல்கள் கடைந்தெடுத்த மூடுபனியின் காரணமாக காட்டினுள் எப்பொழுதும் இரவைப் போன்ற தோற்றம்தான். லூக்கா பானெட்டின் மீது சாய்ந்து நின்று புகை ஊதிக்கொண்டிருந்தான்.
பின்பக்க இருக்கையில் மல்லிகா இல்லை. எனக்குள்ளே ஒரு நடுக்கம் பாய்ந்து சென்றது.
காரை விட்டு இறங்கியதும் காட்டுத்தனமான காற்று உடம்பைச் சுற்றியது. குளிர் குத்துகிறது.
“மல்லிகா எங்கே?”
“ஓ, நீ எழுந்து விட்டாயா.. உனக்கு அதே பழக்கம்தான். ஒரு இழுப்பு இழுத்ததும் ஆஃப் ஆகீடுவே. அப்புறம் அப்பாவிடம் அடிபடுவே.” அவன் புகை வளையங்களை என் முகத்தில் ஊதினான்.
“கேட்டது காதில் விழலியா? எங்கே மல்லிகா?”
அவளுக்கு நேரக்கூடிய அபாயங்கள் பற்றிய எண்ணம் எனக்கு நடுக்கத்தைத் தந்தது.
“அவ எங்கே போவா. ஒண்ணுக்கு அடக்க முடியலேன்னு கூப்பாடு போட்டுட்டிருந்தா. அந்தப் பாறைக்கு அந்தப்பக்கம் புல்வெளியில் இருப்பா.”
அவன் இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்தான். நான் மூச்சைச் சீராக்க சாலையோரக் கல்லின் மீது அமர்ந்தேன்.
“என்ன போகலியா?” அவன் சிகரெட்டை நீட்டினபடி கேட்டான்.
நான் வேண்டாமென சைகை செய்தேன். அவன் சிகரெட்டை என் கையில் திணித்தான். “உனக்கு அந்தப் பெண்ணின்பால் காதல்தானே?”
எனக்கு சுட்டது. சிகரெட் கீழே விழுந்தது.
குனிந்து எடுக்கையில் என் கண்கள் எரிந்தன. நான் திரும்பி நின்று தொலைவிலுள்ள மலையில் மழை பெய்வதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். என் தொண்டைக்குழியில் ஒரு அழுகை திமிறியது.
“வேணும்னா இப்போ போ. இங்கேன்னா ஒரு குஞ்சுக்கும் தெரியாது. நீ முன்னரே சொன்ன மாதிரி புலியை மட்டும் கவனித்தால் போதும்.” லூக்கா அவன் ஜாக்கெட்டின் மீதிருந்த மண்ணையும் காட்டுபுற்களையும் தட்டிவிட்டு காரில் ஏறி உட்கார்ந்தான்.”நான் ஒரு அஞ்சு நிமிஷம் கண் அசந்துக்கறேன்.”
இரையெடுத்த மலைப்பாம்பாக கார் மயங்கத் தொடங்கியது.
சில நிமிடங்கள் எங்களுக்கு நடுவே ஊர்ந்து சென்றன. காட்டின் மணங்கள். காட்டின் அரவங்கள். காட்டின் இரகசியங்கள்.
லூக்காவின் ஜாக்கெட்டில் எப்படி புற்களின் நகங்கள் வகிர்ந்து கிடக்கின்றன எனும் சந்தேகம் என்னை நடுக்கியது. அது என்னை மிகப் பழமையான வலியில் ஆழ்த்தியது. அம்மாவின் உள்பாத்திரத்தினுள் துணையாகக் கிடந்தவன் சுருக்கிட்ட கொடியின் நினைவு கழுத்தில் அழுந்தியது.
இவ்வளவு காலமும் லூக்கா என்னை சுருக்கிட்டு வைத்த அச்சுறுத்தலின் சரடு.
என் காதுக்குள் வனவிலங்குகள் உறுமின. நான் மெதுவாக எழுந்து, கார் டயருக்கு அண்டக் கொடுத்திருந்த கற்களை உதைத்துத் தள்ளினேன். அது கனவில் நடப்பது போன்று முன்னோக்கி அசைந்தது. ஒரு கையை வைத்ததும் அது காட்டின் ஆழங்களுக்கு இறங்கிச் சென்றது.
பாறையின் மறைவிலிருது மல்லிகா எழும்பிவர நான் காத்துக் கொண்டிருந்தேன்.
[மாத்ருபூமி வார இதழில் வெளியான கதை. ஆணின் உட்புகுந்து ஒரு இளம்பெண் எழுதியதைப் போன்ற உணர்வினை அளிப்பதால் இதை மொழிமாற்றம் செய்தேன். ] -v.aravi.cbe@gmail.com