இணைய இதழ் 122கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

விடுமுறையில் மனிதர்கள்

விடுமுறையில் அனைவருமே லேசாகி விடுகின்றனர்
முகத்தில் புன்னகையுடன் வலம் வரும் அவர்கள்
குழந்தைகளைக் கூடுதலாகக் கொஞ்சுகிறார்கள்
குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்பவர்கள்
கையேந்தும் தட்டுகளில் தவறாமல் யாசகமிடுகிறார்கள்
உணவகங்களில் உணவருந்தும் அவர்கள்
பரிமாறுவர்களுக்கு சற்று அதிகமாகவே
அன்பளிப்பு இடுகிறார்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு
நண்பர்களை அழைத்து நெடுநேரம் பேசுகிறார்கள்
அழைக்காமலேயே உறவினர் விஷேங்களில்
தலை காட்டுகிறார்கள்
பெற்றோர்களிடம் மிகப் பொறுமையாக
அருகிலமர்ந்து ஆதரவாக
கைகளைப் பிடித்தபடியே பேசுகிறார்கள்
தேநீரைப் பொறுமையாக ரசித்தபடியே குடிக்கிறார்கள்
கல்லூரியில் தான் ரசித்த பாடல்களை
மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள்
பிடித்ததைச் சாப்பிட்டு பகல் தூக்கம் போடுகிறார்கள்
விடுமுறை முடிந்ததும் அனைத்தையும் மறந்துவிட்டு
பழைய முகமூடியை மாட்டிக்கொண்டு
பழகிப்போன வெளிவர முடியாத சுற்றுப் பாதையில்
மீண்டும் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.

*

குடை ராட்டினம்
பால்யமோ ஏறியமர்ந்து சுற்றுகிறது
கவிமனசோ புகைப்படம் எடுக்கிறது
நான் மட்டுமே ஏக்கத்துடன்.

*

‘வெள்ளையென்றாலே லில்லி’
‘லில்லி செல்லம், டாட்டா ‘
அவள் அம்மைக்கு
வழியும் கண்ணீருடன்
நினைவில் நெருஞ்சியாக
ஒரு கணம் வந்து போகும்
பிறந்தகத்தில்
அவள் வளர்த்த
கொல்லைப்புற செம்பருத்தி.

*

வாழ்த்து சொன்னவர்கள்
எவரும் வாங்குவதில்லை
இத்தனை விருப்பக் குறியீட்டுக்கு
இந்நேரம்
இரண்டாம் பதிப்பு
வந்திருக்க வேண்டும்
கூவிக் கூவி விற்பதற்கு
இதுவொன்றும் அடுத்த நாள்
அழுகுமொரு பொருளுமன்று
கடைசியாக
நண்பர்களைத்தான்
நம்ப வேண்டியிருக்கிறது
நானெழுதிய நூலுக்கு.

*

vkannan10@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button