
நான் ஒரு காலத்தில் கனிகளைச் சுமக்கும் கிளையாவேன்
ஆம் நண்பர்களே
வாழ்வதற்கு பூக்க
காத்திருக்கும் கிளை நான்
வரலாற்றுக்கு முன்னும் பின்னும்
மறைத்து வளர்க்கப்பட்ட கிளை நான்
நீர் இன்றித் தவிக்கவிடப்பட்ட
கிளை நான்
அதிகாரத்தின் கத்திகளால்
கவ்வாத்து செய்யப்பட்ட கிளை நான்
எனக்கு
தேவை அற்புதமான பூத்தல்
எனக்கு
தேவை சுதந்திரமான வளர்தல்
எனக்கு
தேவை பாடல்கள் நிறைந்த பறவைகள்
ஆதலால் நான்
பூக்கிறேன்
காய்க்கிறேன்
கனிகின்றேன்
புதிய காலங்களால் நிறைந்து
எதற்கும் அஞ்சாது
காற்றில் ஆடி
மகிழ்ந்து கிடக்கும் கிளையாக…
*
மந்திரக் கவிதை
மலைகளிலிருந்து மந்திரக் கம்பளத்தில்
பறந்து போன கவிதை
உலகமெங்கும் மலைகளின்
இன்பங்களை துன்பங்களை வலிகளை
ஒவ்வொரு இதயச் செவிகளுக்கும் கூறியது
நொந்து மரணத்தை எதிர்பார்த்து
மலைகளுக்குள் கிடக்கும் எளிய
ஜீவனுக்காக
அக்கவிதை தன் இரத்தத்தை சிந்தி
உரக்க ஒலிக்கிறது
முதலாளிகளின் காலம் தின்ற
தாய்களின்
உயிரின் மீதங்களில்
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக
மீதமிருக்கும் பேரொளியின்
வலிமையை ஏந்தி
மலைகளிலிருந்து மந்திரக் கம்பளத்தில்
பறந்து போன கவிதை
உங்கள் வாசலின் முன் நிற்கின்றது
உங்கள் இதயக் கதவைத் திறந்து
அதன் வலிகளை இன்பங்களை
பாடுகளை செவி கொடுத்துக்
கேளுங்கள்
பின் மந்திரக் கம்பளத்தில்
கவிதையின் அருகில்
ஒளிரும் வார்த்தையாக உருமாறிய
நீங்கள்
எழுதத் தொடங்குவீர்கள்
உங்கள் வாழ்வின் மந்திரக் கவிதையை.
*
கைவிடப்பட்டதும் தனித்திருப்பதுமான ஒற்றை முகம்
காலத்தாலும் கடவுள்களாலும்
அதிகாரத்தாலும்
கைவிடப்பட்ட முகம்
மலைகளில் தேயிலை
கொழுந்தாய் வளர்ந்திருக்கிறது
தேசத்தில் தனித்த முகம் கொண்டது
அந்த முகம் உழைத்து உழைத்து
தேய்ந்து கிடக்கிறது
வரலாற்றின் இருண்ட கூண்டுக்குள்
கிடந்தாலும் அம்முகம்
அகத்துள் பெரும் கனத்த சிவப்புடன்
சூரியனை உள்ளே வைத்திருக்கிறது
அம்முகம் கைவிடப்பட்டதன் வலியை
நன்கு உணர்ந்திருக்கிறது
தனித்திருக்கும் ஒற்றை முகமொன்று
என்னை அக்னி குஞ்சாக்கி
லயத்து வாசலில் ஓங்கி எரியவிட்டது
எரிந்து எரிந்து
செஞ்சிவப்பாக கைவிடப்பட்டதும்
தனித்திருப்பதுமான ஒற்றை முகம்
இந்தக் கவிதையை வாசித்து
தனது முகத்தை அறிய முயல்கிறது
*



