இணைய இதழ் 122கவிதைகள்

தேன்மொழி அசோக் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

பிப்ரவரி ரேகை

மழை கேட்பது என்னவெனில்
‘ஏதோவொரு நாள்
சிறுதுளியென விழும்
என் குறுஞ்செய்திக்காக
எல்லா நாளும் நீ காத்திருப்பது
அவசியம்தானா சொல்?’

‘மழைக்காகக் காத்திருக்கும் விவசாயி
மழையை வெறுத்து
ஒதுங்கி விடுவானா என்ன?
நீதான் பதில் சொல்லேன்
எப்போதாவது வரும்
என் அடைமழையே!’
மழை விரும்பிக் கூறியது.
*

எமோஜி விளைவிக்கும் காடு
உன் விரல்கள்
அதிர்ஷ்டக் குலுக்கலில் ஏதும் கிடைக்காமல்
வெறும் கையோடு வீடு திரும்புவதைப் போலத்தான்
சொற்களற்றுத் திரும்புகிறேன்
ஒவ்வொரு நாளும்.

ஒருவரது சொற்களாய்
உதிர்ந்திருக்கும் வனம்
நம் புலனத்தளம்
சொற்களற்றபோதும்
எமோஜி தட்டவாவது
உயிர்த்திரு என் உயிரே!

*

நீயிருக்கிறாய் என்பதில்
ஓர் ஆத்மதிருப்தி.
பேசாவிடினும்
உன் பெயருக்கு அருகில்
அல்லும் பகலுமாய் எரியும்
பச்சை விளக்குதான்
என் உயிரின் ஆணிவேர்
இரவுக்கான தாலாட்டும் அதுதான்
பகலுக்கான சுப்ரபாதமும் அதுதான்.

*

உன்னிடம் ஏதேனும் கூற வேண்டுமெனில்
உன்னிடமே கூறி விடுவேன்
எதற்காக இந்த சமூக ஊடகங்களின் பின்னால்
ஒளிந்தாக வேண்டும்?
உரிமையே…
என் உறவே…
உனதே உனதான உள்பெட்டியில்
எப்போது வேண்டுமானாலும்
வந்து விழலாம்
என் குறுஞ்செய்தி!

*

நான் இல்லா உலகில்
என்ன நடந்துவிடக் கூடும்?
ஐந்தறிவுள்ள என் பூனையும் நாயும்
ஓரிரு தினங்கள்
நானின்றி வாடிக்கிடக்கக் கூடும்
அதன் பின்…
சில உணவை சுவைக்கும்போதும்
சில நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போதும்
சில பாடல்களைக் கேட்கும்போதும்
சில இடங்களுக்குச் செல்லும்போதும்
என் புகைப்படத்தைப் பார்க்கும்போதும்
வெகுசிலருக்கே
என் நினைவின் பம்பரம் சுழலக் கூடும்!

தோராயமாகயில்லை
உறுதியாகச் சொல்கிறேன்
அந்த ஒருவர் மட்டும்
என்னுடைய புலனத்தின்
கடைசி வருகையின் நேரத்தோடு
அதிர்வற்றுக் கிடக்கக் கூடும்
பச்சை நிறத்திலோடும் டைப்பிங்
ஓடாதாவென ஏங்கிக் கிடக்கக் கூடும்
இதுவே இயலாதபோது…
காலிங், ரிங்கிங்கெல்லாம்
எப்படி சாத்தியமென்ற விரக்தியிலேயே
ஆணியற்ற பம்பரமாகக் கூடும்!
*

honeylx@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button