
(முன்குறிப்பு: இது அசல் கதை; மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. கதைக்களம், கதை எழுத்துமுறை ஆகியவை இது மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்).
அத்தியாயம் 1
பாலஸ்தீனத்தின் காஸா முனையின் எல்லைப் பகுதியில் அமைந்த கர்ம் அல்-ஜைத்தூன் குக்கிராமத்தின் ஆன்மாவாகவும், வாழ்வாதாரமாகவும் ஏராளமான ஆலிவ் மரங்கள் இருந்தன. கர்ம் அல்-ஜைத்தூன் என்றாலே ‘ஆலிவ் தோட்டம்’ என்றுதான் பொருள். கர்ம் என்றால் ‘தோட்டம்’ அல்லது ‘திராட்சைத் தோட்டம்’. ஆலிவ் மரங்கள் அடர்ந்த தோப்புகளைக் குறிக்கவும் இதைப் பயன்படுத்துவார்கள். அவ்வூரின் பல மரங்கள் நூற்றாண்டுகளைக் கண்டவை. அதில் வயது மூத்தது கத்ரா பாட்டியின் குடும்ப மரம்தான். அது ஐந்நூறு வருடங்கள் கடந்தது.
கத்ரா பாட்டிக்கு அது வெறும் மரம் அல்ல; அவளது பரம்பரையின் உயிருள்ள சாட்சி.
பாலஸ்தீனக் கலாச்சாரத்தில் ஆலிவ் மரம் என்பது குடும்பச் சொத்து. அது அந்த நிலத்தின் மீதான அவர்களின் பூர்வீக உரிமையைச் சொல்லும் ‘நிலப் பத்திரம்’.
கத்ரா பாட்டியின் குடும்ப மரத்தின் அடித்தண்டுப் பகுதி, மூன்று மனிதர்கள் கைகோர்த்து நின்று தழுவ வேண்டிய அளவு பருமன் கொண்டது. வேர்கள் பூமிக்கு அடியில் ஐந்து மீட்டர் ஆழம் வரை பாய்ந்து, பாலஸ்தீனத்தின் ஆதி வரலாற்றைத் தேடிச் சென்று மண்ணை இறுகப் பற்றிக்கொண்டிருந்தன. கிளைகள் சிறிய வீட்டை மறைக்கும் அளவுக்குப் பரந்திருந்தன.
ஒவ்வொரு இலையும் அவளுக்கு ஒரு கதை சொல்லும். ஒவ்வொரு காயும் அவளது பரம்பரைகளின் ஒரு நினைவு.
கத்ராவின் முன்னோர்கள் ஆலிவ் மரங்களை நடுவதைப் புனிதமான சடங்காகவே வைத்திருந்தனர். ஒரு குழந்தை பிறந்தால் அதன் பெயரில் ஒரு ஆலிவ் கன்றை நடுவது அவர்கள் வழக்கம். “மனிதன் மண்ணுக்குப் போவான், ஆனால் மரம் மண்ணை நமக்காகக் காக்கும்” என்பது அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. கத்ராவின் பாட்டியின் பாட்டியின் பாட்டி, அதே மரத்தின் கீழ் அமர்ந்துதான் தன் திருமண ஒப்பந்தமான ‘நிக்காஹ்’ பத்திரத்தில் கைரேகை வைத்தாள். தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பத்தின் குழந்தைகள் அந்த மரத்தின் கிளைகளில் ஊஞ்சலாடி வளர்ந்தனர். பெரியவர்கள் அதன் நிழலில் அமர்ந்து இளைப்பாறினர், வேலை செய்தனர், காரியங்கள் பேசினர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வந்துவிட்டால், அந்த மரத்தடியில் ‘அல்-புரகா’ (Al-Buraka) எனும் அறுவடைத் திருவிழா நடக்கும். ஊரே கூடி ‘தலூனா’ (Dalouna) பாடல்களைப் பாடும். அந்தப் பாடல்கள் அம்மண்ணின் போராட்டத்தையும், காதலையும், செழிப்பையும் ஒருசேர வெளிப்படுத்துபவை. ஆண்கள் ஏணி மூலம் மரத்தில் ஏறிக் கிளைகளை உலுக்க, பெண்கள் கீழே விரித்திருக்கும் பாய்களில் விழுகிற பழங்களைச் சேகரிப்பார்கள். அதில் எண்ணெய் காய்ச்சப்படும். புதிதாகப் பிழியப்பட்ட ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்திச் செய்யப்படுகிற ‘முசக்கன்’ உணவின் மணம், கிராமம் முழுதும் வீசும். சுமாக் பொடியின் சிவப்பு நிறமும், ஆலிவ் எண்ணெயின் பொன்னிறமும் கலந்த அந்த ரொட்டியைப் பிட்டு உண்ணும்போது, அவர்கள் தங்கள் நிலத்தையே சுவாசிப்பதாகக் கருதுவார்கள்.
இப்போது கத்ராவுக்கு 82 வயது. அவள் அந்த மரத்தின் கீழ் பிறந்தவள், அதன் கீழேயே மணம் முடித்தவள், அதன் நிழலடியில்தான் அவளது கணவர், மகன், மருமகள் ஆகியோர் புதைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய முறைப்படி, இறந்தவர்களின் சடலங்கள் பொதுவான கல்லறைகளில்தான் (Maqbara) அடக்கம் செய்யப்படும். ஆனால், பாலஸ்தீனத்தின் கிராமப்புறங்களில் அல்லது போர்க்கால அவசர நிலைகளில், தங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே (ஆலிவ் தோட்டம் போன்ற இடங்களில்) தங்களுக்குப் பிரியமானவர்களைப் புதைக்கும் வழக்கம் உண்டு.
மரித்தோரின் நினைவு அழுத்தும்போதெல்லாம் கத்ரா அந்த மரத்தடிக்கு வருவாள். அதன் கரடுமுரடான பட்டைகளை வயோதிக விரல்களால் வருடி, “நான் இறக்கும் முன் நீ இறக்கக்கூடாது” என்று, கோரிக்கையும் கட்டளையும் கலந்தது போலச் சொல்வாள். “உன் வேர்களுக்குக் கீழேதான் என் கணவர், மகன், மருமகள் ஆகிய மூவரும் அமைதியாக உறங்குகின்றனர். நான் இறந்த பின், நான் அவர்களுக்குத் துணையிருப்பேன். அதுவரை நீதானே அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்!”
அது பேசும் மரமல்ல. ஆனால், அவளோடு மட்டும் பேசும். அதன் இலைகள் காற்றில் சலசலப்பதை அண்ணாந்து பார்த்து, அந்த ஓசையையே பதிலாக எடுத்துக்கொள்வாள்.
*******
2023, அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. பாலஸ்தீனத்தின் வானம் மீண்டும் கருமேகங்களால் சூழப்பட்டது. காஸாவிலிருந்து வரும் குண்டு வெடிப்புகளின் அதிர்வுகள் கிராமங்களையும் நடுங்கச் செய்தன.
இது எத்தனையாவது போர்?
கத்ராவுக்கு நினைவில்லை.
அவள் வாழ்நாளில் ஏழு போர்களைப் பார்த்திருக்கிறாள்.
1948-ல் நடந்த ‘நக்பா’ (மாபெரும் பேரிடர்) காலத்தை அவளால் மறக்க முடியாது. அன்றுதான் 7 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
“அப்போது நான் சிறுமி, தாலியா! இன்று 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் அதே ‘நக்பா’ மீண்டும் என் கண்முன்னே நடக்கிறது. அன்று ஜோர்டானுக்கும் லெபனானுக்கும் என் உறவுகள் ஓடினார்கள், இன்று நாம் எங்கே ஓடுவது?” என்று கத்ரா தன் பேத்தி தாலியா(21)விடம் கேட்டாள்.
“பாட்டி, ‘67-ல் நீங்கள் ஓடியபோது எகிப்தில் தஞ்சம் புகுந்தீர்கள். இன்று உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய அகதிகள் இருக்கிறார்கள். ஜோர்டானில் மட்டும் 20 லட்சம் பேர். நாம் இப்போது காஸாவின் தெற்குப் பகுதியான ராஃபா எல்லைக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்துதான் எகிப்திற்குள் நுழைய முடியும்,” என்றாள் தாலியா.
நிலத்தில் அறுவடை முடிந்து, ஆலிவ் எண்ணெய் ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய நேரம் இது. ஆனால், இந்த முறை காற்றில் எண்ணெயின் மணத்திற்குப் பதில் வெடிமருந்தின் நாற்றம் வீசுகிறது. இப்போதும் மக்கள் தங்கள் வேர்களிலிருந்து பிடுங்கப்படுவதற்கான அபாயம் சூழ்ந்திருக்கிறது.
காஸாவில் குண்டுகள் விழுந்தன. ஆயிரக்கணக்கானோர் இறந்தார்கள். பதற்றம் அதிகரித்தது.
நள்ளிரவில் திடீரென ராணுவ வாகனங்களின் கர்ஜனை கேட்டது. கிராமத்திற்குள் புகுந்த ராணுவம், ஒலிபெருக்கிகள் மூலம் கட்டளையிட்டது: “எல்லோரும் வீடுகளைவிட்டு வெளியேறுங்கள்!”
“எங்கே போவது?” மக்கள் கேட்டனர்.
“எங்கு வேண்டுமானாலும். ஆனால் இங்கிருந்து போங்கள்!”
வீதிகளில் கூச்சல், குழப்பம். குழந்தைகள் அழுதனர், முதியவர்கள் திகைத்து நின்றனர். “பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்” என்று சிப்பாய்கள் கதவுகளைத் தட்டினர்.
“நான் எங்கும் வரமாட்டேன். என் வீடு இங்கே இருக்கிறது, என் மரம் இங்கே இருக்கிறது.” கத்ரா பிடிவாதமாகத் தரை விரிப்பில் அமர்ந்துகொண்டாள்.
அவள் ஏற்கனவே ‘67 போரின்போது ஒருமுறை அகதியாக வெளியேறியவள். மீண்டும் அந்தத் துயரத்தை அனுபவிக்கத் தயாராக இல்லை. தாலியா, “பாட்டி, தயவுசெய்து வாருங்கள். உயிருக்கு ஆபத்து. சில நாட்களில் நிலைமை சீரானதும் நாம் திரும்பி வந்துவிடலாம்” என்றாள். ஒரு சிறிய பையில் சில உடைகள், ஆவணங்கள், பணம் மற்றும் நகைகளை மட்டும் அவசர அவசரமாகத் திணித்தாள்.
2022 ஆகஸ்ட் மாதக் குண்டுவீச்சில் தன் பெற்றோரை ஒரே நாளில் இழந்த தாலியாவுக்கு, இப்போது எஞ்சியிருக்கும் ஒரே உறவு கத்ரா பாட்டி மட்டும்தான். அந்த மரணங்கள் தந்த வடு, இப்போதும் ராணுவ வாகனங்களின் சத்தம் கேட்கும்போதெல்லாம் அவளது நெஞ்சைப் பதறச் செய்தது.
“என் மரம்…” கத்ரா தவித்தாள்.
“அது எங்கும் போகப் போவதில்லை. நாம் திரும்பி வரும்போது அது இருக்கும்.” தாலியா சமாதானப்படுத்தி அவளை இழுத்துக்கொண்டு போனாள்.
கத்ரா கடைசியாகத் தன் மரத்தைத் திரும்பிப் பார்த்தாள். இருளில் அது ஒரு மாபெரும் மௌன சாட்சியைப் போல நின்றது. தான் பிறந்தது முதல் பார்த்த அந்த நிழல், இப்போது தூரமாகிக்கொண்டிருந்தது. தன் நிலத்தைவிட்டுப் பிரியும் வலி, அவளது நெஞ்சை ஆலிவ் பழமாகப் பிழிந்தது. அந்த நிலத்திலிருந்து பிடுங்கப்பட்ட ஒரு கன்றைப் போலவே அவள் தள்ளாடியபடி தாலியாவுடன் நடந்தாள்.
*******
அகதிகள் முகாமின் நெகிழிக் கூரைகளுக்குக் கீழ் மூன்று நாட்கள் நரகமாகச் சென்றன. அங்கு நிலவியது வெறும் அமைதி அல்ல; புயலுக்கு முந்தைய மௌனம். பாலஸ்தீன அகதிகளின் வாழ்வு என்பது ஒரு நீண்ட காத்திருப்பு. தண்ணீர்த் தட்டுப்பாடு, போதிய உணவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் என அந்த முகாம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக இருந்தது.
பிறகு கிராமத்திலிருந்து வந்த செய்தி, அந்த மௌனத்தைக் கிழித்தது.
“கிராமத்தில் புல்டோசர்கள் வந்திருக்கின்றன”, “வீடுகளை இடிக்கிறார்களாம்” எனப் பேசிக்கொண்டனர்.
ஏன்?
யாருக்கும் தெரியவில்லை. அல்லது எல்லோருக்கும் தெரியும், ஆனால் சொல்ல பயம்.
தாலியா கிராமத்தை நோக்கி ஓடினாள்.
இஸ்ரேலிய ராணுவத்தின் சோதனைச் சாவடிகளில் அவள் அவமானப்படுத்தப்பட்டுக் காத்திருக்க வேண்டியிருந்தது. பாலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்வைச் சிதைக்கும் அந்தச் சாவடிகள், அவர்களது சொந்த நிலத்திலேயே அவர்களை அன்னியர்களாக மாற்றின. “உள்ளே போக முடியாது” என்று ராணுவம் தடுத்தது.
“என் வீடு…!”
“உங்களுக்கு அனுமதி இல்லை!”
தூரத்தில், அந்த ஐந்நூறு வருட ஆலிவ் மரம் நிலைகுலைந்து ஆடுவதைத் தாலியா கண்டாள்.
“எங்கள் வீடு! என் பாட்டியின் மரம்! அதை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!” அவள் கெஞ்சினாள்.
சிப்பாய் தலையை மறுப்பாக அசைத்தான். “போ, போ! திரும்பிச் செல்!”
எந்திரங்களின் இரும்புச் சத்தத்திற்கு முன்னால் ஒரு பெண்ணின் குரல் வெறும் வாயசைப்பாகவே இருந்தது.
புல்டோசரின் இரும்புப் பற்கள் மரத்தின் தண்டில் பதியும்போது ஏற்பட்ட மரம் முறியும் சத்தம், ஒரு மாபெரும் உயிர் பிரியும்போது எழும் அலறலைப் போல இருந்தது.
பாலஸ்தீனத்தில் ஆலிவ் மரங்களை அழிப்பது என்பது ஒரு சாதாரண நடவடிக்கை அல்ல, திட்டமிடப்பட்ட போர் உத்தி. 1967-லிருந்து இன்றுவரை சுமார் 8 லட்சம் ஆலிவ் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு விவசாயியின் வாழ்வாதாரத்தையும், அந்த நிலத்தின் மீதான அவனது வரலாற்றுத் தடயத்தையும் அழிப்பதே இதன் நோக்கம். ஏனெனில், இஸ்ரேலியக் குடியிருப்புகளை விரிவாக்கத் தடையாக இருப்பவை இந்த ஆலிவ் தோப்புகள்தான்.
நூற்றாண்டுகளாகப் படர்ந்திருந்த கிளைகள் புழுதியில் விழுந்தன. அந்த நிலத்தின் அடையாளமாக, கத்ராவின் முன்னோர்களின் சாட்சியாக நின்ற மரம் அது. அவளது முன்னோர்களின் திருமணங்களை, பிறப்புகளை, இறப்புகளைப் பார்த்த அந்த மௌன சாட்சி, சில நிமிடங்களில் வெறும் விறகுக் குவியலாக மாற்றப்பட்டது. அது ஒரு மரத்தின் மரணம் மட்டுமல்ல, ஒரு பண்பாட்டின் அழிப்பு.
தாலியா அங்கேயே முழங்காலிட்டு அமர்ந்து அழுதாள். போரின் குண்டுகளைவிட, அந்த எந்திரங்கள் ஒரு தேசத்தின் வேர்களைப் பிடுங்குவது கொடூரமானதாக அவளுக்குத் தோன்றியது.
*******
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கிராமத்திற்குள் செல்ல அனுமதி கிடைத்தது. கத்ரா பாட்டி தள்ளாடியபடி தன் நிலத்திற்குத் திரும்பினாள். கிராமம் இல்லை. வீடுகள் இடிபாடுகளாகவும், சுவர்கள் தரைமட்டமாகவும் ஆக்கப்பட்டிருந்தன. இது பாலஸ்தீனத்தில் பல தலைமுறைகளாகத் தொடரும் தொடர்கதை. அவளது வீடும் இடிந்து கான்கிரீட் துண்டுகளாகக் கிடந்தது. ஆனால், அவள் தேடியது வீட்டை அல்ல; ஆலிவ் மரத்தை.
ஆனால், அங்கிருந்த நூற்றாண்டுகள் பழமையான ஆலிவ் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. அவளது குடும்ப மரம் இரண்டாகப் பிளக்கப்பட்டு, கிளைகள் சிதறி, அனாதையாகக் கிடந்தது. கத்ரா அதை நோக்கித் தள்ளாடியபடி ஓடினாள்.
ஐந்நூறு வருடங்கள் நின்ற மரம், ஒரே இரவில் கொல்லப்பட்டிருந்தது. நிலத்தைச் சுற்றிப் பிடித்திருந்த வேர்கள், இப்போது அறுக்கப்பட்டுச் சிவந்த மண்ணில் குருதி போலக் காய்ந்து கிடந்தன. கத்ராவுக்குத் தன் சொந்த எலும்புகள் முறிக்கப்பட்டுவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
மரத்தின் மீது விழுந்து அழுதாள். தன் கைகளால் தண்டைச் சுற்றி அணைத்துத் தழுவினாள்.
“நீ என்ன தவறு செய்தாய்? யாரைக் காயப்படுத்தினாய்? ஏன் உன்னைக் கொன்றார்கள்?” உடல் குலுங்க, குரல் கம்மக் கேட்டாள். “எழுந்திரு… எழுந்திரு…!” என்று அதை உலுக்கி எழுப்ப முற்பட்டாள்.
தாலியா அவளைத் தூக்க முயன்றாள். “பாட்டி, வாருங்கள்!”
“இல்லை. நான் இங்கேயே இருப்பேன். என் கணவன் இதன் கீழ் படுத்திருக்கிறான். நான் இங்கேயே இறப்பேன்.”
அப்போது, முறிந்த ஒரு கிளையின் நுனியில், பாதி வாடிய இலைகளுக்கு நடுவே சில ஆலிவ் பழங்கள் இருப்பதை அவள் கண்டாள். சில கருப்பாகப் பழுத்திருந்தன, சில இன்னும் பச்சையாக இருந்தன.
கத்ராவின் கண்கள் மின்னின. நடுங்கும் விரல்களால் அந்தப் பழங்களை ஒவ்வொன்றாகப் பறித்தாள். முப்பத்தாறு பழங்கள். அவற்றைத் தன் ஆடையின் முனையில் கவனமாக முடிந்துகொண்டாள்.
“இவைதான் மீதம்” என்றாள். “என் மரத்தின் கடைசிக் குழந்தைகள். மரம் இறந்துவிடவில்லை தாலியா…! அதன் இதயம் இப்போது என் கையில் துடிக்கிறது” என்று பேத்தியைப் பார்த்துச் சொன்னாள்.
அத்தியாயம் 2
சிதைந்து போன தங்கள் கிராமத்தில் அவர்களால் தொடர்ந்து இருக்க முடியவில்லை. எங்கும் இடிபாடுகளின் புழுதி. வழக்கமாக ஆலிவ் எண்ணெயின் மணம் கமழ்ந்துகொண்டிருந்த காற்றில் இப்போது பிணவாடை வீசியது. குடிநீர்க் குழாய்கள் உடைக்கப்பட்டிருந்தன; மின்சாரம் துண்டிக்கப்பட்டு வாரங்களாகிவிட்டன.
“பாட்டி,… காஸாவில் நிலைமை கொடூரம்,” என்றாள் தாலியா, கைப்பேசியில் வந்த செய்திகளைப் பார்த்தபடி. “பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் நம்மைப் போன்ற பெண்களும் குழந்தைகளும்தான். மருத்துவமனைகள்கூடத் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. தப்பிக்கக்கூட வழியில்லாமல் மக்கள் திறந்தவெளிச் சிறையில் சிக்கியிருக்கிறார்கள்.”
வாழ்வாதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு முடக்கப்பட்ட நிலையில், கத்ராவும் தாலியாவும் கான் யூனிஸ் அகதிகள் முகாமை நோக்கிச் செல்ல நேர்ந்தது.
அந்த முகாம், நம்பிக்கையிழந்த மனிதர்களின் கடலாகக் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் நெகிழித் தார்ப்பாய்களால் வேயப்பட்ட கூடாரங்கள். போதிய உணவின்றி வரிசையில் நிற்கும் மக்கள், பசியால் அழும் சிறார்கள், கணவனை இழந்த பெண்களின் மௌனமான கண்ணீர், வேலையுமின்றி நிலமுமின்றித் தவிக்கும் ஆண்களின் சீற்றம் என அந்த இடமே மாபெரும் வேதனையின் குறியீடாக இருந்தது. போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், எஞ்சியிருப்பவர்கள் பசியாலும் வறுமையாலும் மெல்ல மெல்ல மரித்துக்கொண்டிருந்தனர்.
கத்ரா அந்த நெரிசலிலும் தன் ஆடையின் முனையில் கட்டியிருந்த அந்த முப்பத்தாறு ஆலிவ் பழங்களை ஒரு கணமும் பிரியவில்லை.
“இவற்றை என்ன செய்யப் போகிறீர்கள் பாட்டி? நாமே அகதிகளாக ஆக்கப்பட்டுவிட்டோம். நீங்கள் எதற்கு இவற்றைச் சுமந்து அலைகிறீர்கள்?” தாலியா சோர்வுடன் கேட்டாள்.
“நடுவேன் தாலியா… நான் இதனை எங்காவது நடுவேன்,” கத்ராவின் குரலில் வைராக்கியம் இருந்தது.
“இந்தக் கல் தரையிலா? எங்கே நடுவீர்கள்?”
“தெரியவில்லை. ஆனால் எங்காவது மண் இருக்கும். இவை வளர வேண்டும். இவைதான் நம் குடும்பத்தின் ஐந்து நூற்றாண்டுகளின் நினைவு. இவை அழிந்தால் நம் மூதாதையர்களின் கதையே அழிந்துவிடும்.”
முகாம் முழுவதும் நெகிழிப் பாய்களும், கான்கிரீட் கட்டுமானங்களும், தார்ச் சாலைகளுமாக இருந்தன. ஒரு செடி வளர்வதற்குத் தகுதியான ஒரு பிடி மண்கூட அங்கு இல்லை.
ஆனால் முகாமின் எல்லையில், முள்வேலிக்கு அப்பால் ஒரு சிறிய பாழ்நிலம் இருந்தது. கத்ரா ரகசியமாக அங்கே சென்றாள். தன் முதுமையையும் மீறி, சுருக்கங்கள் விழுந்த விரல்களால் கடினமான மண்ணைத் தோண்டினாள். ஒரு விதையை இட்டு மூடினாள். தங்களுக்குக் கிடைத்த சொற்பமான குடிநீரிலிருந்து ஒரு பகுதியை அதற்கு ஊற்றினாள்.
“வளர் மகனே… வளர்,” என்று விதைக்கப்பட்ட மண்ணைப் பார்த்து வேண்டினாள். “உன் தாயை நினைவில் வைத்துக்கொள். ஐந்நூறு வருடங்கள் அவள் கம்பீரமாக நின்றாள். நீயும் நில். உன் குழந்தைகளும் இங்கே நிற்கட்டும். எங்கள் கதையும் உரிமையும் ஒருபோதும் மறக்கப்படக் கூடாது!”
*******
மூன்று மாதங்கள் கடந்தன. முகாமின் துயரங்களுக்கு நடுவே, கத்ராவுக்கு ஒரு உவகையான விஷயம். அவள் நட்ட விதை முளைத்திருந்தது. மெல்லிய பச்சைத் தண்டு, கொஞ்சம் இலைகள். அது வெறும் செடியல்ல, அவளது இழந்த வாழ்க்கையின் உயிர்த்தெழுதல்.
கத்ரா மகிழ்ச்சியில் விம்மினாள். “பார் தாலியா! பார்! என் மரம் மீண்டும் உயிர் பெற்றுவிட்டது!” என்று கைக்குழந்தையைக் காட்டுவது போலக் காட்டினாள். அந்தப் பாழ்நிலத்தில் அந்தச் சிறிய செடி நம்பிக்கையின் அடையாளமாகத் தலைதூக்கி நின்றது.
ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கவில்லை. ரோந்து வந்த ராணுவத்தினர் அந்தச் சிறிய செடியைக் கவனித்துவிட்டனர். இயந்திரத் துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள், அந்தச் சிறு துளிரைத் தங்கள் காலணிகளால் நசுக்கினர். பின் அந்தச் செடியை வேரோடு பிடுங்கி எறிந்தனர்.
“இங்கே எதுவும் வளரக் கூடாது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நிலத்தில் எதற்கும் அனுமதி இல்லை,” என்று கத்தினான் ஒரு சிப்பாய்.
கத்ரா தன் எண்பது வயது நலிந்த உடலையும் பொருட்படுத்தாமல் அந்தச் சிப்பாயின் கைகளைப் பற்ற முயன்றாள். “அது ஒரு செடிதான்… அது உங்களுக்கு என்ன தீங்கு செய்தது?” என்று சீறினாள்.
அவர்கள் அவளைத் தள்ளிவிட்டுச் சென்றனர்.
அன்று இரவு, கத்ரா முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைதியாக இருந்தாள். அந்த அமைதி தாலியாவை அச்சுறுத்தியது.
“பாட்டி? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” கவலையுடன் கேட்டாள்.
“எனக்கு ஒன்று புரிந்துவிட்டது தாலியா,” கத்ரா மெல்லிய, ஆனால் உறுதியான குரலில் சொன்னாள். “இங்கே எனக்கு என் மரத்தை வளர்க்க முடியாது. என் அடையாளத்தின் ஒரு துளிர்கூட இங்கே வளர்வதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் வேறு எங்காவது… இந்தப் பூமியின் ஏதோ ஒரு மூலையில், என் மரம் வளர்வதற்கான மண் நிச்சயம் இருக்கும். அங்கே நடுவேன்.”
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாட்டி?”
“நாம் இங்கிருந்து போக வேண்டும் தாலியா. எகிப்தோ, துருக்கியோ அல்லது கடலுக்கு அப்பாலோ… எந்த விலை கொடுத்தாவது நாம் இங்கிருந்து நகர வேண்டும். இந்தப் பையில் இருக்கும் மீதமுள்ள முப்பத்தைந்து விதைகளுடன் நாம் புறப்பட வேண்டும். இந்த விதைகள் வளர்ந்தே தீர வேண்டும்!”
*******
கான் யூனிஸ் முகாமில் செடி பிடுங்கப்பட்ட அந்த இரவு, கத்ராவின் மனதிற்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எண்பது வயதில் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது மரணத்திற்குச் சமம். ஆனால், கையில் இருக்கும் அந்த முப்பத்தைந்து ஆலிவ் விதைகளை உயிர்வாழச் செய்ய வேண்டுமானால் அவள் வெளியேறியே தீர வேண்டும்.
கத்ராவும் தாலியாவும் நிலவொளியில் கள்ளத்தனமாகப் பயணித்தனர். நீண்ட, துயரம் நிறைந்த நடைப்பயணம். கத்ராவால் வேகமாகவோ தொடர்ந்தோ நடக்க முடியாது என்பதால், இடையிடையே இளைப்பாறியும், தங்கியும் செல்ல வேண்டியிருந்தது. காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கில் உள்ள எகிப்து எல்லையை அடைய மூன்று நாட்கள் பிடித்தன. வழியெங்கும் ராணுவக் கண்காணிப்புகள், ட்ரோன்களின் இரைச்சல். பசியும் தாகமும் அவர்களை வாட்டின. பாலஸ்தீனத்தின் வறுமை இப்போது அவர்களின் காலடியில் கிடக்கும் கற்களைப் போலக் குத்தியது.
இறுதியாக ராஃபா எல்லையை அடைந்தனர். காஸா மக்கள் எகிப்திற்குள் நுழைய இருக்கும் ஒரே வாசல். ஆனால், எப்போது திறக்கும், எப்போது மூடும் என்று யாருக்கும் தெரியாது. அங்கிருந்த எல்லைச் சுவர், மனிதர்களைப் பிரிக்கும் கொடூரமான இரும்புத் திரை.
காஸா முழுதும் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், சட்டப்பூர்வமாக வெளியேற முடியாத ஆயிரக்கணக்கான அகதிகளுடன், கத்ராவும் தாலியாவும், பூமிக்கு அடியில் தோண்டப்பட்ட குறுகிய சுரங்கங்கள் வழியாக ஊர்ந்து சென்றனர். அந்த இருண்ட, காற்று குறைவான சுரங்கப் பாதையில் கத்ரா மூச்சுவிடத் திணறினாள். ஆனால், தன் மடியில் இருக்கும் ஆலிவ் விதைகளை அவள் இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். “இன்னும் கொஞ்ச தூரம்தான்… இன்னும் கொஞ்ச தூரம்தான்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
எகிப்திற்குள் நுழைந்த பிறகு கெய்ரோவுக்கு அருகில் இருந்த அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்தனர்.
அங்கேதான் கெனான் என்பவரைச் சந்தித்தனர். அவர் முதியவர், கத்ராவைப் போலவே பாலஸ்தீனியர். இருபது வருடங்களாக அங்கேயே அகதியாக வாழ்பவர்.
“நீங்கள் எப்போதாவது நம் தேசத்திற்குத் திரும்பிப் போக மாட்டீர்களா?” கத்ரா தவிப்புடன் கேட்டாள்.
கெனான் பெருமூச்சுவிட்டார். “போவேன்… ஒரு நாள் நிச்சயம் போவேன். ஆனால், எப்போது என்றுதான் தெரியாது. காலம் என் வயதையும் நம்பிக்கையையும் தின்றுவிட்டது.”
“உங்களிடம் ஒரு பிடி மண் இருக்குமா?”
கெனான் ஆச்சரியத்துடன் பார்த்தார்.
கத்ரா தன் பையைத் திறந்து ஆலிவ் விதைகளைக் காட்டினாள். “இது என் கிராமத்தில் ஐநூறு வருடங்கள் நின்ற என் குடும்ப மரத்தின் விதை. இதை நட வேண்டும்.”
கெனானின் கண்கள் பனித்தன.
பாலஸ்தீனியர்களுக்கு ஆலிவ் மரம் என்பது அவர்களின் வேர். அவர் கத்ராவை முகாமின் ஓரத்தில் இருந்த சிறிய இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு சிறிய ‘பாலஸ்தீனத் தோட்டம்’ போலக் காட்சியளித்தது. அங்கே அகதிகள் தங்களின் பசியைப் போக்க சிறு அளவில் தங்கள் அன்றாட உணவிற்காக பாரம்பரியமாகப் பயிரிடும் முக்கியக் காய்கறிகளான தக்காளி, கத்தரி, உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், மிளகாய் முதலான செடிகளையும், வெள்ளரி, சுரைக்காய், பூசணி ஆகிய கொடிகளையும் நட்டிருந்தனர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய அந்த முகாமிலும், ‘பாலாடி’ எனப்படும் தங்கள் நாட்டுத் தக்காளி விதைகளை நட்டு வளர்த்திருந்தனர். அது அவர்களுக்கு வெறும் உணவல்ல, அந்தச் செம்மண்ணின் சுவையை அந்நிய மண்ணில் தேடும் முயற்சி.
கத்ரா அங்கிருந்த மண்ணில் ஒரு விதையை ஊன்றி, தன் கைகளால் மென்மையாக மூடினாள். கெனான் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து அதன் மேல் ஊற்றினார்.
“இது வளரும்போது நமக்கு நினைவூட்டும் கெனான்… நாம் எங்கிருந்து வந்தோம், நம் வீடு எங்கே இருக்கிறது என்று. நாம் ஒருநாள் திரும்பப் போவோம் என்ற நம்பிக்கையை இது வளர்க்கும்” என்றாள் கத்ரா.
கெனான் சொன்னார், “இந்த எகிப்து நமக்குத் தற்காலிகப் புகலிடம்தான். லெபனானிலும் சிரியாவிலும் உள்ள நம் மக்கள் பல தசாப்தங்களாக முகாம்களிலேயே பிறந்து, முகாம்களிலேயே இறக்கிறார்கள். அவர்களுக்குத் தங்கள் தாய்நாட்டைப் பார்க்கும் வாய்ப்பே கிடைப்பதில்லை. ஆனால், நாம் இந்தப் பயணத்தைத் தொடருவோம்.”
*******
எகிப்தில் அவர்களுக்கு அதிக காலம் தங்க அனுமதி கிடைக்கவில்லை. அகதிகளுக்கான சட்டங்கள் மாறிக்கொண்டே இருந்தன. கத்ராவும் தாலியாவும் மீண்டும் ஆபத்தான பயணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இந்த முறை நிலம் அல்ல, கடல்.
மத்தியதரைக் கடலின் அலைகளில், சிறிய ரப்பர்ப் படகில் அவர்கள் துருக்கியை நோக்கிப் பயணப்பட்டனர். இது ஒரு மரணப் பயணம். படகு கவிழ்ந்து ஆயிரக்கணக்கான அகதிகள் இந்தக் கடலில் சமாதி ஆகியிருக்கின்றனர். கட்டுக்கடங்காத அலைகள் படகை மோதியபோது, தாலியா பயத்தில் உறைந்துபோனாள். ஆனால் கத்ரா பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள். அவளுக்குத் தன் உயிரைவிட, அந்த முப்பத்து நான்கு விதைகளைக் காப்பாற்றுவதுதான் முக்கியமாக இருந்தது. அந்த விதைகள் அழிந்தால், அவளது ஐநூறு வருடக் குடும்ப வரலாறு அழிந்துவிடும்.
அதிர்ஷ்டவசமாகப் படகு கவிழவில்லை. அவர்கள் துருக்கியின் கடற்கரையை அடைந்தனர். அங்கிருந்து துருக்கியின் கலாச்சாரத் தலைநகரமான இஸ்தான்புல் எனும் மாபெரும் நகரத்திற்குச் சென்றனர். ஆனால், அந்தப் பெருநகரத்தில் அகதிகளுக்கு ஒரு வேளை உணவிற்கு வழியில்லை; தூங்குவதற்கு இடமில்லை. ஒரு மசூதியின் வெளியே திறந்தவெளியில் குளிரில் நடுங்கியபடி அவர்கள் உறங்கினர்.
மறுநாள் காலை, அய்ஷே என்ற துருக்கியப் பெண் அவர்களைக் கவனித்தாள். கத்ராவின் களைத்த முகத்தையும், தாலியாவின் பரிதாப நிலையையும் கண்ட அவள், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“பாலஸ்தீனம்” என்றாள் கத்ரா சுருக்கமாக. அந்த ஒற்றை வார்த்தையில் நூறு ஆண்டுகால வலியும், இழப்பும் இருந்தது.
அய்ஷேவின் முகம் கவலையால் கவிழ்ந்தது. “என் தாத்தாவும் ஒரு அகதிதான். நூறு வருடங்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டின் ‘க்ரீட்’ (Crete) தீவிலிருந்து அகதியாக இங்கே வந்தவர். அந்த வலி எனக்குத் தெரியும்” என்றாள். அவள் அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சூடான தேநீரும் உணவும் கொடுத்தாள்.
அய்ஷேவின் வீட்டின் பின்புறம் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அங்கே ரோஜாக்களும் மல்லிகைகளும் பூத்துக் கிடந்தன. கத்ரா தன் ஆடையின் முனையிலிருந்து இரண்டு விதைகளை எடுத்தாள். “இவற்றை இங்கே நடலாமா?” என்று கேட்டாள்.
“இது என்ன விதை?” அய்ஷே ஆச்சரியத்துடன் கேட்டாள்.
கத்ரா தன் கதையைச் சொன்னாள். புல்டோசரால் கொல்லப்பட்ட மரம், பிடுங்கப்பட்ட செடி, தன் மண்ணின் மணம் என அனைத்தையும்.
“தாராளமாக நடுங்கள்!” என்றாள் அய்ஷே.
கத்ரா இஸ்தான்புல் மண்ணில் இரண்டு விதைகளைத் தனித்தனியாக நட்டாள்.
“இவை வளரும்போது பேசும் அய்ஷே… என் கதையை மட்டுமல்ல, உன் தாத்தாவின் கதையையும், வீடிழந்து அலையும் எல்லா அகதிகளின் கதையையும் இவை உலகுக்குச் சொல்லும்!”
துருக்கியின் குளிர் காற்று அவர்களை மென்மையாக வருடிச் சென்றது.
அத்தியாயம் 3
துருக்கியின் நிலப்பரப்பு அவர்களுக்குப் பாதுகாப்பளித்தாலும், ஐரோப்பா நோக்கிச் செல்வதே தாலியாவின் எதிர்காலத்திற்கு நல்லது என கத்ரா கருதினாள். மீண்டும் ஒருமுறை மத்தியதரைக்கடலை எதிர்கொள்ள அவர்கள் துணிந்தனர். இந்த முறை பயணம் இன்னும் பயங்கரமாக இருந்தது. துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையிலான அந்தச் சிறிய கடல் பகுதி, ஆயிரக்கணக்கான அகதிகளின் கல்லறையாக மாறியிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
இரவின் இருளில் ஏறிய அந்த ரப்பர்ப் படகு, கொள்ளளவைவிட அதிகமான மனிதர்களைச் சுமந்து தத்தளித்தது. நடுக் கடலில் காற்று ஆவேசமாக வீசியது. அலைகள் மலைப் பாம்புகளைப் போலப் படகைச் சுருட்டிப் போட முயன்றன. படகு கிட்டத்தட்டக் கவிழும் நிலைக்குச் சென்றபோது, மற்றவர்கள் அலறினர். ஆனால் கத்ரா, தன் மடியில் இருந்த அந்த முப்பத்து மூன்று விதைகளைத் தன் உயிர் மூச்சைக் கொண்டு காப்பது போல இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
“கடவுளே, என் மூச்சு நின்றாலும் பரவாயில்லை… என் உடல் இந்தக் கடலில் கரைந்தாலும் கவலையில்லை. ஆனால் இந்த விதைகளைக் காப்பாற்று. இவை வெறும் விதைகள் அல்ல, ஒரு தேசத்தின் அடையாளம். என் முழு வாழ்க்கையும் இந்த முப்பத்து மூன்று விதைகளில் அடங்கியிருக்கிறது” என்று மௌனமாகப் பிரார்த்தனை செய்தாள்.
மரணத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டு, படகு ஒருவழியாக கிரீஸின் லெஸ்போஸ் (Lesbos) தீவை அடைந்தது. அங்கே அவர்களை ‘மோரியா’ என்னும் பெரிய அகதிகள் முகாம் வரவேற்றது. அது ஒரு மனிதக் காடு. சிரியர்கள், ஆப்கானியர்கள், ஈராக்கியர்கள் என, போரினால் சிதைந்த பல நாடுகளின் மக்கள் அங்கே முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஐரோப்பாவின் கதவுகள் அவர்களுக்குத் திறக்கப்படவில்லை. வாரங்கள் மாதங்களாகி நீண்டன.
“பாட்டி,… ஐரோப்பா நம்மைப் போன்ற அகதிகளை ஏற்கத் தயங்குகிறது,” என்றாள் தாலியா. “கடலில் மூழ்கி இறக்கும் அகதிகளின் எண்ணிக்கையைவிட, இந்த முகாம்களில் நம்பிக்கையற்று மரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 1948 முதல் இன்று வரை நாம் நாடற்றவர்களாகவே அலைந்துகொண்டிருக்கிறோம். துருக்கி, எகிப்து, ஜோர்டான் என ஒவ்வொரு நாடாக நம்மைத் தள்ளுகிறது. ஆனால், நமக்கென்று ஒரு நாடு அமையும் வரை இந்த அலைச்சல் ஓயாது போலிருக்கிறது.”
அந்த முகாமின் நெரிசலில், போதிய உணவின்றி, குளிரிலும் மழையிலும் மக்கள் வாடினர். ஆனால், கத்ரா தளரவில்லை. முகாமின் முள்வேலிக்கு வெளியே, கடற்கரையின் ஓரத்திலிருந்த பாறை இடுக்குகளில் இருந்த மண்ணைத் தேடிச் சென்றாள். அங்கே மூன்று விதைகளை நட்டாள்.
“கிரீஸ் மண்ணில் நீங்கள் வளருங்கள்,” என்று விதைக்கப்பட்ட இடத்தைப் பார்த்துச் சொன்னாள்.
“இந்தக் கடல் வழியாக எத்தனையோ அகதிகள் வந்தார்கள், எத்தனையோ பேர் கடலில் மறைந்தார்கள். அவர்கள் சார்பாக நீங்கள் வளருங்கள். உலகம் பார்க்கட்டும்… பாலஸ்தீனர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் சாவதில்லை. அவர்கள் வாழ்கிறார்கள், வளர்கிறார்கள். எல்லாவற்றையும்விட, அவர்கள் தங்கள் வேர்களை நினைவில் வைத்திருக்கிறார்கள்.”
*******
தொடர் அலைச்சல்களால் கத்ராவுக்கு உடல் தளர்ந்துவிட்டது. ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும்போதும் பாரத்தை உணர்ந்தாள். நீண்ட தூரம் நடப்பது பெரும் போராட்டமாக இருந்தது.
தாலியா கவலைப்பட்டுச் சொன்னாள், “பாட்டி, இப்போது நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். போதும்… நாம் இனி ஒரு இடத்திலேயே ஓய்வெடுக்கலாம். உங்களால் இனி முடியாது.”
கத்ரா அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள். “இல்லை தாலியா… என் வேலை இன்னும் முடியவில்லை. என்னிடம் இன்னும் 29 விதைகள் மீதமிருக்கின்றன. நான் உயிருடன் இருக்கும்போதே அவற்றை வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாடுகளில் நட்டுவிட வேண்டும். அப்போதுதான் என் 500 வருடத்து மரம், ஆயிரக்கணக்கான மரங்களாகப் பூமி முழுவதும் உயிர்த்தெழும்.”
அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு ஜெர்மனிக்குச் செல்ல அனுமதி கிடைத்தது.
“பாட்டி, யூதர்களை இந்தத் தேசத்திலிருந்துதான் வெளியேற்றினார்கள். இன்று அதே தேசம் நம்மைப் போன்ற அகதிகளுக்குப் புகலிடம் அளிக்கிறது. வரலாறு எவ்வளவு விசித்திரமானது!” என்றாள் தாலியா.
ஜெர்மனி இன்று பாலஸ்தீன அகதிகளுக்கு முக்கியப் புகலிடமாக இருந்தாலும், அங்குள்ள அரசியல் சூழல் எப்போதும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்குச் சாதகமாக இருப்பதில்லை. பல நேரங்களில் போராட்டங்களுக்குத் தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதை தாலியா கவனித்திருந்தாள்.
பெர்லின் நகரின் ஒரு சிறிய குடியிருப்பில் அவர்கள் குடியேறினர்.
இது வரலாற்றின் விசித்திரமான முரண்கள் நிறைந்த நகரம். உலகையே அதிரவைத்த போர்களையும், அகதிகளையும் உருவாக்கிய அதே நகரம், இன்று அகதிகளின் புகலிடமாக மாறியிருந்தது.
குடியிருப்புக்கு அருகிலிருந்த பொதுப் பூங்காவிற்குத் தாலியா கத்ராவை அழைத்துச் சென்றாள். அங்கே ஓக் மரங்களும், மேப்பிள் மரங்களும் உயர்ந்து நின்றன. கத்ரா அங்கிருந்த ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்தாள். நடுக்கமுற்ற கைகளால் ஐந்து விதைகளை அங்கே நட்டாள். அவளது முகத்தில் நீண்ட காலப் பயணத்தின் களைப்பும், அதே சமயம் மிகுந்த திருப்தியும் ஒருசேரத் தெரிந்தன.
சுற்றியிருந்த மரங்களைப் பார்த்துப் பேசினாள். “இந்த விதைகள் இங்கே வளரட்டும். மனித குலம் செய்த தவறுகளையும், இழப்புகளையும் நினைவூட்டும் சாட்சியாக, இந்த ஆலிவ் மரங்கள் இங்கே நிற்கட்டும். பெர்லின் குளிரிலும், என் பாலஸ்தீனத்தின் வீரம் இந்த மரங்கள் வழியாகத் துளிர்க்கட்டும்!”
*******
பெர்லினில் தஞ்சம் புகுந்திருந்த கத்ராவுக்கு, ஐரோப்பாவின் பிற நாடுகளுக்குச் சென்று விதைகளை நடுவது இயலாத காரியம். அகதி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் பல நாடுகளுக்குச் சுதந்திரமாகப் பயணம் செய்ய முடியாது. ஆனால், அவளது மன உறுதிக்கு எல்லைகள் தடையாக இருக்கவில்லை. பெர்லின் அகதிகள் முகாம்களில் தற்காலிகமாகத் தங்கிவிட்டு, அங்கிருந்து லண்டன், பாரிஸ் மற்றும் பார்சிலோனா நோக்கிப் பயணப்படக் காத்திருந்த சக அகதிகளைத் தேடிச் சென்றாள்.
லண்டனின் தேம்ஸ் நதிக்கரைக்குச் செல்லவிருந்த சிரிய அகதியிடம் இரண்டு விதைகள், பாரிஸின் ஈபிள் கோபுரம் அருகே தஞ்சம் புகவிருந்த ஆப்கானிய இளைஞனிடம் மூன்று விதைகள், பார்சிலோனாவின் வீதிகளில் நட எரித்திரியப் பெண்ணிடம் இரண்டு, ஆம்ஸ்டர்டாமின் கால்வாய்களை ஒட்டிய ஈர மண்ணில் ஊன்ற சூடான் நாட்டு அகதியிடம் ஒன்று எனத் தன்னிடம் இருந்த விதைகளை மிகுந்த நம்பிக்கையுடன் பகிர்ந்துகொடுத்தாள்.
ஒவ்வொருவரிடமும் அந்த விதைகளைக் கொடுக்கும்போது, அது அந்த மண்ணைச் சேருவதை உறுதி செய்யும்படி உருக்கமாக வேண்டிக்கொண்டாள்.
“இதை நடுங்கள். இது வெறும் ஆலிவ் விதை அல்ல. இது பாலஸ்தீனத்தின் இதயம். இது வளரும்போது, உங்கள் கதையையும் சேர்த்தே உலகுக்குச் சொல்லும். நாம் எல்லோரும் ஒருவர்தான் – வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள். ஆனால், நினைவுகளையும் நம்பிக்கையையும் ஒருபோதும் இழக்காதவர்கள்” என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினாள்.
*******
2025-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம். பெர்லினின் கடுங்குளிர் கத்ராவின் எண்பத்து நான்கு வயது உடலைத் துளைத்தது. படுக்கையிலேயே முடங்கிப்போனாள். பரிசோதித்த மருத்துவர்கள் கைகாட்டிவிட்டனர்; “அதிக நாட்கள் இல்லை, அவர் அமைதியாகப் போகட்டும்” என்றனர்.
தாலியா அவளது படுக்கையோரம் அமர்ந்து தேம்பி அழுதாள். கத்ரா கஷ்டப்பட்டுத் தன் கண்களைத் திறந்து, சுருங்கிய கரங்களால் தாலியாவின் கன்னங்களைத் துடைத்தாள்.
“அழாதே தாலியா…! எனக்கு ஒரு குறையும் இல்லை. நான் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தேன். என் 500 வருடத்து மரத்தின் கீழ் பிறந்தேன். அந்த மரத்தின் செழிப்பை என் இளமைக் காலத்தில் அனுபவித்தேன். இப்போது, அந்த மரத்தின் குழந்தைகளை உலகம் முழுவதும் நட்டுவிட்டேன். ஒரு பெண்ணாக, ஒரு பாலஸ்தீனியளாக இது எனக்குப் போதும்” என்றாள்.
“ஆனால் இன்னும் பத்து விதைகள் மீதமிருக்கின்றனவே பாட்டி! உங்களால் முடியும், எழுந்து வாருங்கள்.” பாட்டியை சாக விடக்கூடாது என்னும் எண்ணத்தில், நம்பிக்கையூட்டலாகச் சொன்னாள்.
“இல்லை தாலியா… அந்தப் பத்து விதைகள் உனக்கும் உன் சந்ததிக்குமானது. நான் நட்டது என் தலைமுறையின் கடமை. மீதமுள்ளவற்றை நீ நடு. உன் குழந்தைகள் நடுவார்கள், உன் பேரக்குழந்தைகளும் நடுவார்கள். ஆக்கிரமிப்பாளர்களால் மரங்களை வெட்ட முடியுமே தவிர, விதைகளை என்ன செய்ய முடியும்? இது ஒரு தொடர் ஓட்டம். இது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு” என்று மூச்சிரைக்கக் கூறினாள்.
கத்ரா கடைசி முறையாகத் தன் ஆடைக்குள் இருந்த அந்தப் பத்து விதைகளைத் தன் உள்ளங்கையில் ஏந்தினாள். அந்த விதைகள், அவளது சுருங்கிய ரேகைகளுக்கு நடுவே பாலஸ்தீனத்தின் புதிய வரைபடத்தைப் போலத் தெரிந்தன.
அவளது கண்கள் மெல்ல மூடின. அந்த அரைத்தூக்கத்தில், அவளது கிராமத்தின் ஆலிவ் தோப்பும், அவளது குடும்பத்தினரின் முகங்களும் கண்ணில் வந்தன. பெண்கள் பாடும் அறுவடைப் பாடல்கள் சற்று தூரத்திலிருந்து ஒலிப்பது போல அவளது செவிகளுக்குக் கேட்டது.
“என் மரம்…” என்று மெதுவாக முணுமுணுத்தாள். “ஐந்நூறு வருடங்கள் அது ஒரே இடத்தில் நின்றது. ஆனால் இன்று அது உலகம் முழுவதும் நிற்கிறது. ஒரு மரம் அல்ல, பல மரங்கள். ஒரு நாடு அல்ல, பல நாடுகள். என் வேர்களைப் பிடுங்கியவர்களுக்கு இதுதான் என் பதில். இது என் வெற்றி…”
அந்த வார்த்தைகளோடு அவளது கண்கள் மூடின.
அத்தியாயம் 4
கத்ராவின் மரணம் பெர்லினின் அந்தச் சிறிய குடியிருப்பில் கனத்த மௌனத்தை ஏற்படுத்தியது. தாலியா தன் பாட்டியை இஸ்லாமியர் கல்லறையில் அடக்கம் செய்தாள். அந்தப் பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது. ஆனால் கத்ராவின் முகத்தில் இருந்த திருப்தி, அந்தப் பனியை விடவும் தூய்மையாக இருந்தது.
கல்லறையின் கல்வெட்டில் தாலியா பின்வரும் வாசகங்களைப் பொறிக்கச் செய்தாள்.
“கத்ரா (1941 – 2025) – ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி, பாலஸ்தீனத்தின் மகள். இவர் கொண்டு வந்த விதைகள் இப்போது உலகெங்கும் பேசுகின்றன.”
கத்ராவின் உடல் மண்ணுக்குள் இறக்கப்பட்ட போது, தாலியா தன் பாட்டி தன்னிடம் ஒப்படைத்திருந்த பத்து விதைகளிலிருந்து இரண்டை எடுத்தாள். நடுக்கமுற்ற கைகளால் அந்தத் தண்மையான மண்ணைத் தோண்டி, பாட்டியின் தலைமாட்டில் அந்த இரு விதைகளை நட்டாள்.
“பாட்டி, நீங்கள் இப்போது தனியாக இல்லை,” என்று மெதுவாகச் சொன்னாள். “அந்நிய மண்ணில் நீங்கள் புதைக்கப்பட்டாலும், உங்கள் மரங்கள் உங்களோடு இங்கே வளரும். இந்தப் பெர்லின் மண்ணில் உங்கள் ஆலிவ் மரங்கள் வேரூன்றி, நீங்கள் பார்த்த அதே 500 வருடத்து மரத்தின் வாசனையை உங்களுக்கு இங்கே கொண்டு வரும். நீங்கள் நட்ட விதைகள் உங்களைக் காக்கும்.”
*******
காலம் அதன் போக்கில் ஓடியது. கத்ரா விதைத்த விதைகள் இப்போது வெவ்வேறு நாடுகளில் செடிகளாக வளர்ந்துகொண்டிருந்தன. அவை வெறும் தாவரங்களாக அல்லாமல், பாலஸ்தீனத்தின் துயரத்தையும் உறுதியையும் சொல்லும் உயிருள்ள நினைவுச் சின்னங்களாக மாறின.
எகிப்தில், கெய்ரோவிற்கு அருகிலுள்ள அந்த முகாமில் கெனான் உதவியால் நட்ட விதை இப்போது குற்றுமரமளவு வளர்ந்து நின்றது. அதன் கிளைகள் பரவி நிழல் தந்தன. மாலையில், முகாமிலுள்ள அகதிகள் அந்த மரத்தடியில் கூடி அமர்ந்தனர்.
“இது கத்ராவின் மரம். ஐநூறு வருடத்து மூதாதையர் மரத்திலிருந்து வந்த உயிர். நாம் நம் தாய்நாட்டிற்குத் திரும்பும் வரை இது நம் நம்பிக்கையைத் தாங்கி நிற்கும்” என்று முதியவர்கள் குழந்தைகளுக்குக் கதை கூறினர். அங்கு உண்ணப்படும் எளிய உணவுகளில் அந்த மரத்தின் நிழல், கௌரவத்தைச் சேர்த்தது.
இஸ்தான்புல்லில், அய்ஷேவின் வீட்டுத் தோட்டத்தில் இரண்டு ஆலிவ் மரங்களும் துருக்கியின் காலநிலையை ஏற்று செழித்து வளர்ந்தன. அய்ஷே தன் குழந்தைகளுக்கு அந்த மரத்தைக் காட்டிச் சொன்னாள்: “இவை பாலஸ்தீனத்திலிருந்து வந்தவை. ஒரு மூதாட்டி தன் வீட்டை இழந்தபோதும், தன் குடும்பத்தின், நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற இந்த விதைகளைச் சுமந்து வந்தாள். உலகம் மறக்கக் கூடாத ஒரு தேசத்தின் நினைவூட்டல்கள் இவை.”
கிரீஸின் லெஸ்போஸ் கடற்கரையில், பாறை இடுக்குகளில் வளர்ந்த அந்த மூன்று மரங்களும் கடல் காற்றை எதிர்த்து நின்றன. அந்தத் தீவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், “கடலோரத்தில் ஆலிவ் மரங்களா?” என்று வியப்புடன் கேட்டனர். அதற்கு உள்ளூர் மக்கள் பெருமையுடன் பதிலளித்தனர்: “இவை அகதிகள் நட்ட மரங்கள். ஒவ்வொரு மரமும் ஒருவரின் இழப்பையும், மீண்டு வந்த கதையையும் சொல்லும் நினைவுச் சாட்சிகள்.”
பெர்லினின் அந்தப் பொதுப் பூங்காவில், கத்ரா நட்ட ஐந்து மரங்களும் இப்போது ஒரு சிறிய தோப்பாகவே மாறியிருந்தன. பூங்கா நிர்வாகம் அந்த மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் அருகில் ஒரு கல்வெட்டை வைத்தது:
“கத்ராவின் மரங்கள் – 2023-ல் பாலஸ்தீனத்திலிருந்து இடம்பெயர்ந்த அகதிகளின் நினைவாக.”
மக்களில் சிலர் அந்த மரங்களின் கரடுமுரடான பட்டைகளைத் தொடும்போது, தொலைதூரப் பாலஸ்தீனத்தின் துயரத்தை உணர்ந்து வருந்தினர். இளைஞர்கள் அந்த மரங்களுக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்; அவை சமூக வலைத்தளங்கள் வழியாக ‘நினைவே ஒரு போராட்டம்’ என்ற செய்தியை உலகுக்கு அறிவித்தன.
*******
2031-ஆம் ஆண்டின் ஒரு கோடைக்காலம். இப்போது தாலியாவுக்கு இருபத்தொன்பது வயது. திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருக்கிறது. அது ஜெர்மனியில் பிறந்திருந்தாலும், தாலியா அதற்குத் தாய்நாட்டின் செம்மண் கதைகளையே ஊட்டி வளர்த்தாள்.
அவளிடம் கத்ரா பாட்டி தன் இறுதி மூச்சின்போது கொடுத்ததில் மீதமுள்ள எட்டு விதைகள் கனத்துக்கொண்டே இருந்தன. அதில் ஒரு விதையாவது தன் பாட்டியின் ஆசைப்படி அதன் பூர்வீக மண்ணில், அதன் தாயின் வேர்கள் இருந்த அதே இடத்தில் வளர வேண்டும் என்று துடித்தாள்.
பாலஸ்தீன மக்களின் நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பிறகும், சர்வதேச அழுத்தங்களினாலும் தங்கள் பூர்வீக நிலத்திற்குத் திரும்பும் ‘மறுவாழ்வு உரிமை’ (Right of Return) ஓரளவுக்குச் சாத்தியமான சூழலில், தாலியாவுக்குத் தன் தாய்நாட்டிற்குச் செல்லும் அனுமதி கிடைத்தது. அவள் தன் குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றாள்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் செம்மண்ணில் கால் வைத்தபோது, கண்களில் கண்ணீர் திரண்டது. அது அவளது பாட்டியின் கண்ணீர், அவளது முன்னோர்களின் கண்ணீர்.
அவர்களின் பழைய கிராமம் இப்போது மீண்டும் உயிர் பெற்றுக்கொண்டிருந்தது. தாலியா நேராகத் தன் பாட்டியின் 500 வருடத்து மரம் நின்ற இடத்தைத் தேடிச் சென்றாள். இப்போது அங்கே அந்த மரத்திற்கு நினைவுக் கல் நடப்பட்டிருந்தது. அதில் பின்வருமாறு பொறிக்கப்பட்டிருந்தது:
“இங்கே ஐந்நூறு வருட ஆலிவ் மரம் நின்றது. 2023-ல் இது அழிக்கப்பட்டது. ஆனால் இதன் விதைகள் இன்று உலகம் முழுவதும் வாழ்கின்றன.”
தாலியா அந்தக் கல்லின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள். தன் பையிலிருந்து மூன்று விதைகளை எடுத்தாள். கைகளால் அந்தச் செம்மண்ணைத் தோண்டினாள். எட்டு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விதைகள் அதன் தாய்நாட்டின் மண்ணைச் சந்தித்தன. அதுவும், தாய் மரம் இருந்த அதே ஊரில், அதே இடத்தில் அவை விதைக்கப்பட்டன.
தாலியா தண்ணீர் ஊற்றினாள்.
“பாட்டி… நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். உங்கள் மரத்தை அதன் சொந்த மண்ணிற்கே மீண்டும் கொண்டு வந்துவிட்டேன்” என்று விம்மினாள். “இந்த விதைகள் இனி வளரும். ஐந்நூறு வருடங்கள் அல்ல, ஆயிரம் வருடங்கள் இவை இங்கே நிற்கும். நம் கதையை, நீங்கள் சுமந்து சென்ற விதைகளின் கதையை, இவை உலகிற்குச் சொல்லும்.”
*******
இப்போது, உலகம் முழுவதும் கத்ராவின் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. எகிப்தின் முகாம்களில், துருக்கியின் தோட்டங்களில், கிரீஸின் கடற்கரைகளில், ஜெர்மனியின் பூங்காக்களில், லண்டனில், பாரிஸில், பார்சிலோனாவில்… என எங்கும் பாலஸ்தீனத்தின் ஆலிவ் மரங்கள் அசைந்தாடுகின்றன.
ஆலிவ் மரங்கள் மிதமான வெப்பமண்டலப் பயிர்கள். ஜெர்மனி, லண்டன் போன்ற மிகக் கடுமையான பனிப்பொழிவு உள்ள இடங்களில் அவை வளர்வது கடினம். குளிரைத் தாங்காது. இருப்பினும், அந்தக் கடும் குளிரையும் மீறி அந்த மரங்கள் பிழைத்து நின்றன.
பாலஸ்தீனத்தின் அந்தப் பழைய கிராமத்தில், தாலியா நட்ட அந்தச் சிறு விதை இப்போது துளிர்விட்டிருக்கிறது. அதன் இலைகள் காற்றில் அசைந்து ஒரு செய்தியைச் சொல்கின்றன:
“நான் கத்ராவின் மரத்தின் விதையிலிருந்து முளைத்தேன். என் தாய் ஐந்நூறு வருடங்கள் நின்றாள். பிறகு அவள் கொல்லப்பட்டாள். ஆனால் நான் சாகவில்லை. நான் இப்போது பல மரங்களாக, பல நாடுகளில், ஒரே கதையுடன் வாழ்கிறேன். எங்களை நீங்கள் வெட்டலாம், ஆனால் எங்களை ஒழிக்க முடியாது. ஏனெனில், நாங்கள் விதைகளைச் சுமந்தவர்கள்.”
தாலியாவிடம் இன்னும் ஐந்து விதைகள் மீதமிருக்கின்றன. அவள் அவற்றை நடமாட்டாள். தன் குழந்தை, தங்களின் வரலாற்றைச் சொன்னால் புரிகிற அளவுக்கு வளர்ந்தபின், அதைச் சொல்லிவிட்டு, அந்த விதைகளை அதனிடம் கொடுப்பாள்.
*******
(முற்றும்)



