கட்டுரைகள்

6வது பேரழிவை சந்திக்கிறதா இந்த பூமி???

- பார்த்திபன் நெடுஞ்செழியன்

 

   இதுவரை இந்த பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்து ஐந்து பேருயிரழிவுகள்( மாஸ் எக்ஸ்டிங்ஷன்ஸ் – Mass Extinctions) நடந்துள்ளனஅதாவது குறுகிய காலத்தில் மிகப் பெரும்பான்மையான உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போவது. அப்படியான ஐந்து பேரழிவுகளில் இரண்டு பெரும் அழிவுகள் பஹ்மியன்(Permian)  மற்றும் ஏஜ் ஆஃப் டைனோசர்(Age of Reptiles) காலத்து அழிவுகள். ஏனென்றால் இந்த அழிவுகளில் உயிரிழந்த உயிரினங்களின் எண்ணிக்கை மிக மிகப் பெரியது. ஏறத்தாழ 80 லிருந்து 90 சதவிகித உயிரினங்கள் அனைத்தும் மொத்தமாக குறுகிய காலத்தில் அழிந்தனமொத்தம் நடந்த ஐந்து பேரழிவுகளில் இந்த இரண்டு மாஸ் எக்ஸ்டிங்ஷன்களுக்கு மட்டுமே காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலாவது பேரழிவான பஹ்மியன் காலத்து அழிவு எரிமலை வெடிப்புகளால் ஏற்பட்டு அதன் மூலம் மிகக் கொடிய விஷ வாயுக்கள் வெளியேறி,காற்றுவெளி மண்டலத்தில் உஷ்ணம் அதிகமாகி,அதனால் ஓசோன் அழிந்து, மேலும் வெப்பம் கூடி, மேலும் கார்பன் டை ஆக்சைடு வாயு கூடி உயிரினங்கள் அனைத்தும் அழிந்தன! இரண்டாவது பேரழிவான ஏஜ் ஆஃப் ரெப்டைல்ஸ்(டைனோசர்க்களை) முடிவுக்குக் கொண்டுவந்த அஸ்டிராய்ட் என்கின்ற விண்கல் பூமியின் மீது தாக்கியதால் ஏற்பட்ட பேரழிவு. சரி, இதெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். நிற்க

ஐந்து பேரழிவுகளில் இரண்டிற்கு நமக்கு காரணம் தெரியும். இப்போது ஆறாவது பேரழிவு ஒன்று நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதில் குறிப்பாக நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டியது இந்தப் பேரழிவை இந்த பூமிக்கு உருவாக்கிக் கொண்டிருப்பது மனிதர்களாகிய நாம்தான். ஐந்து பேரழிவுகள் ஏற்பட்ட போதும் அவை மிகக் குறுகிய காலத்திலேயே ஏற்பட்டன. இப்பொழுது அதற்கான சந்தர்பங்கள் உள்ளனவா என யோசித்துப் பார்த்தால் அதற்கான அத்தனை சான்றுகளும் இப்போது கிடைத்து வருவது வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது. மனிதர்கள் உருவான காலத்தில் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்தனர். ஆனால் இன்றோ இயற்கையின் எதிரியாக மாறியுள்ளனர்நம்முடைய தேவைக்காக இந்த பூமியை 40 சதவீதத்திற்கு மேல் நாம் அதன் தன்மையிலிருந்து மாற்றிவிட்டோம். இதோடு முடியாமல் இன்னும் வேகமாக மாறிக் கொண்டேதான் இருக்கும்காரணம் 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 1000 கோடியைத் தாண்டிவிடும்.நம் தேவைக்காக ஏற்கனவே இந்த பூமியில் இருக்கும் பெரும்பாலான பயோடைவர்சிடு(Biodiversified Forest) பாரஸ்ட் எனப்படும் பல்லுயிர் வாழும் காடுகள் பெரும்பான்மையானவை அழிக்கப்பட்டுவிட்டன. மற்ற வாழும் இடங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு உதாரணமாக 70 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க காடுகளில் 4 லட்சம் சிங்கங்கள் மேல் இருந்தன. ஆனால் இன்றோ அவை வெறும் 30 ஆயிரத்திற்கும் குறைவாக சுருங்கிவிட்டது. நாம் இதில் இரண்டு தவறுகளை செய்கிறோம். ஒன்று, உயிரினங்கள் வாழும் இடங்களை அழிக்கின்றோம். அதன் மூலம் அவை வாழ்வதற்கு  ஏற்ற தட்ப வெப்ப நிலைகளை  அழித்து  அவை அந்த இடங்களில் இருந்து இடம் பெயர வேண்டிய நிலைக்குத்  தள்ளுகிறோம். இரண்டாவது அவை புதிய இடங்களை நோக்கிச் செல்லும் வழித்தடங்களை மறித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். அவை வாழும் இடங்களையும் அழிப்போம், அவை பிழைக்க தேடிப் போக நினைக்கும் இடங்களுக்கான வழியையும் அழிப்போம் என்ற குரூர வேலையை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து வருகிறோம்

இதற்கு முன்பு நடந்த ஐந்து பெரும் அழிவுகளின் போதும் பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறியது எப்படியோ அதேபோன்று ஒன்றை செயற்கையாக நாம் இப்பொழுது மிக வேகமாக உருவாக்கி வருகிறோம். பஹ்மியன் காலத்து சைபீரியன் எரப்ஷன்ஸ்(Siberian Eruptions)  எப்படி கிரீன்ஹவுஸ் கேஸ்களை(Greenhouse Gas) வளிமண்டலத்தில் விட்டதோ அதே போன்ற ஒன்றை செய்ற்கையாக இன்று செய்து கொண்டிருக்கிறோம். கடந்த நூறு ஆண்டுகளில் கரியமிலவாயுவின் அளவும், பூமியின் வெப்பமும் கூடிக்கொண்டே வந்துள்ளது. இது உலகம் முழுக்க உள்ள ஈகோ சிஸ்டம்களை பெரும் மாறுதலுக்கு உட்படுத்தியுள்ளது. ஒரு சின்ன ஒன்று அல்லது இரண்டு டிகிரி வெப்பம் ஏறுவதால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம்ஒரு உதாரணம் சொல்கிறேன். 2 டிகிரி வெப்பம் கூடுவதால் ஒரு காட்டில் அதன் குளிர் காலமே மாற்றமடைகிறதுஅந்த வெப்பமயம் சில சிறிய வண்டுகளின் இனப்பெருக்கத்திற்கு உதவியாய் இருக்கிறது.(குளிரில் அவை அழியக்கூடியது) அதனால்  மரங்களின் பட்டைகளுக்குள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து அந்த மரத்தையே உண்டு அதன் மூலம் பத்தே ஆண்டுகளில் அந்தக் காட்டையே அழிக்கிறதுஇது ஒரு சிறிய உதாரணம்தான். இதேபோல இந்த இரண்டு டிகிரி வெப்பக் கூடுதல் இன்னும் என்னவெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் இன்னும் 5- 6 டிகிரி வெப்பம் கூடும் என்று கணிக்கப்படுகிறது. இது சரியாக பஹ்மியன் காலத்து(Age of Great Dying என்று அழைக்கப்பட்டவெப்பமயமாதலை ஒத்து இருக்கிறது. கடந்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் மட்டுமே பல நூற்றுக்கணக்கான உயிரினங்கள் இந்த பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டன. இப்படி மண் மேலே நடக்கும் இந்த மாற்றங்களையாவது நாம் ஓரளவு கவனித்து வருகிறோம் ஆனால் கடலில் நடந்து வரும் அழிவுகள் இதைவிட அதிகம். காற்றில் எப்படி கார்பன் டையாக்ஸைடு வாயு வெப்பத்தை ஏற்படுத்துகிறதோ அதேபோல் கடல் நீரிலும் அவை கரைந்து பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. கடல்நீரை இது பெரிதும் அமிலத்தன்மை கொண்டதாக மாற்றுகிறதுஇது பல்வேறு கடல் சார்ந்த உயிரினங்களை அழித்து விடும். அதிக அமிலத்தன்மை பல கடல் உயிரினங்களுக்கு தன்னை தற்காத்துக்கொள்ளும் ஓடுகளை(Shells) உருவாக்கிக் கொள்ளும் தன்மையை இழக்க வைக்கிறதுஇன்று பசிபிக் கடலில் பல உயிரினங்களின் கருமுட்டைகள் சரியான வளர்ச்சி காணாமல் அழிகின்றவனவாம். 2070ஆம் ஆண்டுக்குள் கடலில் உள்ள பெரும்பான்மையான பவளப் பாறைகள்(Coral Reef) அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்இதனால் கடலில் உள்ள 25 சதவீதத்திற்கு அதிகமான மீன் வகைகள் முற்றிலும் அழிந்துவிடும். மனிதன் பயன்படுத்தும் மீன் வகைகளில் 10% மேல் இதில் அடக்கம்

மற்ற உயிரினங்கள் வாழும் இடங்களை அழிப்பது, வாழும் சூழ்நிலையை குலைப்பது, கரியமில வாயுவின் அளவை அதிகப்படுத்துவது, கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகப்படுத்துவது என இவற்றை செய்வதன் மூலம் மனிதர்கள் பூமியின் முந்தைய பேரழிவுகளில் எரிகல் செய்ததைவிட, எரிமலை செய்ததைவிட மோசமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. நாம் அறிந்துள்ள அந்த இரண்டு பெரும் அழிவுகளின் போது உயிரினங்கள் அழிந்த அந்த கால அளவையும் தற்போது அருகிவரும் உயிரினங்கள்(Endangered Species) என்று சொல்லக்கூடிய உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கும் கால அளவையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அதேபோன்ற ஒரு பேரழிவை நோக்கி நம் பூமி சென்று கொண்டிருப்பது குறித்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக ஒரு உயிரினம் உருவாகி,தழைத்து, வாழ்ந்து இறுதியில் அதன் அழிவின் வரையான கால அளவு என்னவோ அதைவிட 12 மடங்கு வேகமாக உயிரினங்கள் அழிவை நோக்கி செல்வதாக ஒரு விஞ்ஞான குறிப்பு தெரிவிக்கின்றது. தற்போது பாலூட்டி இனங்களில் 25 சதவீதத்திற்கு மேற்பட்ட உயிரினங்களும், கடல் வாழ் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்களும் அழிவின் விளிம்பில் உள்ளது.

அம்பிபியன்ஸ்(Amphibians) எனப்படும் நீர் நிலம் இரண்டிலும் வாழும் உயிரினங்கள் பெரும் அழிவை நோக்கி ஏற்கனவே சென்றுவிட்டன. தற்போது அழிந்து வரும் இந்த வேகத்தை வைத்து கணித்தால் சரியாக 200 வருடங்களில் இந்த பூமியில் உள்ள 75 சதவீதமான உயிரினங்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. நாம் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலைகளை இப்படியே தொடருவோமானால் ஆறாவது பெரும் அழிவு தவிர்க்க முடியாத ஒரு நிச்சயமாகிறது

சரி, நாம் என்னதான் செய்யமுடியும் என்று யோசித்துப் பார்த்தால் முடிந்த வரையில் தற்போது உள்ள இயற்கையை சார்ந்த விஷயங்களை அழிக்காமல் அப்படியே விட்டு வைப்பது மட்டுமே சாத்தியம்இதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்பேற்க வேண்டும். மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கு இந்த பூமி இல்லை என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களுக்குமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் தற்போது நின்றுகொண்டிருக்கும் இடத்தில் இருந்து நமக்கு இரண்டு சாய்ஸ் உள்ளது. ஒன்று, அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த உயிரினங்களைக் காத்து இந்த பூமியும் நம்மையும் காத்துக் கொள்ளும் வழியை தேர்ந்தெடுக்கலாம் அல்லது இந்த அழிவை வேடிக்கை பார்க்கும் சாட்சியங்களாக மாறலாம். முடிவு நம் கையில் உள்ளது

பாலூட்டிகளின் காலம் (Age of Mammals) எனப்படும் இந்த காலகட்டத்தில் பாலூட்டிகளில் அதீத அறிவையும், பரிணாம வளர்ச்சியையும் பெற்றுள்ள நாம் இந்த பூமியை முடிவுக்குக் கொண்டுவர, அதுவும் நம் கையாலேயே கொண்டுவர காரணமாக இருக்க வேண்டுமா என்று அனைவரும் சிந்திக்க வேண்டிய காலம் இது

4.6 பில்லியன் ஆண்டு வயதுடைய இந்த பூமியின் கால அளவை(டைம்லைனை) ஒரு வருட காலண்டராக மாற்றியமைத்தால்(365 நாட்கள் x 1440 நிமிடங்கள்)மனித இனம் வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே இந்த ஓராண்டு பூமியில் வாழ்ந்து வருகிறது. அதிலும் இந்த அழிவை நோக்கி இட்டுச் செல்லும் பேராசை கொண்ட சுயநல நாகரிக மனிதர்களின் காலம் ஒன்றிரண்டு விநாடிகள் மட்டுமே!!!

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button