![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/02/PicsArt_02-09-05.36.09-780x405.jpg)
சுவை நிறைந்த வீடு
———————————–
யாருமறியாமல்
நானும் நீயும்
முத்தமிட்டுக் கொண்ட
அந்தக்
கிராமத்து வீட்டிற்கு நான்
போக நேர்ந்தது
மாடியறைக்கெதற்குப் போகிறாய்
தூசும் தும்புமாய்க் கிடக்கிறது
என்று அரற்றினாள்
கயிற்றுக் கட்டிலில் சுருண்டு கிடந்த
அங்கம்மாள் கிழவி
முன்பு
கோடைப் பருவத்திலொரு
மாலைப் பொழுதில்
மொட்டை மாடியின் இளவெயிலை
உள்வாங்கிக் கொண்டு
சங்கரன் மாமாவின்
வேஷ்டி விரிப்பின் மேல்
உலர்த்தப்பட்டிருந்த
புளியம்பழங்களிலொன்றை
வெகுவாய் ரசித்துத்
தின்ற பின்னர்
நாம் பரிமாறிக் கொண்ட
இனிப்பும் புளிப்புமான
அந்த இதழ் முத்தம்
இன்னுமொரு முறை
ஒரேயொரு முறை
அரக்குப் பெட்டியின்
இழுப்பறையில் கிடக்கும் உன்
இளவயதுப் புகைப்படத்திலிருந்தேனும்
கிடைக்குமாவென்று
பார்ப்பதற்குப் போகிறேனென்பதை
கிழவிக்கு எங்ஙனம் சொல்வேன்…
*****
அவனெழுதிய இறுதிக் கவிதை
—————————————————–
அழித்து அழித்துப்
பிழைத் திருத்தம்
செய்யப்பட்டதென் வாழ்வு
எழுதியது நானல்ல
விதியின் விரல்களாக இருக்கலாம்.
என் முதுகை நிறைத்திருக்கும்
கன்றிச் சிவந்த
சாட்டை வரிகளை வரைந்தது
காலத்தின் கைகளாக இருக்கக்கூடும்.
இப்போது
அதுவல்ல விஷயம்.
நொதித்த திராட்சைகளைக் கொண்டு
நான் பிரத்யேகமாகத்
தயாரித்து வைத்திருக்கும்
இந்த மதுவைச் சுவைக்க வாருங்கள்.
உங்கள் காதலியரையும்
உடன் அழைத்து வரலாம்
நீங்கள் நடனமாட விரும்பினால்
மிகவும் நல்லது
என் எதிரில்
ஒருவரையொருவர்
தழுவிக் கொள்வதற்கு
கூச்சப் படாதிருங்கள்.
புகை மணங்கமழும்
மாயா லோகத்தில்
மிதந்திருக்கலாம் நாம்.
என்
தலை கொய்வதற்குக்
காவலாளி ஒருவன்
நீளமான வாளொன்றைக்
கூர் தீட்டுகிறான்
பக்கத்து அறையில்.
உரத்துப் பாடுங்கள்
அந்தக் கிரீச்சொலி
எனக்குக் கேட்காதபடி.
தயாராகி விட்டேன் நான்
மரண தேவதையை
முத்தமிடுவதற்கு.
அதற்கு முன்பாக
குதிகால் உயர்ந்த
காலணிகளை அணிந்திருக்கும்
கோதுமை நிற அழகியே
ஒயின் உலராத
உன் மென் இதழ்களால்
என்னை ஒருமுறை
ஆழ்ந்து முத்தமிட்டுப் போவாயாக.
*****
தோழி
————
தித்திப்பான நட்பொன்று
கிட்டியதெனக்கு.
மிக நெருங்கி
உறவாடினோம்
கை கோர்த்துத் திரிந்தோம்.
அமுதக் கலசம்
கிடைத்ததென்று
குதித்துக் கூத்தாடினோம்.
ஒரு குடம் அமிழ்தில்
துளி விஷம் விழுந்தது
ஓர் நாள்.
கலசத்தைப்
போட்டுடைத்தோம்
முகம் முறித்துப்
பிரிந்தோம்.
பிறகு ஒரு
கோடை காலமும்
ஒரு
வசந்த காலமும்
ஒரு பனிக்காலமும்
கடந்து போனது.
மழை நாள் மாலையொன்றில்
இளந்தூறல் பொழுதில்
மீண்டும் சந்தித்தேன் அவளை.
நண்பர்களுடன்
மழையில்
விளையாடிக்கொண்டிருந்தாள்.
ஒதுங்கி நின்று
பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனம்
கரைந்து கொண்டிருந்தது.
மெதுவாகத்
திரும்பி
என்னிடம்
“வாயேன்..
விளையாடலாம்”
என்றாள்.
“ஓ.. வருகிறேனே…”
என்றேன்.
மூன்றும் முத்துக்கள்!
“ஓ.. வருகிறேனே.. ” – இது வாழ்க்கையிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட வரி.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!