தொடர்கள்
Trending

காகங்கள் கரையும் நிலவெளி;8 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

The Queens Gambit – சமீபத்தில் பார்த்த சிறந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று. பெற்றோரை இழந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் எலிஸெபத் ஹார்மன் என்ற அசாதாரண செஸ் விளையாட்டு திறைமையுடைய பெண்ணின் பல பருவ வாழ்க்கை நிலைகளை காட்சிப்படுத்தியிருக்கும் தொடர் இது. படத்தின் கதையைச் சொல்வதை விட எனக்குப் பிடித்த காட்சிகளைப் பற்றி எழுத விரும்புகிறேன். ஆறு பகுதிகளாக நீளும் ஹார்மனின் வாழ்க்கை வெற்றி தோல்விகளுக்கு அப்பால் மனித வாழ்வு கொள்ளும் சாஸ்வதம் என்ன என்பதை நேர்மையுடன் விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது. வெறுமனே சதுரங்க விளையாட்டைப் பற்றியது மட்டும் அல்ல இந்தத் தொடர். மனித வாழ்வு கொள்ளும் மூர்க்கம், அதன் வறட்டு வஞ்சகம் குழந்தைமையை என்ன செய்கிறது என்பதை அநாயசமாக வெளிப்படுத்துகிறது. ஆதரவற்றோர் இல்லத்தின் நிலவறையில் வெளியுலகுக்கு அதிகம் தென்படாத தூய்மைப்பணியாளர் ஒருவரிடம் ஹார்மன் சதுரங்கம் கற்றுக்கொள்கிறாள். அவள் வளர வளர வில்லியம் ஷைபல் என்னும் பெயருடைய அந்த மூத்தவன் வெறும் சதுரங்க விளையாட்டை மட்டும் கற்றுத்தரவில்லை என்று புரிந்துகொள்கிறாள். அவளது இக்கட்டான சூழ்நிலைகளின்போதோ அல்லது முக்கியமான விளையாட்டுப் போட்டிகளின்போதோ அம்முதியவன் அவளது நினைவுக்கு வந்து போகிறான். அவனது சொற்கள் சதுரங்கக் கட்டங்களில் தனது அரச அரசிகளை பாதுகாக்க வேண்டி நகரும் சிப்பாய்கள் போல அவள் மனதில் எதிரொலிக்கின்றன. அந்த தூய்மைப் பணியாளனுக்கு லேசான கிறிஸ்துவின் சாயல் உண்டு அல்லது தாஸ்தாயேவ்ஸ்கியின் நிலவறை மனிதனின் சாயலும் உண்டு என்று சொல்லலாம்.

தன் முதல் மாதவிடாய் குருதியை கழிப்பறையில் துடைக்கும் எலிஸெபத் பெத் ஹார்மேனிடம் நாப்கினை கொடுக்கும் சக பெண் செஸ் விளையாட்டு வீராங்கனை நீ ஆடிக்கொண்டிருக்கும் போட்டியில் ‘அவனை’ வென்றுவிடு என்று சொல்கிறாள். ஒரு ஆணை பெண் விளையாட்டில் மட்டுமல்ல மற்ற எல்லா வாழ்க்கை சந்தர்ப்பங்களிலும் தோற்கடிக்கவே விரும்புகிறாள் என்றே தோன்றுகிறது. ஒரு பன்னெடுங்காலமாய் ஆண்களின் துணை பாத்திரங்களாய் வாழ்ந்து முடிந்துவிட்ட எல்லாப் பெண்களினுதுமான கூட்டு ஆழ்மன விருப்பம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இங்கே தமிழகத்தில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஜெயலலிதா தமிழக அரசியலில் நிலைகொண்டு முதல்வராக ஆன பொழுது அவருக்குக் கிட்டிய அமோக பெண் ஆதரவு நிலைப்பாட்டினை இந்தக் கதாபாத்திரத்தின் கருத்தியல்வழி என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழகத்தில்  ஜெயலலிதாவின் வெற்றி என்பது வெறுமனே அரசியல் வெற்றி மட்டும் அல்ல. காலங்காலமாய் சமூக வாழ்வில் துருத்திக் கொண்டிருக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிரான வெற்றி அது. அதுவே, அது மட்டுமே ஜெயலலிதாவின் இருபதாண்டுகால அரசியல் வெற்றியாய் நீண்டது என்பது வரலாறு.

இன்னோர் தருணத்தில் பெத் ஹார்மனை நேர்காணல் செய்யும் பெண் நீ ரொம்பவும் தனிமையில் இருக்கிறாய் என்று சொல்ல, ‘ஆம், அவ்வாறு தனிமையில் இருப்பது எனக்கு உகந்ததாக இருக்கிறது’ என்று பெத் ஹார்மன் சொல்கிறாள். யோசித்துப் பார்த்தால் ஆண்களிடம் போராடும் பெண்களை விட தீராத அகத்தனிமையிடம் போராடும் பெண்களே இவ்வுலகில் மிக அதிகம் இல்லையா?

தன் இளம் வயதில் தன்னுடன் அமெச்சூர் செஸ் போட்டியில் ஆடவந்த பெண்ணை பல வருடங்கள் சென்ற பின் பல்பொருள் அங்காடியில் பெத் ஹார்மன் சந்திக்கும் காட்சியை முக்கியமான ஒன்றாகக் குறிப்பிட விரும்புகிறேன். பெத் ஹார்மனுக்கு முதல் மாதவிடாயின் போது நாப்கின் தந்தவள் அந்தப் பெண். அவளுக்கு திருமணம் ஆகிவிட்டிருக்கிறது. தனது குழந்தையுடன்தான் அவள் அந்த அங்காடிக்கு வருகிறாள். அந்த சந்திப்பு பெண்கள் வாழ்வைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. ஒரு பெண் தன் திருமணத்துக்காக கொடுக்கும் விலை. அந்த ‘விலை’ – விலைமதிப்பற்றது என்று அந்தப் பெண்கள் அறியும்போது வாழ்க்கை அவர்களை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டிருக்கும். அந்த தூரம் பெருமூச்சுக்களால் கடந்துவிட இயலாது ஒன்றும்கூட. ஏனெனில் உலகெங்கும் உள்ள ஆணாதிக்க நடைமுறையின் தகர்க்க முடியாத பின்னல் அது. அந்தப் பின்னல் சிக்கலானது. ஆண் பெண் உறவின் நுட்பங்களாலும் பலம் மற்றும் பலவீனங்களாலும் பின்னப்பட்ட வலை அது.

மேலும் இந்தத் தொடர் முழுக்க இழையோடியிருக்கும் பெண்ணிய இழை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. ஆண்களின் உலகத்தில் தடுமாறும் பெண்களின் துயரம். ஆண் பார்வைகளின் ஆழ அகலங்கள் அறியாத பெண்கள் எதிர்கொள்ளும் தடுமாற்றம். எதிலும் பட்டும் படாமல் அந்த ஆழத்தை கடக்க முயற்சிக்கும் பெண்களே வெற்றிக்கு அருகில் செல்கிறார்கள். அந்த சதவீதம் பெண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. படம் சொல்லாமல் சொல்லும் சேதியில் இதுவும் ஒன்று. எந்த குடும்பம் சார்ந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நிலைதான் பெத் ஹார்மனை சதுரங்க போட்டிகளின் அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறது என்று சொல்லவேண்டும். இல்லையென்றால் அவளும் அந்த பல்பொருள் அங்காடியில் சந்தித்த பெண்ணைப்போல கையில் ஒரு குழந்தையுடன் நமக்கு வாய்த்தது இதுதான் என்று திருப்திபட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

அந்தக் காட்சியின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால் நாம் விரும்பும் ஒன்றை அடைய, நேசிப்புக்கு அப்பால் ஒன்று தேவைப்படுகிறது. கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும், தன்னை தன் சுயத்தை நாம் அடைய விரும்பும் அந்த ஒன்றில் நாம் முழு முற்றாக கரைத்து நாமே அதுவாக ஆகவேண்டியிருக்கிறது. அந்த செய்கைக்கு நான் ‘வெற்றி’ என்று ஒரு சாதாரண சொல்லை அளிக்க விரும்பவில்லை. அதுவே நம் வாழ்வின் பொருள். நாம் அடைய விரும்பும் ஆன்மா. பெத் ஹார்மனுக்கு அந்த நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அவளது சகலமும் சதுரங்க விளையாட்டாக இருக்கிறது. விளையாட்டுதான் என்றாலும் நாம் அடைய விரும்புவதை விளையாட்டாக அடைந்துவிட முடியாது என்பதுதான் பெத் ஹார்மன் கதாபாத்திரம் நமக்கு சொல்லும் வாழ்க்கைப் பாடம். இது எல்லா விளையாட்டுக்கும், மனித வாழ்வுக்கும் கூட பொருந்தக்கூடியது.

படத்தில் பெத் ஹார்மனின் சதுரங்க திறமைக்கு இணையாக ஒன்றைச் சொல்லவேண்டும். உரையாடல்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டியிருக்கும் விதம். படங்களில் உரையாடல்கள் பெரும்பாலும் தன்னை அறிவித்தல், தன்நிலை அறிவித்தல் என்ற நிலையிலேயே இருக்கும். ஆனால் இந்தத்தொடரில் கதாபாத்திரங்கள் தன்நிலை மனவோட்டத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில் ஒருவித உளவியல் கண்ணோட்டத்தையும் சேர்த்தே வெளிப்படுத்தும் பல காட்சிகள் உண்டு. ‘நீ சதுரங்கம்  விளையாடுவாயா?’ என்ற கேள்விக்கு ‘நான் விளையாட மாட்டேன். காரணம் அது அதிகப்பட்ச மூளை உழைப்பை கோருகிறது’ என்கிறது ஒரு கதாபாத்திரம். போகிற போக்கில் பெத் ஹார்மனுக்கும் அதிகம் அறிமுகம் இல்லாத ஒருவனுக்கும் இடையே நிகழும் உரையாடல் அது. அவன் மேலும் தொடரும் உரையாடலில் சொல்வான் ‘ சதுரங்க விளையாட்டு உன்னை முதலாளித்துவத்தின் அடிமையாக்கிவிடும்’. பெத் ஹார்மனின் அம்மா தன் மகளுடனான ஒரு உரையாடலில் சொல்வாள் ‘Intuition Can’t be found in books’. ‘உள்ளுணர்வை புத்தகத்தில் கண்டடைய முடியாது’ என்பது இதன் உத்தேச தமிழாக்கம்.

இன்னொரு காட்சியில் தன்னை விட வயது குறைந்த சிறுவனுடன் சதுரங்கம் விளையாடும் பெத் ஹார்மன் கடும் போட்டியை சந்திக்கிறாள். அடுத்தநாள் ஆட்டத்தை தொடரும் அவன் [G.Girev], ஆட்டம் முடிந்தபிறகு ‘நான் பதினாறு வயதில் செஸ் சாம்பியன் ஆகிவிடுவேன்’ என்கிறான். சரி, ‘பதினாறு வயதில் சதுரங்க சாம்பியன் ஆகிவிட்ட பிறகு என்ன செய்வாய்?’ என்று ஹார்மன் பதிலுக்கு கேட்கிறாள். அந்தக் கேள்வி அவனுக்கு புரியவில்லை. அவன் அதே பதிலியேயே அல்லது தன்னுடைய சாம்பியன் கனவிலியேயே நின்று கொண்டிருக்கிறான். அவனால் அந்தக் கனவைத் தாண்டி யோசிக்க முடியாது. ‘பதினாறு வயதில் உலக சாம்பியன் ஆகிவிட்ட பிறகு அதன் பிறகான வாழ்க்கையில் நீ என்ன செய்வாய்?’ என்று ஹார்மன் மீண்டும் கேட்கிறாள். கேள்வி எனக்குப் புரியவில்லை என்று அவன் பதில் சொல்ல, ‘இதுவரை என்னை எதிர்த்து விளையாடியவர்களில் நீதான் சிறந்தவன்’ சென்று சொல்லிவிட்டு அவள் வெளியேறுகிறாள். வெற்றி என்னும் மிக உயர்ந்த சிகரத்துக்கு அப்பால் விரியும் பள்ளத்தாக்குகளின் வெறுமையும் தனிமையையும் பெத் ஹார்மனைவிட வேறு யார் அறிவார்? அந்தக் கேள்வி சாதாரணமான ஒன்றில்லை. நம் நடப்பு சமூகத்தில் குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடாமல் படி படி என்று நச்சரிக்கும் பெற்றோர்களை பார்த்து எழுப்பப்பட்ட கேள்வியாகவே நான் அதை பார்க்கிறேன்.

படத்தில் எலிஸெபத் ஹார்மன் கதாபாத்திம் கற்பனை என்று சொல்லப்படுகிறது ஆனால் அவரது கதாபாத்திரத்துக்கு அனடோலி கார்போவ், போரிஸ் பாஸ்கி, ராபர்ட் பிஷர் என பல்வேறு செஸ் சாம்பியன்கள் முன்னுதாரணம் என்று நாவலாசிரியர் வால்டர் டேவிஸ் சொன்னாலும் அதிகம் பொருந்திப்போவது என்னவோ பாபி பிஷர் என்னும் அமெரிக்க செஸ் சாம்பியன்தான். பாபி பிஷர் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மாகாணத்தில் ஒரு சாதாரண யூத குடும்பத்தில் பிறந்து மிக இளம் வயதிலேயே சதுரங்க சாம்பியன் ஆனவர். அவர் ஒரு இளம்வயது மேதை. பதினைந்து வயது பூர்த்தியாகும் முன்னரே அமெரிக்க சதுரங்க சாம்பியன் பட்டத்தை பாபி பிஷர் வென்றார். உலக சதுரங்க சாம்பியன் போட்டிகளில் கலந்துகொள்ளும் போது பாபி பிஷர் 16 வயதைக்கூட எட்டியிருக்கவில்லை. படத்தில் பெத் ஹார்மன் மிதமிஞ்சிய மாத்திரைகளால் வீழ்ச்சியை சந்திக்கிறார். ஆனால் நிஜ வாழ்வில் பாபி பிஷர் மனநலப் பிரச்சினைகளால் வீழ்ச்சியை சந்திக்கிறார்.

‘சதுரங்க விளையாட்டு என்பது ஒருவகையில் அறிவார்ந்த சுயமைதுனம்’ என்று அறிவித்த பாபி பிஷர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் ஒரு சாதாரண புலம்பெயர்ந்த யூத குடும்பத்தில் பிறந்தவர். பாபி பிஷரின் அம்மா ரெஜினா பிஷர் ஒரு யூதர். ஆறு மொழிகள் கற்றவர். மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பாபி பிஷரின் பிறப்பில் அவருடைய உண்மையான அப்பா யார் என்ற அடையாளச் சிக்கல் உண்டு.  தனது ஆறுவயதில் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார் பாபி பிஷர். பதிமூன்று வயதில் அமெரிக்காவின் இளைய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். பதினான்கு வயதில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார். எட்டு முறை அவர் அமெரிக்காவின் தேசிய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். பதினைந்து வயதில் அவர் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருந்தார்.

தனது பதினாறு வயதில் சதுரங்கப் போட்டிகளில் கவனம் செலுத்தும் நோக்கில் பாபி பள்ளிப்படிப்பைத் துறந்தார். சதுரங்கத்தைத் தவிர மற்றெதுவும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. இந்த மற்றெதுவுமில் அன்றைய உலக வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் அடக்கம். 1958 ஆண்டு பாபி பிஷரின் அம்மா தனது மகன் சதுரங்க போட்டிகளில் விளையாட அழைக்கக் குறிப்பிட்டு ரஷ்யாவின் அப்போதைய பிரதமர் நிகித் குருஷேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். [பாபி பிஷரின் அம்மா ரெஜினா பிஷர் ரஷ்யாவில் சில ஆண்டுகள் வசித்தவர். இதனால் அமெரிக்கா அவரை கம்யூனிஸ்ட்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகத்தின் பேரில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தது.]  ஆனால் அதற்கடுத்த வருடம்தான் பாபி பிஷரால் ரஷ்யா செல்ல முடிந்தது. இளம் ரஷ்ய சதுரங்க ஆட்டக்காரர்களை வென்ற அவர் தன் வயது கிராண்ட் மாஸ்டர்களை தோற்கடித்ததை விட வயதில், அனுபவத்தில் மூத்த ரஷ்ய ஆட்டக்காரர்களை போட்டியில் எதிர்கொள்ள விரும்பினார். ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் மிகைல் போட்வின்க்-கை எதிர்த்து விளையாட விரும்பினார். ஆனால் பாபி பிஷரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் ரஷ்யர்களை பன்றிகள் எண்டு குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். அவரது போக்கினால் விசா நீட்டிக்கப்படவில்லை. அமெரிக்க திரும்பினார். சர்வதேச கிரான்ட் மாஸ்டர் டொனால்ட் பைர்ன்-னுக்கு எதிரான போட்டியே பாபி பிஷரின் அசாத்திய வருகையை சதுரங்க உலகுக்கு அறிவித்தது. அந்தப் போட்டி சதுரங்க போட்டிகளில் மிகச்சிறந்த ஒன்றாக இன்றளவும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

தனது இருபத்தொன்பதாவது வயதில் ஐஸ்லாந்தில் நடந்த போட்டியில் போரிஸ் ஸ்பாஸ்கியை வென்றார் பாபி பிஷர் 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப்போட்டியே பாபியின் கடைசி ஆட்டம். இந்த வெற்றியின் மூலம் 35 ஆண்டுகால ரஷ்யாவின் சதுரங்க ஆட்டத்தின் மேலாதிக்கத்தை அவர் தகர்த்தார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் உச்சத்தில் 1970களின் இருந்த காலகட்டத்தில் பிஷரின் இந்த வெற்றி அமெரிக்கர்களின் கதாநாயகனாக பாபி பிஷரை முன்னிறுத்தியது எனது மிகை அல்ல. அப்போதைய ரஷ்ய நடப்பு சாம்பியனான போரிஸ் ஸ்பாஸ்க்கி-க்கு எதிரான வெற்றி ஒரு சதுரங்க போட்டியின் வெற்றியாக அல்லாமல் அமெரிக்காவின் தேசிய பெருமிதமாக பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் போட்டிக்குப்பிறகு அவர் நிரந்தரமாக சதுரங்க ஆட்டத்திலிருந்து விலகினார். போட்டி முடிந்ததும் பாபி அமெரிக்கா திரும்பினார். ரஷ்யர்க்கு எதிரான அவரது வெற்றியை பிரதானமாக கொண்டாட அமெரிக்க தீர்மானிதித்திருந்தது. ஆனால் பாபி பிஷர் நாடு திரும்பிய பின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. எந்த பாராட்டு விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. தன்னைக் காணவந்த பார்வையாளர்களையோ அல்லது ஸ்பான்சர்களையோ சந்திக்கவில்லை. தனிமையில் தன்னை பூட்டிக்கொண்டார். அவரது புதிரான செயல்பாட்டுக்கு மிகச் சரியானதோர் உதாரணம் இது.

தனிமையை எதிர்கொள்ள  முடியாமை, சித்தப்பிரமை, மிதமிஞ்சிய கோபம், சக மனிதர் மீதான நம்பிக்கையின்மை எனத் தீவிர உளச்சிக்கல்களை ஒருங்கே கொண்டிருந்த சதுரங்க மேதை பாபி பிஷர். அவரது இளம் வயதில் பாபியின் அம்மா வேலைக்குச் சென்று குடும்பப் பொறுப்புகளை சமாளித்தார். ஆறுவருடங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை வீடு மாறும் அளவுக்கு குடும்பம் பொருளாதார சிக்கல்களால் நிலைகுலைந்து போயிருந்தது. இந்த தொடர்ச்சியான இடப்பெயர்வு ஆறுவயது குழந்தையான பாபிக்கு மனதளவில் கடும் சோர்வைக் கொண்டுவந்தது. அம்மா வேலைக்குப் போய்விட மிகச் சிறிய வயதில் தனிமை பாபி பிஷரின் தினசரி பழக்கமாயிற்று. ‘தன்னுடைய அம்மாவை நேருக்கு நேர் சரியாகப் பார்த்ததில்லை’ என்று பாபி பிஷர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இளம் வயது தனிமை அவரை சதுரங்க விளையாட்டை நோக்கி ஈர்த்தது. அவர் சித்தம் முழுதும் சதுரங்க ஆட்டத்தால் நிரம்பியிருந்தது. பாபி பிஷரின் இளம்வயது தனிமைக் காலங்களே அவருடைய பிற்கால உளவியல் சிக்கல்களுக்கு காரணப் புள்ளியானது. தனிப்பட்ட அளவில் மிக நல்ல மனிதரான பாபி, ஒரு சமுக மனிதராக சக மனிதர்களை சரியாக கையாளத் தெரியாதவர். அதனாலேயே கடும் எதிர்ப்புகளையும் கசப்புகளையும் எதிர்கொண்டவர். யூதர்களை கடுமையாக தன் வாழ்நாளில் வெறுத்தவர். நேர்காணல் ஒன்றில் நீங்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எது என்ற கேள்விக்கு பாபி பிஷர் அளித்த பதில் ஹிட்லரின் சுயசரிதை புத்தகமான Mein Kampf-ஐச் சொன்னார். யூத வெறுப்பும் அமெரிக்க வெறுப்பும் அவரது இரண்டு கண்கள்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பாபி பிஷர் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது ரேடியோ ஒன்றுக்கு நேர்காணலில் ”அமெரிக்கா தாக்கப்பட்டது என்பது சிறப்பான செய்திதான். பல தசாப்தங்களாக அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீனத்தில் செய்துவந்த அரக்கத்தனமான கொடுமைகளுக்கு, உயிர்பலிகளுக்கு இந்த விலை மிகச் சாதாரணமானதுதான். அவர்கள் செய்த தீமைகள் இப்போது அவர்களை திருப்பித் தாக்கியுள்ளது, அவ்வளவுதான். அமெரிக்காவின் ஏகபோக அதிகாரம் வீழ்த்தப்படுவதை நான் மேலதிகம் விரும்புகிறேன்.” என்று கூறினார். அதோடு நிறுத்தவில்லை, ”வெள்ளை அமெரிக்கர்கள் ஐரோப்பாவுக்கு திரும்பிப் போக வேண்டும். கறுப்பினத்தவர்கள் ஆப்ரிக்காவுக்கு திரும்பப் போகவேண்டும். அமெரிக்காவை அதன் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களுக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் முழங்கினார்.எவ்வளவு வெளிப்படையானதோர் அரசியல் முழக்கம் இது!  இந்தக் கூற்றுக்குப் பின்னால் அமெரிக்காவின் மிகச் சிறந்த சதுரங்க ஆட்டக்காரனான பாபி பிஷருக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்குமான பகை அல்லது சரியில்லாமல் போன உறவு ஒன்று இருக்கிறது.

அமெரிக்கப் பொருளாதார சட்டங்களை மதிக்கவில்லை என்று கூறி அமெரிக்கா அவரைக் கைது செய்ய ஆயத்தமாயிருந்தது. அதனால் அவர் கடைசிவரை அமெரிக்கா திரும்பவில்லை அல்லது அமெரிக்காவுக்கு வெளியே வாழ அரசால் அவர் நிர்பந்திக்கப்பட்டார். பாபியின் அம்மாவும் சகோதரியும் இறந்தபோதுகூட இறுதிச் சடங்கில் அவர் கலந்துகொள்ளவில்லை. ஹங்கேரி, ஜப்பான், பிலிப்பைன்ஸ் என வெவேறு நாடுகளில் அவர் வாழ்ந்தார். இறப்புக்கு சில ஆண்டுகள் முன் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்றார். 2008ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறால் இறந்தார்.

சதுரங்க விளையாட்டில் எளிதில் நம்பிவிட முடியாத வெற்றிகளும் துக்ககரமான வீழ்ச்சிகளையும் ஒரு சேர அடைந்தவர் பாபி பிஷர். பாபி பிஷர் சதுரங்க விளையாட்டில் எப்போதும் எளிமையான நகர்வை ஆடக் கூடியவர் அல்லர். அவரை கடவுளுடன் சதுரங்கம் விளையாடியவர் என்று சொல்லலாம். அவரது ஒவ்வொரு நகர்வும் சதுரங்க விளையாட்டில் கட்டங்களுக்கு இடையில் ஒளிந்திருக்கும் உண்மையைத் தேடுவதாக இருந்தது. அது வாழ்வு சார்ந்த உண்மை குறித்தான தேடலும் கூட. அதனால் அவரை கடவுளுடன் சதுரங்கம் விளையாடுபவர் என்று குறிப்பிட்டேன். அதனால்தானோ என்னமோ அதிகமும் அலைக்கழிக்கப்பட்ட ஆன்மாவாக அவர் வாழ்ந்து மறைந்தார்.

உதவிய புத்தகங்கள்:
1. A PSYCHOBIOGRAPHY OF BOBBY FISCHER – JOSEPH G. PONTEROTTO

  1. Endgame: Bobby Fischer’s Remarkable Rise and Fall – Frank Brady

***

“In the future, everybody will be world famous for fifteen minutes.” – Andy Warhol.

மனிதர்கள் அடையும் 15 நிமிட புகழ் பற்றி சுஜாதா கற்றதும் பெற்றதும் தொடரில் எழுதியிருக்கிறார். எல்லா மனிதர்களும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் 15 நிமிட புகழைப் பெற்றுவிடுகிறார்கள். அல்லது இப்படியும் சொல்லிப் பார்க்கலாம். மனிதர்களின் அடையும் புகழின் ஆயுள் அற்பமான 15 நிமிடங்கள்தான். இந்த புகழ்பெற்ற 15 நிமிட புகழ் மேற்கோளை சொன்னவர் ‘ஹாண்டி வெர்ஹோல்’. அமெரிக்காவின் மிகச்சிறந்த வெகுமக்கள் கலைஞர்களில் ஒருவர். ஓவியம், சிற்பம், புகைப்படக்கலை, சினிமா என பல்வேறு கலை வடிவங்களில் இயங்கி மிகப்பெரிய கலை வெற்றியை அடைந்தவர். அவரது கலை முயற்சிகள் பெரும்பாலும் பரிசோதனை வகையைச் சார்ந்தவை. வெவ்வேறு கலை வடிவங்களில் அவர் செய்து பார்த்த பரிசோதனை முயற்சிகள் அவரை இருபதாம் நூற்றாண்டு அமெரிக்காவின் முக்கியமான கலைஞராக முன்னிறுத்தியது.

வெளிறிய முகம் கொண்ட நோஞ்சானாக இருந்த ஹாண்டி வெர்ஹோல் பள்ளிப்படிப்பை தட்டுத்தடுமாறி முடித்தார். சிறு வயதில் தசை வலிப்பு நோயால் பீடிக்கப்பட்டவர். [அது அவரது தோற்றத்தில் வெளிப்படையாகவே பிரதிபலித்தது.] அந்த நோயின் கொடுமையிலிருந்து தன் மகனை வெளிக்கொண்டுவர அவரது அம்மா ஓவியத்தில் கவனம் கொள்ளச் செய்தார். அதுவே பின்னாளில் அவரது வாழ்க்கையாக மாறியது. கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் அவர் வடிவமைப்பு கலையை பயின்றார். தொழில்துறை வடிவமைப்பில் தனது பணியைத் தொடங்கிய வார்ஹோல் வெகு சீக்கிரத்தில் அந்தத்துறையில் பிரபலமானார். பின்னர் வேலை செய்த விளம்பர நிறுவனங்களில் அவருடைய வடிவமைப்பு அவருக்கு ஒரு முன்மாதிரியான பெயரை பெற்றுத்தந்தது.

ஹாண்டி வெர்ஹோல் தன் கலை வாழ்வை ஒரு தீவிர பொஹீமியனாக வாழ்ந்தவர். தனித்த வாழ்க்கைப் பார்வை உடைய, மந்தை சிந்தனை இல்லாத, வாழ்க்கையை தத்துவ நோக்குடன் வாழத்துணியும் கலைஞர்களே பொஹீமியன் என்று அழைக்கப்பட்டார்கள். திருமணத்தில் நம்பிக்கை இல்லாத ஆண்டி வார்ஹோல் சுயபால் விருப்பமுடையவர். 1969ஆம் ஆண்டு அவர் ஆரம்பித்த Interview இதழ் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க பத்திரிகைகளில் ஒன்று. சிக்கல் இல்லாத ஆனால் தத்துவார்த்த செறிவுள்ள கேள்விகள், எளிமையான பதில்கள் என அந்த இதழில் வெளிவந்த நேர்காணல்கள் குறிப்பிடத்தக்கவை. அமெரிக்க எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் ட்ரூமன் கபோவுடன் அவர் நடத்திய உரையாடல்கள் கிட்டத்தட்ட 80 மணி நேரம் நீளக்கூடியவை. அந்த உரையாடல்களை அடிப்படையாக வைத்து பிராட்வே நாடகம் ஒன்றை இயக்குனர் ராப் ராத் இயக்கியுள்ளார். ஹாண்டி வெர்ஹோல் நியுயார்க்குக்கு 1949ஆம் ஆண்டு வரும்போதே ட்ரூமன் கபோ புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். அவருடைய நட்பை அடைய விரும்பி நிறைய கடிதங்களை நியுயார்க்குக்கு குடிபெயர்ந்த புதிதில் ட்ரூமன் கபோவுக்கு வெர்ஹோல் எழுதியுள்ளார். கபோவின் கதைகளை மையமிட்டு அவர் வரைந்த ஓவியத்தொடருக்கு Fifteen Drawings Based on the Writings of Truman Capote என்று பெயரிடும் அளவுக்கு அவர் ட்ரூமன் கபோவின் வாசகனாக இருந்தார்.

ஹாண்டி வெர்ஹோல் தன் அம்மாவின் மீது மிகுந்த பாசமும் பற்றும் உடையவர். அவர் அம்மா இறந்துவிட்ட பின்னும் நண்பர்கள் அவரது அம்மாவைப் பற்றி விசாரித்தால் அவர் நலமாக இருக்கிறார் என்றே பதில் சொல்வார். ஆண்டி வார்ஹோல் அதிகம் மற்றவர்களுடன் பேசமாட்டார், ஆனால் அவரது ஸ்டுடியோவுக்கு வருபவர்களை பேசவைத்துக் கேட்டுக் கொண்டிருப்பார். அது அவருக்கு மிகப்பிடித்தமானதொரு செயல். அவருக்கு மிகப் பிடித்தமான இன்னொரு செயல் புகைப்படம் எடுப்பது. அவர் எப்போதும் காமிராவை தயாராக வைத்துக்கொண்டிருப்பார். காமிரா அவரது மூன்றாவது கண் போல விழித்துக் கிடந்தது. ஒருவகையில் தற்போது நினைத்தவுடன் தற்படம் எடுத்துக்கொள்ளும் போக்குக்கு முன்னோடி என்று ஹாண்டி வெர்ஹோல்-லை நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்த அளவுக்கு அவர் புகைப்படங்களின் காதலர் அவர். அமெரிக்காவையும் அதன் மக்களையும் அன்றாட நிகழ்வுகளையும் ஹாண்டி வெர்ஹோல் கூர்ந்து கவனிப்பவராக இருந்தார். தனது கலைக்கான கச்சாப்பொருட்களை அன்றாடங்களின் வெகுஜன பயன்பாட்டில் இருந்தே, நிகழ்வுகளிலிருந்தே அவர் கண்டடைந்தார். அதன் நீட்சியாகத்தான் வெகுமக்கள் கலை அமைப்பை [Pop Art MOVEMENT] அவர் 1969ஆம் ஆண்டு தொடங்கினார்.

வெர்ஹோல் அப்போதைய ஹாலிவுட் புகழ்பெற்ற நடிகை மார்லின் மன்றோ மற்றும் சீன கம்யூனிஸத் தலைவர் மாவோ ஆகிய இருவரையும் ஓவியத்தொடர்களாக காட்சிப்படுத்தியுள்ளார். பயனுக்குப் பின்பான வீசியெறியப்படும் பொருட்களை தனது பிரதான கருப்பொருளாகக் கொண்டார். பொருட்களின் மறுசுழற்சி பற்றிய ஓர் அங்கத உணர்வையும் விழிப்புணர்ச்சியையும் அவர் தனது ஓவியங்களில் பிரதானமாகக் கையாண்டார். பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்பட்ட பொருட்களை வைத்து அவர் உருவாக்கிய கலை வடிவ முன்மாதிரிகள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. அப்படி உருவாக்கிய எல்லா கலை வடிவங்களிலும் அவருடைய முத்திரை இருக்கும். விளம்பர அச்சுப் பதாகைகள் வடிவமைப்பில் அவர் குறிப்பிடத்தக்க முன்னோடி. அமெரிக்க வெகுஜன, தேவைக்கு அதிகமாகவே பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனோநிலையை, தனது கலைவெளிப்பாடுகளில் பதிவு செய்தவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற பல முக்கிய பிரபலங்களுடன் தொடர்ச்சியாக இயங்கியவர்.

‘கலை’ என்பது அவருக்கு ஒரு ஆன்மிக முன்மாதிரி. கலைதான் அவருடைய உள்மன காயங்களுக்கு மருந்தாக இருந்தது. 15 நிமிட புகழைப்பற்றி ஹாண்டி வெர்ஹோல் பேசியிருந்தாலும் அவர் தனது கலை பெறுமதியால் அடைந்த புகழ் என்பது 15 நிமிடங்களுக்கு சுருங்கிப் போய்விடுகிற ஒன்று அல்ல. நூறாண்டுகள் தாண்டியும் நிலைத்திருக்கும் புகழ் அது.

தொடரும்…      

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. ..இன்னோர் தருணத்தில் பெத் ஹார்மனை நேர்காணல் செய்யும் பெண் நீ ரொம்பவும் தனிமையில் இருக்கிறாய் என்று சொல்ல, ‘ஆம், அவ்வாறு தனிமையில் இருப்பது எனக்கு உகந்ததாக இருக்கிறது’ என்று பெத் ஹார்மன் சொல்கிறாள். யோசித்துப் பார்த்தால் ஆண்களிடம் போராடும் பெண்களை விட தீராத அகத்தனிமையிடம் போராடும் பெண்களே இவ்வுலகில் மிக அதிகம் இல்லையா?..

    நிச்சயமாக பெண்களின் அகத்தனிமை என்பது மிகவும் விசாலமானது தான். மனதின் சுழற்சியில் அதன் பேரொளியை அனுபவித்த ஆளுமைகள் குறித்த சிறப்பான பதிவு. கட்டுரைக்கான மொழியில் கூடி வந்திருக்கும் கச்சிதத்தன்மையும் அடர்த்தியும் மிகவும் நுட்பமாக அமைந்திருக்கின்றன.. வாழ்த்துக்கள் நண்பா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button