
பயனாளர் எந்த ஒரு பொருளைப் பயன்படுத்த தொடங்கும் போதும் சிறிதும் யோசிக்க கூடாது. எப்படி பயன்படுத்துவது என தயங்கக்கூடாது. அதற்கு ஏற்கனவே பலமுறை பயன்படுத்தியது போன்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். பழக்கப்பட்ட நண்பனிடம் பேசுவது போல இருக்க வேண்டும்.
இதை கீழே சொல்லப்பட்ட மூன்று விஷயங்களைக் கொண்டு சுலபமாக உருவாக்கலாம்
- ஏற்கனவே இருக்கும் விதிகளை அப்படியே பின்பற்றுவது (Convention)
- ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருப்பது (Consistency)
- நிஜ வாழ்க்கையோடு ஒத்துப்போகுமாறு வடிவமைப்பது (Match real world)
உதாரணத்திற்கு ஒரு பைக் எப்படி தயாரிக்கப்பட வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. கியர் எங்கு இருக்க வேண்டும், ஆக்ஸிலரேட்டர் எங்கு இருக்க வேண்டும், பிரேக் எங்கு இருக்க வேண்டும் என எப்போதோ வடிவமைக்கப்பட்டது, இப்போது வரைக்கும் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதை பைக் கம்பெனிகள் நினைத்தாலும் மாற்ற முடியாது. ஏனெனில் அப்படித்தான் பைக் ஓட்ட நாம் பழகி இருக்கிறோம். இதுதான் ஏற்கனவே இருப்பவற்றை அப்படியே பயன்படுத்தும் மரபு. புதிதாக ஒன்றை உருவாக்குகிறேன் என்று பைக் கம்பெனிகள் காலில் ஆக்சிலரேட்டரை வைத்தால் என்ன ஆகும்?
நாம் நம் நாட்டில் இடது புறம் வாகனம் ஓட்டி செல்பவர்கள். சில நாடுகளில் வலதுபுறம் செல்வார்கள். திடீரென்று இனிமேல் அமெரிக்கர்களைப் போல பின்பற்றுவோம் என்று நம்மை வலது பக்கம் ஓட்ட வேண்டும் என்று கூறினால் எப்படி இருக்கும். மிகப் பெரும் குழப்பங்கள் ஏற்படும். வாகனங்களின் அமைப்பில் கம்பெனிகள் மாற்றங்கள் செய்ய வேண்டும். பழைய வாகனங்களை ஓட்டக்கூடாது என்ற சட்டம் கொண்டுவர வேண்டி இருக்கும். சாலையில் உள்ள குறியீடுகள் எல்லாம் மாற்றவேண்டி இருக்கும். (ஸ்வீடன் நாட்டில் உண்மையில் இது நடந்தது. மாற்றம் கொண்டுவரப்பட்ட நாளில் மட்டும் 150 விபத்துகள் நடந்தன) இதற்குத்தான், எதற்கு வம்பு? என சில பழக்கங்களில் டிசைனர்கள் கை வைப்பதில்லை. அவற்றை மாற்ற முயற்சிப்பதில்லை.
நாம் கூட இது போன்ற ஒன்றை அனுபவித்திருக்கிறோம். பணமதிப்பிழப்பு! புதிதாக அச்சடிக்கப்பட்ட பணத்தின் அளவு நமக்கு பழக கஷ்டமாக இருந்தது. பணத்தில் உபயோகப்படும் நிறங்கள் நமக்கு குழப்பத்தைக் கொடுத்தன. இன்றும் புதிய 500 ரூபாய்க்கும் பழைய 100 ரூபாய்க்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. 200 ரூபாய் என்று ஒன்று இருப்பதே என் புத்திக்கு ஏற மாட்டேன் என்கிறது. கண் பார்வையற்றவர்கள் தொட்டுப் பார்த்து பணத்தின் மதிப்பை கண்டு கொள்பவர்கள். அவர்கள் தான் நம்மை விட பாவம். அவர்கள் புதிய மற்றும் பழைய தாள்களில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடியாமல் குழப்பம் அடைவதை நான் பார்த்திருக்கிறேன்.
அடுத்ததாக, ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருப்பது.
உதாரணத்திற்கு, நீங்கள் பேஸ்புக்கை கம்ப்யூட்டரில் பயன்படுத்தினாலும், மொபைல் போனில் பயன்படுத்தினாலும் உங்களுக்கு சிறிதும் குழப்பம் ஏற்படுவதில்லை. மாற்றி மாற்றி எளிதாக பயன்படுத்த முடியும். ஏனெனில் இரண்டிலும் ஒரே மாதிரியான டிசைனை அது கொண்டுள்ளது. எங்கே நியூஸ் படிக்க வேண்டும், எங்கே சென்று போட்டோ பதிவேற்றம் செய்ய வேண்டும், எப்படி ஷேர் செய்ய வேண்டும் என எல்லாமே அப்படியே இரண்டிலும் ஒன்று போலவே இருக்கும். இதனால் உங்களுக்கு இவற்றை தனித்தனியாக கற்க வேண்டிய வேலை மிச்சம்.
மற்றுமொரு உதாரணம், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் ஒரு வங்கியை எடுத்துக்கொள்ளுங்கள். வங்கியின் வாசலில் இருக்கும் பெயர் பலகை, எங்கே பணம் கட்ட வேண்டும், எங்கே மேனேஜர் இருக்கின்றார் என்று காட்டும் வழிகாட்டிப் பலகைகள், ஏடிஎம் மிஷின் திரை, வலைதளம், மொபைல் ஆப், பாஸ் புக், ஏடிஎம் கார்டு என அனைத்தும் ஒரே நிறத்தில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். எனவே பயனாளர் இந்த நிறத்தை பார்க்கும் போது இது தான் நமது வங்கி என எளிதாக அடையாளம் காண முடியும். இது consistency க்கு சிறந்த உதாரணம்.
இறுதியாக, நிஜ உலகில் ஒரு விஷயத்தை எப்படி பயன்படுத்துகிறோம் அப்படியே ஒரு சாதனம் அல்லது திரையிலும் பயன்படுத்துதல். நீங்கள் பார்க்கும் இந்த ஒரு மொபைல் ஆப் இலும் ஒரு படத்தையோ அல்லது மெசேஜையோ அழிக்க குப்பைத்தொட்டி ஐகான் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நிஜ வாழ்வில் ஒரு விஷயம் நமக்கு வேண்டாம் என்றால் அதைக் குப்பைத் தொட்டியில் வீசி விடுவோம். அந்த ஐடியாவை தான் இங்கேயும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் பயனாளர்களுக்கு எதையும் கற்பிக்கத் தேவையில்லை. பார்த்த உடனே அவர்களாகவே புரிந்து கொள்வார்கள்.
இப்போது பாடல்கள் கேட்க பயன்படுத்தும் ஆப்களில் பார்த்திருக்கலாம். பாடலை ப்ளே செய்ய, அடுத்த பாடலுக்குச் செல்ல, முந்தைய பாடலுக்கு செல்ல என பயன்படுத்தப்பட்டிருக்கும் ஐகான்கள் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்தி வந்த டேப் ரெக்கார்டர்களில் இருந்து ரெக்கார்டரில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவே மியூசிக் பிளேயர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது எந்த ஒரு சிரமமுமின்றி பயனாளர்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு மாற முடிந்தது.
வீட்டில் இருக்கும் மிக்ஸி, ஃபேன், கேஸ் ஸ்டவ், அயன் பாக்ஸ் என எல்லாவற்றிலும் திருக்கி (knob) இருப்பதை பார்த்திருக்கலாம். இவை இடதுபுறம் இருந்து வலதுபுறம் திருக்க திருக்க அந்தந்த பொருள்களின் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன. இது நமக்கு மிகவும் பழக்கப்பட்டது. கீழிருந்து மேலே செல்வது அல்லது இடமிருந்து வலம் செல்வது என்பது குறைவான நிலையிலிருந்து இருந்து அதிகமான நிலைக்கு செல்வது என நமக்கு மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது.
எனவேதான் உங்கள் போனில் நீங்கள் பிரைட்னஸ் (Brightness) அல்லது சத்தத்தை அதிகப்படுத்துவது, மேலே சொன்னது போல, இடமிருந்து வலமாகவோ அல்லது கீழிருந்து மேலாகவோ செல்வதுபோல அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நிஜ உலகில் இருக்கும் ஒன்றை அப்படியே ஒரு சாதனத்தில் அல்லது திரையில் பயன்படுத்தும்போது கற்றுக்கொள்ளும் வேலை மிச்சம். நம் கை நம்மை அறியாமலேயே அதை பயன்படுத்த தொடங்கிவிடும்.
இது போன்ற உதாரணங்களை நீங்களும் தினசரி வாழ்வில் பார்த்திருப்பீர்கள். அவற்றை நன்கு கவனியுங்கள். அதன் பின்னால் இருக்கும் வரலாற்றை யோசியுங்கள். அவற்றில் நீங்கள் கண்டுகொண்ட சிறந்த உதாரணங்களை எனக்கு அனுப்புங்கள்.
தொடரும்…