
பகடி
மலையுச்சிக்கு ஏறுகிறேன்
குனிந்து சிரமப்பட்டு ஏறுகிறேன்
மேடும் பள்ளங்களும் கொண்ட
நிறைந்த உயரிய நிலம்
பிரமாதமான காட்சிகள்
ஆங்காங்கே மேகங்கள் மலை முனையை முத்தமிடுகின்றன
ஓவியனுக்கு வண்ணங்கள் கிடைத்ததுபோல்
எனக்கு இந்த மலை நிறங்கள் பிடித்துவிட்டன
கால்கள் வழுக்கிக்கொண்டிருந்தன
உடல் தளந்து சோர்வுற்றது
சற்று ஓய்வெடுக்க அப்படியே கன்னம் ஓட்டிப் படுத்துக்கொண்டேன்
ஆஹா பாறைகளிலிருந்து நீர் வடிகின்ற ஓசை
மிகத் துல்லியாமாக கேட்டது
பசும்புல்வெளி முழுக்க ஈரம்
கைகளை வானுக்கு எறிந்து பிடித்துக்கொண்டு
கீழே பார்த்தேன்
பெருங்காடு
பயங்கரமான பள்ளத்தாக்கு
பயமாக இருந்தது
மூச்சு முட்டியது
இதயம் படபடத்தது
அமைதிகாத்தேன்
எப்படியாவது மேலே ஏறிவிடவேண்டும்
வைராக்கியம் மனதில் உதித்தது
காற்றை இழுத்துப் பிடித்து
உச்சியை அடைய முயன்றேன்
இருட்டாகி நட்சத்திரங்கள் பிறக்கத்தொடங்கியிருந்தன
அதிலொன்றைப் பற்றித் தொங்கினேன்
உலகம் ஓராட்டம் ஆடியது
என் சிறிய எடைக்கு
தாங்குவதில்லை என்றால்
பிறகு என்னத்துக்கு இந்தப் பிரபஞ்சம்?
***
அகராதி
பருவங்கள் உதிரும் காலத்தில்
நாம் சந்தித்துக்கொண்டோம்
அது காலத்தின் பிழை
இயற்கையின் அலட்சியம்
பார்க்கவியலாத அநீதி
உனைக் காணாது
தனித்திருத்தல் கொடியது
தேசாந்திரியான என் கண்கள் நிலைகொள்ளாது
பூமியெங்கும் அலைந்து திரிந்தன
ஆன்மா சோர்வுற்றிருந்தபோது
சகிக்கப்பழகி தோற்றுப்போனேன்
எங்கும் எதிலும் நீயின்றி அந்நியத்தன்மை
வெறுமை அப்பிப் படர்ந்த அறையில்
துக்கத்தின் வாடை
தேடிச் சலித்த போதாமையின் குணம்
இருப்பை கேலிக்குள்ளாக்கியது
உன் குரல் எங்கிருந்தோ ஒலித்தது
எனக்குள்ளிருந்து ஒலித்ததா நானறியேன்
உன்னுடலருகு என்னைச் சுட்டதும் மூச்சுவிட்டேன்
ஆசுவாசம் அடைந்தேன்
இதோ என் முன் நாம்
மகத்துவமான உனது இளமையை நான் நேசிக்கிறேன்
உன் மெல்லிய மார்புகள் மோகிக்கும் வயதடைந்திருந்தன
உனது சிறிய இடை பற்றிக்கொண்டு
சிம்பொனிக்கு நினைவெளியில் ஆடத்தொடங்கினேன்
மனவயலெங்கும் முளைக்கத் தொடங்கின
நம் பூர்வீக நிலக்காட்சிகள்
நறுமண சுகந்தங்கள்
நம்மிரு தேகங்களிலும் வழிந்தோடின
நடனத்தில் உன் வளைந்த பிருஷ்டம்
உயிரை அசைத்தபோது
உன்னிரு பாதங்களில் சுருங்கி விழுந்தேன்
போதம் தெளிந்து முத்தத்தால் ஈரம் வைத்தேன்
என்னுள் காடதிர்ந்தன
சென்பகப்பூவின் நிறமுள்ள
உன் கால்களில்
மருதாணி இலைகள் பூத்திருந்ததை அறிந்தேன்
மேலும்
உன்னோடு கூடி மகிழும்
முகூர்த்த கணத்தை
கனவு கண்டேன்
இந்த பூமியிலிருந்து புறப்படுவதற்கு முன்
என் தனித்த துக்கங்கள்
உன்னை அணுகாதிருக்கச் செய்யவேண்டும்.
***
தீங்கற்ற பாடலை இனி யார் பாடுவார் ஃபாதர்?
சவப்பெட்டியினுள்ளில்
கவிஞனின் முகம்
யேசுவைப்போல் சாந்தமாய் இருந்தது
சிறிய கூட்டம் சுற்றிலும் நிறைந்த அமைதி
பேராலயத்தின் மணி ஒலித்தது
மதகுரு விவிலியத்தின் வசனத்தை வாசித்தார்
யேசு கவிஞனின் கவிதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்
தேவாலயம் ஏதோ மரித்தவருக்கான சடங்காய் கவனித்தது
பரிசுத்த ஆவி கவிஞனின் உடலாய்க் கிடந்தது
பிரார்த்தனைகள் உச்சரித்தபோது
தீபம் அசைவின்றி நின்றெரிந்தது
உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே
கருணையினை எழுத்தாக்கியவன்
சவமாய் கிடக்கிறான்
ஓ அன்பின் பிதாவே
உன் இறையியலின் முன்
இனி உயிர்தெழும் சாத்தியமுண்டோ
எங்கள் மகாகவி வெற்றுடல் பூண்டு
இல்லாமையினுள் போகப்போகிறான்
ஆன்மாவின் தரிசனத்தை தூயபோதனையால் உச்சரித்தவன்
இதோ ஆழ்ந்த தூக்கத்தில் நித்தியத்தில் இருக்கிறான்
அப்பொழுது பிரசங்கத்தில் குரல்கள் மயங்கி மொழிந்தன
கர்த்தரே உனது வசனங்கள்
மரித்துக் கிடப்பவனை எழுப்பயியலாது
விளக்குள் அணைந்து மெழுகுவர்த்திகள் சுடர்ந்தன
தீங்கற்ற பாடலை இனி யார் பாடுவார் ஃபாதர்?
******