கீத்தாக்கா
“எங்க போறோம் கீத்தாக்கா”
“ஹாஸ்பிடல்க்கு”
**
மருத்துவமனை.
ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் பேசினார் கீதா. டாக்டர் ஒரு மீட்டிங்கில் இருப்பதால் சில நிமிடம் காத்திருக்கச் சொன்னார் அந்தப்பெண்.
கீதாவும் ஜானுவும் காத்திருந்தனர்.
தொலைக்காட்சி அமைதியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் தொலைக்காட்சியைக் கொஞ்சம்.. ரிஷப்ஷன் பெண்ணைக் கொஞ்சம்.. சுற்றிலும் கொஞ்சம்.. ஒருவரை ஒருவர் கொஞ்சம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சில நிமிடக் காத்திருப்புக்குப் பின் அழைக்கப்பட்டார்கள்.
ரிஷப்ஷன் பெண்ணுக்கு நன்றி சொன்ன கீதா ஜானுவின் கையைப் பிடித்துக்கொண்டு மருத்துவர் அறை நோக்கிச் சென்றார்.
மருத்துவரின் அறைக்கு அருகில் சென்றதும் கீதா ஜானுவை அறைக்கு வெளியே உட்காரவைத்து,
“ஜானகி நீ இங்கயே உக்காந்திரு. நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்..”
“ஓகே கீத்தாக்கா..”
“எங்கயும் எழுந்து போகக் கூடாது”
“போகமாட்டேன்”
“நிச்சயமா..?”
“நிச்சயமா”
கீதா மருத்துவர் அறைக்குள் சென்றார்.. அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க.
*
ஜானு வெளியே உட்கார்ந்து சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பேஷண்டாக வரத் தொடங்கியிருந்தார்கள்.
ஒரு அம்மாவும் மகளும் வந்து இவளுக்கு அருகில் உட்கார்ந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் காலையில் வீட்டில் நடந்தது நினைவுக்கு வந்தது ஜானுவுக்கு.
“ஜானு… உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படுறேன் ஜானு நான்..” ஜானுவின் அம்மா.
“கவலைப்படாதீங்கம்மா ஒண்ணும் ஆகாது. கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க ம்மா ப்ளீஸ்”
யோசித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.
*
பத்து நிமிடங்களில் கீதா வெளியே வந்தார்.
“ஜானகி.. போலாமா”
“போலாம் கீத்தாக்கா”
கீதா ஜானுவின் கையைப் பிடித்துக் கொண்டார்.
இருவரும் அந்தப் பெண் சிகிச்சை பெற்றுவரும் அறைக்குச் சென்றார்கள்.
அறைக்கதவைத் திறந்தபோது..
ஜானு இதை எதிர்பார்த்திருக்கவில்லை.. வார்த்தைகளற்ற அமைதியோடு கீதாவைத் திரும்பிப்பார்த்துவிட்டு மெல்ல கூடவே நடந்தாள்.
அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்தாள்.
நர்ஸ் அங்கே ஏதோ செய்து கொண்டிருந்தார்.
நர்ஸிடம் கீதா, “இந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ் எங்க” ரொம்ப மெலிதான குரலில் கேட்டார்.
அதற்கு நர்ஸ் அவர்கள் சாப்பிடப் போயிருப்பதாகச் சொன்னார்.
அந்தப் பெண்ணின் அருகே வந்தார் கீதா.
அடர்ந்த அமைதியான குளிர் அறைக்குள் அவள் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க நிம்மதியாய் இருந்தது கீதாவுக்கு.
பின்.. திரும்பி அமைதியாக நின்றுகொண்டிருந்த ஜானுவைப் பார்த்தார்.
ஜானு.. கீதாவின் கையிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு அந்தப் பெண் படுத்திருந்த கட்டிலின் மேல் மெலிதாய்க் கை வைத்தாள்.
சில நொடிகளில் இவள் கை வைத்த அதிர்வில் அந்தப் பெண்ணின் தூக்கம் கலைந்துவிடுமோ என்று தோன்றியது ஜானுவுக்கு. மெல்ல கையை எடுத்துக்கொண்டு அண்ணார்ந்து கீதாவைப் பார்த்தாள்.
கீதா, ‘போலாமா’ என்பது போல் தலை அசைத்தார்.
இவள், ‘போலாம்’ என்பது போல் தலை அசைத்தாள்.
நர்ஸிடம் சொல்லிவிட்டு இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்.
அங்கே அந்தப் பெண்ணின் அம்மாவும் பாட்டியும் தூரத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
கீதாவைப் பார்த்ததும் அம்மா வேகமாக வந்தார்.
“வாங்கம்மா.. சாப்பிடப் போயிருந்தோம்..”
ஜானுவை அவர்களிடம் காண்பித்த கீதா,
“இந்தப் பொண்ணுதான் ஜானகி”
ஜானுவைப் பார்த்த அம்மாவுக்கு அடுத்த நொடி கட்டுப்படுத்த முடியாத அழுகை வந்தது. அருகில் வந்து அவளைத் தூக்கி அணைத்து அழுக ஆரம்பித்தார்.
பாட்டி, “ஆத்தா நீதானா அது. நீதான் என் பேத்தியைக் காப்பாத்திக் கொடுத்தியா. என் குலசாமிதான் உன்ன அனுப்புச்சு ஆத்தா. என் குலசாமி” சுருட்டி வைத்திருந்த பைக்குள்ளிருந்து விபூதி எடுத்து ஜானுவுக்கு வைத்துவிட்டார்.
அம்மா ஜானுவைக் கீழே இறக்கிவிட்ட பின்பும் அழுகையைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.
“அழுகாதீங்க மா” கீதா.
“அவ கண் முழிக்கிற ஒவ்வொரு முறையும் பயத்துல கதறுறத என்னால சகிக்க முடியலங்கம்மா.. ஸ்கூலுக்குப் போன புள்ளைய…..”
கீதாவுக்கு அந்தப்பெண் அன்று அலறிய சத்தம் நினைவுக்கு வந்து கண்கள் இருளச் செய்தது.
கீதா.. “அந்தப் பசங்களை சும்மா விடமாட்டோம் மா. நிச்சயமா அதிகபட்ச தண்டனை வாங்கிக்கொடுப்போம்”
“என்ன தண்டன வாங்கிக்கொடுத்து என்ன புண்ணியம் மா. என் புள்ளைக்கு நடந்ததை இல்லாம பண்ண முடியுங்களா..?”
“…”
“இப்படித் தெருவோரத்துல இருந்து தூக்கிட்டு வரதுக்கா புள்ளையப் பெத்து வளர்த்தேன்..”
அழுகை இன்னும் அதிகம் ஆனது. சேரில் போய் உட்கார்ந்து பலவீனமாக அழுதுகொண்டே இருந்தார் அம்மா.
கீதாவிடம் பதில் இல்லை.
ஜானுவின் கையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து நடந்தார்.
**
அப்போது சந்த்ரு வந்து சேர்ந்தார்.
“குட் மார்னிங் மேடம் “
“குட் மார்னிங் சந்த்ரு “
வெளியே நான்கைந்து ஊடகவியலாளர்கள் நின்றிருந்தார்கள்.
இவர்களைக் கண்டதும் அருகே வந்தார்கள்.
“மேடம் மேடம்” அவர்கள்.
“அந்தப்பொண்ணு எப்படி இருக்காங்க இப்போ..?” அவர்கள்.
“அந்தப் பொண்ணு நல்லா இருக்கா”
அருகே நின்றிருந்த ஜானுவைக் கண்ட அவர்கள்,
“இந்தப்பொண்ணு தான் ஜானகியா..?”
“ஆமாம்”
ஜானுவின் பக்கம் கேமராக்கள் திரும்பின.
பின் மீண்டும் கீதாவிடம் அவர்கள்,
“கைதான ஆறு பேரோட நிலைமை இப்போ என்ன மேடம்..?”
“விசாரிச்சுட்டு இருக்கோம். நிச்சயமா தகுந்த தண்டனை வாங்கிக் கொடுப்போம்”
“மேடம்..”
“யெஸ்”
“ஒரு சின்னப்பொண்ணு இப்படி ஒரு விபரீதத்துல இருந்து ஒரு பொண்ணைக் காப்பாத்தியிருக்கா அப்படின்னா.. பொதுமக்கள் நினைச்சா இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கமுடியுமா..?”
“பப்ளிக் நினைச்சா ஓரளவுக்கு இப்படிப்பட்ட குற்றங்கள் குறையக்கூடும். ஆனா உங்க பார்வைக்கோ என் பார்வைக்கோ எட்டாத தூரத்துல நடக்குற ஒண்ண எப்படி பொதுமக்களால தடுக்க முடியும்”
“அப்போ இதுக்கு என்ன தீர்வு..?”
அப்போது வெளியே ஏதோ கலாட்டா நடப்பது போல் சத்தம் கேட்க.. எட்டிப்பார்த்த கீதா ஊடகவியலாளர்களைப் பார்த்து,
“நன்றி எல்லாருக்கும் நன்றி”
ஜானுவின் கையைப்பிடித்துக்கொண்டு அங்கிருந்து கடந்து வந்தார்.
வெளியே அங்கே நான்கைந்து இளைஞர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள்.
அதைக் கவனித்த கீதா சந்த்ருவிடம்…
“சந்த்ரு அவங்க பக்கம் திரும்பாதிங்க. அதுல ஒருத்தனை இன்னிக்குக் காலைல ஸ்டேஷன் முன்னாடி பார்த்தேன்.. என்ன கத்திட்டு இருக்காங்கன்னு கவனிங்க”
*
அந்த இளைஞர்கள்:
“போலீசு போலீசு போடாத பொய் கேசு..
ஹே போலீசு போலீசு .. நீ போடாத பொய் கேசு…”
*
“உங்க பைக் சாவி கொடுங்க சந்துரு” கீதா
*
இளைஞர்கள்:
போராடுவோம் போராடுவோம். உண்மை வெளிவரும் வரை போராடுவோம்.
*
“நான் பைக் எடுத்துட்டுப் போறேன். நீங்க ஜீப்ல வந்துடுங்க” கீதா..
*
கீதாவுக்கு அருகே ஜானுவைக் கண்ட, ‘அந்தப் பசங்க’:
”ஏய் குள்ளக் கத்திரிக்கா நீதானடி காட்டிக்குடுத்த. நாளைக்குக் காலைல நீ முள்ளு வேலிக்குள்ள கிடப்படி.”
*
“TAKE THEM சந்த்ரு”
அந்தப் பையன்களின் வார்த்தைகள் கீதாவுக்கு ஆத்திரம் கண்களை மறைக்க வைத்தன.
“ஜானகி வா”
ஆத்திரத்தோடு நடந்த கீதாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க ஜானு கீதாவின் பின்னாடியே ஓடினாள்.
அதே கோவத்தோடு பைக்கை ஸ்டார்ட் பண்ண கீதா,
“ஜானகி உட்கார்”
ஜானு பின்னால் உட்கார்ந்ததும் அந்தப் பசங்களைத் திரும்பிப் பார்க்காமல் வேகமாக அவர்களைக் கடந்து போனார் கீதா.
**
கீதாவின் கோவத்தை உணர்ந்துகொண்ட ஜானு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
ஸ்டேஷனுக்குச் செல்லும் வழியில் கொஞ்சம் தூரம் சென்றதும்.. கீதாவின் அலைப்பேசி ஒலித்தது.
பைக்கை ஓரமாய் நிறுத்தி ஃபோனில் பேசத் தொடங்கினார் கீதா.
ஜானு கீழே இறங்கி நின்று சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது சந்த்ரு அந்தப் பசங்களை ஜீப்பில் அழைத்துக்கொண்டு இவர்களைத் தாண்டிச் சென்றார்.
அதைப் பார்த்த ஜானு பட்டென்று கீதாவின் பக்கம் திரும்பிவிட்டுப் பின் ஜீப் கடந்து சென்று மறையும் வரை ஜீப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கீதா இன்னும் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.
சில நிமிட உரையாடலுக்குப் பின்,
“ஜானகி வா”
பின் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் போனார்கள்.
பைக்கிலிருந்து இறங்கி கீதாவும் ஜானுவும் உள்ளே போகும்போது கீதா ஜானுவிடம்..
“நீ ரூம்க்குள்ள போ”
“ஓகே கீத்தாக்கா”
சொன்ன ஜானு மிக மெதுவாய் நடந்து அந்தப் பசங்களை வைத்திருந்த லாக்கப்பைத் திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.
அதைப் பார்த்த கீதாவுக்கு செம்ம கோவம் வர,
“ஜானகி …”
கீதா கத்திய சத்தத்தில்.. குடு குடுவென்று ஓடிய ஜானு.. அறைக்குள் சென்று சேர் மேல் ஏறி.. டேபிள் மேல் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள்..
லாக்கப்..
அந்தப் பையன்கள் தரையில் உட்கார்ந்திருந்தார்கள்.
கீதா லாக்கப்புக்குள் நுழைந்தார்.
“மேடம் ..” சந்த்ரு.
“ம்ம்..”
அந்த ஒரு குறிப்பிட்ட பையனிடம் போன கீதா,
“என்னடா என்னமோ கூவிக் கூவிக் கத்திட்டு இருந்த. என்ன? எங்க இப்போ கத்து. கேப்போம்”
“இப்போ எதுக்குங்க எங்களைக் கூட்டிட்டு வந்தீங்க இங்க..?”
“இதுக்குதான்டா” பளீரென்று ஒரு அறை விழுந்தது.
“என்ன திமிர் இருந்தா போலீஸ் முன்னாடி ஒரு குழந்தையைப் பார்த்து முள்ளு வேலில கிடப்ப’ன்னு சொல்லுவ”
இன்னும் நான்கு அறை தொடர்ந்து விழுந்தது.
“ஏங்க.. எதுக்குங்க அடிக்கிறீங்க. போலீசுன்னா பப்ளிக் மேல கையை வைக்கலாமா உங்க இஷ்டத்துக்கு”
“ஓ கையை வைக்கக் கூடாதா.?”
அங்கே ஓரமாய் இருந்த லத்தியை எடுத்த கீதா அவனின் நடு முதுகில் ஓங்கி ஒன்று வைத்தார்.
பின் லாக்கப்பை விட்டு வெளியே வந்த கீதா சந்த்ருவிடம்..
“சந்த்ரு இதுக்கப்புறம் இவன் வாயைத் திறந்து பேசவே பயப்படணும். இங்க வேண்டாம். பின்னாடி கூட்டிட்டுப்போங்க”
பின் அந்தப் பசங்களிடம் திரும்பி,
“உண்மை வெளிய வர்ற வரை போராடுவேன்னு சொன்னில்ல. உன் கூட்டாளிங்க அந்த ஆறு பேர் கூட சேர்ந்து உள்ள போய்ப் போராடு சரியா”
அதே ஆத்திரத்தோடு அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்குள் புகுந்து சேரில் உட்கார்ந்த கீதா அமைதியாக இருந்தார்.
கீதாவைக் கண்டதும் டேபிள் மேல் இருந்து கீழே குதித்த ஜானு டேபிளின் நடுவே சாய்ந்து நின்று கொண்டாள்.
கீதா.. சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடித்துவிட்டு அலைப்பேசியை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார்.
கோவம் தனியவே இல்லை அவருக்கு.
அப்போ.. மெல்ல ஜானு சொன்னாள்.
“ஐம் சாரி..!”
“நோ இட்ஸ் ஓகே” நிமிர்ந்து பார்க்காமல் பதில் சொன்னார் கீதா.
ஜானு தொடர்ந்தாள்
“அவங்கள அடிச்சீங்களா..?”
கீதா அமைதியாகவே இருந்தார். தன் கோவம் ஜானுவிடம் வெளிப்பட்டுவிடக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்.
இன்னும் கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு..
“என்னைத் திட்டினாங்கன்னா..?”
கீதா அமைதி.
ஜானு மீண்டும்,
“என்னைத் திட்டினாங்கன்னுதான் அவங்களை அடிச்சீங்களா..?”
அமைதியாக ஜானுவிடம் திரும்பிய கீதா,
“இல்ல ஜானகி..”
“இல்லையா..?”
“ம்ம்.. இல்ல..”
( ஜானு தொடர்வாள்…)