மலர்நுழை உலகு
பூவாளியால் நீர் வார்க்கும்
சிறுவனுக்கு
உரமாகி
அவனை வளர்க்கிறது
அவன் வளர்க்கும்
சிறிய ரோஜாச் செடி
நூறாயிரம் ரோஜாக்களின்
ஆவி திரண்டு
பனித்த அத்தரைப்
பூசிக்கொண்ட பேரரசனின்
மனக்காயம் போல்
முகம் காட்டுகிறது ரோஜா
வாழ்வளிக்கும் புனித நீரின்
ஸ்படிகக் கோப்பைக்குள்
உதிரும் ரோஜா
மதுவாகின்றது
மெல்லத் திறக்கும்
சிவந்த ரோஜா மொட்டினைக்
கண்ட மாத்திரத்தில்
ஒரு புல்புலாகிப் பாடுகிறான்
அவன் பாடும் பாடல்
ரோஜாவிலிருந்து
சுகந்தமாய்ப் புறப்பட்டு
அவன் வரை எட்டுகிறது
தேனை ருசிக்கும் தீயே
ரோஜாவாகிறது
என்று
அவன் காதில் கிசுகிசுக்கிறான்
மஜ்னூன்
புத்தம் புது ரோஜாவைப் போல்
பூங்காவின் நடுவே
நிற்கும் அழகியின் முன்
மண்டியிட்டு
முள் மகுடம் ஏற்கிறான்
இளவரசன்
உதிரும் ரோஜாவுக்கு
உள்ளம் மருகி நிற்பவனிடம்
ரூமியாகிச் சொல்கிறது அது:
என் அன்பே!
ரோவையும் ஜாவையும்
உதிர்த்துவிடு!
அவன்
மலரையும் முள்ளையும்
பார்த்தபடி
சூஃபி ஞானியாகி
மூலம் ஒன்றே என
முணுமுணுக்கிறான்.
***
வேருலகம் – 1
வேர்களுக்கு உதவியாய்
நெளியும் மண்புழு
அறியுமோ
பூவின் நறுமணம்?
பூவிலமரும்
பட்டாம்பூச்சிக்குத்
தெரியுமோ
வேர்களின் வாசம்?
***
வேருலகம் – 2
வாசமே இல்லாத
வெட்டிப் புல் என்று
வெறுத்துச் சென்றது
வண்ணத்துப் பூச்சி.
மண்ணுக்குள்
சிரித்துக்கொண்டது
வெட்டிவேர்.
***
குட்டிப் பூர்ணா
தன் ஐந்தாம்
பிறந்தநாளுக்கு
அன்பளிப்பாய் வந்த
மெழுகுக் குச்சிகள் கொண்டு
படம் வரைகிறாள்
மேகங்களுக்கு மேலே
சூரியனைத் தொட்டுப்
பறந்துகொண்டிருக்கும்
பட்டாம்பூச்சிக்கு
ஏரோப்ளேனின் சிறகுகளும்
லப்பர் சக்கரங்களும் இருந்தன
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தும்
நீர் யானையின் உடலுமாய்
இருந்தார் டீச்சர்
அத்தாவை அன்பால் வார்த்த
கைவண்ணத்தில்
வயிற்றிலிருந்து நேரடியாகப்
பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருக்கும்
கால்வண்ணம் கண்டேன்
தன் தோழி என்று
அவள் வரைந்து காட்டிய முகத்தில்
பாதியளவுக்கு வாய்
சச்சதுரப் பற்களைக் காட்டிச்
சிரித்துக் கொண்டிருந்தது
ஒற்றைக் கொம்பு போல்
அவளின் தலைமேல்
நீட்டிக்கொண்டிருந்ததை
’போனி டெய்ல்’ என்று
டீட்டெய்ல் சொன்னாள்
அவள் வரைந்திருந்த வீடு
மலைப்பாங்கான
புல்வெளி ஒன்றில்
தன்னந்தனியாய் நின்றது
செங்கனிகள் கொண்டதொரு
பெருமரத்தின் அருகில்
அந்த வானத்தில்
சூரியனும் இருந்தது
நிலவும் இருந்தது
ஒரே சமயத்தில்
அவள் வரைந்த பள்ளிக்கூடம்
விளையாட்டுத் திடலின்
ஒரு மூலையில் கிடந்தது
தப்புத் தப்பாக வரைகிறாள் என்று
கவலைப்பட்டார் அவள் தாய்
சரி செய்துவிடலாம் என்று
ஓவிய ஆசிரியர்
சொல்லியிருப்பதாகவும்
சொன்னார்
ஐந்து வயது
ஜுவான் மிரோவுக்காகக்
கவலைப்பட்டேன் நானும்.
*********