பெருவெளியில் விட்டெறியப்பட்ட கவிதை – மீரான் மைதீன்
கட்டுரை | வாசகசாலை
பல அர்த்தங்களிலும் ஒரு சூஃபியின் மனம் என்பது பெண்மையின், தாய்மையின் மனம் போன்றதுதான். இதனோடு படைப்பு மனமும் கலைமனமும் இசைவு கொண்டிருந்தால் அது மேலுமொரு ஆனந்த அனுபவமாகிவிடுகிறது. சில படைப்புகளை வாசிக்க நேர்கையில் அதன் மைய ஓட்டம் நமக்குப் புலப்படும்போது நாம் அதற்குள் வெகுவாக ஈர்க்கப்பட்டு விடுகிறோம். நாம் தனித்தனியாக ஏராளமான அனுபவங்களின் குவியலாக இருக்கிறோம். ஆனால் அனுபவங்களுக்கு நம்மிடம் தனித்தனியான பெயர்கள் இல்லை. இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமான பற்றுடையது என்பதால் கவிதைகளின் அனுபவத்தோடு சொல்லவியலாத ஈர்ப்பு மானிட சமூகத்துக்கு உண்டு. இதன் நிமித்தமாக கவிதைகள் நம்மை வந்தடையும்போது அது விசையாக இழுக்கவோ, விலக்கவோ அல்லது இரண்டுக்கும் மத்தியில் ஒரு மாயம் போலச் சுழலச்செய்வதையோ செய்துவிடுகிறது. இது எல்லோருக்கும் ஒன்றுபோல நிகழவேண்டுமென இல்லை. இது தனித்த மனப்பிரயாசங்களின் இயக்கம்.
எனக்கு இப்புதிய ஆண்டில் கவிஞர் அம்முராகவின், ’ஔவையின் கள் குடுவை’ கிடைக்கப்பெற்றபோது மேம்போக்கான ஒரு வாசிப்புக்குப் பிறகு இப்போது முழுமையான மற்றுமொரு வாசிப்பு வசமாகியிருக்கிறது. இந்த மற்றுமொரு வாசிப்புதான், எனக்கு இவரது கவிதைகள் மீது தனித்த மனப்பிரயாசங்களை உருவாக்கியிருக்கிறது. பொதுவாக கவிதை நூல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புகளில் வேறு வேறு தனித்தனி அனுபவங்களைத் தரக்கூடியதாக இருக்கிறதென்பதை காலதேச வர்த்தமானங்களைக் கடந்து உணர முடிகிறது. கடலை மிக அருகில் எல்கையாகக் கொண்டு வாழும் நிலத்திலுள்ள உயிருக்கும் கடலற்ற நிலத்தைக் கொண்டிருக்கும் உயிருக்கும் இயல்பில் உண்டாகியிருக்கும் பார்வை நுட்பம் கவிதையில் மையம் கொண்டு அது பிரதியில் இன்னொரு காட்சிச் சித்திரமாகிற வியப்பை அம்முவின் சில கவிதைகளில் கண்டுணர முடிகிறது.
/கடலற்ற ஊரில் கடல்காரன் சொல்லும் கடல் கதைகளின் மீது நான் ஒரு கப்பலில் பயணிக்கிறேன்./
அம்முவின் இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் கடலின் மீதான ஈர்ப்பும் மயக்கமும் தொடர்ச்சியாக இயங்குவதன் ஆழம் கடலைப் போல இரகசியமாகவே கிடக்கிறது. செங்காந்தாள், அனிச்சம் என இரட்டைப் பிரிவுகளாக ஔவையின் கள் குடுவையிலுள்ள கவிதைகள் மனசுக்கும் இயற்கைக்குமிடையேயும், கனவுக்கும் நனவுக்குமிடையேயும் நிகழ்கின்ற பயணம்.
’நீ நீயாக இல்லாமல் வா, நான் நானாக இல்லாமல் வருகிறேன்’ என்பது போன்ற சூஃபிய மனோநிலையின் நிறைவான, இயற்கையின் மீது எல்லையற்ற அன்புகொள்ளும் இவரது கவிதைகள் உருவாக்கும் உலகம் இன்னொரு நிலையாகிவிடுகிறது.
அம்முராகவ் எனக்கு அவரது முந்தைய கவிதைத் தொகுப்பான, ’ஆதிலா’விலிருந்து அறிமுகமானவர். இப்போது என் மீதும் என் எழுத்தின் மீதும் நிறைவான அன்பும் மதிப்பும் கொண்டவரும் கூட. எனது, ’கலுங்குப் பட்டாளம்’ நாவலை வெளியீட்டுக்கு முன்பாகவே வாசித்து அவற்றின் செம்மையாக்கத்துக்குத் துணை செய்தவர். இப்போது எனது புதிய நாவலான திருவாழியிலும் இதுபோன்றே அவரின் பங்கிருக்கிறது. ஆதிலா கவிதை நூலுக்கு ’சிறகிடம் கைமாறும் கவிதைகள்’ எனத் தலைப்பிட்டு நான் எழுதியிருந்த முன்னுரையில், ”அம்முவின் கவிதைகள் மனதின் கடினங்களை எடுத்து காற்றில் வீசிக்கொள்ளாமல் மென்மையாகப் படர்கின்றன” என்கிற ஒரு குறிப்பை எழுதியிருக்கிறேன். இப்போது இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கும் ஒளவையின் கள் குடுவை மனதின் ஓசைகளை உயிரியக்கப் பிரபஞ்ச வெளியோடும் இயற்கையின் எல்லா அம்சங்களோடும் மெல்லிய சாரல் போல நனைத்துக்கொண்டே ஊடுபாவுகிறது. இது ஒரு அசாத்தியமான பாய்ச்சலாக அவரிடத்தில் நிகழ்ந்தேறியிருக்கிறது. ஒரு கவிதையில் அம்மு, ஒரு கோப்பையில் மழையைப் பிடிக்கிறார். மழையில் நிறைந்த கோப்பையில் அவருக்குச் சொந்தமாக ஒரு நதியும் கடலும் கைகூடுகின்றன. பிரிதொன்றில் ஒரு நதிப்படுகையில் ரகசியமாய் வசிக்கும் இரண்டு மீன்களின் கதையைச் சொல்கிறார். இன்னொன்றில் நேவாவின் கலம் பற்றிக் குறிப்பிடும் கவிஞர் ஆழ்கடலில் கிடக்கும் சிதிலமான கப்பல் பற்றியும் புதிய குறியீட்டுத் தன்மை வாய்ந்த கவிதைகள் புனைகிறார்.
தமிழ்நாட்டின் நிலவியலில் மத்தியபாகமான மதுரையின் அருகே தேனியில் வசிக்கும் கவிஞரின் மனம் முழுவதும் கடல் பெருக்கெடுத்துக் கிடக்கிறது. நான் இந்த மாறுபட்ட நிலவியலிலிருந்து இந்தக் கவிதைகளை அணுகும்போது என்னை இவை பிரமிப்பிலாக்குகின்றன. கடல் மீது அளப்பரிய ஈர்ப்புகொண்ட எனக்கு அம்முவின் கடல் பற்றிய கவிதைகள் பல குறியீடுகளை வரைந்து செல்வதையும் அதன் உள்ளார்ந்த மனதின் ஓசைகளையும் அவதானிக்க இயலுகிறது. படைப்பு என்பது வெறுமனே மூளை மண்டலத்தில் உண்டாகிற சிந்தனைகள் மட்டுமல்ல. அது ஆழ்மனதின் அதீத ஏக்கங்களைப் புதிய வார்த்தைகளால் பொதிவதாகவும் இருக்கிறது என்பதை கண்டடையும் புள்ளியாக இவரது கடல் பற்றிய கவிதைகளைக் காணலாம். பரந்துபட்ட வெளிகளில் பிரவேசிக்கும் இவரது கவிதைகளை யாரேனும் இதன் அம்சங்களில் பார்ப்பார்களாவென எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவ்வம்சம் ஒளவையின் கள்குடுவையில் முழுக்க முழுக்கப் பார்க்கப்படவேண்டிய அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது .
இந்த மானுட வாழ்வு விசித்திரமானது என்றால் பெண் வாழ்வு இன்னும் பலபடி மேலே விசித்திரங்களைக் கொண்டது. இயற்கையின் எல்லா அம்சங்களோடும் ஆலிங்கனம் செய்கிற கவிதைகள் பெண்ணுடல் பற்றிய கருத்துக்களை, சித்திரங்களை அனாயசமாக அடித்துக் கடந்து போகிறது. யோனிச் சுழியிலென் மூன்றாவது கண்ணை இப்படித்தான் திறந்து பார்த்தேன் என கவிதையொன்று முடிகையில் மீளமுடியாத மௌனச் சுமையேறிய ஒரு ஆண்மனம் நமக்குள் புரள்கிறது. சிலநேரங்களில் வார்த்தைகள் என்னை எடுத்தாட்கொண்டு உலவுகின்றன எனக் குறிப்பிடும் அம்முராகவின் சில வரிகள் பெரும் நெருப்புக் குவியலுக்குள் புகுந்து கரிந்துபோகாமல் ஒரு விளக்கைக் கொண்டுவருவது போன்ற செய்கைகளைக் கொண்டு அமைந்திருக்கின்றன. இயற்கையின் மீதும், ஆதியின் மீதும், சிறு பெரு உயிரினங்களின் மீதும் கவிதையின் கண்கள் ஒரு ஞானப்பார்வை உடையதாக தன்னை உருவாக்குகிறது. அர்த்தத்தை அவ்விடத்திலேயே வைத்துக்கொண்டு அம்முவின் மொழி ஔிவேகத்தில் பயணிப்பது, சிலவற்றிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உண்மைகளாக இருக்கின்றன.
நமக்கு ஏன் ஒரு கதை பிடிக்கிறது? கவிதை பிடிக்கிறது? என்கிற கேள்வியை முன்வைத்தால் நமது பிடித்தங்களுக்குப் பல மாறுபட்ட காரணங்கள் இருக்கலாம். அவை ஒன்று போல ஒன்றிருக்காது. நாம் இங்கு ஏற்கனவே நமக்குப் பிடித்தமான விசயத்திலோ கருத்துகளிலோ இருந்து வருகிறோம். எனவே நமக்குப் பிடித்தமானவைகளில் ஒன்றோ அல்லது பலதோ நம்மை வந்தடையும்போது நமக்கு அது பிடித்தமானதாக நெருக்கமாகிவிடுகிறது. இது ஒரு படைப்புக்குள்ளும் இயங்குகிறது. எனக்கு பூனை ரொம்பவும் பிடித்தமானது. எனவே இந்த உலகில் யாருக்கெல்லாம் பூனைகளைப் பிடிக்குமோ யாரெல்லாம் பூனைகளைப் பற்றிப் பேசுவார்களோ அவர்கள் எனக்கு எங்கிருந்தாலும் நெருக்கமாகி விடுகிறார்கள்.
இத்தொகுப்பிலுள்ள முக்கியமான பத்துப் பதினைந்து கவிதைகள் பூனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்கவிதைகளோடு நான் இவ்வளவு நெருக்கமாக மாறிக்கொள்வதற்கு இந்தப் படிமங்களும் குறியீடுகளும் போதுமானவை. இவை எனக்குள் தகவமைக்கும் அனேக அர்த்தங்களும் அதன் வழி உருவாகும் சித்திரங்களும் அலாதியான சுவையுடையன. பூனையின் பிளிறல் என்றொரு கவிதை கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்காய் கோபம் கொள்கிறது. புதரில் பதுங்கிய அந்த பிஞ்சுப் பூனைகளின் மியாவ் ஒலி, ஒரு யானையின் பிளிறலைப் போலக் கேட்கிறது. இந்தக் கவிதையின் உளவியலை அதன் மனதை இந்தப் பிரபஞ்ச மனதோடு கொண்டு பிணைத்துவிடுதாக நான் கண்டுகொள்கிறேன். தனது துயரங்களை மௌனராகமாக மென்குரலினும் குறைவான ஓசையில் பேசிக்கொள்கின்றது இந்தக் கவிதை. ஒரு சிறு உயிரின் வாழ்வு இருப்புக்கான குரலை இந்தக் கவிதையில் ஒரு பெரும்குரலாக யானையின் பிளிறலோடு ஆகப்பெரும் ஓசையாக்குகிறார். இன்னொரு பகுதியில் பூனை மீன் குறியீட்டில், //நான் ஒரு கெண்டை மீனைப் போல துள்ளி விழுகிறேன். நீ என்னை ஒரு பூனையைப் போலக் கவ்விக் கொண்டு போ// என்பதன் முரண்பட்ட அர்த்த தளம் சில விசித்திரங்களைச் சூடிக்கொள்கிறது. இந்த சித்திரமே ஒரு உச்சமான காட்சியாக மலருகிறது. இதனோடான பயணம் முற்றுப்பெறவிடாமல் துரத்துகிறது. எனவே இந்த வரிகளில் பூனையாகக் கவ்வுவதும் மீனாக ஒப்புக்கொடுப்பதும் அகவயச்சார்பின் வலியாகவோ அல்லது இன்பம் சார்ந்த உணர்ச்சிப் பெருக்காலான முரணாகவோ கவிதை வரைந்து போகிறது.
தனிமனிதர்களின் அகத்தன்மைகள், உணர்ச்சிப் பின்னணி, தனித்தன்மை ஆகியவற்றிற்கிடையில் ஒரு பொதுச் சராசரி மொழி நிலவுவதாக சசூர் குறிப்பிடுகிறார். அம்முராகவ் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை செங்காந்தள், அனிச்சம் என இரண்டு பிரிவாக வரையருத்திருந்தாலும் அது மேலும் சில பகுதிகளாக விரிவடைகிறது. பெண்ணுடல், இயற்கை, இயற்கையின் அம்சங்களில் காடு, மலை, கடல் மற்றும் வெளியின் அரூபங்கள், சிறுபூக்கள், பூனை, மீன், யானை என சிறு உயிர்களில் நிகழும் கவிதையின் பயணம் மேலும் உயரிய சில அம்சங்களாகின்றன. ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் கவிதையின் நிலப்பரப்பு ஒரு எல்லையிலிருந்து கடந்து பெரும் பார்வையைக் கொண்டிருக்கிறது. இது கவிதையின் போக்கிலோ அடுக்கிலோ மிக இயல்பாக வர்ணப்பூச்சுகளற்று உண்மையாக இருக்கிறது. ஒரு சிறு துவாரத்திலிருந்து பேருலகைப் பார்ப்பதும், பேருலகிலிருந்து ஒரு சிறு புள்ளியைப் பார்ப்பதுமான வினோத விளையாட்டை இந்தக் கவிதைப் பரப்பில் கொண்டாடுவதையும் அவதானிக்க இயலுகிறது. பெருங்கடலைக் காதல் கொண்டு பார்க்கும் கவிதையே சிதிலமடைந்த பழைய படகின் இண்டில் சேகரமான மண்ணில் வளர்ந்த செடியின் சிறு பூக்களையும் கொண்டாடுகிறது. தன்னை இயற்கையோடும் இயற்கையைத் தன்னோடும் அனாயசமாக இணைத்துக்கொள்கிற நுட்பமான கவிதைகளைக் கண்டடைந்திருக்கிறார் அம்முராகவ். //பிரகாசமான ஒரு பூவின் பூப்பைப் போல வந்துதித்த யானை இருளில் இருளாகக் கிடக்கிறது// என்கிற கவிதைவரிகளில் நாம் மயக்கமுறுகிறபோதே அவர் இரகசியமாக யானையொன்றை கொசுவத்தில் முடித்து வளர்த்து வருவதாக வரும் கவிதைக்குள் நாம் எண்ணமுடியாத சித்திரக் குறிப்புகள் காட்சி இன்பத்துக்குக் கொண்டு போகின்றன. //எனது தும்மலின் நிமித்தமாக அது வனத்தில் பிளிர்கிறது அல்லது அதன் பிளிர்தலின் நிமித்தமாக நான் தும்மலிடுகிறேன்// அம்முவின் இதுபோன்ற கவிதைகளிலிருந்து நம்மால் கடந்தே போகவியலாது. பெண்ணாலானது உலகு பெண்மைத்தன்மையுடையது இயற்கையின் அம்சங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் உலவும் எல்லா உயிர்களுக்குள்ளும் வியாபித்திருக்கும் பெண்மையைக் கொண்டாடிக் கொண்டாடி கவிதைகள் ஒவ்வொரு முனையில் உற்சாகம் கொள்கின்றன. இதன் மொத்தக் கவிதைகளின் மையச்சரடு இதுவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நேசத்தை விதைத்து நேசத்தை அறுவடை செய்யும் ஔவையின் கள்குடுவை பேரனுபவமாகத் தோன்றுகிறது.
ஒரு கவிதை நூலை பெரும்பாலும் நாம் இங்கு மேம்போக்காத்தான் பார்க்கிறோம்.அதற்குள் புகுந்து வெளியேறும் வித்தைகள் எப்போதும் ஒரு வாசகனுக்கு வாய்த்துவிடும் என்று சொல்ல இயலாது. கவிதை ஏராளமான அனுபவங்களைக் கொண்டிருந்தால் நாம் அதில் நுழைந்து வெளியேறும்போது அதன் சில அனுபவங்களைப் பெறுகிறோம். இங்கே இது என்னை இவ்வாறு நீண்ட பேச்சுக்கு இட்டுச் செல்லக் காரணமாக நான் கருதுவது அம்முவின் இக்கவிதைகள் எல்லாவற்றின் மைய அரசியலாக அது பெண்மையைக் கொண்டாடக் கூவுவதை நான் உணருவதால்தான். சூஃபிய சிந்தனையில் பெண் உயர்வான ஓர் அம்சமாக இருக்கிறாள். எனவே இது எனக்கு ஏற்புடைய குரல்.”சக்தியாய் சிவனாய் இந்த தாரணியிலாக்கியெனை” என பீரப்பா பாடுவார். கள் குடுவையில் சக்தியே எல்லாமுமாக இருக்கிறாள். ஆணாக, பெண்ணாக, கடலாக ,காடாக, யானையாக, பூனையாக, போத்தலில் அடைபட்ட இரவாக, இரகசிய சீசாவாக, ஒரு பூந்தொட்டியில் நட்டு வைக்கப்பட்ட மீசையாக, இந்தக் கவிதைகளின் வெளியெங்கும் சக்திதான் பரவி நிற்கிறாள். அம்முராகவ் குறிப்பிடுவது போல இம்முறை அவர் கவிதைகளைப் பெருவெளியில்தான் விட்டெறிந்திருக்கிறார். எனவே அதனை நாம் கண்டடைய கொஞ்சமல்ல, நிறையவே மெனக்கெட வேண்டும். இத்தொகுப்பு நீண்ட பேச்சுக்கு உரியது .
***
குப்பியில் அடைபட்ட கப்பல்
நெடுங்கடலின் ஆழத்திலொரு மீனைப்போலப் பறக்கவோ
பெருவெளியிலொரு பறவை போல
நீந்தவோ வாய்த்திடாத இவ்வாழ்வு
குப்பியிலடைபட்ட கப்பலாய்
எல்லோருக்குமான ஆச்சரியமாய்
மிதக்கிறது
அற்புதம் தோய்ந்த கண்களின்
காட்சிப் பொருளாய்க் கிடக்கிறது குப்பிக்குள் கப்பல்
வந்து வந்து பார்த்துச் செல்லும்
எல்லா கண்களுக்கும்
குப்பியில் புகுத்தப்பட்ட கப்பலின் அதிசயம் தெரிகிறது
குப்பிக்கு வெளியே
சாகர சாட்சியாய் படரும்
என் காதலின் சுவாசம்
அதிசயம் பார்க்கும் கண்களுக்கும்
காற்றுக்கும் தெரியாது
குப்பியில் அடைபட்ட
அலங்காரக் கப்பல்
இதுவரையிலும் கடல் பார்த்ததில்லை
குப்பியில் அடைபட்ட நான்
கடல் கன்னியாக இருக்க
கனவில் இழைபவன் கடலாக இருக்கிறான்.
நான் நெடுங்கடலின் ஆழத்திலொரு
இறகு முளைத்த,
குப்பியின் கழுத்துப் பகுதியின்
இடர் கடந்து நீந்திப் பறக்கும்
மீனாவது எப்படி சாத்தியம்
கண்ணாடிக் குப்பியில்
அடைபட்டு அலங்காரப் பொருளான
கப்பலுக்கு குப்பி உடைத்தல்
அத்தனை சுலபமானதல்ல
காட்சிப் பெட்டகத்திலான இருப்பு
எப்போதாவது தூசு தட்டப்படும்
பொழுதுகளில் இளைப்பாறுகின்றன
பெருமூச்சுகளை அடக்கிக் கொண்டு
எடுக்கப்படும் சிறுமூச்சுகளில்.
***
கவிதையின் வரிகள் எளிமையானதுதான் என்றாலும் அது விரிக்கும் உலகம் ஆயிரம் அர்த்ததளங்களில் இயங்கும் வலிமையானது. கவிஞர் அம்மு ராகவ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல்: ஔவையின் கள்குடுவை
பதிப்பகம்: வாசகசாலை பதிப்பகம்
விலை: 150
தொடர்புக்கு: 9962814443 (பாலு)