குற்ற உணர்வு துவங்கி நிபந்தனையற்று சரணடைவது வரை – ‘குட் நைட்’ திரைப்பட விமர்சனம் – பிரியதர்ஷினி ர
கட்டுரை | வாசகசாலை
![](https://vasagasalai.com/wp-content/uploads/2023/07/Picsart_23-07-05_17-31-58-264-780x405.jpg)
நம் மனது எவ்வளவு தூரம் பயணித்தாலும் இறுதியிலோ பயணத்தின் இடையிலோ அல்லது அவ்வப்பொழுதோ எதார்த்தங்களையும் உறவுகளையும் சண்டைகளையும் தேடும் இல்லையெனில் அதன் மீதான ஒரு ஏக்கம் உருவாகும்.
‘Into the wild’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் கதாநாயகன் பல மைல் தூரம் பயணித்தும் இறுதியில் வேறொரு நிலையைப் பற்றி மனம் ஆசை கொள்ளும். அது போல தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகள் பல இருந்தாலும், அறிவியல், அரசியல், வன்முறை என பல துறைகளில் முக்கியமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் காதல், உறவுகள், அவற்றிற்கு இடையேயான முரண்கள், சிறிய உணர்வுகள், வாழ்வியல் சார்ந்த படங்களுக்கான தேவை அதிகமாகிக் கொண்டேருக்கிறது. அதற்கு சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்‘, ‘லவ் டுடே‘ படங்களின் வெற்றிகளே சான்று. அந்த வரிசையில் இணைந்திருக்கின்றது ‘குட் நைட்‘ திரைப்படம்.
உப்புமாவுக்கான அங்கீகாரத்தில் தொடங்கி யூ டர்னில் சிரிக்க வைப்பது வரை படம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. நாய்குட்டிக்கு அடிபடுகின்ற இடத்தில் கதநாயகியைச் சந்திப்பது போன்ற வழக்கமான சினிமா காட்சிகளும் இருந்தாலும் ஏனோ முதலில் இருந்தே இப்படமும் இப்படத்தின் கதாபாத்திரங்களும் சலிக்காமலும் இயல்பாகவும் இருந்ததும் கதைக்கு மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. பெரிதும் பேசாத அனு, பேசியே தீர்க்கும் மோகன் இருவருக்கும் இடையிலான காதல், சத்தமான ஆட்கள் நிறைந்த வீடு, அமைதியும் செடிகளும் இரண்டு மனிதர்களும் இருக்கின்ற வீடு, என பல்வேறு அடுக்குகளை கொண்டிருந்தாலும் எந்தவிதத்திலும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் தெளிவாக இருந்தது. அதிலும் திருமணமாகி வருகின்ற ஒரு இடமாற்றத்தையும், பொருளாதார மாற்றத்தையும் எந்தவித மறுப்பும் சண்டையும் இல்லாமல் நிறைவேறியது ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது.
பலரின் வாழ்வில் இருக்கின்ற ஒரு பிரச்சனையை வெள்ளித்திரையில் பேசியிருப்பதும், பலருக்கும் தன்னைப்பற்றி பேசும், வெளிப்படுத்தும் ஒரு வெளியாக இருப்பதுவுமே இந்தப் படத்தின் வெற்றியாக நான் பார்க்கிறேன். காதலிலோ அல்லது எந்த ஒரு உறவிலும் உள்ள முக்கியமான சிக்கல்கள் என்றால், அந்த உறவில் உள்ள அதீத அன்பும், உனக்காகத்தான் நான் இதை செய்கின்றேன் என்கிற உணர்வும் தான்.
இந்தத் திரைப்படத்தில் பல்வேறு உணர்வுகளைக் காட்சிப்படுத்தியிருந்தாலும் குற்ற உணர்வை காட்சிப்படுத்தியிருப்பது தெளிவாக இருந்தது. குற்ற உணர்வில் தொடங்கி முதலில் ஒரு அசவுகரியமான அமைதி, அந்த சூழ்நிலையை சரி செய்ய முயற்சி எடுத்தல், எரிச்சல் உணர்வு, வெறுப்புணர்வு, இறுதியில் எதுவுமற்று சரண் அடைவது என பல நிலைகளில் மணிகண்டன் வெளிப்படுத்தியதும் அதற்கான எழுத்து வடிவமும் மிக அழுத்தமாக அழகாக இருந்தது.
********