இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 3

தொடர் | வாசகசாலை

நஃபரீன் மொழி பேசிய கடைசி மனிதன்

O Naffarínos cutá vu navru cangor luttos ca vúna tiéranar, dana maga tíer ce vru encá vún’ farta once ya merúta vúna maxt’ amámen.

தொடர் எழுதுவதில் எனக்கிருக்கும் பெரிய சிரமம், புனைவுகளுக்கான சில செய்திகள் கட்டுரையாகிவிடுகின்றன. இதை அடுத்து படிக்கப் போகும் புதியவைகளுக்கான காணிக்கை என்றெடுத்துக்கொண்டு செல்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் என்னுடைய முதல் கட்டுரை தொகுதியில் சேகரித்த செய்திகள் பலவும் முதலில் புனைவாக முயன்று பார்த்தவைதான். இவ்வருடத்தின் தொடக்கத்தில் நான் எழுதிய முதல் கதையின் பெயர் தான் இந்தக் கட்டுரையின் தலைப்பாக இருக்கிறது. கட்டுரை தொடங்குவதற்கு முன்னால் கொடுக்கப்பட்டிருக்கும் வரிகள் நஃபரீன் (Naffarin) மொழியில் இருக்கும் ஒரே சொற்றொடர். நஃபரீன் என்றொரு மொழி இருந்ததற்கு ஒரே சான்றும் இச்சொற்றொடர் மட்டுமே.

மொழி என்னை பொறுத்த வரை மிக அற்புதமான கருவி. எனக்கு நிகழும் ஒன்றை இன்னொருவருக்கு தெரியப்படுத்துவது மொழி இல்லாமல் போனால் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும். நாம் பயன்படுத்தும் எல்லா மொழியையும் மிக நுட்பமாக நோக்கினால் கிடைப்பது வெறும் சப்தங்கள் மட்டும் தான் (சைகை மொழி குறித்து பின்னர் விரிவாக எழுதுகிறேன்). அவைகளுக்கு உரு கொடுத்து இன்னொருவருக்கு தெரியப்படுத்துவது அடுத்த அதிசயம். உலகின் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துக் கொண்டு, முகம் தெரியாத பலரிடம் உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆக மொழி எவ்வளவு நுட்பமானது என்பதை நாம் அறிவோம். அதிலும் நம் தமிழ் மொழி இலக்கணங்கள் அற்புதமானவை. கம்பரும் சேக்கிழாரும் இன்னும் எத்தனையோ புலவர்கள் வார்த்தைகளை கணக்காக பயன்படுத்தி சொற்களால் பெரும் அதியங்களை சமர்பித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். யூத மறையும் கிறிஸ்துவமும் வார்த்தைகளால் கடவுள் உலகை சிருஷ்டித்தார் என்று நம்புகின்றன.

ஏன் இத்தனையும் சொல்கிறேன் என்றால், சென்ற நூற்றாண்டின் மகத்தான எழுத்தாளரான ஜே. ஆர். ஆர். டோல்கீன் (J. R. R. Tolkien). ஜான் ரொணால்ட் ரூவெல் டோல்கீன் (John Ronald Reuel Tolkien) 1892ஆம் ஆண்டு தெற்காப்ரிக்காவில் பிறந்தார். அவர் எழுதிச் சென்ற பல்லாயிரம் பக்கங்களுக்கு அப்பால் அவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் வழியாகத் தான் நான் முதலில் டோல்கீன் குறித்து அறிந்துக் கொண்டேன். அவருக்கு டோல்கீனை அறிமுகப்படுத்தியது பிரமிள். எனக்கு டோல்கீனின் புத்தகங்கள் இந்தியாவில் இருந்த போது கிடைக்கவில்லை. எனவே அவருடைய புனைவுகளை மைப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களை பார்த்துத் தீர்த்தேன். பூனேவில் இருக்கும் போது ஒருநாள் இரவு ‘தி ஹாபிட்’ (The Hobbit) படங்களின் வரிசையை பார்க்க ஆரம்பித்தேன். ஒரே நாள் இரவில் அதன் மூன்றுப் படங்களையும் பார்த்து முடித்துவிட்டேன். இரவெல்லாம் விழித்திருந்ததால் அடுத்த நாள் வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை. எனவே நண்பர்கள் என் அறைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடம் ஹாபிட் படங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருன்ந்தேன். அப்போது அவர்கள் ‘தி லா(ர்)ட் ஆஃப் த ரிங்ஸ்’ (The Lord of the Rings) பரிந்துரைத்தார்கள். அன்று இரவு முழுவதும் மறுபடியும் உறங்காமல் மூன்று படங்களையும் பார்த்து முடித்தேன். இது நடந்து இப்போது ஏழு வருடங்கள் ஆகிறது. இவ்வேழு வருடங்களில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஆறு படங்களையும் பார்த்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ‘தி ஹாபிட்’ படங்கள் கடைசியாகவும் ‘தி லா(ர்)ட் ஆஃப் த ரிங்ஸ்’ படங்கள் முதலில் வந்தன. ஆனால் அதன் முழுக்கதையை பார்க்க ‘ஹாபிட்டிலிருந்து’ ஆரம்பித்தால் வசதியாக இருக்கும். ஆறு படங்களையும் பார்த்து முடித்தால் ஒரு பெரும் பயணம் சென்று வந்த நிறைவை உணரலாம். பின்னர் படங்கள் ஏற்படுத்தும் உணர்வு போதாமல் புத்தகங்களில் மூழ்க ஆரம்பித்தேன். அதில் பல சுவாரசியங்கள் காத்திருந்தன. அதுவரை காட்சிகளாக கண்டுகளித்தக் கதையில் வாசிப்பின் வழியாக நானும் பயணம் சென்ற உணர்வு ஏற்பட்டது. குறிப்பிட்ட ஒரு பகுதியை டோல்கீன் எங்கிருந்து தழுவியிருக்கலாம் என்பது போன்ற ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக பில்போ பேகின்ஸ் வைரத்தை தேடிச் செல்லும் முன் அவனை அழைத்து வந்த ட்வார்ஃப்ஸ் (Dwarfs) இனத்தவருள் ஒருவன், “உள்ளே ட்ராகன் ஏதும் இருந்தால் அதை எழுப்பிடாதே!” என எச்சரிப்பான். அது விவிலியத்தில் வரும் பகுதி என்பதை நுட்பமாக பார்ப்பவர்களுக்குப் புரியும். அதே போல லா(ர்)ட் ஆஃப் த ரிங்ஸ் கடைசி பகுதியில் மோதிரத்தை சுமந்துச் செல்லும் ஃப்ரோடோ பேகின்ஸ் மற்றும் அவனுடைய நண்பனும் அதிக சுமையின் காரணமாக தங்ளுடைய ஆடைகளையும் இதர பொருட்களையும் தூக்கியெறிந்துவிட்டு மலையில் ஏறுவார்கள். இந்தக் காட்சி மிர்தாதின் புத்தகத்தின் முன்கதையில் வருகிறது. இப்படி பல்வேறு இணைப்புகளை குறித்து பேசிக் கொண்டேயிருக்கலாம்.

டோல்கீன் உண்மையில் மகத்தான கலைஞன். அவருடைய கதைகளில் வரும் பல்வேறு இனக்குழுக்களை சார்ந்தவர்கள் பேசும் மொழியை அவரும் அவருடைய துணைவியாரும் பேசி உருவாக்கினார்கள். அதேபோல சிறுவயதில் கேட்டு வளர்ந்த கதைகள் மற்றும் சம்பவங்களை தன்னுடைய கதையில் பயன்படுத்திக்கொண்டார். டோல்கீனைப் பற்றி அவர் மகன் மைக்கேல் விவரிக்கும் போது அவர் ஒரு சூனியக்காரருமாகவும் இருந்தார் என்கிறார். தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டு எல்லாவற்றையும் ரகசியமாக செய்யும் இயல்புடையவர் டோல்கீன்.

1931ல் மொழியியல் சம்பந்தமான A Secret Vice என்னும் உரையில் கட்டுரையின் தொடக்கத்தில் வந்த சொற்றொடரை டோல்கீன் பயன்படுத்தியிருக்கிறார். தனது நாவல்களுக்கான கருபொருளாக தான் கண்டுபிடித்த பல மொழிகளை பயன்படுத்திக்கொண்ட டோல்கீன், நஃபரீன் மொழியை மட்டும் எங்கும் பயன்படுத்தவேயில்லை. தனக்குத் தானே பேசிக்கொள்ள மட்டும் இதை பயன்படுத்தியிருக்கிறார். தனது உரையில் இதைப் பற்றி பேசாமல் போயிருந்தால் யாருக்கும் மொழியியலில் இம்மாதிரியான சாத்தியம் இருப்பது தெரியாமலே போயிருக்கும். நஃபரீன் மொழியில் ஒரேயொரு சொற்றொடரை விட்டுச் சென்றவர் அதற்கு என்ன அர்த்தம் என்பதை சொல்லாமல் சென்றுவிட்டார். அதனால் கட்டுரையில் தொடக்கத்தில் உள்ள வரிகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க இன்று வரை அறிஞர்கள் முயன்றுக்கொண்டிருக்கிறார்கள். உங்களில் யாருக்கும் அர்த்தம் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button