மேசஸூசட்ஸ் மாகாணத்தில் நார்மன் ராக்வெல்லை (Norman Rockwell) தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. பாஸ்டன்வாசிகள் இவரை அவ்வளவு கொண்டாடுவார்கள். நம்மவர்களுக்கும் ராக்வெல் மிகவும் பரிச்சயம் தான். கார்டூனிஸ்ட் மதன் நடிகர் கமலஹாசனை வரைந்த ஒரு ஓவியம் ராக்வெல்லின் ஓவியத்தை மாதிரியாகக் கொண்டது. ராக்வெல் வசித்த ஸ்டாக்ப்ரிட்ஜ் (Stockbridge) மிக அழகன ஊர். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் நியூயார்க். அதன் பிறகு எனக்கு மிகவும் பிடித்த வெர்மாண்ட்டில் கொஞ்ச காலம் வசித்தார். 1950ன் பிற்பகுதியில் மேசஸூசட்ஸ் – ஸ்டாக்ப்ரிட்ஜில் வசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிலே அழகனா ஊர் ஸ்டாக்ப்ரிட்ஜ் தான் என்கிறார் ராக்வெல். எனக்கு அதில் சந்தேகம் தான். அமெரிக்கா மாபெரும் தேசம். வேண்டுமானால் நியூ இங்கிலாந்து மாகாணங்களில் மிகவும் அழகான ஊர் ஸ்டாக்ப்ரிட்ஜ் என்று சொல்லலாம். ஏற்கனவே சொன்னது போல வட அமெரிக்கர்களுக்கு ஊர்ப்பாசம் ரொம்பவே அதிகம். எங்கள் ஊர் உலகின் சிறந்த ஊர் என்று அவரரவர் தங்கள் ஊர்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். ஆனால் நார்மன் ராக்வெல்லின் ஓவியங்களை பார்த்தால் அவர் சொல்வதுப் புரியும்.
1821லிருந்து வெளிவரும் The Saturday Evening Post என்ற பத்திரிகையின் 1916வது ஆண்டிலிருந்து அடுத்த நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்னூற்று இருபத்தோரு முகப்புப் படங்களை ராக்வெல் வரைந்திருக்கிறார். இந்த 321 படங்களும் அமெரிக்காவின் அன்றைய வாழ்வை பிரதிபலிப்பதாக அமைந்தது. எனக்கு நார்மன் ராக்வெல்லை எவ்வளவு பிடிக்குமென்றால், என்னுடைய பல கதைகளின் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை எழுத வெகுநேரம் இவர் வரைந்த மனிதர்களை அவர்களின் உணர்வுகளை பார்த்துக் கொண்டேயிருப்பேன். சென்ற மாதம் கிடைத்த விடுமுறையில் நார்மன் ராக்வெல் அருங்காட்சியகத்துக்குச் சென்றேன். ஸ்டாக்ப்ரிட்ஜ் பற்றி ராக்வெல் ‘ஆஹா ஓஹோ’ என்று சொல்லியிருந்ததால் நெடுஞ்சாலையை தவிர்த்து பயணிக்கத் தொடங்கினேன். பனிப் பொழிவு அப்போது தான் அடங்கியிருந்தது. எங்கு நோக்கினும் வெள்ளை. ஆலீஸின் அற்புத உலகத்துக்குள் என் கறுப்பு ஜீப்பை ஓட்டிச் சென்ற உணர்வு. ஓர் இடத்தில் அருகிலிருந்த குன்றிலிருந்து நீர் வழிந்து அப்படியே உறைந்து பனிப் பாறையாக இருந்தது. எதிரிலிருந்த காடு, சூரிய ஒளியை வடிக்கட்டி இந்தக் குன்றின் மேல் விழச் செய்கிறது. பனிப்பாறையில் விழுந்த ஒளி எட்டுத் திக்கும் சிதறி அற்புதமாக இருந்தது. அந்தக் காட்சியை பார்த்ததும் அதற்குப் பிறகு காரை கொஞ்சம் நிறுத்தி மூச்சு வாங்கிக் கொண்டேன் அவ்வளவு அழகாக இருந்தது. இன்னும் நான் செல்ல வேண்டியத் தொலைவு அதிகம்.
நியூ இங்கிலாந்தில் நான் இன்னும் செல்லாத இடம் கனடிகட் (Connecticut) மட்டும் தான். என்னுடைய அனுபவத்தில் வெர்மாண்ட்டுக்கு இணை ஏதுமில்லை. அதுவும் ஸ்டோ என்னும் கிராமம் அற்புதமான ஊர். அதற்கு அடுத்தபடியாக மெயினை (Maine) சொல்லலாம். நார்மன் ராக்வெல் வெர்மாண்டில் வசித்தும் மேசஸூசட்ஸில் இருக்கும் ஒரு ஊரை எப்படிப் புகழ்ந்து சொல்ல முடியும் என்ற கேள்வியுடன் அடுத்த நூறு மைல்களை கடந்தேன். ஒவ்வொரு பத்து மைலுக்கும் ராக்வெல் சொல்வதன் உண்மை புரிந்தது. ஸ்டாக்ப்ரிட்ஜில் கிறிஸ்துமஸ் இரவு எப்படியிருக்கும் என்பதை அவர் வரைந்திருக்கிறார். ஓவியத்தைப் பார்பவர்கள் ஒவ்வொருவரும் அந்தக் கிறிஸ்துமஸ் இரவில் நடந்து வந்த உணர்வு ஏற்படும். தூரத்தில் மலைகள் ஆங்காங்கே இலைகளற்ற மரங்கள் மையத்தில் ஸ்டாக்ப்ரிட்ஜ் நகர்மன்றம் இருமருங்கிலும் கடைகள். பல்வேறுவிதமான மக்கள் கிறிஸ்துமஸ் நாளுக்கான ஏற்பாட்டில் இருக்கிறார்கள். இதுதான் ஓவியத்தின் சாரம். ஸ்டாக்ப்ரிட்ஜ் நுழைந்ததும் அந்நகர்மன்றமும் தூரத்து மலைகளும் ஆங்காங்கே நிற்கும் மரங்களும் வரவேற்றன. மீண்டும் சற்று நேரம் காரை நிறுத்துவிட்டு குளிரில் நெடுநேரம் அந்நகர்மன்றக் கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்டாக்ப்ரிட்ஜின் ஆன்மாவை அல்லவா ராக்வெல் வரைந்திருக்கிறார் என்று புரிந்தது.
The Saturday Evening Post என்ற இதழின் வழியாக ஒவ்வொருவரின் மனங்களுக்குள்ளும் நீங்காத இடம் பிடித்தார் ராக்வெல். தமிழ் சூழலில் வந்த எத்தனையோ சிற்றிதழ்களில் பலரது ஓவியங்கள் வந்திருக்கின்றன. ஆனால் புரவி இதழில் வெளியாகும் ஓவியங்கள் நம் தமிழ் வாழ்வை பிரதிபலிக்கிறது. ஜீவநந்தனின் ஓவியங்களை ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும். இன்றைக்கு இருக்கும் எத்தனையோ டிஜிட்டல் டிசைனிங் தொழில்நுட்பத்தால் மனதில் நினைப்பதை திரையில் கொண்டு வந்துவிட முடியும். ஓர் ஓவியம் கொடுக்கும் தாக்கத்தைவிட பன்மடங்குத் தாக்கத்தை இந்த டிஜிட்டல் ஓவியங்கள் தந்துவிடுகின்றன. ஆனால் ஓவியன் செய்வது இதையெல்லாம் தாண்டிய ஒன்று. ஜீவநந்தன் அவர்கள் புரவிக்கு வரையும் ஓவியங்களைப் பாருங்கள் நான் சொல்ல வருவது புரியும். நார்மன் ராக்வெல்லின் முகப்பு ஓவியங்களைப் பாருங்கள். அவருடைய கோல்டன் ரூல் என்ற புகைப்படம் ஒன்று போதும் இருபதுக்கும் அதிகமான பாத்திரங்கள் ஒரே ஓவியத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு எண்ணங்கள். அந்தப் படத்தைப் பார்த்த போது ஆயிரமாயிரம் மனவோட்டங்கள். ஒரு டிஜிட்டல் சித்திரம் நம்மை வியக்க வைக்கலாம் ஆனால் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது சிரமம்.
நார்மன் ராக்வெலைப் போல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர் நம் கும்பகோணத்து இளையராஜா. கொரோனாவுக்கு நாற்பத்து மூன்று வயதில் பலிக் கொடுத்துவிட்டோம். இளையராஜாவின் ஓவியங்கள் வாட்ஸப் ஸ்டேடஸ்களிலும் ஃபேஸ்புக்கிலும் மிகவும் பிரபலம். அவருடைய ஓவியத்துடன் பெண்களை ரொமாண்டஸைஸ் செய்து இரண்டு சொற்றடர்கள் எழுதி வெளியிட்டால் போதும், லட்சம் பேர் பார்வையிடுவார்கள். ஆனால் அதை யார் வரைந்தது என்றால் யாருக்கும் தெரியாது. இளையராஜாவின் ஓவியத்தில் இருக்கும் ஒளியும் இருளும் நம் மண்ணுக்கே உரித்தானது.
கலைஞர்களை கொண்டாடுவதை நாம் மேற்கத்தியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். The Saturday Evening Post க்காக ராக்வெல் வரைந்த ஓவியங்களைக் காண மக்கள் பல நாள்கள் காத்திருந்தார்கள். ஒவ்வொரு முகப்புப் படங்களையும் கொண்டாடினார்கள். இன்றும் கிறிஸ்துமஸ் மற்றும் தேங்ஸ்கிவ்விங் கொண்டாட்டங்களுக்கு ராக்வெல் வரைந்த ஓவியங்கள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் வீடுகளெங்கும் வலம் வருகின்றன. எனக்கு அவர் வரைந்த ஒவ்வொரு படமும் பிடிக்கும். ஒவ்வொன்றைக் குறித்தும் பத்து பக்கங்கள் எழுதலாம். அவரது The Runaway என்ற ஓவியம் என் மனதில் ஆழமாக தங்கிவிட்டது. நான் சிறுவனாக இருந்த போது வீட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிடலாம் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை ஆனால் ஒரு சாகசத்தை எப்போதும் மனம் தேடிக் கொண்டேயிருந்தது. அப்படியான எண்ணங்கள் துளிர்க்கும் போது முதலில் வருவது திரும்பவும் பத்திரமாக வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்பதே. அதற்கு பிறகு வீட்டில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணம் பயத்தைக் கிளப்பும். தெரிந்தவர்கள் நம்மை வழியில் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று திகைப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக போலீஸ் பிடித்துவிட்டால்? தப்பு செய்தால் தானே போலீஸ் பிடிக்கும்? வீட்டை விட்டு ஓடிப் போவது தப்பா? தப்பில்லையா? இப்படி ஆயிரம் கேள்விகளுக்குப் பிறகு எதற்கு வம்பு என்று வீட்டிலே இருந்துவிடுவேன். ஆனால் வீட்டைவிட்டு ஓடிபோவது காலம் காலமாக இருந்து வந்ததுதானே? நார்மன் ராக்வெல் The Runaway என்ற ஓவியத்தில் சிற்றுண்டி உணவகத்தின் உயர்ந்த நாற்காலியில் ஒரு சிறுவனும் ஒரு போலீஸ்காரரும் அருகருகே உட்கார்ந்திருப்பதை வரைந்திருக்கிறார். உணவகப் பணியாளர் இவ்விருவரின் உரையாடலை கவனித்துக்கொண்டிருக்கிறார். முதல் பார்வையில் இந்தப் படம் உங்களிடம் சலனத்தை ஏற்படுத்தாமல் போகலாம் ஆனால் சிறுவனுக்கு அருகிலிருக்கும் பயண முடிப்பைப் பார்த்துவிட்டு அச்சிறுவனின் முகபாவங்களை நோக்கினால் சாகசத் தாகத்தைத் தணிக்க முற்படும் ஒவ்வொரு சிறுவர்களுக்குள்ளும் எழும் கேள்விகளை அந்தத் தீங்கற்ற முகத்தில் காணலாம். அவன் சாகசத்திற்காகத் தான் வீட்டைவிட்டுக் கிளம்பினான் என்று எப்படி சொல்ல முடியும்? அதற்கு அந்தப் பணியாளரின் முகத்தையும் போலீஸ்காரர் முகத்தையும் பார்க்க வேண்டும். அவையிரண்டிலும் ஓர் எள்ளல் தெரியும். இப்படி ஒவ்வொரு ஓவியத்துக்கு பின்னாலும் சொல்லித்தீரா கதைகள் இருக்கிறது.
இன்னும் ஒரேயொரு ஓவியம் குறித்து மட்டும் பார்க்கலாம். சுதந்திரத்தை மையப்படுத்தி ராக்வெல் சில ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அதில் என்னை பெரிதும் கவர்ந்தது Freedom from Fear. ஓர் இளம் தம்பதியர் தங்கள் இருக் குழந்தைகளையும் கட்டிலில் கிடத்தி தூங்க வைக்கிறார்கள். அம்மா அக்கறையுடன் போர்வையை சரியாகப் போர்த்திவிடுகிறார். அப்பா களைத்து போயிருக்கிறார். கையில் செய்தித் தாளுடன் குழந்தைகளை பரிவு கலந்த ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் அப்போது தான் ஒரு பெருமூச்சுவிட்டிருக்க வேண்டும் என்பதான தோற்றம். மீண்டும் ராக்வெல்லின் இவ்வோவியம் முதற்பார்வையில் உங்களை ஏமாற்றிவிடலாம். அத்தாயின் அக்கறையை புரிந்துக் கொள்ளவும் தூங்கும் குழந்தைகளின் அமைதியை புரிந்துக் கொள்ளவும் தகப்பனின் பரிவையும் பெருமூச்சையும் புரிந்துக் கொள்ளவும் அவர் கையில் இருக்கும் செய்தித் தாளை நீங்கள் வாசிக்க வேண்டும். அதை இப்போது நான் எழுதப்போவதில்லை. நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
வீட்டைவிட்டு ஓடிப் போவது குறித்து சொல்லியிருந்தேன் அல்லவா? இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் வீட்டை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பேன். மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மே மற்றும் ஜூன் மாதம் லால்குடியில் இருப்பேன். இந்த விடுமுறையில் வாசகசாலை நண்பர்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன். வாய்ப்பிருந்தால் நேரில் சந்திக்கலாம்.
(தொடரும்…)